தாயும் தோழியும்
ஈழவிடுதலைப் போராட்டம் உருவாக்கியளித்த நியாயங்களினதும் அற மீறல்களினதும் குரல்களில் ஒளவை முக்கியமானவர். வரலாற்றின் இடர்காலங்களில் மனித மாண்பினை நினைவுறுத்தும் குரல்கள் கவிதையில் எழுவதுண்டு. அவை எதிர்கொள்ளும் வரலாற்றுத் தருணங்களை தன் அனுபவத்திலிருந்து மொத்த மக்கள் திரளின் கூட்டு எதிர்காலம் குறித்த பார்வையாக விரித்தெடுக்கக் கூடியவை. ஒளவை அத்தகைய குரலாக ஈழத்தில் எழுந்தவர்.
தன்னை மின்மினியெனக் கண்டெடுக்கும் பெண் தன்னிலையும் போருக்குச் செல்லும் போராளியின் தன்னிலையும் ஒருங்கு திரளும் இணைவு ஒளவையில் நிகழ்ந்திருக்கிறது. நெருக்கடிகளின் தீத்தணலைத் தன் சொற்களால் கடந்து செல்பவர். மரத்தில் காலங்களென பெண் தன்னிலை கொள்ளும் பல்வேறு பருவங்கள் ஒளவையில் தோன்றியுள்ளன.
அவரின் கவிதைகளில் உள்ளோடும் மரபின் மென்சந்தமும் அறமீறல்களினதும் ஆற்றாமைகளினதும் கூர்த்தருணங்களில் ஒலிக்கும் பெருங்கேவலும் இசையெனக் கூடுகின்றன.
*
விஜிதரன் நினைவாக
இச்சையின்றிக் கைகள் அசைந்து
கால்களை உதைத்து
வீரிட்ட படி நீ மலர்கையில்
உன்னைப் பற்றிய அம்மாவின் கனவுகள்
எப்படி இருந்திருக்கும்..?
இன்று இப்படியாயிற்று!
இது எம் மண்:
இறுதியில் உன்னை அவர்கள்
கொன்று விட்டனர்
காரணம்..?
காரணம் கேட்டுக் காணாமல் போக யார்தான் தயார்?
வாழ்தலுக்கான
உரிமைகள் மறுக்கப்பட்டு
குருதியுறைந்த உடலுடன்
ஆழப் புதைந்தது
உனது உடல் மட்டுமல்ல
உனதும் எனதும்
எம்போன்ற பலரதும்
உணர்வுகளும் கூடத்தான்.
உனது கதவு தட்டப்பட்ட
அந்த இரவில்
மனித நேயமும் நம்பிக்கைகளும் கூட
ஆழப் புதைந்தன:
நீ காணமல் போனாய்.
மீண்டுன் ஒரு இரவு
உயிர்ப்படங்கி
சில்லிட்டது பூமி
உனது வாய்
உனது கண்
மூடியது மண்
இருள்.
மெல்லத் தயங்கியபடி
அசைகிறது உலகம்
மெளனமாய்
இருண்டு கிடக்கிறது வானம்.
*
இப்பொழுதே முத்தமிடு
கரு மேகம் படர்ந்து
பகல் ஒளியை விழுங்கி
காரிருள் சூழ்ந்து வரும் காலமிது
நாளைய இரவின் கனவுகளில்
இன்றைய இரவை வீணாக்கி விடாதே
நேற்றைய இரவும் இப்படித் தான்
தொலைந்து போனது
உன்னுடன் ஒன்றி
கையணைப்பில் சிறகடிக்கத் துடிக்கும்
உன் காதலிக்கு
இப்பொழுதே முத்தமிடு
நாளைய இரவில்
நானோ நீயோ
எங்கள் இதழ்களோ
எதுவும் இருப்பது
நிச்சயமில்லை
நாளைய இரவு
அவர்களுக்கோ
அல்லது
புதை குழி நிரப்பும்
ஈரமண்ணுக்கோ…
*
சுயம்
காலம் கொடியது
எத்தனை காலம் என்னை இழுத்தபடி
ஓடியிருக்கிறது?
நான் யார்?
யாரென்று கூட அறிய முடியாமல்
காலம் என் கண்பொத்தி ஓடியிருக்கிறது.
அதிகாலை கண்விழிப்பு
இயந்திரமாய் வேலை
உண்ணுதல்
உடுத்தல்
உறங்குதல் என
குடும்ப வாழ்வு விரிந்து சென்றது
என்னை நானறிய அவகாசம் தராமல்
காலம் என்னை இழுத்தபடி ஓடியிருக்கிறது.
காலம் இழுத்த பாதையில்
இழுபட்டு, இழுபட்டு
வேரறுந்து, வீழ்ந்து, புரண்டு…
நான் யார்?
ஓடி ஓடி உழைத்துக் களைத்து
வாழ்வு சலித்து
வாழ்ந்து களைத்து
இப்போது, இப்போது தான் என்னை மீட்டு
எடுத்திருக்கிறேன்.
அடக்குமுறைக்குள்ளிருந்தும்
அச்சம் தரும் இருளிலிருந்தும்
உணர்வுகள் பிடுங்கி எறியப்பட்ட வாழ்விலிருந்தும்
என்னை மீட்டுள்ளேன்.
ஒளியைப் பிறப்பித்தபடி செல்லும் சின்னஞ்சிறு
மின்மினிப் பூச்சியாய் என்னைக் கண்டு எடுத்துள்ளேன்
யாவருமறிய நிலவைப் போல இரவல் ஒளியில்
வாழ்தலில் உயிர்ப்பில்லை.
சிறிய மின்மினியாய் சுயஒளியில் வாழ்தலே
இன்று சுகமென்றறிந்தேன்!
பூவின் மலர்விலும் வாழ்வு உயிர்க்கின்றது
காற்றின் அசைவிலும் வாழ்வு விரிகிறது!
*
வீடு திரும்பிய என் மகன்
இதயத்தை இரும்பாக்கி
மூளையைத் துவக்காக்கி
நண்பனைப் பகைவனாக்கி
என்னிடம் திரும்பினான்
இராணுவ வீரனாய் என் முன் நின்றான்
என் மகன்
ஊட்டி வளர்த்த அன்பு நேசமும்
ஆழப்புதைய
ஆடித்தான் போனேன்.
நண்பனைச் சுட்டுவிட்டு வந்து
வீரம் பேசினான்
தியாகம் பற்றி
ஆயுதம் பற்றி
எல்லைப்புற மக்களைக் கொல்வதைப் பற்றி
நிறையவே பேசினான்.
இப்போது நான் மெளனமாக இருந்தேன்
மனிதர்கள் பற்றி
விடுதலை பற்றி
மறந்தே போனான்
இப்போது நான்
தாயாக இருத்தல் முடியாது
என்று தோன்றுகிறது
துரோகி என்று
என்னையே புதைப்பானோ
ஒரு நாள்.
*
சொல்லாமல் போகும் புதல்வர்கள்
என் மகன்
பூஞ்சிறகு முளைத்த சிட்டுக்குருவியாய்
பறந்து போனான்
இடி முழங்கி வான் அதிரும்
மழைக்காலக் குளிர் இரவில் – அருகிருந்து
தென்றல் சுமந்து வரும் மெல்லிசையை
கேட்டிருக்கும் என் மகன்.
முழு நிலவு பூத்து
நட்சத்திரங்கள் தெறித்திருக்கும்
இரவுகளில்
மஞ்சளாய் சணல்
பூத்து விரிந்திருக்கும் எம் வயலில்
காற்று வாங்கியபடி
அவனும் நானும்
தனித்திருக்கையில்
ஒரு நாள் அவன் கேட்டான்
அப்பா ஏன் இறந்தார்?
யுத்தம் ஏன் வருகிறது?
அக்காவுக்கு ஏன் தலை நரைத்து
விட்டது?
அன்று சின்னப்பயல் அவன்
மகனே!
ஆந்தைகள் அலறும் இரவுகளும்
விமானங்களின் குண்டு வீச்சும்
நெஞ்சைப் பிளக்கும்
அவலங்களும்
இங்கு நிறையவே நடக்கும்.
காலம் முழுவதும் உன் வரவைப் பார்த்து
சோர்ந்து படுத்து விட்டேன்
ஏதோ இனம் புரியாத சோகம்
நெஞ்சை அரிக்கிறது.
ஆனாலும் பார் மகனே!
எங்கோ தொலைவில்
நீ என்ன செய்வாய் என்பதும்
நீ நடக்கும் பாதையையும் நான் அறிவேன்.
இராணுவ வெறியரிடம்
அகப்படாதே!
கவனம் அதிகம் தேவை
அதைவிட மேலாக எமக்குள்
நூறு எதிரிகள்.
மக்களை நேசித்த
சின்னப் பயல்களெல்லாம்
இன்று மண்ணுள்.
மகனே
சிட்டுக் குருவி போலத்தான் பறந்தாய்!
ஆயினும்
காலம் உன்னை வளர்த்திருக்கும்
மனித நேயத்தை இழந்து விடாதே
மக்களை அதிகம் நேசிக்கப் பழகு.
*
ஒளவையின் நூல்கள்:
எல்லை கடத்தல் – மூன்றாவது மனிதன் பதிப்பகம்
எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை – காலச்சுவடு பதிப்பகம்