75: பவனி
அமைச்சர்கள் முன்னிரையில் ஒருங்கியதும் சிறு முரசுகள் மும்முறை எழுந்தணைந்து விம்மின. சூரியன் பொற்தேரில் வந்தமைந்து தழல் முகம் எழுந்தது. ஒவ்வொரு வளைவும் புடைப்பும் சிற்பங்களும் மலர்ச்சரங்களும் ஒளித்தழல் சூடின. சூர்ப்பனகர் செருமியபோது தமிழ்ச்செல்வன் குனிந்து “அனைத்தும் ஒருங்கி விட்டன பேரமைச்சரே. இன்னும் சிலகணங்களில் அரசரும் அரசியாரும் எழுவர். இளவரசர்களும் தளபதிகளும் பின் தேர்களில் ஒருங்கிவிட்டனர்” என்றார். தமிழ்ச்செல்வனின் உதட்டில் புன்னகை இரு இதழ்களெனச் சுடர் கொண்டிருந்தது. மானுடர் கொள்ளும் மெய்யான புன்னகைகளில் ஒன்றை அவருக்குத் தெய்வங்கள் நல்கின என்பது குடிச்சொல். தனது செம்பட்டாடையைச் சீர் செய்து குண்டலங்களில் இருவிண்மீன்கள் சுடர காயம்பட்ட தன் இடக்காலைப் புரவியென மெல்லத் தூக்கிக் கொண்டு இடக்காலில் விசையை ஊன்றி தன் நடைகோலைப் பற்றிக் கொண்டு நின்றார். சூர்ப்பனகர் தன் சிவந்த பெருவிழிகளால் அனைத்தையும் சுற்றி ஒருமுறை நோக்கிய பின் மெல்லக் கனைத்து இருமி முன்பக்கம் கைகளைக் குவித்துக் கோர்த்துக் கொண்டிருந்தார். செங்கரன் தன் வெண்ணாடையின் பட்டுமின்னல்களைத் தானே நோக்கிய பின் தன்னை எவரெவர் நோக்குகிறார் என நோட்டமிட்டார். விழிகள் அவரைப் பணிவுடன் தொட்டகன்ற போது தனக்குள் அரும்பும் புன்னகையைக் குவித்துக் கன்னக் கதுப்புகளில் சேர்த்துக் கொண்டார். கொம்புகள் மும்முறை ஊதின. பறைகள் முத்தாளம் பறைந்தன. நாழிகை உரைக்கப்பட்டுப் புலிக்கொடிகள் தேர்களில் காவல் வீரர்களால் மும்முறை உயர்த்திக் காட்டப்பட்டன. அவரவர் தேர்களில் ஒருக்கமும் மெல்லிய அசைவொலியும் எழ அமர்ந்தனர் இளவரசர்களும் தளபதிகளும்.
நீலழகன் தூவெண்பட்டு இடையாடை உடுத்திருந்தார். தலையில் நெடுநாள் கழித்து அணியப்பட்ட கதிர்க்கிரீடம் மலைமேல் உருகியமையும் பொற்சூரியனென அமைந்திருந்தது. செவிக் குண்டலங்கள் பொற் கோளங்களெனத் தூங்கின. தோளிலைகள் பெருமரத்தில் முகிழ்ந்தவை போல் அமர்ந்திருந்தன. கரக் காப்புகள் கணையாழிகள் முன்கர வளைகளென இருகரங்களும் அணிசெய்ப்பட்டுக் கருந்தோல் மினுக்குக் கொண்டிருந்தது. மார்பாரங்களும் அருமணிப் பதக்கங்களும் மார்புப் புண்ணை மறைக்குமளவு முற்றொருமை கூடியிருந்தன. இடைக்கச்சை. கால்வளைகள். குறங்கு செறி. வீரக்கழல். காலாழிகள். தோல்பாதணி என்று அனைத்தும் பலநாள் கழிந்து உடலை அணைத்திருப்பதைச் சுமையென்று எண்ணினார் நீலழகன். அரசன் என்று எழுவது ஒரு தெருக் கூத்தின் பாத்திரம் என எண்ணமெழ நகைத்துக் கொண்டார். புன்னகையும் ஓர் அணியெனப் பூணவேண்டியது என்பது நினைவில் வர மானுடர் எத்தனை அணி செய்து தன் மெய்யை மூடிக் கொள்கிறார்கள் என எண்ணினார். அணியற்ற வெறும் மேலுடன் வனங்களில் அலையும் மந்திகளென நின்றிருப்பதே நீலழகனின் மெய்யுரு விழையும் மேனி.
அணியறைக் கதவுகள் உடைபடுபவை போல் தட்டப்படுவதைக் கேட்டு உள்ளூர மெய்ச்சிரிப்பொன்று எழ இக்குடியின் எஞ்சிய பெருமந்தி வந்துவிட்டான் என உணர்ந்தார். மேனியில் மகிழ்ச்சி ஓர் ஆறுதலென அணைந்தது. வாயிலைத் திறந்து கொண்ட போது விரிந்த வாயில் வெண்பற்கள் முத்து யானமெனச் சுடர மாமந்திக் கரங்களை அகலத் தூக்கி “என்னரசே” எனக் கூவினான் சத்தகன். “உங்களின் திருக்கோலம் கண்டு எத்தனை பருவங்கள் ஆகின என்பதை என் சிறுமூளை நினைவு மீட்டுகிறதில்லை. இன்று இக்கணம் உங்களைக் காணும் முதல் விழிகள் நானென்பதில் அடையாப் பேறொன்றை அடைந்தது போலிருக்கிறது. நீங்கள் பேரழகர் என்பதை லட்சத்து லட்சோப வாய்கள் உரைத்த பின் நானும் என் தொல்மொழியில் கூவுகிறேன்” எனச் சொல்லி “அகூஹ்க்” என நெஞ்சறைந்து கூவினான்.
“நீயெப்போது முறைமைகள் கற்கத் தொடங்கினாய் இளவலே. உனது காட்டு மொழிக்கிடையில் அவை மொழிகள் வனத்தேனில் வெண்ணையென மிதக்கின்றன” எனச் சொல்லி உரக்கச் சிரித்தார் நீலழகன். அணியறையிலிருந்து சிரிப்பொலிகள் கொட்டுப்படுவதைக் கேட்ட நிலவை சத்தகன் வந்து விட்டான் என எண்ணிக் கொண்டார். தானகியும் சேடியரும் உடன்வர இடைநாழியால் அணியறை வாயில் வந்தார் நிலவை. ஒருகணம் மெய்சிலிர்க்க நின்றவர் தன் இளங் காதலன் நீலன் மீண்டு நிற்கிறான் என மயக்குக் கொண்டார். மறுகணம் அவன் தோலை அழுத்தும் துயரங்களை அணியெனச் சூடிக் கொண்டிருக்கிறான் என எண்ணினார். ஒன்றை அழகென்று எண்ணிய மறுகணம் அதன் ஆழத்தில் உள்ள அழகின்மையைக் காணும் விழிகளை யார் மானுடருக்குத் தந்தது என நொந்து கொண்டார். தீச்சுடர் நீல வண்ண ஆடை நிலவையின் மேனியை மாபெரும் தழற்குன்றென ஒளிர்த்தது.
சத்தகன் நிலவை வருவதை நோக்கிய பின் “இன்று எந்த நல்நாளோ தெரியவில்லை. தெய்வங்கள் அணி செய்து மண்ணிறங்கியது போல் இருவரையும் கண்டேன். குன்றா அழகுடன் பொலிகிறீர்கள் அக்கா” என்றான். அவனது குரலில் நீக்கமற இழையும் அறியாமையை நிலவை மீளக் கேட்டதும் மேலும் இளமை கூடி நகைத்தாள். “இளையவனே நீயற்ற விழவில் தெய்வங்களும் அழகுறுவதில்லை. களியோனே வருக” என வணங்குபவள் போலக் கைகுவித்துச் சிரித்தாள். அவனும் பதில் வணக்கம் கூர்ந்தான்.
முரசுகள் ஊழ்க மூச்செனச் சீராய் ஒலிக்கத் தொடங்கியது. நிலவை நீலழகனின் அருகில் வந்து நின்றார். இருவரும் இரு தொலைவுகளில் ஒற்றை உயரத்தில் நிற்பவர்கள் போல் தோன்றினார். இருவேறின் தெய்வங்கள் அருகிருப்பது எனத் தானகி பின்னிருந்து இருவரின் மேனிகளும் மெளனமாகத் தொடுதலற்று நின்றிருப்பதைக் கண்டாள். காலடிகள் இசைக்கோல்களென விழுந்தெழ அரசரும் அரசியாரும் இணை நடந்தனர். அரண்மனை முன் கோட்டையில் நின்றிருந்த வீரர்கள் கொடிகளை உயர்த்தினர். முரசுகள் வேகங் கொண்டு காலத்தை உதறின. களியின் முதலெழுகை நிகழ்கிறது என்பதைக் கூடியிருந்த ஒவ்வொருவர் உடலும் ஒன்றையொன்று அறியாது காலத்தில் நுழைந்தன.
“காலமென்பது களியினால் அளவிடப்படுகிறது இளம் பாணனே. மானுடர் களித்திருக்கும் பொழுதே வாழ்தல் எனக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றையவை அனைத்தும் நெடுந்தூரம் ஓடிவந்து வாங்கும் பெருமூச்சின் இனிமை. மாமலையின் உச்சியில் நின்றிருக்கும் காலமின்மைக்கென நடந்து வரும் யாத்திரை. அனைத்துத் துயர்களும் களியில் திளைக்கும் கணத்திற்கான குருதிப் பலிகள்” என்றார் வேறுகாடார். கோட்டை வாயிலிலிருந்து மலர்கள் பொழிந்தன. வாழ்த்துச் சொற்கள் முறைமைக்கெனக் காத்திருக்காது உதடுகளில் பெருகின. முதல் நின்ற முதுபாணரின் வாயில் அரசரைக் கண்டதும் சொல் எறித்தது.
“திரிகாலம் நிலைக்கும் பேரழகனே வாழி” என்றார். அச் சொல் அடுத்த முரசுக் கோல் எழ முன்னர் அங்கிருந்த ஒவ்வொரு பாணரிலும் படர்ந்தெழுந்தது. வட்டமேடையொன்று புரவிகளால் இழுக்கப்பட்டு நின்றது. வாழ்த்துச் சொல் உரைப்பவர்கள் நிரைகொண்டனர். “ஒற்றை மலரில் மோதும் தேனீக்களென்றார்” வேறுகாடார். இளம் பாணன் நகைத்துக் கொண்டு “இம்மண்ணில் நான் கண்ட ஒவ்வொருவரும் கவியே” என்றான். வேறுகாடார் அவன் தோளில் அறைந்து “கவியின்றி வாழ்வில்லை எனக் கண்ட குடி” எனச் சொல்லிச் சிரித்தார்.
“காலம் காக்க வந்த கதிர்க்கரனே வாழி” என்றார் இன்னொருவர். “காலம் மீட்க வந்த பெருந்தோளே வாழி” என்றார் வேறொருவர். சொற்கள் சுழன்று காற்றை விறைத்தன. நகரும் காலத்தின் ஒவ்வொரு அணுவையும் ஒரு வாக்கியத்தால் அறுத்து அவ்விடத்திலேயே உறைய வைத்தனர் பாணர்கள் கூட்டம்.
மாயப் பெரும் பிறப்பே. மாகளியின் தொல் ஊற்றே. மானுடர் உய்ய வந்த அதிமானுடனே. மதியேறிய வான்முகிலே. வாயில் சொற்சுவையே. வாடாத வாகைக் காடே. வானெழுந்த பெருந்தேரே. போரில் கரும்புலியே. பொங்கும் அரவக் களியே. புதுக்காற்றில் பாடலே. தீராப் பெருமையனே. தீங்கனியின் இன்னமுதே.
வாழாதிருக்கும் குடி வாழ்வளிக்க வந்தோனே. பிறவாத பிள்ளைக்கும் பெருங்கனவு அளிப்போனே. ஆறாத காயத்தில் களிம்பு மழையானவனே. ஊறாத உள்ளங்கள் நீரார்க்கும் வானோனே. பேராற்று வெள்ளத்தில் பெருஞ்சுழிப்பு ஆனவனே. மாறாத மானுடத்தில் அறத்தின் பிடியோனே. ஏங்காது மண் வந்த எந்தை பெரியோனே. ஏக்கமும் பற்றுமறுத்த எங்கள் குலக்கொழுந்தே.
குடியுள்ளத் தொரு கோனே. செருக்களச் சிவனே. சீறு வெம்புலியே. சிரிக்கும் மா கடலே. சிந்தையுள் தெய்வனே. ஆர்க்கும் காதலனே. ஆருக்கும் காதலே. அன்பிற்கினியோனே. அருந்தவச் செல்வனே. மாண்புறு மா வில்லே. மங்காத கருமையனே. அருமணியின் விழியோனே. அடங்காத திமிறோனே. காளைத் திமிலோனே. மாவேழக் குறும்போனே. மத்தின் தரு அமுதே.
ஒவ்வொரு சொல்லிணைவும் காற்றில் எழுந்து மறைய முன்னர் இன்னொரு சொல் எழுந்து அதை அறைந்தது. அம்பு நுனிகள் ஆகாயத்தில் சந்தித்துக் கொண்டு மோதிப் பிளப்பவை போல் ஒருவரை ஒருவர் காற்றில் எறிந்தனர். மங்கலச் சொற்கள் முழங்க முரசுகள் அதிர பறைகள் வாய் கிழிய கொம்புகள் ஊதிப் பெருக்க மாபொற் தேரில் தமிழ்க்குடி வேந்தன் அருந்தவப் புதல்வன் சொல்லிற்கரியவன் மாகளன் குடிகாத்த வீரன் அடங்காத் திண்மையோன் தாழா முடியோன் அளியெனப் பிறந்தோன் காலங்களை அறிந்தோன் காலத்தை அவிழ்ப்போன் பெருங்கார் காலத்தில் மண் வந்த மின்னலோன் எங்கள் குலப் புலி எங்கள் குலப் புலியென ஒவ்வொரு நாவும் அனல் நாவென அச்சொல்லை ஏந்தி உச்சரிக்க காலக் கூற்றன் தமிழ்க்குடித் தலைவன் எங்கள் கரிகாலன் பொற்தேர் எழுந்தான் வாழியென்றன காற்றில் அசைந்த செம்பட்டுப் புலிக் கொடிகள். புரவிகள் கனைத்து ஓம் ஓம் ஓம் என்றன. வேழங்கள் பிளிறி ஓம் ஓம் ஓம் என்றன. நாவுகள் எழுந்து ஓம் ஓம் ஓம் என்றன. படைக்கலன்கள் மெளனத்தில் ஓம் ஓம் ஓம் என்றன.
பொற்தேரில் ஏறினான் விண்ணுக்கும் அரசன். அவன் திருப்பெயர் நீலழகன். அவனே இக்குடித்தேரில் சுழலும் அச்சும் கூர் உச்சி முனையும் என்றது காலம் ஒவ்வொரு முறையும். காற்று எழுந்து ஓம் ஓம் ஓம் என்றது. புறாக்கள் பறந்து ஓம் ஓம் ஓம் என்றன. காகங்கள் சிறகுரசிக் கருந்தீ கொண்டு ஓம் ஓம் ஓம் என்றன. நாகணவாய்கள் ஓம் ஓம் ஓம் என்றன. வெய்யவனின் ஒளியும் ஓம் ஓம் ஓம் என்றது. நீலப் பெருங் கடல் கரையறைந்து தெறித்து என் புதல்வன் என் புதல்வன் என்றது.
மண் அவனை மார்பில் ஏந்தி என் தவம் என் தவம் என்றது. விண் அவன் நீலகொற்றக் குடையாகி என் அளி என் அளி என்றது.
வேறுகாடார் உளம் கிளர்ந்து எழுந்த பெரும்புயலைத் தனக்குள் கட்டிக் கொண்டு இருகரங்களையும் மார்புக்குக் குறுக்காக இறுக்கிக் கொண்டு நின்றார். இளம் பாணன் ஓர விழியால் அவரது உதடுகள் சொல்லெடுக்கத் துடிப்பதையும் கன்னங்கள் விம்முவதையும் தோள்கள் நடுங்கிக் கொண்டிருப்பதையும் கண்டான். அங்கிருந்த ஒவ்வொரு மானுடரும் விலங்குகளும் பறவைகளும் காற்றும் ஒளியும் விழிகளும் அகங்களும் ஒற்றைப் பேருடலெனத் தோன்றின. நீலழகனின் தோற்றத்தைக் கண்டவன் எதனால் ஒருவர் அழகனென மண்ணவரால் அழைக்கப்படுகிறார் என எண்ணினான். பார்ப்பதற்கு அக்குடிகளில் எளியோனின் தோற்றங் கொண்டிருந்தார் நீலழகன். அவர் அவர்களின் அம்சமாயிருந்தார். அவரின் நிறம். விழிகள். தோள்கள். ஆடைகள். அணிகள். அனைத்துக்கும் மேலே அவர் சூடிக் கொண்டிருந்த கதிர்க்கிரீடம் கூடத் தென்னக அரசர்கள் சூடுவதில் அரைப்பங்கே இருக்கும். சிற்றூர்களைத் திரட்டி வென்றிருக்கும் அரசனின் உடலில் தோன்றும் கொழு தினவின் கீற்றுக் கூட அம்மேனியில் எழவில்லை என்பதைக் கண்டான். நடையில் சிறுத்தையின் தாளம் மட்டும் ஒரு நடனமென அவனை ஈர்த்தது. நேரில் ஒருவரைக் காண்பதும் பிறர் விழியால் அவரைக் காண்பதுவும் வேறு வேறென்று அறிவான் இளம் பாணன். பிறர் விழிகளது நீர்ச்சுடர்களின் ஒளிபட்டு மின்னித் துலங்கும் கரிகாலனின் மேனியில் ஒளிரும் கருமையென்பது குடிகளைத் தாங்கும் நிலதேவியெனக் கண்டான். புகழ்வாய் மொழியில் எழுபவை வெறுஞ் சொற்களல்ல அவை இக்குடி காக்கும் பெருங் காவலனின் மெய்ப்பெயர்கள் எனக் கண்டான். மெய்யாலேயே எளிய வாழ்த்துகள் கவிதைகளாகின்றன எனக் கண்டான். நீலழகன் பொற்தேரில் ஏறி நின்று சுற்றி நிரையிட்ட காவலரையும் பாணர்களையும் குடிகளையும் வணங்கினார். அம்முகத்தில் அக்கணத்திலிருந்து உதித்த புன்னகை ஒரு இளஞ் சூரியெனன மலர்ந்து கொண்டேயிருந்தது.
பவனி அசையத் தொடங்கியது. அரசியும் அரசரும் தேரில் ஏறி நின்று மலர்களையும் வாழ்த்துச் சொற்களையும் பெற்றுக் கொண்டு குடிகளை நோக்கிப் புன்னகை தூவினர். குடிகள் அவர்களின் விழிகள் ஒருகணம் தொட்டு அரங்குகையில் மேனிகள் சிலிர்க்க இருகரந் தலை மேல் கூப்பி “வாழ்க நீ அம்மான். வாழ்க எங்கள் குலக் கொடி. வாழ்க நீ பெரியோனே. வாழ்க என் தாதையே. வாழ்க நீ என் வாழ்வையும். வாழ்க வாழ்க வாழ்கவெனக் குரல்கள் மலர்களிலும் அளப்பரிந்து கொட்டின. புரவிகள் மெல்ல நடையெடுத்துப் பொற்தேர் அசைந்த போது நீலழகன் விழிப்பார்வை இருநொடிகள் வேறுகாடாரையும் இளம் பாணனையும் தொட்டுத் திரும்பியது. இளம் பாணன் அந் நோக்கில் அந் நோக்கிற்கு அப்பால் வெகுதொலைவில் நின்றிருந்த எளிய மானுடனைக் கண்டான். எளியவன். வலியவன். வாழும் வேட்கையில் தன்னை எரித்தவன். தன் அணையாத் தணலால் தன்னை ஆக்கியவன். ஒரு கணத் தீண்டலில் அவன் அறிந்தான் அங்கு நிற்பவர் ஒரு தோற்றம் மட்டுமே. அதற்குள் உறைபவன் ஆயிரமாயிரம் இடிகளுக்கிடையில் மின்னற் பெருக்கிடையில் நுரைக்கும் ஆழிக்கரையில் கால்விரல்களால் ஈரமணலைக் கிளறி நின்றிருக்கும் சின்னஞ் சிறு சிறுவன். அவனது விழிகளின் களங்கமின்மையை மாசறு புன்னகையை என்றைக்கும் நெஞ்சில் தேக்கி வைப்பவனென நெஞ்சில் வலக் கரம் தொட்டான்.
வேறுகாடார் அவனை நோக்கித் திரும்பி “நாம் நெஞ்சில் கைவைத்து வணங்கியே ஆக வேண்டுமென்பது அவர் வாங்கி வந்த ஊழ் இளம் பாணனே. அவரை வணங்குவதென்பது உன் குடியறத்தின் தொல்தெய்வத்தை நேரெதிர் கொள்வதைப் போன்றது. தயக்கமின்றி எண்ணுவதைச் செய். அவர் எங்கள் இறை. இறையென்று இக்குடி சொல்லும் மந்திரம்” என்றார். இளம் பாணன் நீலழகனை நோக்கினான். ஆயிக்கணக்கான வீரர்களும் தளபதிகளும் பேரழகியென்றான அரசியும் நின்றிருப்பதை எவ்விழியாவது கண்டதா என ஐயுற்று மீண்டும் நோக்கினான். எவ்விழியும் அவ் ஒற்றை மானுடனை அன்றி வேறெதையும் நோக்கியிருக்கவில்லை. மாபொற்தேரும் வண்ணங்களும் பெரு வேழங்களும் அணிசெய் புரவிகளும் முழங்கி மின்னும் வாத்தியங்களும் பாணர்கள் கூவிடும் வாழ்த்துச் சொற்களும் விழவுக் களிகளும் கூடப் பிரிக்க முடியாத விழியீர்ப்பை அந்த ஒற்றைக் கருமேனி அணிந்து கொண்டிருந்தது. ஐயமே இன்றி அவரே இக்குடியின் ஐயன் எனக் கண்டான். போர் பற்றிக் கேட்டிருந்த அத்தனை நற் சொல்லும் தீச்சொல்லும் பயனற்ற படைக்கலன்கள் போல் அவர் முன் பணிந்து கிடப்பதைக் கண்டவன் அவனறியாத தெய்வத்தை முதன் முறை காண்பவன் என மாபொற்தேர் அவர்களைக் கடந்து முன்னேறிக் கொண்டிருந்த போது குடிகளில் விழுந்து அலையடித்த நீலனின் நிழலை வணங்கினான். அவனது அகமும் ஓம் ஓம் ஓம் என்றது.