அமைப்பு, செயல், நெறிகள்

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் மூன்று அமைப்புகளில் செயற்பட்டவன் என்ற அடிப்படையில் ஜெயமோகனின் அமைப்பு பற்றிய விளக்கங்கள் பொருள் பொதிந்தவை என அனுபவ அடிப்படையில் சொல்ல முடியும்.
மேலதிகமாகச் சில விடயங்களைக் குறிப்பதென்றால் ஒன்று, அமைப்புகளை அல்லது இலக்கியக் குழுக்களை அரசியல்மயப்படுத்துகிறேன் எனும் பேர்வழியில் நுழைந்து தன் சொந்த அரசியல் திட்டங்களை பாம்பு தலையை நுழைப்பதைப் போல போட்டுக் கொள்பவர்களை நுணுக்கமாக அவதானிக்க வேண்டும். முதலில் பரந்துபட்ட சிந்தனையாளராக முற்போக்காளராகத் தோன்றுபவர்கள் தமது அரசியல் முற்சார்புகளாலும் அவற்றாலும் மூடி மறைக்க முடியாத அடிப்படை இயல்புகளாலும் என்றாகினும் அமைப்புக்கும் தீவிரமான அர்ப்பணிப்புள்ளவர்களுக்கும் தீங்கே.
அத்தகையவர்களை இனங்கண்டதும் தயக்கமே இல்லாமல் ஒரு குருவிச்சையை வெட்டி அகற்றுவது போல அகற்றி விடுங்கள். உங்கள் சுற்றமும் நட்பும் எதில் நீங்கள் முனை கொண்டு எழுந்தீர்களோ அதை வளர்த்துச் செல்ல ஒவ்வொரு கட்டத்திலும் உறுதுணையாக இருக்கும். குருவிச்சைகள் எளிய காழ்ப்புகளுடனும் செயலூக்கம் இன்றியும் இருப்பார்கள். எதிர்மறை விசைகளால் இயக்கப்படுபவர்களை அஞ்சுவது அவசியம். அவர்களிலிருந்து விலகி நீங்கள் எதைத் தொடங்கினீர்களோ அங்கிருந்து தொடர்ந்து குன்றாது செல்லுங்கள்.