31: உலகளந்தோன்

31: உலகளந்தோன்

நாகலிங்கப் பூ மரத்திலிருந்து ஒரு மலர் காற்றில் அசைந்து அசைந்து மகவைத் தொடும் அன்னையின் கரமென ஆடற் சித்தரின் வெண்குழலை வருடிக் கொண்டிருந்தது. அகலை நோக்கும் விழியென அப்பூவின் சந்தம் ஆடற் சித்தரை ஊழ்கத்தில் மேலும் மேலுமென கூர்க்கச் செய்தது. இமைகளுக்குள் காலம் ஏழு மடிப்புகள் கொண்ட கடலெனத் தோன்றியது. பின் பதின்னான்கு மடிப்புகள் கொண்ட நீளரவு. பின் ஒவ்வொன்றும் ஏழாலான வடிவங்களின் உயிர்களின் மடிப்புகளென உருவாகிக் கொண்டிருந்தது. அவற்றின் குலைந்த மடிப்புகளுக்கிடையில் அகாலனின் விழி இமை நாகத் தோட்டமென விரிந்திருந்தது. ஊழ்கத்திலிருந்த அகாலனின் நுதல்விழி ஒரு மலர் வளைவெனத் தோன்றியது. உற்று உற்று நோக்க நோக்க அது இமை நாக வளைவென நெருங்கி வந்தது.

*

புதர்களை நீக்கிக் கொண்டிருந்த வீரர்களில் நின்ற திரிபதங்கன் குழலனுடனும் செவ்விழியனுடனும் சிரித்துக் கதைத்தபடி உற்சாகமாக இருந்தான். குழலன் நீண்ட பற்றைக் காடுகளை வெட்டி அப்புறப்படுத்தி அவற்றை ஒன்றாய்க் குவித்தான். செவ்விழியன் சடைத்த சிறுமரங்களை வேருடன் வெட்டினான். திரிபதங்கன் குளத்திலிறங்கி மண்டிய பாசிகளையும் நீரிலூறிய சருகிலைகளையும் கிளைகளையும் அள்ளி வெளியே போட்டபடியிருந்தான்.
திரிபதங்கன் “குழலா, இன்று திருவிழாவில் உனக்கொரு சோடியைப் பிடித்து விடுவாயல்லவா” என சிரித்தான். அவனது குறும்பு வாய் இழைந்து கோணி சிரித்தது. “டேய் பதங்கா, நீ வாய் வைக்காதே. இப்படித் தான் செவ்விழியனின் காதலுக்கு வாழ்த்துச் சொன்னாய். அடுத்த திருவிழாவிலே மணமுடிப்பு நடந்தது. ஆனால் அப்பெண்ணுக்கு வேறொருவனுடன். இப்போது வேருடன் மரங்களைப் பெயர்த்தபடியிருக்கிறார் வீரன்” என செவ்விழியனை நோக்கிக் கைகாட்டிச் சிரித்தான் குழலன். “வாயை மூடுங்கள் வெற்றர்களே. உங்கள் நாவுகளில் எழுவது சாபங்கள் மட்டுமே. அவள் என்னை விட்டுப் போனதற்குக் காரணமே நான் பதங்கனின் நண்பன் என்பது தான். அவனுடன் உனது உறவு எப்படி என்று கேட்டுத் தான். நான் எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவில்லை. போய்விட்டாள். அழகி. ஆனால் போன திருவிழாவில் அவளைப் பார்த்தேன். அவள் கணவன் குழலனுக்குப் பார்க்கும் பெண்போல இருந்தான். நெஞ்சில் ஒரு சிட்டிகை இனிமையை யாரோ ஊற்றியது போலிருந்தது. அவளை நோக்கினேன். என்னைப் பார்க்காதவள் போல் முகத்தை வேறெங்கோ வைத்தபடி போனாள். அப்போது இனிக்கும் கலயம் உடைந்து ஊற்றியது போல் உவகை முட்டியது” என வாயில் உமிழ் நீர் தெறிக்கச் சொன்னான்.

“நீ எனது நண்பன் என்பதற்காக எனது காதலன்களும் கோபித்துக் கொள்ளக் கூடும் விழியா. ஆனால் நீயொரு பெண் பித்தன் என்பது எங்களுக்குத் தானே தெரியும்” எனச் சொல்லி பாசியை செவ்விழியனை நோக்கி வீசினான் திரிபதங்கன். “இன்று அந்தியில் சிற்பனின் ஆடலைப் பார்க்க வருகிறாய் அல்லவா. அவனிலும் உனக்கொரு கண்ணில்லையா பதங்கா” எனக் குழலன் கண்ணைச் சிமிட்டியபடி கேட்டான். “ஓம். அழகன். ஆடலன். உணர்ச்சிகள் கொண்டவன். அவனை யாருக்குத் தான் பிடிக்காது” என நகைத்தான் திரிபதங்கன். பின் “ஆனால் எனக்கு இன்று காவல் பணி இருக்கிறதே. யாரையாவது மாற்றலுக்கு நிற்கச் சொல்லித் தான் ஆடல் பார்க்க வேண்டும்” எனச் சிந்தையுள் மூழ்கினான். “அலவனைக் கேள்” என செவ்விழியன் கேலி செய்தான். அவனை சினத்துடன் நோக்கியபின் ஒரு கைநிறையக் குளத்தின் கருஞ் சேற்றை அள்ளி செவ்விழியனை நோக்கி வீசினான்.

*

உலகளந்தோன் யவன சர்க்கரீஸ் குழுவின் நெடிய பனையளவுக் கூடாரக் கூம்பை நோக்கி நின்றான். சுற்றிலும் வண்ணத் துணிகளால் பட்டும் பொன்னும் இழைக்கப்பட்ட கடல் போல் விரிந்த துணிகள். வாயைப் பலாப்பழம் போல் பிளந்த படி நோக்கியிருந்தான் உலகளந்தோன். கூடார முகப்பில் லீலியாவின் பெருந்தோற்றமும் அவளைச் சுற்றி கரடி புலி யானை மீன்கள் கிளிகள் ஆவிகள் என பலநூறு உயிரினங்கள் ஓவியங்களாக வரையப்பட்டிருந்தன. அவன் லீலியாவின் பெருந்தோற்ற ஓவியத்தை நோக்கி அச்சம் மேலிட நெற்றியில் சில வியர்வைத் துளிகள் அரும்பின.

உலகளந்தோனின் இயற்பெயர் இனியவன். இளம் வயதில் புலிப்படையில் சேர்ந்தான். தற்போது நடுவயது கடந்து நாற்பதாகி விட்டது. ஆனாலும் இளமை மாறாத குணம் கொண்டவன். போர்க்களத்திற்கு முந்தைய இரவுகளிலும் போர் முடிந்து மருந்துச் சாலையில் காயமுற்றுப் படுத்திருக்கும் பொழுதும் வனக்குடிலிலும் மன்றுகளிலும் சத்திரங்களிலும் எங்கு அவன் இருக்கிறானோ அங்கு தன் வாயால் உலகளந்த பெருமானாய் அவன் சாகசக் கதைகளை அள்ளி வீசியபடியிருப்பான். கேட்பவர்கள் செவி நிறைந்து விழி கூர்ந்து இருப்பதை நோக்கினான் என்றால் பற்றியெரிந்து தாவும் சருகுக் காடெனென வாயில் வந்ததையெல்லாம் வைத்துக் கதை சொல்வான். இரண்டு துதிக்கை உள்ள மத வேழத்தை தான் எப்படி நுட்பமான போர்க்கலையின் மூலம் வெட்டி வீழ்த்தினேன். சிங்கை வீரர்கள் ஆறுபேரிடம் தான் உளவுக்குச் செல்கையில் தனியாகப் பிடிபட்ட போது அவர்களை தன்னைச் சிறையிட்ட ஓராள் கூண்டிற்குல் எப்படி ஆறு பேரையும் மடித்து அடுக்கினேன். பாரத தேசம் சென்றிருந்த போது அங்கிருக்கும் பேரரசர்களுடன் விருந்துண்ட அனுபவங்கள். அவர்களுக்குத் தன் ஞானத்திலிருந்து வழங்கிய அரசு சூழ்கை அறிவுரைகள். அங்கிருக்கும் உணவு வகைகள். துணிகள். எழில் துள்ளும் பெண்கள். தான் எந்த ஊருக்குச் சென்றாலும் பெண்களால் தனக்குப் பாதுகாப்பில்லை. அதனால் தான் நான் புலிப்படையில் சேர்ந்து என்னைப் பாதுகாத்துக் கொண்டேன் எனவும் சொல்வான். அப்படியே யவனம் போன காதை. பாலைவனங்களில் உயிர் பிழைக்க சிறுநீரைக் குடித்தமை. கடல் பயணங்களில் தான் பார்த்த விநோத கடல் மிருகங்கள். கால்கள் கொண்ட மீன்கள். நீரால் நடந்து செல்லும் பொழுது அதில் எப்படி பயணம் செய்யலாம். அதை ஒரு வாணிபமாக இத்தீவில் அறிமுகப்படுத்தும் திட்டமும் அவனிடமிருந்தது.

சர்க்கரீஸின் ஓவியங்களைப் பார்த்த உலகளந்தோன் தனது வாழ்நாளில் முதன்முறையாக இத்தீவுக்கு வெளியே உள்ள மிருகங்களையும் மனிதர்களையும் விழிகளால் கண்டு வியப்புக் கொண்டான். அங்கு சிறு குன்றுகள் உருள்வது போல பணியாற்றிய காப்பிரிகளையும் யவனர்களையும் நோக்கினான். அவர்கள் அவனை ஒரு நசுக்கில் நசுக்கி எலுமிச்சை போல் பிழிந்து விடுவார்கள் என அஞ்சினான்.

பின்னால் வந்த அலவன் உலகளந்தோனின் முதுகில் ஓங்கி ஒரு அறை விட்டான். ஆவி ஒருகணம் வெளிச்சென்று திரும்பிய உலகளந்தோன் அலவனைத் திரும்பி நோக்கி வசவுகளைப் பொழிந்தான். அலவன் சிரித்தபடி “இனி உங்கள் வாயளக்கும் கதைகளுக்கு முடிவு வந்துவிட்டதா உலகளந்த பெருமானே. நம் குடிகள் இப்போது உலகைக் கண்ணால் பார்க்கப் போகிறார்கள். உங்கள் சாகசக் கதைகளைக் கேட்டவர்கள் உங்களை அவர்கள் சர்க்கரீஸ் குழுவில் சேர்க்கவும் கூடும். தயாராய் இருங்கள்” என சிரித்தான். “அடேய் அலவா. என்ன சொல்கிறாய். இவர்கள் என்னடா இவ்வளவு பெரிதாய் இருக்கிறார்கள்” என இடையில் கையை ஊன்றியபடி நெற்றி வியர்வையைத் துடைத்தான் உலகளந்தோன். “உங்கள் கதைகளில் இவர்கள் இதை விடப் பெரியவர்கள் அல்லவா. அவர்களை வலக்காலை முன்வைத்து இடக்காலால் சுழன்று காற்றிலேறி கழுத்தில் அடித்து வீழ்த்தியிருக்கிறீர்கள் அல்லவா. இது அவர்களின் குழவிகள் என நினைக்கிறேன்” என நகைத்துக் கொண்டே சொன்னான் அலவன்.
“அடேய் நிறுத்தடா அலவா. நாங்கள் சென்று உள்ளே இருப்பவற்றை நோக்குவோமா. காவல் பணியென்று சொல்லிக் கொள்வோம்” எனக் கேட்டான் உலகளந்தோன். “வாருங்கள் போகலாம். ஒரு புலியையாவது நீங்கள் அடக்குவதை நேரில் பார்க்கும் ஆசை எனக்கு மேலிடுகிறது” எனச் சொல்லியபடி வேலை ஊன்றியபடி நடந்தார்கள்.

சர்க்கரீஸ் குழுவின் கூடாரத்தைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான குடிகள் சுற்றிச் சுற்றி அந்தக் கூடாரத்தை விழிகளால் அளவெடுத்தபடி
யிருந்தனர். கூடாரத்தின் உள்ளிருந்து வந்த விலங்குகளினதும் பறவைகளினதும் ஒலிகளும் சத்தங்களும் அவர்களை நெஞ்சு கிளர வைத்திருந்தது. நூறு நூறு புதிய வாசனைகளைக் காற்றில் பரப்பிக்கொண்டு சர்க்கரீஸ் கூடாராம் மாயக்குகையென மண்ணில் முளைத்திருந்தது. அலவனும் உலகளந்தோனும் கூடார வாயிலில் நின்ற காவல் பூதப் பாவைகளை நோக்கினார்கள். அவற்றுக்கு உண்மையிலேயே விழிகள் உள்ளது போல் மின்னின. கந்தோஸ் பிலிப்பு அங்கிருந்தவர்களை யவன மொழியில் வசைபாடிக் கொண்டிருப்பது மொழிபெயர்ப்பு இன்றியே இருவருக்கும் விளங்கியது. வேலுடன் வந்த இரு வீரர்களையும் நோக்கி கைகளைக் கூப்பி வணக்கம் சொன்னான் கந்தோஸ். மொழிபெயர்ப்பாளனிடம் “நாங்கள் காவல் வீரர்கள் கூடாரத்தைச் சுற்றிப் பார்த்து பரிசோதிக்க வேண்டும்” எனச் சொன்னான் அலவன். கந்தோஸ் பிலிப்பு மொழிபெயர்ப்பைக் கூர்மையாகக் கேட்டபடி தலையை ஒருகையால் தாங்கியபடி மறுகையால் மார்பை இறுக்கியபடி நின்றான். மொழிபெயர்ப்பைக் கேட்டு முடித்ததும் வெடித்துச் சிரித்து “போய்ப் பாருங்கள்” எனச் சைகை செய்தபடி வெளியே போனான். நீண்ட மூங்கில் கழிகளால் நேர்த்தியாக அடுக்கப்பட்டு வட்ட வடிவில் அமைக்கப்பட்ட உட்கூடாரம். இரவோடு இரவாக இதனை எப்படிக் கட்டி முடித்தார்கள் என வியந்து நின்றனர் இருவரும். குடிகள் அமர்ந்து ஆற்றுகையை நோக்கவென பலகைகளாலான இருக்கைகள் போடப்பட்டிருந்தன. பொருத்தும் முனைகளும் பொருந்தும் இழைகளும் கொண்ட விளையாட்டுப் பொருள்கள் போலிருந்தன.

உள்ளே நுழைந்து செல்லும் வழியில் குகை வளைவுகள் போல் மூன்று பாதைகள் உருளை வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. ஒன்று செவ்வண்ணத்திலும் மற்றொன்று கடல்நீல வண்ணத்திலும் மற்றையது கருங்கடலெனவும் காற்றில் ஊதியபடி அமைந்திருந்தன. ஒவ்வொரு வாயிலிலும் விநோதமான யவன மொழிக் குறியீடுகள் வரையப்பட்டிருந்தன. அலவன் முதல் வாயிலால் செல்ல ஆரம்பிக்க உலகளந்தோன் அவனை இழுத்துப் பிடித்து “இவர்கள் ஆவிகளுடன் பேசுபவர்கள் அலவா. இங்கு நின்றால் நம்மிலும் ஏதாவது யவனப் பேய் ஏறிவிடும். வா. போகலாம்” என இழுத்தான். பின்னால் வந்து கொண்டிருந்த சலனமோசாவைக் காணாமல் மோதி திரும்பித் திடுக்கிட்டு மயங்கி விழுந்தான்.

சலனமோசா ஒரு காப்பிரிப் பெண். நீண்ட குழலை ஏழு சர்ப்பங்களைப் போல் தலையில் வகிடு பிரித்துப் பின்னியிருந்தாள். விரிந்த தோள்களும் கறுப்பு மலைப்பாம்புக் கைகளும் இரண்டு தடித்த தேன்வதைகள் போன்ற பேருதடுகளும் கருந்தங்கமென மின்னும் தோலும் கழுத்தில் முலைவளைவுகளில் இடையில் தொடைகளில் காதுகளில் புருவங்களின் மேல் நெற்றியின் நடுவிலென பலவகையான குறிகளை வரைந்திருந்தாள். கடும்பச்சை வண்ணத்தில் அவை அவளது மேனியில் ஒளிர்ந்தன. அவளது பேருருக்கு இணையாகவே விரிந்த இரண்டு மூங்கில் தாள்கள் போன்ற விழிகளும் அவளை மேலும் பெரியவளெனக் காட்டியது. விழுந்த உலகளந்தோனை நோக்கிய சலனமோசா கையில் வைத்திருந்த தைலக் குப்பிகளை அருகிலிருந்த பெட்டியின் மேல் வைத்தாள். அலவன் அருகே வந்து அவனை உலுப்பினான் “உலகளந்த வெற்றனே எழும்படா. மானமற்ற வீணனே உன்னை கொல்லப் போகிறேன்” எனக் கத்திக் கொண்டு உலுப்பினான். உலகளந்தோன் சலனமற்ற மூச்சுவிடும் பிணமெனக் கிடந்தான்.

சலனமோசா தைலப் பெட்டியிலிருந்து ஊதா நிறக் குப்பியை எடுத்தாள். அதை சிறிய பச்சைத் துணியொன்றில் ஊற்றி அதை உலகளந்தோனின் மூக்குக்கு அருகில் பிடித்தாள். பின் அலவனை நிமிர்ந்து நோக்கி மழலை முகத்துடன் சிரித்தாள். அலவன் அவளில் ஒளிர்வது மழலையின் அகம் என நோக்கி தானும் சிரித்தான். “இவர் பெரிய வீரன்” எனச் சொல்லிச் சிரித்தான் அலவன். அவன் சொல்வதை விளங்கிக் கொள்ள முடியாமல் இருந்தாலும் அவன் உலகளந்தோனைக் காட்டிச் சொல்வது ஏதோ நகைச்சுவை என அறிந்து பேருதடுகளை விரித்து சிரித்தாள். சோளமுத்துகளைப் போல் வரிசையான வெண் பற்கள் அவளை மேலும் மேலும் குழந்தையெனக் காட்டியது.

உலகளந்தோன் பன்றியைப் போல் மூக்கைக் குவித்து உந்தி சிரித்தபடி எழுந்தான். “இன்னும் இன்னும்” என உளறினான். அலவன் அவனை உலுக்கி விழியைத் திறக்கச் செய்தான். “அலவா. இந்த நறுமணம் எனக்கு வேண்டும். இன்னும் இன்னும். எங்கிருந்து அது வருகிறது” எனக் கேட்டான். அருகிருந்த சலனமோசாவை அறியாமல் நின்றான் உலகளந்தோன். அலவன் செவியின் அருகே போய் “அருகில் ஒரு காப்பிரிப் பெண் இருக்கிறாள். அவளது வாயிலிருந்து உனது மூக்கில் ஏதோ மந்திரம் சொல்லி ஊதினாள். உன்னை வசியப்படுத்தி விட்டாள் என அஞ்சுகிறேன். அவளது வாயிலிருந்து வந்த காற்று அவ்வளவு நறுமணமா. நன்கு யோசித்துக் கொள்” என அச்சமூட்டும் குரலில் சொன்னான். சலனமோசா எழுந்து இரண்டாவது வளைவினுள் நுழைந்து மறைந்தாள். கரும் புரவி போன்ற அவளது பிருஷ்டங்களை நோக்கிய உலகளந்தோன் “இவளது தாயை எனக்கும் தெரியும் என நினைக்கிறேன்” எனச் சொல்லி உதட்டுக்குள் சிரித்தான். அலவன் எழுந்து இரண்டு கைகளையும் இடையில் ஊன்றி “வா. போய்க் கேட்கலாம்” என நகைத்தான்.

இரண்டாம் வளைவின் வாசலில் அமைக்கப்பட்டிருந்த காவல் பூதங்கள் மேலே மானுட உடலும் கீழே இருமீன்களின் வாலுடலும் கொண்ட கடல்தேவைதைகள். ஒன்று கருமை வண்ணத்தின் பலவகையான தீற்றல்களால் மேனியுருக்கொண்டது. மற்றையது வெண்ணிறமும் மண்ணிறமும் இழைந்த கோடுகளால் உருவாக்கப்பட்டிருந்தது. இரண்டின் கைகளிலும் திரிசூலம் போன்ற கொல்கருவி பொன்மஞ்சள் நிறத்தில் மின்னியது. அவர்களின் மீன்வால்க் கால்களின் கீழ் கருமையும் வெண்மையும் கலந்த சுருள் கேசங்களும் நீள் பற்களும் கொண்ட கடல் பூதங்கள் துடித்து அலறுவது போல் கரங்களைத் தூக்கியபடி அமைந்திருந்தன. “யவனக் கொற்றவை” என உலகளந்தோன் அலவனிடம் காட்டினான். “இப்படியொரு பெண்மீனை நான் பாரதத்திற்கு செல்லும் வழியில் பார்த்திருக்கிறேன் அலவா. அவர்கள் நன்கு பாடக் கூடியவர்கள். குரலே யாழ் போல ஒலிக்கும். நல்ல வேளையாக என்னை அவள் காதலிப்பது போல் நோக்க நான் கொண்ட தேசப்பற்று என்னைத் தடுத்துக் காத்தது. வனிதைகள் மட்டுமின்றி விலங்கும் மானுடரும் கலந்த பிறவிகளும் என்னில் காமுறுவதை அன்று தான் அறிந்து கொண்டேன். அப்படி என்ன தான் அழகு என்னில் இருக்கிறது என வியந்து கொண்டிருக்கிறேன். அலைகள் கொந்தளிப்பது போல் எழுந்து பலநூறு கடல் தேவதைகள் நான் சென்ற கப்பலைச் சுற்றி வெறிகொண்டு சுழலை உருவாக்கின. பின்னர் அவர்களின் துன்ப நிலையைப் பார்த்து இரங்கிய நான் என்னாடைகளைக் களைந்து நிர்வாணமாகக் கப்பலின் மேல் ஏறி நின்றேன். கப்பலில் பணியாற்றியவர்கள் முழந்தாளில் நின்று கண்ணீர் மல்க என்னை வணங்கினார்கள். கால்நாழிகை தான் அலவா எல்லாக் கடல் தேவதைகளும் நீருள் மூழ்கி மறைந்து விட்டன. என் அழகினாலேயே வென்ற யுத்தம் அது” எனச் சிரித்துக் கொண்டே அலவனை காளை முட்டுவது போல் முட்டிவிட்டு நகர்ந்து சிரித்தான் உலகளந்தோன். அலவன் அவனை நோக்கி “கடல் தேவதைகள் தம் வாழ்நாளில் அப்படியொரு கொடுங்குலைக் காட்சியைப் பார்த்திருக்க மாட்டார்கள் உலகளந்த பெருமானே. அவை நீரில் வாழ்பவையானாலும் குதித்துக் குதித்து தற்கொலை தான் செய்திருக்கும். அவை அதற்குப் பிறகு நிம்மதியாக உறங்குவது எங்கனம். உங்களது சுக்கானை அவைகள் மறப்பது எங்கனம். இப்பொழுது அக்கடற் பகுதியில் ஏதேனும் ஒரு கடல் தேவதையாவது உயிருடன் இருக்குமென நான் எண்ணவில்லை” என நடை குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான் அலவன்.

புண்பட்ட உலகளந்தோன் உதட்டை இறுக்கி மூடியபடி தன் மரக்குற்றிக் கால்களால் தட் தட்டென ஓசையெழுப்பியபடி வளைவின் மென் வெளிச்சத்தால் போய்க் கொண்டிருந்தான். வெய்யிலின் ஒளிச்சிதறல்கள் படபடக்கும் கருநீலத் துணியால் உள்ளே விழுந்து கொண்டிருந்தது. துணியாலான இரத்தினக் கல்லின் ஒளிப்பெருக்கின் கீழ் நடப்பதான உணர்வு அலவனுக்கு மேலிட்டது. அந்த நீள்துணிப் பரப்பெங்கும் நுண்மையான பலநூறு கதைச் சித்திரங்கள் தீட்டப்பட்டிருந்தது. வளைவு முடிவைச் சென்றடைந்தவர்கள் வாயிலைக் கண்டு சலனமோசா எங்கு மறைந்தாள் எனத் திகைத்தார்கள். அலவனின் தோளைப் பற்றிக் குலுக்கிய உலகளந்தோன் “வீணனே நான் சொன்னேன் இல்லையா. இது ஆவிகள் குகை. இங்கிருந்து நாம் போய்விடுவோம் எனப் பிதற்றினான். அலவன் வாயிலை நோக்கியிருக்க வெறுங்கைகளை அசைத்துக் கொண்டு துள்ளும் கரும் புரவியின் வாலென ஆடிக் கொண்டு வந்தாள் சலனமோசா. உலளந்தோனின் செவியருகில் வந்த அலவன் ” பெருமானே, இவள் அன்னையைப் பற்றி விசாரிப்போமா” எனச் சிரித்தான். அவர்கள் இருவரையும் பார்த்து வெண்பற்கள் ஒளிச்சில்லுகளென உருள வலக்கையைத் தூக்கி அசைத்துக் காட்டிவிட்டு துள்ளிக் கொண்டே போனாள். உலகளந்தோன் அலவனைப் பார்த்து “அவள் அன்னையும் இப்படித் தான். துடியான கரும் புரவி” எனச் சிரித்தபடி வெளியேறும் வாயிலை நோக்கிச் சென்றான். வேலால் உலகளந்தோனின் பிருஷ்டத்தில் ஒரு அடியைப் போட்டுவிட்டு “புடவியே அழிந்தாலும் உங்கள் பொய்கள் வாழும் பெருமானே” என்று சிரித்துக் கொண்டு வெளியே வந்தார்கள்.

குடிகள் அங்கும் இங்குமாய் குவைகளென அமர்ந்திருந்து வேடிக்கைகள் பேசிச் சிரித்தும் பெரிய கிளைகள் கொண்ட முதுமரங்களின் கீழ் ஓய்வெடுத்துக் கொண்டுமிருந்தனர். அலவன் நேரே பெருவீதிக்குச் செல்லும் வழியில் ஏறி அவனது மண்ணிறப் புரவியில் தாவினான். உலகளந்தோன் வெண்ணிறப் புரவியில் ஏறினான். இருவரும் குடித்திரள் குறைவாய் இருக்கும் வீதிகளைக் கணித்து புரவியை ஓட்டியபடி குடிகளின் கொண்டாட்டங்களை ரசித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தனர்.

திருதை மனை வாசலில் நின்றபடி அலவனை நோக்கிக் கையசைத்தாள். “மாவீரனே, வந்து தாகம் தீர்த்துச் செல்லுங்கள் அய்யா” எனக் கூவினாள். அலவன் புரவியை மனை வாசலில் நிறுத்திய பின் உலகளந்தோனும் இறங்கி நடந்து வந்தான். இருவரும் திண்ணையில் அமர்ந்து கொள்ள கரும்புச் சாறை இரு கலயங்களில் கொணர்ந்து வைத்தாள். உலகளந்தோன் கலயத்தை எடுத்துக் குடிக்கத் தொடங்கினான். “அலவா, நேற்றுக் கிடைத்தது இன்றும் கிடைக்குமா” எனச் சிரித்தபடி கேட்டாள். நிருதையும் வெளியே வந்து உலகளந்தோனைப் பார்த்து “அடடே, மாவீரர் நம் எளிய குடிலுக்கு வந்திருக்கிறார். அவருக்கு ஊன் விருந்தல்லவா கொடுக்க வேண்டும்” என எள்ளினாள். குடித்த கலயத்தைக் கீழே வைத்த உலகளந்தோன் “இல்லை நிருதை, இப்போது தான் என் கடல் பயணங்களில் சந்தித்த ஒரு பெண்ணின் மகளைக் கண்டு வந்தேன். அவள் எனக்கு யவன உணவுகள் தந்தாள். நமது பட்டினத்தின் எந்த உணவும் அதற்கு ஈடாகாது” என்றான். அலவன் சிரித்துக் கொண்டே “ஓம் நிருதை. நானும் பார்த்தேன். அவளை நெடுங்காலம் கழித்துக் கண்ட மகிழ்ச்சியில் தலை சுற்றிக் கீழே விழுந்து விட்டார்” என தொடையில் தட்டிக் கொண்டு சிரித்தான். திருதை “அவர் வீரச் செயல்கள் தான் சிங்கை தேசமும் அறிந்ததே அலவா. நான் கேட்டது கிடைக்குமா” என்றாள். “பதங்கனிடம் தான் கேட்க வேண்டும். அவன் தான் காப்பிரிகளிடமிருந்து அதை வாங்கியதாகச் சொன்னான். கிடைத்தால் கொடுத்து அனுப்புகிறேன்” என்றான். தலையைத்து விட்டு இருவரும் புரவிகளில் ஏறி பெருவீதியால் கடந்து மன்றுக்கு அருகில் சென்றனர்.

மன்றின் முன் பாம்புகளை வைத்து சாகசம் காட்டுபவர்கள் மலைப்பாம்புகளைத் தோளில் வைத்து குடிகளை அதைப் பிடித்துப் பார்க்க அழைத்தனர். வெள்ளையில் மஞ்சள் புள்ளிகளாலான நீண்ட மலைப்பாம்பொன்று வெய்யில் பட்டு மினுங்கியது. உலகளந்தோனை நோக்கிய பாம்பாட்டி எழுந்து நின்று “மிடுக்கான வீரரே. இது ஒரு குழந்தை. இவனைத் தோளில் வைத்து ஒரு வளையம் போய் வாருங்கள்” என நீட்டினான். “இதன் தாய்ப்பாம்பை நான் தான் ஒரு வேட்டையில் கொல்ல வேண்டியதாய் போயிற்று பாம்பாட்டி. இதன் தோளில் உள்ள புள்ளிகளை வைத்தே இவனது அன்னையைச் சொல்லுவேன். ஆகவே தான் இப்பாம்பு வஞ்சம் கொண்டிருக்குமோ என அஞ்சுகிறேன்” எனச் சொல்லி ஈறு தெரியச் சிரித்தான். பாம்பாட்டி அவனது முகத்தை மேலும் கீழும் உற்றுப் பார்த்துவிட்டு வசவுகளை வாய்க்குள் முணுமுணுத்தபடி அப்பால் சென்றான்.

TAGS
Share This