வியப்புத் துடிக்கும் குழந்தையின் விரல்கள்

வியப்புத் துடிக்கும் குழந்தையின் விரல்கள்

சுயம் பற்றிய ஆதாரமான கேள்விகள் தத்துவம் ஆன்மீகம் கலை இம்மூன்று தளங்களிலும் எழும் ஆதாரமான வடிவம் கவிதை. நான் யார்? எதன் பொருட்டு இந்த வாழ்க்கை அளிக்கப்பட்டிருக்கிறது போன்ற பல கேள்விகள் கவிதை வரிகளுக்கு நிகரானவை. எல்லா அறிவுத் தளங்களிலும் வேறு வேறு பொருள் கொள்ளப்படுபவை.

சுந்தர ராமசாமி எழுதிய கவிதைகள் அவரது புனைவுலகின் மையக் கேள்விகளின் அடிப்படைகளைக் கொண்டவை. அவை தன் நிழல் எங்கிருந்து உருவாகிறது என்ற தற்போதத்தை கவிதைகளின் வழி கண்டடைய முயன்றவை. சுராவின் கவிதையுலகு அவரது புனைவுலகின் ஓர் அறை எனக் கொள்ளத்தக்கது. பசுவய்யா எனும் பெயரிலேயே தனது கவிதைகளை அவர் எழுதினார்.

வாழ்வின் நிரந்தரங்கள், தனிமைகள், மிகைகள் குறித்தெல்லாம் சுந்தர ராமசாமி தன் ஆதாரக் கேள்விகளை கவிதைக்குள் கேட்டுப் பார்க்கிறார். அவை சில வேளைகளில் வியப்பில் துடிக்கும் குழந்தையின் விரலென தீவிரம் கொண்டிருக்கிறது. சில வேளை பல தத்துவார்த்தக் கேள்விகளின் அர்த்தமின்மை புலப்பட அவை சுழன்று மறைவது போல் அழிகின்றன.

அவரது கவிதைகளுக்குள் இறுக்கமான ஒரு பின்னணி இசை ஒலிக்கிறது. சிலவேளை தன்னை விட்டு அவை விலகி எழுகையில் புன்னகைத்து ஆச்சரியம் கொள்ளும் குழந்தையின் சங்கீத ஒலி கேட்கிறது.

(சுந்தர ராமசாமி)

*

ஓவியத்தில் எரியும் சுடர்

அந்த ஓவியத்தில் எரியும் சுடர்
கண் இமைக்காமல் பார்க்கிறது அந்தக் குழந்தை
அதன் விரல்நுனிகள் துடிக்கின்றன
தன் விரல்நுனிகளால்
எரியும் சுடரைத் தொடத்
துடிக்கிறது அதன் மனம்
சுடர் அருகே
தன் விரல்களைக் கொண்டுபோன பின்பும்
தயங்கி
மிகத் தயங்கி
தன் தாயின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறது
அந்தக் குழந்தை
அந்தச் சுடர்
தன்னை எரித்துக்கொண்டே
ஓவியத்தை எரிக்காமல் இருக்கும் விதம்
அந்தக் குழந்தைக்கு விளங்கவில்லை
அந்தச் சுடர்
உருவாகி வந்தபோது
ஓவியரின் விரல்களை எரிக்காமல் இருந்த விதம்
அந்தக் குழந்தைக்கு விளங்கவில்லை
அழிக்காமல் எரியவும்
அழகாக நிற்கவும்
எப்படிக் கற்றுக்கொண்டது அது?
குழந்தையின் விரல்களில் அப்போதும்
வியப்பு துடித்துக்கொண்டிருக்கிறது.

*

பூர்த்தி பெறாத ஓவியம்

குகையின் உட்சுவரில்
பூர்த்தி பெறாத ஓவியம் ஒன்றைக் கண்டேன்
அதன் அழகு நாளத்தில் பாய்ந்து ஓடிற்று.

ஸ்தம்பிப்பு

ஒளிப்பிழம்பொன்று சன்னமாய்
மிதக்கும் பன்னீர்க் கண்ணாடிக் கீற்றுகளாய்
அதன்மேல் பட்டுத் தெறிக்கிறது.

யார் வரைந்தது இது?

முன் காலமொன்றில் நானே துவக்கி
என் கருப்பை கொள்ளாத அழகு பீறிட்டெழ
திடுக்கிட்டு விலகி ஓடியதாய்ப் பளிச்சிட்டது.

பூர்த்தி செய்ய ஒருவன் வரக்கூடும் என்றேனும்
வாய் மட்டும் திறந்திருந்தால்
ஒளி எப்போதும் இருக்கும்.

*

மூடுபல்லக்கு

மூடுபல்லக்கு
உள்ளே இல்லை மங்கை.
ஒற்றைக் குதிரை வீரன்
வாளுருவி முன்னேக
பதின்மர் தோள்சரிய
ஈரக் கருமை
முதுகு படர்ந்து ஓடிவழிய
மேல் மூச்சு வாங்க
பின்குதிரை வீரன்
அந்தரத்தில் சொடுக்கி
துரிசம் கூட்ட
மூடுபல்லக்கின்
உள்ளே இல்லை மங்கை.

மான் கூட்டம்
மருண்டு மதியிழந்து நிற்க
இமைகள் விரிந்து
விழியோரம் கிழிய
நிமிர்ந்த நீள்செவிகள்
திசைதிசையாய்ச் சுழன்று வர
பாய்ந்தொன்று ஆரம்பம்கூட்ட
பதினாயிரம் பின்தொடர்ந்து ஓட
ராக்ஷஸ சிலந்தி
ஓரம் விட்டகன்றோடி
மையம் புகுந்து
காய்ந்து சுருங்க

தாழைக் காட்டோரம்
முயல்கள் பம்மிப் பதுங்க
புற்றுவாய் தோறும்
தென்றல் சுகித்திருக்கும்
மூக்குக் கண்ணாடிகள்
பின்னகர்ந்து உள்மறைய
பதின்மர் மூச்சுத் தெவங்க
ஓடிவரும் துளிகள்
தாடையோரம் முத்துமுத்தாய்க் கூடி
விளைந்து உதிர
ஒற்றைக் குதிரை வீரன்
புறங்கழுத்தில்
அகந்தை வீற்றிருக்க
சொடுக்கும் சவுக்கு
அதிகாரம் கெக்கலிக்க
மூடுபல்லக்கின்
உள்ளே இல்லை மங்கை.

அப்பாலுக்கு அப்பால்
அடிவானத்துக்கு அப்பால்
மலைமறைக்கும் திசையினிலே
பேருடம்பின் ஒக்கலிலே
மல்லாந்து சரியும்
குறும்புக் குதலையென
அந்தரத்தில் முன் பாய்ந்து
காலின்றித் தவஞ்செய்யும்
விதான மண்டபத்தில்
நிலவுக்குக் கைகாட்டும் கண்களுடன்
கால்பாவா நிலைநின்று
நிலைகொள்ளக் கதியின்றி
சரசம் மீதூற
குருதி அழுத்த
நாளங்கள் புடைக்க
கலவிக் களியாம்
நாடகத்தின் ஒத்திகைகள்
மனத்திரையில் விரிந்துவர
ஊதுவத்தி குறுகிவர
பொழுதும் தேய
பூக்கள் கட்டவிழ்ந்து புன்னகைக்க
பஞ்சணையில்
கவிழ்ந்து கண்புதைத்து
குளம்போசைக்குக்
குதித்தெழுந்து நின்று
தெருபார்க்க நிலைகுத்தி
நிலைகுலையும் நிலைநிற்கும்
பீதாம்பரப் பெட்டகத்தான்
நின்று படபடக்க
மூடுபல்லக்கின்
உள்ளே இல்லை மங்கை.

ஒற்றைக் குதிரை வீரன்
வாளுருவி முன்னேற
சொடுக்கும் சவுக்கு
குதிகால்கள் புண்ணாக்க
அட்டகாசம் விசைகூட்ட
தோள்மாற்றித் தோள்மாற்றி
மேலேற்றம் கிடுபள்ளம்
புற்றரை
முட்காடு
வனாந்தரம்
வழிநீள வழிநீள
கால்பின்னக் கண்ணிருள
சொடுக்கும் சவுக்கு
புண்பிடுங்க
தெருத் தெருவாய்
கதவோரம் பெண்டிர்
ஒருக்களித்து ஊடுருவ
வயலோரம் உறங்கும்
தவளைக் கூட்டங்கள்
நீர்நிலை சாடிக் குதிக்க
வெட்டுக்கிளிகள்
திடலோரம்
தத்தி அகன்றோட
அரைமுடிக் குட்டிகள்
அதிசயம் பார்த்து நிற்க
சின்னஞ் சிறுவர்
வாடைக் காற்றில்
சுருங்கி உள்ளுறையும்
குஞ்சுக் கருமொக்கின்
கௌதுகம் காட்டி நிற்க
சொடுக்கும் சவுக்கு
குருதி குடிக்க
பின்வீரன் கொக்கரிக்க
மூடுபல்லக்கின்
உள்ளே இல்லை மங்கை.

பின்வீரன் கொக்கரிக்க
பீதாம்பரப் பெட்டகத்தான்
நின்றுநிலை சரிய
பஞ்சணையில் உடல்புரள
பதின்மர் துவண்டாட
பூக்கள் வாட
எழும் நிலவு
கைகொட்டிச் சிரிக்க
புரவிகள் கால்சோர
பூ என்ன
புகை எள்ள
சொடுக்கும் சவுக்கு
அறுந்து தொங்க
செம்பில் பாலாற
தூக்கு விளக்கின்
தீபச் சுடர்
பின்னிறங்கிச் செல்ல
கல்லொன்று விழ
மனக்குளத்தில்
வானத்துச் சித்திரங்கள்
மடிந்து மடிந்து கலைந்தாட
பீதாம்பரப் பெட்டகத்தான்
பொறை இழந்து ஆடிக் குதிக்க
மூடுபல்லக்கின்
உள்ளே இல்லை மங்கை.

*

வருத்தம்

வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம்போல
ஆயுளின் கடைசித் தேசல் இப்போது
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர்வாழும் கானல்.

*

பறக்கத் துடி

இன்னுமா நீ பறக்கவில்லை?
விரித்த சிறகுகளும்
தணித்த முன்னுடலும்
தொட்டும் தொடாமல்
மேலெழுந்து நிற்கும் கால்களுமாய்
உன்னை வடித்திருக்கும்
அந்தச் சிற்பியின் அந்தரங்கம்
இன்னுமா உனக்கு எட்டவில்லை?
நீ அமர்ந்திருக்கும் அந்தக் கல்தூண்முன்
அகன்ற முற்றத்தில்
காலம் காலமாய் வந்திறங்கி
நம் அசைவுகளிலும் நளினங்களிலும்
சோபைகளை வாரியிறைக்கும்
புறாக்களின் சுதந்திரத்தைக்
கண்ணாரக் கண்ட பின்னுமா
சிறகை விரித்து
பாதம் உயர்த்தி
பறக்கத் தயங்கி
நின்று கொண்டிருக்கிறாய்?

சிறிது சிந்தித்துப் பார்
உன் இனம்போல் நீயும்
வானத்தில் வட்டமிட வேண்டாமா?
உனக்கும்தான் இருக்கின்றன
அவைபோல் சிறகுகள்
உடற்கட்டில் துல்லியம்
இதைவிடவா கூடும்.
உயிரா?
உன்துடிப்பில் இருந்துதானே பற்றிற்று
உயிரின் பொறி
கல்தானே கனலாயிற்று
பறக்கத் துடி
துடி துடி துடி
பற்றும் உயிர்.

*

இந்த நிழல்

எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?
பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?
அல்லது அதன் அடியிலிருந்தா?

பூமியில் காலுன்றி நிற்கும் போது
நிழல்மேல்தான் நிற்கிறோமா?
காலைத் தூக்கிப் பார்க்கலாம்தான்

அந்த யோசனையை நான் ஏற்கவில்லை
பூமியில் நிற்கும் போது
எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்
என்பதுதான் எனக்கு தெரியவேண்டும்.

*

வாழும் கணங்கள்

மூளை நரம்பொன்று அறுந்து
ஒளிவெள்ளம் உள்ளே புகுந்தது
மனவெளியும் நிலவொளியில் குளிர
செவிப்பறை சுயமாய் அதிர
மண்ணில் ஒருபோதும் கேட்டிராத
ஓசை உபகைகள் எழும்பின
பாஷை உருகி ஓடிற்று
ஒரு சொல் மிச்சமில்லை
என் பிரக்ஞை திரவமாகி
பிரபஞ்சத்தின் சருமமாய்
நெடுகிலும் படர்ந்த்து
ஒரு கணம்தான்
மறு கணம்
லாாியின் இரைச்சல்
எதிரே காலி நாற்காலி.

*

நீக்கமற

கண்விழித்த போது
மனதில் அந்தக் கவிதையைக் காணோம்
நடுநிசியில் அது குமிழியிட்டபோது
குறித்து வைத்திருக்க வேண்டும்
அப்போது
மனத்தின் அடிவானத்தில்
கவிதையின் விண்மீன்கள்
கொட்டிக் கிடந்தன
நுரை பொங்கி வந்தன அழகின் ஆழங்கள்
விடிந்ததும்
வெறிச்சோடிக் கிடக்கிறது மனம்
அவ்வரிகள் மீண்டும் வரக்கூடும்
ஒன்றில் எனக்கு
அல்லது உனக்கு
கவிதை வரிகள்
பார்க்கத் தெரியும்போது
இல்லாத இடம் இல்லை.

*

வித்தியாசமான மியாவ்

எனக்குத் தெரிந்த பூனை ஒன்று
நேற்று இறந்தது
சவ அடக்கத்துக்கு
நாங்கள் போயிருந்தோம்
என் நண்பனின் மனைவி
அழத் தொடங்கியபோது
என் மனைவியும் அழுதாள்
குழந்தைகள் அழுதன
சில வார்த்தைகள் பேசும்படி
என் நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான்
நான் பேசத் தொடங்கினேன்:
‘இந்தப் பூனையின் மியாவ் மியாவ்
வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து
வித்தியாசமானது

மேலும்…

*

சாத்திக் கிடக்கும் கதவுகள்

சாத்திக்கிடக்கும் சன்னல் கதவுகள் சிக்கிக்கொள்ளும்
அவ்வப்போது திறக்காத தப்பு
இப்போது குத்து, உள்ளங்கையால் பலம்கொண்ட மட்டும்
மணிக்கட்டு நரம்புகள் விர்ரென்று தெறிக்கும்
குத்து
தெறிக்கும்
விடாதே
ஒரு உபகரணம் தேடியேனும் அதைத் திறந்துவிடு
வானத்தைப் பார்க்க உனக்குப் பல இடங்களுண்டு
வானம் உன் அறையைப் பார்க்க வேறு வழி எதுவுமில்லை
சிக்கும் கதவுகளைத் திறந்துவிடு.

*

சுந்தர ராமசாமியின் நூல்களுக்கான இணைப்பு: https://www.sundararamaswamy.in/tamil.php

அவருக்கான இணையத்தளம்:

https://www.sundararamaswamy.in/

TAGS
Share This