சூடுதல்

சூடுதல்

முன்னொருநாள் ஒரு தெருக்கூத்திற்காக மாணவர்களைப் பயிற்றுவித்துக் கொண்டிருந்தேன். எனது மாணவியொருத்தி சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு வீழ்ந்து கிடந்த உடைந்த கற்தூணில் அமர்ந்திருந்தாள். என்ன பிரச்சனை என்று கேட்டேன். இல்லை சேர், எனக்கு என்ர பேர் நல்லமில்லை எண்டு கவலையா இருக்கு. எல்லாருக்கும் எவ்வளவு ஸ்டைலா பேர் வைச்சிருக்கினம். எனக்கு இப்பிடியொரு பெயர் வாய்த்துவிட்டது என வருந்தினாள்.

அவளுடைய பெயர் எத்தனை மிகவும் அரிதான ஒன்று, எவ்வளவு நீண்ட தொடர்ச்சியில் மலர்ந்த ஒன்று என விளக்கினேன். அது எத்தனை கவிதைகளில் தோன்றிய சொல்லிணைவு என்பதை அவள் அறிந்திருக்கவேயில்லை.

நமது சூழலில் ஒரேவகையான பெயர்கள் ஏன் திரும்பத் திரும்ப வைக்கப்படுகின்றன. அது தனித்துவமான அடையாளத்தை எப்படி இழக்க வைக்கிறது. ஒன்றுக்குப் பெயரிடுதல் என்பது எவ்வளவு முக்கியமானது. அந்தச் சொல்லுக்கான அர்த்தத்தை நாம் தான் உருவாக்கியளிக்க வேண்டும் எனச் சொன்னேன். அவளுடைய அப்பா ஒரு பாடசாலை அதிபர். அவரது ஏதோவொரு இலக்கிய அறிதலிலிருந்து உருவான பெயர் அவளுக்கு.

பெயர் என்பதை நமது குழந்தைகள் எப்படி எடுத்துக் கொள்கின்றன? நமது பெற்றோர்கள் பெயரிடுதலை பலகாலமாக சடங்காகவே ஆக்கிக்கொண்டு விட்டார்கள். நான் பாடசாலையில் படித்த போது என்னோடு சேர்த்து எனது வயதிலேயே நான்கு கிரிசாந்கள் இருந்தார்கள். மேல் வகுப்பு கீழ் வகுப்பெனப் பார்த்தால் எப்படியும் முப்பது கிரிசாந்கள் இருப்பார்கள். அழைக்கும் பொழுது ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க ஆசிரியர்கள் அப்பாவின் முதலெழுத்தையோ ஊர் பெயரையோ இணைத்து விடுவார்கள். எனது ஆறாம் வகுப்பில் இன்னொரு கிரிசாந்தும் இருந்தான். எங்களது அப்பாக்களின் ஊராக காரைநகர் இருந்தது. வகுப்பாசிரியராக வந்த கணித ஆசிரியரும் அதே ஊரைச் சேர்ந்தவர் என்பதால் எங்களைக் காரைச்சோடிகள் என்று அழைத்தார். பின்னர் கிரிசாந்த்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொன்றாக அப்பாக்களின் முன்னொட்டுகளோடு அழைக்கப்பட்டோம். நண்பர்களுக்கு இந்தச் சிக்கலே இல்லை. அவர்கள் ஒவ்வொருக்கும் ஒரு பட்டப்பெயருடன் பெயர்ச்சிக்கலை ஒரேயடியாகக் கடந்தார்கள். பதினொராம் வகுப்புப் படித்த பொழுது வகுப்பாசிரியர் என்னையும் இன்னொரு கிரிசாந்தையும் முன்னொட்டை மட்டும் கூப்பிட்டே அந்தப் பெயர்களை உணரும் அளவிற்கு அச் சிக்கலுக்கு இன்னொரு மாற்றுவழியைக் கண்டுபிடித்தார். அடேய் செனா என்று மற்றவனையும் அடேய் சினா என்று என்னையும் கூப்பிடுவார்.

பெயர்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானது. ஒன்றினதோ ஒரு குழந்தையினதோ பெயரிடலில் உள்ள அழகுணர்ச்சி அவர்களின் வாழ்க்கைய மேலும் உயிர்த்துடிப்பு மிக்கதாக மாற்றும். நம் காலத்திலும் ஒருசாரர் தமிழ்ப் பெயர்களாகவும் சங்க காலச் சொற்களிலிருந்தும் பெயர்களை எடுத்து வைக்கும் வழக்கம் தொடர்கிறது. ஆனால் பெருமளவு பெற்றோர்கள் ஸ்டைலிஷ் ஆன பெயர்களாக சமஸ்கிருதம் கலந்த ஹரீஷ், அக்‌ஷயா, ஆகாஷ், டிவேஷ், அகர்ஷா, நரேஷ், அத்விகா, தஷ்வந், ஜஷ்வந், ஷேஷா, டேஷ்னா என்று பலதும் பத்துமான வட இந்திய நாடகக் கதாநாயகர்களின் பெயர்களை வைத்துத் தள்ளுகிறார்கள். அதில் ஒரு கவர்ச்சியை உணர்கிறார்கள். எனக்கு அதில் எந்த அதிருப்தியுமில்லை. ஆனால் ஒரு அரிதான தமிழ்ச்சொல்லைப் பெயராகச் சூடிக்கொண்ட குழந்தையைப் பார்க்கும் பொழுது அக்குழந்தை அப்பெயரால் பொலிவு பெற்றுத் தனித்து நிற்பதை, அழைக்கப்படுகையில் ஒரு அழகுணர்ச்சி உதடுகளில் மின்னி மறைவதைப் பார்க்கிறேன்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் குழந்தைகளுக்கும் வாணிபத் தலங்களுக்கும் வைக்கப்பட்ட தமிழ்ப்பெயர்கள் பலவும் அழகு மிக்கவை. சுடர் நிலவன், சுடரன்பன், சுடரவன், வெண்ணிலவன், சமராளன், பெருஞ்சித்திரன், பசுங்கீரன், பொற்கீரன், தாகன், சீராளன், நளினன், எழிலகன், விசைவீரன், முகிலன், மலரவன், இளம்பரிதி, அகரப்பாரி, வதனன், செழுநாடன், பெருவழுதி, கொற்றப்பருதி, சமணன், துமிலன், நன்கிள்ளி, கானகன், அகன், ஒளிவழுதி, அருட்கவி, செஞ்சுடர், அகச்சுடர், உயிரவள், நிலவுமலர், சாள்விழி, வஞ்சிக்குயில், அலைநிலா, இன்னரசி, ஆதிரை, அகரத்தி, பாடினி, வானிசை, மலர்மகள், திகழினி, குறிஞ்சி, நெய்தல், பொழில், கானகி, அங்கயற்கண்ணி, சுரபி, குயிலி, ஈகையொளி, கொற்றவை, எழிலினி… என எத்தனை இனிமையான பெயர்கள்.

உறையூர் முதுகொற்றனார் எழுதிய கவிதையொன்றில்,

அவரோ வாரார், முல்லையும் பூத்தன,
பறியுடைக் கையர் மறி இனத்து ஒழியப் பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடை இடைமகன் சென்னிச்
சூடிய வெல்லாம், சிறுபசு முகையே.

தனது தலைவன் இன்னமும் வரவில்லை. முல்லை மலர்கள் மலர்ந்து விட்டன. பனை ஓலையையைக் கையில் கொண்ட இடையன் தன் ஆட்டு குட்டிகளைப் பிற ஆடுகளோடு தங்க வைத்து விட்டு, பாலைக் கொண்டு வந்து கொடுத்துச் சோற்றைப் பெற்றுச்
செல்கின்றான். அந்த இடையன் தன்
தலையில் சிறிய பசுமையான முல்லை அரும்புகளைச் சூடி இருக்கின்றான் என்பது இக்கவிதையின் பொருள்.

இக்கவிதையின் இறுதி இரண்டு வரிகளில் உள்ள சொற்சித்திரம் அழகியது. ஆடுடை இடைமகன் என்ற இணைப்பும் சென்னிச் சூடியவெல்லாம் என்ற இழைவில் உள்ள குளிர்மையும் குழைந்து சிறுபசு முகையே என்பதில் ஒரு மலர்ச்சியைச் சூடிக் கொள்கிறது. சிறுபசு முகையே என்ற சொல்லிணைவின் மென்மையை உளத்தால் தொட முடிகிறதல்லவா!

வாடியிருந்த என் மாணவிக்கு, ஆடுடை இடைமகன் சூடிய சிறுபசுமுகை என்ற வரிகளிலிருந்து அம்முகை கொய்யப்பட்டு, அவள் அப்பா சூடிய பெயர் அருமுகை! அவள் தமக்கையின் பெயர் அருங்குழலி!

TAGS
Share This