50: திசையிலான்
பட்டினத்தின் முகவாயில் கடந்த பெருங்கூட்டமொன்றிற்கிடையில் இரு கருங்காளைகள் பூட்டிய வண்டிலில் சிகை காற்றில் தீவிலகலெனப் பறக்கக் கொற்றன் எழுந்து நின்றான். விசும்பிடை உதித்துக் கதிரினைச் சூடி மண்ணளையும் சிறுகுழவியென அந்தரத்தை ஆட்டிடும் ஆதவன் மைந்தனென அவன் மேனியெழில் தோற்றிற்று. கூட்டத்திலிருந்த இளம் பெண்கள் கலகலத்து நகைத்தபடி கொற்றனின் அழகுடலை விழிகளால் மொய்த்தனர். அவன் அங்கிலா வெளியில் அலைப்புற்ற பித்தனின் சிலையென உறைந்து நின்றான். சிறுகடலில் சவமெனக் கிடந்த சிறுதுண்டில் எரிந்து கொண்டிருந்த சுடலை நெருப்பை விழிகள் நோக்கி நின்றன.
கம்பளி வைரவச் சித்தரை அவன் காண்பதுவே அவன் பாதையின் தொடக்கம். கிழக்கின் திரிமலைக்குன்றில் அலையும் மந்திகளும் மான்களும் சூழ் அடவியில் விண் நோக்கி விழி நிலைத்திருந்தவனை இருள் முகங் கொண்ட சித்தரொருவர் மரவேரென மிதித்துச் சென்றார். திடுக்கிட்டு விழித்தவனை நோக்காமல் திரிமலை உச்சியில் ஆடும் சிவனின் திசை இட்டு நாகமெனச் சீறி நடந்தார். மான்கள் தலை தாழ்த்தி விலகின. மந்திகள் கொப்புகளில் தூங்கியாடி ஒலியற்று அமைந்தன. கொற்றன் அவரைப் பின் தொடர்ந்து ஓடினான். அவரது முதிய உடலின் வேகத்தை வியந்து கொண்டு சிறுபற்றைகளைத் தாவி முட்கள் குற்றி இரத்தம் படர்ந்து பாதம் குளிர ஓடினான். இருட்டில் நின்ற ஒற்றை லிங்கமும் அதனைச் சூழநின்ற நூற்றெட்டு நாகச் சிலைகளும் இருளில் அசைந்து கொண்டிருப்பவை போல் தோன்றின. பிறையொளி வெள்மஞ்சள் காணும் எதிலும் மின்னியது.
இருள் முகச் சித்தரின் விழிகள் கருமையில் கருமையென விழிவட்டம் கொண்டிருந்தது. பேராழியில் ஆர்த்தெழுந்த அலைகளைப் பாறை மலையுச்சியில் நின்று நோக்கியவர் அங்கிருந்த பாறைச் சிறு கல்லொன்றைத் தூக்கி குன்றிடை வெளியில் எறிந்தார். பிளவு போன்ற இருபாறைகளில் உரசிக் கொள்ளாமல் கடுநீல ஆழியில் தொம் என வீழ்ந்த கல்லின் ஒலி கொற்றனது செவிகளை எட்டியது. இன்னொரு கல்லை எடுத்துக் கொற்றனை நோக்கி எறிந்தார். அவன் அதை ஏந்தி அத்திசையை நோக்கிக் கொல்வேல் எறிபவனென விசை கொண்டு எறிந்தான். மலைப்பாறைகளில் பட்டு பாறைக் கல் உரசியெழுப்பும் ஓசை தடதடவென எழுந்து தொம் என்றது. அடவியில் கூகைகள் குழறுமொலி கேட்டுக் கொண்டிருந்தது. நரிகளின் ஊளை முனகலென ஒலித்தது. கருமையும் சாம்பலும் கலந்த நீள்வால் மந்திகள் கூட்டங் கூட்டமாக வந்து பெரும்பாறைக் குன்றைச் சுற்றி அமர்ந்திருந்து அவர்களை நோக்கின.
இருள் முகச் சித்தர் உரக்கச் சிரித்தார். அவன் மேலும் மேலுமெனக் கற்களை இருகரங்களிலும் அள்ளி விண்கற் தெறிப்பென வேகங் கொண்டு வீசினான். பாறைகள் அவனை நோக்கி அதிர்ந்து சிரிப்பதெனக் கற்கள் உருளும் ஒலி அவனை அறைந்தறைந்து மோதியது. தன்னிரு இளங்கரங்களும் இற்று வீழும் வரை எறிந்தெறிந்து விசையிழந்து சரிந்தான். உள்ளங் கைகளில் குருதிக் கொப்பளங்கள் எரியத் தொடங்கின. காற்றில் அவை மூச்சு விடுபவை போல ஊதியடங்கின. அவனருகே இருந்த நாகச் சிலையருகில் வந்தமர்ந்த இருள் முகச் சித்தர் ஆழி நோக்கி அமைந்திருந்தார்.
பிறைவெளிச்சத்தின் மஞ்சளிருளில் நூற்றெட்டில் ஒரு நாகம் அசைந்தது போல் இருள் முகச் சித்தரின் சொற்கள் எழுந்தன “மூடனே. வீசு காற்றை எதிர்த்து நிற்கும் கல்லால் என்ன பயன். நீ வீசியவற்றில் ஒரு கல் ஆழியில் புகுந்திருப்பினும் புடவி அளித்த ஒன்றையேனும் நீ இழந்திருப்பாய் என நினைத்தேன். நீ அத்தனையையும் குவித்துக் கொண்டு வெறுங் கல்லென நின்று கொண்டிருக்கிறாய். கேள். காற்றை எதிர்க்கும் கல் காற்றால் ஆனது. எடையற்று எழுவதே எண்ணும் திசையேகும் நுட்பம். எடையற்று வா. செல். வடக்கின் பிணக்காட்டிடை கம்பளி வைரவனைச் சென்று சொல் பெற்று மீள். அவன் இம்மையில் உன்னிடம் எஞ்சுபவற்றை அழித்தருள்வான். அவன் உன் சொற்களை அளிப்பதற்கு முன் நீ அதற்கு உன்னை ஒப்பளிக்க வேண்டும். நினைவில் கொள். எடையற்ற சொல்லே நீ எண்ணுவதை ஈட்டும்” எனச் சொல்லி விழி மூடி ஒரு கணம் உறைந்து பிளவுப்பாறையில் ஒலியாழது வீழ்ந்த கல்லைப் போல் வனத்தில் புகுந்து மறைந்தார். கொற்றன் புலரி வரை உச்சியில் கிடந்தான். விழிகள் நீர் சொட்டிக் கொண்டிருந்தன. இளஞ் ஞாயிறு உதித்த போது புன்னனற் சுடரொன்று அவனை அழைப்பது போல் ஒளிகொண்டது. வெறுங் காலில் நடந்து வடக்கின் முனை தொட்ட போது விழவுக்கெனப் போய்க்கொண்டிருந்த வண்டிலோட்டிகள் அவனை ஏற்றிச் சென்று அன்னமும் நீருமளித்தனர். ஒரு சொல்லும் பேசா மெளனியென அவர்களுடன் பட்டினம் நுழைந்தான்.
காட்டு விறகுகள் எரியும் சுடலையில் உச்சிப் பொழுதில் பேருருவம் ஒன்று ஊழ்க நிலையில் அமைந்திருந்தது. வண்டிலோட்டிகள் மலரள்ளிக் கடலில் எறிந்து ஈசனே ஈசனே என்றனர். இளம் பெண்ணொருத்தி யாரவர் எனக் கேட்ட ஒலிக்கு வைரவச் சித்தர் என மறுமொழி காற்றில் எழுந்தது. அச்சொல்லொன்றையே எண்ணியெண்ணி வந்துகொண்டிருந்த கொற்றன் கணமும் நினைவெடுக்காது வண்டிலிலிருந்து குதித்தான். சிறுகடலில் தொடை புதையத் தளிர்நீலநீர் விலக்கித் திரும்பி நோக்காமல் நடந்து சென்றவனை நோக்கி வண்டிலோட்டிகள் மேலும் மலர்களை அள்ளிக் கடலில் எறிந்து ஈசனே ஈசனே என்றனர்.
சுடலையை நெருங்க நெருங்க ஊனுருகும் நாற்றமெழுந்து தீச்சுவாலைகள் ஊன் தசையென முளாசிக் கொண்டிருந்தன. அவன் தன்னை உந்திய விசையொன்றால் அடித்துச் செல்லப்படுபவனைப் போல சுடலையை நெருங்கிக் கம்பளி வைரவரின் முன் நின்றான். நீண்ட சடைமுடி திரிந்து கயிறானவைகள் போல் இருதோள்களிலும் வழிந்து மார்பை மறைத்துத் தூங்கியது. மூடிய விழிகளும் புருவமும் அனல் நெளிவென விம்மின. பரந்த நுதலில் நீறு மலர்ந்திருந்தது. பெரும்பற்றை போன்ற மீசை குறுங்கதைகள் போல் இருபுறமும் மேலுதட்டிலும் நீண்டிருந்தன. புகை படிந்து நரைத்த ஆலமர வேர்களெனத் தாடி கொண்டிருந்தார். இடக்கால் மேல் வலக்காலைத் தொடையில் போட்டபடி கரங்களை நீட்டி ஊழ்கத்தில் நின்றவர் அவனை அறியாதவரென அங்கிருந்தார். எரிவிறகுக் கட்டைகளின் மேல் பெருங் காளையொன்று எரிந்து ஊனழிந்து கொண்டிருந்தது. அதன் விழிமணிகள் உதிரப் போவபையென தலையிலிருந்து நழுவி நீண்டு தூங்கின. தீப்பட்ட கொம்புகள் மேலும் பொலிவு கொண்டு முரசுக் கோல்களென இறுகி நின்றன. அவன் சுற்றிலும் நோக்கினான். வெண்மணலில் நூற்றுக்கணக்கான வரிகள் எழுதப்பட்டிருந்தன. குறிகள் வரையப்பட்டிருந்தன. காளையை இழுத்து வந்த வழியில் மட்டும் மண்ணெழுத்துகள் கலைந்திருந்திருந்தன. அவன் ஒவ்வொரு சொல்லாய் நோக்கினான். ஒன்றுடன் ஒன்று பொருள் பட மறுத்தது. எங்கிருந்து தொடங்கி எத்திசையில் நீள்வதெனக் குழம்பி அலைந்தன விழிகள். எரியும் காளையை மும்முறை சுற்றி நோக்கினான். வடதிசை நோக்கிய சொல்லொன்று மணலிடைப் புழுவென நெளிந்தது.
முதற் சொல் “ஓம்” என விறகு நுனியால் மணலின் சதையைக் கீறி எழுதப்பட்டிருந்தது. அதன் கீழே திசைக் கொன்றாய் எறிந்த ஊன் துண்டெனச் சொற்கள் வடிந்திருந்தன.
பிறப்பின் இறப்பன போல்வன யாமே
பிறப்பை இறப்பதைப் போல்வதும் யாமே
யாக்கை விழைந்தது போலதும் யாமே
சித்தம் அழிந்த சிவமும் யாமே
சித்தை அழிக்கும் சிவமும் யாமே.
சொற்கள் ஈரமூறிய மணற் சுவரில் நகங்களால் வரையப்பட்டவை போல அமைந்திருந்த வடகீழ்த் திசையில் இருமானுடர் புணர்வது தலைகீழாகத் தோன்றியது. மேலும் கீழும் திசையற்ற மணற்துகள் வெளியில் சடையும் கூந்தலும் சிறு புழுக்களென அலைய அல்குலும் லிங்கமும் ஒன்றையொன்று விழுங்கி நின்றன.
புழுப்பதைப் புழுவென்றானேன்; புணர்வதைப் புணரிலியென்றேயானேன்.
கழிப்பதை மலமெனக் கண்டே நாடினேன்
சிறுப்பதைச் சலமெனச் சிந்தவும் கூடினேன்
யோனியை நறும் புண் என்றவன் மேலது
கொங்கைகள் சீழ்ப்பழம் கண்டவர் மேலது
விஞ்சிய ஆண்குறி வெற்றுடம்பானது
மிஞ்சிய சுக்கிலம் நிணக்கூழானது
அஞ்சுவர் நானிலம் ஏகினும் கண்டிலர்
வஞ்சியர் நெஞ்சினில் தூங்குதல் நீப்பவர்
எந்தையும் ஆடிய வான்மிசைக் கூத்திலே
யாக்கையை அரியாயோ வாக்கினின் பூதமே.
கிழக்குத் திசையில் எருக்கம் பூக்கள் கொட்டப்பட்டு அதனைச் சுற்றியும் வெள்விடையின் கொம்புகள் தீற்றி அதன் விழிகளென இரு குவி எருக்குகள் வைக்கப்பட்டிருந்தன.
நாற்றிசை ஆடிய எண்முதற் பூதன்
தீத்திசையாகிய கார்குழற் கூற்றன்
எத்திசை ஏகினும் என்முதல் வேந்தன்
அத்திசை அறிகிலார் அவனிலா மூடர்
அலகிலாப் பித்தில் நானொரு தாளம்
எந்தையொரு ஓசை
முடிவிலாக் கூத்தில் அவனொரு கழல்
நான்விழு நிழல்
துடியிலா உடுக்கில் நானொரு நாகம் அவனிரு விரல்
ஒழிவிலா இருட்டில் எந்தை பெருங்கணம் நானவன் மூச்சு.