41: இருட் குழவிகள்

41: இருட் குழவிகள்

பேரொளியே நீ இருட்டின் குழவி
மேதமையே நீ பித்தின் குழவி
அழிகலன்களே நீங்கள் மானுடரின் குழவிகள்
அழியாத இருட்டே நீ வாழ்க
உன்னை வணங்குகிறோம்
எங்களை விட்டு அகலாதிரு
கருமையே நீயே பேரழகு
இருள் கிரணங்களே நீங்களே எங் கரங்கள்
இருளே விழியாகுக இருளே வழியாகுக
இருளே துணையாகுக
இருட்டின் மர்மங்களே எங்களைக் காக்குக
இருள் நாவுகளே எங்களின் புலனாகுக
இருள் கலைந்து விடியல் எழாதிருக்கட்டும்
இருளே நம் பொழுதாய் அமைக
இருளின் குழவிகளே இங்கே எழுக
இருளின் கனவுகளே இங்கே பொலிக

கானகம் இருளிலிருந்து தலை சிலுப்பி விழித்துக் கொண்ட போது ஏழிசைக் கூத்தனின் இருளடைந்த விழிகள் எதையும் உணராது ஆழத்திருட்டில் காட்சிகளைக் கண்டு கொண்டிருந்தன. மாபெரும் போர்க்களங்களை நேரில் கண்ட விழிகள் ஒளியிழந்து போவதே நியதி என அவன் எண்ணியிருந்தான். உருகம் நிகழ்ந்த போர்க்களம் தொட்டு இரண்டாம் பருவப் போர்வரை புலிகளுடன் இணைந்திருந்தான். இருள் வீரர் தலைவன் சோமசேனன் கொல்லப்பட்ட காட்சியை சொற்களில் பாடி பட்டினமெங்கும் புகழடைந்தான். அவனது பாடல்களில் அம்புநுனிகளின் விழிகளிருக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் அக்கணத்தில் நோக்குகின்றன எனப் புலவர்கள் பாராட்டினர். அவனது யாழும் சொல்லும் தீவுகடந்தும் பாடல்களாக ஒலித்தலைந்தன.

இருள் வீரர்கள் படை அழித்த கதையை அவன் களவீரர்களின் கதைகள் வழியே கேட்டிருந்தான். அதன் உக்கிரமான பெருங்களக் காட்சிகள் அவனுள் மதுரசமெனத் திரண்டு திரண்டு குருதி நிறத்தில் சொற்கள் பிறந்தன. அவனறியாமலே அவன் அகம் சொற்களைத் தொட்டெடுத்துக் கோர்த்தது. உளம் தாளங்களைத் தானே அறிந்து கொண்டது. சொல்லமைய எண்ணினாலே சொல் எழுந்தது. தன்னை அவனொரு சொல்லாளியென எண்ணியிருந்தான். அவனது அம்பறாத்தூணிகள் முடிவடைவதில்லை. சொற்களின் சுரங்கமொன்று அவனுடன் குடியிருந்தது. உளக்கரத்தை நீட்டினால் நான் நானெனச் சொற்கள் துள்ளி வந்தமைந்தன. ஒவ்வொன்றும் ஒருநூறு இடங்களில் தம் பொருள்களை ஆடிப்பெருக்கெனத் துலக்கியாடின. அவன் சொற்களை அவனே வியந்தான். சொல்லிணைவுகளில் களிப்பித்தாடினான்.

காலத்தின் வெளிகளை ஒவ்வொரு பருவமாக ஏழிசைக் கூத்தன் அகமறிந்த போது அவன் என்ற ஒன்றை அச்சொற்கள் மெல்ல மெல்ல அழித்தன. சொற்கள் அமர்ந்து ஆடி எழுந்து செல்லும் ஊஞ்சலெனத் தன்னை உணர்ந்தான். அச் சொற்களை எங்கோ எவரோ ஒலிக்க அவை எதிர்ப்பட்டு ஒலிக்கும் பிலவுச் சுவரெனத் தன்னை எண்ணினான்.

அகம் விழித்துக் கொண்ட ஏழிசைக் கூத்தன் பட்டினத்தின் பெருவீதியைச் செவிகளால் கண்டான். அவன் விழிப்படலங்கள் மஞ்சளடைந்து கருவென வெண்திரை படர்ந்து விழிகள் புலனழிந்து தூசுத் திரையாக ஆகிய பின்னர் அவன் செவிகளே அவன் துணையாகின. ஒலிகளைக் கொண்டு பொருளறிந்தான். ஒலிகளுக்கு உள்ள மொழியை அறிந்தான். புரவிகளின் குளம்படியோசைகளின் தாளத்தில் தரையை அறிந்தான். புற்களா வீதியா கற்பாதைகளா என அவன் உய்த்தறியக் கற்றான். வெய்யிலையும் மழையையும் உடலால் அறிந்தான். நிழலைத் தண்மையெனக் கண்டான். மானுடக் குரல்களை யாழ் நரம்புகளெனப் பிரித்தறிந்தான். அவனது உலகு ஒலிகளால் பொருள் கொள்ளப்பட்ட பின்னர் ஒளியென்பது ஒலியின் அர்த்தமென எண்ணிக் கொண்டான்.

எண்திசைத் தோளனைத் துரோகியெனக் குடிகள் சொல்லிய சொற்கள் அவன் செவிகளை அடைந்த பொழுது அவன் வலவிழியின் வெண்திரை அரைப்பகுதி மூடிக்கொண்டிருந்தது. வாகை சூடன் தனது கரம் வெட்டுண்ட கதையை மதுச்சாலையில் அவனுக்குச் சொல்லிய பொழுது இடவிழியில் மெல்லிய ரேகையென வெண்திரை நுரைக்கத் தொடங்கியிருந்தது. களங்களில் தோல்விகளும் இழப்புகளும் பெருகி பட்டினத்தில் சாவோலங்கள் நித்திய இசையென ஆகிய போது அவன் விழிகள் இருளைச் சூடிக் கொண்டன. அவன் அகம் ஆழிருட்டில் அலைந்தது. யாழில் விரல்கள் தம் நடையை இழந்தன. பழஞ் சொற்களை அவன் உதடுகள் சொல்ல மறுத்து வெறுங் காற்றென ஒலித்தன. அவன் சொல்லாத சொற்கள் அவனுள் இருட் காடுகளென முளைத்துப் பருத்தன. அக்கானக இருட்டில் அவன் தன்னைப் புதைத்துக் கொண்டான். எங்கேனும் புதிய வெற்றிப் பாடல்களைக் கேட்டால் அவன் நரம்புகள் நிதானமாக அதன் எளிமையை நோக்கும். அவன் பாடிய கடந்த காலப் பாடல்களின் பொருள்கள் ஆடியின் பூச்சென உதிரும். அப்பால் நின்றிருக்கும் வெறுமையை அவன் மீட்டினான். அரிதாக அவனது பாடல்கள் கேட்கும் மன்றுகளில் அவை நீங்கி எழுந்து சென்று அச்சொற்கள் கேட்காத தொலைவில் தன்னை இருத்திக் கொண்டான். எத்தனை கூசும் ஒளியுள்ள சொற்கள் என எண்ணுவான். இவை மானுடருக்கு உரியவை அல்ல. மானுடர் இருளில் வெளிவராமல் பாதாளத்தில் உறையும் நாகங்களென வாழ்வமைய வேண்டியவர்கள். அவர்களை உயர்த்திப் பாடும் எச் சொற்களும் எளிதில் பரவிவிடுபவை. அப்படியே நீங்கியும் விடுபவை. சொற்களில் அமர்த்தும் உச்சங்களிலிருந்து தலைகீழாக வீழ்ந்து தற்கொலை புரியும் விழைவை மானுடருக்கு எவை அளிக்கிறதென எண்ணிக்
கொண்டான். சொற்களில் சொற்களைக் கட்டி மாபெரும் கனவுப் புடவியை ஆக்கி மானுடர் அதைக் குழவிகளென மிதித்துப் பிய்த்தெறிய நோக்கி நிற்கும் காவிய நாயகர்களில் ஒருவரெனத் தன்னை எண்ணினான். அக்காவிய நாயகர்களின் சோகங்களைத் தனக்கு வரித்துக் கொண்டான். தனது பாடல்களை துக்கத்தின் யாழ்களெனப் பொருள் கொண்டு அவற்றை நீங்கிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பருவத்திலும் உதிர்ந்த இவைகளெனக் காலம் அள்ளிக் கொண்டது.

பெருவீதியின் குடிநெரிசலில் பாற்கடலில் நெய்க்கட்டியென ஏழிசைக் கூத்தார் தாழ்ந்து உலைந்தார். ஆயிரமாயிரம் புலுனிகள் காதருகே வந்து கூச்சலிட்டுப் பறப்பதெனக் குடித்திரள் ஒலிகள் அவருள் நுழைந்தன. அலைபட்டு உழன்று வேழமொன்றின் துதியைத் தூணனெ எண்ணிப் பற்றிக் கொண்டு நின்றார். மதுமயக்கில் மனை திரும்பிக் கொண்டிருந்த வாகை சூடன் இன்னொரு இருட்பாதைச் சக பயணியின் பாதைக்கோடு தன் முன் நீள்வதைக் கண்டு நிமிர்ந்தான். ஏழிசைக் கூத்தரைப் பாதி மயக்கிலிருந்த விழிகளால் கண்டு தன் விழிகள் திரும்பப் பெற்றவனானான். அவரின் அருகே சென்று “என்ன கூத்தரே, வேழத்தின் துதிக்கையை ஒரேயடியாகத் தூக்கி மண்ணிலறைய எண்ணித் தருணம் பார்த்து அமைந்து நிற்கிறீர்களா” என உரக்கக் கூவிச் சிரித்தான். வேழமா எனத் திடுக்கிட்ட ஏழிசைக் கூத்தர் கரம் மின்பாய விலக்கிக் கொண்டு “தளபதியாரே. எந்தக் கூட்ட நெருக்கடியிலும் வேழங்களை வீழ்த்துபவர்கள் ஒருவரையொருவர் கண்டு கொள்ளத் தானே வேண்டும்” என முதுவாயைச் சிரித்தார். “என் குரலை மறக்கவில்லையா கூத்தரே. நன்று. மிக நன்று” எனச் சொல்லி அவரது இருதோள்களையும் பற்றிக் குலுக்கினான். “தளபதி. ஒரு விரலால் சீறி யாழின் ஏழு நரம்புகளையும் உரசி விலகுவது போன்ற குரல் உங்களுக்கு மட்டும் தானே மானுடரில் வாய்த்திருக்கிறது” எனக் குலுங்கிய குரலில் சொன்னார் கூத்தர். “ஆஹ். முதுபாணன் அல்லவா. சொற்கள் தந்திகளென அமைந்து தானிருக்கும். வாருங்கள் மனை செல்வோம். என்னுடன் கதைப்பவர்கள் அருகிவிட்டார்கள். நீங்கள் என் உளத்திற்கு அணுக்கமானவர்” என அவரது அனுமதி கேட்காமலேயே இடக்கையைப் பற்றியிழுத்து நடக்கத் தொடங்கினான். ஏழிசைக் கூத்தர் கயிற்றால் கட்டியிழுக்கப்படும் பன்றிக் குட்டியெனக் கூட்டத்தில் திமிறியபடி நடந்தார்.

வாகை சூடன் ஒரு சொல்லும் பேசாமல் தன் இருட் பாதையை ஒற்றனின் நிழலெனப் பற்றியணைத்துக் கொண்டு நடந்தான். மனைத் திண்ணையில் அமர்ந்திருந்த உறவினர் வாகை சூடனைக் கண்டதும் எழுந்து பரபரத்து மனைக்குள் ஒடுங்கினர். திண்ணையில் அவர்கள் மீதம் வைத்துப் போயிருந்த மோர்க்கலயங்களைத் தன் கரத்தால் தள்ளி வீசி உடைத்தான். “எவற்றை நொறுக்குகிறீர் தளபதியே” என நடுக்கம் நிலையென ஆகிய குரலில் கேட்டார் ஏழிசைக் கூத்தர். “உறவினர் தலைகளை” என நகைத்துக் கொண்டு ஏழிசைக் கூத்தரைத் திண்ணையில் அமர்த்தினான். வாயிலில் இருந்த மோர்ப்பானையிலிருந்து புதிய கலயம் ஒன்றில் மோரை வார்த்து “இதனை அருந்தித் தாகம் தீருங்கள் முதுபாணரே” என்றான். அவர் வழிக்களைப்பின் நரம்புகள் ஆறும்வரை மிடறு மிடறாக உதடும் வாயும் நனைத்து மோரைக் குடித்தார்.

வாகை சூடன் அமர்ந்து சுவற்றில் சாய்ந்து கொண்டு மிஞ்சிய மதுவை ஏப்பமாக வெளியேற்றியபடி தீயிலைத் துதியை எடுத்து மூட்டினான். மனையுள் ஒடுங்கியிருந்தவர்கள் சொற்கள் கிறுகிறுக்க பின் வாசலிலும் இடவாயிலிலும் அமர்ந்து பேச்சொலிகள் எழுந்து மனை இயல்படைந்தது. “களி பார்க்க வந்தீரா கூத்தரே” என்றான் வாகை சூடன். “களியில் நான் எதைப் பார்க்க வருவேன் தளபதி. இந் நாட்களில் நான் அறியா விழிகள் கொண்டது நலமே. வயது இயல்பை விட மூத்து விட்டது. உடல் ஏதனென அறியாத நடுக்கம் கொண்டிருக்கிறது. சாரை தீண்டிய தேகமெனத் தலை நடுக்கை அடைந்து விட்டது. செவிகளில் விழும் செய்திகள் எவையும் மகிழ்ச்சியை மீட்டளிக்கும் வண்ணம் அமைவதில்லை. யாரோ பாடும் பாடலின் ஒரு சொல்லென இப்புடவியின் காற்றில் நின்றிருக்கிறேன். களி வேறு யாருடையவையோ பாடல். அதில் நானில்லை” எனச் சொன்னார். அவரது குரலில் கசப்பில்லை எனக் கண்ட வாகை சூடன் சற்றுச் சிரித்து “கசப்பை எங்கனம் கடந்தீர் கூத்தரே. எனது நாவில் கசப்பு உமிழ்நீரெனப் பெருகியபடியிருக்கிறது” என்றான்.

“கசப்பை நான் கைவிடவில்லை தளபதி. கசப்பு என்னைக் கைவிட்டு விட்டது” என நகைத்தவர் “கசப்பை ஏன் நான் அணிந்து கொள்ள வேண்டும் தளபதி. நான் எதற்குப் பொறுப்பாளி. எனது கண்ணெதிர் நின்ற காலத்தைச் சொற்களில் தொடுத்தேன். அவையும் நான் தொடுத்தவையில்லை. என்னுள் நுழைந்து தன்னைப் பாடிக் கொண்ட எவருடையதோ விழைவுகள் அவை. நான் ஒரு படைக்கலன் மட்டுமே. சொற்களால் ஆன படைக்கலன். எனது சொற்களை நான் நீங்கி விட்டேன். அல்லது கசப்பைப் போலவே சொற்களும் என்னைக் கைவிட்டு விட்டன. எது நிகழினும் இப்பெருக்கின் தூசியென எஞ்சப் போகிறவன் நான். எனக்கேன் கசப்பும் துக்கமும் வாய்க்க வேண்டும். இங்கு மெய்யான துயர் என்று யாரேனும் பொருள் கொள்ளும் ஒன்று உண்டா.

அப்படியிருப்பின் இக்களிப்பெருக்கில் அத்தகைய துயர்களுக்கு ஏதேனும் மதிப்பிருக்குமா. மானுடர் துயர் விலக்கிகள் தளபதியே. துயர்களை நீங்க எதையும் அழித்துக் கொள்ளும் விழைவு கிட்டியவர்கள். நாமும் மானுடரென ஆதல் தான் நம்மைக் காக்கும் வழி” என உரக்கச் சிரித்தார்.

“கூத்தரே. உமது சொற்கள் பாடல்களிலிருந்து தத்துவங்கள் என ஆகி விட்டன. இனி ஒருவருக்கும் விளங்காது. அதுவும் நல்லது தான்” என பேருடல் குலுங்கச் சிரித்துக் கொண்டே கூத்தரின் மேனியை நோக்கினான். தலையில் ஒரு மெல்லாடல் இருந்து கொண்டிருந்தது. விழி வெண்திரை படர்ந்து பேயோவென எண்ணத் தோன்றியது. அவரது சொற்களிலே அவர் நம்பிக்கையிழந்து விட்டார் என்பதை அவனது கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் அவர் சென்றமையும் ஆழம் சொல்லியது.

“பெருந்தளபதியுடன் சொல் வரத்து உண்டா” என ஆழத்திலிருந்து எழுந்த கூத்தர் அவனைக் கேட்டார். அவனது பதிலுக்காக அவரது செவிகள் அவனை நோக்கித் திரும்பியதை நோக்கினான். “ஒருமுறை ஓலைக்கட்டுகள் வந்தன. அவரும் உங்களைப் போலவே தத்துவம் பேசுகிறார். பதில்மொழியனுப்பவோ சந்தேகங்கள் கேட்கவோ அவரை அறிய முடியவில்லை. எங்கிருக்கிறார் எனத் தெரியவுமில்லை. உங்களிடம் ஏதாவது பகர்ந்தாரா கூத்தரே” என்றான்.

“நான் அவரைத் தேடி கிழக்கிற்குச் சென்றேன் தளபதி. நெடும்பயண யாத்திரையெனச் சென்றேன்” எனச் சொல்லிய போது அவரது முகத்தில் எழுந்த ஒளியை நோக்கியவன் ஆவலுடன் விழிகள் திறந்தான். தீயிலைத் துதியை அவர் விரல்களில் வைத்தான். களியுடன் விளையாட்டுப் பொருளைப் பற்றிய சிறுவனென அவர் துதியைத் தடவிப் பார்த்து வாயில் வைத்து உறிந்தார். புகை அவருள் நினைவுகளின் சேகரங்களை அலைத்துக் குழப்பி அந்த நாட்கள் நீருள்ளிருந்து ஆமை எழுவதைப் போல மேலெழுந்து வந்தன.

“கிழக்கிற்கு நான் யாத்திரை செல்லப் போவதாக நீலரிடம் சொல்லியிருந்தேன். அவர் அகம் என்னை ஒருகணம் உற்று மீண்டதும் அவர் என் திசையை அறிந்து கொண்டார் என அச்சமுற்றேன். அவர் என் விழிகளை நோக்கி சிறு புன்னகை போன்ற எதுவோ ஒன்று அவிழ பயணம் சிறக்கட்டும். கிழக்கின் புலிகளைக் கண்டு வாருங்கள். உங்கள் அணுக்கரைக் கண்டால் நலம் உசாவியதாகச் சொல்லுங்கள். என் தவறுகளை உணர்ந்ததாகச் சொல்லுங்கள். குடி அவரை மறவாது என்னைப் போலவே என மறக்காமல் சொல்லுங்கள் எனச் சொல்லிச் சிரித்தார். அது ஏதேனும் ஒற்று நடவடிக்கையாக இருக்குமோ என அஞ்சினேன். அப்பால் நின்றிருந்த அரசி நிலவையின் முகத்திலிருந்த நிதானமான சோகத்தை உற்றதும் புரிந்து கொண்டேன். அவர் ஈச்சியையா உங்களையா தோளரையா நினைத்து அச்சோகத்தைச் சூடியிருந்தார் என நான் அறியவில்லை. ஆனால் அதுவோர் பேரன்னையின் சோகம்.

கிழக்கின் வழிகளில் நான் பயணப்படும் பொழுதே எனது வலக்கண் திரை முக்கால்பங்கு மூடுண்டு விட்டது. இடவிழியில் காற்பங்கு திரை கொண்டு விட்டது. எஞ்சிய விழியால் அனைத்தையும் நோக்கி கண்டு உற்று அறியும் விழைவுடன் ஒரு பாணர் கூட்டத்துடன் இணைந்து கொண்டேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். எனது பாடல்களை நானே கேட்டு அதிசயிக்கும் வண்ணம் அச் சொற்கள் அவர்களது நாக்களிலிருந்து வேகங் கொண்டெழுந்து மன்றுகளையும் சத்திரங்களையும் வனக்குடில்களையும் எழுப்பின. நான் எனது பெயரை பாலைச் சொல்லன் என வைத்துக் கொண்டேன். அப்பெயர் எனக்குப் பிடித்திருந்தது. எனது மறைவான வாழ்க்கை ஒரு பருவம் நீடித்துக் கிழக்கின் எல்லைக் கிரமாங்களில் அலைந்தேன்.

அங்கிருந்த வேழப்பதி எனும் கிராமத்தில் ஊர்ச்சபையில் குடிச் சிக்கல்கள் தீர்க்கப்படுகின்றன எனும் சேதி கேட்டுப் பாடல் பாடி உண்டி கேட்கலாம் எனப் பாணர் கூட்டம் மன்றுக்குச் சென்று வாயிலில் அமர்ந்து கொண்டது. நானும் அவர்களுடன் ஒண்டிக் கொண்டேன். உள்ளே குடிச்சிக்கல்கள் விசாரிக்கப்பட்டுத் தீர்க்கப்பட்ட பின்னே செல்வது பொருத்தம் என எண்ணியிருந்தோம். சிறிய மன்று. இருநூறு பேரளவில் அமரக் கூடியது. தென்னோலைகளால் வேயப்பட்டு அங்கும் இங்கும் கிழிசல்களுமிருந்தன. உள்ளிருந்து பாட்டும் தாளமும் நகைக்கும் ஒலியும் கேட்ட நம் குழு இன்று நமக்கு உண்டியில்லை. ஏற்கெனவே ஏதோ ஒரு குழு உள்ளே சென்றுவிட்டார்கள் எனப் புலம்பத் தொடங்கினர். பாடலை நான் உற்றுக் கேட்டேன். நகைப்பொலிகளுக்கிடையில் பாடல் எங்கோ தொலைவில் ஒலிப்பது போல் கேட்டது.

கதைகள் மோதிய வேழங்கள் வீழும் போது ஆடிய கால்களை போர்நடனமெனச் சொல்லி நான் எழுதிய வரிகள் சில்லுச் சில்லாய் என் காதுகளில் விழுந்தன. அதிர்ந்து போனேன். என் சொற்களே. என் சொற்களே என அகம் கூவியது. நேரே மன்று வாயிலைக் கடந்து உள்ளே சென்றேன். நூற்றுக்கும் மேலே சிறுவர்களும் அன்னையரும் பெண்களும் முதுபெண்டிரும் கிழவர்களும் அமர்ந்து கைகளையும் கால்களையும் தட்டி ஓசை எழுப்பினர். இரு யாழ்களை சிறுமிகள் இருவர் விரல்கள் போன போக்கில் தட்டிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சிறுமியொருத்தியின் கரங்களிலிருந்த யாழைக் கண்டதும் எனது விரல்கள் நடுங்கின. அது என் சீறி யாழ். நான் எண்திசைத் தோளருக்குப் பரிசாய்க் கொடுத்தது. நானும் அவரும் பாடல்கள் புனைந்து இசையமைத்தது. அவர் இங்கு எங்கோ தான் இருக்கிறார் என அகம் துடுக்குற்றதும் விழித்திரைகள் நீங்கி முழுவிழிகள் கொண்டவனானேன். மன்றைச் சுற்றிலும் நோக்கினேன். எங்கும் வாலிபர்களே இல்லை. அவர்கள் வனக்குடில்களிலும் எல்லைகளிலும் காவலுக்கு நின்றிருப்பார்கள் என எண்ணினேன். பெண்களும் குழவிகளும் சிரித்தபடி பாடலைப் பாடிக்கொண்டிருந்த பேய்முகமூடி அணிந்திருந்த பாணனை நோக்கினேன். அப்பேருரு. அப்பெருந் தோள்கள். அம்மேனி வடுக்கள். அவை அவரே தான். எண்திசைத் தோளன் ஒரு கூத்தனென சபை முன்னே எழுந்து நடனமாடிக் கொண்டு உரத்த குரலில் என் பாடலைப் பாடிக்கொண்டிருந்தார். என் விழிகள் நெடு நாட் கழித்து புரண்டெழுந்தன. வாயிலின் அருகிருந்த பனையோலைப் பாயில் அமர்ந்து சுவரில் சாய்ந்து கொண்டேன். உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. உளம் ஏதென்றறியாத மகிழ்ச்சியில் திளை வெள்ளமென என்னுடலைக் கரைத்தது. காற்றில் என் சொற்கள் எழுந்து களங்களை விரித்தன.

வென்றிடத் திசைகள் ஏதுமிலான்
ஆயிரம் கூற்றுவர் தோளுருவான்
சிம்மங்கள் அஞ்சிடப் போர்புரிவான்
வாகை மாலைகள் வனமுடையான்

போர்க்களம் காண்கையில் தசமுகத் தோற்றன்
போர்க்களியாடிடும் போதினில் ஈசன்
போர்க்கதை சொல்லிடும் பேச்சினில் பாணன்
போர்கள் ஓய்கையில் எம்மினி தோளன்

வீசிய வாள்கள் வீழ்த்திய வேழங்களே
கூசிடும் மின்முனைக் கூர்த்த அம்புகளே
பாறிய கதைகளால் எழுந்த பாதாள நாகங்களே
எம் உயிர்த் தோளன் வருகிறான்
எண் திசைத் தோளன் எழுகிறான்

எனக் கூவி பேய்முகத்துடன் அவர் ஆடியபோது பெருஞ் சிரிப்பலைகள் எழுந்தன. கால்கள் நகைச்சுவை நாடகமென்ற பாவனையில் துள்ளின. கரங்கள் மலர்களை அள்ளிக் குழவிகளில் வீசின. பெண்கள் அவரை நோக்கி அம்மலர்களைத் திரும்ப எறிந்தனர். தலையைத் தாழ்த்தி அதை வாங்கிக் கொள்பவர் போல பாவனை செய்து மேலும் மலர்களை அள்ளிப் பெண்களின் மேல் எறிந்தார். அவர்கள் ஒவ்வொரு மலராய் எடுத்துக் கூந்தல்களில் சூடினர்.

ஆட்டம் முடிந்ததும் அவர் மன்றுமேடையின் பின் சென்று மறைந்தார். பெண்கள் குழவிகளை அழைத்துச் செல்ல எழுந்தனர். எமது பாணர் குழுவினர் இருவர் உள்ளே சென்று மன்றுத்தலைவரிடம் சேதியைச் சொல்லினர். வடக்கிலிருந்து வந்திருக்கிறார்கள் என்ற செய்தி பரவ அனைவர் முகத்திலும் மீண்டும் களிபரவியது. இன்று வேழப்பதியில் இரவுக்களியெனக் கிழவர்கள் உரக்கச் சிரித்தனர். அன்னையர் உண்டி தயாரிக்க மன்றின் அருகே அடுப்புகளை மூட்டச் சொல்லி நடுவயதுக்காரர்களை அனுப்பினர். அவர்கள் சிறு பாறைகளை ஒன்றாக்கி எரிவிறகுகள் கூட்டிப் பெருங்கலயங்களை வைத்து நீரூற்றினர். கள்ளும் தேவமலர்களும் கொணர்ந்து வைக்கப்பட்டது. பாணர் குழு யாழ்களைச் சுதிகூட்டிக் கள்ளை அருந்தியது. “என்ன பாடல் வேண்டும் என் குடிகளே” என முதுபாணர் சாகர விற்பர் கேட்டார். இளம் பெண்ணொருத்தி “எண்திசைத் தோளரின் காதல் பாடல்களைப் பாடுங்கள் பாணரே” எனக் கூவினாள். கூட்டத்தில் சிரிப்புகள் கலய ஒலிகளென எழுந்தன. “அவரா. ஆஹ். அவர் மண்மீது மட்டுமே காதல் கொண்ட மகாவீரரல்லவா பெண்ணே” என சாகரர் கள் மயக்கில் கூவினார். மீண்டும் சிரிப்பொலிகள் கலகலத்தன.

நான் மன்றின் மேடையின் பின்னே சென்று நோக்கினேன். யாருமில்லை. இருட்டில் தீயிலைப் புகையெழும் திசை நோக்கி உள்ளுணர்வால் வழிநடந்தேன். அருகில் கடலிருந்ததை என் செவிகள் அதுவரை கேட்கவில்லை. அமைதியான கடல். ஐந்து பெரும் பாறைகள் கரையில் முளைத்து நின்றன. அதன் பாறையுடல்களை அலைகளின் வெண்பற்கள் மோதிச் சிரித்தன.

நெடுநாட் பிரிந்த காதலியைக் காணும் உள்ளங்களை விட வியப்புக் கூடியது தோழர்களைச் சந்திக்கும் தருணமென அன்று உணர்ந்தேன். அப்பருவுடல் பாறை மேல் அமர்ந்தபடி விரிகடலை நோக்கியிருந்தது. வானம் மின்னிச் சரியும் கருமுகில்களால் ஆழியின் மையம் ஒளிகொண்டிருந்தது. நான் நின்ற வெளியின் மேலோ நிலவு வெண்கல்லென ஒளிர்ந்தது. எண்திசைத் தோளன் காற்றுக்கு உடல் சாயவிட்டு கால்களை பாறையில் தொங்கவிட்டு அமர்ந்திருந்தார். நெருங்க நெருங்க அவ்வுரு இனியதாகியது. தோழனாகியது. அருமையென்றாகியது. ஐம்பாறைகளை நோக்கிச் செல்லும் வழியின் இருமருங்கிலும் கண்டல் காடுகள் சடைத்து நின்றன. சிறு நரிகளின் ஊளைகளும் நண்டுகளின் ஓட்டங்களும் செவிகளில் துல்லியமெனக் கேட்டன. உளம் மகிழ்வில் உயிர்க்கையில் புடவி தன் ஒயாத ஒலிகளைப் பாடலெனச் சமைக்கிறது. அப்பாடலைக் கேட்கும் செவிகளில் காலம் தனது நடையின் தாளத்தை அளிக்கிறது. தொலைவில் இருளில் என் உருவைக் கண்டுற்ற கூர்விழியால் பாறையின் மேல் எழுந்து நின்று இரு கரங்களையும் சிறகுகளென விரித்து அவரது சிம்மக் குரலில் “கூத்தரே” “கூத்தரே” எனக் கூவினார். என் பெயர் அத்தனை இனியதாய் இன்றுவரை யாராலும் அழைக்கப்பட்டதில்லை தளபதி”.

TAGS
Share This