மிடிமை
கவிஞர்கள் இவ்வுலகின் மிடிமைகள் மீது கொள்ளும் கோபமென்பது இல்லாமையின் மீது உருவாகும் அனல். கவி தன் சொற்களில்லாத வேளையில் மாபெரும் இன்மையில் உழல்பவர். இல்லாமை கொன்று போடும் கோபத்தின் எல்லைக்குச் செல்வது பாரதியின் சொற்களிலும் வழிவது. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்ற கோரிக்கையில் என்ன நியாயம் இருக்க முடியும். ஒருவனுக்காக அனைத்தையும் அழிப்பதா!
யூமா வாசுகியின் தீராத கணக்கு கவிதையில் உள்ள கனல் பாரதியின் நீட்சி. உனக்கேன் என்னைக் கொன்று பழி தீர்க்கத் தெரியவில்லை என்ற இறைஞ்சுதல் எழும் அக்கணம் கவி ஓர் இறை. அடுத்தகணம் மனிதர்.
*
தீராத கணக்கு
எதையோ நினைத்தபடி
எங்கோ சென்றுகொண்டிருக்கும்போது
சட்டென்று உன் குழந்தையுடன் வழிமறித்து
பிச்சை என்று கேட்டாய்.
தெய்வமே அந்தக் குழந்தை
என்னமாய்ச் சிரித்தது…
அதற்கு மாறாக நீ என்
சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கலாம்
ஓரிரவில் சாக்கடையோரம்
கொசுக்கள் குதறும் வதையில்
துடித்துப் புரளும் குழந்தையைக் காட்டி
அய்யா என யாசித்தாய்
உறக்க மயக்கத்தில் அழச் சக்தியற்று அது
எவ்வளவு ஈனமாய் சிணுங்கியது…
அதற்குப் பதில் நீ என்னை
அடித்துப் பிடுங்கியிருக்கலாம்
பஸ்ஸுக்குக் காத்திருக்கும் கூட்டத்திடையில்
உன் குழந்தை என் கால்களைத் தொட்டு
கை மலர்த்தும்படிச் செய்தாயே,
ஒஅரிதாபமாய் முகம் காட்ட அது அப்போது
எவ்வளவு பாடுபட்டது…
அதைவிடவும் நீ என்னை
முகத்தில் உமிழ்ந்து கேட்டிருக்கலாம்
இறுகிய முகத்தின் கண்ணீர்த் தடத்துடன்
அனாதைக் குழந்தையை அடக்கம் செய்ட்யவென்று
இரந்து நிற்கிறாய் இன்று
புவி சுமக்க முடியாத பாரமாக இது
எவ்வளவு அமைதியாகக் கிடக்கிறது…
அய்யோ அய்யோ என்று
பதறி அழிந்தபடியே
ஒவ்வொரு அடியையும் எடுத்துவைத்து
உன்னைக் கடந்து போகின்றேன்
தாயே என்னைக் கொன்று பழி தீர்க்க
ஏன் உனக்குத் தெரியவில்லை.
யூமா வாசுகி