74: அணியறை : 02

74: அணியறை : 02

பேராடி அதிகனவெனத் தன்னைத் தான் விரித்துக் கொள்ளும் மாதோகையில் வண்ணங்களினாலும் மினுக்குகளாலும் சூழ்ந்தெழுந்திருந்தது. பதும்மை நோக்கிழக்காமல் உற்று நிற்பதை அடியாழத்தில் ஓர் பனிப்புல்லின் நுனித்தீண்டலென உணர்ந்தாள் விருபாசிகை. நலுங்கியவளின் முகம் சிரித்து உருகுவது போல் விரிந்தது. பதும்மை போதம் மீண்டு மெல்லக் காலடிகள் கொண்டு மென்பஞ்சு அடிகளால் நடக்கும் பூனைக் குட்டியென விருபாசிகைக்குப் பின்னால் நெருங்கிப் பேராடியில் ஒளிரும் அவளின் தேகத்தை நோக்கினாள். விருபாசிகையின் கூந்தல் சடைநாகமென நீண்டிருந்தது. வெண் மல்லிகைகள் கருஞ்சிலையில் பதித்த முத்துக்களென ஒவ்வொரு நாகப் பின்னலிலும் அமர்ந்து முற்றுமுகம் கொண்டு புன்னகைத்துக் கொண்டிருந்தன. அவளது கூந்தலிலிருந்து கத்தூரிக் குழம்பின் வாசனை அறையெங்கும் நிறைந்து பரவியிருந்தது. அதன் இன்நறும் வாசனையே மெய்ப்பின் முதற் காரணம் என அறிந்தவள் மேலும் நெருங்கி அவள் கூந்தலை முகர்ந்தாள். கத்தூரிக் குழம்பும் மல்லிகைகளும் கழுத்திலணிந்த கனகாம்பரமும் நித்திய கல்யாணியும் வெட்சியும் கொண்ட மலர்ச்சரங்களும் சோலையில் மகிழும் வண்டின் மயக்கை அளித்தன. வாசனையால் பின்னப்பட்ட பொன்வலையென அவளை எண்ணிய போது பதும்மையின் உதட்டில் புன்னகை பூத்தது.

குனிந்து அடிகளை நோக்கிய போது செம்பஞ்சுக் குழம்பினால் அவை தகதகத்து பரிதியின் ஒளிர்வட்டம் போல் மினுங்கியது. கால்களின் சிறுமொட்டு விரல்களில் பத்துச் சிறு மலர் வடிவக் காலாழிகளை அணிந்திருந்தாள். ஒவ்வொன்றும் பொற்பூவென அவள் விரல்களில் ஒளிர்ந்தது. பரியகமும் நூபுரமும் பாடகமும் சதங்கையும் அரியகமும் காலில் மெழுகென உறைந்திருந்தன. எழிற் பெருந்தொடைகளிலே குறங்கு செறி கவ்வியிருந்தது. இடைமேகலையாக பெருமொளிர் முத்துகள் முப்பத்தியிரண்டு கொண்ட விசிரிகை அணிந்திருந்தாள். காவல் பூதமொன்று இடைக்கு மேலே உள்ள பேரெழிலை தோளாலும் புறந்தலையாலும் தூக்குவது போல் மேகலை அவள் இடையில் பெரும்பற்கள் தெரிய இளித்தது. வாளை மீனின் பிளந்த வாயைப் போன்ற வாயகன்ற முடக்கு மோதிரமும் கிளர்மணி மோதிரமும் ஒளிக்கூச்சலிடும் மரகதத் தாள்செறியும் பூண்டு பத்து விரல்களும் பொன்னால் செதுக்கப்பட்டது போல் கணையாழிகளால் நிறைந்திருந்தன. அவளது விரல்களில் இடைவெளியின்றி நீரை ஒளிக்கல்லில் ஊற்றுவது போல் ஒளிமயக்குக் கூடியிருந்தது.

வைரங்களும் மாணிக்கமும் நவமணிகளும் இழைக்கப்பட்ட வளையல்கள் வேறொரு தெய்வத்தின் இருகரங்களில் புடைக்கப்பட்டதென அசையாதிருந்தன. தோள்வளைகள் மந்திரக் கயிறுகளென உயிர்சுடரப் பொருந்தியிருந்தன. காதில் வைரங்கள் பதித்த குதம்பைகள் வைர வண்ணத்துப் பூச்சிகளெனத் தூங்கின. புருவங்கள் கருந்தீக்கொழுந்துகளென நெரியக் காத்திருந்தன. மூக்கில் சிறுநீலத் தாமரையென மூக்குமின்னி விழிதிறந்து நோக்கியிருந்தது. மலர்ச்சரங்களும் முத்தாரங்களும் அருமணிப் பதக்கங்களும் திறந்திருக்கும் அணிப்பெட்டியென அவள் மார்பை ஒளிர்த்துத் தெறித்தன. மேலாடை அணியாது ஆபரணங்களினால் நிறைத்து நின்றவளின் கொழுமுலைக் காம்புகள் ஏதோவொரு அணியிற்குள் அருமணியென மின்னித் தோன்றி மறையும். அவை மானுடரால் அங்கனமே நோக்கப்பட வேண்டுமென்பதை எண்ணியவள் அவளின் அலங்காரம் எத்தனை விரிந்த பொருளளிக்கும் மயக்கும் கவியும் எனக் கண்டு வியந்தாள். இவளில் இக்கற்பனைகள் எங்கு எழுகிறதென எண்ணிக்கொண்டு அவளை நோக்கி கண்முழிப்புக் காட்டி நெற்றியில் ஒடித்து நெட்டி முறித்தாள். விருபாசிகை உதடுகள் ரீங்காரமெனத் திறக்கச் சிரித்தாள். வேய்குழலின் இனிமை காற்றில் தென்றலென அவளில் நடந்தது.

அவளது நோக்கை அறியும் ஆவல் எழ “எங்கனம் இப்படி அணிசெய்யக் கற்றாயடி. உன்னைக் காமுறும் முதல் விழியென இங்கு நின்றிருக்கிறேன். புடவியில் உன்னை இப்படியே அனுப்புவது எத்தனை தீங்கானது என அறிவாயா. மானுடச் சித்தம் இன்று கலங்கி ஒழியப் போகிறது.

புடவி தாளங்களால் ஆனது. உன் மேனியில் உறைந்திருப்பவையும் நுண்ணில் அதிர்பவையும் உன் இருப்பை ஆயிரமாயிரம் நுண்கத்திகளால் கீறித் தையலிட்டுக் காலத்தை அழியாது உன் முன் நிற்க வைக்கிறது. நீ ஓர் அற்புதம் கண்ணே”
என்றாள் பதும்மை. அவளது குரல் வேய்குழலால் சிந்தும் தேனிசையெனக் காதுகளில் தீண்டின. மெய்ப்புல்கள் எழ நின்ற விருபாசிகையின் முகப்பருக்கள் சிவந்து சிரித்தன. கன்னக் கதுப்புகள் சொட்டித் தழைந்தன.

“என்னை இன்று அணி பூண வேண்டுமென்ற விழைவு எழுந்த அக்கணமே நான் என்னை இக்கோலத்தில் கண்டுகொண்டேன். என் விழைவின் அரக்கியைக் கண்டேன். இத்தனை நகைசூடி இங்கு நிற்பவள் தொல் அரக்கியரின் குன்றா இளமை கொண்ட அன்னை சூர்ப்பனகையே. மாதவத்தால் அடைந்த பேரழகின் செருக்கு அவள். தான் தாபம் கொள்வதை அவள் அருந்தியே ஆவாள். விழைவதை அடைவது எதுவாய் இருந்தாலும் பெண்ணுக்கு அது காதலே. காதலின் விழிமணிகளே பெண்ணென்று ஆனது.

சூர்ப்பனகை அவளது பிலவில் காமத்தின் நுனியறுபட்டு வற்றாக் குருதி வடிய அமர்ந்திருந்தாள். களத்தில் புண்பட்ட புலி போல மூச்செறிந்தாள். விலகியிருப்பவை ஒவ்வொன்றும் அவளை இறுக்கி நிற்கின்றன. அவள் விழையும் காமம் வேறொருத்திக்கு நிகழ்கிறது. அவள் அதன் முன்னெதிர்வில் தன்னை இழந்து அடைந்த பெருவிசையே காமத்தின் கருப்பையென ஆயிற்று. அலகிலாக் கனவுகள் அளிப்பவள் அவளே. அவளைத் தொடவே ஒவ்வொரு பெண்ணும் அகத்தில் அமைகிறாள். ஒரு நுனி தொட்டு மீண்டவள் தீராது அவள் மேனி கொண்டு கலவிப் போர் வெல்வாள். கலவியை வெல்பவளும் தோற்பவளுமாகிய முதுகாமுகி என்னை நோக்கிப் புன்னகைப்பதை முதுகில் படும் மூச்சுக் காற்றென உணர்கிறேன். இக்கணம் நான் சூர்ப்பனகையின் இளமை” எனச் சொல்லிய விருபாசிகை பிலவிலிருந்து ஒலிக்கும் மூதரக்கியின் குரலென ஒலிகொண்டிருந்தாள்.

பதும்மை அருகிருந்த மரநகைப் பெட்டியொன்றின் மீது அமர்ந்தாள். அணிமுடித்து நுதலில் செஞ்சூரியனென ஒளிர்ந்த சுட்டிகையின் ஒளியில் விழிகூர்ந்து நின்றாள். பதும்மை அவளின் எழிலை நோக்கி மூச்செறிந்து மேனியைத் துடைத்துக் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டாள். சிறு கள்க்கலயமென அவள் கொண்டை முடிச்சமைந்த போது விருபாசிகை “அணிகூடவில்லையா” எனக் கேட்டாள். தனிமை வேண்டுமென எண்ணிய பதும்மை “தனித்தணிகிறேன்” எனச் சொன்னாள். விருபாசிகை மெல்ல நகைத்து நாணிச் சிவத்துக் கொண்டு தலையைக் கிலுங்கியென இடமும் வலமும் ஆட்டினாள்.

பதும்மை கருவண்ண ஆடை உடுத்தினாள். கொண்டையில் வெண்மல்லிச் சரம் சுற்றி நாகக்குட்டியெனத் தூங்க விட்டாள். செவிகளில் அன்ன வடிவத் தோடுகள் அணிந்தாள். கழுத்தில் ஒற்றைப் பதக்கம் நெஞ்சு நிலவென ஊறியது. அழகு நிறைவிலும் அருமையிலும் இரு எதிர்முனைகளில் நிகர்வைக்கக் கூடியது. முற்றணி கொண்டு முயக்கு தெய்வமென நின்றிருந்த விருபாசிகை தனது எதிர்த்தட்டு என எண்ணினாள் பதும்மை. அரிதான அருமணி கொண்ட ஒற்றைக் கணையாழி இடக்கரத்தின் நான்காம் விரலில் பூண்டாள். காலில் ஒற்றைச் சிலம்பு. ஆடியில் ஒரு கணம் தன்னை நோக்கியவள் வெண்வானில் கருமின்னலெனத் தன்னுருவைக் கண்டாள்.

கூடத்தில் நடந்து வந்த பதும்மையைக் கண்ட நால்வரும் அணி சூடுதல் தன்னை விரும்புபவளுக்கு ஒரு தொட்டு வைக்கும் பொட்டின் அளவே என எண்ணினார்கள். அங்கினி கரும்பச்சை வண்ண ஆடை கொண்டு மேனியில் எங்கு எவை எத்தனை அளவு கொண்டிருக்க வேண்டுமோ அத்தனை குறையாமல் அணி கொண்டிருந்தாள். ஐவரும் பின்வழியால் நடக்கத் தொடங்கிய போது வன யட்சிகள் மரங்களாய் நின்று நிழல் தூவினர். நீள்கருமை மலரென காட்டின் நூற்பாதை அவிழ்ந்தது.

*

சிதியும் தோழிகளும் பெருவீதிக்கு விரைந்த போது கழுவி வைக்கப்பட்ட கலயத்தில் மின்னும் ஒளிபோல முகங்கள் பெருவீதியை மினுக்கச் செய்கிறதென நோக்கினர். மலர் மாலைகள் கழுத்தில் சூடி மணி வைரங்கள் மின்னியாட பொன்னின் செய் தேகங்களில் களியூறியாடுவதை நோக்கினர். கர்ணிகை முதற் காலை எடுத்து வைத்து சுழலும் களிப்பெருக்கில் வீழ்ந்தாள். நலுங்கி மிதக்கும் பூவென அவளைக் களியாடவர் பெருக்கு அலைத்து ஏற்றியது. கரையில் கால் நடுங்க நிற்கும் சிறுமிகளென நின்றிருந்த சிதியும் சிப்பியும் சோலையில் தென்றலென நடந்தனர். சிதியின் முகத்தை நோக்கி புருவங்களைத் தூக்கி இளைசிரிப்புகள் கொட்டின. அள்ளிப் பொறுக்க நொடியுமற்ற பொற் சுரங்கத்தில் துழாவி அலையும் காற்றென வீசினார்கள் இருவரும். கர்ணிகையின் இடையைத் தொட்டுத் தூக்கியவன் காற்றில் அவளை எறிந்தான். காளையர் கூட்டமொன்று அவளை ஏந்தியது. நகை கொட்டிக் கொண்டு ஆடவரும் பெண்டிரும் அவள் காற்றில் மிதப்பதைக் கண்டு மேனிகள் தழுவியுருகி ஒட்ட தாமரை இலைகளின் மேல் நடப்பவர்கள் போல் நிலத்தில் ததும்பினர்.

பறையும் முழவும் சிறுமுரசுகளும் கொட்டியாடிக் கொண்டிருந்த வாத்தியக் குழுவொன்றின் முன் நூற்றுக்கணக்கான இளம் பெண்களும் ஆண்களும் வசந்தத்தில் துளிர்விடும் தளிர் நடனம் போல் மேனிசரித்து நிமிர்த்தி உடல் அலைய விட்டனர். மூவரும் வாத்தியங்களின் முன் ஆடும் கூட்டத்தைக் கண்டு மேனியதிர முட்டிக் கொண்டு எத்தாளம் கேட்டு உள்நுழைந்தோம் என்பதை மறந்து முலைகளும் மார்புகளும் மோதிக் கொள்ள பிருஷ்டங்களும் கரங்களும் பற்றியாட தொடைகளும் தொடைகளும் கதைப் போர் புரிய விழிகளும் விழிகளும் துன்னியாட விரல்களை மடித்துக் கரங்களை ஓங்கிக் காற்றில் எறிந்து இடைகள் உடுக்கின் தாளத்தில் விதிர்க்க தோல்கள் பறைத்தாளத்தில் அனல் புகுந்த அரக்குக் காடெனப் பற்ற மலர்கள் அள்ளிக் கூடைகள் வெறுமையாக களி மகளே வருக என முதுவாய்கள் கூவ தீயிலை மலர்கள் தீத்தணல் யானங்களில் சரிந்து புகை நடனம் எழ மண்ணின் தெய்வங்கள் கேட்டு அதிர்ந்து வியக்க ஆடினர் ஆடினர் ஆடற் பெருந்தேவியர் ஆடும் பொற்பாவையர். ஆடலில் எழுந்தன களித் தோல்கள். அதிர்ந்தன நெஞ்சுகள் அடித்துக் கொண்டு. காளையர் முட்டிய கருந்தோல் மகளிரில் வியர்த்தன பறைகளின் தொல்தாளங்கள்.

TAGS
Share This