மியாவ்
விலங்குகளுக்கும் எனக்கும் எப்பொழுதும் இருக்கும் உறவு சுகுமாரனின் தந்தை பற்றிய கவிதையொன்றில் வருவது போல அன்போ வெறுப்போ அற்ற நிலை தான். அவையும் இங்கு வாழ்கின்றன. என்னைப் போலவே.
ஒருமுறை யாழ் குயர் விழாவில் கலந்துரையாடல் ஒன்றில் விலங்குகளுக்கும் தமக்கும் இடையிலான உறவைப் பற்றி ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் வெளியே சென்றுவிட்டு இடையில் திரும்பிய பொழுது அக்கேள்வியை ஹரி கேட்டார். உங்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான தொடர்பு எப்படி என. உடனடியாக அந்தக் கேள்வி அதிர்ச்சியாக இருந்தது. மெய்யில் தேடினால் நான் நட்புடன் பழகிய நினைவு கொள்ளும் விலங்கு என எதுவுமில்லை. சுற்றத்தில் இருந்தவையே அதிகம். தொடர்பு என்பது மொழி. விலங்குகளுக்கு உணவிடுதலோ அவதானித்தலோ கூட ஒரு பழக்கம் தான். அக்கேள்விக்கு பதிலளித்த போது வேடிக்கையாக “எனக்கு மனிதரைச் சமாளிப்பதே பெரிய பாடாய் இருக்கிறது. இதில் விலங்குகளுடன் எப்படி” எனச் சாரப்படச் சொல்லியிருந்தேன். பின்னர் கதைகளிலும் கவிதைகளிலும் வரும் விலங்குகளுடன் நான் தொடர்பு கொள்கிறேன் எனச் சொல்லியிருந்தேன். அது ஒருவகை மானுடரின் விழிகளின் வழி அவற்றைப் புரிந்து கொள்வது. அல்லது அவற்றின் வழி மானுடரைப் புரிந்து கொள்வது. அதை அதுவாகவே புரிதல் என்பது எனக்குச் சாத்தியமற்று இருக்கிறது. மானுடர் உண்டாக்கிய கலைகளில் வாழும் ஒவ்வொரு விலங்கிலும் அதன் பண்புடன் இணைக்கப்படும் மானுடத் தன்மையே ஒளிர்கிறது. மானுடரே நான் ஆராய விளையும் ஒற்றை விலங்கு. அதுவளவுக்கு எனக்கு ஆச்சரியமளிக்கும் பிற ஒன்று இல்லை. பொதுவான விலங்குகள் அதனதன் உயிரியல்பால் மகிழ்வாயும் துயரமாயும் இருக்கட்டும். மானுடர் அப்படியல்ல. அவர்களளவுக்கு துக்கத்தையும் மகிழ்ச்சியையும் இன்னோரன்ன உணர்ச்சிகளையும் இத்தனை விரிவாக உண்டாக்கித் திளைத்து வாழ்வது எதுவுமில்லை.
கதைகளிலும் கவிதைகளிலும் அதிகமும் உலாத்தும் விலங்கு பூனை. பூனையைக் குறித்துச் சொல்லப்படும் பொதுவான அபிப்பிராயங்களில் எனக்கு அவதானமில்லை. அதுவொரு சுயநலமான விலங்கு. தனக்குரியதைத் தானே வகுத்துக் கொள்வது. சற்றுத் திமிரும் தலைக்கனமும் கொண்டது. அதன் மிருதுவான தேகம். அதன் செல்ல மியாவ் குரல். குழையும் வாலும் குரலும் அளிக்கும் நெருக்கம். அதன் விழிகளிலிருக்கும் விலக்கமும் கூட.
ஆனால் நான் விலங்குகளை நேசிக்கும் அவற்றுடன் வாழ்வைப் பகிர்ந்து கொள்ளும் பலரிலும் அவதானித்த பொதுவான தன்மை ஒன்று உண்டு. விலங்குகளை நேசிப்பவர்கள் இயல்பிலேயே அன்பு கொண்டவர்களாகவும் இதயம் கரைபவர்களாகவும் இருக்கிறார்கள். தனித்த அவர்களின் அந்தாராத்மாக்களுக்கு விலங்குகளே மெய்த்துணை. விலங்குகளில் அவர்கள் கண்டு கொள்வது அந்த உடனிருப்பின் நம்பிக்கையே என எண்ணுகிறேன். ஒரு புறாவில் கிளியில் பூனையில் நாயில் பசுவில் கோழியில் எதிலும் ஒருவர் காட்டும் நேசம் அவர் தனக்குத் தானே திரும்ப அளித்துக் கொள்ளும் ஒரு சிகிச்சை. அன்பை நிரப்பி வைக்க உயிருள்ள உண்டியல் போல விலங்குகளை எண்ணிக் கொள்வது ஒருவகை மூடநம்பிக்கை தான். அனைத்து நம்பிக்கைகளையும் போல.
தர்மினியின் இந்தக் கவிதை நெடுங்காலம் கழித்து மியாவ் என்ற ஒற்றைச் சத்தம் காதினருகில் ரகசியாய் ஒலித்து கூச வைப்பதைப் போலிருந்தது. மென்மையான அதன் பஞ்சுக் கால்கள் போன்ற சொற்களில் வாலை சுழற்றியபடி ஒரு பூனை நடந்து செல்வது போல ஒரு கவிதை. ஓசையில்லாமல் ஒரு மியாவ் ஒலிப்பதைப் போல.
*
பூனைகளை முன்னிட்டு
நான் பிறந்த நேரம் வீட்டிலும் பூனைக்குட்டியொன்று பிறந்திருந்தது.
இரண்டு குழந்தைகளின் அழுகையும் ஒரே மாதிரியிருக்குமாம்.
நான் அழுதால் பூனையும்
பூனைக்குட்டி அழுதால் அம்மாவும்
மாறி மாறி ஓடியோடிப் போவார்களாம்.
பூனைகளோடு வளர்ந்தாலும்
தொட்டுத்தூக்கிக் கொஞ்சியதில்லை.
பின்னங்கால்களை வாலால் உரசுவதும் சத்தம்போட்டுக் கொண்டு திரிவதும் பிடிக்காது.
இப்போது வீட்டில் பூனையில்லை
போகும் வரும் இடமெல்லாம்
பூனைகள் தென்படுகின்றன
மூன்றாவது மாடியில் சன்னல் விளிம்பிலிருந்து
வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தது
இன்னுமொன்று கூரையில் தாவுகிறது
பல்கனிச் சுவர்களில் நடக்கிறது
பூனைப் புத்தகங்கள் கூட
கைக்கு வருகின்றன
கனவில் வருவதும் நடக்கிறது பாருங்க…
தன் கைகளை உயர்த்தி உங்களைச் சுரண்டுகிறது
வாலை வளைத்து உரஞ்சுகிறது
எறிகின்ற முள்ளை விட்டு
சதைப்பிடிப்பான நேசத்தைக் கேட்கிறது
மடியில் தாவுகிறது
தோளில் முகத்தைத் தேய்க்கிறது
நீங்களும் என்ன செய்வீர்கள்?
தலையை இரு கரங்களாலும் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
உலகப் பிரச்சினைகள் அந்தச் சீவனுக்கு விளங்குமா?
பூனையின் உலகில் அதற்கில்லாத துன்பங்களா?
யோசித்துவிட்டு
மெல்ல அதன் தலையைத் தடவுகிறீர்கள்
மிருதுவாக முதுகை வருடுகிறீர்கள்
‘மியாவ்’எனக் கத்திவிட்டு
தன்பாட்டில் போய்விட்டது
அந்தக் கனியைப் பறிக்க
அது எவ்வளவு நேரம் தொங்கிப்பாய்ந்தது.
தர்மினி