அன்னையர் எழுதல்

ஆசிரியை ஒருவர் வயிற்றில் கருச்சுமந்திருக்கும் பொழுது கணவனால் தலை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை பற்றி எழுதிய அன்னையர் அறமிழத்தல் எனும் குறிப்பிற்கு வழமையான எதிர்வினைகளையோ சமூகவலைத்தள எரிவுகளையோ பொருமும் சராசரிகள் மெளனமாக இருக்கிறார்கள். அவர்களால் அந்த மந்தத்தனத்தையும் ஒழுக்கவாதக் கண்ணோட்டத்தைக் கடந்து அற வெளிக்கு வர முடியாது. அவர்கள் தங்கள் சொந்தச் சிறைகளின் கைதிகள்.
ஆனால் இரண்டு தொலைபேசி அழைப்புகள் என்னை மேலும் எழுதச் சொல்லி உந்தியிருக்கின்றன. முதலாவது அழைப்பினை மேற்கொண்டவர் நாற்பது வயதைக் கடந்த ஒரு பெண். அவரது முதல் சீற்றங்கள் இப்படியிருந்தன. “உங்களை நல்ல ஆளெண்டு நினைச்சன். இப்பிடிப் பட்ட பொம்பிளையளுக்கு சப்போர்ட் பண்ணி எழுதியிருக்கிறியள். வாசிக்கவே அருவருப்பா இருக்கு” எனத் தொடங்கி கொஞ்சம் பொரிந்து தள்ளினார். அமைதியாக மறுமுனையில் கேட்டுக் கொண்டிருந்தேன். அவரது கோபம் சொல்வற்றி அடங்கியதும் “அந்தக் கொலையை உண்மையில் செய்தது யார் எண்டு நினைக்கிறியள்” எனக் கேட்டேன். இது போன்ற நேரடியான கேள்விகளுக்கு பொதுவானவர்களுக்குப் பழக்கமில்லை என்பதை அறிவேன். ஆனாலும் அவர்களுக்கு நீதிபதியின் இடத்திலிருந்து சிந்திக்கும் வாய்ப்பை அளிக்க விரும்பினேன்.
ஒரு மூச்சின் இடைவெளியின் பின் “அந்த ரீச்சரின்ர மிஸ்ட்டர்” என்றார்.
“அவருக்கு அந்தக் கோபத்திற்குக் காரணம் யார்?” எனக் கேட்டேன்.
“அவாவோட தொடர்பில இருந்த பெடியன்” என்றார்.
“அவன் என்ன செய்தான்?” என்றேன்.
“அவாவோட இருந்த படங்களை அனுப்பியிருக்கிறான். அவன் செய்தது சரிதானே?” என்றார்.
“ஹ்ம். ஒருத்தரோட வெளிப்படையாவோ ரகசியமாகவோ ஒரு உறவு இருக்க முடியும். அதில் மூன்றாவது நபர் எண்ட ஒருத்தர் இல்லை. விடுப்பும் புதினமும் அடுத்தவர் அந்தரங்கங்களை வேடிக்கை பாக்கிறது எங்கட பொதுப்பழக்கம். அந்தப் பெண் எதற்காக ஒரு ரகசிய உறவிற்குச் சென்றார் என்பதை நான் அறியேல்லை. ஆனால் அவாவின்ர வயித்தில இருந்த பிள்ளை அந்தப் பெடியன்ர பிள்ளை. அந்தளவு நெருக்கமான ஒரு உறவுக்கு ஒராள் போகேக்க ரெண்டு பக்கமும் எந்த அடிப்படையில ஒத்துப் போயிருக்க வேணும்?” என்றேன்.
“எனக்கு நீங்கள் சொல்லுறதுகள் விளங்கேல்ல?” என்றார்.
“அது நட்போ காதலோ, இரத்தத்தினால குடும்பமா அமையாத நாங்கள் உருவாக்கிக் கொள்ளுற எல்லா உறவுகளினதும் அடிப்படை இருவருக்கும் வெளியே இன்னொரு ஆள் ஒருபோதும் அறிய முடியாதெண்ட நம்பிக்கை. அந்த ரகசியம் மூன்றாவது செவிக்கும் விழிகளுக்கும் என்றைக்கும் தீனியே. அந்தப் பெடியன் அந்தப் பிள்ளைக்கு பொறுப்பெடுத்திருப்பானா தெரியவில்லை. ஆனால் அவள் வளர்த்திருப்பாள். எல்லாக் காலத்திலையும் அம்மாக்கள் அப்பிடித் தான்.
ஆனா இங்க ரகசியமா இந்தக் கொலையை நடத்தினவன் அந்தப் பெடியன். அவன் தான் அவர்களது உறவின்ர ரகசியத்தை ஆதாரபூர்வமாக அவள் கணவனுக்குச் சொன்னவள். உங்கட மனுசன் இன்னொரு ஆள், அவர் எவ்வளவு அவருக்கு நெருக்கமான பிரண்டாக் கூட இருக்கட்டும். இன்னொரு ஆளுக்கு உங்கட அந்தரங்கம் பற்றி சொல்லுறத ஏற்றுக் கொள்ளுவியளா?” என்றேன்.
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். அந்த ரீச்சரும் நானும் ஒண்டே” என்றார்.
“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கோ. அந்தக் கோபம் அவளின்ர மனுசனுக்கு வந்ததுக்குக் காரணம் அந்தப் பெடியன். அவன் வெளியிட்ட அவர்களின்ர உறவின் ரகசியம். இது எல்லா உறவுக்கும் அடிப்படையானது. ரகசியம் மீறும் உறவுகள் பிறகு எப்பையும் ஒட்டுறதுக்கான வாய்ப்பில்ல. அவன் அவளின்ர மனுசனுக்கு அந்தக் கதையை சொன்னது அவளை விரட்டுறதுக்கு. மீட்பேயில்லாமல் கிடந்து அந்த நரகத்தில தள்ளி விடுறதுக்கு. உறவில ஆர் பெரிய துரோகத்தைச் செய்வினமெண்டால் அந்த ரகசியத்தை முதலாவதா இன்னொரு காதுக்குச் சொல்லுறவர். அங்கயிருந்து அவரே தடுக்க முடியாத சுழல் நிகழ்வுகளுக்குள்ள சிக்கிக் கொள்வார். அந்த ரகசியம் கொலையில முடிஞ்சிருக்கு எண்டு தான் நான் நினைக்கிறன். இது நான் பார்க்கிற ஒரு முறை மட்டும். ஒரு பக்கத்தால.
ஆனால் நான் எழுதினது, இது மாதிரியான ஒழுக்க மீறல்களுக்கு ஆயிரக்கணக்கான நியாயங்கள் சமூகத்தில இருக்கு. மிக எளிமையா இந்த மாதிரிப் பிரச்சினையள அம்மாக்கள், ஆச்சியள் கையாளுவினம். ஆனால் எனக்குத் தெரிஞ்சு நான் பழகிற எல்லாரும் சொல்லி வைச்ச மாதிரி ஒழுக்கங் கெட்டவள் எண்டு அந்த ரீச்சரைச் சொல்லேக்க அந்தக் கொலைகாரனும் அந்தக் கொலையை பின்னுக்கு நிண்டு உண்டாக்கி அளிச்ச குரூரனும் இன்னும் பிறக்காத அந்தப் பிள்ளைக்கும் அந்த ரீச்சர் உயிர் வாழுறதையும் அழிக்கிற உரிமையை சமூகத்தின் ஒழுக்கத்திற்குக் குடுக்க முடியாது. உறவில ரகசியம் ஒழுக்கமில்ல. அறம்” என்றேன்.
கொஞ்ச நேரம் எதுவும் சொல்லாமல் மறுமுனையில் மெளனம். பிறகு அசாதாரணமான நம்பிக்கையுடன் “உதெல்லாம் ஆர் பார்ப்பினம். நீங்கள் எழுதினதில எனக்கும் தான் அறம் எண்டால் என்ன ஒழுக்கம் எண்டால் என்னவெண்டு ஒண்டும் விளங்கேல்ல. சனம் திருந்தாது” என்றார்.
“அப்பிடியா. இருக்கலாம். நான் எழுதிறது உங்களுக்கு வாசிச்சு பழக்கமில்லாமல் இருக்கலாம். ஆனால் இப்ப அது இல்ல சிக்கல், சனம் திருந்தாது எண்டு சொன்னியளே. நீங்கள் திருந்திட்டியளா?” எனக் கேட்டேன்.
பெரிய சிரிப்புடன் “உங்களோட கதைச்சு வெல்லேலா” என்று சொல்லிவிட்டு அழைப்பை நிறுத்தினார். அவரது மகளுடன் அவர் நிற்கும் ஒளிப்படத்துடன் அந்த அழைப்பு நின்றணைந்தது.
இன்னுமொரு இளம் பெண் மாலையில் அழைப்பெடுத்தார். “ஒரு டவுட் கேக்க வேணும்” என்றார். அவசரமாகச் சென்று கொண்டிருந்த நானும் ஏதேனும் வேலை சார்ந்த சந்தேகங்களாய் இருக்குமென்று எண்ணிக் கேட்டன். “இல்ல, வட்ஸப்பில நீங்கள் ஒரு கட்டுரை போட்டிருக்கிறியள். அதுல தான் டவுட்” என்று இழுத்தார். “கொஞ்ச நேரத்தில் அழைக்கிறேன்” எனச் சொன்னேன். சிறு இடைவெளி தானிருந்தது. நாளையும் முழுநாள் வேலைகள் உண்டு. இந்த மாதத்தில் அத்தனை நாளும் நான் எங்காவது முழுநாளும் இருக்க வேண்டிய சூழ்நிலை. அவசரப்பட்டு இந்தக் குறிப்பை எழுதி விட்டேனா என்று எண்ணினேன். மறுகணம் அக்குறிப்பு கொலைக்கு நீதி பற்றியதல்ல. இங்கு படித்த பெண்களுக்கும் ஆண்களுக்கும் கூட ஒழுக்கமும் அறமும் வேறு வேறானவை என்றும் ஒழுக்கம் மீறப்படுவது குற்றமல்ல. ஆனால் அறம் மீறுவதே குற்றம் என்றும் கூட தெரியாமல் வாழ்கிறார்கள். கிட்டத்தட்ட அனாவும் ஆவன்னாவும் தெரியாமல் தமிழைக் கதைப்பதைப் போல. அரிச்சுவடியே தெரியாமல் எவ்வளவு பெரிய மந்த வாழ்க்கையை நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை வாசிக்கும் பலருக்கும் கூட இதில் குழப்பங்கள் இருக்கும் என அறிவேன்.
அந்த இளம் பெண்ணை மீண்டும் அழைத்து “என்ன டவுட்” என்று கோட்டேன்.
“ஒழுக்கமா இருக்கிறது ரெண்டு பேருக்கும் நல்லது தானே. நீங்கள் ஒழுக்கமெல்லாம் தேவையில்லையெண்டு எழுதியிருக்கிறியள். நீங்கள் அப்படி எழுதினது எனக்கு ஒரு மாதிரி இருக்கு. அந்த ரீச்சர் செய்தது பிழை தான். ஆனால் அதுக்காக அவாவ வெட்டியிருக்கத் தேவையில்லை. பிடிக்காட்டி விலகியிருக்கலாம்” என்றார்.
நான் சிரித்து விட்டு “நல்லம். இந்த அளவுக்காவது நீங்கள் அதை விளங்கினது. எந்த உறவும் அதில இருக்கிற ரெண்டு பேரின்ரையும் ஒப்பந்தம். ஒழுக்கம் கூட அவையள் சொல்லுறது தான். இன்னொரு மனுசர பாதிக்காத வரைக்கும் இந்த உலகத்தில எல்லாத்துக்கும் அனுமதி இருக்கு. ஆனா இந்த மாதிரி ரகசிய உறவுகள் சிக்கலானவை. இருவரில் எவருக்காவது அதில் கோபம் உண்டாகும். அல்லது விலகல். அல்லது ஏதேனும் ஒரு நெருக்கடி. ஒரு உறவு உண்டாகும் பொழுது எது சொல்லப்படுகிறதோ அதுவே அந்த உறவிற்கான அறம். ஒழுக்கம் அப்பிடியில்ல. ஒருத்தர் குடிக்காமல் நல்லவரா ஒருத்தர லவ் பண்ண தொடங்கியிருக்கலாம். பிறகவர் குடிக்கத் தொடங்கினால் அது அறப்பிரச்சினையல்ல. ஒழுக்கம் சார்ந்தது. அது மாறிக் கொள்ளும். அந்த நேரத்தில் என்ன முடிவோ அதை எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் உறவின் தொடக்கத்திலேயே அந்த ரீச்சரும் இளைஞனும் ரகசிய உறவென்று தெரிந்தே ஈடுபட்டவர்கள். அவர்களில் ஒருவர் தன் அடிப்படை அறத்தை மீறியது தான் மிகப்பெரிய அளவில் கழுத்தறுத்துக் கொலை எனும் நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இது ஒரு விதையை எச்சமிட்ட பறவைக்கு தெரியாமல் முளைக்கிற மரம் மாதிரி. அது எவ்வளவு பெரிசாகுமெண்டு ரகசியத்தைச் சொல்லேக்க, சொல்லுறவர் அறியிறதில்லை. இங்க நடக்கிற பல்லாயிரம் சிக்கல்களும் இந்த எளிய அறம் திரும்பத் திரும்ப மீறப்படுவதால் நடப்பது” என்றேன்.
அப்பக்கம் பதிலில்லை. நீண்ட மெளனம். “சரி விடுங்கோ. நிறைய யோசிக்காதீங்கோ” எனச் சொன்னேன். விசும்பல் போல ஒரு சத்தத்துடன் மறுமுனை நின்றது. அவருக்குத் திருமணமாகி இரண்டு கிழமைகள் தான் ஆகியிருக்கின்றன.
ஒருவகையில் பதட்டமாகி விட்டேன். எதையேனும் அரைகுறையாகச் சொல்லி விட்டேனா? இப்பொழுது நான் சாதரணமானவர்களாலும் சிறிது வாசிக்கப்படுகிறேன். ஆகவே அவர்கள் இந்த அடிப்படைகளைக் கண்டு குழம்புவது இயல்பு என எடுத்துக் கொள்கிறேன்.
குழப்பத்துடன் வந்து கொண்டிருக்க எனக்கு நண்பரொருவர் முகநூலில் செவ்வந்தி வேலாயுதப்பிள்ளை எனும் பெண் சட்டத்தரணி ஒருவர் வெளியிட்ட காணொலியை அனுப்பியிருந்தார். அக்காணொலியைக் கேட்டுக் கொண்டிருந்த பொழுது இரண்டு செவிகளும் குளிர்ந்து வந்தன. அறங்களுக்கு மட்டுமே தெய்வங்கள் உண்டு. அறத்திற்கு மட்டுமே தெய்வங்கள் எழும். ஒழுக்கத்திற்கு தெய்வமில்லை. நம் தெய்வங்களில் பாதிக்கும் மேல் ஒழுக்கக் கேடுள்ளவை. ஆனால் அவியளித்து உரியதைச் சொல்லி நோன்பு நோற்று அறத்தைச் சொல்லி அழைத்தால் எந்த அரக்கனுக்கும் முன் தோன்ற வேண்டியவர்கள். அதுவே மானுடம் எனும் பெருக்கு.
ஒரு தாய் எழுந்து எது சொல்ல வேண்டும், இந்த நிலம் தழைக்கவென நான் எண்ணிய அறத்தைச் செவ்வந்தி அக்கா சொல்லியிருக்கிறார். மிகத் துல்லியமான குரல். அவரது கருத்துகளில் அந்த ஒழுக்க மீறல் தவறு/ பிழை எனவே வகுக்கப்பட்டு அத்தகைய ஒழுக்க மிறல்கள் குற்றமில்லை எனத் தெளிவாகக் காட்டியுள்ளார். மேலும் அந்தக் கணவனின் கதாநாயக பிம்பத்தின் மேல் முட்டாள் எனக் காறி உமிழ்ந்திருக்கிறார். அவரது பார்வையில் மெல்லிய வேறுபாடு எனக்குண்டு. அவர் ஒழுக்கம் எதிர் சட்டம் என இப்பிரச்சினையை ஆராய்கிறார். அது ஒரு முக்கியமான வழிமுறை. நான் ஒழுக்கம் எதிர் அறம் என எண்ணுகிறேன். அது பிறிதொரு வழி. இலக்கியம் அதனையே முதன்மையாகக் கருத்தில் கொள்ளும்.
ஆனால் குறையில்லை. ஒரு தாய் எங்கனம் எழ வேண்டும். நம் சமூகத்தை ஓங்கி அறைய வேண்டுமென ஒரு எழுத்தாளனாக நின்று கோரினேனோ அது நிகழ்ந்து முடிந்திருக்கிறது. இந்த நிலம் தொல் அன்னைகளின் அறங்களால் காக்கப்படுவது. கற்ற பெண் என்றால் இப்படித் தான் சிந்திக்க வேண்டும். சொல் குன்றாது தன்னை முன் வைக்க வேண்டும். அன்னையே என அழைக்கப்படும் தகுதி கொண்ட நம் காலத்து அறத்தெய்வம் என செவ்வந்தி அக்காவை அழைக்க வேண்டும் போலிருக்கிறது. மேலும் அன்னையர் எழுக.