இலக்கியமும் அரசியலும்
இலக்கியத்தில் நேரடி அரசியல் நிகழ்வுகளைக் கையாளுதல்
உலகம் முழுவதும் ஏராளமான கலைவடிவங்கள் போர் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்கை மற்றும் அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி எழுந்துள்ளன. குறித்த அரசியல் நிகழ்வுக்கான விவாதங்களை நிகழ்த்துதல், அல்லது சாட்சியமளித்தல் என்ற இரண்டும் தான் அதன் பிரதான இயங்குதிசைகள். இரண்டு வேறு வேறு நாவல்களையும் எழுத்தாளர்களையும் அரசியல் நிகழ்வுகளையும் கொண்டு இதன் தன்மைகளை உரையாடலாம்.
ஒன்று, வாசு முருகவேல் எழுதியுள்ள ஜெப்னா பேக்கரி. ‘முஸ்லிம்கள் வெளியேற்றம்’ என்ற அரசியல் நிகழ்வை மையப்படுத்திய பிரதி. மற்றையது காப்பிரியல் கார்சியா மார்குவேஸ் எழுதிய
“Living to tell tale “. “Banana massacre ” என்ற தொழிலாளர்கள் படுகொலையை மையப்படுத்திய பிரதி. இரண்டு வேறுபட்ட அரசியல் நிகழ்வுகள் என்றாலும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எவ்வாறு இலக்கியத்தில் கையாள முடியும். அது எவ்வளவு தூரத்திற்கு கலையாக ஆகிறது என்பது பற்றிய எனது சில கருத்துக்களை முன்வைக்க இவற்றைப் பயன்படுத்துகிறேன்.
மார்க்குவேசின் பிரதியில் வரும் ஒரு வாக்கியத்தை இங்கு சொல்வது பொருத்தமென்று நினைக்கிறேன். “வாழ்க்கை என்பது ஒருவர் வாழ்ந்ததல்ல. ஒருவர் எதை நினைவு கூர்கிறார். எந்த ஒழுங்கில் என்பது தான்”. இந்த வாக்கியத்தை ஜெப்னா பேக்கரியுடனும் நாம் இணைத்து வாசிக்கலாம். ஒருவர் ஒரு காலகட்டத்தில் எதற்காக நேரடி அரசியலைப் பேசும் பிரதியை முன் வைக்கிறார்? குறித்த சம்பவத்தை எதற்காக நினைவு கூர்ந்து எழுதுகிறார்? என்ன ஒழுங்கில் எழுதுகிறார்?
ஜெப்னா பேக்கரியை சாட்சிய வகை நோக்குக் கொண்ட பிரதியாகவே நான் புரிந்து கொள்கிறேன். முஸ்லிம்கள் வெளியேற்றமும் அதனையொட்டி எழுந்த கடுமையான விமர்சனங்களும் தொடர்ச்சியாக பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. அதற்கான நேரடி சாட்சி அனுபவங்களும் கதைகளும் ஏராளமாக எழுத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அதன் காரணங்களை நோக்கி விவாதத்தை திருப்பாத ஒரு போக்கே பெரும்பாலான கதைகளில் இருந்து வந்திருக்கிறது. இந்த இடத்தில் வெளியேற்றம் தொடர்பில் அதிகபட்சம் நாற்பது கதைகளளவில் தான் வாசித்திருக்கிறேன். அதற்கு வெளியே எங்கேயேனும் வேறு பதிவுகள் செய்யப்பட்டிருந்தால் அத்தனையும் இணைத்தே சூழலை விளங்கிக்கொள்ள வேண்டிக்கொள்கிறேன். பொதுவாக வெளியேற்றத்தின் போது இடம்பெற்ற துயர நிகழ்வுகள் அல்லது தமிழ் – முஸ்லீம் உறவு நிலை பற்றிய சித்தரிப்புக்களடங்கியவை தான் முழுவதும். இதற்கு சற்று அப்பால் நின்று “முஸ்லீம் ஊர்காவல் படை” அதன் தோற்றம், அதன் இயங்குமுறை, அதற்கும் வெளியேற்றத்திற்குமிருக்கிற தொடர்பு பற்றி பெரும்பாலான பிரதிகள் அணுகவேயில்லை என்பதை நாம் அவதானிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே ஒரு அரசியல் பிரதி என்ற அடிப்படையில் ஜெப்னா பேக்கரி பேச முனைந்த பார்வைக்கோணம் சார்ந்து அதற்கொரு முக்கிய பங்கிருக்கிறது.
ஊர்காவல் படை நிகழ்த்திய வன்முறைச் சம்பவங்களை தொகுத்தலோ / அதன் தரப்பில் ஊர்காவல் படை எழுந்து வந்த பின்னணியை விரிவாக ஆராயவோ வேண்டும். இந்தப் பின்னணியில் ஜப்னா பேக்கரியில், உள்ள மொழி சார்ந்த மற்றும் விபரிப்பு முறை சார்ந்த குறைபாடுகளினால், அடிப்படையில் தேவையான நுட்பமான அவதானங்களும், தரவுகளும் பிரதியில் உருவாகி வரவில்லை. பொத்தம் பொதுவான அறிவில் கிடைக்கக் கூடிய தரவுகளை அடிப்படையாகக் கொண்டே ஊர்காவல் படை பற்றிய சித்தரிப்புக்கள் வருகின்றன. அதுவும் மூட்டமான நிலையில் கலங்கலாக.
அத்தோடு ஜெப்னா பேக்கரியை ஒரு மையப் படிமமாகக் கொண்டாலும், ஜெப்னா பேக்கரி ஒரு வலுவான படிமமாக கதைச் சூழலில் உருப்பெறவில்லை. பேக்கரியெனும் இடத்தை சித்தரிப்பதென்பது எத்தகையதொரு அனுபவம். பேக்கரியென்பது நினைவில் வாசனை. வாசனைகளுக்கு நினைவுகளைக் கிளர்த்தும் தன்மையுண்டு. அதே நேரம் வாசகரை தன்னுடைய சொந்த அனுபவத்துடன் இணைத்து தனக்கு நெருக்கமானதொரு இடமாக அதை மாற்றியிருக்கவும் சாத்தியங்களிருக்கின்றன. ஆனால் கதையில் வரும் உதிரியான சித்தரிப்புகள், அதைச் சாத்தியமாக்கவில்லை. இதே போலவே, பிரதியின் பல கதாபாத்திரங்கள் நினைவில்த் தங்காது வெளியேறிவிடுகின்றனர். விரிவான அக உலகத்தை உருவாக்கியிருந்தால், பிரதியின் தன்மை மாறுபட்டிருக்கும். “கொசுணாமணியர்” என்ற பாத்திரம் வருகின்ற பகுதி மிக நேர்த்தியான விவரணைகளூடாக மனதில் நிலைக்கிறது. அதே போல் முஸ்லிம்கள் வெளியேறும் பகுதியிலும் சித்தரிப்பு நேர்த்தியிருக்கிறது. இவை தவிர பிரதியெங்கும் விக்கி விக்கி அல்லது விழுங்கி விழுங்கிக் கதை சொல்லும் போக்கே அவதானிக்க முடிகிறது. கலை, நுண்ணுணர்வை அதிகம் கோரும் நிகழ்தல். அதில் வாசு முருகவேல் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், வெறுப்பை விதைத்தலென்பது எல்லா தனிக்குழுக்களுள்ள / பல்கலாசார சூழலில் உருவாகக் கூடிய நிலைமை தான். கலாசார வேற்றுமைகள் / மத ரீதியிலானதும் சமூகக் கட்டமைப்புச் சார்ந்தும் உருவாகக் கூடிய அந்நியத்தனமைகள் என்பன இணைந்து உருவாக்கக் கூடிய புற நிலைமை தான் தமிழ் – முஸ்லீம் உறவுச் சிக்கல். அதனை இலக்கியப் பிரதிகள் முன்வைக்கும் பார்வைக்கோணமென்பது பெரும்பாலும் எழுதுபவர் தீர்மானிப்பது தான்.
இன்று (யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்) முஸ்லிம்கள் தங்களுடைய வெளியேற்றம் தொடர்பான நினைவு கூரல்களை யாழ்ப்பாணத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் வெளியேற்றம் தொடர்பான ஒருவகைப்பட்ட ஞாபகங்களை மட்டுமே உருவாக்கும் போக்கு வலிமையாகும் வேளையில், ஈழத் தமிழ் அறிவுச் சூழல் முஸ்லிம்கள் வெளியேற்றம் தொடர்பில் மிகக் கடுமையான எதிர்வினையை விடுதலைப்புலிகளுக்கு ஆற்றியிருந்த போதிலும், இதுவரைக்கும் எந்தவொரு முஸ்லீம் எழுத்தாளரும் தங்களுடைய கதைகளிலும் பொது அரங்குகளிலும் “முஸ்லீம் ஊர்காவல் படை” நிகழ்த்திய வன்முறைகளுக்கு மன்னிப்போ அல்லது கண்டனமோ அல்லது வருத்தமோ தெரிவிக்காத வேளையில், விவாதங்களை தமது தரப்பிலிருந்து முன்னெடுக்காத வேளையில் இந்தப் புத்தகத்தின் வருகை ஞாபகத்தினை விவாதத்திற்குள்ளாக்கும் வேலையைச் செய்ய முடியும்.
முஸ்லீம் எழுத்தாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் சமூகத் தலைமைகளுக்கும் எவ்வளவுக்கெவ்வளவு தமக்கிழைக்கப்பட்ட அநீதிகளுக்கெதிராகப் பேச வேண்டிய பொறுப்பு உள்ளதோ. அவ்வளவுக்கவ்வளவு சம பொறுப்பு தமது சமூகத்தினரால் பிற சமூகத்தினருக்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் வன்முறைக்கெதிராக தமது சமூகத்திடம் விமர்சனத்தை முன்வைப்பதும், விவாதிப்பதும், அதற்கான பொறுப்பைக் கூட்டாக ஏற்கும் பொறுப்பும் உள்ளது. பிறர் செய்யும் தவறுக்கு நாம் எப்படி பொறுப்பேற்பது என்று தட்டிக்கழிக்கத் தேவையில்லை. எதிர்கால நோக்கில் சமூகங்கள் ஆரோக்கியமான அக ஜனநாயகத்தையும் புற ஜனநாயகத்தையும் உருவாக்குவதில் இந்த விவாதங்களிற்கு முக்கிய பங்குண்டு. அதுவே நீண்ட கால நோக்கில் சிறுபான்மை இனங்களுக்கான விடுதலை பற்றிய உரையாடலை திறந்த மனத்துடன் உருவாக்கும்.
இந்த விளக்கத்தின் பின்னணியில் ஜெப்னா பேக்கரியில் நேரடி அரசியல் நிகழ்வுகளை பிரதிக்குள் சித்தரிப்பதை விளங்கி கொள்கிறேன். ஆனால் சாட்சியம் இலக்கியத்தின் ஒரு வகை மட்டும் தான். அது வரலாற்றினதும் ஒரு பகுதி. ஆனால் கலையென்பது இரண்டையும் கடந்தது. அதுவொரு சாட்சியமோ வரலாறோ மட்டுமல்ல.
இலக்கியத்துள் அரசியல்
முதலில் குறிப்பிட்ட மார்க்குவேசின் பிரதியை எடுத்துக்கொண்டால், ஒருவர் தன்னுடைய அம்மாவின் வீட்டினை விற்பதற்காக அம்மாவுடன் தான் வளர்ந்த வீட்டிற்குச் செல்கிறார். அங்குள்ள பால்ய நினைவுகளை நினைவு கூருவதன் வழி கொலம்பிய வாழ்வின் கலாசார, வாழ்வியல் மற்றும் அரசியல் நிலவரங்களை ஒன்றுடன் ஒன்று தழுவியும் பின்னியும் விரிந்தும் செல்லும் கதைகளின் தொகுப்பாக மாற்றுகிறார். ஆனால் அதுவொரு ” Raw Material ” . ஒரு மூலத் தரவு.
மார்குவேஸைப் பொறுத்த மட்டில், அவர் தன் வாழ் நாள் முழுவதும் எழுதியெழுதி வந்தது பெரும்பாலும் ஒரே ஒரு கதையைத் தான். அது அவருடைய சொந்தக் கதை. அதில் அவரொரு கொலம்பியாவின் சாட்சி. அங்கு நிகழ்ந்த எல்லாவற்றுக்குமான ஒரு சாட்சி. படுகொலை – கம்யூனிசம் – காதல் – பாலியல் என்று வாழ்வின் அனைத்துப் பக்கங்களையும் இணைத்துப் புரிந்து கொள்ள இடைவிடாமல் எழுதிக்கொண்டிருந்தார்.
அந்தப் பயணம் “தனிமையின் நூறு ஆண்டுகள்” என்ற மகத்தான நாவலுடன் உச்சமடைந்து. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு தங்கத்தை மண்ணிலிருத்தெடுத்து அதைக் கழுவிக் கழுவி ஒளியேற்றி அபூர்வமான ஒரு ஞாபகமாக மானுட நினைவில் மாற்றிவிட்டார். நூற்றாண்டுகளின் தனிமையில் நேரடி சாட்சியங்கள் மறைபொருளாயின. நேரடி அரசியல் அதன் உடலாகவிருக்கவில்லை. அதன் ஆன்மாவாகமாறிவிட்டது. அது உலகத்தின் காதுகளில் ஒலிக்கும் கொலம்பியாவின் படுகொலைகளையும் அதன் மனிதர்களையும் கொண்டு வந்து நிறுத்தும் கலையின் குரலாகியது. கலைக்கு மட்டும் தான் மானுடம் தழுவிய ஒரே குரலிருக்க முடியும். அது அரசியல் நிகழ்வுகளை புறமொதுக்குவதில்லை. தனது அரசியலை அது உலகத்தின் சகல ஒடுக்குமுறையிலுமிருக்கும் மக்களுக்கும் ஏதோவொரு அளவில் கொண்டு சேர்க்கும்.
“கதை சொல்வதற்காக வாழ்தல்” என்ற நேரடி சாட்சியின் குரலுக்கும் “தனிமையின் நூறு ஆண்டுகள்” என்ற கனிந்து முதிர்ந்த குரலுக்குமிடையிலான மாற்றம் தான் கலை. ஜெப்னா பேக்கரி, வாசு முருகவேலின் முதற் பிரதி. இதனை நேரடி சாட்சியின் குரலாகவே என்னால் மதிப்பிட முடியும். அதற்குமேல் அதுவொரு நாவலென்றோ குறு நாவலென்றோ என்னால் சொல்ல முடியாது.
உலகம் முழுவதிலும் இடம்பெற்ற புரட்சிகளினதும் யுத்தங்களினதும் பின்னர், உடனடியாக நிகழக்கூடிய நிலவரம், சாட்சியங்களை முன்வைப்பது தான். எல்லோருக்கும் சொல்வதற்கு ஏராளம் கதைகளிருந்தன. அவற்றை உடனடியாகப் பதிவு செய்ய நினைத்தார்கள். பெருமளவில் எழுதப்பட்டன. பின்னர் வரலாற்றின் குரல்களாயின. அவை பிறகுருவான கலைஞர்களின் மூலத் தரவுகளாயின.
இதனடிப்படையில், ஈழத்தமிழ் இலக்கியச் சூழலைப் பொறுத்த வரையில் மூலத் தரவுகளைக் கொண்ட பிரதிகளின் காலமாகவே இந்தக் கால கட்டத்தைப் பார்க்கிறேன். இரண்டாயிரத்து ஒன்பதுக்குப் பின் எழுதப்பட்ட போருக்குப் பின்னரான இலக்கியத்தின் மையமான போக்குகளில் ஒன்றான, யுத்த கால ஞாபகங்களைத் தொகுக்கும் குணா கவியழகன் முதல் தமிழ்க்கவி வரையானவர்களை மூலத்தரவுகளைப் பகிர்பவர்களாகவே பார்க்கிறேன். சயந்தன், ஷோபா சக்தி போன்ற இறுதி யுத்தத்தின் நேரடி சாட்சியங்களாக அல்லாதவர்களின் பிரதிகளில் தொழில்நுட்பமும் கதைகளின் தொகுப்புகளும் உள்ள அளவுக்கு அவை கலையாக மாறவில்லை. ஆனால் அவற்றிலும் இந்த Raw Material தன்மை உண்டு.
ஆக கதைகளை சொல்வது தான் இப்பொழுதுள்ள மிக முக்கியமான வேலை. அது வரலாற்றில் நம் சந்ததிகளுக்கு நாம் விட்டுச் செல்லும் மானுடப் பேரனுபவங்களின் தொகுப்பு. ஈழத்தமிழர்கள், கடந்த முப்பது வருடத்திற்கும் மேற்பட்ட தமது வாழ்வில் அனுபவித்தவை ஏராளம். அதுவொரு அரிதான வரலாற்றுக்கு காலம். அதனை எழுத்துக்களிலும் பிற கலைவடிவங்களிலும் நாம் வெளிப்படுத்த வேண்டுமென்பதில் எனக்கு மாற்றுக கருத்துக்களில்லை. ஆனால் அதற்காக இலக்கியத்திற்கான மதிப்பீடுகளை குறைத்துக்கொள்ள முடியாது. ஒன்று கலையில்லை என்றால் அதனை எவ்வளவு நம்ப வைக்க முயன்றாலும் அது முடியாது.
இலக்கிய அரசியல்
இந்தப் பிரதிக்கான முன்னுரைகளில் தொடங்குவது சரியென்று நினைக்கிறேன். ஒன்று லட்சுமி சரவணகுமார் எழுதியிருப்பது. மற்றையது வாசு முருகவேலின் குறிப்பு.
லட்சுமி சரவணகுமாரும் வாசுவும் முன்னுரையில் சொல்லும் விடயங்களை இவ்வாறு புரிந்து கொள்கிறேன்.
- “இந்தியர்களுக்கு இலங்கைப் போரின் வரலாறு குறித்து என்ன தெரியும். ஏன் அவர்களுக்கு அதை எழுத இத்தனை அக்கறை? நாங்கள் அம்மண்ணில் வாழ்ந்தவர்கள். புலிகள் எமக்கு செய்த துரோகங்களை நாம் மட்டுமே அறிவோம். என ஈழப்போராட்டம் குறித்த உரையாடல்களின் உரையாடல்களின் போதெல்லாம் கேட்க முடிகிறது”
” உனக்கென்ன தெரியும் என எம்மை நோக்கி நீங்கள் விரல் எழுப்பும் முன் நீங்கள் எந்த அறத்தின் பக்கமாய் நிற்கிறீர்கள் என உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்”
லட்சுமிக்கு இந்த இடத்தில் ஒரு பதிலும் ஒரு கேள்வியும் உண்டு.
யாரும் தமக்குத் தான் எல்லாம் தெரியுமென்றோ. நீங்கள் எழுதவே கூடாதென்று சொல்லவோ முடியாது. ஆனால் நாசூக்காக, அப்படி இந்த விவாதங்களை செய்பவர்கள் விடுதலைப்புலிகளை நிராகரிப்பவர்களாகவும் அவர்களை துரோகிகள் என்றும் சொல்பவர்களாகவும் மாற்றி விடுகிறீர்கள். அதற்கு அடுத்த சில வரிகளிலேயே, நீங்கள் இப்படி சொல்வதற்கு காரணம் நீங்கள் நிற்கும் அறத்தின் பக்கம் தான் என்று நீங்கள் தியாகியாகிவிடுகிறீர்கள். இந்த தர்க்கத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்வது?
சின்னதொரு கேள்வியையும் கேட்கலாம். முதலில், ஈழத்தமிழர்கள் தமிழக பதிப்பகச் சூழலில் நல்ல மூலதனம். அவர்கள் எழுதியது விற்குதோ இல்லையோ அவர்களை நன்றாய் விற்க முடியும். ஏற்கனவே உலோகம் என்ற பெயரில் ஜெயமோகன் எழுதிய காவியத்தைப் படித்து நொந்து போயிருக்கிறோம். அரசியல் மேடைகளில் நல்ல பேச்சுத் தலைப்பாய் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம். இப்படி இருக்கின்ற ஈழத்தமிழர்களில் ஒருவராய் எங்களை நீங்கள் விற்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன நிச்சயம் என்பது தான் கேள்வி. நீங்கள் குறிப்பிடுவது போல இந்தியா ஒரு சந்தை தான். நாங்களும் அதில் விற்பனைப் பொருட்கள் என்றால் வரக்கூடிய சாமானிய கோபம் தான் எங்களது. “திலீபன்” என்ற பெயரில் நீங்கள் நாவல் எழுதலாம். யாரும் தடுக்கப்போவதில்லை. ஆனால் திலீபனின் பெயரில் நாவல் வந்தால் அவரை ஒரு சந்தைப்பொருளாக மாற்றுவதையிட்டு நாம் கேள்வி கேட்கக் கூடாதா? அப்படிக் கேட்டால் நானொரு துரோகியென்றால். நல்லது இருக்கட்டும்.
இந்த இடத்தில் வாசுவின் முன்னுரையில் உள்ள ஒரு பகுதியை மேலுள்ள தரவுகளுடன் இணைத்து வாசிக்கக் கோருகிறேன்.
“தற்காப்பு தாக்குதலும் ஆக்கிரமிக்கும் தாக்குதலும் ஒன்றல்ல. தற்காத்துக் கொண்டு போராடுவதன் தன்மை வேறுபட்டது. இது போலவே உள்ளிருந்து பார்ப்போரும் வெளியில் இருந்து வேடிக்கையாக பார்ப்போரும் ஒன்றல்ல. நான் உள்ளிருந்து எழுதினேன். வெளியே இருந்து நிறையவே எழுதப்பட்டுவிட்டது. அது எப்போதும் உண்மைக்கு வெளியேதான் இருக்கிறது.”
- அடுத்தது தனது குறிப்பில் ஒடுக்கப்படும் எழுத்தாளர்கள் என்ற அளவில் ஒரு பட்டியலை முன் வைத்திருக்கிறார்.
தீபச்செல்வனும், குணா கவியழகனும், தமிழ் நதியும், அகர முதல்வனும், வாசு முருகவேலும்… என்ற பட்டியலை முன்வைக்கின்றார். அவர்களுடைய குரல்களை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டுமென்று சொல்லுமவர் இவர்கள் இலக்கிய மதிப்பீட்டில் அழகியல் தரம் சார்ந்து கடுமையாக விமர்சிக்கப்படக் காரணம் அவர்களுடைய அரசியல் நிலைப்பாடாக “தமிழ்த்தேசியம்” இருப்பது தான் என்று நிறுவப்பார்க்கிறார்.
மேலே உள்ள இரண்டு பிரிவுகளான, இலக்கியம் நேரடி அரசியலை பேசுதல் என்பதையும் இலக்கியத்துள் அரசியல் எப்படி இருக்கும் என்பது பற்றியதான எனது மதிப்பீட்டை இரண்டு பிரதிகளினூடாக ஒப்பிட்டிருந்தேன். அதற்கு காரணம், ஒரு பிரதி தான் கொண்டிருக்கின்ற அரசியல் சார்பு நிலையினால் மட்டுமே கலையாக ஆக முடியாது. இந்தப் பட்டியலிலிருக்கும் நண்பர்கள் விமர்சிக்கப்பட்டார்களே தவிர நிராகரிக்கப்படவில்லை என்பதை ஈழத் தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன்.
நாம் மதிப்பீடுகளற்ற சமூகமாக இருக்க முடியாது. அரசியலொரு அளவு கோல் அதனால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்று தவறாகச் சொல்வதன் மூலம் அவர்களைத் தவிர சூழலில் இயங்கும் மற்றையவர்கள் “தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்கள்” என்ற தோற்றம் கட்டமைக்கப்படுகிறது. தமிழ்த்தேசியம் என்றால் மே பத்தொன்பதில் முகநூலில் “விளக்குப் படம்” போடுவது என்ற அளவில் உள்ள புரிதலொன்றும் தமிழ்ச் சூழலுக்குப் புதிதல்ல. ஏனென்றல் ஒரு உரையாடலில் நண்பரொருவர் குறிப்பிட்டது போல ” தேசியம் என்றால் ஆமியைச் சுடுறது” என்ற புரிதலுடன் தான் பலரும் இன்றிருக்கின்றனர்.
தமிழ்த்தேசியம் தன் விரிந்த அர்த்தத்தில் அனைத்து உரையாடல்களுக்குமான, குறிப்பாக தமிழ்த்தேசியத்திற்குள் உள்ள சிறுபான்மைக் கருத்தியல்களுக்கும் முரண்பட்ட உரையாடல்களுக்குமான அக வெளியையும், பேரினவாத ஒடுக்குதல் நிகழும் போது ஒரே தளத்தில் நின்று தன் எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் புற அமைப்பையும் கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழ்த்தேசியத்தை அறிவார்ந்த தளத்தில் நின்று முன்னெடுக்க முடியும். தனக்குள் உள்ள பிற கருத்தியல்களை நிராகரிக்கும் அல்லது அழிக்க நினைக்கும் போக்கென்பது நபர்களை அழித்தாலோ நிராகரித்தாலோ முடியக்கூடியதொன்றல்ல.
இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கும், யார் தமிழ்த்தேசியத்தை குத்தகைக்கு வைத்திருப்பதென்ற அடிபிடிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரப்போவதில்லை. நாம் சிந்திக்க வேண்டியதும் உரையாட வேண்டியதும் எப்படி எந்தத்தளத்தில் சேர்ந்தியங்குவதென்றும், நாம் தொடர்ந்து உரிமை கோரும் தமிழ்த்தேசியமென்பது என்ன. அது வெறும் ஆமியைச் சுடுவதில்லையென்றும். அது ஒரு பேரினவாத அரசுக்கெதிரான சிறுபான்மையொன்றின் விடுதலைக்கருத்தியால் என்றும் தான்.
இந்தப் பின்னணியில், இவர்கள் ஈழத்தமிழ்ச் சூழலில் புறக்கணிக்கப்படவில்லையென்பதற்கு நானுமொரு சாட்சியென்பதால் இதை பதிவு செய்கிறேன். குணா கவியழகனின் முதலாவது பிரதியான “நஞ்சுண்டகாடு” வெளிவந்த போது அதற்கு முதலாவது கூட்டம், யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தது. நான் அதில் பேசியிருந்தேன். பின்னர் அந்த உரை கட்டுரையாக தினக்குரலில் வெளிவந்தது. இரண்டாவது புத்தகத்திற்கும் யாழ்ப்பாணம் வாசகர் வட்டத்தின் சார்பில் அப்பொழுதைய அங்கத்தவர்களாக இருந்த நானும் எனது நண்பர்களும் கூட்டம் ஒழுங்குபடுத்தியிருந்தோம். அதிலும் நான் பேசியிருந்தேன். இன்னும் அடுக்கிக்கொண்டே போகாமல், தமிழ்நதியின் பார்த்தீனியம் தொடர்பிலும் ஏனைய கதைகள் தொடர்பிலும் கட்டுரைகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு சூழலில் விவாதிக்கப்பட்டது. தீபச்செல்வன் தொடர்பில் நீண்டகாலமாகவே சிற்றிதழ்களில் கட்டுரைகளில் அவரது பெயர் தவிர்க்கப்பட்டிருக்கவில்லை. அகரமுதல்வன் எழுத ஆரம்பித்தது அவர் மோசமாக நடந்து கொண்ட போது மிகக் கடுமையாக எதிர்வினையாற்றிருக்கிறோம். இதனை லட்சுமி செய்தாரா என்று தெரியாது. செயல் தான் முக்கியமானதென்று நினைக்கிறேன்.
நிற்க.
இந்தப் பட்டியலில் உள்ள நண்பர்கள் மட்டுமல்லாமல் கீழே உள்ள பண்புகள் பொருந்திப் போகும் எல்லா ஈழத்தமிழ் எழுத்தாளர்களுக்கும் சில விஷயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தொடர்ச்சியாகப் பலரதும் எழுத்துக்கள் தமிழ்நாட்டுச் சிற்றிதழ்கள், பேரிதழ்களிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இலங்கையிலிருந்து வரும் இதழ்களில் இவர்களது எழுத்தாக்களைக் காண்பது அரிது. பதிப்பகங்களும் அப்படித் தான். இவர்களுடைய முதன்மையான வாசகர்கள் தமிழ் நாட்டு மக்கள் தான். ஆக, இவர்கள் யாருக்கு எழுதுகிறார்கள் – எங்கு எழுதுகிறார்கள் – தங்களுடைய மக்களுக்கு அதைக் கொண்டு வந்து சேர்க்க அவர்கள் செய்வது என்ன? வெறும் நாற்பது ஐம்பதோ புத்தகங்களை கொடுப்பது மட்டும் தான் செய்யக்கூடியதா? அதையும் இங்கு காவிக் காவி விற்கும் இலக்கிய நண்பர்களினால் மட்டுமே மக்களிடம் சேர்ப்பிக்க முடியும்.
நீங்கள் யாருக்கு எழுதுகிறீர்கள் என்பதை முதலில் தெளிவு படுத்துங்கள். அது தான் எங்கு எழுத வேண்டுமென்பதை தீர்மானிக்கும். இங்கும் சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏன் உங்களுடைய முதன்மையான தெரிவாக ஈழத்திலிருந்தோ – புலம்பெயர்ந்தோ வரும் ஈழத்தமிழர்களுடைய சிற்றிதழ்கள் இருக்கக் கூடாது. இவர்கள் தானே உங்கள் மக்கள் இவர்களுக்காகத் தானே நீங்கள் எழுதுகிறீர்கள்.
ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்று சொல்லிக் கொள்ளும் எங்களிடம் சுயாதீனமாக இயங்கக் கூடிய வெகு சில பதிப்பகங்களே உண்டு. அவற்றில் பெரும்பாலானவை இன்று சேடமிழுத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை உயிர்ப்பித்து உங்களுடைய புத்தகங்களை பதிப்பிக்கும் முதன்மையான இடமாக ஈழம் ஏன் இருக்கக் கூடாது?
தமிழ் நாட்டு மக்களையோ அல்லது அதன் இலக்கியத்துறையிலுள்ளவர்களையோ தவறானவர்கள் என்றோ மோசமானவர்கள் என்றோ சித்தரிக்கவில்லை. அவர்கள் ஒரு மைய நீரோட்டம் என்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள். எந்த ஒரு தமிழ் நாட்டு எழுத்தாளரும் தானே முன்வந்து ஈழத்தில் வருகின்ற ஒரு சிற்றிதழில் எழுதியது நான் அறியாதது. அது போன்றில்லாமல், சம மரியாதையுடன் நடந்து கொள்ளும் எழுத்தாளர்களும் சில பதிப்பக உரிமையாளர்களும் இல்லாமலில்லை. ஆனால் பெரும்பாலான இதழ்கள் வழங்கும் வெளியென்பது, கோட்டா முறையில் வழங்கும் சலுகைச் சீட்டுகள் போல, ஈழத்தமிழர்கள் என்ற அடையாளத்துக்கு வழங்கப்படும் இடம். நமக்குத் தேவை சுயமரியாதையுள்ள அங்கீகாரமே தவிர அனுதாப அங்கீகாரமல்ல.
நீங்கள் தீர்மானிக்க வேண்டியது, யாருக்குக் கதை சொல்ல வேண்டுமோ அவர்களுக்குச் சொல்லுவது. முதலில் அதை அவர்களுக்குக் கிடைக்கச் செய்யுங்கள்.தமிழ் நாட்டு வாசகர்கள் எங்களுடைய கதையைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் எங்கள் புத்தகங்களை எங்கள் பதிப்புகளை எங்கள் சிற்றிதழ்களை வாங்கிப் படிக்கட்டும். எங்கள் கதையை நாங்கள் படிப்பதற்கு தமிழ் நாட்டிலிருந்தொரு பதிப்புத் தேவையில்லை. நாம் சுயாதீனமாக இயங்கும் தனித்த அடையாளமுள்ள மக்கள்.
(28 . 01 . 2018 இல் ‘ஊறுகாய்’ அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஜெப்னா பேக்கரி அறிமுக நிகழ்வில் வாசித்த உரை)