திரிச்சுடரின் உள்ளே ஆடும் கலை

திரிச்சுடரின் உள்ளே ஆடும் கலை

எந்தவொரு கலை வெளிப்பாட்டிற்கும் அதனுள் இயங்கும் படைப்பாளியின் ஆளுமையின் கூர்மையான பங்களிப்பிருக்கும். கலையின் ஒருமையும் வெளிப்படும் அழகியலும் அவரின் தனித்த அகத்தின் விந்தையான கலவையால் உண்டாவது. ஓர் ஆளுமையென்பது சமூகத்தின் ஆழ்மனத்தின் வெளிப்பாடு. ஆழ்மனத்தின் ஒரு துளி அவரில் செறிந்து கனிகிறது. நாம் இன்று முன்வைக்கும் பண்பாடென்பது அத்தகைய ஆளுமைகளுக்கு ஊடாக வெளிப்படும் ஒரு கனவையே. அவர்களின்றி ஆழ்மனம் வெளிப்பட முடியாது. வெளிப்பட்டு சமூகத்துடன் உரையாடி அதை மாற்ற முடியாது. ஆகவே தான் அத்தகைய ஆளுமைகளை அடுத்து வரும் தலைமுறைகள் கூர்ந்து அவதானிக்கவும் பயிலவும் வேண்டுமெனச் சொல்லப்படுகிறது.

சாமானியரும் ஓர் ஆளுமையும் பண்பாட்டுத் தளத்தில் நிகர் வைக்கப்பட முடியாதவர்கள். ஓர் ஆளுமையின் சொல்லுக்கு சமூகத்தில் அளிக்கப்படும் மதிப்பென்பது சாமனியருக்குக் கிடையாது. சமூக வலைத்தளங்களில் உலவும் ஒரு சராசரியும் ஒரு ஆளுமையும் ஒன்றல்ல. இருவர் சொல்வதற்கும் ஒரே பெறுமதி அளிக்க முடியாது. நம் காலத்தின் அவலங்களில் அத்தகைய சாமானியரின் குரலுக்கும் அறிவுச்சூழலில் மதிப்பளிக்க வேண்டுமென்று கோருவதும் இருக்கிறது. சமூக சராசரிகளையே இங்கு சாமானியர் என்று சுட்டுகிறேன். ஏற்கெனவே இது பற்றி சராசரிகளுடன் உரையாடுதல் கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தேன்.

இன்று (04.12. 2025) மாலை நான்கு மணியளவில் யாழ் பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் அரங்கு எனும் தலைப்பிலான ஆவணப்படத்தைப் பார்த்தேன். ஆவணப்படத்தினை சோமிதரன் இயக்கியிருக்கிறார்.

குழந்தை ம. சண்முகலிங்கம் மரணித்த வேளை அஞ்சலிக் குறிப்பில் அவரது சமூகப் பெறுமதி பற்றி சில விடயங்களைச் சுட்டியிருந்தேன். ஓர் ஆசிரியருக்குரிய பண்புகள் கொண்டவர். ஒருவர் கலைஞராகவும் ஆசிரியராகவும் கூர்மையாக இணைவது ஈழத்துச் சூழலில் அபூர்வம். கற்ற வித்தையைச் சொல்லிக் கொடுப்பதென்பது கனிவினாலும் பயில்வினாலும் அக விரிவினாலும் அடையக் கூடியது. ஒரு பண்பாடென்பது அத்தகைய ஆசிரியர்களால் நெறிப்படுத்தப்படுவது.

இந்த ஆவணப்படம் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் ஆளுமையின் சில பகுதிகளையும் அவரது காலகட்டத்தின் சூழலையும் மிக விரிவாகப் பதிவாக்கியிருக்கிறது. ஒரு மணித்தியாலம் பத்து நிமிடங்களுக்கு அண்ணளவாக நீளும் இந்த ஆவணப்படத்தினை மிக நெருக்கமாக உணர்வதற்கான காரணம் அதில் தோன்றும் ஆளுமைகள் குழந்தை ம. சண்முகலிங்கத்தை விபரிப்பதினூடாக ஒரு கதையைப் போல அக்காலகட்டம் எழுந்து வருவது தான். இடையிடையே அவரது நாடகங்களின் பழைய காணொலித் துணுக்குகள் இணைக்கப்பட்ட விதம் படத்திற்கு ஒருமையை அளிக்கிறது.

குழந்தை ம. சண்முகலிங்கத்தின் இறுதிக் காலகட்டத்தில் எடுக்கப்பட்டிருப்பாதால் அவர் அதிகமாகப் பேசவில்லை. அங்கு வேறு எவரையோ பற்றி விறுவிறுப்பாகப் பேசிக்கொண்டிருப்பதைப் போலவும் அவரும் இடை இடையே சிலவற்றைச் சொல்வது போலவும் அமர்ந்திருந்தார். அவருக்கு நினைவுகள் மறக்கத் தொடங்கி விட்டன என்று சொல்கிறார். ஆனால் நூலிழையை இழுக்கும் பொழுது ஓலைச்சுவடிகள் விரிவது போல சில சொற்களைப் பிடித்து மேலேறி நினைவுகளைத் தொட்டு மீள்கிறார். அக்காட்சிகள் ஒரு திரைப்படத்தின் கதாபாத்திரம் போல அவரைக் காட்டியது.

அவரின் அன்றாடம் பற்றியும் ஒழுங்கு பற்றியும் விரிவாக காட்டப்பட்டிருக்கிறது. அவர் நாடகத்தை முறையாகப் பயின்றமை ஈழத்தமிழ் நாடகச் செயல்பாட்டை பாதித்த விதம் பற்றி பலரும் குறிப்பிட்டிருந்தார்கள். பேராசிரியர் க. சிவத்தம்பியின் அணுக்கராக இருந்திருக்கிறார். பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக பணியாற்றியிருக்கிறார். அவரது கலை பற்றிய அறிதல்களை கலை தொடர்பான கல்வி மேம்படுத்தியிருக்கிறது. நாம் பயிலும் கலைக்கென பயில்வை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை அக்காட்சிகள் காட்டின.

அவருக்கும் கவிதைக்கும் இடையிலான அணுக்கமும் மிக விரிவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கவிதையென்றால் தேவாரம், திருப்புகழ், திருவாசகம் போன்றவற்றையே சொல்கிறேன். இரண்டு தருணங்கள் இந்த ஆவணப்படத்தினை வேறு தளத்திற்கு உயர்த்தியது. அதில் முதலாவது கலாநிதி. ரதிதரன் சொல்வது. ஒரு சூழ்நிலைக்கான பின்னணியாக ஒரு பாடல் வரியை தேர்வு செய்கையில் மிகச் சரியாக அந்த வரியும் சூழலும் இணைவதை உணரும் இடத்தில் அவரது கண்களிலிருந்து கண்ணீர் வரும் என்று சொன்னார். அவரது நாடகங்களில் பயன்படும் செவ்வியல் படிமங்கள் அவரது கவித்துவ அறிதலிலிருந்து உருவாகுபவை. கவிஞர்கள் ஒவ்வொரு பண்பாட்டினதும் ஆழ்மனத்தின் கூருச்சிகள். அவர்களே பண்பாட்டு ஆழ்மனத்தின் மையப்படிமங்களைத் தொட்டு எடுக்கிறார்கள். சிகரநுனியென்று சொல்லலாம். அதை விரிவான பின்னணியில் விரித்தெடுப்பதே பிற கலைகளால் இயலக்கூடியது. ஆகவே தான் கவித்துவம் என்பது எல்லாக் கலை வடிவங்கள் பற்றிய பேச்சுகளிலும் இருக்கிறது. மிகச்சிறந்த கலைத்தருணத்தை ‘poetic’ ஆக இருந்தது எனச் சொல்வது அதனாற் தான். சிகரநுனியை அதிகாலையில் பார்க்கும் பரவசம் அவருக்கு நிகழ்ந்திருக்கிறது என்பதை ரதிதரன் அவரது இயல்பைச் சுட்டிய போது உணர்ந்தேன்.

இரண்டாவது தருணம் பேராசிரியர் மெளனகுரு சொல்லியது. ஒரு நாடகப் பயிற்சி வகுப்பில் நெறியாளரொருவர் மெழுகுதிரியொன்றைக் கையில் வைத்தபடி சுடரைத் தங்களை நோக்கி மெல்ல மெல்லக் கொண்டு செல்லச் சொல்லியிருக்கிறார். மெளனகுரு அதனை நாடகீயாமாக நடித்துக் காட்டியபடி சொல்லிக் கொண்டிருந்தார். கையில் பிடித்து முகத்துக்கு நேரே நெருங்க நெருங்க ஒவ்வொருவராகச் சுடரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த ஒரே ஒருவர் மட்டும் கை நடுங்கியாட சன்னதம் வந்தேறி உருவாடுபவர் போல ஆனார். உடனே நெறியாளர் அவரைக் கைகாட்டி “இங்கே பாருங்கள் இது தான் அந்த Trans” என்று சொல்லியிருக்கிறார். அந்தச் சுடரின் உள்ளே எரியும் தீயில் எழும் சாமியாடியை அவர் விபரித்த போது அந்த உக்கிரமான தருணத்தை எண்ணி வியந்தேன். ஒரு மாபெரும் புனைவின் உச்சத்தில் நிகழ்வது போன்ற ஒரு மகத்தான கதைத் தருணமது.

ஜெயமோகனின் லங்காதகனம் எனும் குறுநாவலில் வரும் கதகளி கலைஞனை அக்கணம் எனக்கு நினைவூட்டியது. உக்கிரம் மிக்க அந்த கலைஞனின் கண்கள் ஏன் நெருப்பின் சிவப்புடன் சொல்லப்பட்டிருக்கிறது என இன்னும் ஆழமாக உணர முடிந்தது. ஒரு உச்ச கணத்தில் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தின் முழுமையுடன் திகழும் அருங்கணத்திலே அவன் மெய்க்கலைஞன் ஆகிறான். அந்த நிலைமாறு தன்மை நிகழாதவர் கலையை ஆக்க முடியாது. அந்த நெருப்புச் சுடரினை நோக்கி சன்னதம் கொண்டது குழந்தை ம. சண்முகலிங்கம் தான். அவர் சன்னதம் வந்தாடும் தோற்றம் மனக்கண்ணில் தோன்றும் பொழுது அந்த உக்கிரம் அவரது படைப்புகளில் வெளிப்பட்டிருப்பது எவ்வாறென்பதை உணர முடிகிறது.

இந்த இரண்டு தருணங்களுடன் சேர்த்து பல விபரிப்புகளின் ஊடாகவும் குழந்தை ம. சண்முகலிங்கம் எனும் கலைஞனை நாம் நெருங்கி அறிய இந்த ஆவணப்படம் உதவுகிறது. குழந்தை ம. சண்முகலிங்கத்தின் சுபாவம் என்றும் என்னை ஈர்ப்பது. ஒட்டாத வெட்டாத பாவனைகள் கொண்டவர். உடல்மொழியில் ஒரு சாதுவின் நெளிவுகள் இருக்கும். குரலில் அவருக்கு கம்பீரமும் இருக்கிறது. ஓர் ஆசிரியராக அவரது இடமும் பங்களிப்பும் பற்றி ஒரு பகுதி இந்த ஆவணப்படத்தில் பதிவாகியிருக்கிறது.

சோமிதரன் ஈழத்து ஆவணப்படங்களைப் பொறுத்தவரை முன்னோடிகளின் இடத்தில் இருப்பவர். அவரது எரியும் நினைவுகள், முல்லைத்தீவு சகா ஆகியவை முக்கியமான ஆவணப்படங்கள். கண்ணன் அருணாசலத்தின் ஆவணப்படங்களில் ஒருவகை மேற்தட்டுத் தனமிருக்கிறது. அறிவார்ந்த ஒழுங்கிருக்கிறது. அழகியலும் அப்படியே.

(சோமிதரன்)

ஆனால் சோமிதரனின் படங்களில் இயல்பான ஒருமையும் கலைத்தருணங்களும் நிகழ்கின்றன. பண்பாட்டையும் அந்தக் களங்களையும் இணைக்கும் பொழுது அவரில் நிகழும் ஒத்திசைவு முக்கியமானது. அது ஓர் அசலான அழகியலையும் பெறுமதியையும் அவரது ஆவணப்படங்களிற்கு அளிக்கிறது. அவரது அழகியல் உள்ளூர்த்தனமானது. அதுவொரு முக்கியமான அடைவு.

குழந்தை ம. சண்முகலிங்கத்தின் அரங்கு எனும் இந்த ஆவணப்படமும் அவரது முக்கியமான பங்களிப்பாக இருக்கும். ஒரு கலைஞரென்பவர் சமூகத்தின் ஆழ்மனப் பித்து வெளிப்படும் கலையாடுபவர். அவரின் சொற்களில் வந்து சன்னதமாடுவது நாமறியாத நம் ஆழங்கள். அதை அறிவதும் சிந்திப்பதும் உரையாடுவதும் தொடர்ந்து முன்னேறிச் செல்வதுவும் அவசியமானவை. அத்தகைய பல ஆளுமைகளை நாம் சரியாக ஆவணப்படுத்தவில்லை. நிறைய வேண்டிய அந்த மாபெரும் சாடியில் ஒரு தங்க நாணயம் போல இந்த ஆவணப்படம் நிகழ்ந்துள்ளது. பங்களிப்பாற்றிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

ஆவணப்படத்தில் மேலுமொரு முக்கியமான தருணம் நிகழ்ந்துள்ளது. அவருக்கும் இடதுசாரிகளுக்கும் தமிழரசுக் கட்சியினருக்குமான தொடர்பு பற்றிய பேச்சுகள் வந்த போது அவரை இடதுசாரியா தமிழ்த்தேசியவாதியா அல்லது என்ன அரசியலை உங்கள் படைப்புகள் முன்வைக்கின்றன போன்ற கேள்விகள் எழுகின்றன. சிரித்துக் கொண்டே “என்ர படைப்புகளில் இருப்பது நான் தான்” எனத் திரும்பத் திரும்ப அழுத்தமாகச் சொல்வார். அது மிகச்சரியான இடமென்று நினைக்கிறேன். படைப்புகளின் ஊடாக நாம் சந்திப்பது கலைஞர் எனும் ஆளுமையை. அவரிடம் தான் நாம் உரையாடுகிறோம். அதற்கென அவர் தனது படைப்புகளில் பல கதாப்பாத்திரங்களாக தோன்றுகிறார், விவாதிக்கிறார், சொல்கிறார், ஆழ்ந்து செல்கிறார். ஒரு கலைஞர் ஓர் அரசியற் தரப்பாக ஆக முடியாது. சித்தாந்தங்களிற்குச் சேவகம் புரிய முடியாது. வரலாற்றுக்குத் திரைச்சீலை விரிக்க முடியாது. அனைத்துக்கும் அப்பால் நிற்பதுவே கலைஞரின் இடம். சன்னதமேறிக் கலையாடுபவரிடம் சாமியே வந்து இறங்குகிறது என்பது நம் பண்பாட்டின் நம்பிக்கை. தெய்வம் வந்து ஆடிச்சென்ற கலைஞனான குழந்தை ம. சண்முகலிங்கத்தை மேலும் நெருங்கும் ஒரு வாய்ப்பாக இந்த ஆவணப்படம் தொகுக்கப்பட்டிருக்கிறது.

குழந்தை ம. சண்முகலிங்கம் : அஞ்சலி

கண்ணீரில் விளக்கெரியும் தேசம் : சோமிதரனின் ஆவணப்படம் குறித்த கட்டுரை

TAGS
Share This