சராசரிகளுடன் உரையாடுதல்
சமூகத்தின் பெரும்பான்மை என்ற தொகுதி சராசரிகளின் திரள். எந்தவொரு அறிவியக்கத் தரப்பும் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் இடைவிடாது உரையாடிக் கொண்டிருப்பது சராசரிகளுடன் தான். சாராசரிகளின்றிச் சமூகமில்லை. அவர்களைக் கேலியாகவோ வெறுப்புடனோ ஒரு எழுத்தாளர் அணுகத் தேவையில்லை.
முகநூலில் என் மீது நண்பர் ஒருவர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதையொட்டி உருவான உரையாடலுக்காவும் எனது புனைவு ஒன்றிற்கு வந்த வாசகர் கடிதத்திற்கான எதிர்வினையொன்றிற்கும் நான் பதிலளித்துக் கொண்டிருந்தேன். நண்பருக்கு முகநூலிலும் எதிர்வினைக்கு இணையத் தளத்திலும் எனது பதில்களை அளித்திருந்தேன்.
முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் உரையாடலுக்கான தளமல்ல. அது ஒரு கேளிக்கைத் தளம் மட்டுமே. அதைத் திரும்பத் திரும்பச் சொல்லியும் வருகிறேன். நான் மதிக்கும் நண்பர் என்பதால் மட்டுமே அவரது குற்றச் சாட்டுகளுக்குப் பதிலளித்தேன். ஆனால் அவரது பின்னூட்டங்களிலும் வேறு தனிப்பதிவுகளிலும் சராசரிகள் உள்நுழைந்து நீங்கள் எழுதுவது விளங்கவில்லை. ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் எழுது என்றும், சுருக்கமாக எழுது என்றும் அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள். இத்தகைய சராசரிகளிடம் உரையாடுவதில் பயனேதுமில்லை. இலக்கியம் பற்றியோ சமூகம், பண்பாடு பற்றியோ அவர்களுக்கு இதுவரை கிடைத்த அரைகுறை அறிவுடன் கேலிகளையும் சீண்டல்களையும் நிகழ்த்தியபடியே இருக்கிறார்கள். அறிவியக்கவாதி ஒருவர் முற்றாகக் கவனமெடுக்கத் தேவையில்லாத சராசரிகளின் வன்முறை அது. அதனைத் தான் என் எதிர்வினைக் கட்டுரையிலும் சொல்லியிருந்தேன்.
சமூக வலைத்தளங்களில் சராசரிகள் மட்டுமல்லாமல் அதில் நுண்ணுணர்வு கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்னும் அடிப்படையிலேயே எனது ஆக்கங்களை அதில் பகிர்ந்து வருகிறேன். சமூக வலைத்தளங்களில் அவ்வாக்கங்கள் தொடர்பில் எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிப்பதுமில்லை. மின்னஞ்சல் மூலம் கேள்விகளை அனுப்பி வைத்தால் பதிலளிப்பேன் என்ற குறிப்பைத் தடித்த எழுத்துக்களில் போட்டு அதைப் பகிர்ந்துமிருந்தேன். அதை என் ஆணாதிக்க இலக்கிய மேட்டிமைத் தடித்தனமென்று மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சராசரிகளில் இரு வகையினர் உண்டு. ஒரு சாரார், அறிவுச் செயல்பாடுகள் இருக்கின்றன என்பதையே அறியாத பாமரர்கள். இன்னொரு சாரார் அதன் ஏதாவதொரு வழிநடையில் உள்வந்து கொண்டிருப்பவர்கள். நான் முதற் தரப்பினருடன் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை. ஒரு வரியெழுதினால் கூட அதற்கு இன்னொரு பந்தி பொழிப்புரை கேட்பார்கள். இத்தகையவர்கள் எங்களது கல்வி முறைமை உருவாக்கிய கிளார்க் மனநிலையின் வாழும் உதாரணங்கள். எங்களது கல்வி முறை வீழ்ச்சியின் குறிகாட்டிகள். ஆனால், இரண்டாவது தரப்பினரிடம் நான் உரையாடியாக வேண்டியிருக்கிறது. அவர்கள் சராசரிகளிலிருந்து மேலெழுந்து கொண்டிருப்பவர்கள்.
எந்தவொரு சிந்தனையும் பார்வைகளும் சமூக அமைப்பில் நிலைபெற்ற பின்னர், அது முற்போக்கானதாக அரசியல் சரிநிலைகள் கொண்டதாக நம்பப்பட்டுவிடுகிறது. அதன் உட்குறைகளை, அவை விரிவடைய வேண்டிய இடங்களைச் சுட்டுவது ஒரு எழுத்தாளராக எனது கடமை. மனித வாழ்வுகளின் விரிவை அறியாத புத்தகங்களை மட்டுமேயோ அல்லது அதுவும் இன்றியோ சமூக வலைத்தள அரசியல் சரிநிலைகளை உரையாடுபவர்கள் இக்காலத்தில் கும்பலெனத் திரண்டிருக்கிறார்கள். இரண்டு நாளைக்கு சமூக வலைத்தளத்தில் ஒரு ட்ரெண்டிங் என்பதற்கு அப்பால் அத்தகைய எதிர்வினைகளுக்கு எந்த மதிப்பும் அறிவுலகில் இல்லை. இதனை அறியாதவர்களைப் பாமரர் எனச் சுட்டுவதே பொருத்தம். உடனே அவர்களின் ஆணவம் புண்பட்டுவிடும். இப்பொழுதே அதற்கும் சேர்த்து அரசியல் சரிநிலையுடன் ஒரு பகிரங்க மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தப் புண்படுதல் இன்று பலதளங்களிலும் உள்ளது. மதத்தை விமர்சித்தால் மதவாதிகளும் தமிழ்த்தேசியத்தை விமர்சித்தால் தேசியவாதிகளும் சமூகத்தை விமர்சித்தால் பாமரர்களும் என்று பலரும் புண்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுக்கு ஓர் அறிவியக்கவாதி முன்னால் வந்து, நான் இது தான், எனது வழி இது தான் இதன் மூலமே என்னுடன் நீங்கள் உரையாட முடியும் என்பது தாழ்வுணர்ச்சியடைய வைக்கிறது. அவர்களின் அகங்காரம் சீண்டப்படுகிறது. அத்தகைய சீண்டல் நிகழாமல் ஒரு அறிவியக்கம் இம்மண்ணில் நிகழ முடியாது. சீண்டல் ஒரு தொடுகையென அவர்களின் போதமையைப் பிடித்துலுப்புகிறது. அவர்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கேலியிலும் வசையிலும் திரிபிலும் இறங்கி விடுவார்கள். அது தான் சராசரிகளுக்குக் கைவந்த கலை.
அப்படிச் சராசரிகளாகத் தாங்கள் இருக்கிறோம் என்பதில் உவகையும் களிப்பும் கொள்வார்கள். அதுவே கும்பல் தரும் கிளர்ச்சி.
அவர்கள் முன் நான் சொல்லிக் கொள்ள ஒன்று மட்டுமே இருக்கிறது. நான் ஒரு எழுத்தாளர், கவிஞர், இந்தப் பண்பாடு என்வழியாக முன்நகர்கிறது என்ற தன்னுணர்வு எனக்கிருக்கிறது. அதே நேரம் அப்பெருக்கில் நானொரு சிறு துகள் என்ற பணிவும் இருக்கிறது. ஆனால் நான் பணிய வேண்டியது சராசரிகளிடமல்ல.
*
புதிதாக அறிவியக்கத்தின் ஏதாவதொரு பகுதிக்குள் நுழைபவர்களுக்கு இந்தச் சராசரிகள் உண்டாக்கும் அறிவியக்கம் மீதான மதிப்பிறக்கத்தையும் கலை இலக்கியம் மீதான சராசரி உரையாடல்களையும் பற்றிச் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டும்.
இலக்கியமோ கலையோ அல்லது எந்த அறிவுத்துறையோ நீங்களாகவே தனியே சென்று ஏறி அடைய வேண்டிய பாதைகளில்லாத மலைச்சிகரம். அதில் ஒவ்வொரு புல்லையும் பூவையும் பனியையும் நீங்கள் தான் முதலில் பார்க்கிறீர்கள். அதனியல்பை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். சராசரிகள் உருவாக்கியளிக்கும் அரைகுறைச் சித்திரங்களுடன் நீங்கள் அறிவியக்கத்தை அணுகக் கூடாது. ஒருவகையில் சராசரிகளே எங்கோ ஒரு மூலையில் உள்ள நுண்ணுர்வுள்ள ஒருவருக்கு அறிவியக்கத்தின் தரப்புகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சமூகப் பங்களிப்பென்பது அது தான். அறிவுத்துறையிலுள்ள பலதரப்பினரதும் சிந்தனைகளை காடே அறியாத வீட்டு நாய்க்குட்டியொன்று வேட்டை பழகுவதைப் போல், தன் ஆழ்மனதிற்குள் உள்ள உள்ளுணர்வினால் தானெதுவென்று உணர்ந்து முன் செல்ல வேண்டும்.
யார் சொல்வதையும் நம்பத் தேவையில்லை. யாரையும் ஏற்றுக்கொள்ளவோ வழிபடவோ தேவையில்லை. ஆனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். புறக்கணிப்பு சராசரிகளின் வழி, கவனித்தலும் பின் தொடர்தலுமே நுண்ணுணர்வுள்ள மனங்கள் செய்ய வேண்டியவை. ஈழத்துச் சூழலில் இத்தகைய உரையாடல்களுக்கான தளங்கள் இல்லை. எனது தளத்தை அதன்பொருட்டே உருவாக்க விரும்பினேன்.
ஒவ்வொரு நாளும் எழுதுவது, அதைச் செம்மைப்படுத்துவது என்பது எனக்கு நானே இட்டுக்கொண்ட விதி. அதை எதுவும் தடுத்துவிடாதபடி பார்த்துக் கொள்கிறேன். எந்த எதிர்மன நிலையும் என் அகத்தை அணுகவிடாதபடி காத்துக்கொள்கிறேன். சராசரிகள் எழுத்தாளரில் அல்லது சிந்தனையாளர்களில் நிதானமிழப்பை விரும்புகிறார்கள். அதுவே எழுத்தாளர்களைத் தங்களைப் போன்ற சராசரிகளில் ஒருவரென ஆக்குவதன் மூலம் தங்கள் ஆணவத்தை தாழ்வுணர்ச்சியை திருப்தி செய்துகொள்ளும் முறை. நான் நிதானமிழப்பதில்லை. அதனை ஒரு பயிற்சியாகக் கூடச் செய்யத் தேவையில்லை. அது என் இயல்பு. நான் இதுவரை ஆயிரக்கணக்கான வசைகளையும் கேலிகளையும் எதிர்கொண்டிருக்கிறேன். அதன் பொருட்டுப் புலம்பியதில்லை. இதனால் எனது குடும்பம் உட்பட பலரும் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனாலேயே சமூக வலைத்தள விவாதங்களைத் தவிர்கிறேன். புதிதாக எழுதவோ சிந்திக்கவோ வரும் ஒருவர், இதனை ஒரு எழுத்தறம் எனக் கொள்வது அவரது குன்றாத செயலூக்கத்துக்கு அடிப்படையான தேவை.
நாங்கள் நம்புபவற்றையும் சந்தேகம் கொள்பவற்றையும் அறிவுத்தரப்புகளுடன் தான் உரையாட வேண்டும். சாரசரிகளுடன் அல்ல என்ற புரிதல் நமது சமூகத்தில் ஒரு சிலருக்காவது உருவாக வேண்டும். அவர்கள் தங்கள் பார்வைகளைத் தொகுத்துக் கொண்டு முன்னகர வேண்டும். அவர்கள் தாங்கள் நம்பும் அல்லது உடன்படும் கருத்துகளுக்காக கல்லடிகளையும் சிலுவைகளையும் சுமக்கத் தான் வேண்டும். அது அறிவியக்கத்தின் மாற்ற முடியாத உருவகம்.
*
கருத்துச் சுதந்திரத்தின் எல்லைகளைச் சாராசரிகள் வரையறுப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அறிவியக்கத்துடன் எவ்விதத் தொடர்புமற்ற அவர்கள், அது வரை அவர்களறிந்த நீதி நியாயங்கள் சார்ந்தே சிந்தனைச் சிறையைக் கொண்டவர்கள். நவீனத்துவம் உருவாக்கிய ஜனநாயக வெளியை, தமது அரசியல் சரி நிலைகளின் கருத்தியல் மேலாதிக்கத்தால் கட்டுப்படுத்த முனைவார்கள். அவர்கள் அப்போதைக்கு ஏற்க முடியாத கருத்துக்களுடன் ஒருவர் சிந்தனைத்தளத்தில் நுழைந்தால், முற்போக்காகப் பேசுங்க தோழர், ஆணாதிக்கத் தடித்தனம், இலக்கிய மேட்டிமைவாதம் போன்ற கோரிக்கைகளுடனும் வசைகளுடனும் வருவார்கள். அறிவியக்கத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் ஜனநாயகத்தையும் கருத்து சுதந்திரத்தையும் இந்தச் சராசரிகளிடம் இருந்து காக்க வேண்டிய பொறுப்புள்ளவர்கள்.
அறிவியக்கத்தில் ஒன்று உரையாடப்படக் கூடாது, இது இப்படி வெளிப்படுத்தப்படக் கூடாது என்ற தீண்டாமைகள் எதுவும் கிடையாது. ஆணாதிக்கம் சமூகத்தின் வலிமையான விசை. அதனை அரசியல் சரிநிலையுடன் தான் உரையாட வேண்டும் என்று ஒருவர் கோர முடியாது. அது அவ்வுரையாடல் மனம் திறந்து நிகழ்வதைத் தடுத்து விடும். அதன் அக அழுக்குகள், அதன் மீட்சிகள் பற்றி அறிவுத்தளம் விவாதித்தே ஆக வேண்டியிருக்கிறது. அதை உரையாட வேண்டிய தேவை ஏன் என்பது பற்றிய கரிசனை பாமரர்களுக்கு இருக்காது. அவர்கள் தங்கள் மூளையால் சிந்தித்து தங்கள் குரலாயே ஒருவர் குரல் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். அதற்காக எந்த நபருடனும் கூட்டுச்சேரத் தயங்க மாட்டார்கள். எந்தப் பிற்போக்கான தரப்புகளுடனும் சேர்ந்து அறிவியக்கத்தை விமர்சிப்பார்கள். நல்லது தோழர், போட்டுத் தாக்குங்கள் என்று உள்ளூர மகிழ்வார்கள். அவர்களிடமுள்ள குறைபாடுகளுக்கு எந்த விமர்சனமும் அந்த நேரத்தில் தேவையற்றது. அந்தப் பிற்போக்காளர் தான், அந்தச் சராசரி நபர் செய்ய விரும்புவதைச் செய்கிறாரே, அதில் எதற்கு அரசியல் சரிநிலைகள் எல்லாம் என்று கடந்து போய் விடுவார்கள்.
அறிவியக்கத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், எதனையும் உரையாடல் என்ற கோணத்திலேயே அணுக வேண்டும். அதில் சராசரிகளின் பார்வைகளை அறிய வேண்டுமே தவிர எதிர்வினையாற்றத் தேவையில்லை.
பாமரர்களின் அறிவீனமே அவ்வுரையாடலிற்கான தேவை என்பதை உணர வேண்டும். தனது அகத்துடன் நேர்மையாக அக் கேள்விகளையும் சிந்தனையையும் மோத விட வேண்டும். அதிலிருந்து தன் சுயசிந்தனையை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.