53: ஐம்புதல்வர்

53: ஐம்புதல்வர்

“எண்ணுந் தோறும் நழுவும் ஒன்று கலையில் அமைந்திருக்கிறது இளையவரே. ஆன்மீகத்திலும் அவ்வண்ணமே. ஞானம் அடைய எண்ணியிருப்பதும் கூட ஒரு தடையாக அமையலாம். வழிகள் பிரிந்து ஆயிரம் திரிகளாய் ஞானப் பாதை சுடர்களுக்காகக் காத்திருக்கிறது. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வழியை அறிவிக்கிறது. ஞானமென்பது புடவியை வெல்வதல்ல. தன்னை வெல்வது மட்டுமே ஆகும். தன்னைத் தான் வெல்லும் புடவியெனவும் சொல்லிக் கொள்ளலாம். அதில் வென்றமைபவர் ஒரேகணத்தில் மலரெனவும் வாளெனவும் தோன்றக் கூடியவர்.

என்னுடைய மனையாளனின் பெயர் ஞான வித்தகன். அவரை இளவயதிலேயே மணமுடித்துக் கொண்டேன். எங்களுடைய காதற் காலங்கள் துய்த்துத் துய்த்து நீண்டவை. கடலும் கரையும் காடும் வயலும் மதுவும் தீயிலையும் ஊனும் விண்ணும் மழையும் பனியும் புலரியும் மஞ்சமுமென எங்கிலும் காமத்தில் விழைந்தோம். காமம் எங்களைக் கட்டியிறுக்கி உயிர்ச்சூட்டை எரிய வைத்தது. அவருடைய விழிகளில் இனிய தோழனின் பாவனை மின்னிக் கொண்டிருக்கும். அவர் இளவயது முதல் ஈசனில் நாட்டமுடையவர். காவியங்கள் வாசிப்பார். கவிதைகள் எழுதுவார். ஊழ்கம் பயில்வார். காமமும் கடவுளும் அவரிடம் இரண்டு நாணய முகங்களென இருந்து வருகிறது என எண்ணியிருந்தேன்.

முதல் மகவு பிறந்தது தொடக்கம் இறுதி மகவு ஈறாக ஒவ்வொரு பருவமும் விலகி விலகி இருவருக்குமிடையில் பாலை நெடுத்து விரிந்தது. நீண்ட நெடும் பாலையின் இருதுருவ விளிம்புகளில் இருவரென உறவின் வெம்மையில் அமர்ந்திருந்தோம். எப்படி நிகழ்ந்ததென அறியேன் இளையவரே. முதல் மகவு கருக்கொண்ட போது என்னை விட மகிழ்ந்தவரென என் குமிழ் வயிற்றை மொய்த்து வண்டெனச் சுற்றினார். இனிதீன் பண்டங்கள் ஆக்கி உறவினருக்கு அனுப்பினார். வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும் மும்மாரியென என்னைப் பொழித்து நிறைய வைத்தார். நிறைவயிறு குளர்ந்த இனிமையொன்றைச் சுமக்கின்றது. அவ்வினிமை என்னை நீங்கக் கூடாது என எண்ணிக் கொண்டேன். என் கனவின் முதல் விழைவு அவன். அவனை ஆண் என எண்ணிக் கொண்டேன். நுண்மையான என் காதலனின் ஆடிப்பாவை அவன் என எண்ணி எண்ணி வியந்தேன். அவரை மீண்டும் குழவியாகக் கையிலேந்தி முலையூட்டி இன்பாகுக் குரல் கேட்டு அன்னமளையும் விரல் கண்டு மேனி உடும்பென அரையக் கண்டு மூக்கும் வாயும் பிடித்துச் சீராக்கி நெற்றியும் கன்னமும் நாவூறுப் பொட்டிட்டுப் பற்கள் முல்லை முகைகளென வளர்தல் கண்டு சிறு நா காற்றில் தீந்தழல் எனச் சுழல நோக்கி சொற்கேட்டு நடவென வெருட்டி மலர்களிட்டுக் குழலில் எண்ணையிட்டு உடல் பிசைந்து முதற் சொல் காது குவித்து ஒவ்வொரு சொல்லாய்த் தொடுக்கக் கற்றுக் கொடுத்துக் குருளை நடை மந்தி நடை புரவி நடை சிம்ம நடை என ஒவ்வொரு நடையாய்ப் பயில்வித்துச் செல்லம் குலாவி முத்திட்டு மார்பு கிடத்தி கனவில் அனுங்கக் கேட்டு புன்னகை வதனம் நோக்கி அங்கு எதைக் காண்பான் என எண்ணி நானும் கனவு கொண்டு அரைத் துயில் மயக்கிலே விழி கொண்டு வாழ்ந்திருந்தேன்.

முதல் மகவின் நடை பழகும் காலம் வரை மனையாளனை நினைவு வேறொன்றாய்க் கற்பனை செய்தது. நான் விரும்பும் காதலனைச் சிறு மகவென்றாக்கி என் கனவனைத்தும் குழைத்து வனையும் வாய்ப்பை எந்தப் பெண் தான் கைவிடுவாள். முதல் மகவென்பது முதற் கனவு. முதற் காதலனின் பிள்ளைப் பருவம். அவன் பொருட்டு எழுந்த விழைவையே முதற் குழவியெனக் கருக் கொண்டேன்.

அவன் வளர்ந்து பொலிகையில் இரண்டாவது மகவைக் கருக் கொண்டேன். முதல் புத்திரன் என் கனவின் விழைவு கொண்டவன். விழிகளில் துள்ளும் அம்புகளைக் கொண்டிருந்தான். பேச்சில் இனிமை தோய்ந்திருந்தது. துடுக்கும் குறும்பும் வாய்ச் சொல்லில் கனிநாரின் இழையெனப் பின்னிக் கொண்டவன். பெண்களுடனேயே பொழுது கழிப்பான். பின்னல்கள் கலைத்து ஆடிடுவான். பெரியவன் போல மேனி மிதப்புக் கொண்டு தன் மழலையை மெல்ல முந்தினான். அவனில் தோன்றியவன் என்னுடைய மனையாளன் அல்ல. அவன் என் அரும்பா இளமையின் முதற் காதலனின் அம்சமாய் இருந்தான். கனவு ஒருவனை இந்தளவு உருமாற்றும் என நான் எண்ணியிருக்கவில்லை. என் மனையாளன் அவனில் தன்னைத் தேடித் தேடித் தொலைந்தார். மெல்ல மெல்ல அவனை உள்ளூர விலக்கினார் என்பதை என் அகமறிந்தது.

இரண்டாவது மகவை நான் நடுக்குடனேயே சுமந்தேன். இம்முறை அவர் வெளிப்படும் ஒருவன் எனச் சொல் சொல்லாய் எண்ணி மனதில் இருத்தினேன். ஊழ்கமென என் விழைவுகளை வழிமறித்துக் கட்டினேன். என் கனவுகளில் புரவிகள் வந்தன. தசை திரண்ட குறும் புரவிகள். மேய்ச்சற் புல்வெளிகளில் குறுங் கால்கள் ஊன்றி விண்ணெழ விழைபவை. சிறு பிடரி மயிர் சிலுப்பி புற்களை முகர்ந்து அரிவன. ஆறுகளில் நீர் குடித்து இளங் குதிரைகளுடன் துள்ளியாடுவன. அவற்றிடையே விழிகளில் வேகம் ஒரு அணியென விழிதிறந்திருந்தது ஒரு மண்ணிறக் குறும் புரவி. அக்கனவுகளை அஞ்சி அஞ்சி விழித்தேன். நான் குறு மகவொன்றைக் கருத்
தரித்திருக்கிறென் என உளம் குமைந்தேன். கனவுகளில் துள்ளி மிதக்கும் அந்த மண்ணிறக் குறும் புரவியை அணுவணுவாக வெறுக்கத் தொடங்கினேன். வெறுப்பில் விழையும் கசப்பு என் விழிகளில் மெலிந்த கருவளையங்களென விரிந்திருந்தது. முகத்தைச் சுற்றி நிலா வட்டமெனக் கருவொளி சூழ்ந்திருப்பதாக ஆடிகளில் நோக்கி நோக்கிச் சலித்தேன். நோயை விழுங்கி மீளும் உடலென அவ்வெண்ணத்தை விலக்கி அவனை மண்ணளித்தேன். முதலாக அவன் முகத்தை நோக்கிய போது அவன் மண்ணிற மெழுகில் வார்க்கப்பட்ட பாவையென அழுது கொண்டிருந்தான். மயக்கிலென அக்குரலைக் கேட்டேன். அவன் என் வெறுப்பில் திரண்ட ஒரு துளி நஞ்சு கொண்ட பருவடிவென நாளும் பொழுதும் கயர்ந்தேன்.

அவன் சிறுமேனியைத் தொட்டு உரசி நீவிப் பொட்டிடும் போது என் நஞ்சு என்னை நோக்கிச் சிரிக்கிறதென எண்ணிக் கொண்டேன். எவ்வளவு பாவனைகளால் மறைத்தாலும் வெளிப்படும் கசப்பு ஒன்றை என் அகம் கருக்கொண்டது என விழியுற்றுக் கண்ணீர் உகுத்தேன். அழுதழுது மார்புக்குழி வடியும் நீரையும் முலைப்பாலையும் அருந்தியே அவன் வளர்ந்தான். என் கசப்பின் மேலும் சில துளிகளை அருந்தியவன் இளம் புரவிகளின் நடையும் வேகமும் கொண்டிருந்தான். இயல்பான நோக்குக் கொண்ட விழிகள். எதையும் இரண்டெனப் பகுக்கும் சிந்தை கொண்டு வாதிடுவான். நேர் என ஒன்றை அவன் விழி முன் நிறுத்தினால் எதிர் என அவன் வேறொன்றை நோக்கி அதையும் இணைத்து அதுவே முழுமையென்றான். என் மனையாளன் அவனுடன் வாதாடும் சொற்கள் மழலையிலிருந்தே தொடங்கி விட்டது. தொடக்கத்தில் சொல்லாடல் என நிகழ்ந்தது. நாட்செல்ல எதிர்த் தருக்கம் ஒன்றே நாவெனச் சூடினான். முடிவிலாத கசப்பைத் துப்பினான். அவன் கசப்பின் சுவை மனையின் சுவர்களிலும் தரையிலும் ஊறிக் கூரையால் வழிகிறது என எண்ணிக் கொண்டேன். மஞ்சத்தில் பூநாகங்களென நெளிந்தான் என மயக்குக் கொண்டேன்.

மூன்றாவது கருவைச் சுமந்த பொழுது எண்ணங்களை விலக்கி எதையும் விழையாத ஒன்றை விழைந்து கொண்டேன். நனவில் ஓடிச் சிரிக்கும் துள்ளி விளையாடும் இரு மைந்தரும் கருவை வந்து நோக்கித் தொட்டுக் கருவுடன் சொல்லாடினர். தங்களுக்கு ஒரு தங்கை வேண்டுமென விருப்பங்களைக் கருவுக்குச் சொல்லினர். என் மனையாளன் அதுவொரு ஆண் எனச் சொன்னார். அவர் விரும்பும் ஆணொன்றை ஆக்கிக் கொள்ள விரும்பினார். அவர் கொண்ட கனவனைத்தையும் வெல்லும் ஒருவன். புடவியில் அவரின் செருக்கென நின்றிருப்பவன். மா வேழமென ஆற்றல் கொண்டு சிம்மமென எழுந்து பார்ப்போரை நோக்கில் பணிய வைக்கும் ஒருவன். முதலிரு மைந்தரையும் நோக்க நோக்க அவர் அறியாமலேயே அவர் சொற்கள் அப்படியொரு கனவைத் தமக்குத் தாமே புனைந்து கொண்டன. அவர் சொற்களால் சொல்லாதவற்றை அவர் முகம் ஆடியெனத் துலக்கியது. எனக்குள்ளென அவரது குரலைக் கேட்டேன். எனது அகம் எதுவுமின்மை எனச் சொல்லிக் கொண்டது. நோன்பென அச் சொல் என்னுள் கூடியது. அவன் கருப்பையில் புரள்வது குறைவு. என் கனவுகளில் செந்தாமரைகளைக் கண்டேன். சிவந்து முகையானவை. விரிந்து அகன்று தனிச் சிவப்பென மேனி கொண்டவை. விடியலில் மலர்ந்து அந்தியில் கூம்புபவை. தாமரைகளின் முழுநாளையும் கனவெனக் கண்டு கொண்டிருப்பேன். அந்த அமைதி என்னை ஆற்றியது. பேற்று தினம் நெருங்க நெருங்கக் கனவில் செந்தாமரைகள் குறைந்து கொண்டே வந்தன. அகக்குளம் நீர் வறண்டு கருமை கொண்டது. சேற்றில் எஞ்சிய மூன்று செந்தாமரைகள் பூத்து நின்ற கனவு நாளில் அவன் மண்நுழைந்தான். செந்தாமரையும் சேறும் கலந்த வண்ணம் கொண்டிருந்தான். அவனை நோக்கிய முதற் கணம் அவன் உயிரற்று நிற்கிறான் என எண்ணி உளம் நடுங்கியது. பின் சீரான சுவாசம் அசைய அமைதியில் துயில்கிறான் என மருத்துவிச்சி சொன்னார்.

என் மனையாளன் முகத்தில் ஒரு மகிழ்ச்சி அந் நாட்களில் ஓடியது. அவனுள் காவிய நுட்பம் அனல் கொண்டு கருப்புகுந்திருக்கிறது. அதனாலேயே அவன் அமைதி கொண்டிருக்கிறான் எனச் சொல்லிக் கொண்டார். அவர் கற்ற அனைத்தையும் அவன் மிழற்ற முன்னரே சொல்லத் தொடங்கினார். அவன் கனவுகளில் அவை கருக்கொள்ள வேண்டுமெனச் சொல்லிக் கொண்டார். அவன் அவரைக் கேட்பவரெனச் செவியில் மெல்லிய துடிப்பு மின்ன விழியைச் சரித்துக் கொண்டிருப்பான். அது ஒரு யோக நிலையென மனையாளன் அகம் கிளர்ந்திருந்தார். அவன் சொல் குறைந்து வெளிப்பட்டான். நேர்ச்சொல்லும் மறுசொல்லுமற்றுத் தன் சொல்லென ஒன்றைச் சொன்னான். சுருக்கமான துளிச் சொல்லென அமைந்தான். அவன் கூர்மையான சொல் நுட்பன் ஆகவே தேர்ந்து சொல்லெடுக்கிறான் என மனையாளர் மொழிபெயர்த்தார். அவனிடமிருந்த அனைத்திலுமிருந்த விலக்கத்தைக் கண்டு உள்ளூர அவன் என் எதுவுமின்மையின் விழைவு என அறிந்து கொண்டேன். முதலிருவரும் அவனிடம் சிறு விலக்கம் கொண்டிருந்தனர். தந்தை அவனுடன் எப்பொழுதும் உடனிருக்கிறார் என உளம் கொதித்துச் சொல் பேசினர். இரண்டாமவன் அவரிடம் நேரேயே தன் கசப்பை உமிழ்ந்தான்.

மூன்றாமவன் அமர்ந்து தன் சொல்லென அமைகையிலேயே அவரகம் நடுக்குடன் அவனில் எழுந்த விலக்கத்தைக் கண்டார். அதுவரை அவரை மறைத்திருந்த தந்தமையை விலக்கி அவனை அறிந்தார். ஆனால் ஏதோவோர் வகையில் அவனது ஏதுமின்மை அவரைத் தொந்தரவுக்கு உள்ளாக்கவில்லை. அது அவரது அம்சமென எண்ணிக் கொண்டார். சில பருவங்களாக அவர் ஊழ்கத்திலும் ஆலயத்திலும் தன்னை முழுதளித்துக் கொண்டார். களனி சென்று நோக்குவதில்லை. அறுவடைக் கணக்கை அறிவதில்லை. போரை அவர் அறியவேயில்லை எனத் தோன்றியது. மைந்தர்கள் போருக்குச் செல்லும் காலம் வரை பொறுத்திருப்பவர் என்பது போல் மனை வந்து சென்றார். மனை மைந்தராலும் உறவுகளாலும் நிறைந்திருந்தது. அங்கு அவருக்கென எஞ்சும் இடமென ஒன்றில்லை என எண்ணுபவர் போல் அவரது சொற்கள் எழுந்தன.

நான் அவரைத் தேற்ற எண்ணினேன். அவரை மனையில் ஒன்றென ஆக்க விரும்பினேன். அவரை மனையுடன் கட்டும் ஒரு எழிற்சோதியென மகளொருத்தியை அவருக்கு அளிக்க வேண்டுமென விழைவு கொண்டேன். என்னுள் எங்கெங்கோ ஒழிந்து கொண்டிருந்த இனிமையெல்லாம் சேர்த்து நினைவுகளை நெய்து கொண்டேன். காதலின் பொழுதெல்லாம் திரட்டினேன். நன்னினைவுகளின் நீரூற்றென அகத்தை ஒருக்கினேன். கசப்பை ஒரு துளியின்றிக் காலத்திற்கு அர்ப்பணமிட்டேன். சமநிலையென அகத்தை நிறுத்தி எடைக்கு எடை சமன் கொண்ட ஒன்றை விழைந்தேன். இனிமைக்கு நிகர்இனிமை. விசைக்கு நிகர்விசை. ஆற்றலுக்கு நிகராற்றால். அவரை அணுகி என் காமம் வடிந்து வற்றிக் கொண்டிருந்த உடலை அளித்தேன். அவர் எவருடையதோ பொருளொன்றைத் தொடுபவரென என்னைத் தொட்டார். அந்தத் தொடுகை என் அகக் குளத்தில் குறுங்கல்லென விழுந்தது. அதன் நீரலை வட்டம் அகமெங்கும் எதிரொலிப்பதைக் கேட்க மறுத்துச் செவிகளை அடைத்துக் கொண்டேன். உடலைப் போதமின்றி இறுக்கினேன். அவர் என் உடலிறுக்கத்தைக் கண்டவரென எழுந்து விலக முனைந்தார். அவரைப் பற்றியிழுத்து சிம்மத்தை வேட்டையாடும் மானென மஞ்சத்தில் கலவி கொண்டேன். அப்பேயை அவர் அஞ்சியதை என் விழிகள் கண்ட போது உடல் சோர்ந்தேன். இறுதி விழைவு வரை ஓடும் எண்ணமே பெண் என அறிந்தேன். தான் விழையும் ஒன்றை அடையும் விருப்புறுதியே பெண். எத்தனை சோர்விலும் நலுங்காமல் நின்றிருக்கும் ஆழ்விழைவில் அவரை மேலும் மேலும் புணர்ந்து சலித்தேன். அக்கணம் எங்களுக்கிடையில் நிரந்தரமான விரிகோடொன்றை மாயக்கரமொன்று தீட்டியது. அதனை உற்று நோக்கிய போது அது என் கரமென உணர்ந்தேன்.

என் நான்காவது மகவு கருக்கொண்டதை அறிந்த சுற்றத்தினர் என்னைக் காம விழைவு கொண்டவள் என அடுமனைகளில் புகைக் கசிவெனப் பரிமாறினர். தமது மனையாளன்களை என்னருகில் நெருங்கக் கூடதெனவும் சொல்லாடக் கூடாதென்றும் மனையாட்டிகள் இடித்துரைத்தனர். மனையில் மூன்று மைந்தரும் ஒருவரை ஒருவர் அழிக்கும் விசையுடன் மோதிக் கொள்வர். போர்க்களத்தில் வாழ்பவளென என்னை உணர்ந்தேன். என் இளம் குழவியைப் போர்க்களத்தில் பிரசவிக்கப் போகிறேன் என எண்ணினேன். ஆனால் அன்னையென என்னுள் இருந்தவள் வரவிருக்கும் பெண் அத்தனையையும் மாற்றி எழுதவிருக்கிறாள். மைந்தர்கள் அவளைப் போட்டியிட்டு பணிவிடை புரிவார்கள். மனையாளனின் அகம் பற்றுக் கொண்டு மனை திரும்பும். பெண் மகவென்பது நீங்காத பிணைப்பு என அவரது சித்தத்தை அகலவிடாது என எண்ணினேன். நீ பெண் என ஒவ்வொரு பகலும் இரவும் சொல் கொடுத்துக் கருச் சுமந்தேன்.

பெண் குழவியின் சிணுங்கலொன்றை என் பேற்று மயக்கில் கேட்ட போது மீண்டும் நானும் பிறந்திருந்தேன் என எண்ணி நீர் கசிந்து கோடாகச் செவியில் வழிந்திறங்க அயர்ந்தேன். அகம் பட்டுத் துகிலெனப் படபடத்தது. மழலை மொழி பேசும் ஆண் குழந்தைகள் அவளை மொய்த்து அவளிடம் சொல்லாட விரும்பி அவளுடன் சண்டையிட்டார்கள். அவளுடைய அண்ணன்கள் மூன்று மல்லர்களென அவளைக் காத்து ஆண் குழவிகளை விலக்கி அவளை மடியிருத்தி ஆற்றினர். மனையாளன் இந்தக் குறும்புகளையும் எளிய விளையாட்டுகளையும் கண்டு தானுமொரு ஆண் குழவியென மாறித் தன்னிடம் அவளைக் கொடுங்கள் எனக் கேட்க. மூவரும் மறுத்து அவளை மடியில் வைத்துக் கொண்டார்கள். அவர்கள் மூவரையும் இணைக்கும் சரடென அவள் மின்னினாள்.

விழித்து நோக்கிய போது சிறு ஆண்குறி கருமுகையென அவிழாமல் குவிந்திருக்க மருத்துவிச்சியின் கால்களில் வளர்த்தியிருந்த என் நான்காவது புத்திரன் நளினமான விரலசைவுகளுடன் உதட்டைச் சப்பி நெளித்துக் கொண்டான். என் உளம் உலைக்கொதியெனத் துடித்தது. அவ்வறையில் எவரும் இருக்கவில்லை. நானும் மருத்துவிச்சியும் அவனும் மட்டுமே இருந்தோம். அவனைக் கொன்றுவிடலாமா என எண்ணமெழுந்தது. மருத்துவிச்சி என் நோக்கிலிருந்த வெறிப்பைப் பார்த்த பின் “நாம் அறியாத ஒன்று நம் குழவிகளில் நிகழ்கிறது. அன்னை குட்டிகளைக் கொல்வது விலங்கினத்தில் மட்டுமே அறம். மானுடரில் ஒரு குழவியை அறிந்து கொல்பவள் புடவியின் அனைத்துக் குழவிகளையும் கொன்று குருதி குடிப்பவள் ஆகிறாள்” என முதுகுரலில் அசரீரியெனச் சொன்னாள். என் அகம் அடங்காது தவித்தது. கொல்லும் விழைவென அவனை வளர்த்தேன். எதையும் அறிந்தே அழிப்பவனாக வளர்ந்தான். மனையின் பண்டங்களை தெருக்களில் பிற சிறுவர்களை மனையில் சிரிப்பையென அவன் அழிக்கும் விழைவு கொண்டிருந்தான். அதையே அவனுக்கு முலையூட்டினேன். அவன் போர்க்களங்களில் ஆடிய கொலை வெறியாட்டுகளைப் பாணர்கள் பாடக் கேட்ட பொழுது என் முலைப்பால் என எண்ணிக் கொண்டேன். என் மார்பில் சுரந்த கொல்விழைவொன்று போரில் பேய்க்களியெனக் குடலுருவி ஆடியது என அகத்தின் நஞ்சு சிரித்தது. நான் நஞ்சூறியவள் ஆனேன். மனையாளன் அடவிகளில் பித்தனென அலைகிறார் எனக் குடிகள் சொல்லினர். நானே அவரைப் பித்தனாக்கியவள் என அடுமனைப் புகைகள் விடாமல் கசிந்து திண்ணைப் பல்லிகளும் ஒலிக்கத் தொடங்கின. என் புன்னகையில் நீலம் பாரித்ததை அறிந்தேன். என் அன்னை புதல்வர்களை வளர்த்தாள். நான் அவளுடன் அமைந்திருந்தேன். ஒரு விளக்கின் அடியில் குவிந்த இருளென.

என் மனையாளன் வனங்களில் அலைந்து நோய் மெலிந்து அங்கம் அனல் கொண்டது போலாகி வனக் கொற்றவை ஆலயத்தில் ஊழ்கத்திலும் நோன்பிலுமென அமர்ந்திருக்கிறார் என அறிந்தேன். ஒவ்வொரு நாளும் அவரை அணுகி அவரை அறைந்து வீழ்த்தும் சினம் எழுந்தது. ஏன் என்னைக் கைவிட்டாய் என அவரை முகத்தை நேர்நோக்கி விழியால் குத்தி நெஞ்சைக் கீற வேண்டும் என விழைவெழுந்தது. ஒரு முழுநிலா நாளில் என்னில் திரண்ட பித்தெல்லாம் தலைக்கேறி தறிகெட்ட நூற்பு ஆலையென அகம் குலைந்து எண்ணங்கள் நூலாலானவை எனப் பின்னிப் படர்ந்தன. என் முதற் காதலன் திண்ணையில் அமர்ந்து அவன் வில்லை முறுக்கிக் கொண்டிருந்தான். இரண்டாமவன் நகர மன்றிலே புலிகளுடன் சொல்லெதிர் பேசி சண்டையிட்டுக் கொண்டிருந்தான். மூன்றாமவன் எங்கிருக்கிறான் என நினைவினாலும் தொட முடியவில்லை. நான்காமவன் அன்னையின் மடியில் துயில் கொண்டிருந்தான். நிலவு வானேறி வனத்தின் மேல் பொழிந்து கொண்டிருந்தது. விண் மீன்கள் நீரில் விழுந்தவையெனத் துடித்தணைந்து கொண்டிருந்தன. எருது ஒன்று ஓலமிடும் ஓசையை அருகில் எனக் கேட்டேன். என் சித்தம் பிறழ்ந்து உடல் அவலமூறி அனல் சூடி விரகம் முற்றி வஞ்சம் திரண்டு சினத்தினால் கால்களை உராய்ந்தபடி வனக்கொற்றவையின் ஆலயத்தை நோக்கிச் சென்றேன். வழியில் வேழமொன்று இருளில் ஒருவழியென உறைந்து நின்றது. அதை ஒரு கல்லெனத் தட்டி விலத்தி நடந்தேன். வனக்கொற்றவை ஆலயத்தில் விரிசடையும் பெருமீசையும் தாடியும் நீறும் என ஊழ்கத்திலமைந்திருந்தவரை நோக்கினேன். அக்கணம் அவர் நான் தேடி வந்தவர் அவரல்ல என அகம் காலைத் தடுக்கியது. என் முழுவிசையையும் வஞ்சமும் காழ்ப்பும் நஞ்சுமெனத் திரட்டி அவர் முன் கால் நுனி முதல் கூந்தல் நுனி வரை அழல் கொண்டு எரிந்து நின்றேன். விழிதிறந்து என்னை நோக்கினார். ஒரு சவத்தின் நோக்கற்ற இறந்த பார்வையது. வெற்றுடம்பென நின்றிருக்கும் ஆணை நான் அதுவரை நோக்கியிருந்ததில்லை. அவ்விழியில் விழைவில்லை நஞ்சில்லை சினமில்லை அங்கு விழியே இல்லையெனக் கண்டேன். என் அழல் திரண்டு முட்டிக் கண்ணீரானது. சிந்தும் மூக்குடன் நீரை உதறியெழுந்தேன். கொற்றவை முன் நின்று அவள் குங்குமத்தை வலக்கையால் அள்ளி வந்து அவர் முகத்தில் எறிந்தேன். நான் என மட்டுமே நின்றிருக்கும் ஒருவனைப் பெற்றுக்கொள்ள விழைகிறேன். நீயொரு சவம். இனி உன்னுடன் வாழ்தல் என்னால் இயலாது. உன் பிரதிமையும் வேண்டாம். நீயற்று நானென்றிருக்கும் மகவினை நீயே கொடுக்கக் கடன் பட்டவன் என்றேன்.

சலனமின்றி எழுந்தவர் காட்டெருதை என கொற்றவையின் கோர விழியின் நெருப்பின் முன் என்னைப் புணர்ந்து சுக்கிலம் நிரப்பினார். எழுந்ததும் சிவமாகுக எனச் சொல்லி வனத்திடை புகுந்து மறைந்தார். என் ஐந்தாவது புதல்வன் நான் என்ற என் விழைவு. அவனை ஒன்றும் அணுகாத காப்பிருளில் பெற்று அவனை மட்டுமே பெற்றேன் என வளர்த்தேன். அவன் என் மடியை மஞ்சமெனக் கொண்டு வளர்ந்தான். என்னில் சுரந்த எளிய பாலின் சுனையில் எளிய கனவுகள் சூடினான். முதல் நால்வரும் போர் புகுந்து மடிந்தனர். இறுதியவனை நான் அல்லும் பகலும் என் காப்பிருளில் நிறுத்தியிருந்தேன். ஒரு நாள் அவனும் பிரிந்து போர் நுழைந்து மடிந்தான். அவனுக்கென உகுக்க என்னிடம் கண்ணீரும் எஞ்சவில்லை. விழைவுகளும் நீங்கின. மண்ணில் நிகழும் எதுவும் விழைவினால் எனத் தோன்றுவது ஒரு மயக்கு இளையவரே. நீங்கள் அறிய வேண்டியது எதுவெனச் சொல்லறிவதும் நிகரறிவதும் முற்றிலும் இருவேறானாவை. காவியம் சொல்லில் அமைய வாழ்வினில் புலன்கள் ஊழ்கம் கொண்டிருக்க வேண்டும். அகம் விழைவின் நஞ்சுகளால் அலைக்கழியும் நீள்மெலிகொடி. அழியாது முறியாது வளர்ந்து கொண்டேயிருப்பது. என் ஐந்து புதல்வர்களையும் காதல் மனையாளனையும் இழந்து நான் ஈன்றது விழைவின்மையின் சுடரை. இனி அங்கிருந்து நான் நோக்குவது எதை என்பதை இன்று என் மனையாளனின் விழிகளிலிருந்து அறிகிறேன். புத்தம் எனக்கொரு வாய்ப்பை நல்கியிருக்கிறது. ஊழ்கம் பயில்வென நிகழ்கிறது.

என் மனையாளனை இன்று கம்பளி வைரவச் சித்தர் எனக் குடிகள் சொல்கின்றனர். நான் அவரது வழியில் சென்று ஞானமென ஒன்றை அறியாதபடி அதன் வாசல்கள் சடங்குகளால் மூடப்பட்டிருக்கின்றன. அது பல்லாயிரம் அடுக்குகள் கொண்ட நெடுங்கதவுகளின் பெருக்கு. அதை ஒரு ஆண் தன் கையிலுள்ள கழியால் விலத்தி நடந்திட முடியும். பெண் தலையால் நடந்தே உட்செல்ல முடியும். இங்கு சிகை மழித்தமர்ந்து எளிமையாக அடையக் கூடிய ஒன்றில் உள்ள கருணை என்னை அமர்த்தியது. இதுவொரு புதிய வழியின் தொடக்கம். புதிய வழிகளில் ஏற்பு நிகழ்வது எளிது. நெடுங்கால வழிகள் ஆயிரமாயிரம் மானுடத் தளைகளால் கட்டுண்டிருக்கிறது. நான் ஒரு எளிய பெண். என்னால் அதை அறுத்துப் புதிய வழியொன்றைத் திறக்க முடியாது. இந்த ஆலயத்தின் குளிரில் ஒரு புன்னகையென அமைவதே என் ஊழ்கம்” என்றார் மாகதா.

இளம் பாணன் கனவிலென அவர் சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்தான். அலைந்து உடல் திரும்பும் ஆவியெனத் தவித்து மேனியைச் சிலிர்த்துக் கொண்டான். மாகதாவின் விழிகளுக்குள் புத்தர் சிவவடிவில் அமைந்திருக்கிறார் என எண்ணிக் கொண்டான். வேறுகாடார் துயிலில் இருந்து எழுந்து உடலை முறுக்கி மூட்டுகள் நெரிபடும் ஒலி கேட்டுத் திரும்பினான். மகாசோதி சயனத்திலோ ஊழ்கத்திலோ என அறியாத பாவனையில் கையைத் தலைக்கு வைத்தபடி சரிந்திருந்தார். மாகதா இளம் புன்னகையென அமர்ந்திருந்த கணத்தில் எழுந்து அவர் பாதங்களில் முழுதுடல் கிடத்தி வணங்கினான். மெல்லத் தயங்கியவர் “இளையவரே. இங்கு இவை முறையல்ல. உங்களை நான் அறிகிறேன். உங்கள் விழிகளில் கருணையின் சுனையொன்று நீர்த்திருக்கிறது. அதனை நீங்காத வரை நீங்கள் அறத்தை ஒழியப் போவதில்லை. அகத்தில் சுனைக்காது விழியில் கருணை கூராது. புடவியை அறிந்து விழைவை முற்றறிந்து ஞானம் கனிக” என்றார். “அவ்வாறே ஆகுக அன்னையே” என்றார். அச்சொல் எவருக்கோ என அறிந்தவர் போல் அங்கு அவர் கனிவின் தண்புன்னகையை வீசும் சிலையென அவனை நோக்கினார். அவ்விழிகளை எப்பொழுதும் அறிந்திராத தாகமொன்றுடன் அருந்திக் கொண்டான் இளம் பாணன். பேரரச மரத்தின் ஆயிரமாயிரம் இலைகளும் தலையசைத்து “ஓம்” என்றன.

TAGS
Share This