51: திசையிலான்: 02

51: திசையிலான்: 02

கிழக்கின் கீழ்த்திசையில் கழலில் குலுங்கும் சிலம்புடன் உவகையின் நடுக்குடன் ஒரு கழல் மணலின் கன்னம் பிளந்து செதுக்கப்பட்டிருந்தது. கொற்றன் தன் விழிகளால் துழாவி அக்கால் ஒரு பெண்ணினுடையதெனக் கண்டான். கழல் நெளிவில் அமைந்த மயக்கை நோக்கி நின்று விரல்கள் மலர்க்கன்றுகளென மண்ணை உந்தியெழும் பாவனையை உற்று வரிகளிடை மீண்டான். அனல் கீழ்க்கிழக்கை நோக்கி கரும்புகையென நீண்டது.

அன்னையின் கழலே போற்றி என் அப்பனின் அணங்கே போற்றி
சொப்பனம் மீறியவள் போற்றி
சக்தியே அனலே ஆற்றலே அறிவே
பக்தியே முற்றலே முயக்கே இச்சையே விழைவே கசப்பிலா ஊற்றே
பேரின்ப வீடே பெரும்பெரும் பேறே
அத்தியே முத்தியே ஆனந்தப் பெருநாட்டே
போற்றி நின் கழல் போற்றி போற்றியே.

இடவியே சிவையே சீத்துவத்தாளே
எருவியே எருக்கே ஏகச் சுடர்த் திரியே
அருவியே அம்மையே அங்கமிலாளே
கடப்பியே கடத்தலே காண்பவை காண்பவை நீயே
ஊழே உடுக்கையே உதிரத்தின் சீவனே
விளக்கே விளம்பியே வீசு பொற்காற்றே
தானே அமைந்த தானற்றவனின் தானே
தாள் போற்றி விம்மி நின் தாள் போற்றி போற்றியே.

கொற்றன் முழந்தாளில் அமர்ந்து நான்கு கால்களில் நடந்து வரிவரியாய் மூண்டிருந்த நெருப்பை ஊதிப் பெருக்குபவனென மூச்செழுந்து ஊர்ந்து மேற்கின் திசையில் உதிர்ந்திருந்த கொன்றைகளுக்கிடையில் இருபுருவங்களுக்கு மேலே மையமிட்டிருந்த நுதல் விழியொன்றைக் கண்டான். சர்ப்ப வளைவுகள் கொண்ட இமை சாற்றியிருக்க நெரியும் விழிமடல் நோக்கினான். அதன் கீழ் வரையாமல் பிதுங்கியிருந்த இருவிழி மேடுகள் போன்ற மணல் புடைப்பை உற்றுச் சொல்லென மண்ணில் நிகழ்ந்தவை நோக்கினான்.

எரிவிழியினாய் உந்தனுக்கே அடைக்கலம்
கொன்றவர் கொல்லப்பட்டவர் வென்றவர் வெல்லப்பட்டவர்
ஈன்றவர் ஈனப்பட்டவர்
கற்றவர் கற்கப்பட்டவர்
மீண்டவர் மீட்கப்பட்டவர்
சென்றவர் செலுத்தியவர்
எய்தவர் எய்யப்பட்டவர்
உற்றவர் உற்று நின்றவர் நிறுத்தலார் கண்டவர் காணப் பெற்றவர் சுந்தரர் சூனியத்தைத் தின்றவர் தின்னப்பட்டவர்
கனன்றவர் கனலப்பட்டவர் இழைத்தவர் இழைக்கப்பட்டவர் புரிந்தவர் புரியப்பட்டவர்
இழிந்தவர் இழிக்கப்பட்டவர்
சுரந்தவர் சுரக்கப்பட்டவர்
கனிந்தவர் கனிக்கப்பட்டவர் உணர்ந்தவர் உணரப்பட்டவர் மடிந்தவர் மடித்தவர்
பொய்த்தவர் மெய்த்தவர் மெய்மையின் பிடி தொட்டவர் தொடப்பட்டவர்
மூத்தவர் மூப்பிலாதவர்
இரவலர் இரவலானவர்
அருகலர் அருகிலாதவர் அலகிலாதவர் அகண்டவர் அற்புதத்தவர் அற்புதம் அறுப்பவர் அழலாடர் அழகாளர்
அரும்பாக் கொழ்ந்தாவனவர் கொழுந்தில் குமரியென்றானவர் குமரியில் நகைப்பொன்றானவர் நகைப்பில் சுழியென்றானவர் சுழிப்பில் ஈர்ப்பென்றானவர்
ஈர்ப்பில் விசையென்றானவர் விசையில் துடியென்றானவர் துடிப்பில் திசையென்றானவர் திசைத் திகைப்பில் விழியொன்றானவர் விழியில் இருளென்றானவர்
இருளில் ஒளியென்றானவர் ஒளியில் இருப்பென்றானவர் இருப்பில் முடிச்சொன்றானவர் முடிச்சில் அவிழ்ப்பொன்றானவர் அவிழ்ப்பில் விழிப்பொன்றானவர் விழிப்பில் விழிமூடி அமைந்தவர்
அடைக்கலம் நாதனே அடைக்கலநாதனே.

ஒவ்வொரு சொல் நெளிவாய் நோக்கியவன் அகம் நெளியும் கம்பளிப் புழுவென ஒவ்வொரு சொல்லிலும் நெஞ்சு எக்கி வயிறு எக்கிப் பாதம் எக்கிப் புழுவுடலில் நடந்தான். மேனி மெய்ப்புல்கள் ஒவ்வொன்றும் புழுவாய்த் துடித்தது. புழுவுடலாய் நெளிந்தது.

மேற்கின் கீழ்த்திசையினில் வளைந்து படுத்தான். தாளா விம்மலென உடல் எக்கிக் கொண்டிருந்தது. விழிகள் நோக்குக் கலைந்து வெறியிட்டு விழைந்தது. விழிக்கு ஒரு தாகமென உடலரைந்து நோக்கினான். மேற்கின் கீழ்த்திசையில் ஒரு ஆணின் கழல் சிலம்புடன் மணலை அழுத்திக் கொண்டு நின்றது. அடியில் தலை நெருங்கக் கொடுத்த பூதமொன்று குழவியெனக் கை கால்கள் உதறிச் சிரித்தது. அழுத்தும் உவகையென அதில் வெறிச்சிரிப்பு முட்டியது. முட்டி முட்டிக் கொற்றனில் தாவுவதைப் போல மிதந்தது. கழலின் அழுத்தலை விட்டு நீங்க விரும்பாததாகப் பற்றும் உடலாடல் கொண்டு புரண்டு சிரித்தது. பூதச் சிரிப்பொலி கனவில் இனிப்புக் கண்ட குழவியின் கூச்சலெனக் கொற்றனைப் பற்றியது. கொற்றனின் உதடுகள் விரிந்து வெம்மையான சிரிப்பொன்று விளைந்தது. சொற்களைத் தேடிய விழிகள் அவை அங்கே நெரிகின்றன என நோக்கிய போது நோக்கமலேயே அவை அங்கிருக்கின்றன. அழியாமல் நிலைத்திருக்கின்றன என உளம் ஆறச் செய்தது.

எழுந்தாடும் சோதியனை இம்மையின் கூற்றனை
அனற் கொழுந்தனை விட மிடற்றனை
சொல்லிற் சொல்லாச் சொல்லை
சொல்லிச் சொல்லிச் சொல்லாய் சொல்லிய சொல்லின் வேரினை
இல்லில் இல்லா இல்லை அறுப்போனை
புல்லில் புழுவாய் பூத்ததில் நரகாய்
சாற்றியதில் சருகாய் ஏற்றியதில் வீணாய் ஊற்றியதில் மிச்சிலாய் புகுந்ததில் மலமாய் வெளிப்போந்ததில் சிசுவாய் பாசமாய் பற்றாய் பற்றற்ற பாழ்வினையாய்
கேசனாய் கேள்விக்கும் மேலானாய்
ஈசனாய் எம்மிறையனாய்
அழுகும் தூமைக் குடம் அக்குளின் வியர்வைச் சலம் அழிந்திடும் பாவைத் தடம் இழிந்திடும் ஈமப் பிணம்
வார்சடை வேந்தனே கூற்றக் கயிறணைத்து மீட்பிக்கும் பேரவனே
பெரும் பேய்கள் பூத மாயப் பிசாசங்கள்
காரிகை இளம் பெண்டிர் ஊத்தையின் சதைப் பாண்டங்கள் ஆக்கிய உக்கு குடில் அழித்தனை வாழி
உன் அழிப்பினில் எஞ்சிய சாம்பலும்
வாழி
சாம்பலில் எஞ்சிட்ட நாற்றமும் வாழி
நாற்றத்தில் நடமிடும் நர்த்தனம் வாழி.

கீழ்த் தென் திசை அரைந்துடல் திரும்பிய கொற்றனை அழுத்தியது எப்பாதம். எப்பெருக்கு. எவ்வினை. எவ்வூழ். எவ்விழைவு. எவ்விடாய். எச்சலனம். எச்சந்தம். எச்செருக்கு. எக்கனம். எக்களிப்பு. எக்கலி. அவனறியாத அவனுடல் அங்கு புழுவை உதிர்த்துக் கூட்டைக் கடந்து வெறும் ஆவி பிரிந்து சென்றது கீழ்த் தென் திசை நோக்கிய முற்றனின் அணுவினில்.

அணுவை அணுத்து அரிந்திட்ட சங்கரனே
அணுவை அணுவால் அளந்திட்ட
காலகாலனே
காலத்தின் நுண் முகையில் எக்கரத்தை அழிக்கிறாய் எக்கரத்தால் காக்கிறாய்
எச்சினத்தால் பிறந்திட்டாய் எப்பிறப்பால் இறந்திட்டாய்
இறவாதே பிறவாதே இரந்துண்டு வாழும் இக்கபாலத்தில் குருதியினை ஊற்றினையோ
வழிகுருதி குடித்தனையோ விழும் மிச்சில் சிந்தினையோ உயிர் மிச்சம் எஞ்சினையோ
அழிவிலா ஆடலில் ஆடும் பேரின்பனே
அழிவிலா ஆட்டத்தின் அணுவிடைச் சித்தனே.

ஆலகண்டத்தின் ஆலம் நான் வார்சடை வீச்சினில் தாவல் நான்
மான் மழு ஏந்திய காலன் நான்
புலித்தோல் அரைக்கசைந்த மேனியன் நான்
முழங்கும் சங்கொடு உடுக்கும் நான்
வெள்விடை ஏறிடும் திரிசூலன் நான்
பாகமிரண்டு பிளந்திட்ட படைப்பும் நான்
சுடலைப் பொடி வீசிடும் தேகன் நான்
ஏகன் அனேகன் நான்
அதுவிலா இது நான்
இதுவிலாது எதுவும் நான்
ஏதுமற்ற பெம்மான் நான்
எங்குமற்ற இங்கும் நான்
இங்குமற்று எங்கும் நான்.

ஆவியணைந்து தென் திசை நோக்காது உடல் சருகெனக் கிடந்து புரண்டவனை விழி திறந்து நோக்கினார் கம்பளி வைரவச் சித்தர். சொல் ஒரு புழுத்துடிப்பென நெரிய உரக்கப் பாடினார் ஊழ்கத்தின் பெருஞ் சொல்லை.

சித்தம் சிவமயம் ஆகுந் தோறும்
சித்தம் சிவமிலதாகுந் தோறும்
சித்தே சித்தே எனத் தவமியற்றும் தோறும்
சித்திக்கச் சிக்காத காற்றே எம்மான்
சித்தன்ன நோக்காது சித்திக்க விழையாத
சீரார் அடிதொழுது சிரசறைந்து சிந்திட்டால்
பேராப் பெரும் வாழ்வு நீறாய்த் தணியுமே.

ஆறாதார் ஆழத்தில் அடுக்கு இருளானவன்
கூறாதார் உள்ளத்தில் பிடிசாம்பால் இட்டவன்
நீறானார் நெஞ்சத்தில் நெக்குருகு பொழிபவன்
அழலில் அரக்கென நெருப்பில் நெய்யென
அனலில் சிவப்பென தழலில் தவிப்பென
தணலில் மூச்சென தீயில் ஒளியென
அம்பலப் பித்தென ஆர்க்கும் குருவென
உறையா ஒன்றே சிவமெனச் சுடரும்
சிவத்தின் சவத்தில் நீயொரு புழு நானொரு துடி.

காற்றில் ஓங்காரம் நிறைந்து பெருகிக் கொண்டு ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலொன்றைக் கேட்டு மண்ணில் உரைக்கும் கல்லென கம்பளி வைரவச் சித்தர் உருக்கொண்டெழுந்து காளையைச் சுற்றி நடனமிட்டு எழுத்துகளைக் குலைத்தார். எற்றி மூடினார். ஆடி அழித்து ஆடும் சிவமென ஆடித் பித்தானார். உச்சியில் அனலென ஒழுகிய சூரியனின் விந்துகள் கொற்றனின் உடலில் சிந்தின. அவன் மேனி பொசுங்கி வியர்வை ஓடியது. மேனி ஒரு மணல் எழுத்தென மூடிக் கொண்டிருந்தது. சித்தரின் குரல் மட்டுமே அகமெனக் குவிந்து அதிலுற்றான். அதுவன்றிப் பிறிதொன்றில்லா அதுவென உடல் பரத்தி வெய்யிலில் கனன்றான். காளையின் முற்றுடல் எரிந்து இரு கொம்புகள் மட்டும் எஞ்சியது. எஞ்சிய சுடுகொம்பினை கரத்தடியால் தட்டி இழுத்துக் கடலினில் காலால் எட்டி உதைத்து ஆவென வாய்திறந்து முழுக்களியில் தீயாடலென மேனி மகிழ்ந்தார். அவன் விழிகள் கூம்பி அற்றுக் கிடந்த உடலை உலுக்கிக் கடலில் உதைந்தார். அவன் உருண்டு மரக்கட்டையென வீழ்ந்த கடல் உப்பென அவனில் முட்டியது. அவன் குறியில் ஒரு துடிப்பு எழுந்து மறைவதை நோக்கியிருந்தான். விழிமடல்களை கடல் நீர் அரித்து உவர்த்த போது திறந்த விழிநோக்கில் காளையில் எஞ்சிய இரு கொம்புகள் கூர்ந்திறுகிக் கடலுள் மெல்லசைவுடன் ஆடியது. திரும்பிப் படுத்தவனின் மேலே ஆகாயம் சுடுகலனின் நீரென வெம்மையைக் கொட்டியது. வெம்மையில் ஆடும் புழுவினில் அனலே நான் என்றவன் நெஞ்சம் சொல்லினில் ஒட்டியது.

TAGS
Share This