பொன் நாள்

பொன் நாள்

இன்றோடு ஐம்பது கவிஞர்களை எனது சிறு குறிப்புடன் பட்டியலாக்கமும் செய்து முன்வைத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒருவரெனக் கவிஞர்களுடனும் கவிதைகளுடனும் வாழ்ந்த இப்படியொரு காலம் வாழ்வில் முதல் முறையாக நிகழ்ந்திருப்பது. இத்தனை வருட வாசிப்பின் வழி எனக்குள் சேகரமாகிவரும் கவிதை பற்றிய மதிப்பீடு, பார்வைகளை உருவாக்கிய இக் கவிஞர்கள் என் முன்னோடிகள். ஒவ்வொருவரையும் மதிப்புடன் இக்கணத்தில் வணங்கிக் கொள்கிறேன்.

சதீஷ்குமார் சீனிவாசன், தர்மினி, ரஜிதா, ஆதி பார்த்திபன், பிரியாந்தி அருமைத்துரை, யோகி, தானா. விஷ்ணு, ஊர்வசி, போகன் சங்கர், ஆழியாள், எஸ். போஸ், சித்தாந்தன், நிலாந்தன், அனார், பொன்முகலி, சபரிநாதன், ஆண்டாள், பா. அகிலன், காரைக்காலம்மையார், சுகுமாரன், என். டி. ராஜ்குமார், க. மோகனரங்கன், தேவதேவன், மனுஷ்ய புத்திரன், பிரமிள், பிரான்சிஸ் கிருபா, சிவரமணி, சேரன், குட்டி ரேவதி, கருணாகரன், இசை, வெய்யில், செல்வி, சண்முகம் சிவலிங்கம், சுகிர்தராணி, நட்சத்திரன் செவ்விந்தியன், சல்மா, நகுலன், ஃபஹீமா ஜஹான், ச. துரை, ஒளவை, சுந்தர ராமசாமி, சு. வில்வரத்தினம், கி.பி. அரவிந்தன், ந. சத்தியபாலன், மாலதி மைத்ரி, தில்லை, ஆத்மாநாம், பெருந்தேவி, கற்பகம் யசோதர.

*

பழந்தமிழ் இலக்கியம், மொழிபெயர்ப்புகள் மற்றும் இன்னும் சில சமகாலக் கவிஞர்களையும் பற்றி எழுத விருப்பம். ஆனால் இடையில் கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. ஆகவே அடுத்துவரும் நாட்கள் ஒவ்வொன்றிலும் எனக்குப் பிடித்த பாடலாசிரியர்கள் பற்றி எழுதவிருக்கிறேன். அதுவொரு வகையில் மூளையை சற்று வேறு இடத்தில் வைத்துப் பயில்தலுக்கு இப்போது எனக்கு அவசியமானது.

கவிஞர்கள் பற்றி எழுதியது தற்செயலான ஒரு தொடக்கமே. ஆரம்பத்தில் சற்று நீண்ட குறிப்புகளை எழுதினேன். பின்னர் அதற்கென்று சில அடிப்படைகளை வரையறுத்துக் கொண்டேன். எனது அன்றாட மனநிலைக்கு ஏற்பவே கவிஞர்களைத் தெரிவு செய்வேன். அநேகமாக எழுதப்படுவதற்கு முதல் நாள் தான் யாரைப் பற்றி எழுதுவதென்று தீர்மானிப்பேன். எழுதி இக்குறிப்புகள் வெளியாகிய போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தவர்களுக்கும், தொலைபேசியில் அழைத்து உரையாடி செழுமைக்கு உதவும் கவிஞர் கருணாகரன், தர்மினி, குகபரன், லலிதகோபன் போன்றோருக்கும் இக்குறிப்புகளில் முன்வைக்கப்பட்டிருக்கும் பல கவிஞர்கள் தங்களது சமூக வலைத்தளத்திலும் இவற்றைப் பகிர்ந்திருந்தனர். எல்லோருக்கும் அன்பும் நன்றியும்.

எல்லாவற்றையும் விட மேலாக என்னைக் கவிதையெழுதத் தூண்டிய என் மூப்பர் சுகுமாரனுடன் தொலைபேசியில் பேசக் கிடைத்த அந்த எட்டு நிமிடங்கள். அவரது கவிதைகள் பற்றி எழுதிய அந்நாளில் வாழ்நாள் முழுவதும் காத்துக் கிடந்த குரல் அழைத்தது போல் அவரது தொலைபேசி அழைப்பை எடுத்தேன். கண்ணுக்குத் தெரியாத காற்றால் சிறகொன்று எழுந்து மிதந்து அலைபடுவது போல கால்கள் அலைய கதைத்து முடித்தேன். தொலைபேசியை வைத்ததும் பிரிந்தா, ஆரோட கதைச்சனி, நீ காதலிக்கத் தொடங்கின புதுசில உன்ர குரல் இப்பிடித் தானிருக்கும் என்று சொன்னாள். சிரித்துக் கொண்டேன். உண்மை தானில்லையா. காதலும் கவிதையும்.

எழுத ஆரம்பித்ததிலிருந்து பத்து நாட்களுக்கு மேல் வைத்தியசாலையில் இருந்திருக்கிறேன். சில நாட்கள் நோய்வாய்ப்பட்டிருக்கிறேன். சமூக வலைத்தளச் சர்ச்சைகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் நீண்ட பதில்களை எழுதியிருக்கிறேன். ஆனால் எதன் பொருட்டும் அன்றாடத்தில் என் பணியென்று நான் எடுத்துக் கொண்டதை கைவிடாமல் இருந்திருக்கிறேன். அதனாலேயே முதன்மையாக இச் சிறு செயல் எனக்கு அகநிறைவை அளிக்கின்றது. நான் எதில் முழுதொன்றித் திகழ்கிறேன் என்பதைக் கண்டடைந்து குன்றா ஊக்கத்துடன் செயல்புரிய உதவிய ஆசிரியர் ஜெயமோகனுக்கு சிறுதுளிக் கண்ணீருடன் இந்த ஐம்பது நாட்களைச் சமர்ப்பிக்கிறேன்.

TAGS
Share This