52: திசையிலான்: 03
அனல் முகத்தோன் வீற்றிருந்த ககனத்தின் கீழ் நத்தையலைகள் அடித்த சிறுகடலிலிருந்து கொற்றனின் இருகால் பிடித்துக் களிமணலால் இழுத்துச் சென்றார் கம்பளி வைரவச் சித்தர். அவன் மூர்ச்சையடைந்து தேகம் சுவாசத்தின் கலமென மட்டுமே எஞ்ச அவரிழுப்புக்குப் பின் சென்றான். பேருருவரான கம்பளிச் சித்தர் சிறு காளையொன்றை எரியூட்ட இழுத்துச் செல்கிறார் என நோக்கிய வண்டிலோட்டிகளும் குடிகளும் கடலில் மலரள்ளிப் பெய்தபடி ஈசனே ஈசனே என நாவுச்சரிக்க வணங்கிச் சென்றனர். தொலைவில் ஒலிக்கூட்டடென எழுந்த சொற்கள் ஒன்றென மொய்த்துக் கொற்றனின் காதுகளை வந்தடைந்து மோதிச்சிதறின. அவன் அகம் மயிர்க்கொட்டியென மெய்புல்லெழுந்து அவற்றால் வியர்வை துளித்து விழிகள் நனைந்து புலிவாயில் மான் குட்டியெனத் தூங்கினான். குடச மரங்களின் கீழுள்ள சூலக்குறியருகே அவனைப் போட்டார் கம்பளி வைரவச் சித்தர். அரை நாழிகை துயிலில் அரற்றிக்கொண்டிருந்தான் கொற்றன்.
அவன் விழிப்புக் கொண்ட போது காளையின் சுட்ட ஊனைச் சித்தர் மென்று கொண்டிருந்தார். அவன் எழுந்து மேனியில் ஒட்டியிருந்த மணலைத் தட்டினான். அவை பொலபொலவென உதிர்ந்தன. குடச மர இலைகளுக்குள்ளால் நுழைந்த காற்று மேனியை வருடிச் சிலிர்த்தது. அவன் அவரையே நோக்குக் கொண்டு அமர்ந்திருந்தான். அவர் அவனை நோக்கிய பின் “சொல்” என விழிதிறந்தார். அவ்வாணை அவன் உளத்தில் காளைக் கொம்பெனக் குத்தியிறங்கியது.
குரலிருப்பதை மறந்துவிட்ட கொற்றன் நாக்குழறிப் பின் எச்சிலைத் துப்பித் தொண்டையைக் கனைத்துச் செறித்துக் கொண்டான். “சித்தரே. நான் அடவிகளிலும் நிலங்களிலும் எதையும் அறியா விரும்பாது அலைகிறேன். எதற்கும் பொருளென ஒன்றை ஏற்றியமைக்க என் அகம் விழைவதில்லை. இதுதானா என் பயணம் என்பதும் நிச்சயமில்லை. இங்கு ஏதேனும் விடை கிடைக்கலாம் என எண்ணி வந்தேன். இருள் முகங் கொண்ட சித்தரொருவர் என்னை உங்களிடம் அனுப்பினார். எடையற்ற சொற்களால் கேள்வி அமைக்கச் சொன்னார். என்னிடம் கேள்விகளும் வற்றி விட்டன. சுடலையில் நான் வாசித்த சொற்கள் என்னை அலைக்கழித்து உடலிறக்கச் செய்தன. ஆனாலும் எஞ்சுகிறேன். விழைவைப் பொருள் கொள்ளா விடினும் அப்படியொன்று இக்குடிலில் அமைகிறது என எண்ணமெழுகிறது. அதுவே என்னை விசைக்கிறது. கூட ஒண்ணாது பிரிக்கிறது. மானுடர் விழைவு துறந்து சிவமென அமைய ஒண்ணுமா” எனக் கேட்டான்.
கம்பளி வைரவச் சித்தர் உரக்கச் சிரித்தார். பேய்களின் சிரிப்பொலிகள் காதை அறைகிறதென உணர்ந்தான் கொற்றான். நரிகளின் ஊளையும் கூகைகளின் குழறலும் அதில் பின்னணி ஒலியாய் அமைந்திருந்தன. குடசமிலையில் வைத்த ஊன் துண்டொன்றை அவனிடம் நீட்டினார். மெல்லத் தயங்கியவன் ஒரே வாயில் அதை அள்ளிப் போட்டான். வாய் அதை ஏற்றுக் கொண்டது. இனிய சுவை என எண்ணிக் கொண்டான். சித்தர் அவனை நோக்கிய பின் சிரித்துக் கொண்டே “அனைத்தையும் ஒரே வாயில் போட்டுக் கொள்ள நினைக்கிறாயா மூடனே” என்றார். “அது என் இயல்பு” என மெல்ல நகைத்தான் கொற்றான். அவன் உடல் எளிதாகியது. குடசமிலையில் உருட்டிய சிறு ஊதுகுழலென அவன் தேகம் குவிந்தது.
“மூடனே கேள். மானுடர் சிவமென எண்ணியமைய இயலாது. சிவமென இயற்றியமைய ஒண்ணாது. சிவம் உன்னை அறிந்தது அல்ல. நீ அறிந்ததும் அல்ல. அது எங்குமிருக்கும் முதற் பெரும் ஆற்றலின் கனல். அதில் நீ விரும்பியோ விரும்பாமலோ ஒரு துளியைக் கொண்டிருக்கிறாய். கனலே உயிரென்றாகிக் கரு புகுகிறது. விழைவே கனல் என உருவமைந்தது. நீ விழைவை அறியாது விழைவைக் கடக்க முடியாது. துறப்பதால் அல்ல. அறிதலால் அமைவதே சிவம். உன் விழைவை நீ அறிவாயா” என்றார் சித்தர்.
“அறியேன் சித்தரே. விழைவு புடவியின் இச்சைகளால் பொருள்படுவது. நான் இச்சையில் சலிப்புற்றிருக்கிறேன். இச்சை புலன்களால் விழி கொண்டிருப்பது. நாவையும் செவியையும் நாசியையும் தோலையும் விழியையும் கனவையும் கொண்டு துய்க்கப்படுவது. நான் துய்ப்பதன் முன்னரே சலிப்புக் கொண்டுள்ளேன். பொருளற்ற ஒன்றைச் செய்ய மனம் ஒப்பவில்லை. நாச்சுவை தீராத விழைவெனத் திகட்டுவது. சொற்சுவை எண்ணுங்கால் விழைவென அருட்டுவது. நாசிமணம் வாசக் குழைவால் விழைவெனத் திணறுவது. தோல் தோலால் விழைவெனப் புரள்வது. விழி நோக்கால் விழைவென நீங்காதது. கனவு எண்ணின்மையால் விழைவெனத் திகைப்பது. இச்சொற்களை எங்கோ அமைந்த காவிய வரிகள் என எண்ணுகிறேன். இவற்றையும் இப் புடவியே அளிக்கிறது.
ஆழமாக நோக்கினால் எளிய குடிகளின் இச்சைகளை உதறவே விரும்புகிறேன். அவர்கள் அற்பர்கள். உண்டு குடித்து பிள்ளைகள் கொண்டு வஞ்சமும் பொய்யும் சூழ்ந்து களவும் காமமும் கொண்டு வினையும் போதமின்மையும் கூடி மூப்பும் நோயும் இறப்பும் கொள்ளும் வீணர்கள். அவர்களில் ஒருவரென நான் அமையப் போவதில்லை” என்றான் கொற்றன்.
“சிவத்தின் முன் நீ உன் மலக்குடிலுடன் நின்றிருக்கிறாய் அறிவிலி. உன்னில் திரளுவது ஆணவம். உன்னில் விசை கொண்டிருப்பது கன்மம். உன்னை வழிநடத்துவது மாயை. நீ பிறரில் ஒருவரல்ல எனும் பொழுதே முதல் முற்றான மலத்தை உனக்குள் சேர்த்துக் கொண்டிருக்கிறாய். உன் முன்வினைகளின் பற்றாலேயே நீ துறப்பதை எண்ணுகிறாய். நீ காணும் கனவுகளாலேயே மேலும் மேலும் மலக்குடம்பியென நின்றிருக்கிறாய்.
அறிவதும் அறியப்படுவதும் ஒன்றேயென அறிய மும்மலங்களையும் நீ முற்றழிக்க வேண்டும். எதுவொன்று எஞ்சினாலும் நீ சிவத்தை உணர முடியாது. உன் விழிகளில் இருப்பது ஆணவமும் மாயையும். இரண்டும் இரு விழிகளென உன்னை அலைக்கின்றன. செல். சென்று குடித்திரளில் மூநாளும் கலந்து மீள்க. மீளும் பொழுது உன்னில் எதுவும் எஞ்சாது ஒழித்து ஏகு. எஞ்சும் ஒரு துளி பற்றும் உன்னை அலையிலிட்ட மலரென ஆர்த்தும். எஞ்சும் ஒரு துமி இச்சையும் பூநாகமென மீந்திருக்கும். எஞ்சும் ஒரு அணுக் கன்மமும் உன்னை உதறாத மணற்துகளென ஒட்டிக் கொள்ளும். அறிந்தவற்றால் அல்ல மூடனே. அறிய
முடியாமையிலேயே அப்பன் அமைந்திருப்பான். அவனில் ஒரு துள்ளலென நீ எழுந்து மறுகணம் விழும் மீனென மீள்வதே நிகழக் கூடியது. உன்னைக் கடலிலிருந்து மிதத்தும் கணத்தை அறி. திகழ். மீண்டால் சிவத்துள் மீள்வாய். இல்லையெனில் உன் பயணத்தை மெய்வழியால் தொடர்க. மாயத்தை விலக்கு. புடவியில் இயற்றும் காரியங்களை நிறைவு செய். விழிகளில் நோக்கை ஒருக்கு. ஊழ்கமென ஒவ்வொன்றையும் நோக்கி உறு. அகம் விழைவதை வென்று அர்ப்பணமிடு. எக்குடி நெறியும் உன்னைக் கட்டுப்படுத்தலாகாது. விழைவே அகமெனச் செல். மலங்கள் ஒழித்துக் குடிலை எரி” என்றார் சித்தர்.
கொற்றன் அவரை விழி உற்றான். நோக்கிழந்த சவமெனத் தோன்றியது அப்பேருரு. சவத்தை எரிக்கும் சவமே சிவமா என எண்ணிக் கொண்டான். அவனுள் எஞ்சும் விழைவுகளை அவனகம் அள்ளிக் கொட்டி முன்வந்தது. நெடுநாட் பிரிந்து திரும்பிய காதலனிடம் சொல்ல வைத்திருந்த அகமென அதில் அவனறியாத விழைவுகள் புழுநெளிவென எழுந்தன. பின் சிறகுகள் கொண்டு விண்ணளந்தன. மலர்களென முகங் கொண்டு சிறகு கொட்டி மேகக் குவைகளில் உதிர்ந்து பரவின. எழில் மலர்கள் ஒவ்வொன்றும் பெண் உடல்கள் என தூவிகள் அள்ளிக் கொட்டும் மேகங்களிலிருந்து மிதந்து சரிந்து ஆடியிறங்கினர். வாயை ஆவென்று திறந்திருக்கும் ஒரு சிறுவனென கொற்றன் வான் நோக்கியிருந்தான். அவர்கள் மண்ணைத் தொடாமல் அந்தரத்தில் நீர்க்குமிழிகளென அலைந்தனர். அவன் ஒவ்வொரு குமிழையும் எட்டிப் பிடிக்க அந்தரத்தில் எழுந்து மண்ணில் சரிந்தான். அவன் கால் இரண்டு கொப்பளங்கள் என வீங்கியிருந்தன. கரங்கள் மலத்தால் வனைந்தவை போல் குழைந்து வழுகிக் கொண்டிருந்தன. அவன் சிகை சிக்கெடுத்துப் பேனும் ஈரும் ஊர்ந்து மணத்துக் குலைந்தது. செவியால் சீழ் மஞ்சள் வண்ணக் குடம்பி ஊற்றியது. வலமூக்கிலிருந்து நீர்வெண் சளியும் இடமூக்கிலிருந்து நோய்மஞ்சட் சளியும் ஓடி வாயில் வடிந்தன. பற்கள் நாற்றச் சுள்ளிகளென ஆடின. நாவில் கசப்பு ஊர்ந்தது. உமிழ் நீர் உப்பும் வீச்சமும் அடித்தது.
மேனியில் புண்கள் குமிழிகளென ஊதி விம்மின. அவன் குறியால் சுக்கிலம் ஒழுகி ஊற்றியது. அதைக் கண்ட விண் பெண்கள் சிரித்துக் கலகலத்து எச்சிலை மும்முறை அவனை நோக்கி உமிழ்ந்து விலகிப் பறந்தனர். சீக்காளி என நகைத்தனர். அவன் தனது அரைந்து கொட்டும் நாற்ற உடலிலிருந்து வெளியேறத் துடிப்பவனென உந்தி உந்தி எழுந்தான். அவர்களை நோக்கி நிற்க அவனுள் நாணமும் வெட்கமும் அவமானமும் நிறைந்தது. அவமதிக்கப்பட்ட ஆண் எத்தெய்வமும் நிகர் நிற்க முடியாத சினம் கொண்டவன். வெட்கமுற்ற ஆண் புடவியில் எவருமறியாப் பெருவெளியில் தொலைந்து கொள்ள விழைபவன். நாணம் கொண்ட ஆண் தன்னை அழிக்கும் வெறி கொள்பவன். ஆண் என்பது நிகர்க்கு நிகர் எடை கொண்டது. பெண்ணாயினும் தெய்வமாயினும் அவனைக் காண்பது அத்துலா முள்ளிலேயே. கொற்றன் மேனி நடுங்கி ஒடுங்கிக் கொண்டான். உடல் விசையழிந்து உந்தியெழும் எண்ணம் மலக்குழைவென நாறும் குருதியென பிரியும் மலவாயுவென சீழ்ச்சிதையென நோய்ப்பிறப்பென அவனை உருக்கியது. உருகி அழிந்து மண்ணில் விழுந்தான். பெண்கள் சிரித்தபடி மேகங்களுக்கு மேகங்கள் தாவினர். மேகங்கள் கனத்து நீருறுபவையென விம்மிக் கனத்தன. கடுஞ்சிவப்பில் கருக்கொண்டன.
ககனத்தை நோக்காது மண்ணில் குறண்டியபடி படுத்திருந்தான் கொற்றன். எல்லையில்லா வெறுமை மட்டுமே அவனை ஆற்றும் ஒன்றென எண்ணினான். எண்ணிச் சொல் அகத்தில் எழுந்த மறுகணம் வானத்தில் மின்னலும் இடியுமின்றி மழைப் பொழிவொன்று மண்ணை நனைத்தது. கொற்றன் திரிகோண மலையின் குன்றுகளில் நெளிந்து கொண்டிருந்தான். மண்ணிலிருந்து பாறைக்குத் தேரையெனத் தாவியது அவன் அகம். பாறையில் வான் மழை பொழிந்து தகதிமித்தது. குருதி மழையெனச் சிவந்து பாறையிலிருந்து வெள்ளம் வடிந்தது.
பெரும்பாறை ஒரு லிங்கத் தலையென மழிந்திருந்தது. கொற்றன் லிங்கத்தின் மேலொரு மலப்புழுவெனக் கிடந்தான். குருதி மழை அவனில் கொட்டியது. தூமை மழை. தூமை மழையென மணந்து எழுந்து கத்தினான் கொற்றன். வானிலிருந்த பெண்களின் யோனிகளிலிருந்து தூமைக் குடங்கள் சரிந்து மேகத்தில் ஊற்றி மேகக் கலயங்கள் நிறைந்து அந்தரத்தை நிறைத்து மரங்களிலும் பாறைகளிலும் வழிந்து ஆறுகளிலும் குளங்களிலும் நீரூற்றுகளிலும் பொழிந்தன. மானுடரையும் பறவைகளையும் விலங்குகளையும் மனைகளையும் அரண்மனைகளையும் வயல்களையும் களஞ்சியங்களையும் கருவூலங்களையும் நனைத்தன. ஒரு பெருக்கிலென அங்கிருந்து எழுந்து நோக்கியவன் தூமை மழையென உரக்கக் கூவினான்.
சில கணங்களில் தூமைக் குருதியால் அவனது உடற் கொப்பளங்கள் மறைந்து சீர் கொண்டன. மலக்கரங்கள் இளவாழைத் தண்டன நீண்டன. சிகையிலிருந்து நறும்புகையெழுந்தது. சந்தனமும் பன்னீரும் சுரந்து வியர்வை
என்றாயிற்று. கால்களில் வில்லின் பருவம் கூடியது போலிருந்தது. மேனியில் தினவு காளைத் திமிலென ஏறியது. ஒரு உந்தலில் வான் மேகங்களைக் கிழிக்கும் மின்னலென எழுபவன் போல் உளத்திமிர் எழுந்தது. தூமைக் குருதியில் மரங்கள் சடைத்து மலர்களென்றாயின. மனைகள் செழித்து மகவுகள் கொண்டன. வயல்கள் பொலிந்தன. களஞ்சியங்களில் நெற்குதிர்கள் நிரம்பிக் குருவிகள் வட்டமிட்டுப் பறந்தன. ஆறுகளிலும் குளங்களிலும் மீன்கள் துள்ளிப் பாய்ந்தன.
விலங்குகளும் பறவைகளும் வணக்கமிடுபவையென இசையெழுப்பின. கருவூலத் தங்கங்களும் மணிகளும் சுடர்வு என்றாயின. மண்ணில் அனைத்தும் தழைத்துப் பெய்தது தூமை மழை. மண்ணை அணைத்த அனைத்தையும் தழுவியது தூமைப் பெருக்கு.
காற்றும் இடியும் மின்னலுமின்றிப் பொழிந்த மழை அடங்கிய போது விண்ணிருந்த பெண்கள் மீண்டும் தூவியென்றாகி அந்தரித்து மண்ணிறங்கினர். இம்முறை கொற்றனின் முன் இறங்கிச் சிரித்தவர்கள் அவனை மகவென ஆற்றி மடியிட்டு முலை கொடுத்தனர். அவன் குழவியென்றாகி அவர்கள் கரங்களில் பூப்பந்தென எறியப்பட்டான். ஒவ்வொரு முலையிலும் பால் ஒவ்வொரு சுவையில் நா நனைத்தது. நூற்றெட்டுப் பெண்களிடம் பால் குடித்துப் பாறையில் இறக்கி விடப்பட்ட போது மீண்டும் பசியெடுத்து அன்னையே எனக் கூவினான். பெண்கள் மீண்டும் கனிந்து இறங்கினார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வண்ணம் கொண்டிருந்தனர். கூந்தல்களில் இன்மணம் கமழ்ந்தது. உதடுகள் நெருங்கிப் புன்னகைத்தன. கன்னங்கள் சிவந்தும் குழிந்தும் விரிந்தும் விதிர்த்தும் அழகு கொண்டன. முலைகள் ஆடைக்குள் பாய்ந்தன. அவற்றைப் பற்றிப் பிடிக்க எழுந்த போது அவன் வளர்ந்திருந்தான். கரங்களை நோக்கினான். சீரான சிற்ப வளைவுகளுடன் நீண்டது. கால்கள் விசையும் உறுதியும் கொண்டன.
பெண்கள் அவனை மரங்களில் ஆடும் ஊஞ்சல்களில் அமர்த்திப் பின்னின்றும் முன்னின்றும் சொல்லாடி ஊஞ்சலாட்டினர். அவன் பின்னால் விசை கொள்ளும் போது மெத்தும் மார்புகளில் மென்மையில் விசை கொண்டான். முன்னால் நின்றவர் களிமுகங்களில் மொய்ப்புக் கொண்டான். அருகில் அயர்ந்து அவன் ஆடலை நோக்கியிருந்தவர்களின் மேனி வளைவுகளும் சதைத் திரள்வுகளும் வேட்கையின் விழிகளும் தாபத்தின் நாவுகளும் மோகத்தின் முனகல்களும் அவனை ஊஞ்சலில் இருந்து ககனத்திற்கு எறிந்தன. அவன் விழைவுற்று முலைகளைப் பற்றி உறிந்தான். மேனிகளை ஒவ்வொரு கனியெனச் சுவைத்தான். புணர்ந்தான். மகவுகள் கொண்டான். மகவிற்கு அளி கொண்ட முலைப்பாலை அருந்தினான். பெண்கள் அவனை விட்டு நீங்கி மகவுகளுடன் விளையாடிக் களியிட்டுச் சிரித்தனர். அவன் தாகம் கொண்டு கூவினான். பால் வேண்டுமெனச் சினந்தான். மகவிற்கு எஞ்சியது தான் உனக்கு எனச் சொல்லிக் கோபம் காட்டி வாயில் விரல் வைத்துப் பொறு என்றனர்.
அவன் மீண்டும் பாறையில் சென்று அமர்ந்து காத்திருந்தான். அவனது விடாய் பெருத்தது. நினைவில் அலையடிக்கும் முலைகளில் வழிந்த பாற்கடல் ஒன்றைக் கண்டான். லிங்கத்தின் மேல் அவன் அமர்ந்திருக்க முலைப்பாற் கடல் அலையடித்தது. பெண் என்றானதும் சுரக்கும் தூமையும் அன்னை என்றானதும் சுனைக்கும் பாலும் அவனை அப்பாறை மேலிட்டதென அறிந்தான். தூமை நீங்கி முலைப்பால் வற்றிய முதுபெண்ணொருத்தி பாற்கடலில் பாதை பிளவுற நடந்து வந்தாள். அவளது முலைகள் சுருக்கங்களால் உதிர்த்து விட்ட பாம்புச் செட்டை வெய்யிலில் கிடப்பது போல் மின்னியது. அவள் முகத்தில் வெறுமையும் சலிப்பும் வரிவரியோடி விரிந்திருந்தது. அவள் தள்ளாடும் நடுக்குடன் லிங்கப் பாறையில் தொட்டாள். லிங்கம் அதிர்ந்தது. அதை அறைந்து உடைப்பவெளென உலுப்பினாள். தன் பற்களற்ற வாயால் சிவத்தை ஏசினாள். காற்றில் ஒலியெழாது அச்சொற்கள் பாற்கடலில் நஞ்சுத் துளிகளென விழுந்து கடல் திரைந்தது. முலைப்பால் தயிரென்றானது. கட்டியாகிய பாலில் கொற்றன் நிலையழிந்து விழுந்தான். தயிர் மெத்தையென அமைந்து எழுந்தது. அன்னையே அன்னையே எனக் கூவியபடி அம்முது பெண்ணை நோக்கி எழுந்தான். தயிர்க்கடல் அவனது கால்களை இழுத்தது. அவனைக் கண்டதும் அம்முது பெண் விழியால் அவனை எரிப்பவளென நோக்கி “அப்பாலே போ மூடனே. யார் உனக்கு அன்னை. நான் யாருக்கும் அன்னையில்லை. இந்தச் சவத்திற்கும்” எனச் சொல்லி லிங்கத்தை அறைந்தாள். பொடித்தூசென உதிர்ந்த பாறையைக் கால்களால் கலைத்து உதறினாள். அன்னையே அன்னையே எனக் கத்தியபடி நடுக்குற்று எழுந்தான் கொற்றன். அவன் முன் சிரித்தபடி அமர்ந்திருந்த கம்பளி வைரவச் சித்தர் “அவள் மாயை” என்றார். அத்தனை நெருக்கமாக அணுவணுவாக நான் கண்டது மாயையல்ல என அவன் உணர்ந்தான். ஒரு முழுவாழ்வும் எப்படி மாயையென ஒல்கும். எதுவோ ஓர் மெய்மை தீண்டப்படாது இருக்கிறதென எண்ணிச் சொல்லெழுந்தவனை இடக்கரத்தால் மறுத்தார் சித்தர்.
“நீ மாயைக் கண்டு விட்டாய். அவளை நீ சொல்லால் உதற முடியாது. அறிந்து மீள். அதுவே அவளை வெல்ல ஒரே வழி. அறிக மூடனே. சொல்லும் அவளே. சொல்லில் எழுபவளும் அவளே. இங்கிருந்து செல். நீங்குக” என ஆணையிட்டார். அவரது பேருருவில் குரல் பிலவிலிருந்து ஒலிப்பதெனக் கேட்டது. கொற்றனின் மேனி மெய்ப்புல்கள் எழ அங்கம் தரையில் முழுது வீழ்ந்து வணங்கியெழுந்தான்.
கம்பளி வரைவச் சித்தர் ஊழ்கத்தில் விழிமூடி நின்றார். கொற்றன் அவரை நீங்கி கடலால் இறங்கி நீரில் மூழ்கியெழுந்தான். முட்பன்றியெனச் சிலிர்த்து உடலை உதறிக் கொண்டான். அகம் ஒருங்கிக் கூர் கொண்டிருந்தது. உதட்டில் இளம் புன்னகை மின்னக் குழலை முடிந்து கட்டினான். பட்டினத்தின் பாதையில் ஏறி சிலதொலைவு நடந்தவனை ஒரு வண்டிலோட்டி அழைத்து ஏற்றிக் கொண்டார். அவ்வண்டிலில் நின்றபடி எறும்பு நிரைகளென நீண்டிருந்த வண்டில்களையும் ஈசல்களெனச் சுற்றிச் சுழலும் குடிகளையும் நோக்கினான். லிங்கப் பாறையிலிருந்து ஓங்கிக் கடலில் வீழ்ந்து தொலையுமொரு ஒலியற்ற கல் எனத் தன் தேகத்தை அறிந்த கணம் உச்சியில் குழல் கலைய ஆடும் பித்தனின் மூச்சு அவனில் தொட்டு ஓம் என்றது.
Image Source : welcome collection