கவ்வாலி, இசை எனும் பாற்கடல்
கடல் என்றால் எனக்குப் பயம். ஆனால் கடலின் கரைகளை நான் காதலிக்கிறேன். அதன் அலைகளை, நுரைகளை எல்லாவற்றையுமே. ஆனாலும், கடல் என்றால் எனக்குப் பயம். கடலின் கரைகளில் கால் நனைத்திருக்கிறேன். அது ஒரு குழந்தையின் சிரிப்பு. இன்னும் கொஞ்சம் உள்ளே போனால், கடல் ஒரு வசீகரம், அது என்னை, உங்களை ஏன் மற்ற எல்லாவற்றையுமே கூட உள்ளே இழுத்து விடும் வசீகரம் கொண்டது. கழுத்தளவு வரை உள்ளே சென்றால் நீங்கள் எஞ்சியிருப்பீர்கள், பின்தான் கடல் தொடங்குகின்றது. ஓரடி உள்ளே வைத்தால் கடல். அந்தக் கடலில்தான் எனக்குப் பயம். உங்களில் பலருக்கும் கூட அந்தப் பயம் இருக்கலாம். ஏனென்றால், அதுவரை உங்கள் கண்ணுக்குத் தெரிந்த எதுவும் அதற்கு அப்பால் இருக்கப்போவதில்லை, அதற்கு அப்பால் எல்லாமே அமானுஷ்யம். கடல் தன்னுள்ளே கோடி கோடி ரகசியங்களை ஒளித்தபடியும் உயிர்ப்பத்தபடியும் ஒவ்வொரு தடவையும் மனிதனை உள்ளே இழுத்துக் கொண்டே இருக்கிறது.
இசையும் ஒரு கடல் தான். அதன் அமானுஷ்யங்களை நீங்கள் கரையிலிருந்து கொண்டு உணரமுடியாது. வெறுமனே ரசிக்கலாம். ஆனால், இசை என்பது வாழ்வும் மரணமும் சந்தித்துக் கொள்ளும் புள்ளி. அங்கு நீங்கள் இசை மட்டும் தான், உங்களின் மொத்த உடலையும் ஏன் உயிரையும் கூட இசைக்காக கொடுக்க முடிந்தால் மட்டுமே, இசை என்பது அனுபவம், இல்லையென்றால், பரபரப்பு நிறைந்த வீதியின் இரைச்சல்தான் உங்களின் ரசனையின் அளவு. மௌனத்திற்கும் இசைக்கும் இடையே மின்னற்பொழுதே தூரம். அதனுள் நீங்கள் கரைந்து விட்டால் எஞ்சுவதென்ன?
ஓஷோ சொன்ன கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு பாரசீக மன்னன், மாபெரும் இசை ரசிகன், அவனது சபையில் வாசிக்காத மேதைகளே இல்லையெனும் அளவுக்கு அவனொரு ரசிகன். ஒரு நாள் தனது மந்திரிகளுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது கேட்டான், “எனது இசை தாகம் மேலும் மேலும் பொங்கி வழிகிறது. ஏதோ ஒன்று இன்னும் எஞ்சியிருக்கிறது, என்ன அது? இன்னும் யாரோ ஒரு மேதையை நான் கேட்கவில்லை போலும்?” என்றான். அதற்கு மந்திரிகளில் ஒருவன், “அரசே, எல்லோரும் வாசித்துவிட்டார்கள். ஆனால், இன்னுமொருவர் இருக்கிறார்தான். ஆனால்… அவர் பல நிபந்தனைகள் விதிக்கிறார்! அவை ரொம்பவும் அதிகம் அதான்…” என்று இழுத்தார். மன்னனின் கண்கள் விரிந்தன, உடனே அந்த மேதை அழைத்து வரப்பட்டார். “உமது நிபந்தனைகளைக் கூறும்?” என்றான் மன்னன். “நான் யாழை வாசிக்கும் போது உடலின் எந்தப் பாகத்தையாவது யாராவது அசைத்தால் அந்தப் பாகம் அவரது உடலில் இருந்து அகற்றப்பட வேண்டும். அவ்வளவுதான் நிபந்தனை” என்றார் மேதை. மன்னன் சிரித்தான், “அவ்வாறே ஆகுக” என்றான். ஊர் முழுவதும் இசைக் கச்சேரி தொடர்பாக அறிவிக்கப்பட்டது. நிபந்தனைகளும் பெரிய பதாகைகளில் தொங்கவிடப்படன. பெருந்திரளான மக்கள் வந்திருந்தனர். மன்னனும் வந்தான். அவனோ வாக்குத் தவறாதவன். ஆகவே, ஐநூறு வீரர்களை ஆயுதம் தாங்கியபடி நிற்க வைத்தான். நிகழ்ச்சி முடியும் வரை கண்காணித்து பின்னரே தண்டனை நிறைவேற்றப்படும் என்பது ஏற்பாடு. நிகழ்ச்சியும் தொடங்கியது, மேதை வாசிக்கத் தொடங்கினார். இசைக் கடவுளே மண்ணில் இறங்கியது போல் வாசித்தார். “அற்புதம்” என்றுதான் சொல்ல வேண்டும். பின்னர், நள்ளிரவில் நிறுத்தி, “யாராவது உடலை அசைத்தர்களா?” என்று மன்னரிடம் கேட்டார். மன்னன் விசாரித்தான். “பன்னிரண்டு பேர் தலையை அசைத்தும் சிலர் கால்களால் தாளமும் போட்டிருக்கின்றனர் தங்களை மறந்து” என்றான் மன்னன். “முடிவு உங்கள் கையில்தான் இவர்களை என்ன செய்வது?” என்று கேட்டான். அந்த மேதை, “இவர்கள் பன்னிரண்டு பேரைத் தவிர மீதி அத்தனை பேரையும் வீட்டுக்கு அனுப்பி விடுங்கள். இவர்கள் இசையை கேட்பதற்கே லாயக்கற்றவர்கள். மூடர்கள். எந்த ஒருவன் இசைக்கு தன்னை மறக்கவில்லையோ, அவனுக்கு வாசிப்பது இசைக்கே அவமானம். உயிரே போய்விடும் எனும்போது கூட இசையில் தங்களை மறந்த இவர்களுக்காக மட்டுமே நான் வாசிப்பேன். இனித்தான், எனது உண்மையான இசையை வாசிக்கப் போகிறேன்” என்றார்.
இந்தக் கதையில் சொல்லப்பட்டிருப்பது ஒரு மாபெரும் உண்மை. இனி கவ்வாலி இசைக்கு வருவோம். இது கிட்டத்தட்ட எங்களூர் வில்லுப்பாட்டு மாதிரி தான். ஆனால், இது முழுதும் பாடல், மீண்டும் மீண்டும் சில வரிகளை பாடி, ஒரு சரடாக ஏதோ ஒரு விஷயத்தை கதை சொல்லும் பாணியில் சொல்லுவார்கள். நான் சொல்லப் போவது, கவ்வாலி இசையின் அரசர்களின் அரசன் என்று அழைக்கப்படும். ‘நஸ்ரத் பாத் அலிகான்’ பற்றி. இவரின் கவ்வாலிகளையே நான் முதலில் கேட்டேன். “அற்புதம்” என்ற வார்த்தைக்கு அது தான் பொருள். காதலை பற்றிய அவரது பாடல்கள் மீது எனக்கு பெரும் மோகம். அப்படியிருக்கும், அவர் பாடும் போது. குரல் ஒரு ஆளாக மாறி அசைந்து கொண்டிருப்பது போல் தோன்றும். உடலே குரலாகி கதறிக் கொண்டிருப்பார் காதலில். நிரம்பி வழியும் கண்ணீரை மட்டும் தான் என்னால் பதிலுக்கு அவருக்கு தர முடியும். அவ்வளவு பரிசுத்தமான குரல், “அக்கியான் உடீக் தியான்” என்ற பாடல் எனக்கு மிகப் பிடித்தது. அதன் சில வரிகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.
ஒரு பக்திக் கவிதை போல் நீளும் அவ் வரிகள் காதலின் தனிமை, தனித்திருக்கும் ஒரு மனிதனின் துயர் என கண்கள் பனிக்க வைக்கும் அற்புதம்.
“நீயில்லாமல்
எனது இதயத்தின் ஆசைகள் நீயில்லாமல்
எந்த அர்த்தமுமில்லை வாழ்வில் நீயில்லாமல்
ஒவ்வொரு நாளமும் நரம்பும் உனது பெயரைப் பாடுகின்றது
எனது கண்கள் நீ வருவதற்காக காத்திருக்கின்றன
எனது இருதயம் ஏங்குகின்றது
உன்னை அழைக்கின்றது
திரும்பி வா, உனது காதலின் மீது ஆணையாக
திரும்பி விடு, எனது இருதயம் ஏங்குகின்றது
உன்னை அழைக்கின்றது…
நீ என்னை விட்டு விலகியதிலிருந்து
நான் முழுவதும் தனிமையை உணர்கிறேன்
எனது வீட்டின் பறவைகள் கூட என்னை விட்டு
பறந்து சென்றுவிட்டன
எனது கண்கள் நீ வருவதற்காக ஏங்குகின்றது
எனது இருதயம் உன்னை அழைக்கின்றது
என்னால் இந்தத் தனிமையை தாங்கிக் கொள்ள முடியவில்லை
திரும்பி விடு, எனது காதலே திரும்பி விடு
வசந்தம் வரும் போகும்
ஆனால் நான் இப்பொழுதும் உனக்காக காத்திருக்கிறேன்
இப்பொழுது இல்லையென்றால், நீ எப்பொழுது வருவாய்?
எனது கண்கள் உனது வருகையின் அறிவிப்பிற்காக காத்திருக்கின்றன
வசந்தத்தின் பறவைகள் இங்கே மறுபடியும் வந்து விட்டன
ஆனால் நீயும் கூட ஏன் வரவில்லை…”
என்று நீளும் அப்பாடல் ஒரு மாபெரும் இசை மனத்தின் கதறல். மன்னிக்கவும், இப்பொழுது தான் இக் கட்டுரையின் கரையில் நிற்கிறோம், அடுத்த பத்தியில் கவ்வாலி இசையையும் சூபி இசையையும் பற்றி இன்னும் விரிவாக எழுதுகிறேன். முதலில் அலிகானை கேட்டுப் பாருங்கள், யூ டியூபில் இப்பொழுது அனைத்துப் பாடல்களும் கிடைக்கின்றன. இணையமும் ஒரு கடல் தானே! ஆகவே, இனி இசையின் அனுபவத்திற்குள் நுழைய தயாராக இருங்கள். இன்னும் பல கடல்களுக்கு உங்களைக் கூட்டிச் செல்லப் போகிறேன். வழிதெரியாத புதிய தீவுகளைக் கண்டுபிடிக்கும் இந்த ஆச்சரியமான கடல் பயணத்தைத் தொடங்க முன் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இசை என்பது கடல், தன்னுள் அமானுஷ்யங்களை ஒளித்து வைத்திருக்கும். ஆனால், அது ஒரு பரிசுத்தமான பாற்கடல். பயமின்றி உள்ளே நுழையுங்கள், அலைகளில் யாரோ நடந்து செல்கிறார்கள்? யார் அது, அலிகானா! இதோ நானும் வருகிறேன்.
(2014)