63: நினைவாலயம்
காவற் தகடுகள் வனவிலங்குகளிடம் கையளிக்கப்பட்டு சடங்குகளை முடித்த பின்னர் மேனியால் வழியும் வியர்வையூற்றைக் காற்றில் நனைந்து கொட்ட விட்டுவிட்டு பெருமரங்களினது நிழல்வழிச் சாலையில் குடிகளின் நிரைகளினூடாக நாகதேவி கோவிலை நோக்கிக் காவற்படையினருடன் நடந்து சென்று கொண்டிருந்தார் ஆடற் சித்தர். அந்தியில் நிகழவிருக்கும் சிற்பனின் ஆடலுக்கான அம்பலம் பனங் குற்றிகளால் அரைப்பனையளவு உயரத்திற்கு அடுக்கப்பட்டு அதன் மேல் இளங் கன்னம் போல் வாளிப்புடன் சீவப்பட்ட முதிரை மரத்தின் பலகைகள் அடுக்கப்பட்டு தறையப்பட்டுக் கொண்டிருந்தன. மானுடர்களின் பேரோசைகளின் குமைவால் கருவிகளால் எழும் ஒலிகள் சொல்லற்ற உதட்டசைவு போல் தோன்றின. நூற்றுக்கணக்கான மரத்தச்சர்கள் மேனிகசிந்து வியர்வை பெருக சிரித்தும் பேசியும் ஏறியும் இறங்கியும் மரப்படிகளில் நின்றும் ஓடியும் அமர்ந்தும் இருந்தனர்.
அங்கிடு தத்தரும் சுழல் விழியும் ஆடற் சித்தரைக் கண்டதும் புன்னகையுடன் வந்து அவரது குழுவுடன் இணைந்து கொண்டனர். அங்கிடு தத்தர் தனது புதிய பட்டுடையைக் காற்று எடுத்துச் சென்றுவிடும் போல இறுகப் பற்றிக் கொண்டு நடந்தார். அவரது நெற்றியில் நீண்ட குங்குமக் குவியல் அவரை இசை வாத்தியக்காரர்கள் போற் காட்டியது. தாம்பூலத்தை அதக்கிக் கொண்டு அவரிடம் சொல்லாடுவோரிடம் ஓரிரு சொற்கள் தூவிக் கொண்டு விசிறும் தாம்பூலத் துளிகளால் பட்டாடை கறைபடாதபடி பார்த்துக் கொண்டும் நடந்தார். சுழல் விழி கரும்பச்சை ஆடையுடுத்திருந்தாள். அவளது அலைக்கூந்தலில் கனகாம்பரச் சரத்தைச் சூடியிருந்தாள். பின்னிட்டுக் குவிந்த கூந்தல் அலைப்பாம்புடன் உடல்பிணைத்த காவிவண்ண மலர்ப் பாம்பெனக் கனகாம்பரச் சரம் சுழன்றேறியது. புருவங்களிலும் இமைகளிலும் தீட்டிய கரு மையினால் அவள் விழிகள் வெள்ளிகள் துலங்கும் கருங்காடென ஒளிர்வு கொண்டிருந்தது. இசைமை கூடிய ஒழுங்குடன் சிறிது தாளம் பிழைத்தும் பின் கூடியும் நடந்தாள். ஆடற் சித்தருக்கு முன் சென்ற காவற் படையினர் நீர் பெருக்கைக் கிழிக்கும் நாரையலகென கூர்ந்த வழியொன்றை உண்டாக்கினர். அவ்வழியால் வேகங் கொண்டு நடந்தது குழு.
ஆடற் சித்தரின் அருகு வந்த அங்கிடு தத்தர் தாம்பூலத்தை முழுதும் துப்பிய பின்னர் உரத்த குரலில் “இம்முறை அனைத்தும் ஒருங்கிய விதம் அற்புதத்திலும் அற்புதம் சித்தரே. எண்ணியதும் நிகழும் மாயமொன்றைக் குடிகளும் அரசரும் நிகழ்த்தியிருக்கின்றனர். சிரசின் சொற்கேட்கும் உடலின் ஒழுங்கு” என்றார். அவரது குரல் வழமையை விட உற்சாகமும் அதிகாரமும் கொண்டிருந்ததைக் கவனித்த ஆடற் சித்தர் ஓம் என்பது போல் தலையசைத்தார். மேலும் சொற்களால் தனது இருப்பை அறிவித்துக் கொண்டிருந்தார் அங்கிடு தத்தர். “இந்தத் திருவிழா இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் நம் குடி கொண்டாடியதிலேயே மாபெரும் விழவு. விடுதலை தாகம் குடித்த குருதியை எல்லாம் குடிகள் மறந்து விட்டனர். மறப்பது தானே குடிகளின் இயல்பு. நினைவு என்பது சிக்கேறிய சித்தர்களின் சடைகளைப் போன்றவை. நிகழ்கணத்தை இளம் காளையினதோ பெண்ணினதோ கருமிளங் கேசம் போல் அலங்கரிக்க வேண்டும். எமது குடிகளை ஒருங்கிலும் விருந்திலும் விஞ்சவே இயலாது. தாகமென்றோ பசியென்றோ இல்லையென்றோ எவராவது இங்கு இம்மண்ணில் இன்று உளரா. இது வென்று ஈட்டிய செல்வம். புடவியில் அனைத்துக்கும் செலுத்த வேண்டிய விலையொன்று உண்டு. அதை நாம் செலுத்தியிருக்கிறோம். விரும்பியதைப் பெற்றிருக்கிறோம். குடிகளால் கேளிக்கையும் ஆடலும் பாடலும் மயக்குமின்றிக் காலங்களை கடக்க இயலாது. மானுடர் இச்சை விழைவிகள். அவர்களது கருவூலங்கள் விழைவுகளால் நிரம்பியவை. இன்று மகிழ்வென எண்ணப்படுவது நாளை நினைவென ஆகிவிடும். இக்கணம் முழுதும் திளைக்கும் ஊழ்கமென முழுக்குடியும் எழுந்திருப்பதைக் காண இன்று மாலை அன்னையே நேரில் எழுவாள்” எனக் கரைபுரண்டோடும் உற்சாகத்தையும் பட்டாடையையும் இழுத்துப் பிடிப்பவர் போல நடந்தார். ஆடற் சித்தர் அவரது சொற்களில் கவனம் குவியாது ஆற்றுபவற்றை எண்ணி உடன் சென்றார்.
சுழல் விழி அங்கிருந்த பூசாரிச் சிறுவர்களுடன் சொல்லாடியபடி நடந்து கொண்டிருந்தாள். காவற் படையில் நின்றிருந்த வாலிபர்கள் அவளை நோக்கும் போது அகம் மேகத்தில் ஊன்றி எழுபவளென அவளை மேலே மேலே கொண்டு சென்று கொண்டிருந்தது. அவளது இயல்புக்கு மீறி அதிகமாகச் சொற்களை இறைத்துக் கொண்டும் பூசாரிச் சிறுவர்களின் குழல்களைக் கோதி விட்டும் சிரித்தும் நகையாடினாள். ஆடற் சித்தர் தகப்பனைப் போலவே அவளும் விழவுக் களிப்பால் சொல் மிகுகிறாள் என நோக்கினார்.
கோவிலுக்குச் செல்லும் வழியில் பிரியும் இரட்டை வால் பாதையால் அங்கிடு தத்தர் கோவிலின் பாதையால் திரும்பி விலகினார். சுழல் விழி சித்தரை நோக்கிக் கனிந்த சிறுமியெனப் புன்னகை செய்த பின் தந்தையுடன் சென்றாள். ஆடற் சித்தர் போரில் களப்பலியான மாவீரர்களின் நடுகற்கள் ஊன்றப்பட்டிருந்த நினைவாலயத்தின் வழியால் திரும்பினார். காவற் படையினர் அவரின் நடைக்கதிக்கு ஏற்ப குடிகளை விலக்கிச் சென்றனர். நினைவாலய வழியில் சொற்பமான குடிகளே சென்று கொண்டிருந்தன. புதிதாகப் பிறக்கும் கிளை நதிக்கான பாதையின் மென்னீரம் போல அதுவரை நீண்ட குடிப்பெருக்கு இரண்டெனப் பிளந்து அவ்வழியானது போலிருந்தது. தமது மகவுகளுக்காகவும் காதலருக்காகவும் அவர்கள் பெயர் பொறித்த கரும் பாறைகளில் கண்ணீரைச் சிந்தி அவர்களைத் தொட்டுவிடவும் முதுபெண்டிரும் விதவைகளும் நடைதளர்ந்து சென்று கொண்டிருந்தனர். விழவின் தொடக்கம் நினைவாலயத்தில் மாவீரர்களை எண்ணியே தொடங்கும். ஆடற் சித்தர் குடிகளின் முகம் நோக்காது உறுத்து விலகிச் செல்பவர் போல நினைவாலயத்தை நோக்கிச் சென்றார். நூற்றுக்கணக்கான வீரர்களின் உழைப்பால் நினைவாலயம் கருந்தங்கமென மினுக்குக் கொண்டிருந்தது. மாபெரும் கலயங்களில் நீர்கொணர்ந்து ஊற்றி ஒவ்வொரு பெயரின் மீதும் மேலுமிரு அடிகள் உளியால் இட்டு வாளித்து உருக்காட்டி நிற்கச் செய்து அன்று அவர்கள் விழிதிறப்பதைப் போல் நிற்கும் நடுகற்கள் கற்காடுகளென முளைத்திருந்த நினைவாலயத்திற்குச் சென்று சேர்ந்தார் ஆடற் சித்தர்.
நடுகற்கள் உளிசுட்ட பெயர்களைத் தாங்க முடியாமல் எழுந்து நிற்பது
காட்டை எரித்து விட முடியாமல் உறைந்த தழற் குன்றுகள் போல்
ஆடற் சித்தரின் விழிகளில் சிலகண மயக்கெழுந்தது. அன்னையரும் காதலிகளும் மகவுகளும் முதுதந்தையரும் தங்கள் அகத்திற்குரியவரின் பெயர் பொறித்த நடுகற்களினருகே அகல்களை ஏற்றி இன்மணக் குச்சிகளைத் தூபங்களென இட்டிருந்தார்கள். கண் தொலையும் வரை தெரிந்த நடுகற்களின் நடுவே எளிய ஊரும் பூச்சியெனத் தன்னை உணர்ந்து அகம் கரைந்து கொண்டிருந்தார் ஆடற் சித்தர். ஒவ்வொரு கற்பாறையின் மேனியைச் சுற்றிலும் கிடந்த உரித்த கனிகளையும் ஊன் துண்டுகளையும் அமுதுகளையும் கள் அப்பங்களையும் மலர்களையும் நோக்கினார். வானிலிருந்து மண் வந்த தெய்வங்கள் உண்டு களையாறிச் செல்லும் வனவெளியெனத் தோன்றிற்று நினைவாலயம். முதற் கல் வைக்கப்பட்ட அன்றிருந்த உளவெழுச்சியை எண்ணிய போது அகம் நடுக்குற்றுச் சிலந்தி வலையில் பெருநீர்த் துளியெனத் தூங்கியது.
எத்தனை அரிய மரணங்களின் விலைமதிப்பற்ற களஞ்சியமென நின்றிருக்கும் நினைவாலயத்தில் முதல் நடுகல் எட்டு அரச வேழங்களால் கொணரப்பட்டது. உளியில் பட்டு உதிர்ந்த ஒவ்வொரு துளிச்சிதறல் பாறைக்கும் ஆயிரமாயிரம் கண்ணீர்த் துளிகள் ஆற்றுச் சடங்கென உதிர்ந்தன. புலிகளின் மாபெரும் முதற் களப் போரில் மடிந்த அறுநூற்றி நாற்பத்து மூன்று வீரர்களின் பெயர்களும் பொறிக்கப்படும் ஒவ்வொரு ஒலியையும் லட்சக்கணக்கான குடிகள் கூடி நின்று நோக்கி ஒவ்வொரு உளித்தொடுகையும் உளம் தைத்துக் குற்றுவதென நோக்கி நின்றார்கள். அழுது வடிந்தார்கள். பாறையென மார்பில் அறைந்தறைந்து ஒவ்வொரு பெயராய்ச் சொல்லிக் கூவினர். பட்டினத்தின் அத்தனை மலர்களும் ஆயிரமாண்டுகள் உக்காத சருகுக் குவியலால் அடர்ந்த வனமெனச் சொரிந்து கிடந்தன. ஒவ்வொரு குழவியின் பிஞ்சுக் கரத்தாலும் மலரெடுத்துச் சாற்றித் தொட்டு வணங்கி விழுந்து பணிந்து நெஞ்சேற்றி எழுந்து தெய்வமென ஆக்கிய கற்கள். காதலன்களை இழந்த இளம் பெண்கள் நடுகற்களில் ஏறி அவர்களின் பெயர் மினுங்கும் பாறைகளில் தலைமோதித் தங்களை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆடற் சித்தர் தன் வலப்புறத்தில் நின்றிருந்த ராட்சத முட்டை வடிவ நடுகல்லை நோக்கினார். அதன் கீழ் குடச மலர்கள் செவ்விழிகளால் வானை நோக்கியபடி அடுக்கப்பட்டிருந்தன. மயிற் பீலிகள் இறக்கைகளென விரிக்கப்பட்டு எழுந்து பறக்கப் போவதைப் போல் நடுகல் நின்றிருந்தது. அக்கல்லில் துருவீரனின் பெயர் தீயிலிட்ட பொன் போல் கரைந்துருகித் தகதகத்தது. அவன் பெயரின் இடைவெளியில் ஊறி நின்ற தூமழையின் குருதியை எண்ணிய போது அவரின் அகச்சொற்கள் தீப்பட்டுச் சாம்பலானது. புடவியில் அனைத்தும் சாம்பலாகும் என்பது சித்தக் கணக்கு. எஞ்சுவது மானுடக் காதலால் அழியாது சுடரும் பேரிதயங்களின் அனலே என்பது புடவி மாயம். அவை அனலென நின்றிருப்பவை. தொடுபவற்றைச் சாம்பலாக்குமே ஒழிய. தான் அழியாது. அழியாது எரிவதால் காதல் அனைத்தையும் விட மேலான இயற்கையின் ஆற்றலென நிலை கொண்டு நீள்கின்றது. காதலால் தொடப்படாத எதுவும் மெய்த்தொடுகையென ஆவதில்லை. அக்கல் தூமழையின் குருதியால் தெய்வமென எழுந்து நிற்பது. அதனருகில் துருவீரனின் இளைய சகோதரி விண்யாழி கவசங்களுடன் அமர்ந்திருந்தாள். பின்னிக்கட்டிய இருகூந்தல் கட்டுகளும் தலையில் குவித்து நெளிகுலைவென உறைந்திருந்தது. அவளது செம்பிறை நுதலில் வியர்வை மலர்ந்து அரும்பலில் நின்றிருந்தது. சிற்றுதட்டில் ஒரு வெறித்த பார்வையென நடுக்கல்லை நோக்கியிருந்தாள். ஆடற் சித்தர் அவளின் அருகேயிருந்த சிறுபாறையில் அமர்ந்தார். நடுகல்லின் முன்னிருந்த அகல்கள் சிறுநாக்குகளென அவளிடம் உரையாடுகின்றன எனத் தோன்றியது.
சாய்வெய்யிலில் எரியும் அகலின் களைப்பு உடலில் விரவிக்கொண்டிருப்பதை உணர்ந்தார். அறியாதவகை நோய்போன்ற உளச் சோர்வு. நினைவாலயத்தின் எண்ணற்ற பெயர்களினிடையில் எத்தனை பெயர்கள் அவர் அகமறிந்தது. இனிமையென நினைவில் எழுபவர்கள். துடுக்கும் மகிழ்ச்சியும் இரு கவசங்களெனப் பூண்டு மண் நிகழ்ந்தவர்கள். சொல்லற்கரிய போர்க்களச் சித்துகளை மண் நிகழ்த்தியவர்கள். துருவீரன் அவரது கனவுகளில் இளங்குழந்தையெனத் தோன்றுவதுண்டு. தூமழை நடுகல்லில் தலைமோதித் தன்னை மாய்த்துக் கொள்ள முன்னர் அவள் அவரை வந்து தாழ் பணிந்தாள். எளிய பெண். எத்தனை எடையைத் தாளாமல் வளைந்து உருகி நின்றாள் அன்று.
துருவீரன் மடிந்த போர்க்களத்தில் அவன் விழிமணிகள் காணாமல் போயின. விழியற்ற அவனது விழிக்குழிகளை இமைகளால் மூடினர் மருத்துவக் குழுவினர். சுடர் மீனன் ஆடற் சித்தரை நெருங்கி “அவன் விழிமணிகள் எங்கெனத் தெரியவில்லை சித்தரே. இளையவனாக இருக்கிறான். பெற்றவர்கள் இக்கோலத்தில் அவனைக் கண்டால் அகம் நடுங்கிவிடுவார்கள். பிறகொருபோதும் அவர்களால் விழிமூடி உறங்க இயலாது. அவனை அங்கங்கள் சிதைந்தழிந்த ஏனைய வீரர்களுடன் சேர்த்து எரித்து விடலாம்” என்றான் சுடர்மீனன்.
“வேண்டாம் மீனா. அவனது உடல் சேதமுறவில்லை. அம்புக் காயங்களுக்குக் கட்டிடு. நான் உடலங்களைக் கையளிக்கும் போதும் நீத்தார் கடனின் போதும் உடனிருப்பேன்” என்றார் சித்தர். சுடர் மீனன் மருந்துகளால் இட்டு நிரப்பித் துருவீரனின் உடலத்தைக் கையளித்தான். அப்போரின் சாவுகள் கொடியவை. அரும்பு மீசை முளைத்திருந்த சின்னஞ் சிறு தென்னங் குருத்துகள் போன்ற மேனியுடைய ஆயிரக்கணக்கான இளையவர்கள் மடிந்திருந்தனர். அனைத்துத் தமிழ்ப்பட்டினங்களிலும் சாவின் சாம்பலும் கண்ணீரும் அனல் வெள்ளம் புகுந்தது போல் பட்டினங்களை அசைத்து உருக்கியழித்தது. பல்லாயிரம் வாழைமரங்கள் வெட்டப்பட்டு அடுக்கப்பட்டது போல் எரிவிறகுகள் குவிக்கப்பட்டன. அதிகாலை முதல் மாலை மடிந்து போகும் வரை பறையும் சங்கும் முழங்கிக் கொண்டேயிருந்தன. இடிப்பெருக்கிடை நிகழ்ந்த மாமழையொலியெனக் குடிகளின் ஒப்பாரிகள் இசைமுழக்கத்தை மேவியொலித்தன. இளைய வயதில் சாவின் கொடுமையை கொத்துக் கொத்தாய் மலர்களை அள்ளியிறைத்தது போன்ற மாவீரர்களின் வதனங்களை தாங்க முடியாமல் பட்டினத்தின் நிலப்பட்டைகள் உரிவன போல் புழுதியும் கேவலும் எழுந்து கொண்டிருந்தன.
நிலம் ஆறா மூச்செரிந்து சினம் கொண்ட தழற் தட்டுப் போல் பாதங்களைச் சுட்டது. துருவீரனின் உடலத்தின் முன் அவனது தோழர்களும் தாயும் தந்தையும் சோதரிகளும் விடம் குடித்து ஏறிய சாவு மயக்கில் உளறுபவர்கள் போல் சொற்களைக் கொட்டினர். அவனது கடைசிச் சகோதரி விண்யாழி அவனிலும் இளையவள். பால் முகம் கொண்டவள். வாயில் எச்சில் நுரை போல் சிதற அண்ணா அண்ணா எனக் கத்திக் கொண்டிருந்தாள். நெஞ்சைச் சாம்பலோடு அள்ளித் தீயில் மீண்டும் எறிவது போன்ற குரலில் அச் சொல் திரும்பத் திரும்ப எழுந்தது. மீண்டும் மீண்டும் அச்சொல் எழ அவளருகே வந்து அவளை இடையில் தூக்கிக் கொண்டு அவனது உடலத்தை நீரற்ற திகைவிழியால் நோக்கினாள் தூமழை. எக்கணமும் உடைந்து விடத் துடிக்கும் மேகமென அவளது இடையில் துடித்தாள் விண்யாழி. அவளின் வாயில் வழிந்த எச்சிலைத் துடைத்துத் தன் மேற்சட்டையில் துடைத்துக் கொண்டு தன்னை நோக்காதது போல் நின்றிருந்த ஆடற் சித்தரை நோக்கி நடக்கத் தொடங்கினாள் தூமழை. அவளது ஒவ்வொரு அடிவைப்பும் அவரின் இதயத்தசையில் புரவி உதைப்பென விழுந்து எழுந்தது.