ஆகாயத்தில் ஒரு வாக்கு

ஆகாயத்தில் ஒரு வாக்கு

யுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது.

முதற் தாய்

“நான் சைக்கிள்ல போய்க்கொண்டிருந்தன், ஆகாயத்தில் ஒரு வாக்குக் கேட்டது, யேசு சொன்னார், நீ வீடு கட்டி முடிப்பாயடி எண்டு. அது பலிச்சது. அது மாதிரி மேல் லோகத்தில இதுக்கெல்லாம் ஒரு தீர்ப்பு இருக்கெண்டு நம்பிறன். எங்கட பிள்ளையள கொண்டு, கொத்தி எறிஞ்சு போட்டாங்களோ தெரியாது. மைத்திரியும் சொல்ல மாட்டான், மகிந்தவும் சொல்ல மாட்டான். அதையெல்லாம் யேசுதான் பார்த்துக்கொள்ளுவார். நான் யேசுவ கும்பிடுறனான் பொய் சொல்ல மாட்டன்.”

அரிசி பெறக்கி வளர்த்த ராசா

“எனக்கு அஞ்சு பிள்ளையள் மேனே, இப்ப ஒருத்தரும் இல்லாம தனிய இருக்கிறன். முப்பத்தியாறு வயசு வரைக்கும் இவன் என்னட்ட இருந்தான். என்னட்டையே சுத்திச் சுத்தி வருவான். எவ்வளவு கஷ்டப்பட்டு அவனைப் படிக்க வைச்சன். ரோட்டில இருக்கிற அரிசி பெறக்கித்தான் ராசா அவனைப் படிக்க வைச்சன். இப்ப என்ர மகள் என்னைப் பார்க்கிறாள். ஆனா அவளுக்கு நேரமில்லை. கஷ்டம். மூண்டு பொம்பிளைப் பிள்ளையள். அவளுக்கு பாங்கில வேல. டீ ஊத்திக் குடுக்கிறது, மற்ற வேலைகளும் செய்வாள். பத்தாயிரம் தான் சம்பளம். அவள் எப்பிடி என்னைப் பாக்கிறது. நான் படுக்கையில விழுந்தா ஆர் பாக்கிறது?”

சொல்லி நிமிர்ந்து விட்டு “உங்களைப் போல பெடியளப் பார்த்தா வயித்தைப் பத்தி எரியுது ராசா. என்ன செய்ய. என்ர பெடி…”

அண்ணார்ந்து வானத்தில் வெறித்தாள்.

அடுத்த தலைமுறைக்கு

“ஐயோ தம்பியவை, இந்த அரசியல்வாதியள நம்பி ஒரு பிரயோசனமும் இல்லை. இவங்களிண்ட காலில விழுந்து எப்பிடி அழுதம். நாங்கள் அவங்கட சப்பாத்துக் காலில விழுந்தது அத துடைக்கிறதுக்கெண்டு நினைச்சிட்டாங்கள். எல்லாரும் வருகினம் போகினம் ஒண்டுமில்ல. ஒரு மாற்றமும் இல்ல. அவனில்லாட்டா இவன். அவ்வளவுதான் தம்பி. நாங்கள் எல்லாரும் சேர்ந்து என்ன நடந்ததெண்டு புத்தகம் எழுதிப் போட்டு சாகிறது தான் கடைசியா நடக்கும். அடுத்த தலமுறைக்கு என்ன நடந்ததெண்டாவது தெரியட்டும்.”

இந்தக் கதைகளெல்லாம், முந்நூற்று அறுபத்தாறு நாளாய் தொடர் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கும், கிளிநொச்சி கந்தசாமி கோயிலுக்கு முன்னாலுள்ள, காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டப் பந்தலில் அலைந்த கதைகளில் சில. பெருமளவுக்கு உக்கிரமாயிருக்குமென்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், வழமை போல், நூறிலிருந்து முன்னூறு வரைக்கும் தான் வந்தார்கள். இதற்கான பொறுப்பு வாய்ந்த தரப்புக்கள் எவர்?

முதலாவது, இங்குள்ள போராட்டங்களில் அதி உணர்ச்சிகரமான போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம். இதில் பொதுப்புத்தி சார்ந்து இரண்டு பிரிவுகளை நான் கவனப்படுத்த விரும்புகிறேன். ஒன்று, இது தேவையானதொரு போராட்டம்தான். ஆனால், பங்களிக்க முடியாது. அல்லது நேரமில்லை. இரண்டு, இதுவொரு தேவையில்லாத போராட்டம். அவர்கள் இறந்து விட்டார்கள், திரும்பி வரப் போவதில்லை. அரசியல்வாதிகள் சனத்தை ஏமாற்றுகிறார்கள்.

இனி இந்த இரண்டு தரப்பிலும் உள்ள பிரச்சினைகளைப் பார்ப்போம். இந்த இரண்டு பிரிவிலும் வேறு வேறு புரிதல்கள் இருந்தாலும் இந்த இரண்டு பிரிவுமே செயலளவில், இந்தப் போராட்டத்திற்கு வருவதில்லை, அதனை உரையாடுவதில்லை, அதனைக் கடந்து போய் விடுகிறார்கள். ஆனால், இரண்டு தரப்பும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற நிலைப்பாட்டில் இருப்பதனால், மனது, அவர்களைக் குற்றவுணர்வற்று இருக்க வைக்கிறது.

இன்னுமொரு தொகுதியினர், இந்த மக்களையும் இந்தப் போராட்டங்களையும் வைத்து பிழைப்புச் செய்து வருவதும் உண்டு. போராட்டத்தை திரிபுபடுத்துபவர்களும் உண்டு. மக்களுக்கிடையில் பிளவுகள் உண்டு. பூசல்கள் உண்டு. ஏற்றத்தாழ்வுகள், ஒருத்தருக்கொருவர் சந்தேகங்கள் என்று எல்லாமே உண்டு.

ஆனால் தோழர்களே, இது எல்லாமும், இன்னும் நிறையவும் கலந்ததுதான் மக்கள் போராட்டம். அது நமது நம்பிக்கைகளின் படிதான் இயங்க வேண்டுமென்று நாம் எண்ண முடியாது. அதே நேரம் தர்க்கம் மட்டுமே வாழ்க்கையோ போராட்டமோ அல்ல. தர்மமும் அறமும்தான் வாழ்க்கையும் போராட்டமும்.

இங்குள்ள மக்களின் அடிப்படையான பிரச்சினையாக நான் பார்ப்பது, இளம் தலைமுறையும் மூளைசாலிகளுமாய் உள்ள பெருந்தரப்பு இந்தப் போராட்டங்களுக்கு வெளியேயிருப்பதுதான். அவர்களும் இந்த மக்களின் நிலைக்காய் இரங்குவர், ஆனால் தமது வாழ்க்கையிலிருந்து சிறிய பகுதியை அவர்களுக்காய் அவர்களால் ஒருபோதும் செலவளிக்க முடியவில்லை. அதனை இடைவெளியாய்ப் பயன்படுத்தி அரசியல்பிரதிநிதிகளோ, அல்லது வேறு சக்திகளோ இவற்றை குழப்பவும், குத்தகைக்கு எடுக்கவும், சீரழிக்கவும் முடியும். ஆகவே, நம்பிக்கையிருப்பவர்களும் சரி, உடன்பாடு இல்லாதவர்களும் சரி தொடர்ச்சியாக இந்த மக்களுடன் உரையாடுவதில் தடையில்லைத்தானே. அவர்களிடம் கொஞ்ச நேரம் கதை கூடக் கேட்க முடியாதா எங்களால்? குறைந்தது, சொல்லியழுதாவது அவர்கள் தங்களைத் தேற்றிக்கொள்வார்கள்.

நாம் என்ன தர்க்கம் சொல்லியும் அவர்கள் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. அல்லது அப்படிக் கைவிட்டாலும் அவர்கள் அதனைக் கடக்கப் போவதில்லை. “மகனை நினைத்து நினைத்தே என்ர மனுசன் செத்துப்போனார்” என்ற தாய்க்கு நம்மால் என்ன செய்யமுடியும். இந்தப் போராட்டங்கள், ஒரு வகையில் வாழும் நம்பிக்கையை கொடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கையை நாம் கொடுக்க முடியுமா? உலகில் எதனால் அது முடியும்.

நீண்டு செல்லும் இந்தப் போராட்டம், சரியான வகையிலான இளைஞர் பங்கேற்பின் மூலம்தான் அடுத்தக் கட்டத்திற்கு நகர முடியும். யுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு அதனைப் பொறுப்பெடுக்க வேண்டியவர்கள், அடுத்த தலைமுறைதான். அதனை எந்த இடத்திலும் சமரசம் செய்துகொள்ளத் தேவையில்லை.

போராடும் எல்லாப் பந்தல்களுக்கும் அருகிருக்கும் இளைஞர்கள் ஏன் இந்த மக்களை தினசரி சந்திக்கக் கூடாது, மற்றவர்கள் இடைக்கிடையாவது, ஏன் சாதாரணமாக சந்தித்துக் கொஞ்ச நேரம் கதைக்கக் கூடாது? இதனை முதல் முயற்சியாக நாம் செய்து பார்க்க முடியும், முந்நூற்று அறுபத்து ஆறு நாட்களுக்குப் பிறகாவது.

இந்த உள்ளுராட்சித் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளான இளம் தலைமுறையினர் தமது அரசியல் பயணத்தில் இதுபோன்ற பிரச்சினைகளை அணுகவேண்டும். மக்களின் பிரச்சினைகளை, அதன் பல்பரிமாணங்களை நேரடியாக அறிதலும், அதனூடாக மக்களிணைப்பும் உருவாகினால், எதிர்காலத்தில் கொஞ்சமாவது பொறுப்புணர்ச்சி ஏற்படும். இல்லையென்றால் இன்றைக்கு வந்திருந்து தங்களுக்குள் குசலம் கதைச்சுப்போட்டு, அரசியற் பகிடிகளை விட்டுவிட்டு, சடங்குக்கு வந்திருந்து சென்ற மற்றைய பிரதிநிதிகள் போல் நீங்களும் ஆகிவிடுவீர்கள். நீங்கள் அப்படியில்லையென்பதை மக்களிடம் நிரூபிக்க வேண்டும், நம்பிக்கையை விதையுங்கள், அதை வளர்த்தெடுங்கள், காப்பாற்றுங்கள்.

அடுத்து மூளைசாலிகளே, அறிவுஜீவிகளே, நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? விரல்விட்டு எண்ணக் கூடியவர்களைத் தவிர வேறு யாரும் பொருட்படுத்தும் படி எந்த ஆலோசனையையும் மக்களுக்குத் தங்கள் எழுத்துக்களின் மூலமோ, செயல்களின் மூலமோ வழங்கவில்லை. சில கலைஞர்கள் அரிதாக ஏதாவது செய்வதோடு சரி, அதற்கு மேல் சமூகப் பொறுப்பை எதிர்பார்ப்பது எங்களது பிழைதான்.

ஆகவே, பிரதானமாக இந்த விடயங்களில் பங்களிப்போர், அதனை வெளிப்படுத்துவோர் என்ற இருபிரிவினரையும் இணைக்கும் புள்ளிகளை நாம் உரையாட வேண்டும். இன்னும் நாம் யாருக்காகக் காத்துள்ளோம்? நாம்தான் இனி நடைமுறையை உருவாக்க வேண்டும். நமது சிந்தனைகளையும் செயல்களையும் ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்துவதற்கும், வீணான விவாதங்களில் செலவழிப்பதற்கும் ஓய்வொழிச்சல் இல்லாமல் இயங்கிக்கொண்டிருக்கும் நாம், குறைந்தபட்சம் நம் வாழ்வின் சிறு பகுதியையேனும் அவர்களுடன் செலவிடவேண்டும்.

கும்பாபிஷேகம்

போராட்டத்திற்கு மத்தியானம் பன்னிரண்டு மணியளவில் பல்கலைக்கழக மாணவர் குழுவொன்று வந்தது. ஏறக்குறைய நாற்பது பேர், பக்கத்திலிருந்த அம்மா, இவை இப்பையே வருகினம் என்று விட்டு சோம்பலாய்த் திரும்பினார்.

மத்தியானம் சாப்பாடு தந்தார்கள். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, எங்களுக்குப் பக்கத்திலொருவர் வந்தார், காலில் செருப்பில்லை, அழுக்குப்படிந்த சாரமும் சேட்டும், வழுக்கை விழுந்திருந்தது, கண்கள் சிவந்திருந்தன.

அருகில் வந்திருந்தவர், தாழ்வான குரலில், “தலைவர் வந்திட்டார்” என்றார். இரணைமடுக்குப் பக்கத்தில ஐயாயிரம் பேரோட ரெடியா நிக்கிறார். கேட்டனியளே செய்தி என்று மிக ரகசியமாகச் சொன்னார். நாங்கள் சிரித்துக்கொண்டு மறுமொழியளிக்க, நிதானித்து விட்டுச் சொன்னார், கருணா அம்மான் சொன்னதைக் கேட்டியளே, ஒன்பது கரும்புலி வருகுதாம், அதுக்குப் பிறகுதானாம் யாழ்ப்பாணத்தில ஆமிக்குக் கும்பாபிஷேகம்.

நன்றி, வணக்கம்.

(2018)

(www.maatram.org)

PC: செல்வராஜா ராஜசேகர்

TAGS
Share This