Master class
பரிசல் கிருஷ்ணா ஜெயமோகனிடம் கேட்கும் கேள்விகளுக்கு ஜெயமோகனின் பதில்கள் இன்று எழுத வரும் இளைஞர்களுக்கும் வாசகர்களுக்கும் மிக அடிப்படையான வரையறைகளை முன்வைப்பது. கடுமையான நோன்பிற்கான ஆசார விதிகளைப் போலத் தோன்றுவது. இலக்கியத்திற்கெனத் தன்னை ஒப்புக் கொடுப்பதற்கான பலியைக் கேட்பது.
இந்த நேர்காணலில் ஜெயமோகன் துல்லியமான அவதானிப்புகளை எடுத்துரைக்கிறார். சமூக வலைத்தளங்கள் தொடர்பிலும் சமூக சராசரிகள் பற்றியும் அவர்களது வழிமுறைகள் குறித்தும் விரிவாக விளக்குகிறார். கலைக்கென ஒருவர் கொண்டிருக்கும் தீவிரம் மட்டுமே கலையில் பொருட்டு. பிற அனைத்தும் அதன் நிமித்தம் விலக்கப்பட வேண்டியவை. அரசியல் சரிநிலைகளுக்கு வெளியே வாழ்க்கையிலிருந்து புதிய அல்லது விரிவு கொண்ட அறங்களை உண்டாக்குவது கலையின் தொழில். அஞ்சாது அதை முன்வைப்பதே இலக்கியம் எனும் தெய்வம் அளிக்கும் வரம். மெய் நாடி விழைவோருக்கான சுருக்கமான சில குறிப்புகள் இந்த நேர்காணலில் உண்டு.