111: மெய்த்தோழன் : 02

111: மெய்த்தோழன் : 02

வலைக்குள் வலையென நுண்ணியும் விரிந்தும் அகன்றும் உருவாகிய புலிகளின் குழு முற்றொருமை கொண்டு பிற குழுக்களைத் தாக்கி அழித்து அரசாணை கொண்டெழுந்த போது அரசு சூழ்தலின் தலைமைப் பொறுப்பினை தமிழ்ச்செல்வனிடமே காலம் கையளித்தது. சூர்ப்பனகர் அவர்களது மதியூகியர்களில் முதன்மையானவராக இருந்தார். எதை எங்கு எதன் பொருட்டு எங்கனம் உரைக்க வேண்டுமோ எச் சொல் எக்காலத்தில் கனிந்து கனியாக வேண்டுமோ அதை அவ்வாறே விதைத்து அறுக்கும் வல்லமை கொண்டவரென அவரை மதியூகிகள் மதிப்பிடுவர். தமிழ்ச்செல்வன் அரசு சூழ்தல்களில் குடியினரின் முதன்மை நாவென சூர்ப்பனகரை அமர்த்தினான். சூர்ப்பனகர் தமிழ்ச்செல்வனை விட வயதில் மூத்தவர். கல்விச் சாலையிலும் மன்றுகளிலும் நிறைந்து கற்றவரெனக் குடிகளால் மதிக்கப்படுபவர். சிங்கை புரியுடனான பேச்சுவார்த்தை மன்றுகளில் சூர்ப்பனகரது திறன்கள் பாறையில் மோதும் பல்லாயிரம் அலைக்கரங்களென நுரைத்துச் சுழித்துத் திரும்பும் பொழுது அவரருகே மந்தணப் புன்னகை மாறாமல் தமிழ்ச்செல்வன் உடனிருப்பான். நீலனுக்கும் சூர்ப்பனகருக்கும் இடையில் ஒரு நீள்பாலமாகத் தூங்குவதே தன் பணியென எண்ணியிருந்தான் தமிழ்ச்செல்வன்.

தமிழ்செல்வனின் உடனிருப்பை நீலன் தன் ஊழெனவும் பேறெனவும் எண்ணி வியந்து அவன் முன்னே சொல்கையிலும் மாறாத மந்தணமொன்றைச் சூடியபடி உதட்டில் ஈரம் கனியும் புன்னகையுடன் குழலை பின் கோதி உடலைச் சீராக ஒருக்கி அமர்ந்திருப்பான்.

சிங்கை புரியுடனான பேச்சு வார்த்தை மன்று முடிந்து திரும்பிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வனையும் அவனது குழுவினரையும் வன எல்லைக்கு அப்பால் சிங்கை புரியின் ரகசியப் படையினர் தாக்கினர். தமிழ்ச்செல்வனின் வலக்காலின் தொடையில் பாய்ந்த வாள்வீச்சு அவனது கால்நரம்புகளில் ஒருங்க முடியாத விலகலை உண்டாக்கியது. நடையில் அவன் தாளம் பிசகிய போது பேச்சுவார்த்தை மன்றுகளிற்கான தேவைகள் ஓய்ந்தன. போரொன்றே சிங்கை புரியினர் விழையும் பேச்சு வார்த்தை என முற்றொருமை கொண்டான் நீலன்.

*

நீலன் இளமழையில் பைதலென நடந்து வருவதை நோக்கி உவகை விரிந்த தமிழ்ச்செல்வன் தூவலில் நனைந்து மெய்ப்புக் கொண்டான். அவனது இளவயது நண்பன் களம் புகுந்த முதற் போரின் பெருவெற்றியுடன் பெருஞ்சாலையில் அவன் பெயர் எழுந்த போது கூவியார்த்த ஆயிரமாயிரம் குடிகளின் குரல்களில் அவன் அரூபமாய் அப்பெருவெளியில் எழுந்த கணத்தை எண்ணிக் கொண்டான். நீலழகன் எனும் பெயர் ஒரு மந்திரமென ஒலிக்க முன்னரே அந்த தெய்வத்தை அறிந்தவன் இக்கணம் அவன் இளநண்பனை பழங்கால தெய்வமொன்று மீண்டும் இளமை கொண்டதென நோக்கினான்.

காலம் முடிவிலாத அலைக்கழிவுகளில் எஞ்சிய சிறு நெற்றென நீலனை அள்ளி எறிந்திருக்கிறது. நீலனின் சொற்கள் பேரழிவுகளின் முன்னே குடிகளைக் கொணர்ந்து நிறுத்தியதென சூர்ப்பனகர் தமிழ்ச்செல்வனிடம் உறுக்கமாகக் கூறிய இரவை எண்ணிக் கொண்டான். இறுதியாக நடந்த போர் எட்டுப் பருவங்கள் நிகழ்ந்தது. தாக்குதலும் மீளலும் மீளத் தாக்குதலும் பின்வாங்கலெமென நிலமும் வீரர்களும் சுருங்கிக் கொண்டே வந்தனர். ஈச்சி மடிந்த மாதோட்டப் போரின் இரவில் தலைப் பட்டினத்தின் மன்றில் துயிலமுடியாமல் சூர்ப்பனகர் தீயிலைப் புகையை நடந்து நடந்து புகைத்துக் கொண்டிருந்தார். மாலை முதல் தீயிலை புகைத்து அவரது பெருவேழ விழிகள் சிவந்து செம்பரப்பாகியிருந்தது. தனது மூச்சை ஆழ இழுத்தும் பரபரக்கும் எண்ணங்களை அமிழ்த்த ஒண்ணாமல் சூர்ப்பனகரின் முகம் வெடித்துக் கொண்டிருந்தது. மன்றின் உள்ளே மேலதிக வீரர்களை ஒருக்குமாறு நீலன் ஆணைகளைப் பிறப்பித்தும் இளம் வீரர்களை களவுதவிக்கு அனுப்பும் ஒப்புதல் கேட்டும் இடம்பெற்றுக் கொண்டிருந்த கூட்டத்திலிருந்து எச்சிலைக் காறி உமிழ்பவரென சூர்ப்பனகர் வெளியேறிய போது நீலனின் நிழல் விழிகளென்றான தமிழ்ச்செல்வன் அவரைப் பின் தொடர்ந்தான். காற்றில் அனல் கூடிய இரவு. மன்று வாயிலில் நின்றிருந்த அன்னையரை நோக்காது படியால் இறங்கியவர் புரவிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரச மரங்களுக்கு அருகில் சென்று காறிக் காறி எச்சிலை உமிழ்ந்து கொண்டார். இளைய வீரனொருவன் அவருக்கு தீயிலைத் துதியை மூட்டிக் கொடுத்தான். புரவிகள் கால்மாற்றிக் கொண்டு ஈக்களின் தொடுதலுக்கு மேனிகளைச் சிலிர்த்துக் கொண்டும் நின்றன. காற்றில் தீயிலை வாசம் இனிமையைக் கூட்டிக்
கொண்டிருந்தது. தீயிலைப் புகையில் சூர்ப்பனகர் மூழ்குவது பிறிதெல்லாம் கடந்த வெளியொன்றில் அமர்ந்து நித்தியமாய் இசை கேட்டுக் கொண்டு வாழும் பிறவியொன்றின் யாழ் மீட்டலென எண்ணுவான் தமிழ்ச்செல்வன்.

தமிழ்ச்செல்வன் மெல்ல அடியெடுத்து காற்றில் உலைவு கொண்டு முன்னகர்ந்து வந்தான். சூர்ப்பனகர் கனைத்து இருமிக்கொண்டு புகையை ஊதியும் இழுத்தும் அவனை நோக்காது விண்மீன்களை நோக்கியிருந்தார். “மூத்தவரே. மன்றில் நீங்கள் அமர்ந்திருப்பது முறை” என்றான் செல்வன். “முறையிருக்கும் மன்றிலேயே நான் அமர்வேன் செல்வா. எத்தனை தொலைவுக்கு இந்தக் கிழப் புரவியை நுரையும் தீர்ந்த உடலுடன் இழுத்துச் செல்லப் போகிறீர்கள். உங்கள் தோழர் எடுக்கும் முடிவுகளுக்கு மாற்றைக் கேட்கும் செவிகளை துர்தெய்வமொன்றுக்கு பலியிட்ட போது நம் குடியின் முதலழிவு தொடங்கிற்று. அழிவுகளால் குடிகளில் எழுந்த சினம் பல்லாயிரம் விழிமடல்களாய்த் தோன்றி நீலனின் நோக்கை மறைத்து அது தன்னைத் தான் பெருக்கியது. காலத்தின் மாபெரும் படைக்கலங்களென ஆகும் எவரும் வெறும் கருவிகளே செல்வா. வரலாற்றை உண்டாக்குபவர்கள் மீள மீள அதையே மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். செயல் யோகத்தில் வாழ்க்கையை அளித்து ஞான வழி தேர்பவர் அடையும் உவகை வேறு. குடிகளுக்கென எழுந்து அவர்களை ஒருக்கி பண்பாட்டின் குடைமுனைகளை இழுத்து பெருவெண்கொற்றக் குடை உயர்த்தி அமரும் அரசர்கள் அடையும் பதைப்பு வேறு. நாம் அத்தகைய ஒரு பெருங்கருவியின் சிறு அச்சாணிகளே. நம் தலைமேல் காலவெள்ளம் கடந்து விட்டது. எஞ்சிய மூச்சில் அதன் அணைவு வரை காத்திருக்க வேண்டும். ஊழெனும் பெருநாகம் தன் சட்டையை உரித்துத் தானே தன் சட்டையை ஆக்கி முடிக்கும் வரை இது உதிர்காலம். இங்கு சொல் ஒரு நிமித்தம் மட்டுமே” என்றார் சூர்ப்பனகர்.

தமிழ்ச்செல்வன் குரலில் மாறுபடாத தண்மையுடன் “யோகமென்பது எந்த நிலையிலும் பின் நோக்காது முன்செல்ல வேண்டியது என்பதை தாங்களே எனக்குக் கற்பித்தீர்கள் மூத்தவரே. எவரொருவர் தன் ஊழுக்கும் அப்பால் விசைகொண்டு வரலாற்றில் எழுகிறாரோ அவர் தெய்வங்களை போருக்கு அழைப்பவர் என்பது எளிய குடிகளின் நம்பிக்கை. இன்று நானொரு எளிய குடியாகவே என்னை உணர்கிறேன். நமது அரசர் தெய்வங்களுடன் பொருதி விட்டார். நம்மை ஆக்கி அளிக்கும் அறியா விசைகளுடனும் ஆற்றல்களுடனுன் தன் தலைகொண்டு சென்று மோதுகிறார். அதன் சுழல்வை அவர் ஒருவரால் தாங்கிக் கொள்ள இயலாது. வரலாற்றின் மனிதர்கள் பல்லாயிரம் எளியவர்களின் பல்லாயிரம் விழைவுகளின் கூம்பு முனை. பல்லாயிரம் அறிய முடியாதவைகளின் சுழற்புயலின் கண். அவர்கள் வரலாற்றில் நிலைகொள்வதற்கென்றே உருவானவர்கள். அதற்கென்றே ஊழ்வலைகள் பின்னப்படுகின்றன. அவர் அதன் மர்மமான முடிச்சொன்றாக அவிழாது இறுகுகிறார். காலம் அவர் வந்து சென்ற பின்னரே அவரை அளக்கும் கருவிகளை மானுடருக்கு அளிக்கிறது. நாம் கலங்குவது நம் கடந்த கால அறங்களின் பொருட்டே. அவை அம்முடிச்சில் எதுவொன்றாக ஆகப் போகிறது என்பதை எவரால் வகுத்துவிட முடியும்” என்றான். அவனது நீள்குழல் கலைந்து காற்றில் பாய்மரமென ஊதியணைந்து கொண்டிருந்தது. நோக்கில் அறியமுடியாமையை அறியாமலேயே ஏற்கும் உறுதி மின்னிட்டது. சூர்ப்பனகர் தனது வெண்நரை சுழலும் குழலை உதிர்ப்பவர் போல உதறிக் கொண்டு உதட்டைச் சுழித்து கீழிறக்கினார். அவர் சிந்தனை வயப்படும் பொழுது அங்கனமே முகம் அமைவார் என்பதைத் தமிழ்ச்செல்வன் அறிவான்.

மெல்ல ஆழ மூச்சை எடுத்துக் கொண்டு “விழிகளுக்கு முன்னர் நிகழ்பவற்றை வகுத்தும் தொகுத்தும் நெறியை ஆக்குவதும் நெறிகளை நோக்கி அரசை குவிப்பதுமே நமது பணி செல்வா. நாம் காலங்களுக்கு அப்பால் சென்று நோக்கியமைபவை அனைத்தும் காவியத்தில் ஒரு வீரமகனை நிறுத்தி அளப்பதைப் போன்றது. கதையென்றாகிய பின்னர் அனைத்தும் எளியவை போன்றும் விந்தையும் சாகசமும் நிறைந்தவை போல் தோன்றும். ஆனால் ஆழத்தில் இறைக்கப்படும் குருதியையும் விசைகள் மானுடரை அலைக்கழித்து எழுவதையும் நாம் நம் நெறிகளின் துணை கொண்டு கடிவாளமிட்டே ஆக வேண்டும். நீலன் இப்போது ஒரு காட்டுப்புரவி. காட்டுப்புரவிகளின் அரசெனவும் ஆகியிருப்பவன். அவனது நோக்கை வருங்காலம் எனும் பொன்னெதிர் மாயை நியாயப்படுத்தாது. அதேவேளை அனைத்தையும் நியாயம் வழி நின்று ஆற்றுவதும் கூட இயலாது என்பதை அறிவேன். நாம் கற்ற அறங்கள் நம் அகமென ஆகுவது இன்பமென எண்ணியிருந்தேன். இன்று அதுவே நரகத்தின் முள்ளென நெஞ்சுக் கூட்டுக்குள் உறுத்துவதை என்ன செய்ய இயலும். எனது ஊழ் இதை நொந்தே மடிவது” எனச் சொன்னார் சூர்ப்பனகர்.

“நான் உங்களை எனதகம் எனவே இளமை முதல் எண்ணி வருகிறேன் மூத்தவரே. உங்கள் சொற்கள் நம் குடியின் ஆழகம் என என்றும் ஒலிக்க வேண்டியவை. மாபெரும் அறங்களை நோக்கிச் செல்லும் மாபெரும் ரதத்தின் சகடங்கள் குருதியிலேயே சுழல்கின்றன. என்றோவொருநாள் அக்குருதியின் சகதியிலேயே சிக்கி இறங்கவும் வேண்டியவை. நான் எளிமையானவன் என ஒதுங்கிக் கொள்ள விழையவில்லை. இதில் என் கரத்திலும் குருதியுண்டு. மாறாத உறையாத என்றும் ஒழுகிக் கொண்டேயிருக்கும் குருதி. அதை நான் குடிகளுக்காகவல்ல. என் நண்பன் நீலனுக்காவே பூசிக் கொள்கிறேன். அதில் எனக்குக் குற்ற உணர்வுகள் இல்லை. தலையை அடியில் கொடுத்த பின் எளிய மானுடர் தெய்வத்திடம் வேண்டிக்கொள்வதில்லை. நீலன் காலம் நமக்களித்த குடித்தெய்வம். போரின்றிக் குடிகள் வளர்வதில்லை. எண்ணற்ற மானுடர்களின் பெருக்கு பெருக்கு போரினாலேயே தன்னை தான் கற்றுக் கொண்டு வளர்கிறது. தன்னை தன் மெய்விசைகளுடன் பொருதி எழுகிறது. எழும் குடிகளே வாழ்வார்கள் என்பதல்லவா வரலாற்றின் எளிய கணக்கு” என்றான் தமிழ்ச்செல்வன்.

“தருக்கங்கள் எவர் கையிலும் சுழலக் கூடிய படைக்கலங்கள் செல்வா. நாம் இவை குறித்து நூறு முறை விவாதித்து விட்டோம். சொல்லெண்ணிச் சொல்லெண்ணிச் சலித்து விட்டேன். சொற்களைப் படைக்கலங்களுக்கு நிகராக எண்ணிக் கொள்வதே மதியூகிகள் தமக்கென வகுத்துக்கொண்ட புதைசேறு. ஒவ்வொரு புதியவரும் அதை எங்கனமோ மீறிவிடுவேன் என விசை கொண்டு எழுந்து மேலும் மேலும் ஆழமான சேற்றில் விசையுடன் வீழும் எடைக்கற்களெனச் சரிகிறோம். இந்தப் புதிர் இளையவருக்கு விந்தையென்றும் மூப்பவருக்குப் பிணியென்றும் ஆகுவது.

ஆனால் ஒன்றை மட்டுமே நான் இன்று உணர்கிறேன். நீலனுக்குக் காலமளித்த ஊழின் சொற்களெனத் திரண்டு வந்திருக்கும் உன்னைப் போன்றவொரு மெய்த்தோழன் அவனைக் காத்து நிற்கும் தெய்வங்களுக்கும் மேலானவன். மானுடர் அடைவதில் அரிதானது மெய்த் தோழமையே. தோழமை போல மயக்குள்ள உறவு பிறிது எதுவென ஒரு மதியூகி அறிந்த அளவுக்கு பிறர் எவர் அறிய இயலும். அனைத்தும் அக்களங்களுக்கும் களங்களின் நெறிகளுக்கும் விழைவுகளுக்கும் உருவாகும் கானல் நீரெனவே தோழமைகள் அமைவதுண்டு. மெய்யான தோழமை மானுடரின் இழிவிலும் உயர்விலும் சலனமின்றி தாமரை இலையைத் தாங்கும் நீரெனத் தலை தூக்கி வைத்திருக்க வேண்டியது. அது இலையில் ஒட்டுவதில்லை. தாங்குகிறது. தாங்குபவனே தோழன் செல்வா. நீலனின் அனைத்து கொந்தளிப்புகளிலும் நீ நீரெனத் தாங்கி நின்றாய். அதுவே அவனைக் காத்து நிற்கிறது என எண்ணுகிறேன். எண்ணற்ற நல்லூழ்களால் தாங்கப்படுபவன் வரலாற்றை ஆக்கியளிக்கும் பீடத்தில் அமர்வதின் ஆச்சரியம் இன்று கலைந்தது. அவன் தாங்கப்படுவது தோழமையால். வீரனுக்கு அதைப் போல் படைக்கலம் ஏது” எனச் சொல்லிச் சிரித்தார் சூர்ப்பனகர். அவரின் உதட்டுச் சுழி விரிந்து அகன்று மலர்ந்த போது நீள்கரு முகத்தில் தசைகள் குலுங்கின. துதியை அணைத்து விட்டு தமிழ்ச்செல்வனின் தோளில் கையை அணைத்தபடி மன்றை நோக்கி நடந்தார். தமிழ்ச்செல்வன் தாமரை இலையைத் தாங்கும் நீரென ஆகிய தோளால் அவரை ஏந்திக் கொண்டான்.

*

லாகர்ணன் அரசரின் வருகையைக் கண்டு வாயிலைத் திறக்கும் சங்கேத ஒலிகளை எழுப்பினான். இளமழையில் ஒலித்த சிறுமுரசுகள் மழைக்குளிரில் விறைத்து ஒடிந்து கொள்ளும் எலும்புகளின் ஒலியுடன் எழுந்தன. முன்முகப்பின் இடைகளில் புறாக்கள் அமர்ந்திருந்து ஒண்டிக் கொண்டு குறுகுறுத்தன. தமிழ்ச்செல்வன் உவகை மாறாது கோபுர வழியால் நடந்து பட்டினத்தை நோக்கி நின்றான். மழையில் ஊறிய சித்திர வேலைப்பாடுகள் கொண்ட மாபெரும் போர்வையென விரிந்திருந்தது தலைப்பட்டினம். காட்சிகளில் அசையும் மானுடர்களும் விலங்குகளும் பறவைகளும் அசையாது உறையும் மனைகளும் வண்டிகளும் சிறுதேர்களும் காவல் நிலைகளும் புலரியின் இனிய கனவென அவன் கண் முன் தோன்றியது. அது அவனதும் கனவென எண்ணிக் கொண்டு நீலனின் திசை நோக்கித் திரும்பவும் நடந்தான். முடிவேயில்லாமல். ஒவ்வொரு முறையும். அதற்கென்றே கால்கள் கொண்டவனென.

TAGS
Share This