55: அத்திரிச் சாம்பல் : 02

55: அத்திரிச் சாம்பல் : 02

“அம்புகளால் எய்தெறிந்த புயற் காற்றென அக்கையின் பக்கச் சிறகு வேல் முனையை நெருங்கி பருந்து ஒற்றைச் சிறகால் கொல்வேல் முனையை அணைப்பதைப் போல் குவிந்தது. பின்னிருந்து வந்த வேழப்படை அக்கையின் பின்னர் ஒருங்கியது. உக்கிரமான போர் இருளில் சுடர்களின் நெளிவுகளெனத் தோன்ற வெட்டுண்டும் அம்புபட்டும் குற்றுயிராய்க் கிடந்தவர்கள் வேழக் கால்களிலும் புரவி மிதிகளிலும் அலறுமோசை கூடியது. தீப்பந்தங்கள் எரித்தபடி இருபுறமும் வீரர்கள் உற்சாகக் கூச்சல்களுடன் போரிட்டனர்.

அசல மாபெருந்தேரின் அச்சென மையத்தில் நின்று சுழலச் சிங்கைப் படை அவரது ஆணைகளில் உருக்கொண்டு மலையென எழுந்து நின்றது. அவர்களின் போர்வெறி என்னைத் தொட்டு உலுப்பிய போது உணர்வெழுந்து படைகளை ஒருக்கும் ஆணைகளைப் பிறப்பித்துச் சற்றுப் பின்னடைந்தேன். எல்லைகளில் நின்ற சிங்கைப் படையின் வீச்சினைத் தாளாமல் சொல்லிற்கினியாளின் பக்கச் சிறகு விரிந்து அதிர்ந்தது. அம்புபட்டுத் துடிக்கும் பருந்தெனச் சிறகுகள் அலைந்து படபடத்தன. அசலவின் நோக்கை ஒவ்வொருவரும் உற்று மீண்டோம். நோக்கற்ற வெல்விழியென அவர் வெல்லப்போகும் போரொன்றின் மேல் காத்திருப்பவரெனத் தோன்றினார். அக்கையின் சிறகுநுனி வேல்முனையைக் கடந்து மையம் வந்தது. இருளில் எரியம்புகள் பொழிந்தபடி ஆயிரம் இதழ் கொண்ட தாமரைத் தீவென அவள் படை சுழன்றது. சிங்கைப் படையின் எரியம்புகளை வானிலேயே அறைந்து வீழ்த்தினார்கள் பெண்புலிகள். வாட்படை நுழைய முடியாமல் தவித்த போது அக்கை அவர்களின் கவசச் சுவற்றை இடித்துத் தள்ளியபடி வேழங்களுடன் நுழைந்தார். அவர் தேரிலிருந்து இருபாய்ச்சலில் வேழமொன்றில் ஏறிய காட்சி அரசி நிலவையென அவரைத் தோற்றியது. கொல்வேல்கள் அவர் கைகளுக்குள் பறந்தமைந்தன.

அவர் அசலவை நோக்கி வழியை உண்டாக்குகிறார் என உய்த்த சொல்லிற்கினியாள் சிறகைக் குவித்து வேல்முனையைக் கடந்தாள்.
போர் அம்புகளின் ஆடலென நிகழத் தொடங்கியது. அரை நாழிகை வாள் வீரர்களும் கதை வீரர்களும் களத்தின் கொல்வட்டத்திற்கு வெளியே சென்று அம்மாயக் காட்சியை நோக்கினர். கால் நாழிகை நானும் விழிமறந்து எங்கிருக்கிறேன் எனும் போதமழிந்து அக்காட்சியை நோக்கினேன். வானில் விண்மீன்கள் எரியம்புகளின் விழிகளெனத் திரும்பிக் கொண்டிருப்பதைப் போல் துடிதுடித்தன. மேகமற்ற நிர்மல வானம் கருநீலப் போர்த்திடலென தலைமேலே நிகழ்ந்து கொண்டிருந்தது. நிலவின் பாதிப்பிறை சிந்திய ஒளிக்குழம்பு களத்தில் எரியம்பின் கதிர்மஞ்சளின் மேல் வெள்மஞ்சளாய் வழிந்தது. இருபுறமும் எழுந்த எரியம்புகளின் பெருக்கில் போர்க்களம் நடுப்பகலென ஒளிவீசியது. புரவிகளின் துள்ளலும் வேழங்களின் கொலை வெறியும் நோக்கிய போது காட்டு விலங்குகளின் மதவெறிகொண்ட போரில் மானுடர் நுழைந்ததைப் போன்றிருந்தது. நூற்றுக்கணக்கான வேழங்கள் இருபுறமும் நின்று சண்டையிட்டன. மருத்துவக் குழுக்கள் களமிடை புகாது அஞ்சி ஒடுங்கினர்.

அவ்வழியே பட்டியென மேய்க்கப்பட்ட ஆயிரமாயிரம் அத்திரிகள் கூட்டமொன்று தம்வருவழியில் போர்நிகழ்வதை உறாமல் கரைவந்து சுழன்று திமிறின. அவற்றின் மேய்ப்பர்கள் அஞ்சிக் குரலெடுத்து அவற்றைச் சாய்த்துச் செல்லப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். களத்தின் இடமுனையில் நிலை கொண்டிருந்த சிங்கைப் படை அத்திரிக் கூட்டத்தைக் கலைத்து புலிப்படை எல்லைக்குள் விரட்டினர். அத்திரிகள் புரவிகளுக்கும் வீரர்களுக்கும் வேழங்களுக்குமிடையில் அரண்ட விழிகளுடன் துள்ளியோடின. உதைத்தன. மிகைக் குரல் கொண்ட அத்திரிகளின் கத்தலில் போர்நிலம் விதிர்விதிர்த்தது. வீரர்களின் கவனம் குலைந்தது. மடிந்த வீரர்களின் உடல்களை உதைத்துக் குருதிவழியும் கால்களுடன் மாதோட்டப் பெருவீதியை நோக்கி அத்திரிகள் ஓடின. களம் விசையிழப்பதை நோக்கிய நான் திரிசூலமென அரைமயக்குள்ள வடிவைக் கொண்ட வியூகமெனப் போரை ஒருக்கும் ஆணைகளை அறிவித்துக் கொண்டு களமுனையில் உடைந்திருந்த கவசச்சுவரைக் கடந்தேன். கதைகளும் வாள்களும் உரசுமொலிகள் பற்களை நடுக்கிக் கூசச் செய்ய வீரர்கள் செருமியும் இறுக்கியும் வாயை இழுத்துப் போரிட்டனர். அதுவரை திரட்டிய ஆற்றல் அனைத்தையும் சாவின் கடைசிப் படிக்கட்டில் வீசியெறிபவர்கள் போல இருபடைகளும் மோதின.

சாவின் விளிம்பில் அம்புகளுக்கும் வாள்களுக்கும் கதைவீச்சுக்கும் கொல்வேல்களின் எறிவிழிகளுக்கும் முன்னே மானுடர் அச்சமென்பதை அறியார் முல்லரே. அக்கணம் அவர்களுள் நாம் அறியாத தொல் தெய்வங்களும் முன்னோர்களும் எழுந்தமைந்து தாங்கள் தொடராது விட்டு மடிந்த போரின் மிகுதியை ஆடுகிறார்கள். விழிகளில் மானுட பாவங்கள் அழிந்திருக்கும். வெறிவிழிகளும் கூர்பார்வையும் மட்டுமே இருட்போரில் எதிர்ப்படும் ஒவ்வொன்றையும் தொட்டுத் துலக்கி ஒளிகொடுப்பது. அகத்திலெரியும் சுடரே இருட்டை விலக்குவது. எங்கிருந்தோ பெருகி வரும் எரியம்புகளை உடலால் நோக்கி ஒழிய வேண்டும். யானையின் துதியோ கதையோ சுழலும் எல்லைகளில் புழுவாய்த் துடித்து விலக வேண்டும். கணமிடை வெளியில் உருக்கொண்டு கொல்லும் அணுக்கணத்தை அறியவேண்டும். உடல் கூர்ந்து அக்கணத்தை வென்றாக வேண்டும். வெல்லும் அக்கணமென்பது ஆயுளை நீட்டிக்கும் அணுக்கணம் மட்டுமே. அடுத்த கணம் அடுத்த அணுக்கணத்தை உய்ய வேண்டும்.

அக்கையும் சொல்லிற்கினியாளும் பித்தெழுந்த தொல்தெய்வங்களென களத்தில் மின்னியெழுந்தார்கள். அவர்களில் மயக்குக் கொண்டதெனக் களம் அசைந்து விரிந்தது. வேழம் மேலிருந்த அக்கை தேரில் பாய்ந்து எரியம்புகளைச் சரமெனத் தொடுத்தபடி பொங்கும் பேராற்று வெள்ளத்தில் மாமுதலையென நீந்திச் சென்றார். அவர் துணையாகச் சென்ற நூற்றுக்கணக்கான கொற்றவைகள் மண்சரிந்து விழுந்து கொண்டிருந்தார்கள். அறுபட்ட கழுத்துகளும் உலோகமுனை குத்தி நின்ற மார்புகளும் துடிப்படங்காமல் நின்ற பொழுதில் அசல எய்த ஈரம்புகள் சொல்லிற்கினியாளின் வலக்கரத்தைத் தைத்தன. அவள் அலறிய நாகமென வில்லை விட்டொழிந்து இடக் கரத்தில் வாளேந்திக் கையில் பட்ட அம்புகளின் தண்டறைந்து உடைத்துப் பெருகும் குருதியுடன் எழுந்தாள். படை மருத்துவப் பெண்ணொருத்தி காயங்களைக் கட்டிக்கொண்டிருக்க சரப்பெருக்கை வாளால் சூழற்றி ஒழிந்தாள். அவளைப் பின்னணையச் செய்யும் சங்கேத முரசுகளை ஒலிக்கச் சொல்லி ஆணையிட்டேன். வேறேதோ தெய்வத்தின் அழைப்புக் கேட்டவளென அவள் செவிகளை முரசொலிகள் தொடாமல் உதிர்ந்தன. முரசுகள் அவளை விம்மி விம்மி அழைப்பதைக் கேட்ட போது நானறியாது எனது விழிகள் நீர்பெருகின. முரசின் கண்ணீர் உக்கிரமெனவே எழக்கூடும். கொல்வெறியுடன் அவள் பக்கம் சாய்ந்து படைவிரட்டி கொல்வேல்களை எறிந்து அவளைக் காக்க விழைந்தேன். எரிபட்ட புலியெனத் திரும்பி வெகுண்டவள் விழியால் என்னை உறுக்கினாள். அவ்விழிகள். அவற்றை நான் எக்கனவிலும் எங்கிலும் கண்டதில்லை முல்லரே. விரிபெரும் புலியின் கொல்கணத்தின் முன்னரான சீற்றத்தின் மருள்வும் வெறியும் கொண்டவை அவை.

அசல அக்கையை நோக்கி அம்புகளைக் குவிக்கத் தொடங்கிய போது சிங்கைப் படையின் விசைகுன்றா எண்ணிக்கையக் கண்டு உளம் தளர்ந்தேன். திரும்பி நோக்கிய போது எஞ்சியிருப்பவர்கள் விழிவட்டமெனச் சுருங்கினார்கள். அக்கையிடமிருந்து எழுந்த எரியம்புகளால் அசலவின் தேர் அசைந்து தளும்பியது. அவரின் விற்களை இருமுறை ஒடித்தார் அக்கை. அசல அனைத்துக்கும் எப்பொழுதோ தயாராகியவர் என எங்களையும் எங்கள் கரங்களையும் அணுதினமும் தொட்டுத் தழுவி அறிந்தவ பயிற்சித் தோழரென தேரில் எழுந்து நின்றார். நூற்றுக்கணக்கான வீரர்கள் அவரை நெருங்க முடியாத படி அம்புகளால் உலோகமுட்திரைகளை விரித்துக் கொண்டே நின்றனர். எண்ணியிராக் கணத்தில் சொல்லிற்கினியாள் திரையைக் கிழித்து உள்நுழைந்தாள். அவளது தேர் அன்னத்தின் பின்பகுதியெனத் திரைக்குள் அள்ளுண்ட போது நான் தேரிலிருந்து குதித்துப் புரவியொன்றில் ஏறி ஒருகையில் வாளும் மறுகையில் கேடயமும் ஏந்தி அம்புப் பெருக்கைக் கடக்க ஓடினேன். அம்பு நுனிகள் மட்டுமே தெரியும் மழைமாயமொன்றைச் சிங்கையின் படைகள் களத்தில் நிகழ்த்திக் காட்டினர். இருபருவ நெடும் போர்களால் ஆயிரம் மடங்கு நுட்பமும் போர்த்திறனும் கொண்டிருந்தனர். எதிர்ப்பவரின் ஆற்றலே எதிரியின் ஆற்றலெனக் காலம் மாற்றுகிறது முல்லரே. புலிகளின் போர்நுட்பங்களுடன் நாம் அறியாத பயிற்சிகளும் நிகழ்ந்திருக்கின்றன என்பதை அறிந்து திகைத்தேன். கேடயத்தில் உலோகமழை கொட்டத் திரையை விரித்து உள்நுழைந்த போது அசலவின் தேரில் வாளுடன் வாள் மோதிக்கொண்டிருந்த சொல்லிற்கினியாளைக் கண்டேன். குருளையுடன் விளையாடும் பெருஞ் சிம்மமென அசல அவளை ஒழிந்து கொண்டிருந்தார். அவளின் வலக்கரக் காயங்கள் குருதி கொட்டி மயக்கில் விழுபவளெனத் தன் அத்தனை புலனையும் வாளொன்றாக்கி நின்றாள். உலோக மழை போன்று கொட்டும் அம்புத்திரைகளை விட வலிமையானது கண்ணீரால் மூடப்படும் போர்.

சொல்லிற்கினியாளை ஒருகணம் அசல இரங்கினார் என்பது போல் தோன்றியது. வாளை ஒழிந்து ஒற்றைக் கரத்துடன் நின்றவளைத் தாக்காது சிலகணம் தள்ளி நின்று பெருமூச்சுடன் மார்பு எழ அவளை நோக்கினார். மயக்கில் விழுந்தோ மடியும் வரையோ புலிகளின் குருதி தாகமென்பது குடிகளின் விடுதலைக்கானது முல்லரே. அவள் கைநீட்டித் திரும்பிய போது அவளின் படைப் பெண்ணொருத்தி வாள் அளிக்க நீண்ட கை சிங்கை வீரனொருவனால் அறுத்து வீசப்பட்டது. அதிர்ந்து திரும்பியவள் அசல தன்னைக் கொல்லாது பொறுப்பதை எண்ணிச் சினம் கொண்டிருப்பாள் என எண்ணுகிறேன். எரியம்புகள் ஒளிமழைச் சாரலென எழுந்தன. போர் சில கணங்கள் வடிந்த குருதியின் குளிர்வெளியென உறைந்தது. அசலவின் தேரிலிருந்த சிம்மப் பிடிகொண்ட வாளை உருவி அவன் தலையை வெட்டும் வெறியுடன் வீசினாள். அவர் அதைத் தென்றலை வழிவிடும் கொடியென விலகினார். அவள் விழுபவள் போல தேரில் அசலவைக் கடந்து சென்று தேர்க்கட்டில் முட்டி விசையனைத்தும் ஒருக்கித் திரும்பி வாளை உயர்த்தினாள். சிறு மின்னலொன்றைக் கையிலேந்தியவளென வாள் அவள் கரத்தில் ஒளிர்கொண்டது. அசல திரும்பி அவளின் முகத்தை நோக்காது ஒளியில் தெரிந்த நிழலை நோக்கி வாளை வீசினார். ஒருகணம் அவரது தலை தாழ்ந்து உதடுகள் ஒட்டி இறுகியதைக் கண்டேன். சொல்லிற்கினியாளின் குயிற்குரல் கொண்ட கழுத்துச் செவ்விரத்தம் பூக்கள் வழிவதைப் போல தேரின் மேல் பறந்தது. அசல அவளுடலை நோக்காது வில்லைக் கணத்தில் கையிலெடுத்தார். அம்புகளைத் தொடுத்தார்.

அவளது தலை தேர்த்தட்டின் விசையதிர்வால் உருண்டு மண்ணில் விழுந்த போது அத்தனை புரிந்த போரும் வீணனெ நடுக்கின்றி என் அகம் சொன்னது. அத்தனை குருதியும் குடித்த என் நா உலர்ந்தது. அவளது மூடா விழிகளில் ஒளிர்ந்த சாவுக்களை என்னில் நிழலென ஒட்டியது. அத்திரிகள் கதறிய ஒலியென என்னுள் கேவலான கனைப்புடன் ஓசைகள் எழுந்து சொல்லென மாறாமல் வீழ்ந்தன. அவள் என் காதலி முல்லரே. போர்க்களம் புகும் ஒவ்வொரு வாலிபனும் காதலிக்கும் பெண் தெய்வம். போரில் அவள் எங்களுடன் துணை நின்றால் காதலால் காக்கப்படும் ஆணென உளம் அச்சமின்றி விசைகூடும். அப்போரில் நான் தோற்றேன் என அக்கணம் அறிந்தேன். திரும்பிய போது புரவி தள்ளாடியது. நம் அகத்தை மிருகங்கள் உணர்வது எத்தொடுகையால் என அறியேன் முல்லரே. ஆனால் அவை அறிகின்றன. உடனிருக்கின்றன. மானுடரை விட விரைவாகவே அவை மானுடரைத் தழுவிக் கொள்கின்றன. துயருற்ற மானுடரின் மெய்த்தோழர் மிருகங்களே.

அக்கை திரை கடந்து எழுந்த காட்சியைக் கண்ட போது விழிபேதலித்தது. உடலெங்கும் வெட்டுக் காயங்கள். பலிமேடைக்குச் செல்பவளென அவள் திரைபிரித்து உள்வந்தாள் என்பதை அவள் விழிகூச்சலிட்டது. குடிகளைக் காப்பேன் அல்லது மடிவேன் என அவள் சொன்ன ஒவ்வொரு சொல்லிலும் எழுந்த உயிரைக் குவித்துத் தேரில் அம்பேந்தி எழுந்தாள் அன்னை. அன்னையெனில் காப்பவள். ஒரு கணத்தில் எனை நோக்கித் திரும்பி படைகளைத் திருப்பி எஞ்சியவர்களை மீட்டுக் களஎல்லையை மாற்று எனக் கூவினாள். நான் இல்லை எனத் தலையசைத்தேன். என்னில் பேராழியெனத் துடிக்கும் ஆற்றெலெல்லாம் எக்கணத்தில் எனை நீங்கி வெறுங்காற்றென ஆனேன் எனத் தெரியவில்லை. புரவி அவரது ஆணையைச் சிரமேற்றதென அம்புத்திரை ஒழிந்திருந்த சிறுகண இடைவெளியால் கவசச் சுவரைக் கடந்தது. படைகளை ஒருக்கிப் பின்னகரும் ஆணையை முரசுகள் அறைந்தன. அக்கை எங்கே செல்கிறாய் என அகம் கூவியது. சித்தம் அவளை அறிந்து அகத்தை வென்றது. அக்கையின் சொல் ஆணையல்லவா. படைகள் திரும்பிக் கொண்டிருந்த போதும் பின்னணியிலிருந்த புலிகள் எரியம்புகளை எய்தபடியிருந்தனர். வேழங்கள் துதிக்கைகள் அறுபட்டு பாறைகளெனத் தேர்களில் மோதியது. கறுத்த மலைப்பாம்புகளெனத் துதிகள் இறைந்திருந்தன. தேர்களைக் கைவிட்டுப் புரவிகளில் ஏறினர் வீரர்கள். நிலவு வஞ்சத்துடன் பொழியும் ஒளியலையென வானில் ஆடியது.

புரவியிலிருந்து குதித்து மடிந்து கிடந்த வேழமொன்றின் வயிற்றிலேறி வெறுங்கையுடன் நின்றேன். இனியாள் மாகளத்தாள் ஆனாள். அக்கை அவளுடன் இணை நிற்க விழைந்தவளென அசலவின் முன் குருதிக் காயங்களுடன் அறுபடா மின்னலெனச் சரம் தொடுத்து நிற்கிறாள். அசலவின் முன் அக்கை எழுந்த போதே அக்கைக்கு இருப்பது இரு மானுடக் கரங்களென அறிந்தேன் முல்லரே. அதுவரை அவரை ஆயிரம் கரமுடையாள் எனவே குடிகளும் நானும் நம்பினோம். எளிய மானுடக் கரங்கள் வில்லில் ஒருங்கி அம்பை எடுத்து எய்யும் பயிற்சி விளையாட்டென அப்போர் நிகழ்ந்தது. அம்புகள் அசலவின் தேரை அடையாமலேயே விழுந்தன. துயரில் ஆழ்துயர் நம் தெய்வம் தோற்பதை நாமே காண்பது. நம் இறை நம்மைக் காக்கவென மடிவது. துயரென எஞ்சும் வடுக்களை நித்தியமாய் நம் நுதலில் பொறிப்பது.

அக்கை அசலவை நெருங்க நெருங்க அவளில் மடிந்த பெண்களின் வாசமெழுந்து களமெங்கும் பரவியதை வீரர்கள் மணந்து சாநாற்றத்தை உதற மூச்சி வெளியெறிந்தார்கள். சதையெலாம் ஒழுகி எலும்பென ஆனாலும் விழைவதை வென்றமைபவளே பெண் எனும் பேராற்றல் முல்லரே. தான் காப்பவர்களைக் காக்கத் தன்னை எரிக்கவென அழல் கொண்டவர்கள். மடிந்த வேழத்தின் வயிறு புதைசேற்றின் வழுவழுப்பென நொய்யத் தொடங்கியது. என் இடக்கால் அதன் காயமொன்றிற்குள் நுழைந்து பாதம் உட்சதையில் ஊன்றி நின்றது. சுடுசதையில் பாதம் பட்டபோது உயிர் கொண்டிருப்பதெனத் தோன்றிய வேழத்தை நோக்கிப் பின் அக்கையை நோக்கினேன். அங்கு களம் நிற்பதும் இச்சதைச்சூடு தான் எனத் தோன்ற மண்டியிட்டு மார்புகள் இளகிக் குலுங்க அழுதேன். எனது அணுக்க வீரர்கள் என்னைச் சூழ்ந்து அரண் கொண்டார்கள். சினத்துடன் எழுந்து அவர்களை அங்கிருந்து செல்லுமாறு வசைகளால் தூற்றினேன். அக்கையையும் சொல்லிற்கினியாளையும் களத்தில் மடியவிட்டு எங்கு சென்று எவரை நான் நேர்நோக்க முடியும். குடியின் பேரனையரைக் கண்முன்னே சாகவிட்ட கொடுமைந்தன் என என்னை நோக்கும் ஒரு குடியின் விழிமுனையும் அசலவின் ஆயிரம் அம்புகளை விடக் கொடியது. துயரென்பது நினைவினால் அறிவினால் நீட்டிக்கும் ஒரு புகைப்பெருக்கி. சித்தமும் அகமும் குன்றியது. என் அணுக்கப் படை என் சொல் கேளாது அரணென உறுக்கி நின்றது. ஒவ்வொருவரும் என் பொருட்டு மடிபவரெனக் களம் நின்றார்களா அல்லது என் அகமெனப் புறம் நிற்கும் ஆடிப்பாவைகளா என எண்ணமெழுந்தது. ஒவ்வொருவராய் நோக்கினேன். அவர்கள் போரில் அப்போது தான் நுழைந்தவர்களென விசை கொண்டு சிங்கையின் அம்புகளை வானிலேயே சிதறடித்தார்கள். நாம் அழிப்பவரென இருப்பவர் போரில் முதன்மையானவரே அல்ல முல்லரே. நாம் காப்பவர் என ஒருவர் உள்ளவரை நாம் விசையழிவதில்லை.

ஒரு மின்கணம் அக்கை திரும்பிக் களத்தை நோக்கிய பார்வை ஒவ்வொரு வீரனிலும் அருளென விழுந்து மீண்டது. அசல தன் வில்லை வானுயர்த்தி ஒருக்கி அக்கையை நோக்கினார். அவர் விழிகள் வியப்பில் ஆடின. அக்கை தன்னைக் கொடுக்கவென வந்திருப்பதைக் கண்டு அசலவின் வில் அக்கையைச் சுற்றி அம்புகளைப் பெய்து பாதையமைக்கும் ஏவலனெனத் தோற்றியது. அசல தன்னுள் எழும் ஆற்றல்கள் எதையும் தொடாமலேயே அம்புகளை எய்கிறார் என எண்ணினேன்.

அக்கை அவரது தேரின் வில்வட்டத்திற்குள் நுழைந்த போது ஆயிரம் போர்கள் வாழ்த்திய மாகாளி அவளில் எழுந்து மானுடி என அமைந்தாள். என் நா நானறியாமல் அகூஹ்க் என்றது. பின் அது அம்புப் பெருக்கைக் குரலால் அறுப்பவர்களென வீரர்களைப் பற்றிக் கொண்டு புலிகள் அகூஹ்க் அகூஹ்க் அகூஹ்க் எனப் புயலாழியெனக் குரல் கொண்டனர். அக்கை அக்கணம் அக்குரலால் வானெழுந்து மண்ணளந்த மாவில்லைப் பிடிப்பரென ஆவநாழி முற்றுநிறைந்திருந்த தேரொன்றில் தாவியேறி அத்தனை சரங்களையும் ஒரு வில்லில் கோர்ப்பவரென விசை முற்றியெழுந்தார். எஞ்சும் கடைசி அம்பும் அங்கு இருக்கக்கூடாது என்பதைப் போல் அவர் ஆற்றலின் அனைத்து தெய்வங்களும் அவர் தேரில் அமர்ந்தன. அம்புகளை வானில் அறைந்த போது அவள் போர்க்காளி. தேர்களை அடித்து நடுக்கிய போது பூதமென்றானவர். சிங்கைப் படை விழிகளில் அம்புகளைப் பிசகின்றித் தைத்த போது பெருவேட்டைக்காரி. ஆயிரம் வேழங்கள் எதிர்வரினும் ஒற்றைக் கரமுயர்த்தி அவை அடக்கும் ஆணை கொண்ட கரத்தினால் வில்லைப் பிடித்து நின்று பெண்ணென முழுதான போது அவர் கொற்றவை. நான் கண்டேன் முல்லரே. அக்கை அக்களத்தில் அத்தனை தெய்வங்களும் பிசாசுகளுமானார். அவர் ஒரு தெய்வமென எழுந்த போது அதன் மறுதெய்வமென அசல எழுந்தார். முரசுகள் தெய்வங்களை வாழ்த்தியெழுந்தன. பறைகள் மலைப்பாறைகளென உருண்டன. முழவுகள் கொட்டின. சிங்கைப்படை அக்கையின் வருகையை ஒரு பெருங்காட்டின் ஆயிரமாயிரம் கொல்விலங்குகளும் ஒற்றைப் பேருருவாய் ஆனதெனக் கண்டு அஞ்சி விலகியோடினர். சிலர் மண்தொட்டு விழுந்து வணங்கினர்.

அக்கை எவரையும் நோக்காது சுழல்வாளியென அசலவின் எதிர்நின்றார். அசல அக்கையை நோக்கிய போது நிகர் தெய்வங்களின் போரதுவென மாறியது. அத்தனை கரங்களும் ஒரு கணத்தில் களத்தில் விழப்போவது எவ்வுடல் எனத் துழாவுவது போல் ஆயுதங்கள் சரியும் ஒலி களத்தில் சங்கிலிகள் கற்தரையில் இழுபடுபவை போல ஒலித்தன. உளம் சிலகணம் அக்கை அவரைக் கொன்று வீழ்த்திவிடுவார் எனத் துடித்தது. அறியா மயக்குகளை நம்புவதே அகமென்றானது முல்லரே.

அக்கையைத் தைத்த முதலம்புக்கும் மூன்றாவது அம்புக்குமிடையில் இடைவெளியொன்றைக் கண்டவரென அக்களத்தில் எவருமில்லை. அசலவும் அக்கையும் மட்டுமே அதை அறியக் கூடும். ஒருவேளை அவர்களும் அதை அறிந்திருக்க இயலுமா தெரியவில்லை. நாம் அத்தனையும் ஒருக்கி அனைத்தையும் குவித்து நிற்குமொரு கணத்தில் துளிக்காற்றொன்றில் எழும் மாயக்கரமொன்று அதைக் குலைத்து நகைக்கிறது. நாம் அறியாமல் நம்முடனேயே என்றும் உடனிருக்கிறது. அக்கை வீழ்ந்து தேரில் சரிந்த போது அக்காற்றை நான் கண்டேன். அது சிரித்து நகைத்தபடி என் மேனியை வந்து அணைத்துக் கொண்டது.

அப்போரில் நாங்கள் பின்னடைந்தோம். சிங்கைப் படைகள் எல்லையை விரித்து நிலைகளை வலுவாக்கி மீண்டன. பட்டினத்திலிருந்து உதவிப் படைகள் வந்திருந்த போது பொழுது புலர்ந்து மூநாழிகை ஆகியிருந்தது. நான் அவர்களைச் சந்திக்க விரும்பாமல் காட்டிற்குள் சென்ற போது அம்புகள் பட்டுக் குற்றுயிராய் ஊர் திரும்பி மடிந்திட்ட அத்திரிகளை அடுக்கி எரியூட்டிக் கொண்டிருந்த மேய்ப்பர்களைக் கண்டேன். வேறு வேறு அகவைகள் கொண்ட அத்திரிகள் அங்கு குவிக்கப்பட்டிருந்தன. அத்திரிகள் புரவி போன்ற தோல் கொண்டவை. நீள்செவியும் தாங்கும் குணமும் பூண்ட எளியவை. கத்தும் குரலில் மட்டுமே பெருவிலங்கெனத் தோன்றுபவை. நூற்றுக்கணக்கான அத்திரிகளை எரிவிறகுகளில் அடுக்கி வைத்திருந்தனர். முதுமேய்ப்பர் ஒருவர் என்னிடம் வந்து பெருந்தளபதி களத்தில் வீழ்ந்த பத்துப் போராளிகளை ஒரு அத்திரியெனக் கொண்டு இந்த எரிவிறகை மூட்டுக என மெல்லிய ஆணையின் குரலில் சொன்னார். நான் இளவயதில் மட்டுமே கொண்டிருந்த அகநடுக்குடன் அத்திரிகளை நோக்கினேன். அவை சிறுமலைகளெனப் புடைத்து விரிந்து குருதியுறைந்து கிடந்தன. அக்கையும் சொல்லிற்கினியாளும் என் நினைவில் எழவில்லை. அத்திரிக் கூட்டத்தை விலங்குகளெனவே என் விழிகள் கண்டன. தீப்பந்தத்தை எடுத்து எரிவிறகுக் குவியலின் அருகே போனேன். வனத்தின் விரிவெளியொன்றில் இத்தனை அத்திரிகள் என்றும் ஒரு நாளில் மடிந்திருக்காது. ஒன்றாய் எரிவிறகில் ஏறியிருக்காது. அத்திரிகளை எரிக்கும் வழமை கூடக் குடியில் இருந்ததில்லை.

போர் அனைத்தையும் எரிவிறகில் அடுக்கிடும் காலனின் எரிமேடையென என்னில் எண்ணமெழுந்த போது என் பின்னே மெல்லடிகளுடன் எவரோ என்னிலிருந்து இறங்கி விலகி நடக்கின்றார் என அகம் மயக்குற்றது. நான் திரும்பி நோக்கவில்லை. அவரை நான் அறிவேன். ஒவ்வொரு களத்திலும் என் கரமாய் அமைந்தவர். சித்தத்தை நிறைத்தவர். அவரை அழிவின் துயர் அண்ட முடியாது. துயருற்ற வீரரிடமிருந்து அவர் இறங்கிச் சென்று வேறொருவரில் அமர்ந்து கொண்டு களியுடன் அழிப்பவர். அழிவையே அளியெனக் கொடுப்பவர். மானுடரின் கடைசித் தெய்வம். காலன். மாகாலன். கூற்றன். பெருங்கூற்றன். அழியோன். அழிவென்போன். அழிகளம் ஆக்கிய களிகாரன்.

அவர் சென்று மறையும் ஓசையை முழுதுணர்ந்த போது அத்திரிகளின் மூடிய விழிகளுள் களம் மடிந்த ஒவ்வொருவரும் அசைந்தார்கள். வால்களில் செவிகளில் தோலிலென விழிகள் கொண்ட அத்திரிகளை எரிக்க என்னல் இயாலது எனத் திரும்பினேன். முதுமேய்ப்பர் என் தீப்பந்தக் கரத்தைத் தொட்டார். தீச்சுள்ளிகளெனச் சுட்டன முதுவிரல்கள். பெருந்தளபதி நீங்கள் எரிப்பதன் மூலம் சாம்பலை உடனெடுத்துச் செல்ல முடியும். இல்லையேல் நீங்கள் குருதிவற்றாத களத்தில் கால்களும் கரங்களும் அறுபட்டுச் சாவு நெருங்காது கிடப்பவரென எஞ்சிய வாழ்நாளைக் கழிக்க வேண்டும். எரியுங்கள் உங்கள் தோழர்களை. அவர்கள் உங்களுடன் நுழைவதற்கான வாசலைத் திறவுங்கள். கலங்கும் வீரனை அவர்கள் நெருங்க முடியாது. அறிக. சாம்பலில் பூக்கும் துயர்மலரை விட அழகானதை அகம் கற்பனையில் கூடக் காண முடியாது. எரித்து அடைக. எரியென்றாகுக என்றார்.

தீப்பந்தத்தைத் தோகை விசிறியின் மென்மையுடன் எரிவிறகில் தொட்டேன். நீண்டு கிடந்த பிணமேடையைச் சுற்றி அழலால் தொட்டேன். என் அகம் எரிந்து சாம்பலாகும் ஒலி கேட்டது. அத்திரிகள் தோல் கருகி ஊனுருகி எலும்புகள் கட்டித்துச் சாம்பலாகும் வரை தீயை மூட்டிக் கொண்டேயிருந்தார்கள். என் அத்தனை வாழ்நாளும் அதில் எரிந்தன. நான் கொன்றவர்களும் எனக்காக மடிந்தவர்களும் உடன் நின்றவர்களும் வழிநடத்தியவர்களும் ஒவ்வொருவராய்த் தீநுனியில் தோன்றினர். அகம் கொள்ளும் மயக்குகளில் துயரே அளவற்றது. மகிழ்வை மயக்கு அழிக்கிறது. துயரை அது காற்றில் எறியும் சாம்பெலனப் பரப்புகிறது. விரிக்கிறது. விசுறுகிறது. உருவாயும் வாசமாயும் எஞ்சுகிறது. அத்திரிகள் சாம்பலாய் அணையும் வரை நின்ற இடத்தில் வேரோடி நின்றேன். அந்தியில் வனம் நுழைந்த காற்றுவெள்ளத்தில் எழுந்த சாம்பல் அலைகள் மேய்ப்பர்களையும் மரங்களையும் இலைகளையும் மலர்களையும் கனிகளையும் தண்டுகளையும் தழுவி என்னையும் தழுவியபோது சாம்பலின் மணத்தை நுகர்ந்தேன். சாம்பலாய்ப் படிந்த முகத்தில் இருகண்ணீர்க் கரங்கள் முளைத்துச் சாம்பலைக் கரைத்துத் தோலெனப் பூசியது. கண்ணீர் ஒவ்வொரு முறையும் புதிதாய் உதிக்கும் பெருஞானம். ஒரு கண்ணீருக்கும் இன்னொரு கண்ணீருக்குமிடையிலேயே அகம் அனலிடப்படுகிறது. துயர் அத்திரிச் சாம்பலென மேனியணைகிறது.

முல்லரே. துயரை அறியா மானுடர் குழவிகள். துயர் கொண்ட குழவிகள் கூட மானுடரே. தூய குழவியொன்று மண்ணை அடையத் துயர் விடுவதில்லை. துயர் நம்மை அளக்கிறது. அதன் படிக்கல்லின் நிகர்த்தட்டு என்றும் உயர்வதில்லை. அப்படிக்கல்லின் தட்டில் நாமும் ஏறியமரும் போது ஒருபுறம் மட்டுமே சாயும் அத்தாரசின் அளவு முறையை நாம் அறிகிறோம். துயருக்கு நிகரென்று எதுவுமில்லை. அது தன்னளவில் ஒரு முழுமை” என்றான் சத்தகன்.

அவனது கரம் தோளிலிருந்து நீங்கி சத்தகன் எழுந்த போது அரும்ப முல்லர் போதங் கொண்டு புறவுலகை நோக்கி அதிர்ந்தார். எங்கு சென்று மீண்டோமென அறியாது திகைத்தார். எழுந்து நின்ற சத்தகனின் நிழல் புரவிகளில் விழுந்தது. அவர் ஒருகணம் அவன் நிழலை விரல்களால் தொட்டார். கண்ணீர் என அவரறிந்த எல்லாத் துயரும் ஒரு நிழலின் சாம்பலென அவர் விரல்களின் கீழ் படர்ந்திருந்தது. அள்ளியெடுக்க முடியாத நிழலின் சாம்பலே துயர் என எண்ணிக் கொண்டார். குடிகள் மலர்களை அள்ளிச் சத்தகன் மேல் எறிந்தார்கள். அதில் சில மலர்கள் அவரைத் தொட்ட போது மேனியில் மெய்ப்புல்கள் எழுந்தன. உடலை ஒருக்கிப் புரவிகளைப் பணித்து அவன் மலர்களை ஏந்தும் காலத்தை நீட்டினார். காலம் ஒரு கடிவாளமென அரும்ப முல்லரின் விரல்களில் தன்னைப் பிடியிட்டுக் கொண்டு சத்தகனை வாழ்த்தியது.

TAGS
Share This