86: அதியா

86: அதியா

“இது கலிமுற்றி ஊழிமுதல்வன் எழுங்காலமென எரிவிண்மீன் ஆகாயத்தில் தோன்றிய அன்றே காலக் கணியர்கள் வகுத்துவிட்டனர் அங்கினி. நாம் காணும் அனைத்துக் களியும் ஊழியின் தாண்டவத்திற்கான ஒத்திகையே” என்றார் ஆடற் சித்தர். களியிரவில் அரவொன்று தன்னை உற்றிருப்பதைப் போல் மெய்ப்புக் கொண்ட அங்கினி காட்டு வாயிலில் நுழைவதற்கு முன்னரான வளைவில் பெருந்தேக்கமரத்தின் பின்னால் அழுங்கெனப் பற்றி நின்ற தேகனைக் கண்டாள். அவள் இரு தேகங்களை என்றைக்குமாக நினைவிலும் கனவிலும் சுமப்பவள். ஒருவர் இளங் காதலன் என்று களிமயக்குக் கொண்டிருக்கும் வேறுகாடார். மற்றையவர் காமத்தின் முதல் ஆசிரியர் என அமைந்த ஆடற் சித்தர். ஒரு பொழுதே கூடினாலும் அவளிடம் எழும் ஒவ்வொரு மயக்கின் உச்சத் தொடுகையில் காணும் உவகையைச் சொல்லால் அளித்து அவளை மீட்டவர் அவரே. அவளுடைய அகம் கரந்து வைத்திருக்கும் மந்தணக் காமமும் அவரே. அவரது விழிகள் அவளைத் தொடுகின்றன என அறிந்த போது இருளில் நின்றிருக்கும் அத்தேகம் உறுவதும் விழைவதும் அவளுக்கு அக்கணம் வியப்பாய் எழுந்தது. இத்தனை பருவங்களுக்குப் பின் அவர் அவளிடம் வந்திருக்கிறார் என எண்ணிய போது அறியாத ஆழத்தில் ஊற்று நீர் நலுங்குவதை உணர்ந்தாள்.

மனை சென்று இருநாழிகை கழிந்த பின்னரும் அவர் உற்று நின்ற எண்ணங்கள் அவளில் கற்பாதையில் விழுந்து இமைக்கணத்திற்குள் பல்லாயிரம் முறை சிந்தி வெள்ளித் துள்ளல்களென எழுந்து களிகொள்ளும் மழைச் சிதறல்கள் போல் மயக்காடியது. வேறுகாடார் அயர்ந்து வாய் கோணி உறங்கத் தொடங்கிய போது எழுந்து நீராடி மெல்லாடை பூண்டு புதிதென இளமை கொண்ட இளம் பெண்ணெனக் காட்டுப் பாதையால் நடக்கத் தொடங்கினாள். அவர் அங்கு இருப்பாரா இல்லையா என எந்தக் குழப்பமும் அவளில் எழாததைக் கண்டு அவளே சிரித்துக் கொண்டாள். இரு மான்கள் இணை கொள்ள ஒன்றையொன்று பின்னலைவதை வழியில் கண்டவள் உதட்டில் குமிழ்ந்த புன்னகையுடன் வழி சென்றாள். நெடுந்தேக்கருகில் எவருமில்லை. தொலைவில் களிக்கென எழுந்த பேரோசைகளும் மானுடக் கூச்சல்களும் பல்லாயிரம் விலங்குகள் ஒருபொழுதில் மதமேறி ஆடுவதைப் போல் கேட்டுக் கொண்டிருந்தது. நீண்ட தண்டொன்றில் முதலையொன்று படுத்திருக்கிறதென எண்ணியவள் மெய்க்கணத்தில் அது அவரே என எண்ணி நாணங் கொண்டாள். எங்கிருந்தது இத்தனை காலமென்று அறியாத அணியொன்று அவளில் எழுந்து நாணமென்றாகியது. இருளில் பூச்சிகளின் ஒலிகள் அருகிலெனக் கேட்டன. நிலவின் ஒளிக் கூர் வாள்கள் பாய்ந்த மார்பைப் போல் வனம் ததும்பியது. தேக்கிலைகளில் வழிந்த இருள் ஓர் இலைக்குடையென மண்ணின் இளம் தழை புற்களின் மேல் விரிந்திருந்தது. அவரை நெருங்க நெருக்க அவளது அகம் படபடக்கும் முறமென அடித்துக் கொண்டது. ஆடற் சித்தர் தண்டில் எழுந்து அமர்ந்தார். அங்கினி அருகில் சென்று கைகளை முன்கோர்த்து தகிக்கும் தீ நெய்த்திரியை நோக்கி நீள்வதென ஒசிந்து நின்றாள். அவளது முலைகள் குளிர்ந்து காம்புகள் பனித்துளிகள் புல் நுனியிலெனத் தூங்கின.

ஆடற் சித்தர் எழுந்து புற்தரை மேல் ஏழடுக்காய்ச் சுற்றிப் பந்தமாக்கப்பட்ட தன் வெண்ணாடையை அவிழ்த்து விரித்தார். இருளில் குழைந்து உருகும் கருமெழுகென மெய்மேனி தோன்றியது. வெண்குழல் மட்டும் புரவியின் பிடரிச் சிலுப்பலென காற்றில் உலைந்து அமைந்து ஆடிக்கொண்டிருந்தது. அங்கினி அவர் தேகத்தையே நோக்கியிருந்தாள். எழமுடியாமல் சிலைக்குள் அமர்ந்திருக்கும் தெய்வமென.

ஆடற் சித்தர் விரித்திருந்த ஆடையின் மீது அமர்ந்து கொண்டார். விண்மீன்கள் துமிப்பவை போல் வானில் முட்டிக் கொண்டிருந்தன. சிறிய நீலக் கற்கள் போல் பொன் மூக்குத்தியைப் போல் தீக்கயிற்றில் விசிறிய துளிகள் போல் அவை ஆடுவதை ஆடற் சித்தர் நோக்கினார். அங்கினி அருகமர்ந்தாள். ஒரு சொல்லும் நாவிலெழாது தவித்து எச்சில் கரைவதை மட்டும் நோக்கியிருந்தாள். ஆடற் சித்தர் அவள் விரல்களைத் தொட்ட போது சிலையிலிருந்து மயக்கெழுந்த தெய்வம் பூசாரியில் ஏறியதைப் போல் உடலில் ஆவியொட்டி அவரை நிமிர்ந்து நோக்கினாள். கனிவில் தழையும் இதழ்கள் சற்றே விரிந்திருந்தன. அந்திக் களிக்கென மேனியில் பூசியிருந்த நறுமணங்கள் குளிரில் எழுந்து மிதக்கத் தொடங்கின. கூந்தலின் சிறு வெண்நரைகளும் அவரைப் பார்க்கின்றன என எண்ணமெழ உதடுகள் ஒட்டிக்கொண்டு அவரை “ஏன்” என்பது போல் விழிகள் நெரித்து நோக்கினாள்.

“அங்கினி” என அவள் பெயரை முதன் முறையாய் அவர் உச்சரிக்கக் கேட்ட போது தேகத்தின் அத்தனை மயிர்களும் எழுந்து அவரைத் தொடுவென ஆர்த்ததை அடக்கிக் கொண்டாள். பதிற்சொல் எதுவுமின்றி அவளது தேகம் உருகிக் கொண்டிருந்தது. ஆடற் சித்தர் அவளது மெளனத்தைத் திறப்பவரென “என் வாழ் நாள் முழுவதும் நானறியாத தெய்வங்களுக்கு என்னை ஒப்புக் கொடுத்திருந்தேன். என்னைத் திசைக்கொன்றாய் இழுக்கும் விசைகளிடம் என்னைக் கைவிட்டிருந்தேன். எனது இச்சைகளை எரித்து அதன் மேல் ஆடிடும் தேகனென இறுமாந்திருந்தேன். எண்ணுந் தோறும் அகத்தைக் குலைப்பது காமம். நீங்கிவிட எளியது எனத் தோன்றும் மாயை. பசியும் தாகமும் ஆதரமானவை. காமமோ கட்டுண்டு அழியக் கூடியது என எண்ணியிருந்தேன். உன்னைக் கூடிய பின் இன்று வரை நோன்பெனக் காமத்தை வளர்த்திருந்தேன். எத்தனை பருவங்கள் பெயர்ந்து சென்ற பின்னும் முதுமரத்தில் அப்பருவங்களின் நினைவுகள் எதுவோ ஒன்றாக ஒவ்வொரு கணமும் எஞ்சுவதைப் போல நம்மிரவு என்னில் எங்கும் இருந்தது. தூய காமமே நமக்கிடையில் என எண்ணியிருக்கும் தோறும் தேகம் தன்னை அடக்கிக் கொள்கிறது. பற்று மானுடரை புவியில் நிலைக்கச் செய்யும் பெருங்கயிறு. மாபெருந்தேரைப் பல்லாயிரங் கரங்கள் அணைத்துச் செல்வதைப் போல விழைவைப் பற்றுகள் நீட்டிக்கின்றன.

உனது காமம் முற்றா இளமையில் விருந்தென எனக்கு அளிக்கப்பட்டது. அன்று நான் சொல்லிய சொற்கள் நூல்களில் எழுந்தவை. காவியங்களில் பயின்றவை. நானும் அச்சொற்களை முழுதறியேன். இளைய நிலத்திலென எறியப்பட்ட விதைகளென அவை உன்னில் விழுந்திருப்பதை அறிவேன். உன்னைத் துயிலில் காண்கையிலெல்லாம் துயில் மானுடருக்கு எத்துணை அருங்கொடையெனப் புலரிகளில் எண்ணியிருக்கிறேன். எவருமறியாத மந்தண வெளி. அங்கு நான் எதை விழைகிறேனோ அதை ஆயிரம் பெருக்காக்கி அகம் ஆடிக் களிக்கிறது. மயில்களில் தோகையெனவும் அகவலெனவும் உன்னைக் கண்டேன். கேட்டேன். மானுடர் காதல் கொண்டு கரைகையில் அவர்களைக் கலமேறிச் செல்லுக என ஊக்கினேன். நான் இளமையில் துறவு பூண்டவன் என நீ அறிவாய். எனது துறவே என்னை அடைக்கும் தாழென்றாகியது.

மானுடரில் ஒருவர் துறவடைந்து விழைவு நீங்கிச் செல்வதை ஒரு பரிசோதனையெனக் குடிகள் நோக்குகின்றனர். அவர் பழுதின்றி நிலைக்க அனைத்தையும் ஒருக்கியளித்து முழுவிழிகளாலும் நோக்குகின்றனர். நான் எதையும் சொல்லால் அறிந்தவன். சொல்லவிந்து சிவம் ஏகச் சென்றவன். முற்றழியா விழைவுகளை வெல்லும் வழிகள் அறியாது திரும்பியவன். போர் புகுந்தவன். உயிர்ப்பலி கொண்டவன். அரசு சூழ்கைகளில் அமர்ந்திருந்தவன். நெறிகளைக் குடிகளுக்குப் போதிப்பவன். மந்தண அவைகளில் தந்திரங்கள் உரைப்பவன். அறங்களைக் காக்க எண்ணிப் பிறருடன் மோதிக் கொண்டும் அதை மெய்யென்று நானே நடித்தும் வாழ்பவன். ஆனால் ஆழுள்ளத்தில் நான் கரந்த விழைவுகள் ஆயிரம் குழவிகள் ஈன்ற பெருநாகமென வளர்ந்திருக்கிறது. நான் அறியும் என் அகம் நான் நடிக்கும் என் வேடமல்ல என முதிர்ந்து உதிரும் முதுமரமென என்னை உணர்கையில் அறிகிறேன்.

விழைவு கொள்க இளையோரே என அகம் கூவுகிறது. வாழ்த்தென அளிக்கிறது. குற்றங்களை மன்னிக்கவில்லை. மறந்து விடுகிறேன். அவற்றுக்குக் காலவெள்ளத்தில் என்ன மதிப்பிருக்க இயலும். இக்கணம் இப்புவியில் எவர் மேலோர் எவர் கீழோர் என வகுக்க நான் யார். என்னில் நான் அடக்கிய விழைவுகளே என் செயல்களும் சொற்களுமென்றாகி உறைந்த பாறைகள் போல் என் முன் எழுந்து நிற்கின்றன. திரும்பிச் செல்ல வழியில்லாமல் நானே உடைத்து வீசிய வழியை ஏக்கத்துடன் திரும்பிப் பார்க்கிறேன். பெரும் உயரத்தில் தொங்கும் பரணுக்குச் செல்லும் ஒற்றை வழி அது.

மானுடர் செல்ல விழையாத உச்சமென நின்றிருக்கும் ஞானத்தில் அமைய எண்ணியவன் நான். அவ் எண்ணமே ஒரு பெரும் ஆணவமல்லவா. ஆணவம் பேருருக் கொள்கையில் இளமை துறவைத் தேர்கிறது. வாழ்ந்தறிந்து கடக்காத மெய்மையால் பயன் விளைவதில்லை. அதன் சிடுக்குகளை எளிய சொற்களால் அவிழ்க்க இயல்வதில்லை. அவிழ்க்க அவிழ்க்க கூடிக்கொண்டே செல்லும் முடிச்சுச் சுருளே என் ஊழ்கம். கனிவை எத்தனை முறை நடித்தாலும் எளிய குடிகள் கொள்ளும் மெய்யான கனிவை வெல்ல இயலுமா. என் ஆணவம் பல்லாயிரம் முறை ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நாழிகையிலும் புண்பட்டுக் காய்ந்து தேகமாயிருக்கிறேன். என் அகப் பிலவில் நானறியாத தொல்விலங்கொன்றின் மூச்சை ஒவ்வொரு கணமும் நாசியருகிலென உணர்கிறேன். எனது அத்தனை பாவனையும் என்னையே வீழ்த்தும் கணைப்பெருக்கென அறிந்தேன். நான் களத்தில் கொன்ற மானுடக் கொலைகள் எத்தனை பெரியவை எனப் பாணர்கள் சொற்களில் நீ கேட்டிருப்பாய். மெய் நாடிச் சென்றவன் கொல்களத்தில் குடித்தாடிய குருதியை எப்பொருளால் விளக்குவது. போரே என் மஞ்சமெனக் கொண்டேன். குருதியே நான் விழையும் மதனம். கொன்றாடுதலே கலவி. கொலைக்கெனக் காத்திருத்தலே பிரிவு. சங்கெடுத்து ஊதிப் போரை அழைக்கையில் காதலின் பாடல்.

செயல்களும் அவற்றுக்கு நாம் அளிக்கும் பொருள்களும் முற்றிலும் வேறு தெய்வங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. அவை தம் சொந்த நாடகங்களை நம்மில் எழுதி ஆடிக் கலைத்து வெறிச்சிரிப்புடன் நம் தோள் மேல் ஏறி அமர்கின்றன. என் தோள்கள் கனக்கின்றன அங்கினி. உன்னிடம் இல்லையேல் எவரிடமும் என்னால் காமத்தை விழைய இயலாது. நான் காமுற்றுத் தொடும் பிற பெண் என்னை வணங்குபவள். அவளை நான் எங்கனம் கூடுதல் இயலும். தெய்வமென்று அமர்ந்திருக்க வெறுத்த தெய்வமொன்று மண்வந்து சாபங் கொண்டு தெய்வமென்றே வாழும் நிலையில் நிற்கும் இவ் வாழ்க்கையில் எனக்கு அளியெனக் கொடுக்கப்பட்ட ஒரே வரம் நீயே. என்னில் பெருகும் காமத்தின் கொல்கரங்கள் உன் முன்னே பணிகின்றன. என்னை மீட்பாயா” என்றார் ஆடற் சித்தர்.

பேரருவியொன்று மாபெரும் சிகரத்திலிருந்து வீழ்ந்து கொண்டிருப்பதை நோக்கிக் கொண்டு மெய்யகன்று துளித் துளியாகி வீழ்ந்து கொண்டேயிருப்பவள் போல அங்கினி அவரது சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவரது அகம் சென்று தொட்ட இம்மையின் துயர்களில் நுழைந்து மீண்டாள். தானே தனக்கு வரைந்து கொண்ட வேடத்தில் சிக்கிப் போதமழிந்த கூத்தனென அமர்ந்திருந்தவரை நோக்கிய போது அவளில் விழைவு எழவில்லை. காற்றூதிய அகற் சுடரென நீங்கியிருந்தது விழைவு.

“சித்தரே. உங்களை நான் சந்திக்க விழைந்து வந்த போது என்னில் இளம் பெண்ணென எழுந்து காமம் அலையடிப்பதைக் கேட்டு வந்தேன். என்றோ உங்களுடன் கலவி கொண்ட நினைவின் அடுத்த நாள் புலரி இதுவென எண்ணினேன். காலம் மயக்கிடையில் தொலைந்திருந்தது.

ஆனால் உங்களுடைய சொற்களைக் கேட்டுக் கொண்டே நானறியாத துயர் வெளிகளில் கைவிடப்பட்டவள் போல் உணர்கிறேன். காலம் எத்தனை அரிய செல்வம். இக்கணம் உங்களுக்கு என்னை அவியெனக் கொடுக்கும் சித்தம் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னில் விழைவு எழவில்லை. காமம் துடிக்கவில்லை. இது எதனால் என்பதை இன்றிருக்கும் அங்கினி சற்றே அறிவாள்.

சித்தரே. ஆணின் துயர் அறிந்த பெண் அடுத்தகணமே அன்னையென்றாகுபவள். உந்தி சுமந்து மகவீன்றவள் இல்லையெனினும் நான் அதை அறிவேன். ஒவ்வொரு பெண்ணையும் போலவே. உங்களில் நீங்கள் சூடிக்கொண்டிருக்கும் துயர்கள் அனைத்தும் பொய்யே என நீங்களே அறிவீர்கள். அனைத்துக்கும் அப்பால் மேலெழுந்து காலங்களை நோக்குபவர் நீங்கள் என்ற குடிச்சொல்லை இப்போது நினைத்துக் கொள்கிறேன். மானுடரின் தீராத துயர்கள் பெருகிய போது உங்களில் விசை கொண்டு எழுந்து குடிகாக்கவென எழுந்தது நீங்கள் அடக்கிக் கொண்ட உங்களின் விழைவுகள் என எண்ணிக் கொள்வது பொருளற்றது. அங்கனமே உலகில் அனைத்தும் ஆற்றப்படுகின்றன. அனைவரும் கூடியளிக்கும் பொருள்கொண்ட அனைத்துப் பெருஞ் செயல்களும் ஆயிரமாயிரம் எளிய விழைவுகளின் மேல் ஆர்த்தெழும் சிறுமலர். நீங்களோ நீலரோ கூட அம்மலரின் இதழ்களை ஆர்க்கும் சிறு அலைகளே. ஆனால் எளியவர்களை விடச் சற்றுப் பெரிய அலைகள். அலைகளை ஆர்க்கும் விசைகளைக் கொண்டவர்கள். நீங்கள் தாங்கும் மலர் கூட அங்கேயே தான் மலர்ந்திருப்பது. அவ் உயரம் வரை குடிவெள்ளத்தை இழுத்துச் செல்லவே உங்களின் விசைகளைக் காலம் பயன்படுத்தியிருக்கிறது. நீங்கள் காலத்தின் படைக்கலன் மட்டுமே.

நீங்கள் புலிகளில் இணைந்து போர் சென்று வென்ற களங்களின் பாடல்களில் ஒவ்வொரு சொல்லிணைவிலும் அன்று என்னுடன் நீங்கள் கூடுகையில் அடைந்த அதே உவகையின் தாளத்தை அச்சொற்களில் மீள மீளவெனக் கேட்டேன். உருகி அழிந்தே உவகை கொள்ளும் மானுடராலேயே குடிகள் காக்கப்படுகின்றனர். சொல்லாய்த் தருக்கி நீங்கள் களம் புகாதிருந்தால் என்றோ இப்போர் அதன் முழுவிசையை அடைய முடியாது போயிருக்கும். விடுதலை என்பது தனி அகத்திற்கானது மட்டுமல்ல. அது குடிகளுக்கெனவும் உயிர்களுக்கெனவும் எழுகையில் யோகமென்றாவது என நான் கேட்டிருக்கிறேன். அதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள் அறியாத நூற்சொற்கள் எதையும் நான் இங்கே சொல்லப் போவதில்லை. ஆனால் துயர் மிகுகையில் எவரோ மானுட வடிவங் கொண்டு அதை மீள உரைக்க வேண்டியிருக்கிறது. தற்செயலாய்க் கேட்ட எளிய குடிச்சொல்லால் ஞானமடையும் அரசரைப் போல” என்ற அங்கினி அவரது தோள்களில் கைவைத்து மடியில் சாய்த்துக் கொண்டாள். அவள் தொடைகளில் தலை வைத்தவர் விம்மிச் சரிந்து தோள்கள் மெல்லக் குலுங்க அழத் தொடங்கினார். எத்தனை காலம் பிந்தைய அழுகையோவென எண்ணத் தொடங்கியவள் அவரது வெண்குழலைக் கோதிக்கொண்டிருந்தாள். அரை நாழிகை மெளனம் படர்ந்து இருவரும் அதில் ஒன்றியிருந்தனர். எங்கிருந்தோ அச் சொற்களை எடுப்பவள் போல் கானகத்தின் இருளை நோக்கி விழியிருத்திய அங்கினி அவளின் நனிகுரலால் சொல்லெடுத்தாள்.

“நாம் எளிய குடிகள் சித்தரே. எங்களின் கனவுகளும் தீரங்களும் விழைவுகளும் நாம் எளியவர்கள் என்பதால் சூடிக் கொண்டவை. விலக்கப்பட்டவர்கள் கொள்ள விழையும் பெருங்களி எதுவென நான் அறிவேன். குடிகளால் பரத்தையென விலக்கப்பட்டு பெண்களால் காமுகிகள் எனத் தூற்றப்பட்டு வீதியால் செல்கையில் ஆடவரால் விழிபுணரப்பட்டு எங்கும் எப்போதும் வரக்கூடிய கொடுகாமுகன் ஒருவனின் முன் கண்ணீர் கசிய மன்றாடிக் கொண்டு எத்தனை காலங்களை நான் கடந்திருக்கிறேன். ஆனால் அனைத்தையும் உதிர்த்து நான் எழுவதன் காரணம் எளியது.
நான் எளியவள் என்பதே அதன் முதற்காரணம்.

எளியவள் கொள்ளும் பகைமை. வஞ்சம். தீராத காந்தல். என்னை இங்கனம் ஆக்கிய விசைகளுடன் பொருதும் விழைவு. தெய்வங்களைக் கேலி செய்து அவற்றின் முன் என்னை நான் வென்றமரும் கணங்கள் அளிக்கும் உவகை. இவையே என்னை எளியவள் இல்லையென ஆக்குபவை. இவற்றை நான் கைவிட விழையவில்லை. யாரால் எழுதப்பட்டது என் கதை என நான் நோக்கவில்லை. இங்கு நான் விழையாதவையும் நிகழக் கூடிய சூது ஆடப்படுகிறது. அதன் முன் நாணியோ தயங்கியோ அஞ்சியோ விலக்கமுற்றோ நான் ஒழியப் போவதில்லை. கடைசி நஞ்சையும் உமிழ்ந்த பின்னரும் நாகம் நாகமே. நஞ்சு அதன் உள்ளூறுவது. பிறவற்றால் கட்டுண்டு கிடக்கும் வாழ்வு நம் அகத்தால் திறந்திருக்கிறது. நான் விழைவதை முற்றளிக்க முடியாத குடிகளினதும் தெய்வங்களினதும் முன்னே நான் விழைவதைச் சூதாடிக் கரந்து களவு கொண்டு அடைவதை என் அறமெனச் சூடுவேன். அனைத்தும் நிகரென அளிக்கப்பட்ட வாழ்க்கைகள் புவியில் நிகழும் வரை கரவும் களவும் அறமே” என்றாள்.

சொல்லிச் சொல்லிச் சொற்களாக்கி அவள் அவரது துயரைக் கடந்து வெளியேறினாள். அவர் விழைவதை அவருக்கென மட்டுமல்லாது தனக்கெனவும் அவள் அடைகையிலேயே அவர் விழைவதும் நிகழுமென அறிந்தவள் அவள். இத்தனை காலம் அவள் அறிந்து கடந்த உடல்களிலெல்லாம் எது சொல்லென எழுந்ததோ எது பொருளெனெக் கரந்ததோ எது மந்தணமெனத் திகழ்வதோ அதுவே மானுட இயற்கை என எண்ணிக் கொண்டவள் அவரது முகத்தைத் திருப்பி வெண்நுரையென நீண்டு மார்பில் விரிந்திருந்த தாடியைக் கோதினால். மார்பின் வெண்புற்களை அளைந்தாள். அவரது காம்புகளைத் தொட்டு நலம் விசாரிப்பவள் போல் நுணுக்கித் தடவினாள். ஆடற் சித்தரின் மேனியில் மெய்ப்புல்கள் எழுவது சிந்திய நிலவின் சாறொளியில் துலங்கியது. சுருண்டிருந்த அவரது நாகம் விழித்து மெல்ல மேனியெழுந்தது.

“நீ என் கனவு” என்றார் ஆடற் சித்தர். “நீங்கள் என் வரம்” என்றாள் அங்கினி.

*

நள்ளிரவின் இரண்டாம் நாழிகையில் போர்க்களம் ஓய்ந்திருந்த வெண்ணாடையின் மேல் ஆடற் சித்தரின் மார்பில் சிறுதுயிலின் பின் விழித்த அங்கினி அவரது மூடிய இமைகளுக்குள் நிலையில்லாது ஆடும் விழிமணிகளை நோக்கினாள். குளிர் பரந்து அவர்களை அணைத்துக் கிடந்தது. உலர்ந்த இரண்டு எரிவிறகுகள் போல் விடைத்திருந்த தேகம் இன்னொரு கலவிக்கெனத் திறந்திருந்தது.

“இப்போது நீங்கள் நிலையில்லாது உலைவது எதனால்” என்றாள் அங்கினி. அவரது முதுவிரல்களால் அவளின் சிரசைத் தடவிக் கொண்டே மின்னிக் கூர்ந்திருக்கும் விண்மீன்களையும் அப்பால் எங்கோ முடிவின்றி ஒலித்துக் கொண்டிருக்கும் கூச்சல்களையும் இசைக் குலைவுகளையும் கேட்டபடி நீள்மூச்செறிந்தார்.

“வானில் தோன்றிய எரிவிண்மீன் பற்றி எண்ணிக் கொண்டிருந்தேன். ஊழியின் முதல்வன் ஆடலைத் தொடங்கும் காலத்தில் அத்தகைய சுடர் கொண்ட எரிவிண்மீன் அந்தி வானில் சரியும் என்பது முதுசித்தர்களின் வாக்கு. எதுவோ ஓர்
அழிவு இம்மண்ணில் நிகழவிருக்கிறது. அது இதுவரையான காலக்கோட்டை அழித்து வேறொரு இடத்திலிருந்து ஆடலைத் தொடரும்” என்றார் ஆடற் சித்தர்.

“இம்மண்ணில் பேரழிவுகள் நிகழாத காலமொன்று உள்ளதா சித்தரே. பருவங்கள் பெயர்வதை விட வேகமாக அழிந்து கொண்டிருக்கிறோம். போரை விடப் பெரிய அழிவு நிகழ முடியுமா” என்றாள் அங்கினி.

“அழிவென்பது உயிரழிவு மட்டுமல்ல அங்கினி. ஊழிகள் முடிந்து யுகமடிப்புகள் திறந்து விரியும் பொழுது அதியா எனும் மலர் புடவியில் மேலுமொரு இதழ் கூடி மலர்கிறது என்பர். ஆடலிறையின் மார்பில் சூடியிருக்கும் அம்மலர் அழிவினால் பெருகும் இயல்பு கொண்டது. மானுடப் பேரழிவுகளின் பின்னரேயே பேரறங்கள் மீண்டும் தழைத்து சொல்லும் காவியமும் ஆகி குடிகளை ஒரு அடுக்கு மேலும் விரிக்கிறது. அதன் சுட்டு மலரே அதியா. இங்கு நிகழப்போவது எதுவென நான் அறியேன். ஒற்றைச் சிறு மாறுதலும் அழிவும் கூட உலகின் விசைப்பெருக்கில் பெருமாற்றங்களை நிகழ்த்தும். அதியா இதழ் விரிக்கும் பொழுது எழும் ஓசையில் எரிவிண்மீனொன்று எரிந்து வீழும்” என்றார் ஆடற் சித்தர்.

துயில் வந்து சரித்த இமைகளை ஊன்றித் திறந்து கொண்டே “இக்கனவுக்குப் பின் புடவியே ஒழிந்தாலும் ஒரு பொருட்டில்லை சித்தரே. என்னைக் கூடி என் துயிலின் கனவுகளை எழுப்புக” என்றாள்.

உலுக்கும் விசையைத் தன்னில் உணர்ந்தவர் அழிவின் முன் ஆடும் காமமே மானுட உச்சங்களில் முதன்மையானது என எண்ணினார். புடவி முழுதும் அடுத்த புலரியில் ஒற்றைச் சொடுக்கில் அழியப் போகிறது என மானுடர் அறியுங் கணத்தில் என்ன நிகழும். எவரும் மீளாது ஒழிவார் எனும் தருணத்தில் ஊழியின் முதல்வன் ஏனெழுந்து ஆடுகிறான். அவனில் ஏன் பித்துக் களிச் சிரிப்பு எழுகிறது. அவன் ஏன் இருளின் வடிவினனாய் வருகிறான். அவன் ஏன் உயிர்களுக்குக் காமம் அளித்தான் என எண்ணி எண்ணி அங்கினியைத் தூக்கி அழிவின் பேராடல் முன் புணர்ந்து கொண்டே எரிந்தழிய விழைபவர் என யோகம் முற்றறிந்த திளைப்பில் முதற் சூடும் புன்னகை முடிவிலாது நீடிப்பதைப் போல் அவளைப் புணர்ந்தாடினார்.

முக்கண் முதல்வனே என் களியைப் பார் என வெறிக்கூச்சலுடன் ஒரு தொல்மானுடன் அவரில் எழுந்து அழிவின் நிகரிலா ஆற்றலுடன் புரண்டான். திகைத்தான். முழுமுதல்வனாய் முற்றெழுந்தான். அங்கினி புலரியின் பறவையோசைகள் எழுவது வரை உச்சத்தில் நீண்ட நாகத்தின் வாலெனத் துடித்துக் கொண்டேயிருந்தாள். வனத்தின் முதற் புள் எழுந்து புலரியைச் சொல்லி வானில் பாடியது அன்று தான் புலரியை முதற் கண்டுற்றதைப் போல.

TAGS
Share This