மெரினாவின் அலை ஒதுங்கிய கரை

மெரினாவின் அலை ஒதுங்கிய கரை

ஏராளமான விமர்சனங்கள் வவுனியா உண்ணாவிரதப் போராட்டத்தின் மீது உருவாகி வருகிறது. வழமையை விட கடந்த ஆறு வருடங்களுக்கும் மேல் இடம்பெற்று வந்த காணாமல் ஆக்கப்பட்டு வந்தோர், அரசியல் கைதிகள், பயங்கரவாதச் சட்டம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இன்னும் பல அரசியல் பிரச்சினைகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தற்போது உருவாக்கியிருக்கும் அலை என்பது புதியது. வழமையாக சோக ஸ்ட்டேட்டஸ் போட்டு கண்ணீர் புரொபைல் போட்டு கடந்து விடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களில் சில நூறு பேருக்காவது அரசியல் ரீதியில் தெருவில் இறங்குவதும், போராட்டங்களில் பங்கு பெறுவதும் பெரியளவிலான அனுபவங்களைக் கொடுத்திருக்கும்.

ஒரு போராட்டத்தை ஒழுங்குபடுத்தும் போது எழக் கூடிய சிக்கல்களை தற்போது சிலநூறு பேராவது அறிந்திருப்பது எம்மைப் பொறுத்தவரை பெரிய மாற்றமே. இவ்வளவு காலமும் பத்து இருப்பது இளைஞர்கள் கலந்து கொண்ட , அதிலும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தான் அதிகம், ஆனால் இப்பொழுது களத்திற்கு வந்திருப்பவர்கள் புதிய இளைஞர்கள்.

ஒருவகையில் தமிழ் நாட்டில் இடம்பெற்ற அலை தான் இவர்களில் பலரிடம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இந்த இளைஞர்கள் வெறும் தகவலளவில் பிரச்சினைகளை அறிந்து வைத்திருப்பதை விட அந்தப் பிரச்சினைகளின் பல்வேறு சிக்கலான நிலைமைகளையும் நாடு தழுவிய ரீதியில் இந்தப் பிரச்சினைகள் எப்படி எதிர்கொள்ளப்படும் என்பதையும் அறிய வேண்டும்.

மேலும் குறித்த ஒரு பிரச்சினையை பற்றிய போராட்டமோ அல்லது விழிப்புணர்வோ ஏற்படுத்தும் போது இளைஞர்கள் இனி கொஞ்சம் வாசிக்க வேண்டும். உரையாடல்களில் கலந்து கொள்ள வேண்டும். முதலில் அனைவரும் ஒன்றிணைந்து சிந்திப்பதற்கு சில பொது இணைப்புகள் தேவைப்படலாம். உதாரணம் – “தமிழன்டா “,ஆனால் அதற்கு அப்பால் அறிவு தான் தேவை. அதுவும் மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் தோன்றவேண்டிய அறிவு தான் வெகுமக்களை வழி நடத்த வேண்டியது. அவர்கள் பொதுப்புத்தியில் சிந்தனைகளைக் கொண்டவர்கள். ஆனால் மாணவர்களும் இளைஞர்களும் அப்படிச் சிந்திக்க கூடாது.

வவுனியா உண்ணாவிரதமோ அல்லது இதற்கு முன்னர் இடம்பெற்ற பல போராட்டங்களோ அல்லது கவனயீர்ப்புகளோ பெரும்பாலானவற்றுக்கான எனது ஆதரவு என்பது குறித்த கோரிக்கை மீதே, அல்லது குறித்த பிரச்சினையின் மீதானது.

சில உதாரணங்களைப் பார்க்கலாம், அதன் போது அரசியல் பற்றிய விழிப்புணர்ச்சியோ அல்லது அரசு இத்தகைய பிரச்சினைகளை எப்படி கையாளும் என்பது பற்றியோ பெருமளவிலான அறிதல் எம்மிடமில்லை. இப்பொழுது வரை கூட இல்லை.

வித்தியாவின் படுகொலையின் போது அது ஒரு கொதிநிலை ஏற்படுத்தும் பிரசினையாக மாறியது. வித்தியா ஒரு குறியீடானாள். அதன் போது தன்னெழுச்சியான வெகுஜன எதிர்ப்புணர்வொன்று நாடு தழுவியும் ஏற்பட்டது.

ஆனால் அது ஒரு அரசியல் நகர்வாக மாறவில்லை. உணர்ச்சிகரமாகவே அந்தப் பிரச்சினை தொடர்ந்து கொண்டுள்ளது.

இன்னுமொன்று ,பல்கலைக் கழக மாணவர்கள் படுகொலையின் போது இடம்பெற்ற மாணவர் குரலென்பது உடனடியாக பலமானது போல் தோன்றினாலும் அது உடனடியாக நீர்த்து விட்டது. அரசு மிகத் தந்திரமாக இந்தப் பிரச்சினையை வென்று விட்டது. அவர்களின் மரண ஊர்வலத்தின் போது வீதியில் பொலிசே இல்லை. அது கட்டற்ற சுதந்திர வெளியை அதிலிருந்தவர்களுக்கு கொடுத்தது. அவர்கள் கத்திவிட்டு குடித்து விட்டு அடங்கி விட்டார்கள். அதற்குப் பின் மாணவர்கள் வீதியை மறித்து போராடிய போது அவர்களுக்கு ஊடகங்களுடன் எப்படி நடந்து கொள்வதென்று தெரியவில்லை. அவர்களுடைய நிர்வாகத்தை அவர்களால் எதிர்த்து நிற்கும் பலமிருக்கவில்லை.

இதைப் பற்றி விரிவாக உடனடியாகவே நான் எனது கருத்துக்களை முடிந்த அளவில் அவர்களுக்கு வழங்கியிருந்தேன். ஆனால் அப்படி உடனடியாக புரிந்து கொள்ளும் நிலை இருக்காதென்பதும் தெரியும். இன்றும் கூட அந்தப் பிரச்சினை தொடர்கிறது.

நான் பங்குபற்றிய சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சினை கூட பல வாக்குறுதிகளுடனும், வழக்குடனும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. எதுவும் வெற்றிகரமான ஒன்றை வாங்கித் தரவில்லை. அதற்கு அருந்தலான உதாரணங்களே உண்டு.

சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பில் “Green Trincomalee ” யின் படிப்பினைகள் நாம் அவதானிக்க வேண்டியவை. வெகு சிலரைக் கொண்ட அந்த அமைப்பானது மெதுமெதுவாக எப்படி பொதுமக்களைத் திரட்டி போராடியதும் அதே வேளையில் அரசியல் ரீதியான நகர்வுகளை அவதானித்ததையும் நாம் கற்றுக் கொள்ளவேண்டும்.

இன்னும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு நாம் பழக்கப்படவில்லை, வெல்வதற்கான போராட்ட வழிகளை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம் .

அரசியலற்றதாக எந்தப் போராட்டமும் இருக்கமுடியாது. குறைந்தது வெகுஜன அரசியலாவது அதிலிருக்கும்.அதனை நாம் விளங்கி கொள்ள வேண்டும்.

இளைஞர்கள் மத்தியில் அரசியல்வாதிகள் மேல் வெறுப்பிருப்பது அல்லது சுயலாபங்களுக்காக போராட்டங்களை பயன்படுத்துபவர்கள் மீது எதிர்புணவிருப்பது இயல்பே. ஆனால் அரசியல் மீது வெறுப்பிருப்பது ஆபத்தானது. “அரசியல்” சமூகத்தின் மிக முக்கியமான இயக்கம். அதன் மீது வெறுப்புணர்வு கொள்வது ஆபத்தான போக்கு, நாம் அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும், கற்க வேண்டும், பயன்படுத்த வேண்டும். வெகுஜனத் தளத்திலான ஒரு அரசியல் விழிப்புணர்ச்சியை கட்ட வேண்டியது இளைஞர்களின் வேலையே. அதனை இளைஞர்கள் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது. அதற்கான அனுபவங்களே தொடர்ந்தும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

பலமான புரிதலிலிருந்தே வெற்றி பெறும் அரசியல் தொடங்கும். அதனை நாம் செயல்வாதமாக்கும் போது தான் இந்தப் பிரச்சினைகளின் தீர்வுகள் சாத்தியம்.

(2017)

TAGS
Share This