104: மடப்பெண்ணே : 02
பெரும் புற்காட்டிடை புலி மறைவதென பொன்னனின் நோக்கிலிருந்து முத்தினி அகல விழியருகில் குவிந்து மிதக்கும் மின்மினிப் பூச்சிகளென ஒளியுவகை கொண்டு எழுந்து நெருங்கி அவனது முகம் நோக்கினாள் செழியை. எப்பொழுதும் பரபரக்கும் செழியையின் விழிகள் இப்பொழுது ஒருகணத்தை முழுதளப்பதற்கு ஒரு முழுப் புடவியை விழிகளில் கட்டி இழுப்பதைப் போல ஒவ்வொரு அணுக்கணுவிடையும் பிந்தினாள். ஒரு முழுப்புடவி காற்றைப் போல எடை கொண்டதெனவும் கல்லாலானவை எனக் கற்பனையிலும் எண்ணிக் கொண்டாள். அவனது விழிமணிகளுக்குள் மெல்லிய கருமையும் மண்ணிறமும் கொண்ட நீர்வேர்கள் கரும்பாதாளத்தில் உள்ளிழைகிறது. அதை எங்கனம் உற்று உட்செல்வேன் எனத் தேடினாள். ஒரு விழிமணிக்கும் இன்னொரு விழிமணிக்கும் இடையில் ஒரு யுகம் பெயர்ந்தாள். கரிய பெரும் நீர்வீழ்ச்சிகள் இரண்டு அவன் விழிமணிக்குள் வீழ்கின்றன என எண்ணியிருந்தாள். மூச்சில் குளிரலைகள் பெய்து கொண்டிருந்தன. சின்னஞ் சிறு வெம்மை இத்தனை மகத்தான நெருப்பை எங்கனம் கொண்டிருக்கிறதென பிறிதொரு வெளியில் தானே வியந்து கொண்டிருந்தாள். அவனது விழிகளின் நோக்கில் விருபாசிகை சொல்லுரைத்து எழுப்பிய ஆண் தெய்வத்தை நோக்கினாள்.
அவன் நோக்கில் ஒற்றை மலரே நீ. நீ என் விழிக்கு முன் மலர்ந்திருக்கிறாய். இக்கணம் முழுமையும் உனை நோக்குவேன். பிறிதிலாது அமிழ்வேன். கனல்வேன். புனல்வேன். புகுவேன். வெளியேறேன். மயங்குவேன். அஞ்சலேன். அவிழ்வேன். திறப்பேன். தித்திக்கிறேன். எதைக் கொண்டு நீ மின்னுகிறாய் என நோக்குவேன். நோக்கிக் கொண்டேயிருப்பேன். உன் மூச்சில் இனிமையை கரப்பேன். உதட்டில் எழும் இன்மணத்தில் கோடி கோடி எடைகொண்ட என் இதழ்களை சாற்றுவேன். அவை வண்ணத்துப் பூச்சிகளாய்ச் சிதறி பொன்வண்டுகளென உன்னில் ஊரும். ஒவ்வொரு மயிர்க்கணுவுக்கும் ஒன்றென உடைந்து மீண்டும் பிறப்பேன். கவி சொல்வேன். சொல்லில் உன்னை முடிச்சவிழ்ப்பேன். புதிரில் உன்னைத் தொலைய வைத்து விழி சுழல்கையில் கீழ்வெண் விழிகளில் பால்சுரக்கும் ஊற்றுகளைத் தேடுவேன். வெண்மென் படலத்தில் அங்கனம் என்னை ஒழிப்பேன். நீ விழி அசைத்தால் அக்கணமே மறைவேன். தொலைவில் புதைவேன். மீள மாட்டேன். இதோ இக்கணம் மட்டுமே நான் உன் முன்னிருக்கிறேன். அசைக்காதே. நோக்கு நோக்கு. நோக்கியிரு. நோக்கில் நாம் இருகனவுகள் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொண்டே சேர்ந்து அமைந்து விலகுவது போல பார்த்துக் கொள்கிறோம். பல்லாயிரம் பல்லாயிரம் சொற்களை இருளில் விண்மீன்களென நீந்த விடுகிறோம். எவரும் பார்க்காத போதும் ஆடையைச் சீராய்ச் சரிசெய்து கொண்டிருப்பவள் போல நோக்கில் நிலைகொண்டிருப்பவள் என ஒருகணம் செழியைக்கு மயக்கெழ. இல்லை. அவன் என்னை நோக்குகிறான். நான் சொல்லிக் கொள்ளும் சொற்களெல்லாம் எவை. என் காதலனுக்காக நான் சேர்த்து வைத்த கற்பனைகளின் அணிச் சொற்களா. என்ன இது. எதனால் இந்த நோக்கு என் ஆடிப்பாவையிலிருந்து ஒலிக்கிறது. எனது சொற்களால் அவன் யாரைச் சொல்லில் எழுப்புகிறான். கால்கள் எங்கனம் நழுவாது நிலை கொள்கின்றன. அவன் கரங்கள் என் இடையில் தொடுகின்றனவா. தொடும் எண்ணம் எங்கிருந்து தோன்றுகிறது. மேனியின் விழிகளே திறந்து கொள்ளுங்கள். இவ்வளவு நேரம் இருவிழிகளாலா இவனை நோக்கினேன். லட்சோப லட்சம் விழிகள் மேனியில் தோன்றியது எம்மாயம். ஒற்றை விழியாய் ஒற்றை நோக்காய் நான் எஞ்சுவது எவன் தொடுத்த கணை முனை. எவன் பிழிந்த அதரத்தின் சுவைச் சொட்டு. எவன் அளித்த அமுதின் நஞ்சு.
*
முத்தினி விருபாசிகையின் அருகில் வெறியாட்டு அயர்ந்த பூசாரியைப் போலச் சரிந்தாள். மூச்சில் இனிமையும் திகைப்பும் உவகையும் உச்சமும் முயங்கிக் கொண்டிருந்தன. சாளரத்தில் விழுந்த இளமழைக் காற்று ஊஞ்சலில் கால் வைத்து விண் பாயும் சிறுமியென மஞ்சத்தில் தாவி அப்பால் தவழ்ந்தெழுந்து சென்றது. குளிர் காற்றில் மேனி சிலிர்த்து கைவிரல்கள் நடுங்கின. முத்தினியின் ஆண்குறியில் சுக்கிலத் தண்திரவம் கசிந்திருந்தது. விறைப்பு நீங்காதிருந்த குறி இடையாடையால் நீண்டிருக்க விருபாசிகை மெல்ல அவளை நோக்கி உதட்டைச் சுழித்துச் சிரித்தாள். சாளரத்திற்கு அப்பால் கார்மேகங்கள் கருமஞ்சங்களென ஒருங்கிக் கொண்டிருப்பதை நோக்கினாள். செழியையின் மேலாடை சரிந்து இடமுலைக் காம்பு வெளிப்போந்து பொன்னனின் மார்பில் தொட்டுக் கொண்டிருந்தது. காம்பு பருத்து விழியானது போல. விழிகள் ஒன்றையொன்று ஒற்றி முத்தாடுவது போல என எண்ணினாள். அவளது கால்கள் நடுங்காது சிலை போல ஒசிந்து விழிகளும் சிலைத்து நகராது இமைகள் அசைவதை அவள் அறிவாளா என எண்ணிச் சிரித்தாள் விருபாசிகை.
சிங்கத்தின் வாய் போன்ற துதியொன்றை எடுத்து தேவ இலை மலர்களை நிரப்பினாள். அகலில் மூட்டிக் கொண்டு முத்தினியிடம் கொடுத்தாள். விருபாசிகையின் கரம் அவள் விரல்களில் தொட்ட போது துடித்து எழுந்து படபடத்தாள். “என்னடி நடக்கிறது இங்கு. இவன் யார். எங்கேனும் கந்தர்வனோ யட்சனோ விண்ணவனோ தான் என எண்ணுகிறேன். நோக்கில் ஒரு கணம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஆனால் ஒளியில் அவனை நோக்கி விலகிய போது வானம் கருமை கொண்டு இளமழை பொழிந்து கொண்டிருக்கிறது. இளமழை பொழிவதை நோக்கினாயா வெள்ளி நகங்கள் பறப்பது போல பெய்கின்றது. அனைத்து சுகந்தமும் மண்ணில் இன்று இவன் முன் அவிழ்ந்தே ஆவேன் என ஆணை கொண்டு எழுந்திருக்கிறது. ஆணையே ஆண் என எண்ண வைக்கிறான். இவன் யார்” என்றாள் முத்தினி.
விருபாசிகை வேய்குழலில் இனிமையூற்றிய குரலில் சொல்லத் தொடங்கினாள். “முத்தினி. என் செல்ல மடப் பெண்ணே. இவன் மானுடனே. சிற்பி. நம் குடியினன். மங்கலச் செல்வரின் சிற்பசாலையில் கல்வி பயில்கிறான். நேற்றைய களியிரவின் முதல்நாளில் பொற்தேரில் இவனைக் கண்டேன். முதற் பார்வைக்கு எளியவன் எனவே தோன்றினான். ஆனால் அவன் விழிகளில் கனவிருந்தது. அது பெண்ணுக்கும் மண்ணுக்கும் பொன்னுக்கும் கட்டுப்பட்ட கனவல்ல. மானுடம் கடந்த ஒன்றைக் காண விழையும் கனவு. கனவு கொண்ட ஆண் பாறையில் ஒழிந்திருக்கும் தெய்வம் போன்றவன். நம் சொற்கள் உளிகள். அவனை அங்கிருந்து மீட்டெடுக்க வேண்டியது பெண்ணின் பணி. அந்த எளிய பணியையே நான் இயற்றினேன். அவனுக்கு அவனை முழுதாக எழுந்து கொள்ள. மிச்சமின்றி அவனென்றாக வாய்ப்பளித்தேன். அப்படி ஆகும் தோறும் ஆண் நாம் வளர்க்கும் புலியென்றாவான். நம் விளையாட்டுத் தோழன். களங்களில் காவலன். கனவுகளில் யட்சன். நம்மையும் அங்கனம் நாம் விரும்பிய வண்ணம் முழுதுகொள்ள விழைவு கொள்பவன்.
காமம் தேய்ந்து மறைந்து வளரும் நிலவு போல மடப்பெண்ணே. முழுநிலவில் பித்துண்டு. கருநிலவிலும் பித்துண்டு. ஆழிகளை நுரையெழுப்பி ஈர்க்கும் நிலவின் ஒளிர்முகமும் காமம். கருநிலவில் சிரசுக்குள் எழும் ஆழிகளில் கொந்தளிப்பதும் காமம். இருப்பிலும் இன்மையிலும் காமம் பித்தே. ஆனால் இருப்பை விட இன்மைக்குப் பித்து அதிகம். உறவை விடப் பிரிவுக்கு எடை அதிகம் என்பது நூலோர் சொல்லல்லவா.
முழுதெழும் ஆணைப் பெண் அஞ்சவேண்டியதில்லை மடப்பெண்ணே. அவனை அறிய முதன்மை வாயில் அதுவே. அஞ்சாது நோக்கி. அவனை ஆக்கும் விசைகளை அறிய வேண்டும். கரவு போல அல்ல. ஒரு ஊழ்கம் போல. அவனை யார் என அறியும் தோறும் நீர்க்குமிழிகளாலான அரண்மனைகள் ஒன்று தொட்டு ஒன்று உடைந்தழிவது போல அவன் அழிவான். அவன் அழிவதை நோக்கியிருக்க வேண்டும். அவனது பித்தோ வேட்கையோ விழைவோ எது குறித்தும் தீர்ப்பின்றி நோக்க வேண்டும். அவன் பிறிதொரு உயிர். என்னுடைய உடமையல்ல. பெண்கள் தனக்கென்று கரந்து வைக்கும் விளையாட்டுப் பாவையென அருமணியென தனது அகங்காரமென வென்ற இரையென தனது உடமையென ஆணை ஆக்கும் தோறும் தெய்வத்தை இழந்த கற்சிலையென அவன் ஆவான். பின்னர் நாம் வைத்துக் கொள்வது கல்லாலான விளையாட்டுப் பாவையொன்றை மட்டுமே. உனக்கு எவர் வேண்டும் மடப் பெண்ணே. நான் விளையாட்டுப் பாவைகளை உடமை கொள்ளும் எளிய பெண்ணல்ல. பெருங்களங்களில் தெய்வங்களுடன் மெய்யுத்தம் புரிய விழைபவள். எவள் மெய்யை அனைத்தாலும் அறிய விழைகிறாளோ அவள் விடுதலையானவள். அவளது விடுதலை அவள் விழைவதற்கும் அளிக்கப்பட்டு துலாக்கோல் நிகர் செய்யப்படும்.
மெய்யறிதலென்பது எப்பொழுதும் கற்றலே. அன்போ காதலோ காமமோ போரோ அரசு சூழ்தலோ அறங்களோ நெறிகளோ கூத்தோ கவியோ பாடலோ சிற்பமோ யோகமோ ஞானமோ அனைத்தும் கற்றலினால் நிகழ்வது. கற்கும் பொருளில் மாணவருக்கு அகப்பிணைப்பு மட்டுமே இருக்க வேண்டும். அதை உடமையென்று கொள்ளலாகாது. தன்னறங்கள் தனக்கு மட்டுமேயானவை. அதை பிறருடன் நெருக்கிக் கொள்ளலாகாது. கற்றலில் உனது வினா என்ன என்பதே நீ கருத வேண்டியது. எனது அறிதல் உடலும் அகமும் முயங்கும் உச்சங்களில் ஒன்றான காமம் ஏன் இத்தனை நுண்மையாக்கம் செய்ப்பட்டு பாவனைகளால் மூடப்படுகிறது. இத்தனை நெறிகளும் பெண்ணையும் ஆணையும் சுற்றி வனைந்திருக்கும் பின்னல்களை அளித்த தூபிகை எதற்காக இதனை ஆக்கித் தந்தாள். எல்லாக் கலைகளும் ஆன்மீகமான காமமே என எனக்குத் தோன்றுவது எதனால். ஆசிரியரின் பாதங்களில் முத்தமிடும் காதல் காமத்தை விட எக்கனத்தால் பெரியது. என்னை நான் பொன்னனுக்கு சூர்ப்பனகை என்றே சொல்லிக் கொண்டேன். அவள் என் ஆசிரியர். அறுக்கப்பட்ட விழைவு போல ஆற்றல் கொண்ட வஞ்சம் எது. கனிந்த பின் வஞ்சம் கொண்டோர் போல அன்பு கொள்வோர் எவருளர்.
நான் அவளை ஒவ்வொரு நாளும் என்னில் பயில்கிறேன். காண்கிறேன். கடக்கிறேன். ஒவ்வொரு கற்றலுக்கும் ஆசிரியருக்கும் எல்லை உள்ளது. அது மானுடருக்கு அளிக்கப்பட்ட வாழ் காலத்தால் நமக்கே உண்டாகும் எல்லையே ஒழிய. கற்றலுக்கானதல்ல. காமத்தை எளிய பயில்வும் புணர்ச்சியும் என்பதற்கு அப்பால் ஞானத்தின் வழியாக கற்றலின் சுரங்கமாக நோக்குவது இயல்வதே. நான் அவ்வழியில் காமத்தின் மாணவி. பயில்வினி.
கற்றலென ஆகாத எதுவும் சிற்றுணர்ச்சியே. சிற்றின்பங்கள் எளிய குடிகளுக்கானவை மடப்பெண்ணே. நீ பெருங்கனவுகளில் வாழ்க்கையை அளித்துக் கொள்ளாத வரை வாழ்வின் உலையில் கொதித்துக் கொண்டிருக்கச் சபிக்கப்படவள் ஆவாய்” என்றாள். முத்தினி உவகை திரண்டு மேலும் அவள் சொற்களால் உவகை கூட்டப்பட்டவளென அவளது ஆர்வம் கொழிக்கும் குழவி விழிகளையே நோக்கியிருந்தாள்.
“நோக்குக மடப்பெண்ணே. இங்கு நிகழ்வதை ஒரு பயிற்சி ஆட்டமெனவோ போரெனவோ எண்ணிக் கொள். இருவரும் இருவேறு பின் கதைகள் கொண்டவர்கள். இருவேறு உலகுகளைச் சேர்ந்தவர்கள். ஒரு மூச்சில் எழும் இன்மணம் அவர்களை அரூபக் கயிற்றால் இணைக்கிறது. ஒரு நோக்கில் பல்லாயிரம் வாழ்வுகள் ஒருவரை ஒருவர் அறிந்தவர் போல நகையெழுகிறது. இருவரது மார்பின் காம்புகளும் இதயமெனத் துடிக்கின்றன. அவனை நோக்கு. கள்ளமற்ற விழிகள். ஒழிக்க ஒன்றுமற்றவனே கள்ளமற்றவன். அதற்கு வழிவிட்டு நிற்பதாலேயே அவள் அதை அறியும் கணத்தை அடைகிறாள். இது நூதனமான சூது மடப்பெண்ணே” என்றாள் விருபாசிகை.