நீருக்கடியில் ஓடிக்கொண்டிருக்கிறது திமிங்கலம்
கவிஞர்கள் ஒரு கால கட்டத்தின் குறியீடாக மாறக்கூடிய அரிதான நிகழ்வுகள் நடக்கும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு கம்பீரமான குறியீடாக பாரதியார் எப்படி மாறினாரோ, அப்படி ஈழப் போராட்டத்தின் ஏராளாமான சம்பவங்களுக்கான, குறிப்பாக சித்திரவதைகள், இயக்கங்களினுடைய அநீதி, அரசினுடைய அடக்குமுறை, சமூகத்தினுடைய புறக்கணிப்பு போன்ற எல்லாவற்றிற்கு ஊடாகவும் தொடர்ந்து பயணித்து எப்படி ஒருவன் கவிஞனாக ஆகிறான், தொடர்ந்தும் அந்த நம்பிக்கையோடு போராடுகிறான். அதனூடாக தனது வாழ்க்கையை எப்படி ஒரு குறியீடாக மாற்றிக்கொள்கிறான். அதனாலேயே எப்படி கொல்லப்படுகிறான் என்பதான ஒட்டு மொத்த சித்திரமாகவும் எஸ் போஸ் மாறி விடுகிறார்.
ஏன் தமிழ்ச்சமூகம் தொடர்ந்து கவிஞர்களை சாகவிட்டுக் கொண்டும் அதற்குப் பின் ஒப்பாரி வைத்துக்கொண்டும் இருக்கிறது. எந்த ஒரு கவிஞரும் தான் எங்கே படித்தேன், எங்கே வேலை செய்தேன் என்பதற்காக நினைவுகூரப்பட விரும்பமாட்டார். அவர் எதை எழுதினாரோ அதற்காகவே அவரை நினைவு கூரப்பட வேண்டும். அந்த ஒன்றுக்கவே அவர் சமூகத்தின் ஞாபகமாக மாற்றப்பட வேண்டும். இன்றைக்கு கட்டப்பட்ட கட்டிடங்கள் எல்லாம் இடிந்து போயிற்று, நமது நினைவாலயங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு புதிய வெற்றிச் சின்னங்கள் உருவாக்கப்பட்டாயிற்று. எங்களுடையதற்கு மாற்றான ஞாபகங்களும் நினைவுத் தூபிகளும் எங்களுடைய நகரங்களுக்குள்ளேயே வந்தாயிற்று.
இந்த இடத்தில் தனது கவிதைகளினூடாக ஒரு சமூகத்தின் ஞாபக அடுக்கினை எஸ் போஸ் உறைய வைக்கிறார். அது ஒரு பளிங்காலான நினைவுக்கல் போல மொழிப்பரப்பில் நடப்பட்டிருக்கிறது.
ஏராளாமான போலியான அடையாளங்கள் தமிழ்க்கவிதைகளின் முகங்களாக மாறியிருக்கும் இச் சூழலில் எஸ் போஸ் போன்றவர்களின் கவிதைகளை மீட்டெடுப்பதென்பது தமிழ்க் கவிதைகளுக்குரிய அடையாளங்களையும் அதன் அசலான குரலையும் ஒலிக்கச் செய்யும் செயல்.எஸ் போஸ், நான் யாருக்காக இருக்க விரும்புகிறேனோ அவர்களின் அடையாளமாகவே இருக்க விரும்புகிறேன் என்று சொல்கிறார்.
எஸ் போஸ் பற்றி நினைக்கும் போதெல்லாம் இரண்டு பேர் ஒரே மாதிரியான உருவத்தோற்றத்தோடும் ஒரே மாதிரியான இயல்புகளோடும் இருக்கக் கூடிய ஆட்களை மனித சரித்திரத்தில் நாம் பார்க்க முடியும். ஒன்று யேசுவினுடைய முகம், ஓரலான ஓட்டிய தாடி வைத்த முகம், அவர் 32 வயதினிலே இறந்து போகிறார். இரண்டு சே குவரா , அவரும் எல்லா வகையான அடக்குமுறைகளையும் எதிர்த்து ஏதென்று தெரியாத நாட்டின் துயரையும் தன்னுடையதாக்கிப் போராடியவர். இந்த நபர்களுக்கிடையிலிருக்கும் இயல்பு ஒற்றுமை இது தான் உயிர்களின் மீதான நேசம். ஒரு தலைவருக்கு இருந்தால் எப்படியானதென்பதற்கு யேசுவும், போராளிக்கு சேகுவாராவும், ஒரு கவிஞனுக்கு எஸ் போஸும் எனது ஞாபகத்தில் படிந்துவிட்ட மனிதர்கள்.
எஸ் போஸின் கவிதைகள், சிறுகதைகள், குறிப்புகள் அடங்கிய முழுத்தொகுப்பொன்றை மகிழ் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்த நேரத்தில் அவருடைய கவிதைகளைக் குறித்து மறுபடியும் நாம் உரையாட ஆரம்பிப்பது முக்கியமானது. ஏனென்றால் எஸ் போஸ் தமிழ்க் கவிதைகளின் புதிய களங்களைத் திறந்த ஒரு கவிஞன். எல்லா மகத்தான கவிஞர்களைப் போலவும் அதற்கான நெருப்புடன் சொற்களை எரித்தவன்.
கவிதைகளைப் பொறுத்த வரையில் ஈழத்தின் நவீன கவிதை மரபில் சொற்தேர்வு, ஒழுங்கமைப்பு பற்றிய பிரக்ஞய் உள்ள கவிதைகள் மிகவும் குறைவு. மிக அரிதான சிலரே தொடர்ந்தும் இவற்றில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் எஸ் போஸ் ஆழமான கவனத்தினை இரண்டிலும் செலுத்தியிருக்கிறார். படிமங்களாக ஞாபகங்களை மாற்றி அதை ஒரு கால கட்டத்தின் அல்பமாய் கவிதை வரிகளில் தொங்க விட்டிருக்கிறார்.
எஸ் போஸ் தனது கவிதைகளிற்கூடாக இரண்டு படிமங்களை மீண்டும் மீண்டும் வலிமையாக்குகிறார். சிலுவை, பறவை என்ற சொற்களை அவர் விரித்துப் பேசிக்கொண்டே போகிறார்.
எப்படி சிலுவை, மனித சமூகத்தின் பாவங்களைச் சுமந்ததற்காக இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் ஏசு அறையப்பட்ட குறியீடானதோ, எஸ் போஸின் கேள்வியும் அதே குறியீட்டுடன் தான் தொடங்குகிறது. “அதிகாரத்தைச் சிலுவையிலறைவதா/ அதிகாரங்களுக்கெதிரான நம் இருதயங்களைச் சிலுவையிலறைவதா? ” ஆனால் அவர் மனித குலத்திற்கு காட்டும் வழி” யுக நெருப்பின் சாம்பலிடை கிடக்கும் அந்தப் பறவையிடம் சென்று சேருங்கள் ” என்பது தான். ஒட்டுமொத்தமாகவே அவருடைய கவிதைகளுக்குள்ளிருக்கும் பறவைகள் எல்லாம் சிறகடித்துப் பறப்பவையாகவும் சுதந்திராத்தின் குறியீடுகளாகவும் இருப்பவை. மிருகங்கள் அடக்குமுறையாளர்களையும் சித்திரவதையாளர்களையும் குறிப்பிடுபவை. சிலுவை இந்த இரண்டின் பொருட்டும் சுமப்பவர்களைக் குறிப்பிடுபவை.
சில குறியீடுகளை எழுதி எழுதி தனது சமகாலத்தில் அதற்கான மாற்று அர்த்தமொன்றினை கவிஞர்கள் உருவாக்குகிறார்கள். அதுவே அவர்கள் எதிர்காலத்திற்கென விட்டுச் செல்லும் செய்தி.
ஆனால் எஸ் போஸ், அவருடைய காலகட்டத்தில் அவருடைய கவிதை வரியைப் போலவே இருந்தார் எனது தான் துயரமானது.
” நீருக்கடியில் ஓடிக்கொண்டிருக்கிறது திமிங்கலம்
கரையிலிருக்கும் சிறுவன் அதை அறியவில்லை”
(2017)
(எஸ் போஸினுடைய முழுத்தொகுப்பின் வெளியீட்டில் கிளிநொச்சியில் பேசிய உரையின் சுருக்கப்பட்ட வடிவம்)
(மறுபாதி)