61: புரவி அரசன்
அசல பெருங்கூம்பு மலையெனக் கண் முன் எழுந்து நின்ற சர்க்கரீஸ் கூடத்தை நோக்கி நின்றான். சுபல நிரந்தரமானது என்பது போன்ற அவனது திறந்த வாயுடன் கூம்பின் ஓவியங்களையும் அதில் வரையப்பட்டிருந்த அதிசய உயிரிகளையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். விக்கிரம அங்கே எருமைகளின் தினவுடன் சுற்றிச் சுழன்று பணி செய்து கொண்டிருந்த காப்பிரிகளையும் யவனர்களையும் அவர்களது கைதேர் நுட்பங்களையும் வியந்தபடியிருந்தான். அசலவை நெருங்கிய சுபல மந்தணம் உரைப்பவன் போன்ற குரலில் “உள்ளே போய் பார்த்து வருவோமா பெருந்தளபதி” எனக் கேட்டான். அசல ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் உள்ளார விரும்புபவன். போரென்பதே ஆச்சரியமும் அதிசயமும் கணம் கணம் நிகழும் வெளியென்றே அவன் பொருள் கொண்டிருந்தான். அவனது சமநிலை வியப்பினால் ஆனது. சுபலவின் நீள விழிகளில் மின்னிட்ட ஆவலைக் கண்டு “ஓம். போகலாம்” என குறுஞ்சிரிப்புடன் சொல்லி அவன் முதுகில் அறைந்தான். விக்கிரம அச்சொற்களைக் கேட்டவுடன் கயிறவிழ்த்த கன்றுக் குட்டியென காப்பிரிகளும் யவனர்களும் பணியாற்றிய பகுதியைச் சென்று நோக்கத் தொடங்கினான்.
அசலவும் சுபலவும் முன்முகப்பிலிருந்த லீலியாவின் பெருஞ் சித்திரத்தைக் கண்டு அதை விழிகளால் அளந்து கொண்டிருந்தனர். கந்தோஸ் பிலிப்பு உரக்கச் சிரித்தபடி அவர்களைக் கடந்து சென்றான். செலினி நீயிராவை அழைத்துச் செல்வதைப் பார்த்த சுபல விழிகளைச் சுருக்கித் தாழ்த்தி செலினியை நோக்கிய போது செலினி உற்சாகமான இளம் புரவியைப் போல் சென்று கொண்டிருந்தாள். சுபல அசலவை நெருங்கி “இங்கே குட்டிப் பேய்களையும் அழைத்து வந்திருக்கிறார்கள்” என்றான். அசல அவனை விழியால் அடக்கி நீயிராவை நோக்கினான். கருந்தேர் என உடல் கொண்டு மினுக்கும் பெரும் புரவி அச்சிறு பெண்ணின் கரத்தில் ஒரு விளையாட்டுப் பாவை என நின்றாடுவதைக் கண்டு அதிசயித்தான். நீயிராவின் கால்கள் சிற்பங்களின் வளைவுகளுடன் பொருந்தி நின்றன. அதன் மேல் போர்த்தியிருந்த சேணம் விலை உயர்ந்த பொருட்களால் ஆனவை. அதன் விழிகளில் மிரட்சியும் அதை வெல்லும் திமிறலும் தெரிந்தது. அசல மெல்ல நீயிராவைத் தொட விரல்களை எடுத்த போது செலினி நில் என்பது போல் கைகளைக் காட்டினாள். அதைத் தொடக்கூடாது எனச் சைகையால் விளக்கினாள். அவன் செலினியின் முன் முழந்தாளிட்டு அமர்ந்து தான் ஒருதடவை தொட்டுப் பார்க்கவா என அழகிய புன்னகையுடன் குறுங்காதல் கொண்டவனென முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான். செலினியின் முகத்தில் நாணத்தின் செங்கொடிகள் பரவி உயர்ந்து அவளது செம்மை உலர்ந்த தோலில் குருதி நிறைந்து கன்னங்கள் இரண்டு செம்மலர்களென அவிழ்வதைக் கண்டு மேலும் சைகைகள் காட்டி விசாரிக்கத் தொடங்கினான். அருகே நின்ற புரவியின் கால்களைக் காட்டி அவை மிகவும் நேர்த்தியாகவும் அழகாவும் இருக்கின்றன. உங்களைப் போலவே என செலினியைக் காட்டியதும் அவள் நாணக் கொடி உதட்டிலும் மலர்கள் கொள்ளச் சிரித்தாள். “நீயிரா” எனப் புரவியைக் காட்டி மும்முறை செலினி சொல்லியதைக் கண்டு அதுதான் அப்புரவியின் பெயர் என அறிந்தான் அசல.
செலினி அருகிருந்த மரப்பெட்டியொன்றில் ஏறி நின்றபடி நீயிராவின் சேணத்தில் கைவைத்து அவளை விழி நோக்கிச் சொற்கள் பகர்ந்தாள். அசல இருகைகளையும் மார்புக்குக் குறுக்கே கட்டியபடி திமிர்ந்த ஆண் புரவியென நின்றிருந்தான். அவனது உடலின் வளைவுகளையும் வதனத்தின் எழிற் கருமையையும் ஓரக் கண்ணால் நோட்டமிட்டபடி செலினி உரக்கப் பேசிக் கொண்டிருந்தாள். சில கணங்களின் பின் அசலவை நோக்கி இருகைகளையும் இப்பொழுது நீ தொடலாம் என்பதைப் போல் காட்டினாள். அவன் செலினியின் அருகில் சென்று அவளின் தலையை ஒருமுறை தொட்டு கன்னத்தில் மென்கிள்ளல் செய்தான். அவள் அவனை ரசிப்பதைக் கண்டவன் அவ்வுரிமையை எடுத்துக் கொண்டான். செலினி மெல்ல அதிர்ந்தாலும் மரப்பெட்டியில் அந்தரத்தில் நடப்பவளென நின்று கொண்டு அவனது தோளில் ஒரு அறை விட்டாள். அவன் சிரித்துக் கொண்டே நீயிராவின் கருந்தோலில் கைகளை மேயவிட்டான். கருமை நிறப் புற்களில் நீந்தும் செஞ்சூடு பரவியது. நீயிரா மெல்லக் கனைத்தாள். அதில் ஒரு ஏற்பு இருந்ததைக் கண்ட செலினி விழிகள் குவித்து இரட்டைச் சீழ்க்கையடித்தாள். அதன் அர்த்தம் பிடிபடாத அசல நீயிராவின் புறந்தலைக் கூந்தலைத் தடவினான். பற்றையாய் வளர்ந்த தூரிகை நார்கள் நீயிராவின் கூந்தலோ வாலோ தான் என எண்ணிக் கொண்டான். நீயிராவின் கால்கள் மாற்றலின் ஒலியில் ஒரு நேர்த்தியிருப்பதைக் கண்டான். மானுடருடன் நன்கு பழகியவள் எனக் கண்டு அவளின் நாசியில் தன் உள்ளங் கைகளை வைத்தான். குளிரும் சூடும் கொண்ட மூச்சு குழாய்களால் பெருகுவது போல் அவனது கை உலர்ந்து குளிர்ந்தது.
சுபல அங்கிருந்த பலவண்ணக் கிளிகளின் இறக்கைகளின் வண்ணங்களை விழிகளால் தொட்டு அளைந்து கொண்டிருந்தான். வெண்மையில் சிவப்பும் நீலமும் பச்சையும் கலந்தவை. பச்சையில் சிவப்பும் செம்மஞ்சளும் ஊதாவும் ஊற்றியவை. ஒவ்வொரு அடிநிறத்தின் மீதும் நிறக் கூழ்களைச் சிந்தியது போன்ற மேனி கொண்டவை. அவற்றின் கத்தல்களும் அவனறியாத மொழியில் ஒலித்தன. குமிழ் விழிகளால் புறத்தை நோக்கி இறக்கைகளில் தலை குவித்து எதையோ தேடி பின் கண்டடையாது மீண்டும் புறத்தைப் பார்த்துக் கத்தின. உள்ளரங்கின் வட்ட வடிவ அமைப்பும் மேலே அந்தரத்தில் இடப்பட்டிருந்த கயிற்றுப் பிணைவுகளும் அவன் கவனத்தை ஈர்த்தன. ஒளி பல ரகசிய வழிகளில் உள்வந்து மாயமுண்டாக்கும் வகையில் அந்த அரங்கும் உட்கூடமும் அமைக்கப்பட்டிருப்பதை நோக்கிக் கொண்டிருந்தான். மூன்று பெருவளைவுகள் கொண்ட வாயில்களின் முகப்புகளாக வரையப்பட்டிருந்த ஓவியங்களை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். முதல் வளைவின் முகப்பில் வினோதமான மலர்களின் சித்திரங்கள் தீற்றப்பட்டிருந்தன. இரண்டாவது வளைவில் கடல் கன்னிகளின் ஓவியங்கள் மினுக்குக் கொண்டு ஒளிசிதற உயிர் கொண்டவை போல் அலைவுற்றன. மூன்றாவது வளைவில் இரண்டு கொம்புகளைக் கொண்ட புரவிகள் மோதிக் கொள்வன போல் வரையப்பட்டிருந்தன. அவற்றின் தசைத் திரள்வுகள் நெளிவுகள் விழிகள் புறந்தலைச் சிலுப்பல்கள் எல்லாம் அன்று அக்கணம் நிகழும் போரெனத் தோன்றின.
செலினி மூன்றாவது வளைவினால் நீயிராவை அழைத்துக் கொண்டு சென்று திரும்பி அசலவை நோக்கி வா என அழைத்தாள். அசல சுபலவை நோக்கி வரவேண்டாம் எனக் கைச்சைகை செய்த பின் மூன்றாவது வாயிலின் ஓவியங்களின் துல்லியத்தையும் அழகையும் நோக்கியபடி உள்ளே சென்றான். செவ்வண்ணத்தில் உருவான ஒளிபுகும் பிலவு போன்று நீண்டு வளைந்து சென்ற பாதைக்குள் விழுந்த சூரிய ஒளி குருதியால் கண்களானவை போல் மயக்கூட்டியது. செங்காற்றினுள் நுழைந்து விட்டவன் போல் விழியைக் கசக்கிக் கொண்டு நோக்கினான். நீண்ட புல்வெளிகள் தூரத்தில் தலையசைப்பது போன்று இருபுறங்களிலும் கீழ்ப்பகுதி நீளத்திற்கு வரையப்பட்டிருந்தது. மேல் வளைவில் ஆயிரமாயிரம் புரவிகளின் பெரும் போர் காமம் காதல் குட்டியீனல் மடிவு என அனைத்துப் பருவங்களும் களிகளும் உக்கிரங்களும் தீற்றப்பட்டிருந்தன. புரவிகளின் உலகினுள் நுழைந்தவன் போல் இதயம் அதிரத் தொடங்கியது. கால்களை மெல்ல எடுத்து வைத்து ஓவியங்களின் நுண்மைகளை அண்ணார்ந்து நோக்கினான். செம்மையால் ஒவ்வொன்றும் தீநெளிவு கொண்டு உக்கிரமடைந்தன. ஒரு வளைவில் வெள்ளருவியின் அருகில் தனித்து நிற்கும் கரும்புரவியொன்றின் ஆண்குறி விடைத்து எழுச்சி கொண்டு நிற்பது உக்கிர பாவத்தில் வரையப்பட்டிருந்தது. அதன் விழி செந்நிற இரத்தினம் போல் சுடர்விரிவுகள் கொண்டு விரிந்திருந்தன. கனவில் தன் இணையைக் கண்டது போல் முகம் வானை நோக்கியிருந்தது. அருவி அதன் கால்களால் வழிந்து கரைவளைவால் ஊறி துணியால் ஓடிக்கொண்டிருந்தது. அந்தக் கரும்புரவியை நோக்கிக் கொண்டிருந்தவன் வலக்கரத்தில் புரவியின் நா நக்கியதைப் போல் உணர்வு தொட்டு மீள விலகித் துள்ளினான். செலினி அவன் துள்ளிப் பாய்ந்ததைக் கண்டு மடிந்து சிரித்து நிமிர்ந்தாள். வா என்பது போல் கைகாட்டிய பின் அவனுடன் நடந்து கொண்டே அவன் விழிகள் ஓவியங்களை உற்று அறிவதைக் கண்டு அவனை அவன் நடையில் செல்ல விட்டு அவன் மேனியின் விரிவையும் நடையில் அமைந்த புரவிக்குணத்தையும் மகிழ்ந்து நோக்கினாள்.
வளைவின் எல்லை வரை நீண்டிருந்த புரவிகளின் காலப்பெருக்கிடை தானொரு புரவியென உந்தி மேலேறி எழுந்து கரைந்து விடுபவன் போல நின்றான். செலினி அவனுக்கு முன் ஓடிச் சென்று நின்று அவனை முழந்தாளிடும் படி சைகை செய்தாள். அவளது இடுப்பிலிருந்த தோற் பையிலிருந்து சிறுதுண்டு தேன்வதையை எடுத்தாள். அசல அமர்ந்து அவளை நோக்கிக் காதலன் போல் புன்னகைத்தான். காதலனின் உதட்டை முதல் தொடும் விரல்களின் நடுக்குடன் தேன்வதையை அசலவின் உதட்டின் ஒவ்வொரு வரிக்கோட்டிலும் பரவிப் பூசி வழக்கத்திற்கும் மேலாக விரல்களால் தொட்டு நின்றாள். ஒருமுறை முழுவுதட்டில் பூசினால் தேன்வதை நன்கு பரவிவிடும். செலினி மூன்றாவது வரைவைத் தடவிக்கொண்டு அவன் உதட்டின் பெருஞ் சிப்பி போன்ற விரிவைக் கண்டு கொண்டிருந்தாள். அசல அவளில் எழுந்த கனலில் அவளது பாவனைகள் மிகையாகின்றன என எண்ணிக் கொண்டான். உதட்டை உமிந்து காட்டினாள் செலினி. அசல தன் உதட்டை நாவால் தடவி உமிந்து கொண்டான். சிலகணங்களில் தேனின் மயக்கு மேனியின் நரம்புகளை கரைத்து உருக்கியது. உடலின் குருதிக்கால்கள் புரவிக்கூட்டமென ஓடத்தொடங்கின. அசலவின் விழிகள் அந்த செம்பிலவினுள் ஆயிரமாயிரம் புரவிகளும் உயிர் கொண்டு மண் வந்ததெனத் திமிறத் தொடங்கினான். செலினி அவனது மயக்கின் நிலை கண்டு சிரித்துக் கொண்டு அவனுடன் நடந்தாள்.
போர்க்களங்களின் குருதிச் சிவப்பின் ஒளியிடை பல்லாயிரம் மானுடர்கள் புரவிகளென அலைபட்டு மோதுகிறார்கள் எனக் கண்டான் அசல. அவன் கருஞ்சிறகுகள் விரித்தெழுந்த மாகரும்புரவியெனக் களமிடை விண்ணெழும் ஆசை கொண்டவன். தலைவன் என்பவன் எளிய புரவிகளை விட மேலானாவன். அதையே சிறகுகள் என அவனுக்கு இயற்கை அளித்திருக்கிறது. அவன் ஆயிரமாயிரம் பெருக்கென நிற்கும் எளிய புரவிகளின் வாழ்க்கையை ஆகாயத்தில் எழுந்து நின்று நோக்குகிறான். அக்குலைவின் ஒழுங்கை. பதற்றங்களிற்கிடையில் ஒருங்கும் இணைவுகளை. ஒன்றுக்கும் இன்னொன்றுக்குமுள்ள பகையை. அச்சத்தை. ஒத்த தோற்றங்களை. ஒரே இயற்கையை. ஒன்றுடன் இன்னொன்று கொண்டுள்ள உறவை அவன் மேலிருந்து நோக்குகிறான். எங்கிருந்து நோக்குகிறோம் எனும் கோணமே வாழ்வின் புதிர்களையும் மந்தணங்களையும் அவிழ்க்கிறது. எளிய புரவிகளுடன் புரவிகளாக அவன் அறிவதும் அறிந்த பின் அங்கிருந்து உயர எழுந்து அவர்களை நோக்குவதும் இரண்டு அறிதல்கள். எளிய புரவிகள் தம்மைத் தனித்தன்மையானவை என எண்ணிக் கொள்கின்றன. ஒவ்வொன்றும் தான் விரும்பிய திசையிலேயே புரவிப் பெருக்கை அழைத்துச் செல்ல விழைகின்றன. ஆயிரம் திசைநெளிவின் ஒவ்வொரு சிற்றிடை வெளியாலும் உந்தி முன்னகர முகங்களை உரசிக் கொண்டு மோதுகின்றன. அவை தமது அருகிலென நின்றிருக்கும் காலத்தின் சம புரவிகளைக் காணும் எளிய விழிகள் கொண்டவை. அப்பாலுக்கு அப்பாலெனக் காலங்களின் நீள்பெருக்கை வரலாற்றின் உச்சியில் நோக்குபவனே தலைவன். அவனே குடிகளுக்கான திசையை உண்டாக்கி முன் செல்ல வேண்டியவன். எளிய புரவிகள் அவனைத் தொடர்வது மட்டுமே அவை காலச்சுழலின் இடர்க்களங்களை மீண்டு முன்செல்ல ஒரேவழி.
குருதியினாலேயே குடித்தலைவர்கள் உண்டாகிறார்கள். முடிவடையாக் குருதிப் பலிகளினால் உருவேற்றப்படும் அக்காலத்திற்குரிய தெய்வமவன். தெய்வமென மக்கள் அடிபணிபவர்களே அவர்களை ஆளும் ஆணை பெறுகிறார்கள். குடிகள் அடிபணியாத சமம் என எண்ணத் தகும் ஒருவர் குடிகளை ஆள இயலாது. அவர் சககுடி மட்டுமே. எளிய குடிகள் தம் இயல்பான அகங்காரத்தால் அன்றாடம் மோதிக் கொண்டேயிருக்கிறார்கள். எளிய பூசல்கள். முடிவற்ற ஒற்றை வாதங்கள். அகக்கீழ்மைகள். காழ்ப்புகள். வஞ்சங்கள். கரவுகள். பொய்கள். விழைவுகள் என எண்ணற்ற களங்களையும் அதற்கான திசைகளை நோக்கியும் ஓடிக்கொண்டிருப்பார்கள். எதற்கும் பொருளென எஞ்சாதவை ஒவ்வொன்றுக்குமென வாழ்வைக் குருதி சிந்தி அளிப்பார்கள். ஒரு தலைவன் அரசனாகும் போது குடிகளின் அன்றாட எளிமை வாதங்களை அழித்து அவர்களுக்கெனக் கனவுகளை ஆக்கி அளிப்பவனாகிறான். பெருங்கனவுகளை அளிப்பவனே அரசன். அசலவின் கனவில் இந்தத் தீவு ஒரு முழுக்கனவு. எந்தச் சிறுகோடாலும் பிளவுபடாத தங்கத் தட்டு. அதை அவன் நெறிகளாலும் அறங்களாலும் ஆள்வான். எண்ணற்ற குடிகளின் ஆயிரமாயிரம் நூதனமான பிரச்சினைகளுக்குச் சட்டங்கள் வகுப்பான். மிடிமையை அழித்துச் செல்வம் உண்டாக்குவான். அந்நியப் படையெடுப்புகளை வெல்லும் போர்க்கலங்களெனக் குடிகளை ஆக்குவான். ஒற்றை அரசென்ற பெருவெண் குடையின் கீழ் குடிகள் அணைந்து நிற்க இருபெருஞ் சிறகுகள் கொண்ட மாகரும் புரவியென எழுந்து சிறகடிப்பான்.
அசலவின் செந்தீயென மின்னும் குருதி விழிகளைக் கண்டு புரவிகள் தலை தாழ்த்தி அவனை ஏற்றுக் கொள்ளும். அவன் வெல்ல வேண்டியது நீலழகர் எனும் கருஞ் சிறகுகள் கொண்ட வெல்ல முடியாத புரவியை. கரும்புரவி தன் சிறகுகளைக் குடிகளின் கனவுகளால் விரித்துக் கொண்டது. அக்கனவைக் காக்கும் காவலனென மண்ணெழுந்திட்ட குடிகளின் மயக்குகளைக் கடந்து அவர்களின் ஆழங்களை அறியும் நுண்விழிகள் கொண்டது. மானுடர் அறியும் காலங்களில் எல்லாம் இப்புரவியே அறங்களைத் தன் சிறகுகளெனச் சூடி எளிய புரவிகளின் மேல் உச்சியில் பறந்து புடவியை நோக்குகின்றன. எளிய புரவிகள் வருங்காலத்தை வடிவமைக்க கீழ்மையைத் தொடுகின்றன. கீழ்மையை அறிந்தே சிறகுகளில் ஒன்றென ஆக்கிக் கொள்கின்றன. மாபெரும் கனவை மெய்யில் நிகழ்த்துபவர் எளிய குடிகளை விடக் கீழினும் கீழனவற்றை அறிந்தே செய்பவர். அது வரலாற்றின் எடை தாழாமல் அழுந்தும் அகம் கொண்டவரென அவரை ஆக்குகிறது. எவ்வளவு மேற் செல்கிறாரோ அவ்வளும் கீழும் புதைகிறார்.
மாபுரவிகள் வரலாற்றில் தோன்றுவது மெய்யான அரசுகளைத் தோற்றுவிக்கவல்ல. அரசுகள் ஆகவேண்டிய அறங்களின் முடிக்கூம்பின் உச்சியினை அவை ஒவ்வொரு முறையும் உயர்த்திச் செல்லவே மண் வருகின்றன. ஓர் அதிதூய இருப்பென மண்ணில் வாழ்ந்து பொலிகின்றன. அவை எவ்விதம் கீழ்மையைத் தீண்டுகின்றன. தீண்டப்பட்ட கீழ்மையிலிருந்து மேலெழும் சிறகுகள் கொண்டு உதறிப் பறக்கின்றன என்பதைக் எளிய புரவிகள் நோக்கிக் கற்றுக் கொள்கின்றன. அறமென மண்ணில் வந்த மாபுரவிகளின் கனவுகளில் ஒருபகுதியை எளியபுரவிகள் நிலைநாட்டுகின்றன.
புரவிகளின் அரசன் உயம்பவின் கதை அசலவிற்கு ஓவியத் துணியில் நெளிவுருக் கொண்டு தோன்றியது. விழிகள் ஊறிச் சிவக்க அவன் உயம்ப நின்றிருந்த சிகர உச்சியின் பனித்திரையை நோக்கி விழிநீர் கசிந்து உளம் எழக் கண்டான். உயம்ப பூமியின் பாதாளப் புரவிகளில் ஒன்றெனப் பிறந்தது. தன் கனவுகள் தோறும் விண் காணும் விழிகள் கொண்டது. பாதாளம் விட்டு வெளியேற உயம்பவிற்கு அனுமதி இல்லை. விண் புரவிகளின் உத்தரவின் பேரிலேயே பாதாளப் புரவிகள் விண் ஏக முடியும். போர்களின் போது அவ் ஆணை பாதாளப் புரவிகளுக்குக் கிடைக்கும். போர் முடிந்து எஞ்சும் போது அவை மீண்டும் தம் பாதாளங்களுக்குத் திரும்ப வேண்டும் என்பது புரவிநெறி.
உயம்ப தன் முதல் களம் சென்ற போது மோதியழியும் பாதாளப் புரவிகளின் மூர்க்கத்தைக் கண்டது. விண் புரவிகள் எப்படித் தங்களைக் காத்துக் கொண்டு அறிவினைத் தமது போர்க்கலனாக்கிப் போர் புரிகின்றன என்பதைக் கண்டுற்றது. பாதாளப் புரவிகள் மூர்க்கத்தினால் ஆற்றல் கொண்டிருந்தன. இடையறாத விசை கொண்டு மண்ணில் புழுதிப்பெருக்கை உண்டாக்கின. பூதகணங்கழ் தம் நுட்பங்களால் பாதாளப் புரவிகளை வீழ்த்தின. விண் புரவிகள் பாதாளப் புரவிகளை வீழ்த்தும் எதிரிப்படைகளின் நுட்பங்களைப் பாதாளப் புரவிகளை அவை அழிக்கும் போது நோக்கி நின்று பயின்று அவற்றைப் போரிட்டு வென்றன. பாதாளப் புரவிகள் அங்கு களப்பலியாகவே அழைக்கப்படுகின்றன என்பதை நோக்கிய உயம்ப அடங்காத சினம் கொண்டது. தன் ஆற்றலைத் திரட்டிச் சிறகுகளை உதைத்து விண்மேல் அமைந்த மாபெரும் சிகரத்தின் உச்சிக்குச் சென்றது. மண்ணிலும் அந்தரத்திலும் நிகழும் புரவிகளுக்கும் பூதகணங்களுக்குமான போரைக் கண்டது. பூத கணங்கள் தம் மாயத் தோற்றங்களால் மந்திர சக்திகளால் அளவற்ற ஆற்றல் கொண்டு போரிட்டன. பாதாளப் புரவிகள் தம் சினத்தினதும் உடலில் படிந்த இருளாற்றாலலும் பூதகணங்களை நேர்மோதிச் சிதைத்தன. பூதகணங்கள் தம் ஆற்றல்களை அளந்து எடுத்துப் பாதாளப் புரவிகளை வீழ்த்தின. மடிய மடிய ஆயிரமாயிரமாய் பாதாளப் புரவிகள் களமேகின. விண் புரவிகள் பூதகணங்கள் எங்கிருந்து தம் ஆற்றலைப் பெறுகின்றன என்பதை நோக்கி அங்கிருந்தே தாமும் ஆற்றலைப் பெற்றன. சக்தியூற்றான அருவியொன்றிலிருந்து மந்திர நீரை அருந்தும் பூதகணங்களைக் கண்டு அவற்றின் மந்திர நீரின் சுனையருகே பறந்து சென்று அவற்றுக்கு முன்னரே நீரை அருந்தின. ஆற்றல் கொண்டு நின்ற பின்னர் மந்திர நீரில் தமக்குக் கீழ்வழியும் நீரில் நஞ்சைக் கலந்தன. தூயதன் பகுதி விண் புரவிகளுக்கும் நஞ்சின் அருவி பூதகணங்களுக்குமென பிரிந்தது. பாதாளப் புரவிகள் இவை எதையும் நோக்காத கொல்வேகத்துடன் களத்தில் அறைபட்டு அழிந்து கொண்டிருந்தன. பூதகணங்கள் நஞ்சருந்தி மாய்ந்து செல்லும் பொழுது விண் புரவிகள் முழுதாற்றலுடன் அவற்றை மோதி அழித்தன. போரில் வென்ற பின்னர் பாதாளப் புரவிகளுக்குச் சில அருமணிகளை அளித்து நட்பும் சுற்றமும் நீடிக்கும் சொற்களைப் பேசி வழியனுப்பத் தொடங்கின.
உயம்ப அனைத்துக்கும் மேலே நின்று அனைத்தையும் நோக்கி நின்றது. சுடரும் அதன் கருவிழிகள் செஞ்சிவப்பாய் மின்னின. கருஞ் சிறகுகள் வாள் விளிம்புகளெனக் கூர்மின்னின. கால்களில் ஆயிரம் புரவிகளின் ஆற்றல் திரண்டது. உயம்ப ஒரு கணம் தன்னை இழுத்து நிதானப்படுத்தியது. மந்திரச் சுனையின் ஊற்றருகில் சென்று நீரை அருந்தியது. மேனியெங்கும் அவ்வாற்றலின் இறுதித் துளிவரை குடிக்கும் தாகங் கொண்டு அருந்தித் தீர்த்தது. அதன் கனைப்பில் விண் புரவிகளின் செருக்கு ஒலித்தது. உடல் வளைவுகளில் பூத கணங்களின் பேராற்றல் ஓடியது. சுனையின் அருகே வாளென மின்னும் சிறகுகளைச் சுருக்கி அமர்ந்து கொண்டு விண் புரவிகளும் பாதாளப் புரவிகளும் போர் வெற்றியைக் கொண்டாடி விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தது. தனது தோழர்களினதும் மூத்தவர்களினதும் அறியாமையை எண்ணிக் கொண்டு விழியை அகலாது அவர்களை உற்றமர்ந்தது. சுனைப்பாறை ஒரு அரசாசனம் எனத் தோன்ற அமர்ந்திருந்த உயம்பவைக் கண்ட விண் புரவிகளின் அரசன் லாமக உயம்பவின் அருகே பறந்து வந்து தன் பொற்சிறகுகளினை விழிகள் கூசும் பேரொளியுடன் உதறிச் சுருக்கி நின்றபடி “இங்கு என்ன செய்கிறாய் பாதாளப் புரவியே. போர் முடிந்தது. நீ உன் அகம் திரும்பலாம். இந்த ஊற்று விண்ணாளுபவர்களுக்கானது” என்றது. உயம்ப கனைக்குமொலி ஒரு சீறலென எழுந்து பின் தணிந்து பற்களை தட்டிக் கொண்டு வாலை ஒருமுறை விதிர்த்தது. உயம்ப பதிலற்றுத் தினவுடன் கருஞ் சிறகுகள் கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்ணுற்ற லாமகவிற்கு அதுவோர் அவமரியாதை எனப் பொருளானது. உயம்ப அறிந்தே அங்கு அமர்ந்திருக்கிறது என எண்ணிக் கொண்டது லாமக. உயம்ப தன்னுள் தான் ஒரு புடவியென அமர்ந்திருந்தது.