ஒரு பஞ்சுத் துக்கம்

ஒரு பஞ்சுத் துக்கம்

கவிஞர் வே நி சூர்யாவின் எழுத்துகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். கரப்பானியம் தொகுப்பின் காலத்து மொழிதலில் இருந்த அந்நியத் தொடுகையென்ற உணர்வு மெலிந்து உருகி அந்தியில் திகழ்வது தொகுப்பின் காலத்தில் பிறிதொன்றாக ஆகியிருப்பதை உணர முடிகிறது. அவரது உலகின் கவனங்கள் அமிழ்பவை அல்லது அமிழப்போகிறவை குறித்து நிகழ்கையில் கூர்மையான நூலினால் தைக்கப்படும் துணித் தையல் வேலைப்பாடுகள் போல அவரது கவியுலகு தோற்றமளிக்கிறது. சொல்லின் சுடர் ஓங்கி ஓங்கி எரிகையில் அது தொடும் அனுபவம் ஒளி கொள்கிறது.

குழந்தைகள் பற்றித் தமிழில் எழுதப்படும் கவிதைகள் குறித்து எனக்குத் தனிக் கவனமிருக்கிறது. குழந்தைகள் பிற விலங்குகளைப் போலவே வளர்ந்த மனங்களை காட்டச் சித்தரிக்கும் ஒரு ஆடியாகவே பயன்படுவது உண்டு. குழந்தையே எழுதும் குழந்தை பற்றிய கவிதையொன்று இல்லையென்பதால் குழந்தை வளர்ந்தவர்களினாலேயே மீள மீளப் பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் அதன் மகிழ்வு அளிக்கும் உற்சாகத்தை கவிஞர்கள் தொற்று நோயைப் போல அடைய விழைபவர்கள். ஆகவே குழந்தைகளின் உலகைத் தொட்டளைந்து கொண்டிருப்பவர்கள்.

நம் காலத்தின் குழந்தைகள் குழந்தைகளாக இல்லாமல் செல்லத் தொடங்குவதை சுட்டும் வரிகளில் எனது வாசிப்பில் முதலில் நினைவு வருவது சிவரமணியினது கவிதை வரிகள். யுத்தம் குழந்தைகளை என்னவாக மாற்றுகிறது என்பது பற்றிய கவிதை.

யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்

யுத்தகால
இரவொன்றின் நெருக்குதல்
எங்கள் குழந்தைகளை
வளர்ந்தவர்களாக்கிவிடும்.

ஒரு சிறிய குருவியினுடையதைப் போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஒவ்வொரு குருதிதோய்ந்த
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும்
காரணமாய்,
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்.
நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை
எல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை
இல்லா தொழித்தது.

எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமங் கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்து போனார்கள்.

அதன் பின்னர்
படலையை நேரத்துடன் சாத்திக்கொள்ளவும்
நாயின் வித்தியாசமான குரைப்பை இனம் காணவும்
கேள்வி கேட்காதிருக்கவும்
மெளனமாயிருக்கவும்
மந்தைகள் போல எல்லாவற்றையும்
பழகிக் கொண்டனர்.

தும்பியின் இறக்கையைப் பிய்த்து எறிவது
தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக்கி
எதிரியாய் நினைத்து நண்பனைக் கொல்வதும்
எமது சிறுவரின் விளையாட்டானது.

யுத்தகால இரவுகளின் நெருக்குதலில்
எங்கள் குழந்தைகள்
“வளர்ந்தவர்” ஆயினர்.

சிவரமணி
(1989)

(சிவரமணி)

*

குழந்தைகளின் இயல்புகள் எனச் சொல்லப்படும் போதமற்ற மகிழ்வும் தூய தன்மையும் ஞானியருடன் ஒப்பு நோக்கி சுட்டப்படுவது. அவர்களில் கலக்கும் மாசென மானுட வாழ்வு அளிக்கப்படுவது குறித்த துக்கமெழாத கவிஞர்கள் அரிது. அந்த மாசின்மையின் அழிவை வாழத் தொடங்குதல் என வகுக்கலாம். இன்று வாழும் தோறும் ஒருவர் தனக்குள் உள்ள குழந்தையை இழந்து விடாமல் இருப்பதே பெரும் சவால்.

வளர்ந்த மனிதரின் முகத்தில் குழந்தை தோன்றினால் அவரே மானுடர் எனும் முழுமைத் தகுதி கொண்டவர். ஆனால் மானுடரோ துயர், கசப்பு, வஞ்சம், பகைமை எனக் கீழ்மைகளினால் பின்னப்பட்டுத் தையலிடப்படுகிறார்கள். அதன் பின் அந்த முகங்கள் அணிந்து கொள்ளும் முகமூடிகளுக்கு அளவேயில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிமித்ததிற்கென வகுக்கப்பட்டு பயனுறுகிறது.

(வே நி சூர்யா)

அத்தகைய சமகால வாழ்வெனும் பெரிய உலகினுள் ஒரு தொட்டிலில் குழந்தையைக் காணும் வே நி சூர்யாவின் அகம் அமிழ்வதை துயருறுவதை அருகிருந்து நோக்கும் சாளரம் இக்கவிதை.

ஊற்று

பிறந்து சில நாட்களேயான குழந்தையை
பார்க்கச் சென்றிருந்தேன்

சாவகாசமாக தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தது

உனக்கோ பெயரில்லை

கரடுமுரடான நேற்றில்லை

நானும்தான் இருக்கிறேன்… பார்த்தாயா?

இன்னும் எத்தனை எத்தனையோ கண்ணீர்த்துளிகள் வழியவிருக்கும்

அந்த சிறிய பஞ்சுக்கன்னத்தை

உலகத்துக்கம் அழுந்தத்தொடாத

அந்த மிருதினை

தொட்டுப்பார்த்தேன்

பறக்கப் பழகாத கழுகுக் குஞ்சே

ஒரு பெரிய கதையின் முதல் எழுத்தே

எதுவும் எழுதப்படாத புது சிலேட்டே

எனக்கு துக்கமாக இருக்கிறது.

வே.நி.சூர்யா

இணைப்பு : வே நி சூர்யாவின் வலைப்பூ

TAGS
Share This