30: முதற் பருவம் : அறிக

30: முதற் பருவம் : அறிக

புலரியின் முதற் புள் பாடத் தொடங்கி வனம் விழித்து சிறகுகள் கொண்டு பல்லாயிரம் பறவைகளின் குரல் நாண்கள் விடுபட்டு ஒலிப்பெருக்கனக் குழைந்தெழத் தொடங்கியது. காட்டு விலங்குகள் மானுட அதிர்வுகளை உய்த்து விலகிக் காட்டுக்குள்ளேயே அடங்கி ஓசையற்று அலைந்தன. நாகதேவியின் காவல் எல்லைகளை செப்புத்தகடுகளாலான காவல் முத்திரைகளைக் கொண்டு ஒவ்வொரு விலங்குக்குமெனக் காவலைப் பகிர்ந்தளித்தார் ஆடற் சித்தர். நாகதேவியின் கடைசி எல்லையில் இரு நாகங்கள் பின்னியிழையும் பொன்னாலான நாகபாட முத்திரைத் தகட்டை ஊன்றுவதற்கான மரத்தைத் தேர ஊழ்கத்தில் அமர்ந்தார். விழித்தவர் அருகிருந்த ஈராளுயரப் புற்றின் அருகில் அகலை ஏற்றி அங்கு நின்ற பூசாரிச் சிறுவனை அழைத்தார். கூடையிலிருந்த பதினெட்டு வகை மலர்களைப் புற்றின் முன் கவிழ்த்தார். “கண்களை மூடிக்கொண்டு ஒரு பூவை எடு மைந்தா” என்றார் சித்தர். அவன் விழிகளை மூடியபோது இளஞ் செம்மை இமையில் ஓடியது. மலர்ச் சிதறலில் விரல்களை அளையவிட்டு “இது” என எடுத்தான். ஆடற் சித்தர் மெல்லிய புன்னகையுடன் அவன் கையில் எடுத்திருந்த நாகலிங்கப் பூவை நோக்கினார். “ஈசனும் எழுந்து விட்டான். காவல் முற்றிற்று” என எண்ணினார். அருகே எங்கே நாகலிங்க மரம் இருக்கிறது என நோக்கி வரக் காவல் வீரர்களை அனுப்பினார். பின் எங்கோ உளப்பிலவில் மெல்லிய சீறலொலி கேட்டவர் போல் “இமை நாகத் தோட்டம்” என்றார். முதுபூசாரி வரைமுகிலர் “அது இங்கிருந்து அரைநாழிகை தூரத்தில் இருக்கிறது சித்தரே” என்றார். செல்வோம் எனக் கைகளால் சைகை காட்டியபடி முதுபூசாரியைத் தொடர்ந்தார். செல்லச் செல்ல இமை நாகத் தோட்டம் அறிந்தவரின் மனைவழியென மெல்ல நினைவில் எழுந்தது.

இமை நாகத் தோட்டம் ஆடற் சித்தரின் குடிவழியினரால் சிவனுக்கென ஆக்கப்பட்டது. இமை வடிவின் மேலிமையாக ஊன்றிச் சடைந்த பன்னிரு நாகலிங்க மரங்களும் அதன் கீழிமையாக நடப்பட்ட பன்னிரு வேப்ப மரங்களும் கண்ணின் மணியென சிறு வட்டக் குளமொன்றில் வைக்கப்பட்ட சிவலிங்கமும் கொண்டது அத்தோட்டம். வனத்தின் நடுவில் ஒரு விழியென உறைவது. இரண்டாவது நெடும்பருவ யுத்தத்தின் போது நீலழகனும் அவனது மெய்க்காவல் வீரர்களும் அத்தோட்டத்தில் ஏழு நாள் தங்கியிருந்தார்கள். சுற்றிலும் இன்கனி மரங்களும் சுனை நீரும் கொண்டது. பருவங்கள் உழன்று திரும்பிப் படுத்துக் கொள்ளும் போதும் ஏதோவொரு மரம் கனிதரும் வண்ணம் கணக்கிடப்பட்டு ஆக்கப்பட்டது. ஆடற் சித்தர் மனை நீங்கி ஆன்ம சாதனையின் வழியில் நுழைந்த முதல் ஆலயமென இமை நாகத் தோட்டமே உளத்தில் எழுந்தது. ஒரு பருவம் கனிகளை உண்டும் சுனை நீரையருந்தியும் தவமியற்றினார். அவரது சொற்கள் மெல்ல மெல்லக் கல்லமிழும் நீரென ஆகியது. மெளனம் மேல்நிரம்பியது. அந்த நிரம்பலை அவர் இப்போது என உணர்ந்தார். அன்றிருந்த பெரும் யோகி இன்று கொலை வாள்களின் உரசல்களும் குருதி மாலைகளும் சூடியவன். உயிர்களை அழிப்பவனின் குழவியெனத் தன்னைத் தானே சொற்களால் அமைத்துக் கொண்டு ஆடற் சித்தர் போரில் இணைந்து கொண்டிருந்தார். அவரின் அம்புகள் அவரின் ஊழ்கத்திலிருந்து எழுபவை. இலக்கை நோக்காமலே தம்முள் விழிகள் கொள்பவை. எத்தனையோ களங்களில் பெருவீரர்களின் அணியில் நின்று போர் தொடுத்திருக்கிறார். அழிவை அழிக்கும் அம்பென அவர் தன்னை நாணேற்றியிருந்தார். புராணங்களும் மகா காவியங்களும் அவரது நெறிகளை ஆக்கியளித்தன. அதன் ஒரு பாத்திரமென தன்னைப் பொருத்திக் கொண்டார்.

இன்று அவை நீண்ட தொலைவில் மின்னும் சிகர உச்சிகளென ஆகிவிட்டது. முடிவிலா இழப்புகளைக் கண்டு சொல்லற்று அவரது வில் மூன்றாம் பருவ நெடுயுத்தத்தில் தாழ்ந்தது. எண்திசைத் தோளனைக் கொல்லும் உத்தரவை நீலழகன் பிறப்பித்த போது ஆடற் சித்தரின் ஊழ்கக் குளத்தின் கற்கள் விசைகொண்டு உளம் திரும்பின. “இந்த மூடச் செயலை நிறுத்துக நீலா” எனச் சீறியுமிழ்ந்தார். இருகைகளையும் விரித்து “அவர் தன் பாதையை விலகிக் கொண்டார் தாத்தா. போர் ஒருமுனையில் திரண்டு தாக்கினாலேயே ஒழிய சிம்மங்களாலான அக்கொடுங் கூட்டத்தை எதிர் கொள்ள இயலாது. எண்திசைத் தோளன் தன் எல்லைகள் என்னவென்று நமக்குக் காட்டிவிட்டார். கிழக்கின் விசை மிக்க பெரும்படையும் அவரின் பிரிவுடன் நம்பிக்கை இழக்கும். அவர்கள் நமக்குள் சீழ்க்கட்டிகளென முளைப்பார்கள். வஞ்சம் கொடியது. விலகலின் பின் எழுன் வஞ்சம் படையை உள்ளிருந்தே அழிக்கும் கொல்கிருமி. அவரைக் கொல்வதே அதை மாற்ற ஒரே வழி” என உறுதியாகச் சொன்ன நீலனின் விழிகளை நோக்கினார் ஆடற் சித்தர். நீலனின் விழிகளில் என்றும் துலங்கும் ஆழம்பிடிபடாத இருள் அன்றும் நலுங்கியபடி இருந்தது.

“நீலா, தந்தையாக நின்று சொல்கிறேன். இது பேரழிவில் சென்று சேரும். அவன் எத்தகைய துரோகங்களைச் செய்வதாக நீ எண்ணுவதாக இருந்தாலும் உன் குடிவழியினனை உடன் நின்று சமராடிய பெருவீரனை கொல்வதென்பது எஞ்சுவோரைக் கடும் உளைச்சலில் ஆழ்த்தும். அவர்கள் உளத்தால் உன்னை நீங்குவார்கள். உன் வாள் பல்லாயிரம் வீரர்களின் மெய்மையால் கூர்கொண்டது. இம்முடிவால் அது தன் மெய்யான கவசத்தை இழக்கும். தோளனை அவன் திசையில் விலகிச் செல்ல அனுமதிப்பதே அறம். அவனுடன் பிரிந்து செல்ல விரும்புவோரையும் அவ்வண்ணமே அனுமதிக்க வேண்டும். அதுவே தர்மம்” என மனக் கலைந்த ஆடற் சித்தர் உறுமியபடி சொன்னார்.

நீலன் தன் விழிகளை அவரை நோக்காது திரும்பி ஆழிக்கரையை நோக்கின. அதில் ஆயிரமாயிரம் சிறு மடிப்புகளென அலைகள் மடிந்து எழுந்தன. மீண்டும் வந்தன. “தாத்தா, நாம் சொல்லக் கூடிய நல்லவற்றைக் கேட்கும் நிலையில் எண்திசைத் தோளன் இல்லை. அவன் போரால் உளம் கலைந்திருக்கிறான். போரிடும் எண்ணத்தை முற்றழிந்து விட்டான். சிங்கைக்குக் கப்பம் கட்டி வாழ்ந்து கொண்டு எஞ்சியோரைக் காத்துக் கொள்வோமென எண்ணுகிறான். இதை ஏற்கெனவே செய்திருக்கலாகாதா. ஏன் இத்தனை உயிர்களை ஈடாய்க் கொடுத்த பின் தான் அதை உணர்கிறானா. நாம் முன்னரும் நம் படையினரையும் எதிர்க்குழுக்களென உருவானவர்களையும் கொன்றிருக்கிறோம். குருதி குருதியாலேயே கழுவப்படுவது. சிறு காயங்கள் பெருங் காயங்களால் ஆற்றப்படுவது போல.

நான் எடுத்துக் கொண்ட நிலையில் இருந்து மாறுபவனல்ல தாத்தா. இது என் போர். நான் வாழும் காலத்தில் நாடு காண்போம். இல்லையேல் என் மரணத்தின் பிறகு நம் குடிவழியினர் அதை அடையட்டும். அதுவரை நமது போராட்டம் முடியப் போவதில்லை. அதற்கு எது சரியோ அதை நான் செய்வேன். வாழ்வின் அறம் வேறு. போரின் அறம் வேறு” என பிடிவாதமான அவன் குரலைக் கேட்ட சித்தர் அது எப்பொழுதும் அவனுள் வாழும் ஒன்று என உணர்ந்தார். அதுவே அவனை அவனென ஆக்கியது. ஒரு எளிய பரதவச் சிறுவனை மாபெரும் படைக்கலன்களின் முதன்மை வீரனாக்கியது. குடிகளை ஒருங்கிணைத்தது. அவனிடம் குடிகொண்ட வற்றாத உறுதியும் குலையாத பற்றுமே அவனை நேர்நோக்க அஞ்சும் விழிகள் கொண்டவனாக்கியது.

புண்ணை மொய்க்கும் ஈக்களை என
அவ்வெண்ணங்களை தன் உளத்திலிருந்து எந்நேரமும் விரட்டியபடியிருப்பார் ஆடற் சித்தர். இமை நாகத் தோட்டம் பலநூறு புதுமரங்களினாலும் செடிகளினாலும் புதர் மண்டியிருந்தது. அதில் நுழைந்த கணமே அது தன் உள்ளமென எப்போதும் தோன்றுவது என எண்ணினார். அவருடன் வந்திருந்த காவலர்கள் முப்பது பேரையும் அழைத்தார். கண்மணியைச் சுத்தம் செய்து குளத்தைப் புதர் நீக்கச் சொன்னார். பூசாரிகள் குழுவை சிவலிங்கத்தை நீராட்டி நீறிடச் சொன்னார். அவர்கள் அனைவரும் பரபரவென தேனிக்களின் ஒத்திசைவுடன் கண்மணிக்குள் நுழைவதும் வெறியுவதுமென வியர்வை வழிந்தோட இயங்கிக் கொண்டிருந்தனர். ஆடற் சித்தர் நீண்டு தொலைவு வரை வளர்ந்து கிளைகளைக் கரங்களென நூறுநூறாக்கி ஏந்தி நின்ற நாகலிங்க மரத்தடியில் சென்று ஊழ்கத்தில் அமர்ந்தார். விழி மணிகளின் அலைச்சல் இமையில் குமிழென துருத்தி நீந்தியது.

*

பட்டினம் லட்சக்கணக்கான குடிகளால் பேராழிக் கொந்தளிப்பென அலைந்தெழுந்தது. நாகதேவி ஆலயத்தின் உட்பிரகாரங்களும் சுற்றமும் பாதாள நாகங்களின் குவியலென ஒருகணம் மூச்சு விடவும் வான் நோக்குமளவு குடித்திரளில் வியர்வை சிந்தின. குடிகள் பூசியிருந்த வாசனைத் தைலங்களால் எழுந்த மயக்கு மணங்கள் கல்லரவுகளை அசைத்து உயிரளிப்பன போல் பரவிக் கொண்டிருந்தன. கோடிகோடி மலர்களின் சாற்றைப் பூசிய உடல்கள். சந்தன மரக்காடு பற்றியெரிந்து மணம் சடைப்பது போன்றவை. தீயிலைக் காடுகள் தீபற்றிப் புகைந்து மயக்காடும் வாசனைகள் எழுபவை போன்றவை. நீறும் சந்தனமும் குங்குமமும் பன்னீரும் வியர்வைகளும் குழைந்துருகும் மேனிகள். ஒன்றையொன்று உரசுகையில் எழும் குமைவின் ஒலிகள். திருவிழாவின் முதற் பாடல்களை ஒலித்திசைத்தபடி இசைக் குழுக்களும் பக்தர்களும் கூட்டங் கூட்டமாகப் பெருவீதியால் நடந்து கொண்டிருந்தனர். பட்டினம் விழவுக் கோலம் பூண்டது. தாகநீர்ப் பந்தல்கள் தென்னோலைகளாலும் பனையோலைகளாலும் கூரையிடப்பட்டு பெருங் கலயங்களில் மோரும் இளநீரும் பதநீரும் கரும்புச் சாறும் குடிகளுக்கு அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. மூங்கில் குவளைகள் குடியெண்ணிக்கைப் பெருக்கின் முன் தாளமல் கழுவுநீர்க்கலயங்கள் நாழிகைக்கு மும்முறை நீர் மாற்றப்பட்டன. யானைகள் கரும்பு பிழியும் சக்கரங்களை துதிக்கைகளால் உருட்டியபடி துதிவலியால் தவித்தன. பாகர்கள் வேழங்களைத் தடவி ஆறுதல் வார்த்தைகள் சொல்லியபடி நின்றனர். சீவப்பட்ட இளநீர்க்கோதுகள் நூற்றுக்கணக்கான வண்டில்களில் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.

மனைகளிலிருந்து நறும்புகை வாசனைகள் எழுந்தன. குழவிகள் மின்னிடும் புதிய குழைகளும் புத்தாடைகளும் அணிந்து மண்ணிறங்கிய வானவர்கள் என நெளிப்புக் காட்டிச் சிரித்தன. விழவின் புன்னகையென ஒவ்வொன்றையும் ஆச்சரியத்துடன் நோக்கின. அழகால் இமையுயர்த்தி “எனக்குத் தா” “எனக்குத் தா” எனக் காண்பவை எல்லாவற்றையும் கேட்டன. தந்தைகளின் தோள்களில் அமர்ந்து யானைகளுக்கு உணவூட்டின. புரவிகளில் முன்னமர்ந்து “செல். செல்” என ஆணையிட்டன. குடித்திரளில் இறுகிய கால்களை அசைக்க முடியாமல் குதிரைகள் கற்சிலைகளென அமைந்திருந்தன. களி விளையாட்டுத் திடல்களில் சென்று சாரையோட்டம் ஓடின. பாலருந்தும் போட்டியில் வாய்வழியப் பால்சிந்தி ஊற்றி பால்வண்ண மேனியுடன் எழுந்து நின்று வென்று விட்டேனென அன்னைகளை நோக்கிக் கலயங்களை எறிந்து உடைத்தன. முதுகிழவர்களின் வெண்தாடிகளில் ஊஞ்சலாடின. முதுபெண்டிர் முலைகளில் பாலருந்த வாய்வைத்தபடி துயில்வது போல் நடித்தன. இளம் தாய்கள் இவர்களைப் பார்த்துக் கொள்ளுங்கள் எனத் தந்தைகளின் கையிலும் இடையிலும் மகவுகளைப் போட்டு விட்டு விழவுக் களியில் மூழ்கினர். குழவிகள் தந்தைகளைப் புரவிகளாக்கி “செல். செல்” எனத் தோளில் இருபுறமும் கால்போட்டபடி ஆணையிட்டன. நெஞ்சில் உதைந்தன. தந்தைகள் புரவிகளாகவும் வேழங்களாகவும் தெப்பங்களாகவும் கடற்கலன்களாவும் உருமாறி உருமாறி குடித்திரளில் அலைபட்டனர்.

இளம் தாய்கள் புது அணிகளை வாணிபத் தலங்களில் வாங்கியபடியும் நகையாடிக்கொண்டும் மணமாகாத பெண்களுக்கு வாழ்க்கை தொடர்பில் தத்துவங்களைக் கைநிறைய அள்ளி வீசியபடியும் அலைந்தனர். அவர்களை வாலிபர்கள் நோக்கிக் குறும்பு புரிந்தால் “எனக்கு இன்னும் மணமாகவில்லை கண்ணா. ஒரேயொரு கொழுநன் மட்டும் மனையிலிருக்கிறான். நீயும் அவனுடன் அடுமனை புகுவாயா” எனக் கேலி பேசினர். வாலிபர்கள் அரவம் புகுந்த காளைப்பட்டியென அவர்களிடமிருந்து ஓடினர். காளை பிடிக்கும் கயிறுகளென அவர்கள் சொற்களால் வாலிபர்களை விரட்டிக் கொண்டோடினர். இளம் தாய்களை நோக்கி முதுகிழவர்கள் “நான் வேண்டுமென்றால் திண்ணையில் துணைவனாக இருக்கிறேன், இளங்கரும்பே” என சொல்லாடினால் “ஆஹ், திண்ணையில் இருக்கும் தூண்கள் போதாதா கிழவனே. நீ அங்கு வந்து சேர்வதற்குள் உன் ஆவி வாடிவிடும். மிச்ச ஆவி என் கைபட்டதுமே பிரிந்து விடும். போ. போய் குழவிகளுடன் விளையாடு” என சொற்போர் புரிவார்கள். “உன் கைபட்டதும் என்னிடமிருந்து பிரியப்போவது ஆவியல்ல பதநீரே. அது வேறு” என முதுமையின் சொற்போர் வித்தைகளை அள்ளியிறைப்பார்கள் கிழவர்கள். “வா. பார்க்கலாம். ஒரு இரவு உயிர் வாழ்ந்து விட்டாயென்றால் நான் உனக்கு அடிமை. என்ன சொல்கிறாய் வெற்றனே” எனக் கூவுவார்கள் இளம் தாய்கள். இளம் பெண்களை நோக்கி “இந்தக் கலையை நீங்கள் கற்றறிய வேண்டும் மங்கைகளே. இது போன்ற தடியர்களுக்கெதிராக நீங்கள் சொற்சிலம்பம் ஆடக் கற்றுக் கொள்ள வேண்டும். அமைதியாக நாணினீர்கள் என்றால் இருளில் இருளாக வந்து உங்களை அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள். முதுமையின் காமம் ஊற்றற்றது. ஆனால் விசை கூடியது. நாணேற்றும் முதுவிரல்களின் நடனமென உங்களை மயக்கி விடுவார்கள் காமுகர்கள்” என வாழ்வின் நுட்பங்கள் விளக்கிச் செல்வார்கள் இளம் தாய்கள்.

வாலிபர்கள் பெண்கள் குமிந்திருக்கும் இடங்களில் நின்று வேடிக்கைப் பேச்சுகளை நிகழ்த்திக்கொண்டு தொண்டைகள் வற்ற “யாரேனும் இன்னீர் தருவீர்களா அன்பிகளே. ஒருசொட்டு. ஒரு துளி நா விழுந்தால் கூட உயிர் பிழைப்பேன்” என நகையாடுவார்கள். “என்னிடம் இன்னும் முலைப்பால் சுரக்கவில்லை அன்பனே. வேண்டுமானால் எச்சில் உமிழ்கிறேன். தாகம் தீர்த்துக் கொள்” என மறு கூவல் புரிவார்கள். “ஆஹ் உமிழ் நீரா. அது தீர்த்தமல்லவா. கரும்பும் பதநீரும் கலந்த சுவையல்லவா. நீ தருகிறாயா நானே கலயத்தில் வாய் வைத்து எடுக்கட்டுமா” என ஒவ்வொரு கோணத்திலும் தாக்குவார்கள். “உனக்குரிய கலய வாயிலில் உமிழ் நீர் சுரக்கவில்லை மந்தனே” என கூர்நகையாள்கள் அவர்கள் தாக்குதலை அந்தரத்திலேயே எதிர்கொண்டு முறிப்பார்கள். “ஆஹ் அந்தக் கலயம் தாகம் தீர்ப்பதற்கல்ல மந்தமோகினி. அங்கு சுரப்பது உயிர் விடாய் அமுதம். அருந்த உதடுகள் மட்டும் போதாது. நாக்கின் உதவியும் வேண்டும்” எனச் சோகமாச் சொல்லி நடித்து மேலும் பலம் கொண்ட கணைகளுடன் எழுவர் இளையோர்.

அயல் தேசங்களிலிருந்து வந்த குடிகள் சத்திர வாயில்களில் நின்று பட்டினக் குடிகளின் சொல்லாடல்கள் கேட்டு நகைத்தும் திரும்பச் சொல்லாடியும் சொல்லாடல்களில் சிறு சொற்கள் பேசியும் இணைந்து கொண்டிருந்தார்கள். அப்பெருவிழாவை விழித்துக்
கொண்டு நற்கனவில் வாழ்பவனைப் போல் சத்திரத் திண்ணையில் அமர்ந்தபடி நோக்கியிருந்தான் இளம் பாணன். யாழ்களும் குழல்களும் அரவுகளென எங்கெங்கிருந்து எழுந்தன என அறியாது காற்றில் முயங்கின. ஒரு நாதத்திற்கு எதிர் நாதமெனக் காற்றிலே கலவி கொண்டன. செவியில் பாகு நழுவும் போதையில் விழிகளை மூடிக் கொண்டான். வேறுகாடார் அவனருகில் அமர்ந்து அவன் தோளைத் தொட்டார். “என்ன மயக்கு எழுந்து விட்டதா இளம் பாணனே” எனச் சிரித்து உதடு விரித்தார். “இது மண்மேல் நிகழ்ந்த விண்ணுலகு கிழவரே. ஒவ்வொரு மேனியும் அழகில் ததும்பும் களியாறு. ஒவ்வொரு கணமும் இன்பமன்றிப் பிறிதொன்றில்லாத குடிகள்” என வாய் அள்ளூறச் சொற்களை எச்சில் தெறிக்கக் கூவினான். அவன் உடல் மெல்ல விதிர்ப்புடன் மெய்ப்புல்கள் எழுந்ததை நோக்கிய பின் “சொற்களை பத்திரப்படுத்துக கவிஞா. இன்னும் முதல் காலை முழுதாய் விடியவில்லை. மூநாள் முடிவில் சொல்லின்றி ஊழ்கத்திலமர்ந்து விண்ணேகி விடுவாய் போலிருக்கிறது” என அவன் தொடைகளில் அடித்துச் சிரித்தார். இளம் பாணனின் அகம் தேனருவியின் அடியில் வாய் மட்டுமே ஆனவெனெனத் தன்னை எண்ணச் செய்தது.

வேறுகாடாரின் சிரிப்பில் ஒரு பிசிறென முகம் சற்று வளைந்தது. “அறிக இளம் பாணனே. இவ்வளவு மயக்கு இக்குடிகளுக்குத் தேவை. அவ்வளவு குருதியும் கண்ணீரும் சிந்திய குடி. அதை மறக்கவே இத்தனை மயக்குகளும். அவர்கள் அவர்களைப் புனைந்து கொள்கிறார்கள். வேறு யாரோவென ஆடிக் களிக்கிறார்கள். ஓருடலில் இருந்து ஓராயிரம் உடல்களெனக் கூடு பாய்ந்து வாழ எழுகிறார்கள். நெடிய யுத்தங்களும் கடும் இழப்புகளும் அவர்கள் சித்தத்தை அறைந்து அறைந்து மோதுகிறது. ஒரு கணம் இன்பமென விழையும் ஒன்று ஒவ்வொருவருக்குள்ளும் அமைகிறது. அதன் பொருட்டே இந்தக் களியாட்டு. இங்கு நீ காணப் போவது அவர்களின் பித்தின் உச்ச கணங்களை” எனச் சொல்லி புன்னகை மீண்டும் விரிய “கவிஞர்கள் உச்ச கணங்களை விழையும் அற்பர்கள் என அறிவேன். உனக்கு இது வாழ்நாள் உச்சம் இளம் பாணனே. அவ்வுச்சங்களில் ஒன்றிலிருந்து ஒன்றென மலைகளைக் கடக்கும் பெருமந்தியென ஆகுக. அதன் வழி உன் எல்லைகளை அறி. நீ கற்ற சொற்களை மற. இங்கு இக்கணம் திகழ்வது மானுடம் ஒவ்வொரு கணமும் பற்றியேறத் துடிக்கும் பேருச்சத்தின் சில நாழிகைகள் என்பதை மறவாதே. களி முடிந்ததும் கடல் திரும்பும் ஆமைக் குஞ்சுகளென இவர்கள் வாழ்வில் மூழ்கிவிடுவார்கள். துயர்களைச் சூடிக் கொள்வார்கள். வஞ்சங்களை அணிந்து கொள்வார்கள். உச்சங்களை விழையும் அதே உளத்தின் தலைகீழ் உச்சம் கீழ்மைகளால் தாங்கப்படுவது. இக்கணங்களே அவர்கள் பற்ற விழைவதென்பதும் அடுத்த கணங்களே அவர்களே சரிந்து துயில விரும்புவதுமான துக்க வெளிகளால் இழைக்கப்பட்டவர்கள்” என்றார் வேறுகாடார். கனவில் ஒலிப்பதனெ அச்சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்த இளம் பாணன் “கிழவரே, உங்களது செயல்களில் சிறுமைகளையும் சொற்களில் மெய்மைகளையும் எப்படி அறிகிறீர்கள் என வியக்கிறேன்” என அசைவற்ற முகத்துடன் வியப்பின் சொற்களைப் பரிமாறினான்.

“இளம் பாணனே அறிக. கீழ்மைகளின் வேரிலிருக்கும் துவர்ப்பும் கசப்புமே கிளைகளில் கனிகளும் மலர்களாகவும் ஆகின்றன என்பது முதுகூற்று. அதன் மெய்மை என்னைப் போன்ற ஒரு இழிமகனால் தான் அடையப்பட்டிருக்கும். இங்குள்ள எல்லோரும் இழிமக்களே. அதை அவர்கள் ஒவ்வொரு பாவனைகளாலும் மூடிக்கொண்டிருக்கிறார்கள். அறத்தால். நியாயத்தால். தருக்கத்தால். சொற்களால். ஆனால் மெய்மை ஆடையற்றது. கவசங்களற்றது. அக்கணம் களங்கமின்மையின் குழவியுடல் என நெளியக் கூடியது. அதற்கு நீ இறந்து மீளக் கருப்பை தாவும் உளவலுக் கொண்டிருக்க வேண்டும். உடல் பலமென்பது வேழங்களிடமும் சிறுத்தைகளினதும் முன் ஒன்றுமின்மை என ஆகக் கூடியது. எல்லை கொண்டது. ஆனால் உளம் கால அகாலங்களை அள்ளித் துழாவும் ஆயிரம் கரங்கள் கொண்டது. நீ கற்பனையில் நிகழ்த்தும் ஒன்றை மெய்யால் தீண்டவே முடியாது. மெய் காட்டும் ஒன்றை உன் கற்பனைகளால் சென்றடையவும் முடியாது. இந்த இருமை கடக்கும் நிலையில் ஒருமை கூடுபவர்கள் ஞானிகளென்றாகுவர். ஆனால் அது பல்லாயிரத்தில் ஒருவருக்கு வாய்ப்பது. நான் இச்சையின் விசைகளால் அலைக்கழியும் ஒரு நாகம் மட்டுமே. இச்சைகள் எல்லையற்ற வகையில் உருமாறும் வேடதாரிகள். ஒன்றை இன்னொன்று மறுத்து வாழும் குடிகளைப் போல” எனச் சொல்லிக் கொண்டே அவர் சுபாவம் போல ஒரு கிளையிலிருந்து இன்னொரு பெருங்கிளைக்குத் தாவியமர்ந்தார் வேறுகாடார்.

“குடிகள் என்பவர்கள் பெருமடமையின் திரள்” என்றார் வேறுகாடார். இளம் பாணன் விழிகளைத் தூக்கி நிரை நிரையாய்க் குலைந்தும் இணைந்தும் அக்குமியலில் சிற்றிணைவுக
ளெனவும் ஆகி நடக்கும் குடிகளை நோக்கினான். “பெரு மடமையிலிருந்தே பேரறங்கள் நிலைக்கின்றன. சிறு துளி மடமை உன்னிடம் இல்லையென்றால் கூட உன்னால் அறத்தைப் பேண முடியாது. குடிகளிடம் திரளும் மடமையின்றி அவர்களால் பேரறங்களை அவ்வளவு பற்றுறுதியுடன் பின்பற்றவும் முடியாது. நுண்ணுளம் கொண்டவர்கள் உடல்களைத் தாங்கும் தகிக்கும் அம்புப்படுக்கையென அறங்கள் ஆவதும் அவ்வாறே. இந்த எளிய அறங்கள் இவர்களைக் காக்கும் பொருட்டே ஆக்கப்பட்டன. குடிகளால் அதுவரை தாம் அறிந்து பற்றும் அறங்களை மீற இயலாது. மீறி முளைத்து அதைச் சோதித்து இன்னொறாய் ஆக்குவது தன்னைத் தானே அழிக்கும் களம். அது காவியத்தால் விவாதிக்கப்படும் உளம்.

நூற்றாண்டுகளின் பின் அதுவும் இன்னொரு எளிய அறமென மண்ணில் தழைத்திருக்கும். அங்கொருவர் அதை மேலும் தழைக்கத் தன்னை அழித்தாக வேண்டும். மானுடத்தின் முன் தன்னைத் தற்கொடையென அளிக்கும் வெறியாட்டில் அவர் முன்னின்று சங்கறுத்து விழ வேண்டும். அதுவே அறங்களை உருவாக்கும் குருதி. இம்மண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போரில் அறங்கள் ஒன்றையொன்று கண்டு புன்னகைத்துக் கொண்டன. ஒன்றை இன்னொன்று அஞ்சி ஓடியது. ஒன்றை இன்னொன்று கொன்று குருதி குடித்தது. ஒன்றை மற்றொன்று வெல்ல விழைந்தது. முடிவிலாத அறங்களின் போரே மண்ணில் வற்றாது பெருகும் குருதியின் விசை. எண்ணும் தோறும் சரியெனவும் எண்ணாக் கணத்தில் முற்றும் தவறெனவும் ஆகக் கூடிய ஒன்று போர் மட்டும் தான். பிற எல்லாவும் மாற்றறிந்து மீளக் கூடியவை. போர் அழிப்பது அதுவரை எஞ்சியிருந்த எல்லா அறங்களிலும் சொட்டிக் கொண்டிருக்கும் மிச்ச நிணத்தை. போர் ஆக்குவது அதுவரை சென்று சேரமுடியாமல் தவித்த மாபெரும் கூட்டு அறங்களின் தொகுப்பை. கணமும் பொழியும் அம்புப் பெருக்கென ஒவ்வொரு கேள்வியும் குடிகளை அறைந்து வீழ்த்தும். பின் உயிரும் அளிக்கும். காக்கும். எக்கணத்தில் அது அவரையே எதிரியென்றாக்கித் திரும்பும் என அக்கணமே முடிவும் செய்யும். இம்மண்ணில் நிகழும் போர் அதன் முழுவிசையுடனும் ஆற்றலுடனும் தன்னை ஒன்றென ஆக்கி முன்னகர்ந்தது. இன்று அது தன்னை அழித்துத் தன்னை அறியும் அழிகளத்தின் நுழைவாயிலில் நிற்கிறது. குடிகள் எல்லாவற்றையும் மறக்க நினைக்கிறார்கள். நினைவும் கூர்கிறார்கள். தாம் சொல்ல விரும்பும் பாடல்களின் வரிகளென நினைவை ஆக்கிக் கொள்ள ஓயாது முயல்கிறார்கள். யாரையேனும் இதற்கெல்லாம் பொறுப்பாளியென விரல்சுட்ட எழுகிறார்கள். இழிமக்கள், எழுந்த ஒவ்வொரு அம்பிலும் விசையென நிகழ்ந்தது இவர்களின் கொடுஞ்சினமே. வீழ்ந்த ஒவ்வொரு இளையவரின் முகத்திலும் ஒளிர்விட்டது இவர்கள் ஆக்கியளித்து உருவேற்றிய கனவுகளே. தன்னைத் தான் அறுக்கும் வாளையன்றிப் பிற எல்லாக் கலங்களும் சூடிய பெரும் போர்வெறியர்கள் இவர்கள்” எனச் சொல்லியபின் சீற்றம் மென் தாளத்தில் முரசு திரும்பும் மெளனத்திற்கு மீண்டார் வேறுகாடார்.

மன்றுச் சதுக்கத்தின் மேலே தொய்விலாது காற்றில் நீண்டு விரிந்த புலிக்கொடியை நோக்கினான் இளம் பாணன். பின்” என்ன நடந்தது கிழவரே. அறிந்ததைக் கூறும். இவர்கள் யார். இவர்கள் ஆற்றியது என்ன. இழந்தது என்ன. இங்கு கொழிப்பது எது. என் விழிகளில் எதுவும் துலங்கவில்லை. துளையாள ஊற்றில் நலுங்கும் நீரென ஒரு சிறு ஒலி மட்டுமே கேட்கிறது. இக்களிப்பின் பின் ஒலிக்கும் ஓலநெடுங்காதத்தை ஓதுக” என்றான்.

“அதை நீ சொற்களால் அறிவது இயலாது இளம் பாணனே. இங்கு உன் முன் களியென நிகழ்வதும் ஒரு போரே. அதை உன் நுண்விழிகளால் நோக்கு. ஒவ்வொரு உடலிலிருந்தும் அப்போர் ஓராயிரம் கொல்வீச்சுடன் எழுகிறது. நான் காண்பது அதையே. கதையை விடக் காட்சியே நுண்மையானது. தத்துவங்களை விட மெய்மை எளிதானது போல அவை உன்முன் காணத்திறந்திருக்கின்றன.
இதுவோர் களிப்போர் என அறிக. போரின்றி மானுடம் கற்கும் நீண்ட கல்விச்சாலை மண்ணில் என்றும் நிகழாதென்பதை உணர்வாய்” என சொல் முற்றினார் வேறுகாடார். சொல்கலைந்த கணம் வேறொருவராய் ஆனார். “இன்று மாலை சிற்பனின் ஆடலிருக்கிறது பாணனே. அதில் ஓருடலில் எழும் போரின் கொல்விழைவின் பேருச்சங்களைக் காண்பாய். அவனில் அந்த ஆடலிறையே வந்து பேய்க்களியாடுவதாகக் குடிகள் சொல்லுவர். அதில் மெய்யும் இருக்கிறது. நாம் அதைக் காண்போம். உடலை விளங்கிக் கொள்பவனே புடவியை அறிகிறான் பாணனே. மெய்யே புடவியென்று அறிக”.

TAGS
Share This