நறுந்தூபத்தின் புகைக்கயிறு

நறுந்தூபத்தின் புகைக்கயிறு

பாலையின் கோடி கோடி மணற்துகள்களும் ஒரு நாளின் பிரிவின் அணுக்கள் எனச் சூழ்ந்திருக்கிறது. இறுக்க மூடிய விழிகள் வெளிச்சத்தில் திறந்து கொள்ளும் போது புள்ளிப் புள்ளியாய் தோன்றும் பொட்டுகள் மெய்யை ஒருகணம் கலங்கித் தெளிய வைக்கிறது. பாலையின் ஒளி வெப்பம். உடல் வியர்த்து உப்பு மலர்ந்திருக்கும். நான் உன்னிடம் வருகிறேன் மடந்தையே. இவ் வெப்பத்தின் ஒளியில் இளம் நெல்லிக்கனிகள் உதிர்ந்து பரவிக் கிடக்கின்றன. எடுத்து உண்டால் நாக்குளிர்ந்து நீரூறும் கனிகள். இவ் வழியில் தான் துடிப்பான புலிக்குட்டிகளும் அலைந்து விளையாடும்.

பூமியின் நேருலகு என் நினைவைக் குழப்பவில்லை. கடுங்காற்றெழுந்தால் மணற்பேராழியென உருக்கொள்ளும் பாலையின் தீராத மணலுடல் என்னை வருத்தாது. மேனியின் ஒவ்வொரு இடைவெளியையும் மணல் உலைந்து வந்து நிறைத்தாலும் மூச்சை ஒருபிடி வைத்திருப்பேன்.

அம்மூச்சில் இழையும் வெட்சி மலர்களின் சாறூறிய உன் கூந்தலின் நறுமணம் என்னை தனிமையின் பாலையிலிருந்து தூக்கி வரும் அருள் வாசம். அதை நறுந்தூபத்தின் புகைக்கயிறெனப் பற்றியபடி நாள் தொலையத் தொலைய நடந்து வருவேன். எழில் அகவும் உன் வதனத்தை அவிழ்க்கும் வளைந்த கிளைகளையுடைய வெட்சியில் பொன் வண்டுகள் ஊர்வதைப் போல் உன் விழிகளில் மின்னுவேன் ஒரு கணம். அங்கிருந்து மூடாத பெரும் பாலையின் வேட்கையைத் திறப்பேன். ஒவ்வொரு தொடுகைக்கும் ஒரு மணலென உன்னில் பாலையை வளர்ப்பேன், என்னில் நீ வெளிச்சத்தை வளர்ப்பதைப் போல. தூங்கும் கூந்தலில் ஒரு வெட்சிக்கொத்தினைச் சூடுவேன். பின் துயில்வேன் உன் மார்பின் பாலையில்.

*

அறம் தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்
மறப்புலிக் குருளை கோள் இடம் கறங்கும்
இறப்பு அருங்குன்றம் இறந்த யாமே,
குறுநடை, பல உள்ளலமே, நெறி முதல்
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித்
தளை அவிழ் பல் போது கமழும்
மை இரும் கூந்தல் மடந்தை நட்பே.

பாலை பாடிய பெருங்கடுங்கோ

(வெட்சி மலர்கள்)
TAGS
Share This