கவிஞர்களைக் காதலிப்பவன்

கவிஞர்களைக் காதலிப்பவன்

எல்லாக் கவிஞர்களையும் காதலிக்கும் வினோதமான நோய் கொண்ட ஒருவனைப் பார்த்தேன்.

அவன் குரலில் மிதமான கார்வை
சோப்பு நுரைக் குமிழிக்குள் காற்றென
உடையக் காத்திருந்தது

அவன் விழிகளில் பூமியை வெல்லும் ஒரு வானவில்லின்
ஏழுவண்ணங்கள் இழுபட்டிருந்தன

அவன் இதயத்தில் ஒவ்வொரு கவிஞரும் ஒரு இருக்கையை எடுத்துப் போட்டுக் கொண்டு
சிலர் கால் மேல் கால் போட்டபடியும்
சிலர் யோக அமர்விலும்
சிலர் குடித்து விட்டு மேசைகளின் மேலிருந்து ஒரு கரம் உயர்த்தியபடியும்
சிலர் கஞ்சா புகைத்த செவ்விழிகள்
இரத்தினக் கற்களென மினுங்கும் புன்னகையுடன் சயனத்தின் அமர்விலும்
சிலர் அலைகரைகளில் வனச்செறிவில் நடைவழியில்

சிலர் தீவிரமாக முத்தமிட்டுக் கொண்டிருந்தனர்
ஒரு காதல் கவிதையை முடிக்கும் கடைசிச் சொல்லைத் தேடியவர்களின் நாவுகளென.

அந்த வினோதமான நோய்
அவனை வினோதமான காதல்களை நோக்கி அழைத்துச் செல்கிறது
காதலிப்பவனின் இதயம் துடிதுடிக்கும் வெளிச்சத்தில்
ஒரு வெள்ளை நிற ஆமை நீல நிற மீனைக் காதலுடன் அணைத்துக் கொள்வதைப் போல
இந்தக் காதலர்கள் வாழ்க என அவன் சிலும்பும் காற்றில் கூவினான்

குழந்தையின் கையில் வண்ண சொக்லேட்டுகளென
அவன் குழம்பித் தவிக்கிறான்

அப்படித் தவிக்க ஒரு காதல்
நிகழ வேண்டுமென.

TAGS
Share This