124: ஆழிசூடிகை : 04

124: ஆழிசூடிகை : 04

“துயருற்ற நாளொன்றில் குயவன் வனைந்த குடம் போலக் கிடப்பது என் அகம்” என உதடுகளுக்குள் சொற்களை மடித்து மடித்துச் சொன்னார் வேறுகாடார். இருதியாள் அச்சொற்களைக் கேட்டவளெனத் தன் பெருமேனியை தூணில் சாய்த்து கால்களைத் திண்ணையில் தூங்க வைத்தபடி அமர்ந்திருந்தாள். இளமழை எப்பிசிறுமின்றி வந்தது போலவே நின்று பொழிந்து கொண்டிருந்தது. அத்திரிகள் கூட்டமொன்று வண்டில்களுடன் உரசிக் கொண்டும் மரங்களினடியில் சாம்பலும் மண் வண்ணமும் கொண்ட மேனிகள் நனைந்து ஊறிக் கொண்டிருந்தன. போர்வையில் மழைப்பெருக்கென அவற்றின் மேனிகள் நடுங்கி ஊறுவதை நோக்கிக் கொண்டிருந்தாள் இருதியாள். வேறுகாடார் தலையை தொங்க விட்டுத் தோள்களை சுருக்கி இருகைகளையும் தூண்களென்றாக்கி அமர்ந்திருந்தார். அக்கணம் அவ்விடம் வெளித்து விட வேண்டுமென எவரோ எண்ணியது போல இருதியாளும் அவரும் அங்கு தனிக்க எஞ்சியிருந்த ஒருசிலரும் மெல்ல மெல்ல முற்றொழிந்தனர். வேறுகாடாரின் மேனியில் இளஞ் சூடு பரவியிருக்க தலையை இல்லை என்பது போல மெல்ல ஆட்டினார். பிறகு சாரை கொத்திய முதுவுடல் நஞ்சு மிச்சமென அவரது தலை ஆடலுடன் கோர்த்திருந்தது.

இருதியாள் அவரை நோக்கிய பின்னர் “என்னவாயிற்று தோழரே” என்றாள். அவ்விளியால் நடுக்குக் கொண்டு நிகழ்கணம் திரும்பியவர் மெல்லப் புன்னகையை எடுத்து அணிவதை சிறுசினம் விழிகளில் நெரிய நோக்கினாள் இருதியாள். வேறுகாடார் அவளை நோக்கிய பின்னர் அவர் மட்டுமே என்றுமறியும் பிறிதெவரேனும் அரிதாகக் காணும் துயர் சூடிய முகத்தால் அவளை உற்றார். காலமெல்லாம் புன்னகை சூடும் குறும்பு முகம் கொள்ளும் துயரம் ஆழுள்ளத்தில் வைர ஊசியெனத் தைப்பது. இருதியாள் அரைந்து அவரருகில் சென்று இடக்கரத்தின் மேல் கைகளை வைத்து ஈரம் கசியும் விரலிடைகளைக் கோர்த்து அழுத்தினாள். நானிருக்கிறேன் என ஒலித்த விரல்களின் சொல்லைக் கேட்டவர் விழிகள் அரைக்கணம் நீர்மல்கி உள்ளோடியது.

“எதற்கு இந்தத் துயர் முகம். கொஞ்சமும் சூடிக்கொள்ளப் பொருத்தமற்றது” என்றாள் இருதியாள்.

“எதற்கு என அறிய முடியாத துயர்களின் துயரம் நம்மால் அறியக்கூடியதல்ல இருதி” என்றார் வேறுகாடார். சொல்லிய பின்னர் இயல்பாகவே அவரிலிருந்து புன்னகை பிரிந்து எழுந்தது. மேற்கூரையில் இளமழையின் தூவல்கள் திரண்டு திரண்டு விளிம்பில் துளியாவது போலச் சொற்களை எண்ணிக் கொண்டிருந்தார். “என் வாழ்க்கையின் இறுதிக் களி இதுவோ என என்னுள்ளிருந்து ஒலிக்கும் அகக்குரல் கூவிக் கொண்டேயிருக்கிறது. இம்முறை பாரதத்திலிருந்து நம் கரைக்குத் திரும்பி மண்ணில் கால்வைத்த கணமே அதை என் ஆழகம் உச்சாடனமெனச் சொல்லத் தொடங்கி விட்டது. இன்னதென்று அறியாத ஊழின் கணம் வகுக்கப்பட்ட பாதையில் நடப்பவனென என்னை உணர்கிறேன். என்னைக் காத்த என் தெய்வமொன்று நான் எப்பிழையும் இயற்றாத போதும் உன் காலம் முடிந்தது எனக் கலைந்து செல்வது போல.

அங்கனம் அக்கணம் மானுடருக்கு வாய்ப்பதென நான் அறிவேன். எத்தனையோ வீரர்கள் களமுனையின் புலரியில் இச்சொற்களை ஒலிப்பதுண்டு. பன்றி முகமும் சிம்மத்தின் இடையும் கொண்ட கொற்றவையொருத்தியை அவர்கள் காண்பார்கள். அவள் பன்றி முகம் புன்னகையில் ஒளிர்வு கொண்டிருக்கும். அவளை அப்படிப் பார்ப்பது வாழ்வின் இறுதிக் கணத்திலென வீரர்கள் நம்புவதுண்டு. யோகியரையும் துறவிகளையும் கூட பிற தெய்வங்கள் முற்றமையும் புலரியில் காண்பதுண்டு என்பார்கள். ஆனால் நான் கண்டது நானே ஆக்கிக் கொண்ட என் தெய்வம் என்னை நீங்கியதை. அதை எப்படிச் சொற்களால் விபரிப்பதென்று விளங்கவில்லை இருதி” என்றார்.

இருதியாள் இரும்புப் பாவையொன்று உதடு விரிக்க முனைவது போல தன்னை உந்தினாள். மந்திரப்பட்டவள் போல அவள் உதடுகள் கல்லாகி இறுகின. இக்கணம் நீ சொல்வதை அவன் கேட்கக் கூடாதென எவரோ தீச்சொல்லிட்டதைப் போல.

வேறுகாடார் அவளது கரத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு முதுகு மெலிதாகக் கூன கைகளை மடியில் கோர்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார். “நான் அவளைக் கொன்றேன். கொன்ற கணத்தின் பசுங்குருதி என் விரல்களின் இடுக்குகளில் இன்னமும் ஊறிக் கொண்டிருக்கிறது. ஆயிரம் கொலைகளை ஒருவர் புரிவது எளிது. ஆனால் தன்னைச் சிறு குழவியை அன்னையென எண்ணும் ஒருவரைக் கொல்வதற்கு எந்த அறம் நிகர் நிற்க இயலும். எந்தப் நெறிகள் துணை நிற்க இயல்வும். குடிவாழ்வும் பொருட்டல்ல. வருங்காலம் எதுவும் நிகரெடையல்ல.

என் வாழ்வில் நான் நிகழ்த்திய அருங்கொலையில் உதித்த தெய்வம் அவள். என்னை அவள் அதன் பின்னரும் காத்தாள் என அறிவேன். புயலிடை சிக்கிய படகுகளில் தனித்தவனையென. பெருவனங்களில் மதங்கொண்ட வேழத்தின் முன் முயலென வழிவிலகாது நின்றிருப்பவனையென. கழுத்தினருகில் விசிறி விலகும் வாள் விளிம்பின் கூர்மையில் பிசகென. நான் பலநூறு தருணங்களில் அவளை உணர்ந்திருக்கிறேன். ஒரு கை. அல்லது வால் என்னை எழுப்பி அரட்டும். அங்கிருந்து விலக்கி விடும். குடை போல என்னை மூடிக் கொள்ளும். காதலால் ஒளிகொண்டு எனது வழிகளைத் துலக்கும். அது அவளே தான். அவளைக் கொன்று நான் என்னில் ஒருபகுதியென ஆக்கிக் கொண்டதைப் போல. எனக்குக் கழுத்தை இதயத்தைப் பரிசெனக் கொடுப்பவளெனத் தந்து அவள் தன்னில் என்னை பிணைத்துக் கொண்டாள். அவளைக் கண்ட மானுடரும் உண்டு” என்றார் வேறுகாடார்.

இருதியாளின் பாவை உதடுகள் விலகிக் கொள்ள “நானும் அவளைக் கண்டேன் தோழரே. முதன்முறையாக நான் உங்களைக் கண்ட நாளில். இரவில். புணர்ச்சிக்குப் பின். நீங்கள் இருகரங்களையும் கொண்டு உங்களை நீங்களே இறுக்கிக் கொள்பவர் போல ஆழியை நோக்கியபடி நின்றீர்கள். நான் களைத்துச் சோர்ந்து துயில் விழ முன்னர் இரு இமைச்சரிவின் கணங்களில் அவளைக் கண்டேன். அவள் ஒரு வெண் நாகம். அனைத்துக்கும் குடையென உங்கள் பின்னே நின்றிருந்தாள். உங்களை தெய்வமென்று ஆக்குபவள் அவளே. ஆனால் நான் அவளை அஞ்சவில்லை. அவள் கனிவு கொண்டவள்” என்றாள்.

வேறுகாடார் புன்னகையுடன் “என் காதலிகளிடம் அவளுக்கு அன்பு மிகுதி. ஒருகணமேனும் அவள் அவர்களையும் கைவிடுவதில்லை. என் தெய்வம் அவள்” என்றார். சொற்கள் புன்னகையைக் கரைத்தழிக்க விழிநீர் மீளவும் ஒருமுறை மல்கி அடங்கியது. “சொல் இருதி. உன்னை நான் கழுத்தறுத்துக் கொன்றேன் என்றால் நீ என்னைக் காப்பாயா. என் தெய்வமென நின்றிருப்பாயா” என்றார் வேறுகாடார். அக்குரல் அவரே அவரைக் கேட்டது போல ஒலித்தது.

இருதியாள் சாலையை நோக்கியபடி “இல்லை தோழரே. என்னை ஆள்வது வேறு தெய்வங்கள். எனது வாழ்க்கை பிறிதொன்று. உங்களுக்கு அவளை அளித்த ஊழ் வகுத்த கணக்குகள் நாம் அறிய முடியாதவை. தமிழ்க்குடி கண்டதிலேயே பெருவீரமும் பெருந்திறலும் கொண்டவர் நீங்கள். உங்களின் நுண்ணகமே இங்கே இக்குடியில் களியும் உவகையுமெனப் பெருகுவது. மெய்யாக நீலரில் எழும் புன்னகை நீங்கள் அவருக்களித்தது எனவே எண்ணத் தோன்றுவது” என்றாள். அறியாமல் தொடப்பட்டு விட்ட புண்ணைப் போன்று அச்சொற்கள் வேறுகாடாரை மேலும் வலிகொள்ளச் செய்தது.

“அச்சொற்கள் மிகையானவை இருதி” எனச் சொன்னவர் சிலகணங்கள் உருகி ஓடும் மெழுகெனத் தேகம் நெளிவதைக் கண்டு அதிர்ந்தார். மெய்யாகவே அச்சொற்களை அவரது அகம் விரும்புகிறதா. நான் நீலனை விட ஒரு அடி எப்பொழுதும் மேலென்று எண்ணுவதில்லை. அவ் எண்ணமே அவரை நீலனை போலன்றிப் பிறிதொருவனாகத் தன்னை ஆக்கிக் கொள்ள வழிகோலியது. திறந்து விட்ட மதகு வெள்ளம் வயல்களையென நீலனின் முகம் அவரில் பரவியது.

மூச்சை ஆழ இழுத்து ஊதிய பின்னர் “நான் இத்தனை அகம் திறந்து சொல்லாடுபவர் அரிது என நீயும் அறிவாய் இருதி. மெய்யாகவே நீ சொல்லும் சொற்களில் பொருளுண்டு. நான் அவரென ஆக விழைந்தவனே. அவரை விட ஒரு படி மேலான அரசனென்ற கற்பனை கொண்டவன். அரசு சூழ்கைகளில் நான் சகுனியும் கிருஷ்ணனும் இணைந்த பாத்திரம். அவரோ எளிய குடிகள் குழந்தைகளுக்குப் புகட்டும் நீதிக் கதை போன்றவர். களங்கமற்ற அறங்கள் சூரிய ஒளி போல வெளிச்சமானவை. அவை மன்றுகளை வென்றமர்பவை. மானுடரை இணைத்துக் கோர்ப்பவை. ஆனால் நான் அளிக்க விழைந்ததோ புத்தறம். முற்றிலும் பிறிதான நிலங்களிலும் குடிகளிலும் நான் கண்டு சேர்த்தது. புவியெங்கும் புதையல்களைத் தேடித் தேடிச் சேர்ப்பவனின் சொந்தக் கருவூலம் போல அருமணிகளாலும் நுண் தங்கங்களாலும் ஆனவை. சிலவேளைகளில் நான் எண்ணுவதுண்டு. நான் என் காலத்திற்கு முன்னர் பிறந்த குழவியென்று.

ஆனால் அது மெய்யல்ல. ஒவ்வொரு வாழ்வுக்கும் அதன் தெய்வங்கள் கோரும் பலியென்ற ஒன்று உண்டு. நீலன் தன் வாழ்வை எந்தக் குழப்பமோ தயக்கமோ இன்றி அதற்கு அளித்தார். ஆயிரமாயிரங் கைகள் கொண்ட குடித்தெய்வங்கள் படையென எழுந்து அவர் பின் நின்றிருப்பது அதனாற் தான். நானோ இச்சைகளின் தெய்வங்களுக்கு என்னை அவியாக்கியவன். நான் விழைந்ததும் எனக்கு அருளப்பட்டது. ஆனால் களங்கமின்மை அளிக்கும் நிறைவை நான் அடைய முடியாது. அது உறைந்த கருங்கல்லில் தெய்வச் சிலையென உறைவது. நான் அதில் தெறிக்கும் மழை போன்றவன். சிதறுவதே என் ஊழ்” என்றார் வேறுகாடார்.

இருதியாளின் அகம் பொருளாகாத துயரால் நனைந்த திரைச்சீலையென ஆடிக் கொண்டிருந்தது. “நானும் என் தெய்வத்தை இன்று புலரியில் கண்டேன் தோழரே. அவள் என் அன்னையும் தோழியுமான ஆழிகை. இள வயது முதலேயே அவள் என்னுடன் இருக்கிறாள். உடன் நடப்பவள். துயரில் துணை. ஆற்றலின் ஊற்று. நான் சாய்ந்து கொள்ளும் பெருமடி. அவளை இன்று புலரியில் நான் உவகை பொங்கக் கண்டேன். நெடுங்காலம் நிலமலைந்து தன்னிடம் திரும்பி வரும் மகவை அன்னையென அவள் நோக்கி இருமா அலைக்கரங்கள் தூக்கி அழைத்தாள். அங்கேயே ஏன் நின்று கொண்டிருக்கிறாய் வாவென்றாள். காகங்களின் இனிய கரைதல் ஒலி போல அவள் சொற்கள் ஒலிகொண்டிருந்தன.

நான் எதுவொன்றாகவும் ஆக விழைந்தவள் இல்லைத் தோழரே. காலத்தின் நுரைச் சுழிப்பில் என் அகம் உந்திய ஒவ்வொரு அடியிலும் அதனுடன் நடந்தவள் மட்டுமே. பெருங்கனவுகளைச் சூடிக் கொள்ள பெண்ணுக்கு எங்காவது வாய்ப்பிருக்கிறதா. இணை பொருதக் களங்கள் அமைந்திருக்கிறதா. குடிகளிடையில் பேரன்னை என்னும் இடமும் போர்க்களங்களில் மாகாளியெனவும் நின்றிருக்க அல்லாமல் வேறுகளங்கள் இங்குளதா. களியில் தோழியர் என்பதே நித்திய பெண்ணிடம் என்பதை ஆழத்தில் அறியாதவர் எவருளர். பேரரசி நிலவை ஆயிரம் நீலருக்கும் ஆயிரம் வேறுகாடாருக்கும் நிகரானவள் இல்லையா. ஆனால் அவள் அமர்ந்திருக்கும் பீடம் மஞ்சத்தில் ஆடப்படும் சதுரங்கம் அல்லவா” என்றாள் இருதியாள்.

ஓம் என்பதாகத் தலையசைத்த வேறுகாடார் “ஆனால் வரலாறு நாம் உணரும் எளிய ஆற்றல்களால் பின்னப்படுவதில்லை இருதி. காலம் ஆகலாம். ஆனால் பெண் ஒருநாள் உலகை ஆள்வாள். நான் அஞ்சுவது. பெண்ணையும் ஆள்தல் எனும் விசை விழுங்கிச் செரிக்குமென்பதையே. இங்கு குருதியின்றி வஞ்சமின்றி கீழ்மைகளை இயற்றாது அடையப்படும் அரசுகள் எதுவுமில்லை. முழு மானுடரையும் ஒன்றாக்கும் தத்துவம் மண்ணில் நிகழாது. மானுடர் விண்விற்களை விடவும் வண்ணங்கள் கொண்டவர்கள். நான் அறிந்த நிலங்களின் வண்ணங்களையெல்லாம் குழைத்து ஒரு மாபெரும் ஓவியத்தை வரைய விழைகிறேன். இம்முறை தெய்வமென்றில்லாது தோழியென்றே பெண்ணை வரைவேன். அவள் அங்கனம் ஆகுவதே அப்பெரும் பயணத்தின் முதலடியும் ஈற்றடியும். அதற்கிடையில் ஊழி ஊழியாய் பல்கோடிக் காலடிகளால் அவள் நடந்தே ஆக வேண்டும். அனைத்தையும் அவளும் புரிதல் வேண்டும்” என்றார்.

“நிலவையையும் நீங்கள் காதலிக்கிறீர்கள் அல்லவா” என மெல்லிய புன்னகை முகத்தில் குறும்புடன் எழ இருதியாள் கேட்டாள். வேறுகாடார் உரக்கச் சிரித்தார். தேகம் குலுங்கி பிறிதொரு தெய்வம் வந்தமர்ந்தது போல கூன் நிமிர்த்தி அமர்ந்து கொண்டு “நான் அரசன் இருதி. பேரரசிகளும் பெருஞ்சூடிகைகளும் என் பித்து. என் தெய்வங்கள் அறியும் நான் எவரென. என் காதலிகள் அறிவர் அதன் சிறு புன்னகையை. நானும் அறியேன் அதன் மகத்தான மாவிரிவை” என்றார். இருதியாள் சிறுமி போல குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

“இங்கென்ன மண ஒப்பந்தமா நிகழ்கிறது” என்று கூச்சலிட்டுக் கொண்டு திண்ணையில் ஏறி வேறுகாடாரின் பின் நின்று வெருட்டுபவள் போலக் கேட்டாள் யாதினி. “ஓம். உன் மூத்தாளுக்கும் மூப்பனுக்கும்” எனச் சொல்லி மேலும் சிரித்தாள் இருதியாள். தன் கூந்தலை முடிந்து கட்டி மேலாடையை இழுத்து முலைகள் ஆர்த்து விம்முவது புலனாகும் வண்ணம் அமைத்தபடி “இவரா. இவர் காமங் கொண்ட பெண்களைக் கொண்டு புதிய குடியொன்றையே நிறுவலாம். மூத்தாளே. அங்கு உனக்கு அமரவும் இடங் கிடையாது” என்றாள் யாதினி. அவளின் கள் அப்பம் போன்ற கன்னங்கள் இளமழைக் காற்றில் இனிமை கூடியிருந்தன. உதடுகள் ஒன்றையொன்று வாழ்த்திக் கொள்பவை போலத் தொட்டுத் தொட்டு அகன்றன. வேறுகாடார் யாதினியை நோக்கிய பின்னர் கூகை விழிமணிகள் ஒளிகொள்ள “அஞ்ச வேண்டாம் சிறியவளே. மூத்தாளுக்கு இடத்தொடையும் உனக்கு வலத்தொடையுமென இன்னும் இரு இருக்கைகள் கொண்டிருக்கிறேன்” என்றார். யாதினி அவரது தோளில் அறைந்து வலிகொள்ளக் கிள்ளி “எனக்கு இடத்தொடை தான் வேண்டும்” என்றாள். வேறுகாடார் கைகளை உயர்த்தி அவளிடமிருந்து விலகி “ஓம். அவ்வாறே ஆகுக” என்றார். திண்ணையில் மூவரின் சிரிப்பொலிகளும் புலரியில் பறவைகள் விழித்த காடென ஒலிக்கத் தொடங்கின. வேறுகாடார் இருதியாளின் இருகருமணிகள் போன்ற விழிகளை தன் விழிகளால் தொட்டு வணங்கினார். அவள் அவரைக் கொஞ்சுபவள் போல இமைகளைச் சுருக்கி விரித்தாள். காலம் தன்னை ஒருகணம் உதறி மீளவும் உருக்குப் போல நிறுத்திக் கொண்டது.

TAGS
Share This