27: நீத்தல் உரைத்தது
களத்தில் காயம்பட்டு தம் உயிரின் அடிவேரைப் பற்றியபடி முனகிக்கொண்டிருந்த சிலரை அம்புக் குவியல்களுக்குள்ளிருந்து மீட்டு உதவுநர் படை மருந்துவக் குழுவிடம் கையளித்துக் கொண்டிருந்தது. சிங்கைப் படையின் அம்புப் பெருக்கு ஓய்ந்திருந்தது. கோட்டைக்குள் போர் நகர்ந்து அங்கிருந்து ஒரே கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கொல்விலங்குகளின் ஒன்றையொன்று பின்னியுண்ணும் ஒலிகள் எழுந்து கொண்டிருந்தன. இளையவர்களின் இறந்த உடல்களை எடுத்து மரவுரிகளால் சுற்றி தேர்களில் குவித்து அடுக்கத் தொடங்கினர் சில வீரர்கள். பன்னிருவரே சிற்றுயிருடன் மருந்துவக் குழுவிடம் கையளிப்பட்டனர்.
சுடர் மீனன் ஒவ்வொருவராய் நோக்கினான். தேவ இலை மலர்களால் குழைத்து உண்டாக்கப்பட்ட மயக்கு உருண்டைகளை அவர்களுக்குக் கொடுத்து நீரளிக்கச் சொல்லி ஏனையோருக்கு ஆணையிட்டான். இதில் உள்ள ஒருவரும் மனை மீளப்போவதில்லை. அவர்களின் இறுதித் துளிகளாவது சற்று ஓய்வு கொள்ளட்டும் என எண்ணினான். பயிற்சியால் இறுகிய உடல்களுக்குள் மட்டிச் சதைபோன்று மென்னுயிர் துடிப்பதை நோக்கினான். உயிர் மீண்டு மனை சேர்ந்து களம் கண்ட கதைகள் சொல்ல விரும்பிய இளவல்கள். எத்தனை நியாயங்கள் உரைப்பினும் ஈடற்ற இழப்புகள். சுடர் மீனன் உளம் சோர்வில் குழைந்து எடையற்றதாக ஆகியது. அக்கணம் அவன் முன்னே இருக்கும் வீரர்ககளை கற்ற மருத்துவத்தினால் காக்க முடியாது. உயிர்களைச் சற்று நேரம் நீட்டிப்பதே அவனால் ஆகக் கூடியது. வேட்டைப் பறவைகளின் கூட்டமொன்றால் சிதைக்கப்பட்டதென ஒவ்வொரு உடலும் நூற்றுக் கணக்கில் களப்புண் கண்டிருந்தது.
இடியவனின் தோள்களில் தைத்திருந்த அம்புகளின் நஞ்சு பாறையிலிருந்து துடித்திறங்கும் புன்வேர்களைப் போல் அவன் நரம்புகளில் நீலவிரிவுடன் இறங்கிக் கொண்டிருந்தது. சுடர் மீனன் அவன் அருகில் அமர்ந்து அவன் இடையில் தைத்திருந்த அம்பொன்றை இழுத்தான். இடியவன் வலியால் உடல் துள்ளித் திமிறியமைந்தான். நீரால் காயத்தைக் கழுவி மருந்தைச் சுற்றிலும் தடவி மூடிக்கட்டினான் சுடர் மீனன். இடியவன் சுடர் மீனனை நோக்கி விழிதிறந்து “ஆஹ், மீனா, நான் நாடு திரும்புவேனா” என எக்கியபடி கேட்டான். சுடர் மீனன் “ஓம்” எனத் தலையசைத்து அவன் விழிகளை நோக்காது விலத்தி அருகிருந்த வேங்கை வீரனை நோக்கினான். அவன் நினைவு ஏற்கெனவே தப்பத் தொடங்கியிருந்தது. மடல்கள் அரைவாசி மூடி மயக்கில் நெளிவற்று உறைந்திருந்தது. ஒரு கணம் இறந்து விட்டவனைப் போலிருந்தது. பின் நெஞ்சில் எழுந்த மூச்சின் ஆடலை நோக்கியவன். “இவனுக்கு இன்னும் ஒரு உருண்டை கொடுங்கள்” எனச் சொல்லி எழ முயன்றான். அவனது இடைத் துணியைப் பற்றிய இடியவன் “போகாதே மீனா, என் இறுதிக் கணத்தில் வாயாடி ஒருவனுடன் இருக்கவே விரும்புகிறேன். உன் சொற்களை நான் விண்ணுக்கு எடுத்துச் செல்வேன். ஒரு தூதுவனைப் போல” என மெல்ல நகைத்தான்.
காட்டின் உள்ளிருந்து குருதி வாடைக்கு நரிகளும் கழுதைப் புலிகளும் நெருங்கி வந்திருந்தன. வீரர்கள் அவை அண்டாது சுற்றிலும் காவலுக்கிருந்தனர். ஈக்கள் ஆயிரமாய்ப் பெருகி உள்வர அவற்றைக் கலைக்க இயலாது காற்றில் வேல்களைச் சுழற்றினர். “தீப்பந்தங்களை ஏற்றுங்கள்” என முதிய வீரர் ஒருவர் கோரினார். காட்டிலிருந்து நூற்றுக்கணக்கான கிளைகள் ஒடிக்கப்பட்டு ஒருநாழிகைக்குள் தீப்பந்தங்கள் எரியத் தொடங்கின. ஈக்கள் தீயைப் பொருட்படுத்தாமல் காற்றில் சுழன்று அளைந்து கொண்டு குருதி குடித்துக் கொண்டிருந்தன. அவற்றின் வாய்கள் உடற் புண்களில் ஒற்றிய போது சதைகளில் எழுந்த மென்னதிர்வில் வலியை மேலும் மேலும் உணர்ந்த வீரர்கள் முனகிக்கொண்டிருந்தனர்.
இடியவன் தன் நீண்ட கருங்குரங்கினுடையதைப் போன்ற கரத்தை வலப்பக்கத்தில் ஊன்றிச் சற்று எழுந்தான். “வேண்டாம். படுத்துக்கொள்” எனச் சுடர் மீனன் சொன்னான். “இனி நான் உன் நோயாளி அல்ல மீனா, இனி நான் போர்க்களப் பாடல்களின் ஒரு வரி. இல்லை இல்லை. ஒரு சொல். அல்லது இரண்டு வரிகளுக்கிடையில் விடப்படும் மெளனம்” எனச் சொல்லி எழ முயன்றான். தோள்கள் அவனை நீங்கியவை எனச் சரிந்து விழுந்தான். அவனது கருமையான குழலில் குருதியூறி மழையில் வழிபவை போலாகின. மேனியின் கருமையில் காயத் தொடங்கியிருந்த குருதி கவசமெனப் படிந்து கொண்டிருந்தது.
சுடர் மீனன் ஒரு மரப்பெட்டியை எடுத்து அவனருகில் போட்டுக்கொண்டு அமர்ந்தான். ஏனைய மருத்துவக் குழுவினர் பணிகள் முடிந்ததெனக் கோட்டையை நோக்கியபடி நின்றனர். யாரேனும் இருமினாலோ மயக்கில் உளறினாலோ “என்ன” எனக் கேட்டு அருகில் வந்து பிறகு அவர்களிலிருந்து எந்த அசைவும் எழவில்லை என நோக்கித் தம் இடங்களுக்குத் திரும்பினர்.
இடியவனின் தோளிலிருந்த நஞ்சுக்கு மாற்று மருந்துச் சாறைக் குடிக்கச் சொல்லி மூங்கில் குவளையை அவன் வாயில் கவிழ்த்தான். அது கசந்து குருதியும் மருந்தும் வாய்க்குள் ஊற்றப்படுகிறது என எண்ணியவன் போல வயிறு குமட்டி ஓங்காளித்து உடலதிரச் சாய்ந்தான். வலியும் மயக்கும் கலந்த இடியவனின் குரல் பிலவின் இருட்டில் ஒலிப்பது போலிருந்தது. “மீனா, தந்தைக்குச் சொல். நான் எப்படிக் களம் கண்டேன் என. அன்னைக்கு ஒன்றும் பறையாதே. அவளுக்கு நான் படையில் சேர்ந்ததில் வருத்தமே மிகுதி. நாளும் பொழுதும் நாகதேவியின் காலடியில் அவள் அழுத கண்ணீர் தான் இத்தனை குருதியாக என்னில் வழிகிறது. இயன்றால் அவளுக்கு நான் அவளை இக்கணத்தில் நினைத்தேன், அவளை நான் உயிரினும் மேலாக வைத்திருக்கிறேன் எனச் சொல். தங்கை விளையாட்டுப் பிள்ளை. அவளுக்குக் குருதியும் போரும் அண்டாத வாழ்வொன்றைக் காணவே நான் களம் புகுந்தேன். இடையிலேயே போகிறேன். நம் படை அவளைக் காக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. தலைவரின் மீதும் நம்பிக்கை இருக்கிறது மீனா. அவர் நம் குடியைக் காக்க எழுந்த தெய்வம். அவர் நிற்கும் களத்தில் உயிர் நீங்குவது எனக்குப் பெருமையே. சிங்கைப் படைகள் வந்து குடிகளைக் கொல்லும் பொழுது அதைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட அவர்களில் ஒருவரையாவது கொன்று எங்கோ யாரோ காப்பற்றப்படப் போகிறார் என்ற எண்ணம் இத்தனை பெரியது என நான் இதுவரை எண்ணியதில்லை.
களத்தில் எங்கிருந்து அம்புகள் வந்தன என்று தெரியவில்லை மீனா. வானிலிருந்து மழை கொட்டுவது போல் சிறிய அம்புகள் கொட்டுகின்றன என நினைத்தேன். எண்ணிய மறுகணம் அவை என் உடம்பில் தைத்து விழுந்தன. ஒவ்வொன்றும் இருகை அளவான அம்புகள். கூர்மையான நாவுகள் கொண்டவை. இன்று இல்லையென்றால் நாளை நம் வனக்கரையில் போரிட்டிருப்போம். இங்கேயே அவர்களைத் தடுப்பது தான் நல்லது. இந்தக் கொடும்படை வனம் புகுந்து நகர் நுழைந்திருந்தால் என்னென்ன நேர்ந்திருக்குமோ என எண்ணவே அச்சமெழுகிறது. கொடும் போர் மூண்டிருக்கும். குடிகளும் குழந்தைகளும் மடிந்திருப்பர். தலைகள் அறுபட்டு நம் வீதிகள் பிணச்சாலைகளாய் ஆகியிருக்கும். அந்த நினைப்பு எழவே இக்கணம் என் கரங்கள் வில்லென எழுகிறது மீனா. களத்தில் உடன் நில் என நெஞ்சம் சீறுகிறது. உடல் இத்தனை தூரம் என்னை விட்டு நழுவுமென நான் எண்ணியதில்லை. காற்றில் மிதந்திறங்கும் இறகென உடல் அலைபட்டு வீழ்ந்து கொண்டிருக்கிறது. உயிர் அதை மண்ணிலிருந்து நோக்குகிறது” மெல்லிய புன்னகை உதட்டில் எழ “போர் முடிந்து நகர் திரும்பியிருந்தால் இக்கணங்களைப் பற்றிப் பாடி நானும் ஒரு பாணன் என மிச்ச வாழ்வைக் கழித்திருக்கலாம். என்ன சொல்கிறாய் மீனா. மரணம் ஒருவனைக் கவிஞனாகவும் ஆக்குகிறது. ஒவ்வொரு கவிஞனும் மரணத்தை அன்றாடம் காண்பவன் தானா. எங்கிருந்து உயிரை உருவேற்றும் சொற்கள் அவர்களில் எழுகிறது. மன்றுகளில் நான் கேட்ட ஒவ்வொரு பாடலும் நினைவில் எழுகிறது மீனா. குருதியில் படபடக்கும் புலிக்கொடியில் ஒரு துளியென ஆக வருக என உரைத்த பாணனை இப்போது காண்கிறேன். இளையவன் அவன். போரில் குருதியால் வழியும் கொடி படபடக்காதென்பதை அவனால் கண்டிருக்க முடியாது. மெய் கற்பனையை விட மேலானது மீனா. அவன் எளியவன். அவன் சொற்களைக் கேட்டு அன்று நான் உளம் எழுந்தேன். இன்னொரு நாள் ஒரு பாடினி தன் மயக்கும் குரலால் காதல் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தாள். அவளை நான் அக்கணம் காதலித்தேன் என்றும் சொல்லலாம். என்ன அழகு. என்ன வனப்பு. ஆஹ். அவளின் முகமும் இப்பொழுது துலங்கி மேலே வருகிறது. அவள் கொல்லப்பட்ட பெண்களின் காதலைப் பற்றிப் பாடிய பாடலொன்றைக் கேட்ட அன்றிரவு முழுவதும் அழுதேன் மீனா. எத்தகைய சோகம் அது. புலரியில் எழுந்த கனவினை வாளால் அறுத்து அவளை அவள் கனவிலேயே புணர்ந்து கொன்றார்கள். அவள் எவ்வளவு திமிறி விழிக்க உன்னிய போதும் மூழ்கும் சுழியென அக்கனவு ஆகி அவளை ஆழத்தில் மடித்துக் குலைத்து இழுத்துச் சென்றது என அவள் பாடினாள். அந்தக் காட்சி என் கண்களில் உனக்குத் தெரிகிறதா மீனா. அதோ அவள் வாயிலிருந்து எழுந்தவை சொற்கள் அல்ல. காட்சிகள். கொடூரமான படுகொலைச் சித்தரிப்புகள். நெஞ்சைப் பேய்க்கரங்களால் அறைந்து உலுக்குபவை. உயிரை அடிவேருடன் வெட்டித் தீயில் எறிபவை. அவள் கொடும்பேயெனக் கூந்தல் விரிய யாழில் தீண்டிய விரல்களில் குருதி சொட்ட அப்பாடலைப் பாடினாள். அது பாட்டல்ல மீனா. மீளவே முடியாத கொடுங்கனா. அதிலிருந்து விழித்துக் கொள்ளத் தான் நான் ஒவ்வொரு கணமும் நாணை இழுத்தேன். ஒவ்வொரு கணமும் போரை விரும்பினேன். இப்போது நான் விழித்துக் கொண்டேன் தோழா. என்றென்றைக்குமாக நான் விழித்துக் கொண்டேன். இப்போது மரணம் எனக்குத் தெய்வங்கள் தரமறுத்த வரம்” என்றவன் தலை அழுத்தும் பாறையென உருளுவது போல் எடை தாளாமல் தலையை ஆட்டினான். “வலி எடை கொள்கிறது மீனா. மதுவுண்டா” எனக் கேட்டான். மதுவிருந்த குவளையைக் கொணர்ந்து அவன் தலையைத் தன் மடிமீது வைத்துக் கொண்டான் சுடர் மீனன். ஒவ்வொரு மிடறாக வாயில் ஊற்றினான். அவன் இதழ்கள் நனைந்து எரிந்து கொண்டு மது அவன் நரம்புகளில் புகுந்தது.
“மீனா, இதுவரை எனக்கென்று காதலி அமையாதது நல்லதாய்ப் போயிற்று. அப்படியொருத்தி இருந்திருந்தால் நான் உயிர் துறந்த பின் அவள் என்ன ஆவாள். உன்னிடம் சொல்ல வேண்டும் போலிருக்கிறது மீனா. இனி யாரிடமும் சொல்ல முடியாது. நான் இதுவரை பெண்ணுடலை ஒருமுறை கூட அறிந்தவனில்லை. பெண் எனக்குத் தீராத மாயம் மீனா. திருவிழாக்களில் அவர்களின் எழிலை என் விழிகளால் உற்றுப் புணர்ந்திருக்கிறேன். எத்தனை வகையான பெண்கள். இளங் குருத்துகள் போன்ற நிறமுள்ள பெண்கள். ஆலயச் சிலைகளின் கருமை முற்றிய உடல்கள். தகதகக்கும் பொன்னேர் விழிகள். மயக்கும் யாழ்க்குரல் கொண்டவர்கள். சிம்மக் குரலில் ஏசுபவர்கள். குயிலின் கூவலென ஒருவரை இன்னொருவர் அழைப்பவர்கள். நாணும் போது செம்மை நாணும் வண்ணம் கொள்பவர்கள். அந்த உடல்களும் எழிற் கணங்களும் மின்மினிகளென என்னுள் எழுகின்றன மீனா. பிருஷ்டங்களில் கிடந்து துயில்கொள்வதாக எண்ணி தலையணையில் முகம் புதைத்திருக்கிறேன். கைகளைப் பற்றி ஆடுவதாக ஊஞ்சல்களில் விண்ணேறி மீண்டிருக்கிறேன். மலர்களை மணக்கும் பொழுதெல்லாம் ஒரு பெண்ணை முகர்வதெனவே எண்ணிக் கொண்டேன். பெண்களின் நறுமணம் அளவுக்கு போதையானது எது மீனா. திருவிழாக்களில் பரபரக்கும் அவர்கள் உடலிலிருந்து வழியும் வியர்வையைக் குடுவைகளில் ஏந்தி நறுமணத் தைலங்களாக விற்பனை செய்யப்போவதாக நண்பனொருவன் ஒருமுறை சொன்னான். என்ன ஒரு கற்பனையது. அவன் ஒரு கலைஞனாக வேண்டியவன். இன்று களத்தில் மாண்டு போய்விட்டான். அவன் என் விழிகளின் முன்னே காயம்பட்டு வீழ்ந்தான். நாரையின் அலகு போன்ற கூர்ந்த அம்பொன்று அவன் கழுத்தில் தைத்து மறுபுறம் வந்தது. அவன் இந்நேரம் உம்பர் உலகில் பெண்களின் வியர்வையைச் சேகரித்துக் கொண்டிருக்கக் கூடும். பெண் எனும் பித்தை அறியாமலும் ஒழியாமலும் மண் நீங்கப் போகிறேன் மீனா.
போர் ஒரு கொடுங் கிழவி. அவள் தன் நீள்நகங்கள் மின்னிடும் விரல்களால் நம்மை வசீகரிக்கிறாள். பின் நம்மைச் சமைத்து உண்கிறாள். அவளை நாம் கொல்ல வேண்டும் மீனா. தர்மங்களை விட வசீகரமானது போர். நீதிகளை விட நிச்சயமானதும் கூட. நான் ஏன் இறந்து கொண்டிருக்கிறேன் என்பதற்கு என்ன நியாயம் இருக்கிறது மீனா. சொல். ஏன் ஒரு சொல்லும் பகிர்கிறாய் இல்லை. மரணத்தைப் பற்றி உன் மருத்துவ நூல்கள் என்ன சொல்கின்றன. நான் இக்கணம் வரை அது எனக்கு நேருமென எண்ணவேயில்லை. ஆனால் அது நிகழ்கிறது. என் உடல் அந்தரத்தில் ஆடும் தோற்பாவையென நிற்கிறது. தீயிலை உருண்டையும் மதுவும் இருநூல்களால் எனது தோலைக் கட்டி வைத்து ஆட்டுகின்றன. சொல் மீனா”
என்று அவன் விழிகளை நேர்நோக்கித் தலையை உயர்த்தினான்.
மடியில் குருதியொழுக அவன் குழலை அழுத்திப் படியவைத்த சுடர் மீனன் தன் விரல்களிலிருந்த குருதியை நோக்கினான். அதைப் பார்த்தபடியே இருந்தவன் விக்கல் எழுவது போல் தொண்டை விம்மித் தணிய இடியவனைப் பார்த்தான். உறைந்திருந்த அவன் விழிகளில் நோக்கு அகன்றிருந்தது. குருதியின் வீச்சும் இடியவனின் குருதி முகமும் எழுந்து புரட்ட அவன் தலையை உதறிக் கீழே போட்டுவிட்டு எழுந்து ஓடி வனத்தை நோக்கி ஓங்காளித்தான். அடிவயிற்றிலிருந்து காற்று மட்டும் புரண்டு புரண்டு அமிலங்கள் சுரந்து பித்தத்தைக் கொட்டினான். கடுமஞ்சள் நிறத்தில் பித்தம் கொட்டியது. இன்னும் இன்னுமென வயிற்றை எக்கி ஓங்காளித்தான். பித்தம் நிணமென அவன் வாயிலிருந்து ஒழுகுவதாக எண்ணினான். உமிழ்நீர் வழிந்து உதட்டில் தூங்கியது. திரும்பி வந்து அனைத்து உடல்களையும் மரவுரிகளில் கட்டி அடுக்கச் சொன்னான். உதவுநர் குழு விலங்குகளை எடுத்து அடுக்குவது போல் எந்த உணர்ச்சியுமற்று உடல்களைப் பொதி செய்து தேர்களில் அடுக்கத் தொடங்கியது.
இடியவன் உடல்களில் ஒரு உடலாகத் தேரில் மறைந்தான்.
போர்க்களத்தின் விளிம்பில் நின்று களத்தை நோக்கினான் சுடர் மீனன். கரங்களிலும் உடலிலும் காயங்களுடன் உதிரர் தன் தேரில் சாய்ந்திருக்க வீரனொருவன் அவருக்கு மதுவை ஊற்றிக் கொண்டிருந்தான். இறந்த புரவிகள் களத்திலே உடலில் ஈக்கள் சுழல்களென எழுந்தமரக் கிடந்தன.
கோட்டை வாயிலால் புரவிகள் வேகமெடுப்பவை போல் வெளிவந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு வீரனாய் வெளியே வந்து உரக்கச் சிரித்தபடி பேய்க்களியாடினர். உடல்களில் முன்னில்லாத பேய்கள் குடிவந்தவர்கள் போல் குருதியை அள்ளிக் குடித்து அதில் போதை கண்டவர்கள் போல் நீத்தவர்களின் ஆவிகள் அவர்களில் எழுந்தவர்கள் போல் அவர்கள் குருதி தெறிக்கும் குழல்கள் சுழன்றாடக் கால்களால் விண்ணுக்கும் மண்ணுக்குமென எழுந்து ஆடினர். ஏழிசைக் கூத்தன் சுடர் மீனனின் அருகே வந்து “வென்று விட்டோமா, நண்பரே” என்றான். “ஓம் என நினைக்கிறேன். இன்று மிச்சமிருப்பவர்கள் உயிருடன் நாடு திரும்புவார்கள்” என உணர்ச்சியற்ற குரலில் சொன்னான். ஏழிசைக் கூத்தன் கால்கள் துள்ளியெழுந்தன. பறைகளும் முழவுகளும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின. வானில் சுற்றிய கழுகுகளும் வல்லூறுகளும் அகலத் தொடங்கின. நிழல் வட்டங்களாக மண்ணில் சுழன்றன. பின் கோட்டைக்கு அப்பால் சென்று மறைந்தன. சூரியன் தன் கொள்ளிகளலான வாயை அகலத் திறந்து மண்ணை விழுங்கிக் கொண்டிருந்தான்.
துரும்பரின் படை வீரர்கள் மண்ணில் உருண்டு குருதியூறிய புழுதியை மேனியில் பூசினர். குதித்தனர். வேல்களால் மண்ணறைந்து விழுந்து எழுந்தனர். நாக்குகளை வெளியே குறுவாளெனச் சுழற்றி மடித்தனர்.
சத்தகன் தன் மார்பைக் கைகளால் அறைந்து போரெழுந்த கொலை வெறியாட்டுப் பித்தன் போலாடினான். அகூஹ்க் என்ற பேரொலிகள் முழக்கமென எழுந்தது. கோட்டை வாயிலில் கருநிறப் பெரும் புரவியொன்றை இழுத்துக் கொண்டு வந்தான் எண்திசைத் தோளன்.
நீலழகன் தன் புரவியிலிருந்து இறங்கி உருகத்தை உயர்த்தி சுற்றிலும் நின்ற அறுநூறு வீரர்களுக்கும் மாகரமென நீண்ட வாளை உயர்த்திக் காட்டினான். வெறிக்கூச்சல்கள் எழுந்து உருகத்தில் பட்டுத் தெறித்தன. உதிரர் அக்களியாட்டை நோக்கிக் கொண்டு கதையொன்றைக் கையில் ஊன்றியபடி தேரில் எழுந்து நின்றார். பறைகளும் முழவுகளும் முரசுகளும் இன்னும் இன்னுமென எழுந்து பேரிசை எழுப்பின. துணியொன்றால் சுற்றப்பட்டிருந்த தேம்பவாவியின் தலையை வேலில் குத்தி நாட்டினான் ஒரு வீரன். தேம்பவாவி தன் வெற்று விழிகளால் களத்தை நோக்குகிறான் எனத் தோன்றியது சுடர் மீனனுக்கு. அதில் குடியிருந்த வெறுமையை அவன் நினைவில் கொண்டான். பின் அதுவொரு அச்சமெனவும் தீராத சினமெனவும் அவனுள் எழுந்தது. “ஒழிந்தான். கொடுங்கோலன். இரக்கமற்ற அசுத்தன். கொலைவெறிப் பித்தன். எண்ணற்றவர்களின் கண்ணீர்ப் பெருக்கில் வெறிக்கூத்து ஆடியவன். அழிந்தான். அவன் அழியவேண்டும்” என அவன் உளம் சில கணங்கள் தழலென மூண்டு பின் அணைந்து கொண்டது.
தன்னைச் சுற்றியெழுந்த பேய்க்களியாட்டின் ஒலிகளால் கரும்புரவி தன் உடல் திமிறி ஓட உந்தியது. சுற்றிலும் கொலை வாள்களால் சூழப்பட்டது போல அது தன் கால்களை எழுப்பியது. கனைத்துக் கதறியது. ஒரு மின்கணத்தில் உருகம் பேரொலியுடன் அதன் கழுத்தை அறுத்து விழுத்தியது. வெட்டுப்பட்ட வாழைத்தண்டிலிருந்து குருதி சீறுவது போல் புரவியின் கழுத்திலிருந்து இரத்தம் கருஞ்செம்மையுடன் பாய்ந்து கொண்டிருந்தது. அதில் தன் கைகளைக் கழுவினான் நீலழகன். பேய்க்களியாடியபடி அப்புரவியின் தலையைத் தூக்கி மார்பில் அணைத்து அதை வான் நோக்கி எறிந்தான் சத்தகன். அது சுழன்று சுழன்று விண்ணில் ஏறிப் பின் மண்ணில் தலையென விழுந்தது. புழுதி படர்ந்து அதன் கருந்தோல் மண்ணிறம் கொண்டது. “ஆடுக பேய்க்களி” எனத் துரும்பர் கூவினார். “களம் சீறிய ஒவ்வொரு துளி குருதிக்கும் இந்நாள் வெற்றியென்று போய்ச்சேரட்டும். கொடுங்கோலன் வீழ்ந்தான் என விண்சேர்ந்த நம் வீரர்கள் கேட்கட்டும். ஆடுக வெறியாட்டு. ஆடுக கால்கள். ஆடுக கரங்கள். ஆடுக புரவிகள். ஆடுக வேழங்கள். ஆடுக நீத்தோரே. ஆடுக விண் தெய்வங்களே. ஆடுக மண்ணாளும் நாகங்களே. ஆடுக இன்றையன்றி என்றும் எதுவும் நிச்சயமற்றது போல் ஆடுக. ஆடுக. ஆடுக புலிகளே. ஆடுக மைந்தரே” எனத் துரும்பர் இருகரங்களையும் வெறியால் அசைத்துக் குருதியை எறிந்து வீசி அதை எட்டுத்திக்கும் விசிறிப் பேயாட்டு ஆடினார்.
சுடர் மீனன் திரும்பி நீத்தவர்களின் உடல்கள் குவிக்கப்பட்டிருந்த தேர்களின் அருகில் வந்தான். இடியவனின் உடல் இருந்த தேரினருகில் வந்து அதில் தன் வலக்கரத்தை ஊன்றிக் கொண்டு இடியவனைத் தேடினான். அக்குவியலில் அவனைக் காண முடியவில்லை. இருநூறுக்கும் மேல் வீரர்கள் மடிந்திருந்தார்கள். கரங்களைத் தேரில் அறைந்து வெறிவந்தவன் போல் “நீங்கள் வென்று விட்டீர்கள் தோழர்களே. வென்று விட்டீர்கள். மண்ணிலிருந்து அந்தக் கொடியவன் பாதாளங்களுக்குத் திரும்பி விட்டான். அவன் இனி எழப்போவதில்லை. நம் குடி வென்றது. புலிக் கொடி வென்றது. உம் குருதி வென்றது” என அடித் தொண்டையிலிருந்து எழுந்த குருதிப் பிரவாகமென அவன் சொற்கள் அங்கிருந்த ஒவ்வொரு செவியையும் தொட்டன. அவர்கள் முகங்கள் புன்னகைப்பது போல் அவன் எண்ணிக் கொண்டான். பின் முழந்தாளிட்டு மண்ணில் வீழ்ந்து உடல் குலுங்கி அழத் தொடங்கினான்.
கொழுங்குருதி மாலை சூடியவர் வாழ்க
வெல்உறுதி உடல் பூண்டவர் வாழ்க
விண்மேல் எழுந்த புலிக்கொடி வாழ்க
கொல்வேல் வீரர்கள் துடிக்களி வாழ்க
புரவிகள் கொட்டிய கனைக்குரல் வாழ்க
வேழங்கள் விளித்த வெல்குரல் வாழ்க
சீறிய அம்புகள் சினங்கள் வாழ்க
கூரிய வாள்களின் கொடுவாய் வாழ்க
ஆடிய கால்களின் பேய்க்களி வாழ்க
ஓங்கிய முரசுகள் முழவுகள் வாழ்க
தேடிய விடுதலைப் பெருந்தீ வாழ்க
நாடிய மறவர்கள் மேன்மைகள் வாழ்க
நீத்தவர் விழியுறை கனவுகள் வாழ்க
காத்தவர் கரங்கள் ஒவ்வொன்றும் வாழ்க
கல்லில் எழுகின்ற அகலே வாழ்க
மண்ணில் துயில்கின்ற மறவோர் வாழ்க
பாடினி சூலிகை