14: இருதி எழல்

14: இருதி எழல்

ஆழி நிறைவது உப்பின் கண்ணீர் என நினைத்துக் கொண்டாள் இருதியாள். பனைகளின் பாளைகளில் கீறிய பசும் வெட்டிலிருந்து கள் கலயங்கள் நிறைவது மண்ணின் கண்ணீர் என விழிகளை உயர்த்தினாள். அலைகடலின் வெண்மணலில் வெய்யில் குழந்தை வடிவில் துயில்ந்து புரள்கிறது எனக் கால்விரல்களை அழுத்திக் கொண்டாள்.

விடியலின் முதற் கலனாகத் திரும்பியது துமிலரின் நீல வர்ண நெடுங்கலன் உப்பினி. கலம் நிறைய மீன்களும் சிங்க இறால்களும் குவிக்கப்பட்டிருந்தது. வலையினை எடுத்தபடி துமிலர் மனைக்குச் சென்று விட்டார். அயார்த்தியுடன் சிரித்தபடி போனவரை வாடியில் அமர்ந்து கால்களை மணலில் கோதிக்கொண்டு இருதியாள் நோக்கினாள். கரையில் கொணர்ந்த மீன்களையும் சிங்க இறால்களையும் கூடைகளில் நிரப்பி சிலநழிகைகள் படையலுக்கு விளைச்சலை ஏற்றிச் செல்லும் வண்டில்களுக்காகக் காத்திருக்க வேண்டும். சரிந்து கைகளைத் தூண்களென ஊன்றிச் சாய்ந்திருந்தாள். வெய்யில் அவளை மென் துணியென உலர்த்திக் கொண்டிருந்தது. காற்றில் அவள் நரைக்குழல் தூங்கி ஆடியது.

அழலன் அவளிடம் நெருங்கி “அத்தை, மீன்களைக் கூடைகளில் நிரப்பவா” என மழலை குலையாத குரலில் கேட்டான். அவள் தலையை மட்டும் “ஓம்” என அசைத்தாள். கலனின் உள்ளே புள்ளொன்று தத்தி ஏறுவது போல அழலன் நுழைந்தான். இளங் கரங்களுக்கேயுரிய வளைவும் புயக் கோடுகளும் கொண்டவன். கால்கள் உந்தியெழும் பொழுது கொக்குகளின் நார்க்கால்களுக்கு நினைவு சென்று திரும்பும். வலையிலிருந்து மீன்களை கொட்ட கைகளை மேலே தூக்கி இழுத்தான். அதன் எடைகொண்ட மடியைத் தூக்கும் பொழுது வலைகளினூடே அவனது மேனி தெரிந்தது. அவனது உறுதியான வாழைத்தண்டு மேனி வெய்யில் சுளீரென்று அடிக்க இருதியாளின் விழிகளுக்குள் அகப்பட்டு வெளியே துள்ளத் துடிக்கும் மீனெனப் புகுந்து கொண்டது. கூடைகளைப் பரத்தி சிங்க இறால்களை நிரப்பினான். அவற்றைக் கைகளால் தூக்கி எடையை நோக்கினான். ஒவ்வொன்றும் அவன் ஒருகரமளவு எடை கொண்டவை. பாதி உடைந்த இறால் ஒன்றைக் கையிலெடுத்து அதன் வெளிர்சதையில் அழுத்தித் தடவிப்பார்த்தான். இருதியாளின் அடிவயிற்றில் கருநீல அலையடித்தது.

இருதியாள் ஆழியில் கரையேகும் மரக்கலன்களை நோக்கி விழி விரித்தாள். இருபத்தியொராவது பருவத்தில் நிகழ்ந்த கடற் சமரில் முதன்மைக் கலனோடியாகத் கலன் நின்றிருக்கிறாள். அப்போது நடந்து கொண்டிருந்த கடற் போரில் துமிலரின் வலக்கரத்தைச் சிங்கைப் படைகளின் கூரலகு நீண்ட அம்பொன்று நாரைக் கொத்தலெனத் துளைத்திருந்தது. அவள் துமிலருக்கு நிகராகவே கடலும் கலனுமறிந்தவள். சிங்கை நகரின் படைகள் வடகடலின் ஊடே உள்நுழைகிறது என்ற ஒற்றுச் செய்தி கலனோடிகளால் வாடியில் மருந்துவச்சியின் முன் வலியில் கிடந்த திமிலருக்குச் சொல்லப்பட்டது. இருதியாளே நேரில் சென்று நீலழகனுக்கு நிலமையை எடுத்துச் சொன்னாள். அவனது முகம் ஆழியில் கலந்த நீலவெறுமையுற்றது. திமிலர் நீலழகனின் கடற்கலன் படையின் கடலறிவு. படையைக் கடலில் வழிநடத்திக் கடலின் இன்னல்களிலிருந்து அவர்களைக் காத்துக் கரைசேர்வது அவர்தான்.

இருதியாள் நீலழகனின் முகத்தில் எழுந்த ஒருகண அச்சத்தை அறிந்தாள். அவனை அவள் சிறுவயது முதலே அறிவாள். அவனது மூத்த சகோதரி சிப்பி அவளது தோழி. அவனுடன் சிலபோதுகளில் விளையாடியுமிருக்கிறாள். அவன் இன்று குடிகளின் அரசென நின்றாலும் அவனுள் அவள் காண்பது கரைக்குத் தலையைக் கொடுத்துவிட்டுக் கால்களை ஆழிக்குள் அளைந்தபடியிருக்கும் சிறுவனைத்தான். அவன் முகத்தின் சந்தேக ரேகைகள் வளர்ந்து உதடுகளில் சொல்லென எழத் துடித்த போது “தம்பி, நான் கலன் புகுவேன். அச்சமின்றி இரு. உன் படைகளை நான் என் மீன்குஞ்சுகளெனக் காப்பேன்” என்றாள். அவன் அச்சம் கலையாமல் குழலைக் காதுகளில் சொருகிக் கொண்டு “அக்கா, ஆழியில் காற்று வலுத்திருக்கிறது. சிங்கையின் கலன்கள் கரையேறுமா என்பது சந்தேகமாயிருக்கிறது. நீங்கள் ஆழியில் புகுவது என்னை இன்னும் அச்சத்தில் தள்ளும். மாமாவினுடைய வலி எப்படியிருக்கிறது” என வினவினான். “அவர் மீள்கிறார் தம்பி. அவர் கடலின் உப்பாலானவர். அம்புநுனிகள் உப்பைத் துளைக்கலாம். ஆனாலும் உப்பு என்பது விளையும் விதை. அவரை நீங்கள் எண்ண வேண்டியதில்லை. இக்கணம் நீங்கள் தேர வேண்டியது உங்களின் ஆழிசூடனை” என விழிகளில் சலனமற்று ஒளியுடன் நின்றாள். சிலகணங்கள் தன்னுள் புகுந்து மீண்டு தலையைத் தூக்கினான் நீலழகன். அவன் விழிகளில் இதயம் அலையடங்கியிருப்பதன் தெளிவு பரவியது. சிறு புன்னகை முகத்தில் உதிக்க “இம்முறை நம் கலன்களை வழிகாட்டப்போவது ஒரு ஆழிசூடிகை அக்கா” என்றான். மேலும் முகம் மலர்ந்து அவனுள்ளிருந்த சிறுவன் நம்பிக்கையின் குரலை அடைந்தான். இருதியாளின் முகத்தில் அந்த நம்பிக்கை ஒரு அழைப்பென வருடியது. “தம்பி, நம் கலன்கள் வென்று திரும்பும். இம்முறை அவர்கள் எதிர்கொள்ளப் போவது ஆழியின் கொற்றவையை” என வெள்வரிசைப் பற்கள் தெரியச் சிரித்துக் கொண்டே சொன்னாள். பெருங்குகை போன்ற இருள் வளைவுகளைக் கொண்ட நீலழகனின் அரண்மனை வாயிலைக் கடந்து செல்லும் இருதியாளின் கரங்களையும் பருந்தேர் மேனியையும் பின்னிருந்து நோக்கினான் நீலழகன்.

காற்று கடலிலிருந்து தரைக்கு புயலின் முதற் கரங்களை வீசத் தொடங்கிய பின் மாலையில் இருபது நீல வர்ணப் படைக் கலன்களின் முன் உப்பினியின் சுக்கானில் கூந்தல் முடிந்து அள்ளியபடி இருதியாள் ஆழியை ஏகினாள். ஆழி அவளின் விளையாட்டுத் தோழி. ஆழி அன்னையென்ற நினைப்பு ஆண்களுடையது. ஆழி பெண்ணுக்குத் தோழியென மட்டுமே ஆவது. அவள் நுரைச் சிரிப்பில் அவள் புயற் சினத்தில் அவள் குறுஞ் சுழிக் கோபங்களில் அலைசுழற்றி எழிலாடை காட்டுகையில் சூரியன் திரும்பும் கருப்பை என ஆகுகையில் அவள் ஒரு தோழி. இருதியாளின் கரங்கள் சுக்கானை பம்பரத்தின் இழுகயிறெனப் பற்றியிருந்தது. கடல் கொஞ்சம் சீற்றம் கூடித்தானிருந்தது. அலைகள் திமிங்கலங்கள் புரள்வது போல் புரண்டு எழுந்தன. நுரைச் சீறல்கள் இருபது கலன்களினதும் கைப்பிடிகள் வரை எம்பிக் குதித்து ஆழம் புலத்தின. தூர வானத்தில் மேகங்கள் நீர் தேடி துதி நுகர்ந்து வரும் நாவுலர்ந்த வேழங்களெனத் திரண்டு நிலம் நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருந்தன. அந்தக் கூட்டத்தின் முதுஞானமுற்ற மேகமொன்று வேளித் தீவின் அலையும் தாழைக்காட்டின் நேர்மேலே ஊன்றியிருந்தது. மென் மழை அங்கு சிந்தத் தொடங்கியிருக்குமென இருதியாள் எண்ணினாள். சமுத்திரம் இன்று அமைதிகொள்ளாது என நெடுத்து வீசிய காற்றில் அடித்து மடிந்து இழுவைகொண்ட பாய்கள் சொல்லின. வேளித்தீவு சிலகாதங்கள் நீண்ட ஒரு கடலாமையென ஓடு தூக்கியிருந்தது.
அலைகளில் கொத்தியெழுந்து தலை தூக்கிக் கொண்டு உப்பினி வேளித் தீவில் கரை சேர்ந்தாள். அலவனும் திரிபதங்கனும் இருதியாளும் ஏனைய சிலவீரர்களும் உப்பினியை இழுத்துக் கரைகட்டினார்கள். வாகை சூடன் படைக் கலன்களை நிரைப் படுத்தினான். அவை கழுகின் சிறகு வடிவில் தீவின் முனையில் வளைந்து அணிவகுத்து நின்றன.

இருள் பனியென நனைந்து தீவை அடைந்தது. எரிவிறகுகளைச் சேகரித்தபடி விளையாடிக் கொண்டு எள்ளியாடும் படைவீரர்களை நோக்கினாள். பெரும்பாலானவர்கள் இளையவர்கள். அச்சமும் துக்கமும் பழகாதவர்கள். அவர்கள் முகங்களை தன் நிலத்தைக் காக்கும் குழந்தையின் தீவிரமும் வியப்பும் நீரில் விழும் ஒளியென மினுக்கியது. சிங்கைப் படைகளின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து தீரம் மிக்க போர்களைப் புரிந்தவர்கள் இந்தச் சிறுவர்களா. இவர்களது கரங்களால் ஒரு மடிவலையை இழுக்க முடியுமா என நினைத்துச் சிரித்துக் கொண்டாள். போர் விளையாட்டல்ல. அது குருதியின் ஆழி. இவர்களின் இளம் விழிகளும் குறுங் கைகளும் இன்னும் எவ்வளவு குருதியை அடையப் போகிறதென எண்ணிக் கொண்டாள்.

எரிசட்டிகளில் எண்ணையை வார்த்து நிரப்பினார்கள் இளம் வீரர்கள். போர் வெற்றிப் பாடல்களைப் பாடிக்கொண்டு ஒரு குழு இரவுணவைச் சமைக்கத் தொடங்கியது. பெரிய மண்கலத்தில் கடற்கூழ் காய்ச்சும் வாசனை தீவின் காற்றில் பரவியது. அரைக்கையளவு நீளம் கொண்ட மீன்களை வெட்டி கழுவி செதிலகற்றி முழுதாய்க் கலயத்தில் போட்டார்கள். இருதியாள் உப்பும் செம்மிளகாயும் கலயத்தில் சேர்த்தாள். “உப்பைக் கொஞ்சம் கூட போடுங்கள் அத்தை. பதங்கனின் நாக்குக்கு உப்பே தெரியாது” என அலவன் எள்ளல் கெலிக்க விறகுகளைத் தீயுள் நுழைத்தபடியிருந்தான். இருதியாள் சிரித்துக் கொண்டே அவர்களுக்கு கடற்கூழை சிரட்டைகளில் வார்த்தாள். உறிஞ்சி உறிஞ்சி அவர்கள் மூக்கிலிருந்து நீர்வடியத் தொடங்கியது. வாகை சூடன் “காவலுக்கு வந்து விட்டு கூழைக் குடித்த பின் உறங்கச் சென்று விடுங்கள். காலையில் சிங்கை நகர்ப் படை கரையில் கூழ்காய்ச்சிக் கொண்டிருக்கும்” என சிரித்துச் சினந்து கொண்டு இருதியாளிடம் சிரட்டையை நீட்டினான். கூழின் ஆவி மணத்தை இழுத்துக் கொண்டு மூன்றாவது சிரட்டையை வாய்க்குள் ஊற்றிக் கொண்டிருந்த சூடனைப் பார்த்து அலவன் “ஓம். ஆனால் சிங்கை நகர்ப் படைகள் கூழ் ஊற்றிக் குடிக்க சிரட்டைகள் தானிருக்காது தளபதியாரே. நீங்கள் குடித்து முடித்த சிரட்டைகளை எறிந்தாலே சிங்கை நகர்ப் படையினர் திரும்பி ஓடிவிடுவார்கள்” என உருள் விழிகளைத் தூக்கியபடி சொன்னான். “அதுசரி, சிரட்டைகளைக் குறிபார்த்து எறியவாவது யாராவது வீரனிருக்கிறானா இந்தப் படையில். எல்லாம் பேத்தைக் குஞ்சுகள்” என்று சொல்லாடினான். இருதியாள் அவர்களின் விளையாட்டுப் பேச்சுகளில் கலக்காமல் வீரர்களின் சிரட்டைகள் வெறுமையாகமல் பார்த்துக் கொண்டாள்.

காற்று வீசி மழை துளித்துக் கொட்டத் தொடங்கியது. ஒரேயடியாய் பொழிவதும் பின் மென் தூறல் ஆவதுமென சலித்துக் கொண்டே பெய்து கொண்டிருந்தது. தாழைக் காட்டில் ஒருபகுதி வீரர்கள் ஒதுங்கினர். மற்றையவர்கள் கலன்களில் ஏறிக் கொண்டனர். பின்னிரவு இருநாழிகை கழிந்து கொம்பூதும் ஒலி தீவை அலைத்தெழுப்பியது. வீரர்கள் குவிந்து திரண்டார்கள். கலன்களில் தீப்பந்தங்களை குறைத்தார்கள். இருளில் புலியென நிலை கொண்டார்கள். அலவனும் திரிபதங்கனும் தாழைக் காட்டிலிருந்து வெளியே வந்த இரு நாகங்களென வில்லெடுத்து தீவின் விளிம்பில் சென்று நின்றார்கள். வாகை சூடன் கலனிலிருந்தபடி வீரர்களை ஒருங்கிணைத்தான். வீரர்களின் கால்கள் தாவியோடும் சத்தம் கடல் நடப்பதைப் போல் கேட்டது.

முதல் அம்பை எய்தவன் அலவன் தான். அடுத்து மண்ணிலிருந்து ஆயிரமென மின்முனைகள் தீத்துளிகளுடன் சிங்கை நகரின் பாய்க்கப்பல்களில் நுழைந்தன. சிம்ம முகம் கொண்ட பெரும் பாயொன்றில் சிம்மத்தின் இடவிழியில் திரிபதங்கன் ஓர் எரியம்பை எய்துவிட்டு அலவனை நோக்கினான். அவன் சிரித்து விட்டு வலக்கண்ணை நோக்கி ஓர் அம்பை எய்தான். குறிபிசகாத எய்கை.

சடசடவென அங்கிருந்த இருநூறு வீரர்களும் எரியம்புகளை ஆக்கி விண்ணை நோக்கி எழுந்தனர். விண்ணில் புட்கள் என விரிந்து கூர்ந்த அம்புகள் நூறு நூறு எரிவால் நட்சத்திரங்களெனச் சரிந்து சிங்கை நகரின் பாய்மரக் கலன்களில் குத்தி விழ்ந்தன.

மண்ணில் நிகழும் அசுரர்களின் மாயப்போர் என இருதியாளின் கண்கள் முதல் நேரடிப்போரை அறிந்தன. சிங்கையின் மூன்றாவது கலனிலிருந்து வந்த எரியம்புகள் தமிழ்க் குடி வீரர்களைத் துல்லியமாகத் தாக்கின. மூன்று வீரர்களின் நெஞ்சிலும் குரல்வளையிலும் குத்தி எரிந்தணைந்தன. அவர்களின் உடல்களைத் தீவின் மையத்திற்கு அலவனும் அவனது தோழர்களும் சுமந்து வந்தனர். இருதியாள் அவர்களின் மூடியிருந்த சிறு விழிகளை நோக்கினாள். நெஞ்சு ஒரு உதையென விம்மியது. கலன்களிலிருந்து எரியம்பு மழை மாறி மாறிப் பெருக்கெடுத்தது. வான்மழையும் மின்னலை வெட்டி மென் தூறல் கொட்டிக் கொண்டிருந்தது. உடலில் எரியம்புகள் குற்றி இரத்தம் அங்கங்களிலிருந்து பீறிட இளம் வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் துணிகளால் காயங்களை கட்டினர். வலியில் உதடுகள் மழையில் நனைய கூச்சல்களிட்டபடி அம்புகளைத் தொடுத்தனர்.

இறந்தவர்களின் எண்ணிக்கை ஏழாகியது. உத்திரையின் ஒரே மகன் செவ்வளவன் கழுத்தில் எரியம்பு பாய்ந்து குருதி கொட்டியபடியிருக்க இருதியாளிடம் ஒப்படைக்கப்பட்டான். இருதியாள் தூக்கி வளர்த்த குழந்தை வளவன். உத்திரை தனது மகனின் போர் சாகசங்களைப் பற்றி வாய் அலுக்காமல் பேசுவதை இருதியாள் கேலி செய்வதுண்டு. “நீ சொல்வதைப் பார்த்தால் நீலழகனை விட அதிக போர்க்களம் கண்டவன் செவ்வளவன் தான்” என அவளிடம் சொல்லி அவளைக் கோபமூட்டுவது இருதியாளின் விருப்பமான சீண்டல். அதற்கு உத்திரை “ஒரு நாள் அவன் போர்த்தளபதியாகி நீலழகனின் அரசபையில் அமரத் தான் போகிறான். அப்போது உனது முகத்தை எங்கு வைத்துக் கொள்வாய் எனப் பார்க்கிறேன்” என முகத்தைக் கோணி பின் சிரித்துப் பூக்கும் உத்திரையின் முகம் அவளுள் எரி முள்ளென படபடத்தபடி வளர்ந்தது. வளவனின் விழிகள் மூடாது கிடந்தன. அவள் அவனது விழிகளை மூடினாள். நெஞ்சு மழைக்கடலெனக் கனத்து நிறைந்தது. வீரர்கள் அங்குமிங்கும் ஓடும் குரல்கள் அவளின் செவிகளில் பொங்கும் ஆழியின் ஆழத்தில் அமிழ்த்தியது. சில கணம் மூச்சை இழுத்து உள்ளிருத்தி தனக்குள் உறைந்தாள்.

அவள் கரங்கள் துடித்து விம்மின. உப்பினியின் மேற்தளத்தில் சாற்றி வைக்கப்பட்ட அதாகத்தை ஏறி எடுத்தாள். அதாகம் அவளுடைய தந்தையுடையது. “கொல்வதற்கல்ல. காப்பதற்கு மட்டுமேயானது ஆயுதம் மகளே” எனச் சொல்லி அவளின் மணமுடிப்பில் அந்த வில்லினைப் பரிசாகக் கொடுத்திருந்தார். அதாகத்தை அவள் கரங்களில் விசும்பின் ஒளிவளைவெனத் தூக்கினாள். அம்பறாத் தூணியை விரிதோள்களில் ஏற்றினாள். எரிநெய் கொண்ட கலயத்தினருகில் சென்றவள் சற்றுத் தயங்கிச் சுற்றியிருந்த வீரர்களை நோக்கினாள். அவர்கள் அவள் கரங்களில் அதாகம் எழுந்திருக்கும் கோலத்தைப் பார்த்து விழிகளிலும் கரங்களிலும் துடியும் வெறியும் கூடினார்கள். அலவன் “அத்தை, நாம் ஒரு பாணனையும் கலனில் கூட்டி வந்திருக்கலாம். இக்கணம் காண வாய்த்த அவர்கள் விழிகள் உன்னை வணங்க மட்டுமே செய்யும். நீ எங்கள் விரல்களில் எரியம்பெனப் பொலிகிறாய்” என உணர்ச்சி மிக உச்சக் குரலில் மழையை ஊடறுத்துக் கூவினான்.

அதாகத்தில் முதல் எரியம்பைப் பொருத்தி நாணில் விரல்களை ஆழிப்பிடியெனக் கவ்வினாள். சிங்கையின் மூன்றாவது மரக்கலனில் நின்ற இளந் தளபதி அசல ஒரு பெண் வில்லேந்தி முன்வரிசை புகுவதை நோக்கி நின்றான். வீரர்களை அவளை நோக்கி அம்புமழையைக் குவிக்கச் சொன்னான். சில கணங்களிலேயே இருதியாளை நோக்கி நூற்றுக் கணக்கான எரியம்புகள் பொழியத் தொடங்கியது. ஆழிக்கரையில் கைகளுக்குச் சிக்காமல் ஓடும் சிறுநண்டின் கால்களை அணிந்து கொண்டவள் போல எரியம்புகளின் கூரொளியைக் கணித்துத் தாவி நகர்ந்தபடி விடாமல் அம்புகளை எய்யத் தொடங்கினாள். எரியம்புகள் அவளை நோக்கி எழ எழ அவள் ஆழியின் செருக்கென எழுந்தாள். வாயில் வசவுகளை இறைத்த படி “தம்பிகளே, இந்தக் கலன்களில் ஒருவன் கூட நம் கடலின் விளிம்பைத் தொடக் கூடாது. ஒவ்வொரு அம்பும் அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் எரியும் மறுமொழி. இங்கு சிந்தும் ஒவ்வொரு குருதியும் ஆழியின் மடியில் முத்தென விளையும். கரங்கள் சோர வேண்டாம். விழிகள் இமைக்க வேண்டாம். எடுங்கள் உங்கள் மண்ணின் கனல்வேல்களை. எறியுங்கள் எதிரிகளின் இதயம் பிளபட” போரில் நுழைந்த இளம் புலியென உறுமினாள். அவளின் சங்கின் ஒலியென அடர்வு கொண்ட குரலைக் கேட்ட வீரர்களின் உடலில் குருதி எங்கும் நிலைகொள்ளாமல் ஆழியெனப் பாய்ந்தது. கடற்காற்று ஏறிவீசிப் புயல் நெருங்கிக் கொண்டு வந்தது. சிங்கையின் பாய்க்கலன்களில் பற்றிய தீயால் கலன் கொப்புகள் முறியத் தொடங்கின. சிங்கையின் படைகள் கடலில் தத்தளித்து அலறுவதை நெருப்பின் ஒளியில் நோக்கி தமிழ்க்குடி வீரர்கள் எழுந்து கூச்சலிட்டனர்.

அசல தன் கலனால் தீவைச் சுற்றிக் கரையை நெருங்கும் மார்க்கத்தைக் கண்டடைய முனைந்தான். இருதியாள் தன் மேல் அம்பு பொழிந்தது அக்கலன் தான் என்பதை அறிவாள். அசலவின் இருள் வர்ணக் கலன் மெல்ல வழிபிரிந்து தீவை விலகுவதை நோக்கியவள். ஒருகணத்தில் அவன் திட்டத்தை ஊகித்தறிந்தாள்.

“இருபது பேர் என்னுடன்” என்று ஆணையிட்டபடி உப்பினியில் தாவி ஏறினாள். உப்பினி ஒரு கணம் ஆடி அமைந்தாள். கலனில் எரியம்புகளை நிரப்பினர். அலவனும் திரிபதங்கனும் ஏனைய வீரர்கள் குழுவொன்றும் விறுவிறுவெனக் கலனில் ஏறி நிலையெடுத்தனர். கழியை ஊன்றிக் கலனை விரித்து ஆழியின் காற்று திசையால் கலனைச் செலுத்தினாள் இருதியாள். அம்புகள் பொழிவென ஏகிக் கொண்டிருந்த திசையில் கலன் விரைந்தது. “அத்தை, நாம் அவர்களின் கலன்களை நோக்கி நேரே செல்கிறோம்” என அலவன் கூவினான். கைகளை ஒரு ஆணையென ஆட்டி “இது எங்கள் கடல் அலவா. இதன் சுழிகள் அவர்கள் அறிய முடியாதது. நீ விசையைக் கூட்டு. உப்பினியின் உச்சம் எதுவென்று இன்று சிங்கைப் படைகள் காண வேண்டும். அவர்கள் துயிலில் உப்பினி துர்தேவியென எழும் கனவுகளை அளிப்போம்” என மறு உறுமல் சொன்னாள்.

கலன் தீவின் இடவளைவில் விரிந்த ஏழாழிச் சுழியில் விசை கூடி வழுக்குப் பாறையென நீர் புரண்டோடியது. எதிர் நின்ற கலன்களிற்குத் தன் கன்னத்தைக் காட்டியபடி உப்பினி சுழன்று திரும்பி தீவை இடம் வெட்டிப் பாய்ந்தாள். பின்னிருந்து ஐந்து வீரர்கள் சிங்கைக் கலன்களின் எரிசட்டிகளில் நின்ற வீரர்களை எய்து சாய்த்தனர். புலன்கள் ஒவ்வொன்றும் இலக்கு நுனியையன்றிப் புறவுலகை இழந்தன. சிங்கை வீரர்கள் சரியச் சரிய அவர்களின் பன்னிரு பெருங் கலன்களும் ஒன்றையொன்று உரசியபடி கலைந்து பொருதின. அசலவின் தனிக்கலன் ஐம்பதிற்கும் குறையாத சிங்கையின் படையினருடன் தீவை விலத்தி மிதந்து முன்னேறியது. ஏழாழிச் சுழியின் நடுபிரிப்பில் புகுந்த உப்பினி காற்றென நகர்ந்து அசலவின் கலனுக்குக் கன்னம் காட்டியது. சுக்கானில் நின்ற இருதியாளை நோக்கினான் அசல. குவி கொண்டையும் தழல் விழிகளும் உறுகரங்களும் கொண்ட அவளின் உரு அவனை ஒரு கணம் தெய்யோவென எண்ணச் செய்தது. மழைப் பொழிவினிடையில் விழிகளைக் கூர்ந்தான். கலன் செல்வது ஆழியின் ஆற்றில் என்பதை நோக்கியவன் அவளின் கடலறிவை எடையிட்டான். இனிச் செல்லும் ஆழியும் அவன் அறியாதது. ஒருகணம் உளம் பின்வாங்கியது. மீண்டும் தன்னை ஒருங்கிணைத்துக் கொண்டு உப்பினியைத் தாக்க வீரர்களைப் பணித்தான்.

உப்பினி வீரர்கள் சிங்கையின் படைவீரர்களை நெருப்பொளியில் கணித்து துல்லியமாய் அம்பு பொருதினார்கள். அவர்கள் கலைந்து சிதறத் தொடங்க நிதானமிழந்த அசல தன் வில்லை எடுத்துச் சுக்கானில் நின்றிருந்த இருதியாளின் முதுகிற்குக் குறியை நீட்டினான். அலவன் ஒரு எரியம்பை அசலவின் இடக்கையின் அருகில் எய்தான். அவ்வொளி படர்ந்து மின்னிய கணத்தைத் திரும்பி நோக்கிய இருதியாள் அசலவின் இருள் முகத்தையும் நீரூறிய சடைக்கோலத்தையும் நோக்கினாள்.
சுக்கானின் கீழே வைத்திருந்த அதாகத்தை எடுத்து ஒரு கணத்திற்கும் இன்னொரு கணத்திற்கும் காலம் எப்படிப் பிரிந்து வழிவிட்டது என அறியமுடியாதபடி ஒன்பது எரியம்புகளை ஏவினாள். எரியம்புகள் அவனை நோக்கி ஒன்றுடன் ஒன்றெனவும் ஒன்றையடுத்து இன்னொன்றெனவும் பாய்ந்தன. அசல வீழ்ந்து படுத்துத் தன்னைக் காத்துக் கொண்டான். மீண்டும் அசல எழுந்த போது பத்தாவது அம்பு அவன் இடக்கையில் குத்தியது. தமிழ்க் குடி வீரர்கள் கூக்குரலிட்டு எரிந்தெழுந்தனர். இருதியாளின் வில்லை நோக்கி நின்றனர். அக்கணம் அவள் அரக்கி. அக்கணம் அவள் காப்பவள். அக்கணம் அவள் அவர்களுக்குக் காட்டியது ஆழி அவளென்பதை. அக்காட்சி பிறகு வந்த போர்க்களங்களின் காவற் பாடலென ஆகியது. முடிவில்லாத இக்குடியின் பெரும் போர்களில் எரியம்பென எழுந்து வந்துகொண்டேயிருந்தாள் பின்வந்த ஆழிசூடிகளின் முதலன்னை.

சிங்கையின் கலன்கள் திரும்பிப் புறமோடின. அசல தனது கலனின் பின்னிருந்து இடக்கையில் பாய்ந்த இருதியாளின் அம்பினை வெளியே எடுக்காமல் மூச்சில் கர்ஜனையை சீறியபடி உப்பினியை நோக்கியபடியிருந்தான்.

தமிழ்க் குடியில் பதினெட்டு வீரர்கள் மடிந்தனர். முப்பது வீரர்களுக்கு அங்கங்களில் காயங்கள் எற்பட்டது. கலனில் ஒவ்வொருவராக அழைத்து ஏற்றி விடியலின் முதற் புல்லொளி கடலில் எழ கரையை நோக்கி இருபது கலன்களும் திரும்பின. உப்பினியின் முன் தளத்தில் காயம்பட்ட வீரர்களைப் பரிசோதித்தபடியும் கட்டளைகளை அளித்துக் கொண்டும் இருதியாள் கரையை நோக்கி நின்றாள். கலன்களில் உடன் வந்த வீரர்களும் அவர்களின் ஒருங்கிணைப்புத் தளபதி வாகை சூடனும் அவளை விழிகளால் நோக்கி நோக்கி நகர்ந்தனர். இப்போரை யார் வழிநடத்தினார் என்பதை வீரர்கள் தங்களுக்குள் விவாதித்தபடி குழம்பினர். உப்பினியில் இருதியாளுடன் களம் புகுந்த வீரர்கள் தாம் கண்ட காட்சியின் கதையை இருபது வாய்களால் அறுபது கதைகளாகச் சொன்னார்கள். கேட்டிருந்தவர்கள் விழிகள் திரும்பத்திரும்ப இருதியாளை நோக்கின.

வாகை சூடன் இளம் புன்னகையுடன் இருதியாளை நோக்கிச் சென்றான். “அக்கா, இந்தப் போர் நான் கண்ட போர்களிலேயே அரிதானது. அதாகம் இனியொரு போதும் கீழிறங்கக் கூடாது. எம் குடியை காக்குக” என உள்ளில் எதுவோ ஒன்று விடுபட்ட உணர்வுடன் சொற்களை அடுக்கத் தொடங்கினான். “தளபதியாரே, நேற்றிரவு என்ன நிகழ்ந்தது என்பதை இப்போது என்னால் நினைவில் மீட்க முடியவில்லை. செவ்வளவனின் குழந்தை விழிகளும் முதல் எரியம்பை விண்ணேற்றியதும் ஆழிப்பிரிவில் சுக்கானை வளைசங்கெனச் சுழற்றியதும் தான் தங்கியிருக்கிறது. போரில் மூழ்கும் பொழுது பிறது அழிந்து விடுகிறது. கடல். நீலக் கடல். கடலின் நீலமெளனம் மட்டுமே நெஞ்சில் எழுந்தது” எனச் சோம்பலை முறித்துக் கொண்டு உடலை ஒருங்கமைத்துக் கொண்டு சொன்னாள். அவளின் முகத்தில் இப்பொழுது கனிந்திருப்பது மனை திரும்பும் அன்னையின் ஒளி. வாகை சூடன் சிரித்தபடி “நீலழகன் என்னிடம் இம்முறை கலனேறி ஒரு ஆழிசூடிகை தான் என்று சொன்ன பொழுது அதுவரை அப்படியொரு சொல்லையே கேட்டிராத என் அகம் இழக்கப்போகும் கலன்களை மட்டுமே கணக்கிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இனி ஆழிசூடிகைகள் இன்றிக் கடலேகுவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறேன்” என கையை சுக்கானில் வைத்தபடி சொன்னான். அவள் அன்னையின் பரிவுடன் விழிகளை அசைத்து மழலையுடன் பேசும் குறும்பின் மொழியில் “இனி நான் ஆழிசூடிகை இல்லை தளபதியாரே. நான் போர்த் தளபதி. கடற் தளபதி. ஆண்கள் எப்போதும் கடலின் உப்பு மட்டுமே. பெண்கள் தான் உப்பு வாழும் நீர். இதை என்றாவது நீ அறிந்து கொள்வாய்” என்றாள். “வேண்டாம் தாயே. நேற்றே எரிதெய்வத்தை நேர்கண்டதாக விழிகளில் அக்கணம் உறைந்து விட்டதைப் போல் இளம் வீரர்கள் விழியரண்டு நிற்கிறார்கள். அவர்கள் சொற்களின் வழி எழுந்த பேருருவைக் கேட்டேன். சிங்கை வீரர்கள் கனவுகளில் இனி நீங்களொரு துர்தெய்வம்” எனச் சொல்லி மூச்சை ஆழ இழுத்துக் கொண்டு எதையோ அகக்கண்ணில் கண்டுவிட்டவன் போல “ஒருகாலம் உங்களை அவர்கள் தெய்வமாக்கி வணங்கவும் கூடலாம்” எனச் சொல்லிவிட்டு அந்த நினைப்பை எண்ணி உள்ளமெழுந்தான். கடல் அலையடங்கி கற்தரையென அசைவற்றிருந்தது. பாய்கள் சீராக நிற்க உப்பினி நீரில் மலரென நகர்ந்தாள்.

*

படையல் விளைச்சலை ஏற்றிய வண்டில்கள் மணலைக் கடந்து வீதிக்குள் நுழைவதை இருதியாள் நோக்கினாள். “அத்தை இன்னும் ஏதாவது வேலைகள் உண்டா. களிவிழா ஏற்பாட்டுக்கு உதவ நான் போக வேண்டும். அந்தியில் தான் திரும்புவேன்” என உடலைத் துடைத்தபடி சொன்னான் அழலன். “இல்லை அழலா. நீ போய் களிவிழா ஏற்பாடுகளைப் பார். நான் மனைக்குச் சென்றுவிட்டு மதியம் நகருக்கு வருவேன்” என்றாள். அவன் தோழர்களுடன் கதைத்துச் சிரித்தபடி செல்வதை இருதியாள் நோக்கினாள். அவளுக்குள் அந்தியில் தொடங்கவிருக்கும் களியின் முதற் கள் மணம் நாசியில் எழுந்தது. தொடையில் நீண்டு கோடென ஆகிய எரியம்பின் வடுக்கோட்டைத் தடவியபடி வாடியில் அமர்ந்து குடிகள் திரள் திரளாக பணிகளில் பரந்திருப்பதைப் பார்த்தாள்.

உடலில் கடல் நிரம்பித் ததும்புவது அவளுக்குள் கேட்டது. கடல். கடல் ஒரு தோழி. தோழி மட்டுமே. நுரை
வரிசைப் பற்களைக் காட்டி இருதியாளை நோக்கிச் சிரித்தாள்.

TAGS
Share This