76: களித் தோழியர்
“களிப்பெருக்கையே மானுடர் முதன்மையாக விழைகின்றனர் என்பது பொய் இளம் பாணனே. இங்கு நீ காணுகின்ற ஒவ்வொருவரும் அடையும் களிக்கு அதன் மரக்கிளைகளையும் கனிகளையும் பூக்களையும் இலைகளையும் விட ஆயிரக்கணான துயர்கள் மண்ணினுள் ஆழத்து ஆழங் காண வேர்கொண்டு பரவி நிற்கின்றன. இருளின்றி ஒளியை அறியமுடியாதைப் போலத் துக்கங்களின்றி மகிழ்வையும் அறிய முடியாது. இளமையின் களி போதமற்றது. தன் செயல்களின் பொருளை அறியாதது. ஆகவே தூயதென்று ஆகக் கூடியது. முதிர்ந்து வருபவரின் களி மெல்ல ஆடிக் கூர்ந்து ஒற்றைச் சுடர் அகலெனச் சுருங்குவது. சுருங்கி தன்னுள் எரியும் தவிப்பை மட்டும் ஊழ்கமெனச் சொல்லிக் கொண்டிருப்பது. இதற்கு அப்பால் களியை யோகமெனக் கொள்வோர் அரிதினும் அரிதானவர்கள். நாம் பார்க்கின்ற எல்லாமே நம் விழிகளறியா வலைகளால் பின்னப்பட்ட புராதன வலை. அதன் மையத்தில் களிச்சிலந்தி நம்மை உண்ணக் காத்திருக்கிறது. சிற்பிகளின் மந்தணக் கதைகளின் படி அவர்களுக்குக் கனவுகளை அருளுவது லட்சோப லட்சம் கால்கள் கொண்ட தூபிகை எனும் பெண்சிலந்தி. அவள் பின்னும் வலைப்பெருக்கே வாழ்க்கையென்று அவர்கள் எண்ணுவதுண்டு. நாம் பின்னலில் ஒரு நூலிழையா முடிச்சா என்பது தான் நம் மதிப்பை உருவாக்கும் இடம் என அவர்கள் வகுக்கிறார்கள். பொற்தேரில் மினுங்கும் ஈச்சியின் வதனம் ஓர் இளம் சிற்பிக்குத் தூபிகை அருளியதென்று திண்ணைப் பேச்சுகளில் கேட்டேன். இளையவருக்கே தெய்வங்கள் அருளுகின்றன” எனச் சொன்ன வேறுகாடார் களியாட்டின் விசைகளுக்கிடையில் நூலறுந்த பட்டமெனக் காற்றை அறிந்து விலத்திப் பறந்து கொண்டிருந்தார். இளம் பாணனின் விழிகள் களிமயக்கில் ஆடும் உடல்களையும் அவை புரியும் எண்ணற்ற பாவனைகளையும் கண்டு களித்துக் கொண்டிருந்தன.
“கிழவரே. அந்தந்தப் பருவத்திற்கு அதனதன் பாட்டில் பூக்கும் காலங்களை அதனதன் போக்கிலேயே விட வேண்டும். அறிதலுக்குச் சுருக்கு வழிகள் இல்லையென்பதல்லவா நூலோர் சொல். முதுமை முகவிழிகளை விட முதலில் பறித்துக் கொள்வது அகத்தின் விழைவுகளையே. ஆடும் அம்பலமென உடல் அமையாத போது தெருவில் வீழ்ந்து கிடக்கும் கூத்தனைப் போல் புலம்புவது முதுமையின் பாவனை. மீண்டும் வலியதென இளமை அளிக்கப்பட்டால் எவ்விளையோரையும் விட ஆயிரம் பாவனைகள் களிப்பாடும் விழைவு கொண்டது. இளமையின் அறிதல்கள் காலத்தால் வேலியிடப்படுகிறது. களியை நினைவுகளெனச் சேகரித்து வைப்பதற்கே மானுட வாழ்வின் கால எல்லை கட்டுண்டிருக்கிறது. ஆனால் உமது நிலத்தில் இளையோரும் முதியோரும் இளந்தாய்களும் கூட களிப்பெருக்காடுவது வியப்பாய் உளது. குடிநெறிகளை விலக்குவதே காம விழவின் அடிப்படை நெறியெனினும் அதற்கு உளம் தயாராகுவதென்பதும் இத்தனை பகல் வெளிச்சத்திலும் அவை கொண்டாடப்படுவதையும் அடைய மானுட எல்லைகளை எவ்வளவு தூரம் எளிய குடிகளின் அகங்கள் விரித்திருக்கும் என எண்ண வியப்பே மேலிடுகிறது. போரும் மிடிமையும் துயர்களும் துர்க்கனாக்களும் குடிகொள்ளும் மானுடர் இவர்கள் என என் செவிகள் கேட்டுற்ற கதைகள் உரைத்தாலும் இங்கு நாம் காணும் மேனிகள் ஒவ்வொரு திரும்பலிலும் நீராடலின் பின் தேகம் சிலிர்த்து உதறும் வனவிலங்குகளென எளியதாகத் துயரிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறார்கள்” என்றான் இளம் பாணன்.
பொற்தேரும் பவனியும் பெருக்கில் மாமுதலையென முன்னூர்ந்து விழிகளிலிருந்து அகன்றது. தெய்வங் கடந்து போன பின்னர் வாங்கிய வரத்தைக் கொண்டு தன் முதல் விழைவை வேண்டிக் கொள்ளும் பக்தர்களெனக் குடிகள் ஆடலில் மூழ்கினர். எங்கிருந்து எழுந்தன இசைக்கருவிகள் என விழிகள் உறாத இடங்களிலிருந்தெல்லாம் பறைத் தாளங்களும் வேய்குழல் கீதங்களும் யாழ் தொட்ட காற்றும் சுழன்றன. வேறுகாடார் இருதியாளைக் கண்டு அருகு சென்று உரையாடத் தொடங்கினார். நெடுநாள் நண்பர்கள் தம் வாழ்நாள் கதை முழுதும் சிலகணங்களில் சொல்லிமுடித்து விட எண்ணுவன போல் அவர்கள் விழிகள் நுனிக்காலில் நின்றாடின. யாதினி திக்குகளை நோக்கி விழவைக் களிவிழியால் நோக்கும் இளம் பாணனின் அருகில் நின்று கொண்டிருந்தாள். அழகு அவமதிக்கப்படும் இடங்களில் பெண் என்பவள் கொல்நெருப்பு எனும் தொல்சொல்லை இளம் பாணனுக்கு அதுவரை எவரும் போதித்திருக்கவில்லை. தன்னை ஒரு மானுடர் எனவும் பொருளளிக்காது விழியை ஒருகணம் கூட்டத்தை நோக்குகையில் நோக்கற்றுக் கடந்த இளம் பாணனை விழியுற்று நின்றாள். யாதினியைக் கண்ட வேறுகாடார் “நலமா யாதினி. இக் களியில் உன் கனவுகள் நிகழ்க. அழகில் பொலிந்து கந்தர்வினி ஆகிவிட்டாய்” எனக் குழை குரலில் சொன்னார். “தீயிற்கு இட வேண்டிய நெய்யின் அளவும் தேவையும் அறிந்தவர் உங்களைப் போல் யாருளர் வேறுகாடாரே. உங்கள் குன்றாத இளமை களியில் பொலிந்து கன்னியரை ஈடேற்ற வேண்டும்” எனச் சொல்லி நகைத்தாள் யாதினி. யாதினியின் விழிகள் இளம் பாணனை உற்று மீள்வதைக் கண்ட வேறுகாடார் “அவர் தென்னகத்தின் பெருங்கவி. நம் களி காண அழைத்து வந்தேன். நம் பட்டினத்தின் அழகிகள் பலர் ஏற்கனெவே அவரின் மிடுக்கிற்கும் சொல்லிற்கும் கனிந்து விட்டார்கள்” எனச் சொல்லிக் குறும்பாகச் சிரித்தார். “அளவுக்கு அதிகமாக நெய்யையும் ஊற்றி எரிவிறகுகளைக் கைபோன போக்கில் இடவும் உங்களை விட யாரறிவார்” என மெல்ல நொந்து கொள்பவள் போலச் சொன்னாள் யாதினி. வேறுகாடார் குறுநரியின் சிரிப்புடன் “அவர் இளையவர். நம் களி நெறிகளை அறியாதவர். அவர் வாழ்வில் காணும் முதற் பெருங்களியே இது தான். பொன்னையும் அருமணிகளையும் மதிப்பிடும் விழிகள் இன்னும் பெறாதவர்” என்றார். யாதினியின் பெருமார்புகள் கனன்று துடித்தன. “ஏற்கெனவே யாதினியை நம் குடியின் இளம் பாணனொருவன் பாடியே மயங்கி விழுந்துவிட்டான்” எனச் சொல்லி உரக்கச் சிரித்தார் இருதியாள். “இளையவர்கள் பெருந்தீயை பாடலில் மட்டுமே தொட முடியும். மெய்யில் தொட்டால் பொசுங்கிவிடுவார்கள்” என விழிகளில் தழல் நடனம் காட்டிச் சிரித்தார். “அவரை ஆடலுக்கழைத்தலில் ஏதேனும் பிழையுளதா” என இளம் பாணனை விழிகளால் காட்டிக் கேட்டாள் யாதினி. “அது அவரின் வாழ்விற்கு நீயளிக்கும் அருங்கொடை. ஆடலை அறியாத இளந்தேகன். பார்த்து நடந்து கொள் என ஆலோசனை தான் உண்டு” எனச் சொல்லிக் கண்சிமிட்டிச் சிரித்தார். அன்னையிடம் அனுமதி வாங்கி மகவுடன் விளையாடச் செல்லும் தோழியெனக் கால்கள் துள்ள இளம் பாணனின் அருகு சென்றாள் யாதினி.
ஆடலில் நாகங்களென நெளிந்த குடிகளின் காலடிகளின் உதைப்பினால் புகைப்பெருக்கென அவ்வெளி உருக்கொண்டு தோன்ற அருகிருந்த மனைகளின் திண்ணைகளிலிருந்து பரவிய குங்கிலியப் புகைகளும் கலந்து வெண்மையும் மண்ணிறமும் கொண்ட புகைச் சர்ப்பங்களின் கலவிப் பெருக்கிடையில் கருந்தேகங்களும் மாந்தளிர் மேனிகளும் போர்புரிகின்றன என எண்ணிக் கற்பனையில் திளைத்திருந்தான் இளம் பாணன். இளம் பாணனின் இடக்கரத்தை ஊன்றிப் பற்றியவள் “கவியே. என்னுடன் ஆடலுக்கு வருகிறீரா. உங்கள் அன்னையிடம் அனுமதி வாங்கி விட்டேன்” என வேறுகாடாரைக் கைகாட்டினாள் யாதினி. வேறுகாடார் “செல்க” என்பது போல் இருகரத்தையும் மண்ணள்ளித் தூற்றுபவர் போல் காட்டிச் சிரித்தார். இளம் பாணனின் தேகத்தில் மின்னல்கள் நடுக்காடின. அவனது விரல்களைப் பிடித்தவள் அவை குளிர்ந்து நடுங்குவதைக் கண்டு வாயில் கைபொத்திச் சிரித்தாள். “உங்களை மாபெருங் கவியென்று சொன்னார் உங்கள் அன்னை. நீங்களோ முதற் காதலியின் கரந்தொடும் இளஞ் சிறுவனென நடுங்குகிறீர்கள்” எனச் சொல்லிச் சிரித்தாள். இளம் பாணன் விரல்களின் நடுக்கை மெல்ல அகத்தால் மறைத்தபடி “எனது உடலில் ஆடல் எப்பொழுதும் ஒரு தாளமென நடுங்கிக் கொண்டிருக்கும். காரிருட்டில் ஒற்றை அகலென. பல தோழியரும் இச்சொல் பேசியிருக்கிறார்கள். என் நாட்டில் நான் அரசிகளுடன் தான் ஆடுவது வழமை” எனச் சொல்லி உதட்டில் சிரிப்பை உதித்தான். “நானும் இந்த நாட்டின் அரசி தான் பெருங்கவியே. ஆடலில் உமது ஒவ்வொரு கவிச்சொல்லுக்கும் ஒரு உதட்டு முத்தம் பொற்கிழியென வாரிவழங்கப்படும்” என்றாள் யாதினி. அவளது துள்ளுகயல் விழிகளைப் பார்த்தபடி “உங்கள் குடியில் முத்தம் தருவதாக வாக்குரைத்துக் கவிகேட்கும் பெண்களுக்குச் சொல்லும் சொல் காப்பாற்றும் வழக்கமில்லை என்பதை ஏற்கெனவே கண்டு கொண்டேன். சொல்லில் நான் ஊதாரி என்பது எங்கள் பாணர் குழு எனக்கிட்ட அடைமொழி” எனச் சொல்லிய இளம் பாணனின் செவ்விளம் உதடுகள் இனிப்பு மலரெனக் கூர்ந்தன.
குங்கிலியப் புகை எழுந்து வானளாவப் பரந்தது. புகையிடை மேனிகள் கரைந்தன. இளம் பாணன் எண்ணியிராக் கணத்தில் இருகரங்களாலும் அவன் இளங் கன்னக் கதுப்புகள் பற்றி செவியை வருடி இதழில் இதழை ஒற்றி நாவால் உதட்டைத் திறந்து அவன் நாவைச் சண்டைக்கு அழைத்து மார்பும் முலைகளும் உரசி அழுந்த தேனுறிஞ்சினாள் யாதினி. மெய்யே மெய்யே என அவன் ஆவிபிரிந்தது. இன்மணம் எழுந்து மூச்சை அடைத்தது. அவன் கரங்களை எடுத்துத் தன் இடைகளில் வைத்து அவன் செவிகளில் குனிந்து “என்னைத் தூக்கிச் சுழற்றடா” எனக் கொஞ்சு குரலில் ஆணையிட்டாள் யாதினி. கரங்களில் போரிடை வாள்பற்றிய எளிய வீரன் பெருந்தளபதியின் கரம் நோக்கி வீரமேற்றுவது போல புகைச்சுருள்களின் அலை நெளிவுகளிடை யாதினியின் அரும்பு காதலும் புரவிக் காமமும் கொள் விழிகளை உற்றதும் அவனுள் அடர்ந்து பற்றியிருந்த வேர்க்கொடிகள் அறுபட்டு விலகுவது போல் மண்ணிலிருந்து எழுந்து விண்பாய்ந்தான். இறங்கியவன் அவள் இடை சுழற்றி அழுத்தி தன் இடையுடன் அவள் இடை கோர்த்தான். ஆடலின் பாவமென அவள் முலைகளில் விரல்களால் ஊர்ந்தான். கழுத்து மயிரை விலக்கி முகம் புதைத்து மூச்சை எறிந்தான். யாதினி ஒருகணத்தில் அவனுள் எழுந்த வேங்கையைக் கண்டு உவகை கொண்டாள். அவன் மார்பிரண்டிலும் முத்தமிட்டாள். அவன் அங்கங்கள் அதனதன் செயல் மறந்தன. சித்தம் விலகிப் புகையில் கரைந்தது. அங்கு ஆடலென நிகழ்வது காமத்தின் தொல் அழைப்பு எனக் கண்டான். அதானேலேயே அவனைச் சுற்றி ஆடிடும் மேனிகள் அவ் அழைப்பின் காலத்தை நீட்ட ஆடலைத் தீராது ஆடுகின்றன.
பறையிசை மூசி மூசி உச்சம் உச்சமென இளங் கரங்களில் எழுந்தாடியது. தோகை கொண்ட நாகங்களெனத் தலை சுழற்றி ஆடினர் இளம் பெண்கள். புரவியெனக் கால் தூக்கிப் பறவைகளெனச் சிறகுக் கரங்கள் விரித்து வேழத் துதியெனக் ஆண் குறிகள் ஆடைக்குள் எழ மதனத் தீவுகளென அல்குல்கள் ததும்ப ஆடலில் ஆடலே ஆடியது. காமத்தைக் காமம் ஆடுவதைப் போல. யாதினி அவனைப் புலிநகங்களால் கிழிப்பதைப் போல விறாண்டினாள். வலியுடன் விதிர்த்த தேகத்தை உதறி மண்ணைக் குனிந்து வணங்கிக் கரங்களை விரித்து அணைந்து வான் நோக்கி மார்பு திறந்து மண்ணில் விழுந்து நெளிந்து தன் மேல் கால்தூக்கி ஆடிடும் அரக்கியின் வெறிகாமப் பொன் தோலுடல் நோக்கினான் இளம் பாணன். அவளில் அணிகலன்கள் விம்மித் தெறித்து ஆடவர் விழியெனத் திரும்பி அவளிடமே மீண்டன. கூந்தற் பிரிகள் குலைந்து கருந்தழற் சர்ப்பங்களெனக் காற்றேகின. தோளாடின. அவள் வானுயர்ந்து நோக்கிக் குதிதாளமிட்டு ஆடிய போது மலைப் பாறையில் தூங்குவேர்களெனச் சமைந்தன பிரிகள். இளம் பாணன் மேனி உதைத்துச் சுழன்றெழும் சிறுசுழற் காற்றென எழுந்தான். யாதினியின் தொடைகளைப் பின்னின்று பற்றி உயர்த்தி அவன் குறி அவள் பிருஷ்டங்களில் குத்தி முறிவதைப் போல் நிற்கக் குறியை உணர்ந்தவள் தலை மட்டும் திரும்பிய சிலையென அவனைப் பின் திரும்பி நோக்கினாள். அவளது நிறைவட்டக் கருமணிகளில் உள்நரம்புகள் கருங்குவளை வண்ணத்தில் மலர்ந்து கொண்டேயிருப்பதை விழியுற்றான் இளம் பாணன். இரண்டு கரும்பாதைகளென அவனை அவை உள்ளிழுத்தன. அம்மாயத்திலிருந்து விலகுபவனென
அவளது செவிகளைப் பாம்பெனக் கொத்தினான். சதங்கை போற் சிணுங்கித் தழை பிருஷ்டத்தால் இளங் குறியைத் தள்ளினாள் யாதினி. குளிர் மணலில் புதைபட்டது இளங்குறியெனக் கூசி அவள் முதுகில் சாய்ந்து கூந்தலில் கிளர்ந்து பரவிய தெய்வங்களும் அறியாத இன்மணத்தை மூச்சென இழுத்துப் போதையில் மயக்காடினான்.
இருவரது ஆடலும் சுற்றிலும் ஆடுபவர்களிடை ஒரு விலகல் வட்டத்தை உண்டாக்கியது. மையமென ஒன்று உண்டாகுவது பித்தினாலும் வெறியினாலும் என்ற சொல் அவர்களின் தலைக்கு மேல் வண்டெனப் பறந்தது. இளம் பாணனின் மேனியில் வியர்வைத் துளிகள் மதுச்சாரலெனச் சொட்டின. தடுக்கிச் சுனையில் விழுந்த மான் குட்டியெனச் சிதி அவன் முதுகில் வந்து முட்டுண்டாள். உதடுகள் ஒருமுறை குவிந்து அவன் வியர்வை அவளது உதடுகளில் கரிப்பின் சுவையென ஒட்டிச் சொட்டியது. பின்னிருந்து எக்காளமிட்டுச் சிரித்த கர்ணிகை “ஆடலில் மூண்டது பெரும் போர். தெய்வங்களே நோக்குக. எங்கள் ஆடற்கரசி களம் புகுந்தாள்” என உரக்கக் கூவினாள். அருகாடிய ஆடவர்களும் இளம் பெண்களும் சிரித்துக் கொண்டே சிதியை நோக்க திரும்பிச் செல்ல உந்தியவளை நோக்காமலேயே வலக்கரம் கொழுக்கியென வழுகுடல் இடை பற்றியிழுக்க அதிர்ந்தாள் சிதி. யாருமறியாமல் மகனின் களி பார்க்கும் தந்தையின் உவகையென வேறுகாடார் உளம் கூர்ந்து ஆடலின் போரை நோக்கினார். இருதியாள் வேறுகாடாரை நோக்கி “இன்றுடன் கலனேறித் தென்னகம் ஓடிவிடப் போகிறார். பார்ப்பதற்குப் பெண் பூனைகளிடம் சிக்கிக் கொண்ட இளம் பூனையைப் போல் மேனி வளைத்து வால் சுழல நிற்கிறார்” எனச் சொல்லி மெல்லக் கரங்களைக் கோர்த்துக் கொண்டு மேனியை வேடிக்கைக்கென ஒருக்கினார். தேகத்தில் தாளமிடும் நடையுடன் உவகையில் நின்றிருந்த வேறுகாடார் “அவர் இளம் பூனை தான் இருதி. எந்தப் பூனைக்கும் அதன் எல்லையை அறிய ஒரு போர்க்களம் அளிக்கப்படல் வேண்டும். எனக்கென்னவோ அவரைச் சுற்றியாடுபவை எலிக்குஞ்சுகளென அவரது வாயில் அகப்படுகிறதெனத் தோன்றுகிறது. ஆடலின் விசையில் மையம் கொண்டு விட்டார். இளம் பெண்கள் இனித் தடுக்கி அவர் வாயில் விழப் போகிறார்கள். அறியாமையுடன் வேட்கை கொண்ட இளந்தேகத்திடம் தன்னைக் கொடுக்கும் வேட்டையே களியை ஆக்கிய விதியின் முதல் விசை. அறியாமையைக் களைய புடவி ஒவ்வொரு பூனைக்கும் ஒரு வாய்ப்பை அளிக்கிறது. வென்று வேட்டை கொள்பவன் நெறிகளைக் கற்றவன் ஆகிறான். எங்கள் பெண்கள் எந்தப் பூனை எதைப் பிடிக்கும் என்பதை அறியாத பேதைகளா என்ன. ஆட்டம் இப்போது தான் தீயெரியத் தொடங்கியிருக்கிறது. அவர் வெல்வார். ஏனெனில் நம் பெண்கள் விரும்பும் படையல் அவர். தான் படையல் என உணராத இளம் மகனை உண்டு களிதீர்க்கும் விழைவே களி இசைக்கும் பாடலின் பொருள்” என்றார் வேறுகாடார்.
கருந்தேகம் காளையெனப் பொலிந்து குத்திடும் அரக்கனைப் போல் திமிறியாடி நின்ற ஒருவனை வளர்ப்பு விலங்கெனக் கரத்தால் பிடியிட்டு மையம் இழுத்து வந்தாள் சிப்பி. மைய வட்டம் கருமணியென விரிந்தது. பறையாளர்கள் ஆடலின் உக்கிரம் கூடியெழக் கரத்தசைகள் அதிர்ந்தாட முப்பத்தியாறு பறைகள் எங்கிருந்தவை என அறியாமல் இருந்த ஒளிவிடங்களில் இருந்து எழுந்து வந்தன. யாழ்கள் கூச்சலிடையில் குரல்களெனத் திண்ணைகளில் பரவியிருந்தன.
பொன்னின் தழற் கரங்களால் அத்தனை மேனிகளையும் பூசியணைத்தது மாலைக்கதிரொளி.
இடைபற்றித் திரும்பிய சிதி அவன் முதுகில் கொங்கைகள் குத்துண்டு மோத அவன் இடையைப் பற்றித் திருப்பினாள். சிதியின் மோக வதனத்தில் காமத்தின் வேட்டைக்களம் தகதகத்தது. உதடுகள் நாகணவாய்களின் அலகுகளென விரிந்து மூடின. யாதினியும் சிதியும் மத்தைப் புரட்டும் வாசுகியென அவனைச் சுழற்றினார்கள். தலை சுழல்வது போல் மயக்கெழுந்த இளம் பாணன் இதயம் குதித்துக் குதித்தாடி நோவெழ மண்ணில் சரிந்தான். “விழுந்தான் இளம் பூனை” எனச் சிரித்தார் இருதியாள். வேறுகாடார் அவனது நிலையைக் கண்டு உள்நுழையத் தயங்கிக் கரங்கள் சோர்ந்து தளர நின்றார். “வேட்டையில் குறுக்கிடுதல் அறமீறல் காடரே” என்ற இருதியாள் “அவன் அவனைக் காக்கத் தேவையில்லை. பெண்கள் காமுறும் ஆணில் முதலில் கொள்வது கருணையே. கருணையிலிருந்தே அவன் இணையெனத் தேர்ந்தெடுக்கப்படுகிறான். அவர்கள் அவனைக் காப்பார்கள்” என்றார்.
சிதியும் யாதினியும் இருபுறம் அமர்ந்து அவன் குழல் கலைத்து மார்பைத் தட்டினர். கர்ணிகை நீர்க்கலயத்தைக் கொணர்ந்தாள். வீழும் நீரிடை நேர்நின்றது போல் முகம் கலயம் கவிழ்பட நீரை அருந்திக் கொண்டே மூச்சுத் திணற எழுந்தான் இளம் பாணன். விழிகள் சற்றுத் தெளிந்து சுழல்வு மெல்லாடலெனச் சிரசில் நின்றது. எழுந்து நின்றவனின் வலக்கரத்தை யாதினி பற்றிக்கொண்டு அருகிருந்த மனையின் திண்ணையை நோக்கிச் சென்றாள். சிதி வெளிச்சத்தில் விழுந்த நிழலெனத் தொடர்ந்தாள். இருவரும் அவனது அருகிருக்க மெல்லிய நாணங் கொண்ட இளம் பாணன் மூச்சிரைக்க இருமிக் கொண்டான். யாதினியின் கரம் அவன் முதுகை மெழுகென வருடியது. ஈரமூறிய முதுகு வழுக்குப் பாறை போல் வளைந்தும் வழுக்கிக் கொண்டுமிருந்தது. சிதி அவனது தொடையில் கரத்தை வைத்துத் தசைகளைப் பிடித்துத் தளர்வு நீக்கினாள். பாதங்கள் அனற் கட்டைகளென அதிர கர்ணிகை மேலுமொரு கலய நீரை அவன் காலில் வார்த்தாள். மூன்று பெண்கள் அவனுக்குப் பரிவு காட்டுவதைக் கண்ட இளம் பாணனின் அகத்தில் வெறியென எழுந்த காமத்தின் ஆடல் இருளில் தொலைந்த நாணயமென மறைந்தது. அவர்களது முகங்களை நோக்குந் தோறும் அவை அவனது நிலையைக் கண்டு கொள்ளும் பதைப்பைக் கண்டவன் விழிகள் நீர் கோர்க்க அழத் தொடங்கினான். வேறுகாடாரும் இருதியாளும் திண்ணையில் வந்தமர்ந்தனர்.
வயிறு எக்கி விக்கல் எழ அழுது கொண்டே புழுதியும் நீரும் படிந்த விரல்களால் முகத்தைத் துடைத்துக் கொண்டான் இளம் பாணன். பின்னகர்ந்து சாய்ந்து மனையின் மண்சுவற்றில் முதுகைத் தளர்த்தினான். சிதி அவனது இருகால்களையும் அழுத்தி நீவினாள். வேறுகாடார் இளம் பாணனை நோக்கிக் கொண்டு “எப்பேறு கொண்ட வாழ்வோ இவருக்கு. வந்த ஒருநாளில் நம் குடிகளுடன் ஒட்டிக் கொண்டார். எப்பிறப்பில் இழைந்த உறவோ” எனச் சொல்லி அவனது முகத்தைப் பரிவுடன் நோக்கினார். அவனைச் சுற்றிலும் பரவிய கருணையின் கதகதப்பில் தாய்க்கோழியின் சிறகெனத் திண்ணை விரிந்திருக்கிறதென எண்ணினான். அங்கிருந்த பெண்களை நோக்கி “நன்றி” எனச் சொல்ல வார்த்தை எழுந்து நாவில் புரளும் போது உவகையின் உப்பில் தொண்டை கனிந்தது. அவர்கள் விழிகளிலும் மெல்லிய நீர்ப்பிசிறுகள் தோன்றியதும் துடைத்துக் கொண்டு “கவியே. இது களிநாள். நன்றியென்பது முத்தம் மட்டும் தான்” எனச் சொல்லி முத்துக்கள் கொட்டுண்டு தரையில் தெறிப்பது போல் சிரித்தாள் யாதினி. தொடையில் மூக்குப் பிடிப்பவள் போல் திருகிக் கிள்ளி “இவர் கவியா. இது தெரியாது நான் கால் பிடித்து விட்டேன். என் காலைப் பிடித்தாள் பேரழகியெனச் சொல் கொண்டீர்கள் என்றால் நாவறுத்துக் கையில் கொடுப்பேன்” எனச் சேர்ந்து கொட்டுண்டாள் சிதி. கர்ணிகை எழுந்து திண்ணையில் அமர்ந்து கொண்டு “ஆடலில் சரிந்து விழுந்த பின்னரே ஆணின் விழிகளுக்கு அழகெதுவென்பது பிடிபடும் என என் அத்தை சொல்லுவாள். நீங்களோ கவி. எங்கே சொல்லுங்கள் எம் மூவரில் எவர் பேரழகி” எனச் சொல்லி வியப்பும் குறும்பும் பின்னிய இருவிழிகளுடன் கேட்டாள்.
இளம் பாணனின் மூச்சுச் சீராகி தேகம் புலர்ந்தது. யாதினி தன் ஆடை நுனியை இழுத்து அவன் முகமும் கழுத்தும் மார்பும் வயிறும் துடைத்து வியர்வை போக்கினாள். இளம் பாணன் குரல் உடைய “யார் நீங்கள். மெய்யாகவே கேட்கிறேன். நீங்களெல்லாம் யார். எனக்கு ஏன் இத்தனை பரிவை அளிக்கிறீர்கள். உங்கள் குடியில் ஒரு மைந்தனென நானில்லை. நீங்கள் தொலைவறியாத திசையின் அலைமடிப்புகளில் மிதந்து இக்கரை சேர்ந்த வெற்றன். உங்களைச் சிலகணம் முன்னர் வரை களித்தோழியர் என ஆடிக் களித்தேன். மயக்குக் கொண்டு வீழ்ந்தவனை அன்னையென ஏந்திக் கொள்கிறீர்கள். மடியிட்டுத் தலை கோதுகிறீர்கள். இந்த எளியவன் மேல் இத்தனை கருணை மலைகளையும் விட எடை கொண்டது” எனச் சொல்லியவன் யாதினியின் கரத்தை எடுத்துக் கண்களில் ஒற்றினான். அவனது விழிநீர் சுடுதிரவமென அவள் விரல்களில் ஒழுகியது. இருதியாள் அவனை நோக்கித் திரும்பினார். “இளையவரே. பெண் என்பவள் எங்கும் பெண்ணே. காதலியும் தோழியும் அன்னையும் மகளும் அவளே. ஒன்றின் பலவண்ணங்கள். களியென்பது தூவும் மாமழை. மானுடரின் விழைவின் ஒளியிடை மாமழை பொழிகையில் தோன்றும் வான் வில்லின் வண்ணங்களே பெண் என்பதை அறிக. சில கணங்களுக்கு முன் நீங்கள் கண்டது காதலின் இளநீலத்தை. இப்போது காண்பது அன்னையின் வெண்மையை. வெண்மையிலேயே அனைத்து வண்ணங்களும் பிரிகிறது என்பது நூலோர் சொல். நீங்கள் அப்பரிவையும் அடைந்தமையால் களியின் ஆதியூற்றில் கால் நனைத்தவர் ஆகிறீர்கள். குழந்தையைப் போல் அழாது அவர்களை வானவில்லென ஏந்திக்கொள்க. களி நாளில் அன்னைகள் தேவையில்லை” எனச் சொன்னார் இருதியாள். கர்ணிகை மெல்லிய பறவைக் குரலில் “அன்னையோ வானவில்லோ. என் வினாவுக்கு மட்டுமே இக்களியில் பொருளுண்டு கவியே. யார் அழகி. யார் பேரழகி. உமது அகத்தின் நுண்மையை அளக்கும் வினா அது” என்றாள்.
வலக் கண்ணை மெல்ல மூடித் துலாத்தட்டின் முள்ளை நோக்குபவனென மூவரையும் ஒரு சுற்று நோக்கிச் சிரித்தான் இளம் பாணன். அவர்கள் அவனது விளையாடலைக் கண்டு நகைத்துக் கொண்டே அவனை அணைத்துக் கொண்டார்கள். மேனிகளில் காமம் உலர்ந்து கனிவின் இதழ்கள் மலர்ந்தன. யாதினி அவன் கன்னத்தில் குழவியைக் காதலுடன் இறுக்கி முத்தும் அன்னையென முத்தினாள். சிதி அவனின் நுதலில் முத்தமிட்டு மூக்கைப் பிடித்துத் திருகினாள். கர்ணிகை “எனக்கும் ஒரு முத்தம். ஆனால் நீங்கள் தான் கொடுக்க வேண்டும்” எனக் கெஞ்சலும் கொஞ்சலுமாய்க் கேட்டாள். தோளில் அணைத்து உச்சி வகிட்டில் முகர்முத்தம் கொடுத்தான். அவர்கள் அருகில் சாய்ந்து கொள்ள கர்ணிகை முதுகில் ஏறிக்கொண்ட வேதாளமென “இப்பொழுது பாடுக எங்களின் பேரழகை” என்றாள். இளம் பாணன் சொல்லற்ற ஆழத்தில் மலர்ந்து சுடரென்றாகி விழிகளை மூடி ஊழ்க உடல் அமர்ந்தான்.
அப்பொழுதில் அவன் வாயில் உதித்த சொற்கள் மானுடம் என்றைக்கும் திகைத்து வழிவிடும் மாபெண்மையின் முதல் இருப்பை வணங்கித் தொடங்கியது. மடிமுட்டி உறிஞ்சும் கன்றின் வாயில் மொழிப்பால் சுரந்தது. மொழியே நீ அன்னையென்றாவது கவியின் அகத்தினிலே என நெஞ்சு விம்மியது. மானுடரில் தெய்வமென்றெழுந்த பெண்ணே முதற் கனவென்று சுட்டியது. முதல் விழைவென்று கண்டது. முதற் பரிவென்று அறிந்தது. அங்கிருந்தே புடவியை ஆளும் குன்றாத பேராற்றல் மானுடருக்கு அளியெனக் கொடுக்கப்பட்டது என வரலாற்றை உய்த்தது. பின் ஒவ்வொரு காலங்களும் மடிந்து பிறக்கும் போது காலமும் அன்னையே எனக் கண்டு திகைத்தது. அன்னையென்று ஆவதே வாழ்வென்று பாடியது. காதலில் தோன்றும் பெண் தாய்மையின் ஆழிசேரும் நீர்ச்சுழல் முனையென்று பரவசம் கொண்டது. ஆனாலும் அன்னையென ஒவ்வொரு பருவத்திலும் நிற்கும் குழவிப் பெண்ணை இளஞ் சிறுமியை தளிர் மடந்தையை இளங் கன்னியை முதல் முலை கொடுத்த மாதை நடுவிளம் முதிர்ந்தவளை முதிர்ந்து கனிந்தவளை ஒவ்வொருவரிலும் ஒருபடி மேலாயும் ஒவ்வொரு படியிலும் நிகராயும் தாய்மை தோற்றும் மாயத்தைச் சொல்லால் எப்படிச் சொல்வேன் எனப் பதைபதைத்தது. எச்சொல்லும் பிழையென்றே தோன்றியது. பெண்டிரே என்னை ஆள்க. என்னைக் கைவிடாது காக்க. என்னைப் பரிக. என்னைக் கனிக. என்னைக் காதலிக்குக. என்னைக் களித் தோழனாக்குக. என்னை மடிசேர்த்துக் குழல் கோதுக. என்னை மகவென்று தாங்கிக் கொள்க எனச் சொல்லிக் கொண்டே இடையில் குரலறுந்து இடறி விழிவீழ் கண்ணீராய் மிகுதிச் சொல்லை உகுத்தான். அவர்கள் ஒவ்வொருவரும் அச்சொல்லை என்றைக்கும் அறிந்தவர்களென மேலுமொருமுறை சொல்லப்படுகையில் அச்சொல்லாய் நிகர் நிற்கும் விழிநீரைத் தீராது கொண்டிருப்பவர்களென அவனைச் சுற்றிலும் அமர்ந்திருந்தார்கள். பெண்ணால் காக்கப்படுபவனைத் தெய்வங்களாலும் வெல்ல முடியாதென்றது அம்மெளனம்.