05: மந்திர விளி
ஆழியின் மேற்பரப்பு செந்தீயென ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்தியின் மேகங்கள் பழுப்புப் பச்சையும் பொன் மஞ்சளும் குழைந்த ராட்சத மேக ரதமென உருவமைந்திருந்தது. ஆழிப் புறாக்கள் மரக்கலத்தின் பின்னே குறுவால் எனத் தொடர்ந்து பறந்து வந்தன. அகன்ற பாய்களுடன் சொப்பிரஸ்ஸா கரையை நெருங்கிக் கொண்டிருந்தது. மரக்கலத்தில் நூற்றி ஐம்பது பேரளவில் ஓடிக் கொண்டும் பரபரத்துக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் திரிந்தனர். பெரிய வளைந்த சொண்டுகளையுடைய பலவர்ணக் கிளிகள், நீண்டு பருத்த ஒரு கொடும் புலி, சர்ப்பங்கள் அடங்கிய வலைக்கூண்டு, மூன்று அழகிய புரவிகள். இரண்டு வெண்புரவிகளும் ஒரு கருவர்ணமும். கருவர்ணப் புரவியின் பெயர் நீயிரா. அதன் விழிகள் நித்திய மிரட்சியில் உறைந்திருப்பவை. ஆழிப்பயணத்தில் அவை இன்னும் மிரண்டுவிட்டன. இன்னும் இன்னும் உயிரினங்களையும் உபகரணங்களையும் இறுதியாகப் பட்டியலிடப்பட்டுக் கொண்டிருந்தாள் செலினி.
சொப்பிரஸ்ஸா மரக்கலம் தனது முதலாவது ஆழிப்பயணத்தின் கரையை அண்மிக்கப் போகிறது. இக் குழுவின் தலைவன் தொந்தி வைத்த மண்ணிறத் தாடி கொண்ட வழுக்கைத் தலையனும் தந்திரத்திற்காக மட்டுமே புன்னகைப்பவனும் போதைக்காகச் சிறு சர்ப்பங்களைத் தன் நாவில் கடிக்க விடுபவனுமாகிய கந்தோஸ் பிலிப்பு. சர்க்கரீஸ் என்னும் மாயமந்திர வித்தைக் குழுவின் நிர்வாகியாக ஊர்சுற்றும் கந்தோஸ் பிலிப்புவின் அதிர்ஷ்ட தேவதை லீலியா. கந்தோஸ் பிலிப்புவை விடவும் அங்கு குழுவிலிருந்த எந்த ஆண்மகனையும் பெண்மகளையும் விடவும் ஒன்றரை மடங்கு அதிக உயரமானவள். கந்தோஸ் பிலிப்பு அவளை ஒரு ரகசியமெனவே பேணி வந்தான். லீலியா எவ்வளவு பிரமாண்டமானவளோ அவ்வளவு அறியமுடியாதவளும் கூட. கந்தோஸ் பிலிப்புவையும் செலினியாவையும் தவிர அந்தக் கப்பலில் இருப்பவர் எவரும் கடந்த இருபது ஆண்டுகளாக லீலியாவின் முகத்தை மட்டுமல்ல கைவிரல்களைக் கூடப் பார்த்ததில்லை. லீலியா நீண்ட வெண்ணாடையால் தலை முதல் கால் வரை அலங்கரிக்கப்பட்டிருப்பாள். எந்நேரமும் கையுறையும் காலுறையும் போட்டிருப்பாள். விழிகளுக்கு மட்டும் வலை போன்ற முன் துணியிருக்கும். அவள் ஒரு சொல் பேசி அங்கிருக்கும் யாரும் கேட்டதில்லை. அமைதியான ரகசிய மலை ஒன்று அசைந்து வருவதைப் போல் எப்பொழுதாவது மரக்கலத்தின் மேற்கூடத்துக்கு வருவாள். ஆவிகளுடன் பேசக் கூடியவள் என்பதால் கப்பல் வேலையாட்கள் அருகில் அவள் வருவது தெரிந்தாலே ஒதுங்கி ஒளிந்து கொள்வர்.
செலினி லீலியாவின் ஒரே தோழி. லீலியாவின் முழங்கால்களை விடச் சற்று உயரமான குள்ள வகையினள். சாதரண குடிகளால் இழிவுபடுத்தப்பட்டு யவனத்தின் தெருக்களில் மிதிபட்டு வந்தவளை கந்தோஸ் பிலிப்பு மூன்று செப்பு நாணயங்களுக்கு வாங்கிக் கொண்டான். கந்தோஸ் அவனது சுயநினைவுடன் செய்த ஒரே நற்காரியம் தன்னை வாங்கியது தான் என செலினி அடிக்கடி சொல்லிக் கொள்வாள். லீலியா சிறுமியாக இருந்த பொழுது ஒருமுறை கருநாகமொன்று அவளது உடலைச் சுற்றி வளைத்து எழுந்து நின்று கந்தோஸைப் பார்த்துச் சீறிய பொழுது ஒருகணம் கூட யோசிக்காமல் அவனது வாளைப் பிடுங்கி கருநாகத்தின் தலையை ஒரேவீச்சில் வெட்டி வீழ்த்தியவள் செலினி. தனது மகளெனவும் தோழியெனவும் ஒவ்வொரு பருவத்திலும் லீலியாவை அணைத்து வளர்த்த பருந்து நீ செலினி என கந்தோஸ் பிலிப்பு போதையில் ஒருநாள் உளறிக் கொண்டிருந்ததைக் கேட்டு செலினி ஒருதுளி கண்ணீரைச் சிந்தினாள்.
சர்க்கரீஸ் குழுவின் பணி ஊர் ஊராகச் சுற்றி மாய மந்திர வித்தைகளையும் விலங்குகளை வைத்து சாகசங்களையும் காட்டுவது. பேசும் கிளிகள், தோள்களில் வைத்து விளையாடும் மலைப்பாம்புகள், சர்ப்பக் கூண்டுக்குள் நடனமிடும் மனிதன், முன்னோர்களின் ஆவிகளுடன் தொடர்பு கொள்ளுதல், வேடிக்கை நிகழ்வுகள், மாய வித்தைகள் என பல அம்சங்கள் சர்க்கரீசில் இருந்தது. லீலியா மாய வித்தைக் காரி, ஆவிகளுடன் பேசுபவள், காற்றிலிருந்து தீயை உருவாக்குபவள், அருகில் நடந்து வந்தால் அவளிடமிருந்து வரும் நறுமணமே இவ்வுலகைச் சேர்ந்த பெண்ணல்ல என மனமயக்கை உண்டாக்குபவள். வலை மூடியிருக்கும் லீலியாவின் விழிகள் கடுநீல நிறங்கொண்டவை. விசமுள்ள நாகத்தின் கண்கள் உனக்கு என செலினி சொல்லிக்கொள்வாள். அது கடுஞ்சொல்லா பாராட்டா என இன்று வரை லீலியாவால் கண்டுபிடிக்க முடியவில்லை.
கப்பலின் மேற்தளத்தில் நின்றபடி கரையைப் பார்த்துக் கொண்டிருந்த லீலியா ஆகாயத்தில் தோன்றிய அந்த மேக ரதத்தைப் பார்த்து விழி கூடி நின்றாள். “ஒரேயடியாக அதில் ஏறி ஓடிவிடலாம் என்று நினைக்கிறாயா லீலி” என்று கேட்டுக் கொண்டு மூச்சு வாங்க மேலேறி வந்தாள் செலினி. செலினியை இருகைகளாலும் குழந்தையைப் போலத் தூக்கி அருகிருந்த விளிம்பில் அமர்த்தி விட்டு “இல்லை. நான் தான் அந்த ரதம்” என்றாள் லீலியா. “உனது புரியாத பேச்சுகளை என்னிடம் பேசக் கூடாது எனச் சொல்லியிருக்கிறேனில்லையா லீலி. வர வர உன்னுடன் பேசுகிறேனா அல்லது ஏதேனும் ஆவியுடன் பேசுகிறேனா என்றே பிடிபடவில்லை” என சலித்துக் கொண்டாள் செலினி.
செலினியின் தலையில் கைவைத்து மெல்ல அதைக் குழப்பி விட்டு அவளின் இடுப்பில் கிள்ளி விட்டு ஓரக்கண்ணால் பார்த்துச் சிரித்தாள் லீலியா. சிறு வலியால் துள்ளிய செலினி அசைந்து அமர்ந்து கொண்டு “இதோ பார் சாத்தானே, நான் யவனத்தின் செலினி. லீலியாவின் தோழி. என்னிடம் உனது சேட்டையைக் காட்டாதே” எனச் சுட்டுவிரலை ஆட்டியபடி சிரித்துக் கொண்டே மிரட்டினாள். கந்தோஸ் பிலிப்பு தனது புகையிழுப்பானை உறிஞ்சியபடி நீண்ட பனைமரங்கள் உள்ள தீவின் துறைமுகத்தை நோக்கிச் சுக்கனைத் திருப்பினான்.
*
வேறுகாடாரும் இளம் பாணனும் துறைமுகத்தின் கரையில் உள்ள மதுச்சாலையில் குத்துச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். “ஏய், புலவா, சொல்வதைக் கேள், நீ ஆழியில் இதுவரை பயணஞ் செய்ததில்லை என என்னிடம் சொல்லவில்லை. கர்ப்பந் தரித்த பெண்களைப் போல் அடிக்கொருமுறை நீ வயிற்றைப் பிரட்டுவாய் என எனக்கெப்படித் தெரியும்” என்றார் வேறுகாடார். “கிழவா, நீ என்னைக் கொல்லத் தான் அந்த மரக்கலத்தில் தூக்கிப் போட்டாய். நான் தான் வேண்டாம் வேண்டாம் என அலறினேன் இல்லையா. நீ கேட்டாயா” என்று கைகளை குத்துவதைப் போல் வைத்துக் கொண்டு மூச்சு வாங்கக் கேட்டான் இளம் பாணன்.
“ஓமோம் பாணனே, சிறு பிள்ளை அடம்பிடிப்பதைப் போல் நீ அழுது குழறியது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. நீ உன் சொந்தநிலத்தைப் பிரியும் ஏக்கத்தினாலும் குடித்த மதுவின் குழப்பத்தினாலும் அப்படி நடந்து கொண்டாய் என நினைத்தேன்” என்று தன் இருகரங்களையும் பின்னுக்குக் கட்டியபடி சொன்னார் வேறுகாடார்.
“சும்மா நடிக்காதே கிழவா, என்னைத் தூக்கிக் கொண்டு நீ மரக்கலத்துக்கு வந்த போது மீசையை ஒரு கையால் முறுக்கியபடி கலத்திலிருந்த யாருக்கோ இந்தா இந்தக் குஞ்சு மீனுக்கு என்ன விலை எனக் கேட்டாயே, அதற்கு என்ன அர்த்தம் சொல்” எனச் சொல்லியபடி மதுவின் ஏற்றத்தில் மதுச்சாலையை விட்டு வெளியே வந்து வேறுகாடாரைத் துரத்தியபடி கடற்கரையை நோக்கி ஓடினான். “நீ பாணன் என்று சொல்லியதால் தான் உன்னை நான் கூட்டி வந்தேன். சத்தியமாக நீ சித்தங் கலங்கியவன் எனத் தெரியாது மூடனே” எனச் சிரித்துக் கத்தியபடி மெல்லோட்டத்துடன் வேறுகாடார் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். இருவரும் மூச்சு வாங்கியபடி கரையில் அமர்ந்தனர்.
சூரியனின் கடைசி விளிம்பும் ஆழியில் கரைந்தது. வானில் மரக்கல வடிவில் அபூர்வப் பச்சை வர்ணத்தில் ஒரு மா மரக்கலனென மேகமொன்று மிதந்து கொண்டிருந்தது. வெள்ளிகள் முளைத்து ஆகாயத்தின் கண்கள் பெருகிக்கொண்டு வந்தன. கரையில் விழுந்து விழுந்து பின்வாங்கும் அலைகளைப் பார்த்த போது இளம் பாணனுக்கு மீண்டும் வயிற்றைப் பிரட்டியது. “உன்னைச் சும்மா விட மாட்டேன் கிழவா. என்னை நீ இந்தத் தீவுக்குக் கடத்தி வந்துவிட்டாய்.. உன்னை..” என்றபடி ஈரமணலில் சரிந்து கண்மூடினான்.
வேறுகாடார் எழுந்து நின்று சுற்றிலும் உள்ள குடிகளையும் நிலத்தையும் நோக்கினார். தீப்பந்தங்களைப் பற்ற வைக்கும் துறைமுகப் பணியாளர்கள் ஒவ்வொரு பந்தமாய்ப் பற்ற வைத்தபடி துறைமுகத்தை ஒளியூட்டினர். கலங்களில் வந்த மரப்பெட்டிகளைச் சோதனையிட்டுப் பொருட்களுக்குச் சுங்கம் வாங்கினர் அரச பணியாளர்கள். ஓலையில் அனைத்தையும் வேகமாக எழுதும் பணியில் ஐம்பது பேர் மும்மரமாயிருந்தனர். எள்ளல்களும் கோபப் பேச்சுகளும் சண்டை சச்சரவுகளும் இரவை உயிர் பெறச் செய்தன. மீன்களையும் நண்டுகளையும் இறால்களையும் கூடையில் அள்ளியபடி அல்அங்காடிக்குப் பரதவப் பெண்கள் நடந்து சென்றுகொண்டிருந்தனர். ஊர் மீன் உண்டு நிறைய நாளாயிற்று சென்று பார்க்கலாம் என இளம் பாணனை எழுப்பினார் வேறுகாடார். அவன் அசையவில்லை. இருகைகளிலும் உப்புநீரை அள்ளி அவன் முகத்தில் ஓங்கி அடித்தார். “அய்யோ தாயே. என்னைக் கொல்கிறார்கள்” எனக் கத்திக் கொண்டு எழுந்தான் இளம் பாணன்.
“மூடக் கிழவனே, எதற்கு என்னை எழுப்பினாய்”
“அய்யா இளம் பாணன் அவர்களே, தாங்கள் துயில் நீங்கிவிட்டால் எனது சிறுநகரின் அழகை உங்களுக்குக் காட்டுவேன். நீங்கள் தயாரா” எனப் பவ்வியமான பாவத்துடன் இருகைகளையும் மார்புக்குக் குறுக்காகக் கட்டியபடி நடித்தார் வேறுகாடார்.
இளம் பாணனுக்கும் பசி வயிற்றில் கரிக்கத் தொடங்கியது. கரங்களை நீட்டினான். அவற்றைப் பற்றியபடி அவனைத் தூக்கி நிறுத்தினார் வேறுகாடார். “வா, புலவா, அல் அங்காடிக்குப் போகலாம். அங்கே ஏதாவது உண்ணக் கிடைக்கும்”.
இருவரும் தள்ளாட்டம் குறைந்து பெருவீதிக்குள் நுழைந்தனர். மீனும் நண்டும் சுடும் வாசனை கடற்கரை அலைகளை விட அதிகமாய் அடித்தது. இளம் பாணன் வாயில் உமிழ் நீர் சுரந்து வயிற்றை நிறைத்து விடும் போலிருந்தது. வேறுகாடார் ஒவ்வொரு பெண்ணிடமும் சென்று பேசிச் சிரித்தாரே தவிர ஒன்றையும் வாங்குவதாய் தெரியவில்லை. இளம் பாணனோ தந்தையை நச்சரிக்கும் சிறுவனைப் போல அவரின் இடைத்துண்டை இழுத்தபடி அவரின் வால் போல நடந்து வந்தான். புதிய ஊர். புதிய குடிகள். அவர்களிடன் நடைமுறைகளும் தெரியாது. தன்னிடம் நாணயங்களும் இல்லை. தனது நிலையை நினைத்து வருந்த இன்னும் எத்தனை தான் இருக்கிறது. பசி வரும் போது அன்னையின் குளிர்ந்த முதுகரங்கள் அவன் வயிற்றைத் தடவுவது போல் தோன்றும்.
வேறுகாடார் இருபதாவது பெண்ணிடம் “என்னடி அயிலை. எப்படிச் சுகம்? உனது மீன்களலெல்லாம் மெலிந்து கிடக்கின்றன. அவற்றுக்கு ஒழுங்காக நீ தீனி போடுவதில்லையா ” என்றார்.
“வாரும் வாலிபரே, உங்கள் தீனிக்காகத் தான் எனது மீன்கள் மெலிந்து கிடக்கின்றன” என்று சொன்னபடி குட்டிச் சுறாவொன்றைத் தலைகீழாய்ப் பிடித்தபடி கேட்டாள் அயிலை. “முழுசாக வாய்க்குள் நுழையுமா” எனக் கேட்டார் வேறுகாடார். கரைக்குப் போய்ச் சுட்டுத் தந்தால் முழுசாய் போகும் என்றாள் அயிலை.
இளம் பாணன் பொறுக்க முடியாமல் “கிழவரே, பசி வயிற்றைப் பிழிகிறது. எதையாவது தின்னலாம். வாருமய்யா” எனக் கெஞ்சினான். “என்னுடன் ஒரு குஞ்சு மீனும் இருக்கிறது. அதற்கும் பசிக்கிறதாம்” என்று அயிலைக்கு இளம் பாணனை அறிமுகப்படுத்தினார் வேறுகாடார். அயிலை தனது கூடையை எடுத்துக் கொண்டு தனது வாடிக்குப் பக்கத்தில் மூட்டியிருந்த நெருப்பை நோக்கி நடந்தாள். வேறுகாடார் அவளின் பின்னால் நடந்து கொண்டு “அயிலை மீன் தான் மெலிந்திருக்கிறது. மற்றதெல்லாம் நல்ல சத்தாய் தானிருக்கிறது” என்றார். “வாலிபரே, நீர் எனக்குப் பக்கத்திலேயே நடந்து வாரும். உம்மைப் பின்னால் விட்டு நடந்தால் நான் வாடி சேர முடியாது” என்று எள்ளியாடினாள். அவள் நடக்கும் பொழுது மணல் அலைந்து எழுந்து பறந்தது. வேறுகாடாரின் நெஞ்சளவு உயரமவள். அவரின் பின் தோளில் அடித்தடித்து கதைத்துக் கொண்டு வாடி சேர்ந்தாள். நெருப்பின் மேலிருந்த சுடுகற்களில் மூன்று பெரிய மீன்களைப் போட்டாள். உப்பும் பச்சை மிளகாயும் போட்டு எலுமிச்சையைப் பிழிந்து மீன்களில் ஊற்றினாள். மீனின் மணம் மூக்கில் நுழைய மந்திரப்பட்டவன் போல் மீனையே பார்த்துக் கொண்டிருந்தான் இளம் பாணன்.
துறைமுகக் கரைக்குப் பருந்து வடிவத்தில் தீப்பந்தங்கள் கனன்றெரிய பாய்ச் சிறகுகள் விரிய சொப்பிரஸ்ஸா நகர்ந்து வருவது தெரிந்தது. துறைமுகக் கரையில் குடிகள் விறுவிறுவெனக் கூடினர். இளம் பாணன் முதன்முறையாக இவ்வளவு பெரிய மரக்கலனைப் பார்க்கிறான். ஆவென்று திறந்திருந்த அவன் வாய்க்குள் சுட்ட மீனின் தனிச்சதையை ஊட்டினார் வேறுகாடார். சூட்டில் துடித்த இளம் பாணன் ஊதி ஊதி அதைத் தின்றான். ஒரு வாழையிலைத் துண்டில் மீனைப் போட்டுக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் துறைமுகத்திற்கு ஓடினான் இளம்பாணன். சற்று இருளுள் நுழைந்ததும் திரும்பி அயிலையின் வாடியைப் பார்த்தான். அங்கு யாருமில்லை. புன்முறுவலுடன் துறைமுகத்தை நோக்கி நடந்தான்.
சிறிய மரக்கலன்களில் பொருட்களை ஏற்றி அனுப்பியபடியிருந்தான் கந்தோஸ் பிலிப்பு. உதவியாளர்களுக்கு ஒரு பெட்டிக்கு ஒரு செப்பு நாணயம் எனத் தகவல் பரவியது. வாயடைத்த குடிகள் முண்டியடித்துக் கொண்டு வேலை பார்த்தனர். இளம் பாணனும் பெட்டிகளை அடுக்கும் சிறுமரக்கலனில் சென்று மா கலன் சொப்பிரஸ்ஸாவிற்கு அருகில் சென்றான். விழிகள் விரிய அதன் பிரமாண்டத்தை அளந்தான். நுட்பமான வேலைப்பாடுகளுடன் ஒரு அற்புதக் கலன் என எண்ணிக் கொண்டான். அந்தி வானத்தில் அவன் கண்ட அதே கலன்.
பெட்டிகளை இளம் பாணனின் கலத்தில் ஏற்றிய பின் இந்தப் பெட்டியுடன் யார் செல்கிறார்கள் என கந்தோஸ் கப்பல் குழுவினரைக் கேட்டான். நின்றவர்கள் வேறுபக்கம் திரும்பிப் பார்க்க செலினி நான் செல்கிறேன் எனக் கூறியபடி பெட்டியில் குதித்தாள். இளம்பாணனும் இன்னும் இரு கலனோடிகளும் செலினியும் சிறுமரக்கலனில் கரை நோக்கிச் சென்றனர். இளம் பாணன் செலினியின் உருவத்தைத் பார்த்ததும் ஆச்சரியம் கொண்டான். அவன் வாழ்நாளில் நிறைய முதல்களை இந்தத் தீவுதான் அளிக்கப் போகிறது என உள்ளூர வியந்தான். செலினி கரையை நோக்கியிருந்தாள். இளம் பாணன் செலினிக்கு எதிர்ப்புறமாகப் பெட்டியில் அமர்ந்து கொண்டு சொப்பிரஸ்ஸாவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
நூற்றுக்கணக்கான வேலையாட்களுடன் பொன்னாலான ஒரு அரண்மனை கடலில் மிதப்பதைப் போல் சொப்பிரஸ்ஸா கம்பீரமாக ஆழியின் மேல் நின்றுகொண்டிருந்தது. சொப்பிரஸ்ஸாவிற்குப் பின்னால் விண்மீன்கள் சுடர்ந்து வானம் ஒரு நெடுந்திரையென மின்னியது. வைரக்கட்டிகளுக்கு முன் பொன் சிலையை வைத்தது போல் நின்ற சொப்பிரஸ்ஸாவின் மேற்தளத்தில் பருந்து வடிவ முன்முகப்பில் நீண்ட வெண்ணாடை போர்த்திய உருவமொன்று செலினி சென்ற சிறுமரக்கலனை நோக்கியபடி நின்றது. அவ்வுருவின் தலைக்குப் பின்புறம் வெண்மதி அசைவற்றுப் பொருந்தியது. இளம் பாணன் அந்த உருவம் தன்னை நோக்குகிறது என நினைத்துப் பயந்து செலினியை அவசரமாகத் தட்டி அழைத்து சொப்பிரஸ்ஸாவின் மேற்தளத்தைக் காட்டினான். செலினி எழுந்து நின்று அவ்வுருவத்திற்குக் கைகாட்டினாள். அவ்வுருவம் திரும்பக் கைகாட்டியது, இளம் பாணன் இதைப் பார்த்துப் பயம் கூடிச் செலினியை நோக்கினான். செலினி அவன் விழிகளில் தெரிந்த அச்சத்தைப் புரிந்து கொண்டு குறும்பொன்று உதட்டில் துள்ள அவனருகில் சென்று சிறிய நடுங்கும் குரலில் ஒவ்வொரு எழுத்திற்கும் மெல்லிய இடைவெளி விட்டுக் காதிற்குள் சொன்னாள் “லீ லி யா”. இளம் பாணனுக்குள் அந்த ஆவியின் பெயர் ஒரு மந்திரமெனக் குடிகொண்டது.