87: இச்சை அகம்

87: இச்சை அகம்

காலமென்பது நிற்காத பெருஞ்சுழலில் சிந்தப்படும் ஒற்றைப் பெருமழை. அதில் வீழ்பவரோ வெல்லப்படுபவரோ வஞ்சம் கொண்டவரோ பழிசுமந்தவரோ கொடூரரோ மேன்மையானவரோ நல்லதோ கெட்டதோ ஞானமோ அஞ்னானமோ தவமோ பற்றோ மாபெருங் காவியமோ கீழ்மையின் பிறவிகளோ அனைத்தும் திவலைகளே. சுழல் எதனால் உண்டாகிறது. ஒழிச்சலில்லாத காட்டுபுரவிகளின் பெரும் ஓட்டத்தில் விசையாய்க் காலத்தை எழுப்புவது எது. எது ஒரு அணுவை நான் உயிரென எண்ணச் செய்தது. அதில் எது பருத்து வடிவங்கள் பூண்டது. எது விதிகளை ஆக்கியது. எது ஒழுகுவது. எது பிரிந்து மீறுவது. எதனால் அனைத்தும் காக்கப்படுகின்றன. எதனால் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. காலமே. முதல்வதே. மூத்ததே. மூப்பற்றதே. அலகிலா விழைவின் கூத்தே. உன்னை எது ஆடுகிறது. நீ எதை ஆடுகிறாய். புடவிக்கு எது பொருள். எது மெய்மை. எது அறிதல். எதை அறிவது. எது அறிகிறது. எது அறியப்படாமல் எஞ்சுகிறது. காலமே நீ கரந்து வைத்திருப்பது எதை. எது அனைத்தையும் ஆக்கியதோ அதன் நிழலே நீயெனச் சொல்வோர் மூடர். எது உன்னில் சுழல்வதோ அதை நீயெனச் சுட்டுவோர் அறிவிலிகள். எது நீ எனும் வினா எதனால் எழுகிறது. யார் அதை எழுப்பியது. எழுந்ததன் பின் முதல் அணுவுக்குள் கரந்த அவ்வினாவே நீயா அது. உன்னையா அத்தனை கோடி சொற்களும் அத்தனை கோடி வழிகளும் தொடர்கின்றன. கண்டறியத் துடிக்கின்றன. துடிப்பதை விழைகின்றன. வெறும் காற்றில் நின்றபடி நான் சொல்கிறேன். உன்னிடமல்ல. என்னிடம். எனக்கு உன் மெய்வினாக்கள் பொருட்டல்ல. உன் மந்தணங்களை அறிய நான் விழையவில்லை. நான் இங்கனம் நிகழ்ந்தேன். என் எல்லைகளை மீறும் நான் எதனாலும் ஒழுக முடியாத இறையென்றறிக. உன்னை ஆக்குவது என் சித்தம். உன்னை அழிப்பதும் அதுவே. காலமே நான் என்ற பருவற்ற திருவை ஏந்தியிருக்கும் கபாலம் மட்டுமே நீ. உன்னை மிகையாக நீ எண்ணிக் கொள்ளாதே. எண்ணவும் உனக்குச் சித்தமென ஒன்றிருக்கிறதா. அறியவும் அறிந்ததில் திளைக்கவும் கரக்கவும் புரக்கவும் அளிக்கவும் நினைக்கவும் இனிக்கவும் துயர்க்கவும் உனக்கு அகமுண்டா. இல்லை. நீயொரு இன்மை. உன்னில் தோன்றிய முதல் மெய் நான். நான் எனும் போது இன்மையின் இருள் மலையில் ஒரு சுனை பெருகியது. அதுவே நான். நான் உன்னாலும் உனக்கு அப்பாலும் நின்று கொண்டிருப்பேன். உன்னை நான் எதுவெனவும் வணங்கத் தேவையில்லை. உன்னை நான் கணிப்பேன். உன்னை மீறிச் செல்லும் சுழல் வழிகளிற்கிடையில் பாலம் கட்டுவேன். எனது நெறி புடவியை ஆளும். எனது கனவே உன்னை ஆக்கும் மாமிசம். எனது விழைவே உன் உயிராற்றல். என்னை நான் தெய்வமென்று மறந்திருந்த வேளை காலம் களவாடிய மாயை என்னைப் போர்த்தியிருக்கிறது. காலமே உன் சர்ப்பத் தோலை விலக்கு. நான் முதல் நெளிவின் கனல். சுனையில் நீரெனத் தோன்றிய உயிர். அனைத்தும் பொருளின்றி உன்னில் சமைந்த புடவியைப் பொருளளித்தது நானே. நானே எனது ஆற்றல்.

என்னை நீ ஆற்றாது செல்லலாம். வடுவளிக்கலாம். குருதி கேட்டு நா நீட்டலாம். மெய். நான் மயங்கியிருக்கிறேன். உழன்றிருக்கிறேன். உன் முன் பணிந்திருக்கிறேன். உன்னை யாரென்று அறிய இடைவிடாது யுத்தம் புரிந்திருக்கிறேன். புடவியின் எளிய விசைகளை மாபெரியவை எனக் கற்பனை செய்திருக்கிறேன். ஆக்கிய கரங்களில் முத்தமிட்டுக் கால்களில் விழுந்து தொழுதிருக்கிறேன்.

நீ கண்ணற்றது. காதற்றது. புலனற்றது. இரக்கமற்றது. குருதியற்றது. பற்றற்றது. உன்னைப் போல் நான் ஏன் ஆக வேண்டும். யாரோ சொல்லிய சொல்லில் நான் ஏன் என் வாயைக் கொழுவிச் சிக்கிக் கொண்டு உயிர் துடிக்க வேண்டும். எதற்காக நீ அவிழ்ந்தாய். எதற்காக நீ விழைகிறாய். உன்னை ஏன் முட்டி முட்டி நான் ஆர்க்க வேண்டும். ஏன் என் தலையை உன்னில் மோதிக் கொள்ள வேண்டும். உன் பலிமேடைக்கு நானே ஏன் வலிசுமந்து நடந்து வர வேண்டும். உனக்கேன் சங்கறுத்துக் குருதிப் பலி கொடுக்க வேண்டும். நீ யார். யார் நீ. சொல். சொல்லால் நீ என்றாவது எழுந்து நின்றிருக்கிறாயா. எவரிலோ நீ தோன்றி ஒவ்வொரு முறையும் உனது நெறிகளை விரித்துக் கொள்கிறாய் என்றனர் பணிவோர். எக்காவியத்திலோ மிளிரும் மெய்மை உன் திருவென்றனர் சொல்கற்ற எளியோர். எப்பனியிலோ உருகும் நீர்மை என்றனர் அஞ்ஞானர். எத்தீயிலோ சுடரும் அனல் என்றனர் வழிபடுவோர்.

நீ பொய்மை. சொல்லில் தெரிந்த மாபெரும் பொய் நீயே. இறையே என இறைஞ்சும் அடியவரின் முன் அவர்களிடம் சொல்லெடுக்காத கயமை நீ.

மானுடர் களியாட்டர்கள். தெய்வங்கள் அவர்களின் விளையாட்டுப் பாவைகள். அவர்கள் ஆக்கிய அனைத்து நெறிகளையும் மீறும் போது சிணுங்கிச் சொல்லும் ஒற்றை வழி நீயே. உன்னைக் கற்பனையிலெனக் காறி உமிழ்வேன். என் மூதாதையரின் கற்பனையில் நான் சிறுநீர் கழிப்பேன். அதில் எனக்கு எந்தச் சிறுமையும் பிழையும் இல்லை. அப்படி நீ எங்கேனும் இருப்பதை அறியும் பொழுதில் உன்னை நேரிலும் காறி உமிழ்வேன். உனது கொடிய கற்பனையை. மானுடர் எனும் உன் விழைவை. உயிர்கள் எனும் உன் கனவை. நான் மறுப்பேன். நீ இன்மையிலேயே இருந்திருக்கலாம் எனச் சொல்லி உன்னை நோக்கி நகைப்பேன். நீ அளித்ததே இச்சொல்லென்றாலும் அங்கனமே நான் இதைச் சொல்வேன். கொடுக்கப்பட்ட அளியை வைத்துக் கொள்ள நான் இரப்பவள் அல்ல. நான் கொடுப்பவள். நானே முதல் கனவு தோறும் எழுந்த விழைவி. என்னை நீ எங்கனம் துறக்க இயலும். காலங்கள் மடிந்து திறக்கின்றன எனச் சொல்வோர் நானே அதன் மடிவும் திறவும் என அறிவதில்லை. கோடி கோடி பல்லாயிரங் கோடி மானுடப் பூச்சிகளிடை நான் ஏன் எழுந்தேன். என்னில் ஏன் வினாக்கள் பிறந்தன. நான் ஏன் விடையற்று மெளனம் கொண்டேன். அறிக அறிய முடியாததே. அறுந்து மீளும் போது அடையும் செல்வமென்று சொல்லப்படுவதே. காணும் காணாத ஒவ்வொன்றிலும் செவிகள் கொண்டதே. நீ கேட்பது மெய்யென்றால் இங்கனம் நான் உனை வெறுக்கிறேன் என்பதை அறிக. வாழ்வை கொண்டாட நான் அறிவேன். என்னை உன் எதுவும் நெருங்காது போகும். என்னை எந்தச் சொல்லும் தடுக்காது போகும். உனது மந்திரங்கள் என் காலாழிகளில் வீழ்ந்து மடியும்.

விருபாசிகை தனக்குள் தானென உடுக்கிசையின் தாளத்துடன் அகச் சொற்களால் மோதிக்கொண்டிருந்தாள். அவை உடைபடுமொலி பல்லாயிரம் பல்லாயிரமாய்ப் பிளந்து உயிர்களை அழிக்கும் பேரிசையென எழுந்து குடித்திரளில் பரவியது. கலவி வேட்கை கொண்ட மானுடரில் ஆழச்சம் என எதிரொலித்தது. மயங்கிச் சரிந்த பொற்தேரின் அடியில் அதைத் தூக்கிப் பறக்கும் சிறகுகள் என விரிந்தது. பரத்தையர் குழு மாபொற்தேரின் பேரழகு இருளில் பரவிய நுண்வெளிச்சங்கள் அலைக்கடலாகி அடித்த வெளிச்சத்தில் பெருந்தோரண வாயிலெனவும் விண்ணூர்தி எனவும் சொல்லி நின்றனர். ஆடலர் பெண்கள் தலை கவிழ்ந்து நிலத்தில் அசையும் நிழல்களையும் அடிகளையும் நோக்கியபடி ஆலய வாயிலால் கடந்து சென்றதை நோக்கிய முத்தினியும் செழியையும் திருதிகாவைக் காட்டி அவள் பேரழகி என்றனர். பொற்தேரை விலையாகக் கொடுத்தாலும் வாங்க முடியாதவள் எனக் கூவினாள் முத்தினி. இருவரும் சொல்லாடி நகைத்துக் கொண்டு விருபாசிகையை நோக்கிய போது கொல்தெய்வம் இறங்கிய மேனியென விறைத்து நின்று பொற்தேரைத் துளைத்து அப்பால் எதையோ நோக்குபவள் போல நின்றிருப்பதைக் கண்டனர். அவள் சில போதுகளில் அப்படி வெறுவிழி கொள்வது இயல்பென்பதால் அவளை அணுகாது சற்றுத் தொலைவில் நின்றபடி ஈச்சியின் முகத்தை நோக்கி அதன் அழகை வர்ணித்தனர்.

“இதை ஆக்கியவன் ஓர் இளஞ் சிற்பியாமடி. அவன் ஒரே இரவில் இவ் அழகிய வதனத்தைக் கனவில் கண்டானாம்” என்றாள் செழியை. பறையொலியின் தாளங்கள் சொற்களை அறைந்து கலவி வெளியிலிருந்து அவற்றை அடித்து விரட்டுவன போல் ஓங்கியெழுந்து கொண்டிருந்தன. “இங்கேயே நின்று கொண்டிருந்தால் என் செவிகள் ஒலியை இழந்து விடும். நாம் செல்லலாம்” என்றாள் முத்தினி. “நாம் செல்லாம்” என விருபாசிகையைக் கேட்ட பொழுது “வருகிறேன். நீங்கள் முன் செல்லுங்கள்” என்றாள் விருபாசிகை. “தனித்து என்னடி செய்யப் போகிறாய். களிவெறியால் ஆடவர் உன்னைப் பிய்த்துத் தின்றுவிடுவார்கள்” எனச் சொல்லி நகையெழப் பார்த்தவள் தன்னைக் களத்தின் முழுமைக்கு ஒப்புக்கொடுக்கத் துணிந்து நிற்கும் பேரரசி போல் தினவுற்று நின்றவளை விழியலர நோக்கினாள். அங்கினியிடமும் பதும்மையிடமும் சென்று முறையிட்டனர் இருவரும். அவளை நோக்கிய அங்கினி “இரவில் அத்துமீறல்கள் எழ வாய்ப்பில்லை. எங்கும் புலிவீரர்கள் நீரடியில் மீன்கூட்டமென அலைகிறார்கள். குடிகள் அறியா வண்ணம் மாபெரும் காப்பு வளையம் இங்கிருக்கிறது. அவள் விழையாதவர் அவளை நெருங்க முடியாது. அஞ்ச வேண்டாம். நாம் செல்வோம். அவள் நம்மைப் போல அல்ல. பிறிதொரு தெய்வம்” என்று சொன்னாள். நால்வரும் அவளை நோக்கிய போது மேனியிலிருந்த நகைகளைக் கழற்றி வெறுமுலைகள் தூங்க நின்றாள் விருபாசிகை. அருகிருந்த பதும்மையின் மேலாடையில் நீண்டிருந்த கருந்துணியை இரண்டாக அறுத்து மேல் மேனியைச் சுற்றிக் கொண்டாள். “நான் களியை அறிந்தே திரும்புவேன். நீங்கள் செல்க” என ஆணையின் குரலில் சொன்னாள்.
அவர்கள் திரும்பிச் செல்வதை நோக்காமல் பொற்தேரின் முன் சென்று நின்று கொண்டாள்.

தீப்பந்த ஒளி பொற்தேரில் பட்டு விருபாசிகையில் மின்னியது. அவளில் எழுந்த சொற்கள் அடங்கிப் பின்வாங்கிக் காற்றில் சிறுசுழிக்காற்றென மறைந்தது. மேனியைச் சொல்லின்றி நோக்கி நின்றாள்.

பொன்னன் பொற்தேரால் வசியம் கொண்டவன் போல அதை நோக்கி வந்து கொண்டிருந்தான். மங்கலச் செல்வர் அவனை நோக்கிக் “களியறிந்து மீள்க எனச் சொன்னேனே பொன்னா. இங்கு என்ன செய்கிறாய்” எனக் கேட்டார். “பொற்தேரிலேயே என் சித்தம் அரக்கில் ஒட்டிய ஈயெனெக் கிடக்கிறது. எங்கு திரும்பிடும் மயக்கி இழுக்கிறது. சற்று நேரம் பார்த்துச் செல்ல வந்தேன்” என்றான் பொன்னன். கையை விசிறிவிட்டு மங்கலச் செல்வர் அப்பால் இருளில் ஊர்ந்து மறைந்தார்.

பொன்னனைக் கண்ட புலிவீரன் கனலன் “நல்ல வேளை பொன்னா நீ வந்தாய். எவரிடம் பொறுப்பைக் கொடுப்பது எனத் தெரியாது நின்றேன். ஏற்கெனவே நாழிகைகள் பெயர்ந்தோடத் தொடங்கி விட்டன. இன்று இரவு பொற்தேர் காவலின்றி வனத்தின் பொறுப்பில் விடப்பட வேண்டுமென்பது ஆடற் சித்தரின் ஆணை. நான் உளம் பொறுக்காமல் இங்கேயே நின்று கொண்டிருந்தேன். இதை வேடிக்கைப் பொருளெனப் பார்த்துக் கொண்டிருந்த குடிகளும் கைவிடப்பட்ட தொல் ஆலயத்தைக் கடந்து செல்பவர்களைப் போல திரும்பி பார்த்து விட்டு அப்பால் நகர்கிறார்கள். பவனியில் வானெழுந்த பொற்தேர் எனச் சொன்னவர்கள் மெய்யில் அதை நோக்கியது நீலருக்காவே என எண்ணுகிறேன். எமது காப்பு வளையம் சிறிது தொலைவிலேயே உண்டு. அப்பால் ஆலயம் தான். நீ இங்கு இருப்பாயானால் நான் கலக்கமின்றி காவல் நிலைக்குச் செல்லலாம். இரவு அவ்வப்போது நோக்கிக் கொள்” என்றான்.

பொன்னன் சிரித்து விட்டு “கனலா. இது ஓர் சடங்கு. இன்றிரவு பொற்தேர் குடிகளினுடையது. அவர்களின் விளையாட்டுப் பொருள். அஞ்சாமல் செல். தமது செல்வத்தைத் தாமே களவு கொள்ளும் அற்பர்கள் அல்ல நமது குடிகள்” என்றான். “குடிகளை நம்புகிறேன் பொன்னா. மானுடரை நம்ப இயாலது” எனச் சொல்லி நகைத்துக் கொண்டு புரவி நடையில் காவல் பகுதியை நோக்கி நடந்தான் கனலன்.

பொற்தேரினருகில் எரிந்து கொண்டிருந்த தீபந்தங்கள் விழிகள் மூடிக் கொண்டு உறங்க விழைபவை போல் ஒன்றன் பின் ஒன்றாய் அணைந்து கொண்டிருந்தன. சிலர் அருகே வந்து தொட்டு நோக்கியும் சொற்கள் பேசியும் விலகிச் சென்று கொண்டிருந்தனர். வாக்களித்த தெய்வம் வராமல் போனதைப் போல் களியில் தான் விழைந்த ஒன்று நிகழமறுத்து நிற்பதை எண்ணிக் கொண்டு பொற்தேரின் மேலடுக்கில் ஏறினான் பொன்னன். இருளில் எதுவோ துர்தேவதை ஒன்று தன்னை நோக்குகிறது என எண்ணியவன் சுற்றை நோக்கினான். விருபாசிகை கரங்களால் கால்களை மடித்துக் கட்டிக் கொண்டு நிலத்தில் அமர்ந்து பொற்தேரின் நுதலில் எழுந்திட்ட சொல்லிற்கினியாளின் சிற்றுருவை இருளில் உறுத்திருந்தாள். அவளின் நோக்கு அசையாமல் எழுந்ததைக் கண்ட பொன்னன் எஞ்சி எரிந்தது இன்னும் சிலகணங்கள் தான் என நாநீட்டிச் சுடர்ந்த தீப்பந்தமொன்றின் செம்மஞ்சள் ஒளி பொற்தேரின் சகடத்தில் பட்டு அவளை ஒரு மின்கணம் துலக்கிய போது மேனி மெய்ப்புக் கொண்டான். இத்தனை பேரழகு கொண்டவள் பொற்தேரின் முன் தனித்திருப்பதை எண்ணி வியந்து கொண்டான். அளிகொடுத்த தெய்வம் எழுந்ததென அவனது இச்சை அகம் கூவியது. பொற்தேரிலிருந்து தாவி மலர் போற் சுழன்று குதித்தான். களிப்பெருக்கில் எழுந்த ஒலிகள் பட்டுப் பொற்தேர் விழிதூக்கி இருளை நோக்குகிறது என எண்ணிக் கொண்டு அவளை நோக்கி நடந்தான்.

“எனது பெயர் பொன்னன். பொற்தேரின் காவலன். சிற்பியும் ஆவேன்” என விருபாசிகை முன்னின்று சொன்னான். அவனது குரலில் மெல்லிய நடுக்கு ஓடியதை அவனே எண்ணி நாணினான். “நான் சூர்ப்பனகை. வெறும் பெண். பொற்தேரை நோக்கி நிற்க விழைகிறேன். இன்றிரவு பொற்தேர் காவலற்றது அல்லவா” எனக் கேட்டாள். அவளது குரலில் பொருளறியாத சுவையொன்று நனித்தது. விழைவு கொள்ளும் பெண்ணில் எழும் குரல் எல்லாம் நனியெனவே கேட்குமென அவனது இச்சை அகம் சொல்லாடி நகைத்தது. “ஓம். காவலற்றது தான். இருப்பினும் மானுடர் எதையேனும் காவல் காத்திருப்பது வழமையல்லவா” என்றான். சொற்கள் பொருளற்று தான் செல்ல வேண்டிய வழியறியாது தடுக்குவதை நோக்கிக் கொண்டிருந்தான் பொன்னன்.

“பொற்தேரின் மேலேறி நோக்கலாமா காவலரே” என்றாள் விருபாசிகை. “ஓம். உங்களின் தேரிது” எனக் கொடையளிப்பவன் போல் கரங்களைக் காட்டினான். மெல்லச் சிரித்த விருபாசிகை எழுந்து மேலாடையை இழுத்துக் கொண்டாள். வனத்திலிருந்து குளிர் காற்று அலை அலையாக எழுந்து வந்து தழுவிக் கொண்டிருந்தது. காட்டு மலர்களின் வாசனை மேனிமருக்குபவையென வீசின. பொற்தேரின் மேலேறிய விருபாசிகை நீலழகன் அமரும் ஆசனத்தில் அமர்ந்து கொண்டாள். வலக்காலை இடக்கால் மேல் போட்டபடி அரச தோரணையில் சாய்ந்து கொண்டாள். பொன்னன் அவள் முன்னால் இருந்த ஈச்சியின் பின் தலை மேல் பிருஷ்டத்தை வைத்து சாய்ந்து நின்றான். எங்கு தொடங்குவதெனச் சொற்களை வெறுங்காற்றில் துழாவியது அகம்.

“பொற்தேர் மாபெருங் கலையாக்கமெனக் கேட்டிருக்கிறேன். ஆனால் இங்கு இருளில் எவராலும் நோக்கப்படாது தனித்திருக்கிறதே” என்றாள் விருபாசிகை. தனது களத்தில் தனது ஆயுதங்களுடன் போருக்கெழுபவன் போல அகம் கூர்ந்தான் பொன்னன். “ஓம். அனைத்துக் கலைகளும் மானுட உச்சங்களும் அவை நிலைகொள்ளும் தருணங்களால் மதிப்பளிக்கப்படுபவை. மானுடர் அத்தகையவற்றை ஆக்குவதே அதைக் கைவிட்டு வெறுங்களியாடி அதைச் சிறுமை செய்து தம் அகத்தை நிறைவு கொள்ளவே” என்றான்.

“இழை இழையாக நெய்யப்பட்டு பல யுகங்களாகக் காக்கப்படும் இத்தேர் பொருளின்றிக் கால வெளியில் எதற்காக நீந்திக் கொண்டேயிருக்கிறது. எவரின் பொருட்டு ஒன்று மதிப்பளிக்கப்படுகிறது” என்றாள்.

“காலத்தின் சுழிப்பில் இப்பெருந்தேரும் ஒரு சிறு மலரே. எஞ்சிய சிறுமலர் எனச் சொல்லலாம். அழிந்தவை கோடியென்பது எங்கள் நூல்மரபு சொல்வது. எஞ்சுவதே மதிப்பளிக்கப்படுகிறது. காலம் இரக்கமற்ற பேராற்றுக்கு ஒப்புமை செய்யப்படுவது அதனாலேயே. எது எஞ்சுகிறதோ அது காலத்தை ஓரடுக்கில் வென்றிருக்கிறது என்பது பொருள். மானுடர் தாம் அழிந்தாலும் அழியாத கனவுகளை விட்டுச் செல்வதில் விந்தையான ஈர்ப்புக் கொண்டுள்ளனர்” என்றான்.

“அழியும் மேனி கலையாக முடியாது இல்லையா சிற்பியே” என்றாள் மெல்லிய நகை உதட்டில் எழ.

“ஆகும். மானுட மேன்மைகளைச் சூடிக் கொள்பவர்கள் அழியாப் பெருக்கில் எதுவோ ஒன்றினால் நிலைக்கப்படுவார்கள். காவியங்களில். சிற்பங்களில். ஓவியங்களில். தெய்வங்களென்றும் கூட” என்றான்.

“தெய்வங்களை நான் வெறுக்கிறேன். அவையும் மானுடக் கற்பனைகளே. இங்குள்ள அனைத்தும் மேனியைத் தளையுறுத்தி நெறிக்குள் வரம்பிடவே ஆக்கப்படுகின்றன. அது நூலோரின் கணக்கு. மானுடர் அதில் ஓர் எண் மட்டுமே” என்றாள். அவளிடம் சொற்கள் எழுந்து வரும் திசையை பிறிதொரு பெண்ணிடம் எப்போதும் பொன்னன் எதிர்கொண்டதில்லை. உளம் தயக்கம் கொண்டது. மெளனமானான்.

“சொல்லில்லையா பொன்னா. நானும் நீங்களும் நமது கலவிக்கான முதற் சொல்லை எங்கு தொடங்குவதெனத் தெரியாது நிற்கிறோம் இல்லையா. மானுடர் விழைவதை மறைத்துக் கொள்ள ஆக்கிய ஆயிரம் பொய்களே கலையும் தெய்வமும்” என்றாள். அவளது சொற்களின் கூர்மையின் முனையினால் மேலும் மேலும் மெளனத்திற்குள் தள்ளப்பட்டான் பொன்னன். காற்றில் அவனது குழல் ஒற்றைச் சரிவென ஆடியது. குண்டலங்கள் மெல்லிய நலுக்கம் கொண்டிருந்தன. தோள்கள் விரிபவை போல் நடித்தன. களியின் வெளியை நோக்கித் திரும்பி நின்றான். அவனது அருகே எழுந்து வந்த விருபாசிகை அவனது முகம் நோக்கி “எங்கு நோக்குவதென அறிவதே காமத்தின் முதல் நுண் கலை. அதை அறியாத பேதை நீங்கள்” எனச் சொல்லி அவளில் எழுந்த அரக்கர் குல மூதாதை உரக்கச் சிரித்தாள். அவனில் எழுந்த சினம் தழன்று துடித்தது. அடக்கிக் கொண்டான்.

“காமத்தை அறிவது வேறு. கலையையும் தெய்வத்தையும் நிந்தனை செய்வது முற்றிலும் பிறிதொன்று. நான் காமத்தை அறியாத மூடனாய் இருக்கலாம். ஆனால் கலையை அறிவேன்” எனச் சொற்களைக் கடித்துக் கொண்டு சொன்னான்.

உரக்கச் சிரித்து அவனது தோளை அறைந்த விருபாசிகை “அனைத்தும் ஒன்றே என்பதும் கலைகளால் சொல்லப்படும் பொய்யல்லவா பொன்னா. பிறிது பிறிது என வகுத்துச் சென்று ஒன்றெனத் தொகுப்பது. நான் தொகுப்பின்றிக் கலைந்தவள். இன்மையில் விழைந்தவள். புடவியின் எளிய விதிகள் என்னை ஆளா” என்றாள்.

பொன்னன் சிவந்து கனன்ற மூச்சை எவருடையதோ என எண்ணிக் கொண்டு விருபாசிகையைத் திரும்பி நோக்கினான். அணியின்றித் தானே மின்னும் தொன்மையான அருமணியென்று நின்றிருந்தாள். விழிகளில் குளிர் கருமை. ஆயிரம் தலை கொண்ட முதுநாகத்தில் பள்ளி கொள்ளும் ஆணவம். அவளை நோக்க விழைவும் அச்சமும் ஒன்றென எழுந்தவன் “நீங்கள் உங்கள் ஆணவத்தால் தருக்கி நான் என்று காலத்தின் முன் நின்றிருக்கிறீர்கள். காலம் அனைத்தையும் அழிக்கும். தக்கனவே பிழைக்கும்” என்றான்.

“நான் தகாதது. தங்குதலற்றது. நினைவற்றது. இரக்கமற்றது. பணிவை வேண்டும் தெய்வம்” என்றாள். அவளது பற்களில் கொல்சிரிப்பொன்று வெறியுடன் ஒளிர்வதைக் கண்டவன் தலையைத் திருப்பிக் களிவெளியை நோக்கினான்.

“சொல்லிச் சொல்லித் தன்னை மிதப்பவர் வெற்றிருளில் உழலும் ஆன்மா கொண்டவர். உங்களில் இத்தனை செருக்கு எழ எது காரணம். உங்கள் மேன்மை கொண்ட திருமேனியா. அழகெனும் பொய்யா” என்றான்.

“அல்ல. நான் விழைவு என அறிந்தவள் நான். நான் உங்களுக்கு முன் தளையுண்டவள் அல்ல. உங்களில் ஆண்மையெனச் சினந்து கொள்வது என் அகத்தின் முன் புண்பட்டு அழிவதை நோக்கும் போது எழும் அமைதி நான். நானே களியின் தேவியென மண் நிகழவிருக்கும் தெய்வம். நிகரில்லாத ஒன்று” என்றாள்.

“மானுடரில் இத்தகைய சொற்களைச் சொன்ன பல்லாயிரம் பேரழகிகள் எலும்பும் சாம்பலாகிக் கரைந்தது தான் காலம் அவர்களுக்குச் சொன்ன பதில். உங்களில் எழும் அளவற்ற கர்வம் ஒரு மாசு. அழகின்மை. உங்களை அது வீழ்த்துகிறது என அறியவில்லையா” என்றான். அவனது குரல் தணிந்திருந்தது. தருக்கி நிற்பவரின் முன் தணிந்து சொல்லெடுப்பது வெல்லும் வழியென எண்ணினான் பொன்னன்.

“மாசென்று ஒன்றை நோக்குவது எளிமையானது பொன்னா. நோக்கினால் அனைத்திலும் மாசு ஒரு சிட்டிகை கலந்திருப்பதை அறிவது எளிது. ஆனால் நாம் அங்கனம் பார்க்கப் பயிற்றப்படவில்லை. அறங்களாலும் நெறிகளாலும் போர்த்தப்பட்ட விதையே மானுட விழைவு. நூலோர் வகுக்கும் மாசுகள் பல்லாயிரம் பேருக்கென எழுபவை. அவை ஒற்றை மானுடரை நோக்கிப் பேசுவதில்லை. அது ஓர் தவிர்க்க இயலாத திரள் நெறி. திரள் நெறிகளில் நன்றும் தீதும் கலந்தே உள்ளன. நெருப்பில் சூடும் வெளிச்சமும் போல. எதை எங்கனம் பயில்வது நிகழ்த்துவது என்பதே நாம் நோக்க வேண்டியது.

சொல்க. நீங்கள் என்னை விழையவில்லையா” என்றாள் விருபாசிகை.

“மெய்யென உங்களைக் கண்ட போது அளிகொடுக்க வந்த தெய்வமென எண்ணினேன். சொல்லெடுத்து நீண்ட போது அறியாத கல்லொன்றைத் தொட்டு எழுந்த தீதெய்வம் ஒன்றின் முன் நிற்பதாக உணர்கிறேன். நீங்கள் என்னைக் கலைத்துக் கொண்டேயிருக்கிறீர்கள். ஒருங்கும் நீரைக் காற்று என” என்றான் பொன்னன்.

“அது என் இயற்கை. காற்றால் அலையாத ஆழ நீரையே நான் விழைகிறேன். மேற் தோலில் எழும் காமம் ஒரு விழிமயக்கு. ஆழங்களிலேயே மெய்மானுடரைத் தொடுகிறோம். ஆழம் அறிந்த பின் கொள்ளும் கலவியே மெய்யானது. அதுவே விழைவின் விடாய்க்கு உகந்தது. நீங்கள் உங்களைப் பலியிடாத வரை எழுந்து வராத தெய்வமே மெய்க்காமம்” என்றாள் விருபாசிகை. கடைசிப் பந்தமும் ஹ்ம் என மூச்சிரைத்து அணைந்த போது நிலவின் ஒளி பொற்தேரில் வெள்ளிக் கால்களால் இறங்கி நடந்தது. பொன்னும் வெள்ளியும் பெருக்கென ஒளிரும் குளத்தில் இரண்டு அல்லிகளென இருவரும் தனித்திருந்தனர். இடையில் மானுடர் ஆக்கிய ஆயிரம் சொற்களாலான நீர்மை வெளி பரந்திருந்தது. விருபாசிகை களிவெளியில் ஒலித்தெழும் கூச்சல்களைக் கேட்டு நின்றாள். அறியாத தொல் மொழியொன்றில் மானுடர் உரைக்கும் மெய்மையென அதைக் கூர்ந்திருந்தாள். பொன்னனின் அகம் அவனறிந்த அனைத்துப் படைக்கலனும் அவன் எண்ணிய போது கைவராமல் சபிக்கப்பட்டவன் போல பொற்தேரில் சாய்ந்து கொண்டு நிலவை நோக்கினான். எது இங்கே என்னிடம் நெருங்கியிருக்கிறது என எண்ணிய போது எண்ணம் பிசகி நாணிலிருந்து கழன்று விழும் அம்பென உதிர்ந்து கொண்டேயிருந்தான். நாண் நாணென அவன் அகம் சொல்லிய போது அவன் இச்சை அகம் அம்பு அம்பு எனக் கூவியது. இலக்கு என ஒன்று நின்றிருப்பினே இரண்டும் பொருளுள்ளது என எண்ணினான் பொன்னன். எங்கோ தொலைவில் கூகைகள் அலறிப் பறந்த ஒலிகள் அருகிலெனக் கேட்டது.

TAGS
Share This