36: அறக்கொடியாள்

36: அறக்கொடியாள்

யவன மருந்துச் சாறை நெஞ்சில் விரிந்து நீண்டிருந்த சதுப்புப் புண்ணில் ஊற்றிய பின் பச்சை வண்ண அடர்த்தியான நீராவியால் நீலனது மேனியைச் சுற்றிப் பரவினார்கள் யவன மாந்திரிகக் குழுவினர். நீலழகன் தன் மஞ்சத்தில் தலையெழாது நீரில் அரையுடல் செவி வரை மூழ்கியிருப்பதென எண்ணிக் கொண்டான். ஒலிகள் கேட்கவில்லை. புகையிலிருந்து இன்னொரு புகை வெளியேறிச் செல்வது போல் இருட்டில் மாந்திரிகக் குழு சென்று மறைந்தது. முற்புலரியில் நீலழகனின் அகம் மயக்கை மீறியெழுந்தது. கனவில் ஏழு அன்னையைரையும் கண்டான். அரண்மனை வாசலில் அவர்கள் நிரையாக ஒருவர் மேல் ஒருவர் ஏறியமர்ந்து கோபுரமென நீண்டு முன்முகப்பில் நின்ற நீலழகனை விழிகுத்தி நோக்கி நின்றனர். அவர்களது பார்வை தீண்டி அவனது நெஞ்சுப் புண் கிழிந்து சீழ் ஆசுவாசமாக வழிந்து இனிமையாவது போல் தோன்றியது.

காலம் குற்றிக் குற்றிக் கிழிந்த ஓலையின் இடைவிரிசலென விழிகள் கொண்ட முதல் மூதன்னை அறக்கொடியாள் ஆழிநீருள் சென்று நுழைந்த போது அவளின் கடைசி மகள் சொல்லிற்கினியாளை நினைத்துக் கொண்டான் நீலழகன். அவள் குறும்புச் சிரிப்புடன் அண்ணா என விளிக்கும் குரல் நீலனின் விழிநீரை உருட்டியது. பின் அக்குரல் ஒருதூசுப் படலமென விழியை நிறைத்துப் பீழையென முட்டியது.

அறக்கொடியாளின் ஆறு புதல்விகளில் இளைய கன்று சொல்லிற்கினியாள். புலிப்படையின் முதற் பெண் பிரிவில் சூடிகையாக வலம் வந்தவள். அன்னையைப் போலவே அச்சமற்றவள் மருந்தறிந்தவள். இளம் மிடுக்கும் வில்தேர் கரங்களும் கொண்டவள். மருத்துவக் குழுவிலும் பயின்றாள். அவள் மருந்திடும் போது காயம் பட்டவர்களை நோக்கி மிழற்றும் குரலில் கதைகள் சொல்லி நகைத்துப் புன்னகையால் வலி போக்குபவள். நீலழகனுடன் விடாது சொற்போர் புரிபவள். அவன் தோற்கும் கணங்களில் போர் வென்ற களியெனத் துள்ளியாடி மகிழ்பவள். அவள் எங்கிருக்கிறாள் என்பதைச் சுற்றியிருப்பவர்களின் அலைச்சிரிப்புகளில் அறியலாம் என மாதுமியாள் சொல்வாள்.

நீலன் விரியனைக் குளத்திற்கு அழைத்துச் செல்லும் கண்டல் மண் பாதையில் நீலனை கைநீட்டி வழிமறித்த நிலவை விரியனில் கால் வைத்து மேலேறி நீலனின் முன் அமர்ந்தாள். அந்தி சுருங்கி இருள் பிரியத் தொடங்கியிருந்தது. மெல்லிய புன்னகையுடன் சிந்தனையில் ஆழ்ந்த பின் புலிப்படையில் பெண்கள் பிரிவை உருவாக்க வேண்டும் என நிலவை சொன்னாள். நீலழகன் இரு குருளை விழிகளையும் பிரட்டி நின்றான். “பெண்களால் வனங்களினதும் பயிற்சிகளதும் பெரும் வாதையைத் தாங்க ஒண்ணாது நிலவை. அவர்களின் பொருட்டுமே நாங்கள் களம் நிற்கிறோம். மேலும் சிங்கை வீரர்கள் களத்தில் பெண்களை வேட்டை மிருகங்களெனத் தாக்கக் கூடும். குடிகளும் இதனை ஒப்ப மாட்டார்கள். மருத்துவக் குழுவிலும் நகரில் உள்ள படை திரட்டும் குழுவிலும் ஆவணக் குழுவிலும் அவர்களை இணைக்கலாம். கருவூலப் பாதுகாப்பையும் பொறுப்புகளையும் கூட அளிக்கலாம். உண்டிக் குழுவில் ஏற்கெனவே பெண்கள் உள்ளனர். அவர்களும் புலிகளே” என குரலில் பதட்டத்துடன் சொன்னான். அடுக்கப்பட்ட அந்த பதில்களை ஏற்கனவே அறிந்தவள் என்பது போலிருந்த நிலவை விரியனின் குஞ்சி மயிரைத் தடவினாள். நீலன் அவளின் செயல்களிலிருந்த நிதானத்தையும் இயல்பையும் நோக்கி உள்ளூர வியந்தான்.

“நீலா. இதை நாம் எளிய போர் நடவடிக்கையாக நோக்கக் கூடாது. பெண்களே அரசு சூழ்தலில் முதன்மைப் பாத்திரங்கள். இதை நீ அறிந்து கொள்ள வேண்டும். பெண்களே மனையை ஆக்குவதைப் போல் ஒரு தேசத்தினைக் கனவு சுமக்கிறார்கள். அதை அடையும் படைக்கலன் தான் ஆண்கள். ஆணவத்தை ஒழித்து அந்தச் சித்திரத்தை நோக்கினால் எளிதில் விளங்கக் கூடிய கணக்கு. அரசு சூழ்தலின் நுட்பங்களும் தந்திரங்களும் பெண்ணியல்புடன் அமைவது அதனால் தான். அதே நேரம் ஆடவர் போர்க்களங்களில் அடையும் உச்சங்களை அரண்மனைச் சபைகள் அளிப்பதில்லை. அதேபோலவே மதிநுட்பமும் கூர் வஞ்சங்களும் கொண்ட பெண்களை ஆண்கள் அஞ்சுகிறார்கள். களங்களை வெல்பவனைக் கால்களில் மிதித்து அவனை நோக்கும் களி அரசு சூழும் பெண்ணுக்குண்டு.

வருங்காலம் மாற வேண்டும் நீலா. பெண்களும் ஆண்களும் இணையாக அரசு சூழ்தலை நிகழ்த்த பெண்களும் போர்க்களங்களைப் பயில வேண்டும். வஞ்சமுரைக்கும் சொற்களுக்காகக் களங்களில் சிந்தப்படும் குருதியை நோக்கியறிய வேண்டும். அது பெண்ணுக்கு முதன்மையானது. பெண் குருதியை இழப்பை நேர்நோக்கி அறியுந் தோறும் தேச விடுதலையின் அறிதல்கள் மாறும். போரின் முகமும் அகமும் மேலும் நுண்மை கொள்ளும்.

இரண்டாவது அம்சம், பெண்களும் ஆண்களும் அனைத்திலும் நிகரெனக் கொள்ளும் காலம் எழ இருக்கிறது நீலா. ஈச்சியை நோக்கு, இந்த விருப்பை என்னிடம் முதலில் சொன்னவள் ஈச்சியே. நானும் வில்லும் வாளும் கற்றிருந்தாலும் போர்க்களங்களை விட அரசு சூழ்தல் சபைகளே எனக்குள் விரிகின்றன. ஈச்சி அப்படியல்ல. அவளின் குடிப்பெண்களுடன் அவர்கள் வேலெறிந்து பயிற்சி செய்வதை நோக்கினேன். பொந்தில் உள்ள மூன்று எலிகளை ஒரே வீச்சில் தூர நின்று எறிந்து கொல்கிறார்கள். நாள் முழுவதும் மரங்களிலும் குளங்களிலும் குடிலிலும் சுற்றிச் சுழன்று பணிபுரிந்து கொண்டேயிருக்கிறார்கள். புரவிகளும் வேழங்களும் விழைகிறார்கள். ஆடவர்களைச் சண்டைக்கு இழுத்து நெஞ்சிலேறி மிதிக்கிறார்கள். அவர்களை வீழ்த்திக் களி கொள்கிறார்கள். சிங்கைப் படையைக் கொல்லும் வேட்கையை ஒவ்வொரு நாளும் குடிலிலும் போரின் கதைகளிலிருந்தும் அறிந்து கொள்கிறார்கள். அவர்கள் பாணர்களிடமிருந்து போரை அறிந்த எளிய குடிகள் அல்ல நீலா. அவர்கள் களம் கண்ட வீரர்களை மருந்திட்டு ஆற்றி அவர்களின் கதைகளைக் கேட்டுக் களம் புக எண்ணுபவர்கள். அதுவொரு அடிப்படைத் தகுதி.

மூன்றாவது அம்சம், குடிகள் இதனை ஏற்பது எளிது. அனைத்துக் கொற்றவைகளையும் வணங்கும் குடி நமது. நாகதேவியே நம் குடித் தெய்வம். பெண்ணே நாம் வணங்கும் கொல்தெய்வ சொரூபிகள். ஆகவே குடிகளை ஒப்பச் செய்வதை பெண்களே நிகழ்த்திக் கொள்வார்கள். பெண் ஒன்றைச் செய்ய விரும்பினால் எவராலும் அதை நிறுத்த முடியாது நீலா. அந்தக் கட்டற்ற கொல் தெய்வத்தையே ஆடவர் அஞ்சுகின்றனர். அந்த ஓர்மத்தையே முதுபெண்டிர் இளம் பெண்களில் அறிந்து உள்ளூரத் தன் விழைவுகளை அவர்களுக்கு அளிக்கின்றனர். அதோடு குடிகளுக்கும் போர்ப்பயிற்சி அவசியம். ஒவ்வொருவரும் புலியாகும் தேசத்தைத் தான் நாம் ஆளலாம். பலவீனமான பெருங் கூட்டத்தை வலிமையான சிறுபடை காப்பத்து நிரந்தரமற்றது. குடிகளுக்கு ஆயுதப் பயிற்சியும் அடிப்படைத் தற்காப்புப் பயிற்சியும் படிப்படியாக அளிக்க வேண்டும். அதனால் இருவழிகளிலும் குடிகள் நம்மை நெருங்குவர். முதலாவதாக புலிகளின் அர்ப்பணிப்பையும் உடலுழைப்பையும் அவர்கள் மெய்யால் அறிவார்கள். இரண்டாவதாக பெரும் போரென ஒன்று எழுந்தால் வீழும் இறுதித் தமிழ்க்குடியும் ஒரு புலியாகவே இருப்பர். இந்த விடயத்தில் குடிகளின் விருப்பை அதிகரிக்கப் பாணர்களையும் கூத்தர்களையும் பயன்படுத்தலாம்.

எவ்வழியில் நோக்கினாலும் விரும்பும் பெண்களைக் களம் புக அனுமதித்தல் அரசு நெறியாக வேண்டும். அது உன் காலத்தில் இயலும். அதைச் செய்தவனாகுக” என்றாள் நிலவை. அச் சொற்கள் பரிந்துரைகளென மெல்ல மெல்ல எழுந்து ஒவ்வொரு தருக்கையும் மறுத்து இன்னொன்றை நிறுவி அவசியமற்ற அச்சங்களைப் புறங்கையால் ஒழித்து இப்படியமைக நீலா என ஆணையிட்டன. நீலன் சொல்லற்ற அவன் மெளனத்துக்குள் திரும்பினான். நிலவை அதை அறிந்தவளெனப் பின்சாய்ந்து அவன் மார்பில் இழைந்து கொண்டாள். விரியன் துதிக்கை நீட்டி மெல்லிய பிளிறலுடன் நடந்தான்.

ஈச்சியே படைப்பிரிவின் தலைவியென ஆக்கப்பட்டாள். உதிரர் கதைப் பயிற்சி பெண்களுக்கு ஆகுவதில்லை எனச் சொன்னார். சத்தகன் முன்னே வந்து நான் ஆசிரியராய் அமைகிறேன் என கதையை ஒற்றைக் கையில் மலரெனத் தூக்கியபடி நின்றான். அவன் நின்ற கோலத்தைப் பார்த்துப் பெண்கள் கொல்லென்று சிரித்தனர். கொல்வேல் மகளிரும் வனக்குடிலில் பணியாற்றிய சிலருமென முப்பது பேர் கொண்ட முதற் குழு பயிற்சியை ஆரம்பித்தது. நிலவை வாள் கற்றுக் கொடுத்தாள். வாகை சூடன் வில் ஆசிரியனான். வாகை சூடன் ஈச்சியைக் காதலிப்பதாக வனக்குடிலில் எலியொன்று சுற்றியது. ஈச்சியை நிலவை கேட்ட போது “எனது காதலை நீ அறிவாய் தானே அக்கா” என நகைத்தாள். வாகை சூடன் வில்லை ஏந்திக் குறி பார்க்கும் பொழுதுகளில் ஈச்சியும் சொல்லிற்கினியாளும் அவனை எரிச்சலூட்டிக் கவனத்தைக் குலைப்பார்கள்.

அறக்கொடியாள் பட்டினத்தின் முதுமருத்துவச்சிகளில் ஒருத்தி. நீலழகனின் சகோதரிகளுக்கும் கூட அவளே பேறுகாலத் துணை. பட்டினத்தில் அவளது கைத்திறனும் மெய்யறிதல் வல்லமையும் பிரசித்தம். அவள் வனக்குடிலில் வந்து மருத்துவம் பார்த்துச் செல்லும் போது இளைய கன்று சொல்லிற்கினியாளை அழைத்து வருவாள். இனியாளே அவளது கரும்புத் தேன் மகவு. தன் அன்னையை உரித்து தன் சூடிகையைக் குழைத்துச் செய்த பிள்ளை என காயம்பட்டிருக்கும் வீரர்களுக்கு அவளை அறிமுகப் படுத்துவாள். அன்னை மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பொழுது அவள் கொல்வேல் ஆடவர் குழுவின் மழலைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பாள். ஈச்சிக்கும் அவளுக்கும் ஒரே வயது. கண்டதும் இருவரும் வேப்பம் பிசினென ஒட்டிக் கொண்டார்கள். சொல்லிற்கினியாள் சிறிய தடித்த விரல்களும் உறுதியான கால்களும் வாளிப்பான பசுமரம் போன்ற வலுவான தோள்களும் கொண்டவள். குறும் விழிகளை அகட்டி விரித்து எலிகளை நோக்கிக் கொல்வேல் எறிந்து பழகுவார்கள் ஈச்சியும் இனியாளும். அவர்களுடன் சேர்ந்து உசாகினி வண்ணத்தி சுடர்ப்பாவை வெட்சி என ஒரு பெண்கள் கூட்டம் வேலெறிந்து முயல்களை வேட்டையாடுவார்கள்.

ஒருமுறை ஈச்சி எறிந்த கொல்வேல் காட்டில் துயிலில் இருந்த வாகை சூடனின் இடையில் கீறி அப்பால் பாய்ந்தது. திடுக்கிட்டு எழுந்தவன் சினத்தில் கத்த அனைத்துப் பெண்களும் குடிலை நோக்கி ஓடினர். ஈச்சி மட்டும் அவனை நோக்கி நெஞ்சு நிமிர்த்தி நின்றாள். அவள் நின்ற நோக்கைப் பார்த்தவன் என்ன என விழிவிரித்தான். “இளமானின் தோலென மரப்புதரில் உனது இடை தோன்றியது சூடா. கொழுத்த மானென வேலெறிந்து விட்டேன். காயம் ஆழமா. நான் பார்க்கலாமா” எனக் கேட்டபடி பின் திரும்பி தேக்கு மரமொன்றின் பின்னால் ஒளிந்து நின்ற சொல்லிற்கினியாளை நோக்கிக் கூவினாள். “ஏய் இனியாள். இங்கு வந்து இவரை நோக்கு. காயம் ஆழமா எனப் பார்க்க வேண்டும்” என்றாள். சொல்லிற்கினியாள் கள்ளம் செய்யும் வெருகெனக் காலடி எடுத்து வைத்து வந்தாள். வாகை சூடனின் இடையால் குருதி மெல்லக் கசிந்து பற்றிய விரலிடை வெளியால் சொட்டியது. சொல்லிற்கினியாள் பாய்ந்து சென்று அவன் மேற்துண்டை இழுத்து உதறிக் காயத்தை இழுத்துக் கட்டினாள். “ஈச்சி இதைப் பிடி” எனத் துண்டின் மறுமுனையை நீட்டினாள். இருவரும் சேர்ந்து அவன் வயிற்றை இறுக்கிய இறுக்கில் அவனுக்கு மூச்சே போனது போலிருந்தது.

அறக்கொடியாள் மருந்திடும் பொழுது “வேல் கிழித்தோ குருதி வழிந்தோ இல்லை அன்னையே. இவர்கள் இறுக்கிய கட்டில் தான் என் உயிர் மூச்சே போய்விட்டது” என நகைத்துக் கொண்டு சொன்னான். அறக்கொடியாள் சிரித்தபடி “அவள்கள் சூடிகைகள் வீரனே. நல்ல வேளை கழுத்துக்கு வேலெறியும் போட்டி எதையும் வைக்காமல் விட்டார்கள்” எனக் கூறி மேலும் சிரித்தாள். நீலன் வாகை சூடனைப் பார்த்த பொழுது “நன்றாய்த் தெரியுமா. உண்மையிலேயே உன்னை மானென்று தான் வேல் எறிந்தாளா அல்லது நீயென்று அறிந்தே மெல்லிய கீறலுடன் விட்டாளா. அவள் எறியும் வேல்களை நோக்கியிருக்கிறேன். அவை குத்தி உள்ளிறங்குமே ஒழியப் பிசகி அப்பால் செல்லாது” என சொல்லி குறும்புச் சிரிப்பைக் கொட்டினான். வாகை சூடன் யோசிப்பவன் போல முகத்தை வைத்த பின் “மானென்று தான் நினைத்திருப்பாள். நானென்றால் நெஞ்சுக்குத் தான் குறி வைத்திருப்பாள். விழியால் எப்பொழுதும் அங்கே தான் நோக்குபவள்” என வயிற்றின் புண்கோடு நோகச் சிரித்தான்.

சொல்லிற்கினியாள் ஈச்சியின் காதலுக்கு ஒரு சிட்டுக்குருவித் தூது. கனிகளைச் சென்று கொடுப்பது. மலர்களைப் பரிமாறுவது. ஈச்சி அவளை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு “இதையும் கொடுத்து எனக்கொன்று வாங்கி வா இனியா” எனக் கூவிச் சிரிப்பாள். சொல்லிற்கினியாள் எச்சிலைத் துடைத்தபடி “மாடு. மாடு” என ஈச்சியை அடிப்பாள். சொல்லிற்கினியாள் அன்னை அறியாமல் புலிப்படையில் பயிற்சிக்கென இணைந்த பொழுது விளையாட்டாய் பயிற்சியில் ஈடுபடுகிறாள் என நினைத்தாள் அறக்கொடியாள். நாட்கள் செல்லச் செல்ல இனியாள் வனக்குடிலில் தங்கிச் செல்ல ஆரம்பித்தாள். அவளது ஆர்வமும் துடுக்கும் அறக்கொடியாள் நெஞ்சில் பதைபதைக்கும் அதிர்வை எப்பொழுதும் கொண்டிருந்தது. ஒரு நாள் கடுமையான போரொன்றின் போது எல்லை கடந்து பட்டினம் புகுந்த இருள் வீரர்கள் கூட்டமொன்று அறக்கொடியாளின் ஐந்து புதல்விகளையும் கொடுகலவி புரிந்து கொன்று ஈட்டியில் தலைகளைக் கொழுவிக் காட்சிக்கு வைத்தனர். அன்றைய நாள் மட்டும் அறுபதுக்கும் மேல் பெண்களும் சிறுமிகளும் தலை வெட்டப்பட்டு வீதிகளில் கிடந்தனர். அறக்கொடியாள் புதல்விகளின் வெற்றுடலை ஈக்களை அண்டவிடாமல் துணியால் மூடினாள். அழுகையற்று அவர்களை நோக்கி விறைத்து நின்ற சொல்லிற்கினியாளை நோக்கி கதறியபடி வந்து அணைத்து அழுதாள். வாளை இறுகிப் பற்றுவது போல் அவளது உடல் இறுகியிருந்தது என்பதை பின்னொரு நாள் நினைத்து அக்கணத்தை எதுவென அறிந்து கொண்டாள். சகோதரிகளின் உடல்கள் ஒருங்கும் வரை இனியாள் அங்கு நின்றாள். ஒவ்வொரு சகோதரியினதும் குத்திக் கீறி நகப் பிராண்டல்களால் சிதைந்த கன்னங்களையும் குறையாய் அறுத்து வீசிய கூந்தல்களையும் சிறுநீரும் சுக்கிலமும் கரைந்து ஊற்றப்பட்ட வாய்களையும் முகத்தையும் எங்கென்று இல்லாமல் ஒவ்வொரு திசைக்கும் உருண்டு வெளியே விழத் திறந்து கிடந்த விழிக்கோளங்களையும் வெறுமனே நோக்கினாள். அவ்வெறும் நோக்கில் ஒவ்வொரு சகோதரியினதும் அகவையும் அவளிடம் ஒட்டியது. ஒவ்வொருவரின் விழிகளும் அவளுக்குப் பொருந்தியது. வீறிட்டு நெஞ்சறைந்து அழுது கால்களில் விழுந்து அரற்றிக் கொண்டிருந்த அறக்கொடியாளின் கைகளை உதறிக் கொண்டு மூத்த சகோதரி முல்லையின் முன்னே சென்றாள். அவள் தலையைக் கொழுவியிருந்த வேலை மண்ணிலிருந்து இழுத்தெடுத்தாள். சுற்றிலும் நின்ற குடிகளும் புலிப்படை வீரர்களும் அவளை நோக்கி விழிகூர்ந்தனர். அவள் தலையைக் கையால் இழுத்து எடுத்து முல்லையின் உடலின் மேலே கொண்டு போய் வைத்தாள். அக்கொல்வேலை எடுத்துக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் புரவியில் சென்று ஏறினாள். வனக்குடில் நுழைந்தாள். ஈச்சியின் மடியில் சென்று படுத்துக் கொண்டாள். இரவில் அனைவரும் உறங்கிய பின் மேனி காய்ச்சலில் அதிர்ந்ததிர்ந்து நோக விழியொடுக்கிச் சித்தம் கலங்கிக் கலங்கிக் குழம்புவதை ஒவ்வொரு சகோதரியும் கூர்வேலுடலுடன் முகம் கொள்வதையும் விழியிறக்கி இனியாள் என அகவுவதையும் கேட்டாள். நூறு முறை விழித்தாள். நூறு முறை மயங்கினாள். உதட்டின் சொல்லதிர்வுகள் உமிழ்நீருடன் சிந்தித் தூங்கின. வாய் கசந்து கசந்து அழுக்குக் குவையென ஆனது. நாக்கு உலர்ந்து உலைக்கள மிதிதோலெனச் சூடுகொண்டிருந்தது. விழியிடையால் ஊர்ந்த கண்ணீர்த் துளிகள் வெட்டிக் கிழிக்கும் வண்டுகளென மேனியைக் கடந்தன. காய்ச்சல் ஒரு மேனியென கொதியுலையாகினாள் சொல்லிற்கினியாள்.

ஐந்தாவது சகோதரியின் பெயர் கார்மிழலி. கார்மிழலியின் புத்திரியாகவே சொல்லிற்கினியாள் அறியப்பட்டாள். அவளது முகம் கூர்வேலின் அரைவாசிக்கும் கீழ்ப்பகுதி வரை இறங்கி வலவிழி ஒரு செம்பழமெனக் கொல்வேலின் நுனியில் தனித்திருந்தது. கார்மிழலி சிறுவயதில் சொல்லிற்கினியாளை அச்சமூட்ட உருண்ட விதைகள் போன்ற தன் அழகிய விழிகளை உருட்டி உருட்டிக் காட்டி அவளை அழவைப்பாள். அழத்தொடங்கியதும் அன்னையிடம் சொல்லிவிடாதே எனக் கெஞ்சி அவளின் பிஞ்சுக் கழல்களில் முத்தமிடுவாள். ஆலம்பழம் போன்ற செம்மை கலந்த விழிகள் அவளுக்கு. இனியாள் வளர்ந்த பின்னர் தனக்கு வெருகின் விழிகள் இருப்பதாகவும் அக்காவுக்கே பேரழகுச் செஞ்சுடர்களென இருவிழிகள் உண்டெனவும் இயன்றால் இருவரும் மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் தீவிரமாகச் சொல்வாள். “என் கண்ணே நீ தானடி” எனக் கார்மிழலி சொல்லி நகைப்பாள்.

அவளின் இருதனித்த விழிக்கோளங்களை அருகென உணர்ந்து விழிகளை மூடியபடியே இடக்கையைக் காற்றில் துளாவினாள் இனியாள். முல்லையின் சிரிப்பொலி கேட்டது. அவளை ஊஞ்சலில் மடியமர்த்தி ஆடும் போது அவளில் எழும் நறுமணம் வனக்குடிலில் கரைந்து பரவியது. சுவாசத்தை உள்ளிழுக்கும் ஒவ்வொரு முறையும் சுடும் இரும்புத் துகள்களாலான காற்று அதுவென உணர்ந்தாள். அதன் வாசனை ஏறியேறி அவளது சித்தம் சிலநாழிகைகள் உருகிக் கொதிக்கும் இரும்புக் குழம்பென நரம்புகளில் ஊறியது.

விடிந்த பொழுது ஈச்சி அமர்ந்தபடியே தனது  இடக்கரத்தைச் சொல்லிற்கினியாளின் தலையில் வைத்திருந்தாள். சொல்லிற்கினியாள் இடைக்குக் கீழே உடலை உணராமல் அரைந்து எழுந்து வாசலை நோக்கினாள். தீப்பிடித்த காய்ந்த மரமென அவளின் ஒவ்வொரு கிளையும் கிளை நுனியும் அனலெனக் காய்ந்தது. அறக்கொடியாள் வனக்குடிலுக்கு வந்து ஒளடத்தங்களை ஒருசொல்லும் எழாமல் நெற்றியிலும் உள்ளங்கைகளிலும் கால்களிலும் பூசினாள். அவளது முகத்தில் எந்த உணர்வு நரம்புகளும் இயங்கவில்லை. இடக்கன்னம் இடைக்கிடை துள்ளியமைந்தது. வாய் சொற்களைப் புறுபுறுத்துச் சீறியது. ஓர் இரவும் இரு பகல்களும் அறக்கொடியாள் வனக் குடிலில் இருந்தாள். குடிலை விட்டு அவள் தனியே செல்ல எழுந்த போது அவளை நோக்காது குடிலின் இருட்டை நோக்கியிருந்த சொல்லிற்கினியாளை நோக்கினாள். அவளிடமிருந்த அனைத்தும் நீங்கியிருந்தது. வனப்பு அழிந்து வெறும் எலும்பெனச் சிலகணம் தோன்றினாள். அவளுள் எழும் எண்ணங்களை நினைக்க எண்ணாதவள் வெளியிறங்கி நீலனின் குடிலை நோக்கிச் சென்று வாயிலில் அமர்ந்து கொண்டாள். உடல் சன்னதம் கொண்டவளின் உடலதிர்வுடன் விம்மியபடி இருந்தது. வெறுப்பும் கசப்பும் இருவிழிகளாகியிருந்தது. அவள் கூந்தல் ஓர் இரவில் முழுதும் நரைத்ததெனச் சுழன்று பரவியிருந்தது. விரல்கள் அலைமடிப்புகளெனச் சுருண்டு கொண்டிருந்தன. நகக் கணுக்களில் உலர்ந்த புத்திரிகளின் குருதியொட்டி உலர மறுத்திருந்தன. இருநாட்கள் உணவருந்தாத அவளின் முகம் சிவந்து அழலடித்தது.

நீலன் குடில் வாயிலைக் கடந்து முழந்தாளில் அவள் முன் அமர்ந்தான். அவனது முழங்காலையும் கைகளையும் நோக்கியவள் அத்தனை புதல்விகளையும் ஒரணைப்பில் மீட்டுவிடும் வேகத்துடன் அவன் நெஞ்சில் அறைந்து முழந்தாளில் வீழ்ந்து கன்றுகள் தொலைத்த தாய்ப்பசுவெனக் கதறினாள். அவனை அணைத்துத் தன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டாள். வெந்து உருண்ட நீர்த்துளிகள் சுடுமழையென நீலனின் சிரசில் கொட்டியது. சில கணங்கள் நீலனின் மூச்சு அவள் அழுத்தத்தில் முட்டியிறுகியது. அறக்கொடியாளின் இதயம் ஓங்கியணைவதைக் கேட்டான். ஓங்கி ஓங்கி வீழ்ந்தது இதயம். எழுந்தவள் “இந்த மார்பினில் தான் அவர்களை ஏந்தி வளர்ந்தேன் நீலா. இனி நீ அவர்களின் உடன் பிறந்தவன். இனியாளும் உன் தங்கையென இங்கேயே இருக்கட்டும். அவள் இனி உன்னுடையவள். இந்தக் கொடுங் காற்றில் எங்களைத் காத்தருள்க அய்யனே” எனச் சொல்லி மேலும் சொல்லெழ முடியாமல் நாக்குளறிக் கீழே சரிந்தாள். அவளது விரல்களை எடுத்துத் தன் கரங்களில் வைத்தபடி இறுகியுலர்ந்த விழிகளுடன் நீலன் தனக்குள்ளென அவ்வாக்கை ஒலித்தான். அவ்வாக்கை அவன் ஒலித்து முடித்த போது அவளது கரம் அவனது கரத்திலிருந்து பிடியிளகியது.

சொல்லிற்கினியாளின் சகோதரிகளுடன் அறுபது பெண்களும் சிறுமிகளும் கொல்லப்பட்ட தாக்குதலின் பின்னர் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் புலிப்படையில் இணைந்தார்கள். போர்க்களத்தின் மூதாசிரியர்கள் அவர்களுக்குக் கற்பித்தார்கள். முதற் படையின் பெயர் கொற்றவை. ஈச்சி அதன் முதன்மை நிலைத் தளபதி. சொல்லிற்கினியாள் வில்லெடுத்துக் களம் புகுந்தாள். அவ்வில்லுக்கு கார்மிழலி எனப் பெயரிட்டிருந்தாள்.

இருள் வீரர்கள் படையொன்று அவர்களின் தலைவன் சோமசேனனுடன் அனுதேவபுரவில் நிலைகொண்டு களியாட்டில் ஈடுபடுவதாக ஒற்றுப்புறா வனக்குடிலுக்கு வந்தது. ஈராயிரம் கொல்வெறியர்களின் படை நடுவே வயது வேறுபாடின்றிப் பெண்களைப் புணர்ந்து படைகளின் நடுவே வீசிக்கொண்டு அவன் களியாட்டிலிருப்பதாகச் செய்தி கூறியது. நீலன் அவைக் கூடத்தில் நிற்க முடியாதவனாக நடந்து கொண்டிருந்தான். அவன் விழிகள் எரிதழல் கிண்ணங்களெனக் கனலேறியிருந்தது. ஈச்சி அவைக்கு வந்தாள். சேதியை நிதானமாகக் கேட்டாள். தன் குறுவாளை எடுத்து இடக்கையில் ஒரு கீறலிட்டு அக்குருதியை மண்ணில் சிந்தினாள். நீலன் அவளை நோக்கினான். அவள் பின்னிருந்து சொல்லிற்கினியாளும் நிலவையும் எழுந்து வந்தார்கள். “இது எங்களின் போர் நீலரே. நீங்கள் அனுமதியளிக்க வேண்டும். அங்கு துடிக்கும் ஒவ்வொரு சதையும் அலறலும் எங்கள் தோல்களில் அதிர்கின்றன. எங்களின் சோதரிகளுக்காகவும் தாய்களுக்காகவும் இன்று தவழும் பெண்குழவிகளுக்காகவும் அவர்கள் தலைகள் அறுபட்டு மண்விழ வேண்டும்” என ஈச்சி கொற்றவையின் குரலென எழுந்த உக்கிரமும் ஆணையுமான உறுமும் குரலில் சொன்னாள். நீலன் அவர்களை நோக்கினான். “பகை முடித்து வருக” என்றான்.

வில்லும் வாளும் ஏந்திய எழுநூறு கொற்றவைகள் புரவியேறினர். ஈச்சி பெண்புலிகளின் தளபதியெனெ முதற்புரவியில் அமர்ந்திருந்தாள். நிலவை வாட்படையை வழிநடத்தினாள். சொல்லிற்கினியாள் விற்படை. ஆடவரின் வாட்படையையும் அப்போரின் வியூகியுமென எண்திசைத் தோளன் அமைந்தான். வாகை சூடன் ஆடவரின் விற்படையை வழிநடத்தினான். சத்தகனும் உதிரரும் கதைப்படையைத் தேரில் நகர்த்தினர். ஆயிரத்து அறுநூறு பேர்கொண்ட பெரும் படை நீண்ட சரைகளாக ஒவ்வொரு படைப்பிரிவும் செல்லக் கலைந்தெழும் புழுதியை உதறி மேலும் முன்சென்றனர். கழுகு வியூகம் அப்போரிற்கென வகுக்கப்பட்டிருந்தது. இருபெரும் சிறகுகளென ஆடவரின் வாட்படையும் விற்படையும் அணைத்து நகங்களில் சத்தகனும் உதிரரும் கதைப்படையை ஒருங்கிணைக்க கழுகின் தலையென கொற்றவைகளின் படை முன்னெழும் படி திட்டம் வகுக்கப்பட்டது.

அனுதேவபுரவின் அகன்ற செம்புழுதியெழும் வீதிக்குள் எண்திசைத் தோளன் நுழைந்த போது எதிர்ப்பட்ட சிங்கை வீரர்களைக் கொல்லும்படி ஆணையிட்டான். அந்தி கரைந்து செங்குருதியென வானிலிருந்து ஊற்றி மெழுகென ஒவ்வொரு மரத்திலும் செடியிலும் பூவிலும் மண்ணிலும் பரவியிருந்தது. கருமையான பெருந்தாமரைக் குளமொன்றின் அருகில் ஈச்சி தன் படைகளை நின்று கொள்ளும் படி ஆணையொலியை எழுப்பினாள். சிறு சங்குகள் மும்முறை ஒலித்தோய்ந்தன. ஒற்றுத் தகவல்களினை இற்றைப்படுத்திய எண்திசைத் தோளன் இன்னும் இருகாத தூரத்தில் உள்ள விரிந்த புல்வெளியுடன் அமைந்திருக்கும் காட்டின் கரையில் அவர்கள் குடில்களிட்டுக் குடிவெறியாட்டில் இருப்பதை உறுதிப்படுத்தினான். எண்திசைத் தோளனும் வாகை சூடனும் தம் படைப்பிரிவுகளை ஒருக்கி நீரருந்திச் சிறிது ஓய்வு கொள்ளச் செய்தார்கள். ஈச்சியை நோக்கியவன் அவள் வற்றிய குளத்தின் கருங்குழை மண்ணையே நோக்கியிருப்பதைப் பார்த்தான். சத்தகனும் உதிரரும் கொல்வேல் ஆடவர் படையை வழிநடத்தி பேரரச மரங்களினைச் சுற்றி சிறு ஊரின் குடிகளளவு அமர்ந்திருந்தனர். சத்தகன் ஈச்சியிடம் சென்றான். “அக்கா. இன்னும் அரை நாழிகையில் இருள் சூழத் தொடங்கிவிடும் எரியம்புகளைத் தயார் செய்ய வேண்டும். நானும் உதிரரும் முன் செல்கிறோம். வியூகத்தின் ஒழுங்கில் நீ உன் படையை வழிநடத்தி அவர்களை எதிர்கொள். இருள் வீரர்கள் விற்பயிற்சியற்ற கொலைவெறிப் படையினர். வாள்களும் கதைகளும் அவர்களின் கொலைவெறியும் சேர்ந்தே அவர்களின் பலம். போரில் அவர்கள் ஒரு பெண்புலியையும் தொடக் கூடாது” எனச் சொல்லியவன் நிறுத்தி அவனது நிதானமற்ற சொற்களைக் கண்டு அஞ்சி அவளை நோக்கினான். ஈச்சி தணிந்த குரலில் “சத்தகா, போரில் ஆணுடலும் பெண்ணுடலும் ஒன்றே. அங்கு கொல்தலும் கொல்லப்படுதலுமே பொருளுள்ள செய்கைகள். ஒரு பெண்புலியையும் அவர்கள் சிறைப்படுத்திச் செல்ல முடியாது. இருள் வீரர்கள் என்ற படையில் இங்கிருக்கும் எவரும் இன்று எஞ்சப் போவதில்லை. நீ சென்று படைகளை ஒருக்கு” என்றாள். சத்தகனுக்கு அச்சொற்களின் நிதானத்தை உணர முடியவில்லை. “சரி அக்கா” எனச் சிறுவனைப் போல் சொல்லிக் கொண்டு கதையை எடுத்துத் தோளில் போட்டபடி நடந்து சென்றான். ஈச்சி நிலவையையும் சொல்லிற்கினியாளையும் அழைத்தாள். எரியம்பு எண்ணையைக் கைவரை பூசிக் கொள்ளச் சொல்லுங்கள். உடல் முழுக்க இந்தக் குளத்தின் கருங்குழைவைப் பூசிடச் சொல்லுங்கள். அவளது சொற்களைக் கேட்டு மறுசொல்லின்றித் திரும்பி உத்தரவுகளைப் பெண்புலிகளுக்கு வழங்கினார்கள் இருவரும். சொல்லிற்கினியாள் அவளது தேரில் முல்லையின் தலை சொருகப்பட்டிருந்த கொல்வேலைத் துணியில் சுற்றி வைத்திருந்தாள். குருதியை அவ்வாறேயெனப் பாதுகாத்தாள். கொல்வேலின் முனை செம்மை கொண்டிருந்தது. சென்று அதைக் கையிலெடுத்துக் கொண்டாள். நிலவை அவளின் பின்னே வந்து தோளைத் தொட்டாள். இனியாளின் உடல் விசை கொண்டு அதிர்வதையெண்ணிக் கைகளை எடுத்துக் கொண்டாள்.

பெண்புலிகள் எண்ணையைக் கைகளைத் தவிர அங்கத்தின் பிறபகுதிகளில் பூசினர். கருங்குழை சேற்றை முகத்தில் தொடங்கிக் கழல்கள் வரை அள்ளித் தேய்த்துக் கருமை சூடினர். கூந்தல் அக்கருஞ் சேற்றால் உலர்ந்து உருண்டு சாட்டைத் திரிகளெனத் தூங்கின. ஈச்சி அனைவரையும் பெருந்தேரின் முன்னே ஒருக்கச் சொன்னாள். கால்களை மடக்கி இருகைகளால் அணைத்தபடி ஒருவரை இன்னொருவர் நெருக்கி அமர்ந்திருந்தார்கள் கொற்றவைகள். போர்ச் சங்கு முழங்கும் ஒலியும் ஆயுதங்கள் மோதிக் கொள்ளும் ஒலியும் அருகில் எனக் கேட்டது. ருத்ரம் ஈச்சியின் கரங்களில் அந்தியின் இறுதியொளி கரைந்து இருள் தொடங்கியபோது நிலவெனச் சுடர்ந்தது. பெருந்தேரின் மண்ணிறமும் பொன்னும் கலந்த முகப்பில் ஏறிநின்று ருத்ரத்தை வலக்கரத்தில் உயர்த்தித் தூக்கினாள். உடல் கருமையென்றாகி விழிகளின் வெள்விரிவுகள் மட்டுமே துலங்கும் பெண்புலிகளின் அத்தனை விழிகளும் அவளை நோக்கின. இருளில் எழுந்த இருட் கொற்றவை. ருத்ரம் ஏந்திய வெஞ்சினக் கொற்றவை. ஈச்சியின் உடலில் மோதிய காற்று அதிர்ந்து திரும்பியது. விழிகளை ஒருகணம் மூடினாள் ஈச்சி. முன்னிருந்த காற்றில் எழுந்த எழுநூறு மூச்சும் தனதே என உள்ளிழுத்தாள். அக்கணம் ஒரு தொல்தெய்வம் கல்லென எழுந்து முன்னின்று அசையாது உறைந்தது போல் கருஞ்சுடர் வீசி நின்றாள். நிலவை தேர்முகப்பில் தெய்வமென நின்றிருந்த அவளை நோக்கிப் “பேரழகி” என இமைகள் கூச்சலிட விழியில் நீர்த்துளிகள் உருண்டு துளிர்த்தன.

TAGS
Share This