தமிழ் நிலத்துப் பாடினி
அனார் தமிழ்க்கவிதைகளுக்கு இஸ்லாமியப் பண்பாட்டினது செழுமையான மரபின் ஆழத்தை அளித்தவர்களில் ஒருவர். தொண்ணூறுகளின் முதன்மையான கவிஞர்களில் ஒருவரான அனார் நீண்டதும் நெடியதுமான இலக்கியப் பயணத்தில் குன்றாத கலைத்தன்மையும் செயலூக்கமும் கொண்டு துலங்கி மிளிர்பவர்.
அனாரின் வருகை தமிழின் நெடு வரலாற்றில் வைத்து நோக்கப்பட வேண்டியது. தொடக்கத்தில் அக்காலப் பெண் கவிஞர்களின் ஆவேசமான குரலே அனாரிடமும் வெளிப்பட்டது. சீற்றமும் ஆவேசமும் இளமையின் குணங்கள். பின்னர் ஒரு இளங்கொடி காற்றில் பற்றி சுவரில் ஏறித் தவிதவித்து தன்னை ஊன்றி முழுதாய் வளர்ந்து பெருகி மலர்களும் காயும் பிஞ்சுமாய் கனிவது போல அனாரது கவியுலகு தமிழ் மொழியில் நிலைத்தது. அவரது இலக்கியப் பங்களிப்பு பொன்னொன்று ஆபரணமாவதைப் போல இன்று மதிப்பு மிக்கதாகியிருக்கிறது.
அனாரின் முழுக்கவிதைகளையும் இன்று நோக்குமொருவர் அவரது உலகம் கொண்டிருக்கும் காட்சிகளின் வியப்பையும் சிறு சிறு உயிரினங்களும் மனிதர்களும் உணர்ச்சி பாவனைகளும் எவ்வளவு விரிவான அகவுலகையும் அதனூடு இனிமையான கனிவை அளிப்பதையும் காணலாம். தாய்மையின் கண்களால் அனார் இப்புவியை நோக்குகிறார். அதில் ஒவ்வொரு மானுடரும் உயிர்களும் பரிவில் ததும்ப நிற்கின்றன.
தமிழ்ச்சமூகத்தில் பெண் எழுத்தாளர்கள் கலைத் தரத்துடன் நீண்டகாலம் இயங்குவதென்பது குடும்பச் சூழல்களாலும் சமூக நெருக்கடிகளாலும் இல்லாமல் போவதையே நாம் தொடர்ந்து காண்கிறோம். நாமறிந்த புகழ்பெற்ற பெண் எழுத்தாளர்கள் எத்தனை பேர் நினைவுக்கு வருகிறார்கள் என எண்ணிப் பாருங்கள்? அரிதாகவே சில பெயர்கள் நினைவில் எழலாம்.
இந்தப் பின்னணியில் அனார் போன்ற ஒரு முதன்மையான எழுத்தாளரை நாம் கவனப்படுத்தி உரையாடுவதும் அவரது கவிதைகளையும் இருப்பையும் உளம் விரியக் கொண்டாடுவதும் எங்கள் பெண் குழந்தைகளுக்கு எத்தனை தூரம் வாழ்வின் கலை உயரங்களை அடைய உந்து சக்தியாயிருக்கும் என எண்ணிப் பாருங்கள். அனாரின் கவிதைகளை நாம் சமூகமாக கவனப்படுத்தவும் வாசிக்கவும் நம் பிள்ளைகளுக்கு அளிக்கவும் வேண்டும்.
ஆண் பிள்ளைகள் பெண்களை மதிக்கவும் அவர்களின் உள நிலைகளையும் மனச்சுமைகளையும் புரிந்து கொள்ள அன்னையரும் தந்தையரும் சொல்லிக் கொடுக்க அனாரின் கவிதைகள் தேவாரங்களைப் போன்றவை. கதைகளும் கவிதைகளும் கலைகளுமே நம் குழந்தைகளுக்கு ஒரு சிக்கலை அல்லது ஒரு வாழ்க்கை அறிதலை எளிமையாகவும் ஆழமாகவும் சொல்லிக் கொடுக்க உதவும்.
அனாரின் கவிதைகளில் வெளிப்படும் பெண் என்ற தன்னிலை இயற்கை என்ற பேரிருப்பின் குரல். பெண்களின் மீதான சமூக ஒடுக்குதல்களிற்கு எதிரான ஆழமான மெளனம் கலந்த எரிமலையின் மூச்சு அவரின் கவிதைகளில் பற்றியெரியக் காத்திருப்பது.
மூத்த கவிஞரும் விமர்சகருமான எம். ஏ. நுஃமான் “அனாரின் கவிதைகள் பெரும்பாலும் தன்னுணர்ச்சி வெளிப்பாடுகளாகவே உள்ளன. அவரைப் பொதுவாக ஒரு தன்னுணர்ச்சிக் கவிஞர் (lyrical poet) என்று சொல்வதில் தவறில்லை. சமூகம் தன்மீது சுமத்தியுள்ள பெண் என்ற வரையறையை மீறும் குரல் அவருடைய கவிதைகளில் ஒலிக்கின்றது. இது கோபம், விரக்தி, பெருமிதம், சோகம், காதல், வேட்கை, தனிமை என பல வகைகளில் வெளிப்படுகின்றது. ஒரு வகையில் இதை பெண் அல்லது பெண்ணிய அரசியல் எனலாம். அவ்வகையில் பெண் உடலும், பெண் மனமும் இவரது கவிதைகளின் மையம் எனலாம்” என மதிப்பிடுகிறார்.
நம் காலத்தின் முதன்மையான ஆளுமைகளைச் சமூகமாக நாம் கொண்டாடுவதென்பது ஏன் முக்கியமானது என நுண்ணுணர்வு கொண்ட வாசகர்கள் அறிவர். ஒரு ஆளுமையை சமூகம் முன்னிலையில் கொணர்ந்து கலை மதிப்புடன் உள்ள அவரின் பங்களிப்பைக் கொண்டாடும் பொழுது தான் நம் சமூகத்தின் கலை பற்றிய புரிதல் எவ்வளவு ஆழமாகியிருக்கிறது என்பதும் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதும் புலனாகும்.
சாதரணமான ஒருவரிடம் உங்கள் மொழியில் முக்கியமான ஐந்து எழுத்தாளர்களின் அல்லது நாடகக் கலைஞர்களின் அல்லது ஓவியர்களின் அல்லது பண்பாட்டுச் செயற்பாட்டாளர்களின் பெயர்களைக் கேட்டால் அவரால் பட்டியற்படுத்த முடிந்தால் அவர் சராசரியான வாழ்க்கைக்கு வெளியே அறிதலும் நுண்ணுணர்வும் வாய்த்தவர் என மதிப்பிடலாம். ஒரு நாளில் ஒரு சிறிது நேரத்தையாவது அன்றாட அலைச்சல்களுக்கும் வேலைகளுக்குமிடையே நம்மிடையே துலங்கும் கலைஞர்களையும் அறிவியக்கத்தையும் புரிந்து கொள்ள ஒதுக்க முடியாதவர் வாழ்வது எவ்வளவு எளிமையான வாழ்க்கை!
கலையும் இலக்கியங்களும் ஒருவரது வாழ்க்கையை பல்லாயிரம் மடங்கு பெரிதானதாக ஆக்குவதற்காகவே மண்ணில் நிகழ்கிறது. நாமும் நம் சமூகமும் எதிர்காலப் பிள்ளைகளும் கலைவழியான பார்வைகளையும் அதை ரசிக்கவும் கொண்டாடவும் பழகுவது நம் கலாசார ரசனையை வளர்க்க உதவும். ரசனையில்லாத சமூகம் பண்பாடில்லாத சமூகமாக ஆகுவதை எவராலும் தடுக்க இயலாது.
அனார் இந்த வருடம் தன் ஐம்பதாவது அகவையைப் பூர்த்தி செய்கிறார். சிறுமியொருத்தி தன் முழு ஆச்சரியம் பொங்கும் விழிகளால் உலகை நோக்கித் தான் களித்தவற்றை நொந்தவற்றை அறிந்தவற்றை கண்டடைந்தவற்றைப் பகிர்வதைப் போலத் தன் கவிதைகளை எழுதிச் செல்கிறார். அனாரின் கவிதைகளில் சாம்பிராணிக் குச்சியிலிருந்து எழும் வாசனையைப் போல ஆன்மீகமான தேடலும் தியானத்திலமரும் கண்களின் அசைவின்மை போன்ற அனுபவங்களும் உண்டு. ஒரு சிறுமியையும் துறவியையும் போல அவர் இரண்டு அந்தங்களுக்கிடையில் பரந்திருக்கிறார்.
நாம் கவிதைகளை ரசிக்கப் பழகுவதற்கு அனார் நல்லதொரு தொடக்கம். மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரைப் பற்றிய கருத்தொன்றை எங்கோ வாசித்த நினைவிலிருந்து மீட்கிறேன். அதாவது, மலையாளத்தில் வாசிக்கத் தொடங்கும் ஒருவர் பஷீரில் தொடங்குவது எளிது. ஏனெனில் அவரது கதைகள் பார்ப்பதற்கு எளிமையானவை போலத் தோன்றும். பிறகு அவர் தொடர்ந்து ஏராளமாக வாசித்த பின்னர் அவரது வாசிப்பின் உச்சியிலும் பஷீரை மீண்டும் கண்டடைவார். அவரது வாசிப்பு மேம்பட பஷீர் வேறொரு பரிமாணத்தில் கொள்ள முடியாத ஒளியுடன் மேலெழுவார். அனாரும் அத்தகையதொரு தொடக்கமே. அனாரின் கவிதைகளை ஆரம்ப நிலை வாசகர்கள் கூட அதன் வசீகரமான சொல்லிணைவுகளுக்காகவும் அதன் எளிமையான வரிகளுக்குள்ளாலும் சென்று தொட்டு மேலும் நுழையாலாம். பிறகு அவர் தமிழின் தீவிரமான இலக்கியங்களை வாசித்த பின்னரும் முதியவராகியும் மாறாத சிறுபிள்ளைச் சிரிப்புக் கொண்டவரைப் போல அனாரின் கவிதைகளை மொழியின் உச்சியிலும் மாறா அழகுடன் கண்டு கொள்ளலாம்.
தமிழின் பாணர் மரபில் வைத்து அனாரின் தன்மையை அறிவது சுவை கூட்டும் ஒரு அவதானம். பாணர் மரபென்பது தெருக்களின் உலகாலானது. யாழை மீட்டியபடி கூட்டமாக நகரங்களும் கிராமங்களும் அலைந்து திரிந்து பாடல்கள் புனைவது அவர்களின் வாழ்க்கை. உலகின் அழகும் நுண்மைகளும் அவர்களின் சொற்களில் திரண்ட பாகென ஆகும். அனாரின் கவியுலகு அலைந்து வாழும் பாடினிகளின் உளத்தாலானது. விரும்பியபடி வாழ விழையும் ஒரு பாடினியின் யாழென அவரது குரல் தமிழெனும் தொல்மொழியில் மீட்டப்பட்டுக் கொண்டேயிருக்கும். தமிழ் நிலத்தின் பாடினிக்கு அகவை நாள் வாழ்த்துகள்!
நன்றி : உதயன் (15 .12. 2024)