ஆகப் பெரிய கனவு

ஆகப் பெரிய கனவு

குழந்தைகளுக்கான உலகை உருவாக்கும் கைகளே இப்புவியில் மகத்தான எடையின்மை கொண்டவை. குழந்தைகளுக்காகக் காணும் கனவுகளே தூய்மையின் பொற்சிறகணிந்தவை. குழந்தைகளின் நிலையெண்ணிக் கண்ணீர் சிந்தும் விழிகளே தெய்வம் உறையும் அகல்கள்.

தும்பி சிறார் இதழ் தனது 81 ஆவது இதழுடன் பொருளாதாரச் சுமையால் தனது பறத்தலை நிறுத்துவதாகக் கண்ட அறிவிப்புத் தான் இதுவரையான வாழ்நாளில் நான் வாசித்த ஆகத் துயரார்ந்த செய்தி. தும்பியைப் போல் ஒரு இதழ் தமிழில் நிகழ்ந்தமை நம் காலத்தின் பெரும்பேறு. அதை ஆக்கிய ஒவ்வொரு கரங்களும் தூக்கிச் சுமந்த தோள்களும் ஒருபோதும் சோர்வடையவோ குன்றவோ கூடாதவை.

அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள இருப்பது இவை தான், தோழமைகளே, நீங்கள் ஆக்கியளித்த அத்தனை இதழ்களின் கனவிலிருந்தும் சொல்கிறேன், இக்கனவை ஆற்றியதற்காக இந்த மொழியின் அத்தனை மனிதர்களின் சார்பிலும் பணிந்து உங்கள் பாதத்தில் முத்தமிடுகிறேன். உகும் கண்ணீரால் அவற்றைக் கழுவுவேன். பற்றிப்பிடித்தபடி விடாது தொடருவேன். நீங்கள் ஆற்றியது பல்லாயிரம் கரங்களினால் ஆற்றப்பட வேண்டியவை. அதை உங்கள் சிறு கரங்கள் எப்படிச் செய்தன! நீங்கள் கண்ட கனவுகள் ஆயிரம் கவிஞர்களால் காணப்பட வேண்டியவை, அவை உங்கள் உள்ளங்களில் எப்படி எழுந்தன! மகத்தான ஒன்றை செயற்படுத்தியிருக்கிறீர்கள், நீங்கள் வாழ்க! உங்கள் உளங்கள் தழைக்கும் பசுஞ்செடிகளென குழந்தைகளுக்குள் விழுந்து எழுக! ஆயிரமாயிரம் குழந்தைகளால் நீங்கள் வாழ்வீர்கள்! உங்கள் செயல் வாழும்! கனவு ஒரு பேராறெனெப் பெருகும், புதுப்புனலெனத் தீராது ஓடும்.

எது குறித்தும் கவலை வேண்டாம். எவை குறித்தும் கலங்க வேண்டாம். இன்னும் ஒரு நூறாண்டு நீங்கள் வாழ வேண்டியவர்கள். கனவளிக்க வேண்டியவர்கள். உறையாநதியின் ஊற்றுகள், ஒரு ஆற்றல் இன்னொன்றாக ஆகும், ஆற்றலின் இயல்பு அது. இன்னொரு செயல் கூடும், இன்னொரு மகத்தான கனவு நீங்கள் ஆக்கிய இப்பெருந்தேன் கூட்டிலிருந்து சொட்டும்.

சிவராஜ் அண்ணாவின் உள்ளம் இதை எப்படித் தாங்கியிருக்கும் என்றே என்னால் எண்ண முடியவில்லை. எந்தச் சொல்லாலும் தேற்ற முடியாத துயரம் இக்கணம் அவருள் நிறைந்திருக்கும். அணைத்துக் கொண்டு அழ வேண்டும் போலிருக்கிறது. அக்குரலில் தீராது இருக்கும் நடுநடுக்கம், கனவு, இனிமை, புதுச்சோளமெனச் சிரிக்கும் அவரது பற்கள் எல்லாமும் நினைவில் ததும்புகிறது. வாழ்நாளில் நான் நேரில் சந்திக்காத ஒரு மனிதனுடன் இவ்வளவு பிணைப்பு எனக்குள் இருக்குமா என்பதே இதுவரை நான் உணரவில்லை. அது தும்பியும் தன்னறமும் உண்டாக்கி அளித்த சிவராஜ் என்னும் இணைவு, அவர் எழுதும் சொற்களில் உள்ள கவிஞனிடம் உள்ள நெருக்கம், அவர் இருப்பினால் நான் அடையும் நம்பிக்கையால் உண்டாகும் பிணைப்பு. நம் காலத்தின் காந்திகளில் ஒருவரின் முன் நான் அடையும் பணிவு. தோழா, நீங்கள் செயல்புரியும் ஒவ்வொரு இளைஞருக்கும் ஈடிணையில்லாத முன்னோடி, ஒவ்வொரு குழந்தைக்கும் மகத்தான தந்தை.

தும்பியின் செயற்களங்களில் உடனிருந்த பலரின் சிரிப்பையும் அந்த ஒளிப்படங்களையும் நினைவு எவ்வளவு நேர்த்தியாக அடுக்கி வைத்திருக்கிறது என நினைக்க ஆச்சரியமாயிருக்கிறது. எனக்குள் அவர்கள் ஒவ்வொருவரும் சக இருப்பெனவே நிகழ்ந்திருக்கிறார்கள். அது அவர்களின் அப்பழுக்கற்ற ஆன்மாக்களிலிருந்து நான் அடையும் நிம்மதியாய் இருக்கலாம். அது ஒருவகை நிம்மதி, இந்த உலகில் குழந்தைகளுக்காகச் சிந்திக்க செயல்புரிய சில மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற ஆறுதல். அது தான் எத்துணை பெரியது! உங்கள் ஒவ்வொருவரையும் நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறேன். நீங்காது செயல் புரிக! தயங்காது முன் செல்க!

*

தும்பி இதழின் நிலுவைக் கடன்களை அடைக்கக் கூடிய நண்பர்கள் அவர்களுக்கு உதவுக. அவர்கள் பங்களிப்பை மதிப்பிட விரிவாக எழுத வேண்டும். இப்பொழுதே இந்தச் செய்தியை அறிந்தேன். அது அளித்திருக்கும் மனநிலையிலிருந்து மீளவே கடினமாயிருக்கிறது. ஏதாவதொரு வகையில் அணில் கொட்டிய மணலெனச் செய்யும் சிற்றுதவியும் அவர்களுக்கு நாம் சமூகமாகச் செய்ய வேண்டியது.

முன்னொரு நாள் பஸ்ஸில் இரண்டு சிறுமிகள் சண்டை பிடித்துக் கொண்டிருந்தார்கள், தீராத சண்டை, ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு ஓயாமல் வாயாடிக் கொண்டிருந்தார்கள், பையிலிருந்த இரண்டு தும்பிகளை இருவருக்கும் கொடுத்து கொஞ்ச நேரம் வாசியுங்கள் என்றேன். தாயை நிமிர்ந்து பார்த்தார்கள். தாய் புன்னகைத்தபடி தலையைத்தார். கண்ணெல்லாம் ஆச்சரியம் ஒளிவிட அவர்கள் இறங்கும் வரை அதைப் புரட்டிப் புரட்டி ஒவ்வொரு சொற்களாக எழுத்துக் கூட்டி, படங்களை ஒருவரையொருவர் தொட்டுக் காட்டி, இரண்டு புத்தகங்களையும் பரிமாறி வாசித்தார்கள். இறங்கும் இடம் வரும் போதும் அவர்கள் புத்தகங்களை வாசித்து முடித்திருக்கவில்லை. இரண்டையும் வாங்கி, என்றாவது ஒரு நாள் இதை இன்னொரு குழந்தைக்குத் திருப்பிக் கொடுங்கள் என்று எழுதி அவர்களிடம் கொடுத்தேன். முகமெல்லாம் விரியச் சிரித்தபடி நின்ற அந்தக் குழந்தைகளின் முகம் இப்போது நினைவிலில்லை. ஆனால் அதுதான் ஒவ்வொரு குழந்தையினதும் அகம். தும்பியின் கடனை அடைப்பது என்பது நாம் குழந்தைகளுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய நன்றிக்கடன்.

இதுவரையிலான தும்பி இதழ்கள் பெற:https://thumbigal.com/store/

தன்னறம் பதிப்பக நூல்கள் பெற: https://thannaram.in/buy/

தொடர்புக்கு: 9843870059
thumbigal@gmail.com

தும்பியின் பதிவு: https://kirishanth.com/archives/1219/

TAGS
Share This