94: பாற்கடலிகள்

94: பாற்கடலிகள்

முதிய மருதமரங்கள் கலகலத்து வீசிய புலரிக் காற்று முதுகிலறைய புலிகளின் இளம் வீரர்கள் குழுவொன்று வனவிளிம்பைக் கடந்து பட்டினத்தை நோக்கிய நீண்ட பெருஞ்சாலையில் நுழைந்தது. ஆதவனின் ஒளிப்பற்கள் முதுகில் மழலைக் கடியென வீழ்ந்து கொண்டிருந்தது. வற்றியுலரும் ஆறெனக் குடிகளின் பெருக்கு அடங்கியிருந்தது. புலரியின் இனிய பறவையோசைகள் புதர்களிலிருந்து மந்திரங்களென ஒலித்து மயக்கு ஏற்றின. சோதியன் குளிருக்கு மேனி நிமிர்த்தி புரவியின் சீர் ஓட்டத்தில் தாவியெழுந்து அமைந்து கொண்டான். அவனுக்கு முன்னால் சென்ற வீரர்களுக்கு உலகளந்தோன் வாய் அள்ளூறும் கதைகளைச் சொல்லியபடி சென்றான்.

“இளம் புலிகளே கேளுங்கள். எனது வாழ்வின் பெருந்தவறென்பது எதுவென அறிவீர்களா” என முழங்கும் குரலில் காற்றில் கூவினான். காற்றில் அவனது குழலின் கற்றைகள் படபடத்து ஆடின. விழிகளில் குறும்பும் மிதப்பும் பாலில் நீரெனக் கலந்திருந்தது. சுகிரனும் வேங்கைக் குமரனும் ஆளையாள் பார்த்துக் கொண்டு “இல்லை பெருவீரரே” என்றார்கள். உலகளந்தோன் இடிச்சிரிப்பொன்றை உதிர்த்து “என்னைப் போலவே மானுடர் அனைவரும் உயர்ந்தவர்கள் என எண்ணினேன்” எனச் சொல்லி புரவியின் கடிவாளத்தைப் பற்றி மெல்லத் தணித்தான். மந்தணம் உரைப்பவன் போல “மானுடரை நாம் நமது அகமென எண்ணி நினைப்பதைப் போல மடமை வேறில்லை. ஒவ்வொருக்குள்ளும் நாமறியாத கரவுகள் உண்டு. பாதாளங்கள் மடிந்து மடிந்து செல்லும் நீள்பாதைகளே மானுட அகங்கள். என்னைப் போன்ற எளிய வீரனோ வாழ்வில் போரும் வெற்றியும் புகழும் மட்டுமே அறிந்தவன்” என்றான். சோதியன் புரவியில் கால்களை உதைத்து முன் வந்து “மெய்தான் இளையவர்களே. இவரால் அளியென மானுடருக்குக் கொடுக்க முடியாதது என ஒன்று உண்டேல் அது பொய் பகர்தல் மட்டுமே. எளிய குழந்தை” எனச் சொல்லிச் சிரித்தான். உலகளந்தோன் காற்றை வளைத்து வில்லாக்கி காற்றிலேயே அம்பை ஆக்கி காற்றைப் பிளக்கும் கதைகள் சொல்பவன். ஆதலால் மெல்ல நகைத்தபடி “பொய்யென்ற சொல்லிருப்பதையே என் இளவயதில் பெண்களுடன் பழக ஆரம்பித்த பின்னரே அறிந்தேன் இளையவர்களே. அதுவரை என்னை வளர்த்தவர்கள் இயற்கையும் மெய்மையும்” எனச் சொன்னான். சிந்தனையில் ஊர்பவன் போல புரவியில் எழுந்து முன்வளைந்து காற்றை மூச்சில் நிறைத்து “கீதையிலும் என்னைப் பற்றிய வரியொன்றுண்டு. அறிவீர்களா” என்றான். சுகிரன் கனைப்பவன் போலச் சிரித்து “பொய்களில் நான் உலகளந்தோன்” என்றான். உலகளந்தோன் வெடித்துச் சிரித்துக் கொண்டு “மூடா. கரவுகளில் நான் வெளிச்சம்” எனக் கூவினான். “அறிக இளையோரே. மெய்யென நீங்கள் எண்ணிக் கொள்ளும் சொல்லி வடிக்கும் அனைத்தும் பொய்யின் நிழல்களே. பொய்யால் வனையப்பட்ட பெருயானமே உலகு. கதைகளில் நீங்கள் கேட்பது பொய்களின் எழிற்பெருக்கில் திளைக்கும் சொற்களின் களியை. மெய்யான கதைகள் சலிப்பூட்டுபவை. வெறும் பகலில் சிந்தும் ஒளி போன்றவை. இரவினில் எழும் ஒளியே பெருங்கதை. மானுடர் விழைந்து விழைந்து நெக்குருகும் காவியங்கள் அனைத்தும் பொய்யில் சுடரும் சொற்களால் ஆனவை. யாக்கையை மெய்யென்று அழைப்பது வாழ்க்கையைப் பொய்யென்று அறிந்த மேதையின் கூற்று. வாழ்க்கையை அழகாக்குவது மெய்யல்ல. பொய்யே” என்றான்.

ஆழ்ந்து ஊறிய சொற்களென எண்ணித் தானே சிரித்தவனை இடைமறித்த வேங்கைக் குமரன் சிறுமுரசு விம்முவது போன்ற குரலில் மெல்லிய திக்கல் எழ “அப்படியாயின் பெண்களும் பொய்யென்றா சொல்கிறீர்கள் மூத்தவரே. பெண்களிடமிருந்து பொய்யை அறிந்தீர்கள் எனச் சொன்னீர்கள். அதன் காரணம் தான் என்ன” எனக் கேட்டான்.

தத்துவ உரைக்குத் தயாராகுபவன் போல முதுகைச் சாய்த்து கடிவாளத்தைப் பற்றிக் கொண்டு சுற்றிலும் விரிந்து கிடந்த புல்வெளிப் பரப்பையும் இடையால் வழிந்தோடும் மென் நீலக் கடல்வளைவுகளையும் ரசித்துப் பார்த்தபடி வேங்கைக் குமரனை நோக்கினான். “இளவலே. பூமியில் பொய்யை ஆக்கியவர்கள் பெண்களே. புவியில் மெய்யை அறிய ஆண்கள் கோடானு கோடி வழிகளை உண்டாக்கித் தப்பித்து ஓடுவது அப்பெரும் பொய்யிலிருந்தே. சித்தர்கள் ஏன் பெண்களைக் தூமைக் குடமென்றும் அழுக்குப் பாண்டமென்றும் சொல்கிறார்கள். மானுடரை அழிக்க வந்த மாயை என வசைபாடுகிறார்கள். அறிக. முற்றும் துறந்து ஞானம் கொண்டவர்களும் விலக்க முடியாதது பெண் எனும் மாயப்பிசாசை. அவள் பொய்யென எழுந்த பெருவிழைவு. அவளை வெல்லவே மெய்மை ஒளி கொண்டிருக்கிறது.

பெண்கள் பொய் கூறுகையில் நீ அறியவே முடியாது. ஒவ்வொரு சொல்லும் ஏற்கெனவே அடுக்கப்பட்ட பொய்யின் நிரையின் மேல் மேலொரு கல். புவியில் பாறைகளென மலைகளென உயர்ந்து நிற்பவை அனைத்து பெண்கள் உரைத்த சொல்லின் திண்மங்களே. பெண்கள் மெய்மை அறியும் விழைவற்றவர்கள். எதற்கு ஈடாகவும் அவர்கள் பூமியில் வாழும் வாழ்க்கையையே மெய்யென எண்ணுபவர்கள். அன்றாடங்கள் அனுபவங்கள் திளைப்புகள் களிகளே அவர்களின் விழைவுகள். அவை கிடைக்காத போது துயரங்கள் கண்ணீர்கள் வஞ்சினங்கள் சூடுகிறார்கள். வாழ்க்கையை எதன் பொருட்டேனும் அழித்துக் கொள்ளும் விழைவே பெண் என்பதை அறிக.

பெண்ணால் புடவியில் பெருநோக்கமென ஒன்றைத் தேர்ந்து அதை நோக்கித் தனிவழியே செல்ல இயலாது. பெண் என்பவள் எப்போதும் துணை விரும்பி. கூட்ட விலங்கு. சொற்களால் ஆனவள். விவாதிக்காத பெண்ணென்று ஒருவரேனும் மண்ணில் பிறந்ததுண்டா. தருக்கங்கள் என்னும் கருவி தத்துவத்தில் எழுந்ததே பெண்ணால் தான். ஒவ்வொரு மெய்மைக்கும் மறு மெய்மை சொல்வார்கள். ஒவ்வொரு நீதிக்கும் இன்னொரு நீதி. இன்னொரு அறம். இன்னொரு சாளரம். தான் விழையும் ஒன்றுக்கென புடவியின் அனைத்தையும் பணித்து வளைக்கும் ஆற்றலே பெண். அதன் முன் எளிய மூர்க்கர்களே ஆண்கள்.

பெண்கள் எப்பொழுதும் நுட்பமனாவர்கள். ஆணின் பொய்யை அறியும் ஆயிரம் ஒற்று வழிகள் கற்றவர்கள். அது எதனால் என்று எண்ணுகிறீர்கள். பொய்யை முற்றறிந்து புடவியை எளிய பொய்களால் நிறைத்தவர்கள் அவர்களே. ஒரு பெண் மெய்யென்று எண்ணிச் சொல்லும் ஒவ்வொன்றையும் பிறிதொரு வெளியில் அவளே முற்றிலும் மறுத்து புதிய மெய்யென ஒன்றை ஆக்க முடியும். பெண்களின் கற்பனை முழுவதும் சேரும் கடல் பொய்யெனும் மாகடலே. பெண்கள் தங்கள் ஆற்றலைக் காவியங்களிலும் பெருங்காரியங்களிலும் ஈடுபடுத்திக் கொண்டால் புடவியில் பேரிலக்குகள் நிகழும். ஆனால் அவர்கள் எளியவர்கள். மூடர்கள். புடவியைப் போர்த்திய மாயவலையைப் பின்னும் தூபிகைகள். ஒருபோதும் அவர்கள் தங்கள் வாழ்வெனும் பொய்யைக் கிழித்துக் கொள்ளப் போவதில்லை. அரிதினும் அரிதாக எழும் பெண்ணை அத்தனை கோடிப் பெண்களும் சேர்ந்து அழுத்திச் சேற்றில் அழிப்பார்கள். பெண்கள் நம்ப விரும்பும் உண்மையே புடவியில் மெய்யென்று அறியப்படுகிறது குழந்தைகளே.

நான் சொல்லும் பொய்கள் அவர்களிடமிருந்து குடித்த முலைப்பால் துளிகள். அவர்களோ கோடி கோடி தனங்களில் திரண்டெழுந்த பாற்கடலிகள்” என்றான் உலகளந்தோன். அச்சொற்களால் திகைப்புற்ற இளையவர்கள் இருவரும் தங்களை அவனின் சொற்களிலிருந்து காப்பற்றக் கோரும் பாவனையில் சோதியனை நோக்கினார்கள். சோதியன் புன்முறுவலுடன் “உலகளந்த பெருமானே. நீங்கள் பால் குடித்த முலைகள் பெருமலைகள் அளவுக்கே இருக்குமென எண்ணுகிறேன். பெண்கள் திரட்டிய அத்தனை பாலும் உங்கள் ஒற்றை வாயில் சிந்துகின்றதே. நீங்கள் பெண்ணின் கருணையில் உதித்த வாய் கொண்டவர்” என்றான். “சோதியா. எத்தனை என்னை இளிவரல் காட்டினும் நான் சொல்வது மெய்யே என ஆடவர் அறிவர். ஆனால் அங்கனம் அவர்களால் சொல்லெடுக்க இயலாது. முதற் சொல் அவையெழும் போதே விழியறியாத பல்லாயிரம் ஈட்டி முனைகளை அவன் அகவிழியால் காண்பான். பெண்ணின் மெய்யென உணரும் ஒன்றை உன்னால் அவளுக்கு முன் சொல்லிட இயலுமா. கூறுக. நீ விழையும் பெண்ணிடம் பொய்யுரைக்காது உன்னை மெய்யெனக் காட்டி உன் காதலை வெல்ல ஒண்ணுமா” எனச் சிரித்தபடி கேட்டான். சோதியன் புல்லில் மோதிய காற்றின் குழல்கள் வந்து தன் மேல் விழுவதை நோக்கிக் கொண்டு புரவியின் விரைவைக் கூட்டினான்.

“உலகளந்தவரே. பொய்க்கு வாழ்வில் வைரங்களின் பட்டைகளில் மினுக்கிடும் ஒளிபோல பல நெளிவுகள் உண்டென்பதை நானும் உடன்படுகிறேன். மெய்யில் நீங்கள் காதல் கொள்பவரிடம் பொய்யென ஒன்றைச் சொல்லாதிருக்கும் ஒரே ஒரு ஆண்மகனையேனும் நீங்கள் சந்திருக்கிறீர்களா” எனச் சொல்லத் தொடர்ந்தவனைக் கரம் நீட்டி இடைமறித்து “தினமும் ஆடியின் முன் அவனைக் காண்பது என் வழமை” என்றான். சோதியன் அவனது பாவனையைக் கண்டு சிரித்துக் கொண்டு “சில யோகியரால் இயலும். நாங்கள் எளியவர்கள் பெருமானே. பெண் என்பவள் பெரும் மெய்மை. மெய்மையென்றே மண்ணில் திகழ்பவர்கள் அவர்கள் மட்டுமே” என்றான். “ஓம். அந்தப் பெண் மெய்மையைத் தான் புடவிப் பொய்மை என நான் சொல்கிறேன். ஆடவர் உரைக்கும் உண்மைகளைப் பெண்கள் விரும்புவதில்லை. அவர்கள் தாங்கள் கேட்ட விழைவதையே எப்பொழுதும் எதிர்பார்ப்பார்கள். அது கிட்டாத போது தீவஞ்சம் கொள்வார்கள். ஆணை ஒவ்வொரு கணமும் பல்லாயிரம் சொற் கொடுக்குகளால் தீண்டும் விசை கொள்வார்கள். ஆணில் நஞ்சென ஊறுபவை அனைத்தும் பெண் அளித்த கொடுக்கின் தீண்டல்களே.

பெண்களும் ஆண்களும் நிகரெனப் புலிகளின் தத்துவம் உரைக்கிறது. அது உலகியல் நெறிகளிலும் வாழும் உரிமைகளிலுமே. பெண்களின் முன் எந்த நெறியும் அவர்கள் விழையும் போது அவர்களுக்குப் பணிந்தாக வேண்டும். ஒரு வளர்ப்பு நாயைப் போல. தருக்கி எதிர் நின்றால் நீ ஒரு வேட்டை நாயெனப் பட்டம் சூட்டப் படுவாய். நான் அறிவிலனாகவே இருந்து கொள்கிறேன் சோதியா. ஆனால் தன்னெஞ்சறிந்து உரைக்கும் பொய்யை நான் ஒரு போதும் சொல்லப் போவதில்லை. கதைக்கென ருசிக்கெனச் சொல்பவை அனைத்தும் கேளிக்கையின் பொருட்டே. அவை சிரிப்புகளிற்கென மூட்டப்படும் எரிவிறகுகள். ஆனால் பெண்களின் பொய்களும் விழைவுகளும் காட்டெரி போன்றவை. ஒரே ஒருத்தி முழுப்புடவியையும் தனக்கென அழித்துக் கொள்ள விழைவது பெண்ணில் மட்டுமே கூடும் வேட்கை. அவ்வளவு கூர்மை கொண்ட அகங்காரமே பெண்.

எவ்வளவு தான் காவியச் சொற்களால் கழுவி உருட்டி எடுத்து வைத்தாலும் பெண் கூழாங்கல்லே. அவள் வைரமென ஒளிர்வது அவள் ஆக்கும் மெய்யெனும் பொய்களில் அவளே திளைக்கும் கணங்களாலேயே. அறிக. கூழாங் கல்லின் பொய்மையே வைரத்தில் ஒளிமயக்கு. பெண் கூழாங்கல். வாழ்க்கை ஒளிமயக்கு” என்றான் உலகளந்தோன்.

சோதியன் சொற்களை விலக்கிக் கொண்டு பட்டினத்தின் தோரண வாயிலை நோக்கினான். காற்றில் சுருங்கி இடைக்கிடை எழுந்து விக்கலென வீசும் புலிக்கொடி பனியில் ஒளிரும் சூரியத் தகடு போல ஒளிவீசியது. வாயிலில் அமர்ந்திருந்த வீரர்கள் எரிவிறகுகளைக் குவித்து அமர்ந்திருந்து சொல்லாடிக் கொண்டிருந்தனர். வனத்தின் காவல் நிலைகளை நோக்கி வரும் முதல் நாள் பணி சோதியனுக்கு அளிக்கப்பட்டிருந்தது. களிப்பெருக்கு நிகழும் தருணத்தில் போர் நிகழ்ந்தால் அழிவு பன்மடங்காய் பெருகுமென்பது தமிழ்ச்செல்வனும் சூர்ப்பனகரும் நீலழகனுக்கு வகுத்த காப்புச் சொல். அரைபங்கு புலி வீரர்கள் வன எல்லைகளில் காவற்பணிக்கு இடப்பட வேண்டுமென மந்தண அவையில் முடிவாகியது. மிகுதி வீரர்கள் களியில் குடிகளும் அறியாது ஒவ்வொரு அசைவுகளையும் நோக்கியிருக்கப் பணிக்கப்பட்டனர். ஐயம் கொள்ளும் எச்செயலும் உடனடியாகக் காவல் நிலைகளுக்கு அறிவிக்கப்படல் வேண்டும். தளபதிகளும் வியூகிகளும் களியில் கலந்து கொள்ளக் கூடாது. குடிச் சடங்குகளில் தோன்றியதன் பின்னே சாலைக்கு வரும் வேழம் வனத்துக்குத் திரும்புவது போல காவல் நிலைகளுக்குத் திரும்பி விட வேண்டும். அனைத்தும் ஆணைகளாகப் பிறப்பிக்கப்பட்டன. ஒவ்வொரு காவல் நிலையும் களியைக் காத்தும் போரை எதிர்பார்த்தும் ஓய்வின்றி இயங்கின.

சோதியன் தமிழ்ச்செல்வனின் அணுக்க வீரன். நம்பிக்கையை வென்றவன். அதிலும் சோதியனின் நுட்பங்களும் களங்களை வகுத்தாயும் திறன்களும் நூறு வீரர்களுக்கு இணையானவை. ஒரு பார்வையில் அவன் காணும் களத்தை அவன் நினைவில் ஓவியமென விரித்து அதன் ஐயக் கண்ணிகளை இணைத்து அதன் பொருளை உய்ப்பவன். களிக்கான பணிப்பகிர்வுகள் இடம்பெற்ற வேளை தமிழ்ச்செல்வன் சோதியனையும் அவனது குழுவினரையும் தனக்கெனச் சில மேலதிக பணிகளை ஒருக்க அழைத்தார். அவரது அருகிருக்கும் பொழுது புன்னகைக்குள் நிகழும் போரின் அசைவுகளையும் நுணுக்கங்களையும் சோதியன் உற்றபடியிருப்பான். அவரை ஆசிரியருக்கு நிகரான பீடத்தில் கொண்டிருந்தான். அதை அவன் சொல்லிக் கொண்டதுமில்லை. அவர் கேட்டுக் கொண்டதுமில்லை.

காவல் நிலைகள் அனைத்தும் உறுதியாகவும் சலிப்பின்றியும் களிக்கான ஏக்கமின்றியும் வேறொரு களியில் திளைத்திருந்தது. மானுடரைக் காக்கும் தெய்வங்களே எனக் குடிநாவுகள் உரைத்த பல்லாயிரம் சொற்கள் உச்சாடனங்களென விழுந்து தெய்வமாய் எழுந்தவர்கள் போல அவர்கள் பிறருக்கென அங்கு விழித்து நோக்குக் கொண்டு பணிபுரிவது மானுட மேன்மைகளினால் அடையும் களியுச்சங்கள். பிறர்க்கென மண்ணில் சிந்தும் ஒவ்வொரு துளி வியர்வையும் குருதியும் காலமும் அகத்தில் சுடர்க்கும் நிறைவின் தீயினால் மறு ஈடு செய்யப்படுகின்றது. மானுடர் எவ்வளவு தொலைவுக்கும் ஆழத்துக்கும் இச்சை விழைவிகளோ அதை விட ஆயிரந்தொலைவுகள் மேன்மை விழைவிகளும் கூட. மகத்தானவை அளிக்கும் களிக்கு நிகரேது. அந்தத் துலாத்தட்டு தானே நிறைந்து தானே அமைவது. அதற்கு நிகரெனச் சுவனமேகும் வாய்ப்பளிக்கப்பட்டாலும் அதையும் அளியெனக் கொடுத்து நிறைவு கொள்பவரே பெருவீரர்கள். காவல் நிலையில் நோக்கிய இளம் புலிகள் பெருயோகிகளென எண்ணிக் கொண்டான் சோதியன்.

இளமை என்பது எவ்வளவு தூரம் வேட்கையின் நாவென எண்ணப்படுகிறதோ அதை விட அதிகமாக அது தியாகத்தின் சுனையூற்று. இளையவர்களிடம் இழையும் அறியாமையும் வேகமும் தூய்மையென எஞ்சும் குழந்தைகளின் மிச்சமும் அவர்களை மானுட இன்னல்களுக்கு எதிராக வாழ்வளிக்கத் தூண்டுகிறது. இளமையிலேயே இலக்கு அளிக்கப்படாத குடிகள் முற்றழிவது உறுதி. வாழ்வில் பெருநோக்கங்கள் அளிக்கப்படுவது விசையும் கூர்மையும் ஆழமும் கொண்டு முன்சென்று வாழ்வறிந்து மெய்மையை அறியும் பயில்வை உளத்திற்கு அளிப்பது. இலக்கற்ற பெருந்திரளான இளையோர் தாமே தம்மை அழித்துக் கொள்ளும் படைக்கலன்களென ஆகுவார்கள். போதையும் காமமும் களிப்பெருக்கும் சோர்வும் மானுடக் கீழ்மைகளும் சேர்ந்து குவியும் அழுக்குப் பாண்டங்கள் ஆவார்கள். நெடுங்காலம் அங்கனம் வாழ்வில் திளைக்கும் இளையோர் வளரும் பொழுது அதுவொரு குடிமுறைமையென மாறிவிடும். அதற்கடுத்து வரும் தலைமுறைகள் முந்தையவர்களின் சோர்வையும் சலிப்பையும் பொருளின்மையையும் கிழித்து மாபெரும் நச்சுப் பையிலிருந்து வெளியேற வேண்டும்.

தொடர்ந்த போர்களினால் குடிகள் அடைந்த அச்சமும் விலக்கமும் அவர்களில் பெரும்பாலானவர்களை சோர்வின் பிலவில் ஒடுங்கச் செய்துவிட்டது. இக்களி விழா பொருளின்மைகளின் பேராடல். சலிப்புகள் ஒன்றையொன்று தழுவி அறிந்து விலகிக் கொள்ளும் பெருஞ்சலிப்பு. நெறியின்மைகளும் இலக்கின்மைகளும் போரிட்டு மாயும் கொல்களம். வெறிகளும் பித்துகளும் எளியவை என்பதைக் காட்டும் பேராடி. சோதியன் தன் சொற்களை மீள மீளப் பெருக்கிக் கொண்டு பட்டின வீதியில் நுழைந்த போது குடிகளில் மூத்தவர்கள் மனை முற்றங்களிலும் திண்ணைகளிலும் அமர்ந்து சொல்லாடுவதைக் கண்டு புன்னகைத்தான்.

உலகளந்தோன் “மெய்தேடும் இளையோர்களுக்கு நானொரு அழைப்பு. நானொரு வாயில். நானொரு நற்செய்தி” எனக் கூவியபடி முன்சென்றான். இளையவர்கள் அவனை நோக்கி ஈர்க்கப்பட்டு விசைகுன்றாது தொடர்வதை நோக்கிய பின் “மெய்தான். பொய்யளவு வசீகரம் புடவியில் எந்த மெய்மைக்கும் இல்லை” என எண்ணிச் சிரித்தான். புரவியை நிறுத்தி முதற் காவல் நிலையத்தில் உடலை ஆறவிட்டு புரவிகளை ஓய்வுக்கென அழைத்துச் சென்ற போது உலகளந்தோன் தனது மேற் கவசத்தை அகற்றிய பின் மரக்குற்றியொன்றில் அமர்ந்து கொண்டான். சிறுவாள்களால் கீறியது போன்ற களவடுக்கள் நகையணிகள் போல அழகு கொண்டிருந்தன. இளைய வீரர்கள் வாயை முதலை போல திறந்தபடி அவனது மேனியை நோக்கிய போது “இளையவர்களே. எனது தேகத்தில் அரும்பிய வடுக்கள் ஒவ்வொன்றும் விண்ணில் நிகழ்ந்த போர்களில் நான் அடைந்தது. எளிய மானுடப் போர்களில் படைக்கலன்கள் என்னைத் தொட்ட வரலாறே இல்லை” என்று சொல்லித் தொடர்ந்தவன் “இது இந்திரனை எதிர்த்து நம் குடி புரிந்த போரில் ஐராவதத்துடன் நான் பொருதிய போது அதன் தந்தங்களில் ஒன்றை வெட்டினேன். அதை பூமிக்குக் கொண்டு வரும் பொழுது புரவியில் தடுக்கி கீறிய கோடு” என இடையில் கைவைத்துக் காட்டினான். இளையவர்கள் சிரிப்பலைகள் மூள அங்கிருந்து விலகிய சோதியன் பட்டினத்தின் பெருவீதி தன்னைத் தான் ஒருக்கியபடி எழுந்து வரும் அழகியென உருமாறிக் கொண்டிருப்பதை நோக்கினான். அரூபியின் முகம் திசையொன்றில் வெட்டிச் சிரித்தது. இரண்டு கைகளாலும் தன் குழலுக்குள் கைநுழைத்துக் கோதிக் குலுக்கி வழியவிட்டான். அயர்ந்து கிடந்த குழல் ஒருமுறை வீசிப் படர்ந்து அமைந்தது. அப்பால் உலகளந்தோனின் குரல் “அறிக இளையோரே. பெண்களில் பித்தென எழுவதே போர்களில் களியென நிகழ்வது. போர்களில் நான் பெண்ணென்று கீதையில் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறது” எனத் தொடர்ந்தான்.

TAGS
Share This