99: எதிராட்டக்காரி
சுவடிகை லீலியாவைச் சென்று எழுப்ப விழைந்தாள். சத்தகன் முன்முகப்பிலிருந்து ஆழிக்கரையை நோக்கிச் சொல்லற்று நின்றிருந்தான். கோட்டையின் காவல் நிலைகளில் நின்றிருந்த புலிவீரர்கள் தீப்பந்தங்களினை நூர்த்தபடி சூரிய ஒளியில் கவசங்கள் மினுங்க பணிகளை ஒருக்கிக் கொண்டிருந்தனர். காகங்கள் வாயில் மீன்முட்களைக் கொணர்ந்து முன் முகப்பில் வீசுகின்றன என்பதை நோக்கிய சத்தகன் கரைந்து குரலெழுப்பி அவற்றை விரட்டினான். கன்னங் கரிய சிறகுகள் சூரிய ஒளியில் மெழுகென ஒளிவீசின. சாலைகளை உற்று நோக்கினான். வீசப்பட்ட ஊன் துண்டுகளைக் கூட ஒருக்கி புலி வீரர்கள் அகற்றிக் கொண்டிருந்தனர். மனைத் திண்ணைகளில் சொல்லாடிக் கொண்டிருந்த குடிகள் எங்கெல்லாம் அழுக்குகள் சேரவில்லையோ அப்பகுதிகளில் அமர்ந்திருந்தனர். புலி வீரர்கள் மூக்கில் நறுமணத் துணிகளைக் கட்டிக் கொண்டு பணியாற்றினர். சத்தகன் மெல்லச் சினமுற்றான். பொறுப்பற்றவர்கள் எனக் குடிகளைக் கசந்து கொண்டான். உயிரைத் துச்சமென மதித்துக் களமும் காடும் வாழும் வீரர்களைக் கொண்டு களியில் தாங்கள் வீசிய ஊன் துண்டுகளை பொறுக்கி அகற்ற வைக்கிறார்கள். எத்தனை அவமதிப்பு. தங்கள் சொந்த மகவுகள் தானே அவர்களும். அவர்களுக்கு இடப்பட்டிருக்கும் ஆணையாலேயே அனைத்தையும் இன்முகத்துடன் ஆற்றி வருகிறார்கள். குடிகளைக் கொண்டு அழுக்குகள் அகற்றப்பட வேண்டுமென ஆணை கிடைத்திருந்தால் இன்றைய புலரிக் காட்சி எப்படி இருந்திருக்குமென எண்ணிய போது சத்தகன் முகத்தில் கோபம் அடங்கி புன்னகை தோன்றியது. சினந்து கொண்டே இருக்கும் சிறுவன் தும்பியின் வாலில் நூலைக் கட்டிப் பறக்கும் பொழுது அதன் வலியைக் கண்டு இன்புறுபவனென எண்ணிக் கொண்டான்.
சுவடிகை சென்று மஞ்சத்தறையில் நோக்கிய பொழுது லீலியாவும் நிலவையும் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தனர். லீலியா மண்வண்ண பேராடை அணிந்திருந்தாள். செலினி சுவடிகை துயின்றிருந்த நீள் மஞ்சத்தில் துயின்று கொண்டிருந்தாள். இரண்டு குழவிக் கரங்களும் அணைப்பவை போல விரிந்திருந்தன. முகத்தில் உறுமலொன்று உறைந்திருந்த பாவனை தெரிந்தது. கால்களை சிலந்தியினுடையவை போல விரித்த படி நீள் மூச்சுடன் சீரான துயிலில் அயர்ந்திருந்தாள். நிலவை அணிகள் எதுவுமற்று எளிய வெண்ணாடை அணிந்திருந்தாள். கூந்தலில் ஒரு வெண்மல்லிகை மின்னிக் கொண்டிருந்தது. விழிகள் தீயிலை மயக்கில் சற்றுச் செவ்வரிகள் படபடக்க களத்தை நோக்கியிருந்தாள். அவர்களுக்கிடையில் விரிந்திருந்த பெரிய சதுரங்கப் பலகையில் ஒளிவிழுந்து கொண்டிருந்தது. லீலியா தனது அரசியை மையக் கட்டத்திற்குக் கொணர்ந்து வைத்து விட்டுச் சுவடிகையை நோக்கிப் புன்னகைத்தாள். பெரிய வெண்கல்லில் செதுக்கப்பட்ட குழந்தை முகம் என எண்ணிக் கொண்டாள் சுவடிகை. பதிலுக்குச் சிரித்து விட்டு சதுரங்கப் பலகையின் முன்னே சென்று அமர்ந்திருந்தாள். லீலியாவின் ஆடுகாய்கள் பலவும் ஏற்கெனவே களத்திற்கு வெளியே வெட்டி வீசப்பட்டு விழுந்த மரங்களைப் போலக் கிடந்தன. நிலவை சில காலாட்களையும் ஒரு மந்திரியையும் இழந்திருந்தாள். களத்தில் சர்வ வல்லமையும் கூடி குருதி வழியும் முகத்துடன் விழிகள் கூச்சலிட அக்களத்தில் பிறிதெதையோ அவள் காண்பது போலத் தோன்றியது. அருகிலிருந்த அகல் விளக்குகள் சோதி கூடி அணைகிறதென எண்ணினாள் சுவடிகை. நிலவையின் பெருஞ்சிலை முகத்தில் தீ நெளிவுகள் விரிந்து அடங்குகின்றன என எண்ணிக் கொண்டாள்.
“எதை எண்ணி இங்கிலாது இருக்கிறீர்கள்” அரசி என்றாள் சுவடிகை. அவளது கீச்சிட்டாள் குரலைக் கேட்டவள் தொலைவிலிருந்து எழுந்து மீண்டவள் போல தேகம் ஒரு மின் நடுகுற்றுத் திரும்பினாள் நிலவை. சுவடிகையை நோக்கிச் சிரித்தாள். நெளியும் தீ சிரிப்பதைப் போல.
“சுவடிகை. உனது அம்சத்தில் எனக்கொரு அணுக்கத் தோழியிருந்தாள். உனக்கு நான் இன்று அளித்த வெள்ளிப் பதக்கம் அவளுக்கு நான் பரிசெனக் கொடுத்தது. அவள் களத்தில் வீரமரணம் அடைந்த பின்னர் இதை நான் எண்ணியிருக்கவும் இல்லை. இளையவன் அணித்தாலத்தைத் திறந்த பொழுது வெள்ளிப் பதக்கத்தில் பாயும் புலியென அவள் என் நினைவுகளில் எழுந்து விட்டாள். நீயும் அருகிருக்கையில் அவள் என்னுடன் உன் உடலின் சைகைகள் மூலம் பேசுவதாக எண்ணமேற்படுகிறது. சதுரங்கம் நானும் லீலியாவும் பேசிக் கொள்ளும் மொழி. அவளுக்கு என் மனநிலையை இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறேன்” என்றாள் நிலவை. அவளது குரலில் சோகம் அலைக்கரையில் உப்பு நுரையெனப் படிந்திருந்தது.
“சதுரங்கத்தால் பேசுவீர்களா” என மெல்லிய கூவலுடன் கேட்ட சுவடிகை லீலியாவைத் திரும்பி நோக்கி “அரசி உங்களுடன் பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார். மெய்யா. அதை நீங்கள் உணருகிறீர்களா” என யவன மொழியில் கேட்டாள். “ஓம் சுவடி. அவரது நெருங்கிய தோழியொருவர் கடும் போரில் மடிந்து விட்டார். அவருக்கும் இவருக்கும் நெருக்கம் மிக அதிகம். அவரது வாழ்வே இவர் வாழ விரும்புவது. கட்டங்களில் ராணியாக இவர் காப்பதும் அழிப்பதும் சூழ்வதும் புரிகிறார். ஆனால் சலித்துப் போயிருக்கிறார். அரசு சூழ்தலில் எஞ்சும் பெரிய சுமைகள் தாள முடியாமல் மீண்டும் இவரது தோழியை எண்ணிக் கொள்கிறார். அவர் இப்போது உடனிருந்தால் அதை விட மகிழ்ச்சிக்குரியதும் கிடைத்தற்கரியதும் பிறிதொன்றில்லை என எண்ணுகிறார்” என்றாள் லீலியா. சுவடிகை சிறுவாய் பலாச்செவிகள் எனத் திறந்திருக்க லீலியாவின் சொற்களைக் கேட்ட பின் பறையிலிருந்து கற்கள் உடைந்து தவழ்ந்து ஓடுவது போன்ற ஒலியுடன் அவள் சொன்னவற்றை நிலவைக்கு மொழிபெயர்த்தாள். நிலவை வியப்பின்றிச் சிரித்தாள்.
“எப்படி நீங்கள் சதுரங்கத்தால் பேசிக் கொள்கிறீர்கள். எனக்கு ஆவல் பொறுக்கவில்லை” என்றாள் சுவடிகை. தானகி சுடுபால் கொணர்ந்து அருகில் வைத்தபடி “உள்ளே அடுமனைக் கலன்களால் பேசும் மொழியொன்று உள்ளது. உனது எதிர்கால வாழ்விற்குப் பயனுள்ளது. ஒரு கிழவி உனக்குக் கற்பித்தே ஆவேன் எனச் சபதமிட்டு இருக்கிறாள்” எனச் சொல்லிச் சிரித்தாள். “அக்கா. பெண்கள் அறிய வேண்டிய மொழி சதுரங்கத்தின் நுண்மையான அசைவுகளையே. அரசு சூழ்தலில் திறன் என்பது நுண்மை. கூர்தல். வழிநடத்துதல். தேர்தல். அழித்தல். காத்தல் அனைத்தும் பொருந்தியது. அடுமனைக் கலன் மொழி ஆண்களுக்குரியது. கொட்டுப்படும் உலோகங்கள் போல கலகலத்துக் கொண்டிருப்பது. இக்களத்தில் அமைதியாகச் சிந்தப்பட்டு வழிந்து பெருகும் குருதியைக் காணவே நான் விழைகிறேன். அந்த அடுமனைக் கிழவி இக்களத்தில் புல்லாய்க் கூட இருக்க மாட்டாள்” எனறாள் சுவடிகை.
தானகி நகைத்துக் கொண்டு “கழுத்தில் வெள்ளிப் பதக்கம் ஏறியவுடன் பெருந்தளபதி என்ற பாவனை ஒட்டிக் கொண்டு விட்டது. இனி நான் மரியாதையுடன் பணிந்தே உன்னிடம் நடந்து கொள்ள வேண்டுமில்லையா மதுரை மாநகர் தந்த மாபெருந்தளபதி” எனச் சொல்லி அவளை நோக்கிக் கண் சிமிட்டினாள். இருவரதும் அணுக்கத்தைப் பார்த்த நிலவை ஈச்சியையும் மாதுமியாளையும் எண்ணிக் கொள்ள உள்ளம் தீயருகில் உப்பெனக் கரைந்தது. காலம் எவரையோ எவராலோ வரைந்த படியே இருக்கிறது. முடிவுறாத மாறுதல்கள் என நிகழ்பவை ஒரு சிலவே. எஞ்சிய அனைத்தும் ஏற்கெனவே வரைந்தவற்றின் கோடுகளும் வண்ணங்களும் கொண்ட புதிய ஓவியங்கள் என எண்ணினாள் நிலவை.
லீலியா புன்னகையுடன் சுவடிகையின் சிறுமுகத்தில் தோன்றும் களங்கமின்மையின் வியப்பைக் கண்டாள். நிலவையை நோக்கிப் புன்னகைத்த பின் சுவடிகையிடம் “நீ அவர் தேடிக்கொண்டிருக்கும் தோழியின் மெய்யம்சம் கொண்டவள் எனச் சொல். உன் முன்னோரும் அவரது தோழியின் குடிவழிகளும் ஒரு விதையில் படர்ந்து பரவிய காட்டுச் செடிகள் எனச் சொல்” என்றாள். சுவடிகை மெல்ல அதிர்ந்து கொண்டு லீலியாவின் சொற்கள் நிதானமான குரலில் தலை கவிழ்ந்தபடி சொன்னாள் சுவடிகை. சாளரத்தால் காற்று சுழன்று திரைச்சீலைகளை எவருடையதோ கரங்கள் அலை மடிப்பென வருடுவதை நோக்கிக் கொண்டிருந்தாள் நிலவை. சுவடிகை சொல்லி முடித்த பின்னர் அவளை அருகழைத்து அணைத்து விம்மி விம்மி அழத் தொடங்கினாள். தானகி மஞ்சத்தறையின் வாயிலை மூடினாள். லீலியா சாய்ந்து படுத்துக் கொண்டு சுடுபாலை அருந்திக் கொண்டே ஒரு கையால் நிலவையின் வெட்டப்பட்டுக் கிடந்த மந்திரியைத் தொட்டாள். சுடுபால் குவளை கையிலிருந்து பிடுங்கி எறியப்பட்டதைப் போலத் திரைச்சீலையில் பட்டு விழுந்தது. வலிப்புக் கொண்டவள் என முகமும் தேகமும் நடுங்கிக் கொள்ள மந்திரியின் ஆடுகாயைக் கைகளுக்குள் பிடித்துக் கொண்டாள். தானகி அவளை நோக்கி ஓடிச் சென்று நெற்றியை அழுத்தி கையைப் பிடித்துக் கொண்டாள். தாவிப் பாயும் பெரும்புலியென விரைவு கொண்டு செலினி நீள் மஞ்சத்திலிருந்து பெருமஞ்சத்திற்குத் தாவி அவளது கரங்களைக் கோர்த்து இழுத்துக் கொண்டாள். யவன மொழியில் “லீலியா. பிடியை விடு. பிடியை விடு” எனக் கூவினாள். சுவடிகையும் நிலவையும் அவளது கால்களைப் பற்றினர். நால்வரின் உடலிலும் ஒரு அதிர்கணம் கலைந்து ஒன்றாகியது போல லீலியாவில் தோன்றிய புலக்காட்சிகள் மின்னலின் விரிசடைகளென பரவிப் படர்ந்த போது அதிர்ந்து கரங்களை பிடுங்கி எடுத்து விலகினர். மெல்லிய சுழற் காற்றுடன் கருமேகங்கள் வானில் குலைகுலையாகப் பெருகிவருவது காற்றின் குளிர் மாற்றத்தில் மேனிகள் அறிந்து கொண்டன. சூரியன் மேகக் குலைகளினால் ஒளியிழந்த போது மஞ்சத்தறையில் மழையிருள் வெளிச்சத்தில் சதுரங்கப் பலகையின் மீது லீலியாவின் கரத்திலிருந்த ஆடுகையை விசிறி விழுந்தது. நிலவை ஆடுகாயை நோக்கிய போது அது புன்னகையுடன் எழுந்து வந்திருக்கிறதென எண்ணினாள். அவள் அங்கு தானிருக்கிறாள். ஒவ்வொரு முறையும் அவள் தனித்திருந்து ஆடிய களங்களின் முன்னிருந்த எதிர்முனை அவளே. லீலியா எழுந்து அமர்ந்த போது நிலவை மெல்லிய அதிர்ச்சி கொண்டாள். அத்தனை சினமும் அழலும் குரூரமும் வெறுப்பும் கொண்ட முகமென லீலியாவின் முகம் மாறுமென அவள் எண்ணியிருக்கவில்லை. கொல்விலங்கின் சுடுமூச்சு அறையுள் எழுந்தது. காட்டின் தழைவாசனை நாசியில் ஏறியது.
தீயிலைத் துதியை எடுத்துத் தானகியிடம் நீட்டினாள் லீலியா. தானகி நடுக்குடன் சென்று துதியை மூட்டினாள். லீலியா துதியை வாங்கி வாயில் இழுத்து ஊதிய பின் ஒரு வெறிச் சிரிப்பை வீசினாள். மேனி ஆடியதிர “ஈச்சி” என ஊளையிடும் வேட்டை நாயெனக் கூவியபடி மஞ்சத்தில் சரிந்து மயங்கினாள் நிலவை. சுவடிகை அஞ்சியபடி விலகினாள். செலினி இடையில் கையை ஊன்றியபடி திரும்பி நடந்து சென்று மஞ்சத்தில் அமர்ந்து கொண்டாள். தானகி நிலவையின் அருகு சென்று அவளை எழுப்பத் தொடங்கினாள். மண்ணில் வீழ்ந்த பெரும்பாறையென அசையாது கிடந்தவளின் உதட்டின் நுண்ணசைவில் ஒலித்தது “ஈச்சி”.