காமம் செப்பாது
உலகை ஒரு தட்டையான மாபெரும் புல்வெளியென உருவகித்துக் கொண்டால் அதில் கோடிக்கணக்கான புரவிகள் ஒன்றுரசி ஒன்றுமேவிப் பாய்ந்து நகர்வது போல் காமத்தின் பயில்வுகள் நகர்ந்து கொண்டிருகின்றன. காமம் மானுட விசைகளில் அடிப்படையானது. அதன் நுண்மைகள், உச்சங்கள், பிறழ்வுகள், அதீதங்கள், மரபுகள், நெறிகள், தவறுகள், சரிகள் தான் மானுட உறவுகளைத் தீர்மானிக்கும் அடிப்படையான கூறு. அதே நேரம் காமம், காமத்திற்கு அப்பாலான வாழ்வின் விசைகளையும் நோக்கி நகர வேண்டியது. காமத்தின் எல்லைகளுக்கு ஒவ்வொரு பண்பாடும் தனது அர்த்தங்களை மறுவரையறை செய்தே முன்னகர முடியும்.
பா. அ. ஜயகரன் எழுதிய அவனைக் கண்டீர்களா? குறுநாவல்களின் தொகுப்பில் உள்ள அவனைக் கண்டீர்களா? என்ற குறுநாவல் நமது காலத்தில் எழுதப்பட்ட மிக முக்கியமான காதல் கதை. யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த நூலுக்கான அறிமுக நிகழ்வில் மூன்று தலைமுறை இடைவெளிகளுடன் எப்படி இந்தக் கதை உரையாடப்பட்டது என்பதை அவதானித்தேன். எனக்கு முன்னைய தலைமுறையும் அவர்களுக்கு மூத்த தலைமுறையும் எவ்விதம் எதிர்கொண்டனர், இவை நடந்து கொண்டிருக்கும் பொழுது எனது தலைக்குள் எனது தலைமுறையின் குரல் எவ்விதம் ஒலித்துக் கொண்டிருந்தது என்பதையும் அவதானித்தேன். அவர்களின் மனதில் பட்டவற்றை வெளிப்படையாகவே பேசியிருந்தனர். அது முக்கியமானதொரு அம்சம். பாலியல் அல்லது காமம் பற்றி இலக்கியம் தன் வடிவத்தின் தொடக்க காலம் முதல் மிக விரிவான கவனம் கொண்டு உரையாடி வருகிறது. இதில் என்ன கொடுமையென்றால் எனக்கு அடுத்த இளைய தலைமுறைக்கும் எனக்கும் இடையேயே பத்து வருட இடைவெளி பார்த்துக் கொண்டிருக்க வந்துவிட்டது. அவர்கள் வாழ்வில் காமம் அல்லது காதல் எவ்விதம் நிகழ்கின்றது? அவற்றுக்கு அவர்கள் வாழ்வில் என்ன மதிப்பு? போன்றவை எவ்வளவோ மாறிவிட்டன.
இலக்கியம் சராசரி சமூக அளவுகோல்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஒரு நூறு கிலோமீட்டராவது முன்னால் செல்ல வேண்டியது. கலைஞர்களின் நித்திய பணி பெருந்திரளான மக்கள் கூட்டத்தின் முன் சிற்றொளி விளக்கை அசைத்தபடி ஓடிக்கொண்டு வழிகாட்ட வேண்டியது. பா. அ. ஜயகரனின் இதர கதைகளை விட அவனைக் கண்டீர்களா? என்ற குறுநாவல் சில அம்சங்களினால் கலை மதிப்பும் ஒருங்கும் விவாதப் புள்ளிகளும் கூடியது.
ஒன்று, காமத்தில் பாலின இருமைகளுக்கு மாற்றான தற்பாலீர்ப்பாளர்களின் காதலினைக் கதைக்குள் இழைத்திருக்கும் முறை. என்னளவில் தமிழில் நான் இதுவரை வாசித்தவற்றில் ஆண் காதலர்களைப் பற்றிய மிகச்சிறந்த கதையென்று இதைத் தயக்கமின்றிச் சொல்வேன். உதாரணத்திற்கு ஒரு தன்மையை மட்டும் சொல்கிறேன். கதையில் நிகழ்காலத்தின் சம்பவங்கள் முழுக்க புதிருடன் வெளிப்பட்ட ஒரு அம்சம் என்னவென்றால், கதையின் மையக்கதாபாத்திரம் வாழும் பாலியல் கேளிக்கை இடத்தில் அவன் எப்படிக் காமம் தூண்டப்படாமல் இருக்கிறான், ஒரு வகையில் கீழைத்தேய பாவனையோ என்று முதலில் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் பின்கதை வெளித்த போது அத்தனை முன்மர்மமும் கழன்று உதிர்ந்து இலேசாகியது.
இரண்டு, பெருமளவு ஆண்களின் இயல்புகள் அல்லது தோற்றத்தை வர்ணிக்கும் வார்த்தைகளினால் ஒரேவகையான ஆண் தன்மை திரும்பத் திரும்ப நிறைய ஈழத்துக் கதைகளில் வெளிப்படுவதுண்டு. அல்லது ஆணின் அழகென்பது ஒரு பொருட்டேயில்லாமல் கடந்து விடுவதுமுண்டு. அவன் வீரனோ துடுக்கனோ மிடுக்கனோ குறும்பனோ விசரனோ தான் பொது வரைவுகள். அவை ஒரு வகையான சித்தரிப்புகள் மட்டுமே. ஆண் அழகுணர்வுடன் வேட்கை மீதுற சித்தரிக்கப்பட வேண்டியவனும் கூட. அந்த அழகு என்னும் அம்சம் ஜயகரனின் எழுத்தில் முக்கியமானது. ஆணின் உடலழகும் காமத்தின் தகிப்பில் சுடரும் தேகமும் இவ்வளவு வடிவ மற்றும் சித்தரிப்பு நேர்த்தியுடன் ஈழத்துக் கதைகளில் வெளிவந்ததில்லை. இக் கதையிலும் பிற கதைகளிலும் கூட ஆணுடலினதும் வேட்கையினதும் தருணங்களில் அழகுணர்ச்சி வெளிப்படும் இடங்களில் உள்ள எழுதுபவரின் கண், தான் பார்ப்பவற்றை பேரழகுடன் முன்வைப்பதாக இருக்கிறது. இது கவனிக்கப்படத்தக்க அம்சம் என்றே கருதுகிறேன்.
காமம் பற்றிய எழுத்துகளில் ஷோபா சக்தி, சக்கரவர்த்தி, அனோஜன் பாலகிருஷ்ணன் போன்றவர்களின் எழுத்துகளுடன் பா. அ. ஜயகரன் சமதையாக வைத்து நோக்கப்பட வேண்டியவர்.
இக்கதை பற்றிய மூன்றாவது முக்கியமான அம்சம் பாலியல் கேளிக்கைகள், பிறழ்வுகள், அதீதங்களின் ஊடாக அழகுணர்வு சார்ந்து அதன் வழி உன்னதமாக்கலை (Sublimation) நோக்கி பா. அ. ஜயகரனின் கதை நகர்வது.
யாழ்ப்பாண நிகழ்வில் பரிமாறப்பட்ட கருத்துக்களில் எனக்கு முக்கியமாகப்பட்ட கருத்துகளை சுருக்கமாக தொகுத்துக் கொள்கிறேன், பாலியல் அல்லது காமம் சார்ந்த சித்தரிப்புகள் கதைகளில் நேரடியாக இவ்வளவு விரிவாக வருவது வலிந்து செய்யப்படுகிறதா? அல்லது தேவைக்கதிகமாக சொல்லப்படுகிறதா? தூசணங்கள் ஏன் இவ்வளவு வெளிப்படையாக எழுதப்படுகிறது? அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவா? இந்தப் புத்தகத்தை எனது பிள்ளைக்குக் கொடுக்க முடியுமா? தொழிலுக்காக ஒருவர் பாலியல் கேளிக்கை இடத்தில் பணியாற்றுவது அறம் சார்ந்த சிக்கலாக அணுகக் கூடாதா?
என்னுடைய பார்வைகளை சில அடிப்படைகளுடன் தொகுத்துக் கொள்ளலாம். ஒன்று, ஒரு எழுத்தாளர் எந்த விடயத்தை எழுதினாலும் அவற்றுக்கு இலக்கியத்தில் இடமுண்டு. அவற்றைப் பண்பாடோ மரபோ நெறியோ தடுக்கவோ மட்டுப்பாடுகளை உண்டாக்கவோ இயலாது. நமது பார்வைகளை முன்வைத்து மட்டுமே ஒரு ஆக்கம் எதிர்கொள்ளப்பட வேண்டும். ஒருவருக்குத் தற்பாலீர்ப்பை, ஓரினச்சேர்க்கை உறவு என்பதாக புரிந்து கொள்ள முடிகிறது என்பது அவருடைய பார்வை மட்டும் தான். எனக்கு அது காதல். இன்னொருவருக்கு அது ‘கம்பிக் கதையாகவும்’ இருக்கலாம். ஆகவே பார்வைகளை முன்வைத்து உரையாடலை உருவாக்குவது என்பது அடிப்படையில் ஒரு இலக்கிய ஆக்கத்தின் பணி. அண்மையில் நான் எழுதிய பிரியத்துக்குரிய பெண்ணுக்கு என்ற ஆக்கத்தின் உரையாடலின் தொடர்ச்சியாக முகநூலில் ரத்த ஆறே ஓடுகின்றது. நல்ல வேளையாக அது மெய்நிகர் ரத்த ஆறு.
ஒரு எழுத்தாளருக்கு இந்தச் சுதந்திரத்தைப் அளிப்பதே முன்னேறிய பண்பாடு. ஏன் இதை இவ்வளவு எழுதினார், கொஞ்சம் கத்தரித்திருக்கலாம் போன்ற அபிப்பிராயங்கள் சொல்லப்படக் கூடாதென்பதல்ல. அதைவிட முக்கியம், அங்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது. அவை ஏன் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதன் கோணத்திலிருந்தே ஒரு எழுத்தாளரின் உலகு அணுகப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.
தூசணம் எழுதலாமா? ஓம். எவ்வளவு எழுதலாம்? எவ்வளவு எழுத விருப்பமோ அவ்வளவு எழுதலாம்.
காமச் சித்தரிப்புகளை எழுதலாமா? ஓம். எவ்வளவு எழுதலாம்? தாளெலாம் விந்தும் மதனநீரும் சொட்டச் சொட்டக் கூட எழுதலாம்.
காலத்தின் பெருக்கில் அது கதையா இல்லையா என்பது மட்டுமே நாம் கணக்கிலெடுக்க வேண்டியது. அது கதையில்லையென்றால், அதற்கான தாவல் நிகழவில்லையென்றால் பிறவற்றால் என்னு பயனும் இல.
கூட்டத்தில் சொல்லப்பட்ட கருத்துகளைக் கேட்டுக் கொண்டிருந்த போது எனக்கு ஒரு தோற்றமயக்கு உண்டானது. கதைகளைப் பற்றிய தமது வாசிப்பினை அவர்கள் பல்வேறு தர்க்கங்களினதும் அவதானிப்புகளின் வழியும் முன்வைத்து விரிவான செறிவான உரைகளையே ஆற்றினர். ஆனால் எனக்கு அந்தக் கதைகள் அங்கு ஆவியாய் நின்றபடி உரையாற்றியவர்களை வாசித்தது போல் தோன்றியது. இந்த அருவக் காட்சியின் படிமம் முக்கியமானது என்றே படுகிறது. ஒரு கதையை அல்லது கவிதையை நாம் வாசிக்கும் அதேவேளை அக்கதையும் கவிதையும் நம்மையும் வாசிக்கிறது. எமது நம்பிக்கைகளுடன் மோதுகிறது, தர்க்கங்களை இளக்குகிறது, பார்வைகளுடன் இன்னொரு பிணைப்பென இணைந்து கொள்கிறது. இதனை அவர்களின் உரைகளில் அவதானித்த போது மகிழ்ச்சியாயிருந்தது.
மூத்த தலைமுறையில் கடும் இறுக்கமான இரும்பாய் இருந்தவை, அடுத்த தலைமுறையில் கொஞ்சம் இளகி அவர்களுடன் சங்கிலிகளாகவாவது இணைந்தும் இறுக்கியும் அலைபடுகின்றன, எனது தலைமுறையில் அவை பட்டறை நெருப்பில் உருகி விழுந்து கொண்டிருக்கின்றன. அடுத்த தலைமுறைக்கு அவை ஆபரணங்களாய் ஆக வேண்டும். தற்பாலீர்ப்புக் காதல்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதை நோக்கி இலக்கிய உரையாடல்கள் விரிவு கொள்ள வேண்டும். இங்கு தலைமுறை என்பது வயதால் மட்டுமே குறிக்கப்படுகிறது. மனதால் யாரும் எந்தத் தலைமுறையுடனும் இணைந்து கொள்ள எந்தத் தடையுமில்லை.
எனது பிள்ளைக்கு இக்கதைகளை வாசிக்கக் கொடுக்கலாமா என்பது இவற்றுள் முக்கியமான ஒரு கேள்வி. இவை மட்டுமல்ல எந்தப் பாலியல் சார்ந்த சித்தரிப்புகளோ வசவுகளோ கொண்டவற்றை நமது பிள்ளைகளுக்கு அவர்களின் முதிரா வயதில் நாம் அளிக்கலாமா என்று கேட்டால், அது ஒருவரது சொந்தத் தேர்வு என்பதே பதில். நாம் ஒரு தந்தையோ தாயோ நமது பிள்ளைகளுக்கு எவை முக்கியமெனத் தேர்வு செய்யும் பொறுப்பு நமக்குண்டு.
ஆனால் நமது குடும்பத்தில் பாலியல் பற்றி எவ்விதம் பிள்ளைகளுடன் உரையாடுகிறோம்? அல்லது உரையாடுகிறோமா? என்பதே எனக்கு உடனடியாக எழுந்த கேள்வி. பாலியலைத் தமிழ்க் குடும்பங்களில் மகனுடனோ மகளுடனோ உரையாடும் பழக்கம் பெரும்பாலும் இல்லை. பாலியலைப் பிறழ்வுகளின் வழியும் ரகசியமாகவுமே பலரும் அறிந்து கொள்கிறோம். சமூகத்தின் அதீத பாலியல் வெள்ளத்தில் நமது குழந்தைகள் பற்றிமீள, என்ன வகையான அறிவார்ந்த வழியை நாம் கொண்டிருக்கிறோம்?
ஒன்று, சிறுவயது முதல் பாடசாலையில் பாலியல் கல்வி அளிக்கப்பட வேண்டும். பாலியல் கல்வி என்றவுடன் எப்படி உறவு வைத்துக்கொள்வது என்பது மட்டுமாக யோசித்து மூளையக் குடைவதை ஒழுக்கவாதிகள் நிறுத்திக்கொண்டு, அதன் விரிவான எல்லைகளை அறிதலுக்கும் உரையாடலுக்கும் கொண்டு வர வேண்டும். நமது சிறுவர்களுக்கு சினிமா தான் காதல் மாஸ்ட்டர். பாலியல் படங்கள் தான் காம வழிகாட்டிகள். இவற்றினால் மனப்பிறழ்வுக்கான எனது தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறையாவது மீள்வதற்கான உரையாடலைப் பாலியல் கல்வி வழங்க வேண்டும். உடலின் விஞ்ஞானம், பாலியல் நோய்கள், உளவியல், சட்டங்கள், இலக்கியங்கள் என்று மிக விரிவான பரப்பு அது.
இரண்டு, வீட்டில் நமது பிள்ளைகளுடன் காதல் பற்றி என்ன உரையாடுகிறோம். ஒரு அப்பாவோ அம்மாவோ மகனிடம் அல்லது மகளிடம் என்னவகையான உரையாடல்களைச் செய்கிறார்கள். குறைந்த பட்சம் காதல் என்றால் தாம் என்ன நினைக்கிறோம் என்பதையாவது பகிர்ந்து கொள்ளும் குடும்பங்கள் எத்தனை? அரசல்புரசலாகவும் வெட்கக் கதையாகவுமே இவை நிகழ்ந்து தொலைகின்றன. இன்று படித்து முன்னேறிய பிரிவினரே கூடக் காதலையும் காமத்தையும் போட்டுக் குழப்பியடித்து முட்டி மோதிக்கொண்டிருக்கின்றனர். ஆணோ பெண்ணோ என்னவகையில் எதனடிப்படையில் தனது துணையைத் தேர்வு செய்கிறார்? உறவும் பிரிவும் எத்தகையது?
சமூக நெருக்கடிகள் எவை? ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரம் என்ன? என்ன வழிமூலம் பாலியலையும் காமத்தையும் இளைஞர்கள் கற்றுக்கொள்ளலாம்? காமமோ காதலோ நாய்க்குட்டியொன்று தானே தன் எதிரியைக் கற்பனை செய்து, பதுங்கி, பாய்ந்து, உறுமி, தாவிப் பழகும் வேட்டையல்ல. அந்த ஆதார உணர்வு அனைவருக்கும் பொதுவானது தான். ஆனால் சமூகமாக வாழும் போது நாம் நமது விலங்கைப் பழக்கப்படுத்தச் சொல்லிக்கொடுக்க வேண்டும். காதலின் உச்சங்களையும் பாதாளங்களையும் பற்றி மெல்லிதாகத் தன்னும் நமது பிள்ளைகளுடன் பேசும் மொழியை நாம் பயின்று உருவாக்கிக் கொள்ள வேண்டும். அது தான் நமது குடும்பச் சூழலில் உள்ள பெரிய சிக்கல். பாலியலை உரையாடும் மொழி என்ன? எவை எப்பொழுது எந்த வயதில் சொல்லப்பட வேண்டும்? எனக்கும் பல கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை. ஆனால் பாலியலை உரையாடும் மொழியைத் தமக்குத் தாமே உருவாக்கும் குடும்பங்கள், நிறைவான எதிர்காலமும் நம்பிக்கையும் கொண்ட பிள்ளைகளை உருவாக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.
ஒருவர் ‘வழியின்றி’ பாலியல் கேளிக்கை இடத்தில் வேலை செய்வதையே அற நெருக்கடியாய் நாம் அணுகலமா? கூடாது என்பதே எனது பார்வை. இவை தொழிலை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் நடத்தையை மதிப்பிடும் பார்வைக்குச் சமானமானது. கதையில் வரும் நபர் ஆரம்பத்தில் ஒருவகை கீழைத்தேய மனத்துடன் அடையும் ஒவ்வாமைகள் பின்னர் எப்படி மானுட நேசமென துளிக்கண்ணீருடன் கேளிக்கை அரங்கில் அவர் ஆற்றும் உரையில் உன்னதமாக்கலைத் தொடுகின்றது என்பதும், முடிவில் அங்குள்ள பெண்ணொருவர் அவரை அணைத்தபடி செல்லும் காட்சி அடையும் மானுட உச்சமும் நிகழ்ந்த பின்னர் இது ஒரு அறச் சிக்கலாக எழத் தேவையில்லை. இதை ஒருவகை ஒழுக்கவாதப் பார்வையின் சிக்கலாகவே நான் புரிந்து கொள்கிறேன். ஒழுக்கத்தையும் அறத்தையும் போட்டு நாம் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை. ஒருவருக்கு இது ஒரு ஒழுக்கவாதப் பிரச்சினையாகத் தோன்றுவது அவருடைய சொந்தப் பார்வை. அதுவே பெரும்பான்மை சமூகத்தின் பார்வையெனவும் அமைகின்றது. ஆனால் மலக்காட்டில் முளைக்கும் மலரென வாழ்வு எங்கும் நிகழ்ந்து கொண்டிருப்பது. அவற்றின் மேல் நம் ஒழுக்கவாத வாடைகள் எழுந்தாலும் மலர் தன்னளவில் தன் வாசனையால் வாழ்வுறைவது. அதன் வாழ்வும் மகத்தானதே. ஒரு பாலியல் கேளிக்கை விடுதியில் துப்பரவுப் பணியாளரோ நடன மங்கையோ பாலியல் தொழிலாளியோ அவர்கள் யார் என்பதையும் அவர்கள் தேர்வு என்ன என்பதையும் நம் ஒழுக்கவாத பார்வைகளால் அணுகத் தேவையில்லை. அவை அறம் சார்ந்த சிக்கல்களும் கூட இல்லை. இவை ஒவ்வொன்றும் அவரவர் தன்னறம் சார்ந்தது.
தட்டையான இந்தப் புடவியின் புல்வெளியில் ஓடிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான புரவிகள் ஒன்றை விலத்தி இன்னொன்றும் ஒன்றை மேவி இன்னொன்றும் தாகம் தொடரும் வரை, மடிந்து வீழும் வரை காற்றென விரைந்து கொண்டேயிருக்கும். தணியாத இந்த ஓட்டமே இவ்வுலகையாளும் விசை. பா. அ. ஜயகரன் அவ்விசையின் சில புரவிகளை முதுகில் தட்டி ஓடவிட்டிருக்கிறார்.