கன்னி அம்மன், அப்பாவும் கோவர்த்தன கிரியும்: கடிதம்
கன்னி அம்மன்
வயல்களில் சப்த கன்னிகளுக்கு கோயில் வைப்பார்கள். ஏழு பெண்கள். அவர்களுக்கும் நாகதம்பிரானுக்கும் அறுவடை மற்றும் விதைப்பு காலத்தில் தான் சிறப்பு வழிபாடு. அதுவரை அவர்களின் அறையில் தூக்கணாம் குருவியும் கூடு கட்டலாம். அவ்வளவும் சுதந்திரமாண பிராமணர் அற்ற கோவில்கள். அவை போபவர் வருவபர் எல்லாம் பூசை செய்தாலும், ஆரம்பத்தில் மரத்தின் கீழ் தன்னை வைத்த வயல்காரனின் பிள்ளை மீது அவளுக்கை ஒரு காதல் அதுவும் பக்தியை பாலனிடம் காணலாம் என்பது போல அடம்பிடிக்கும் அவனை.. அவளும் தேடுகிறாள். இன்று நெற்கதிர்கள் முற்றிவிட்டதால் கட்டாயம் அறுவடைக்கு வருவான் என்று ‘நேற்று வருவாய்’ என்று எண்ணி இருப்பாள். ஆனால் நீ போகவில்லை, இன்று தான் போனாய். அறுவடை முன் வரம்பில் மட்டும் நடந்து போன உன்னால் இப்போது வயல் முழுதும் நடக்க முடியும் காரணம் இப்போது புனிதம் கொடாது நெல்மணிகள் வெட்டியாகி விட்டது. அந்த வயல் அறைக் கருவறை, பிரசவம் முடித்து பல தூரம் வந்து திரும்பி பார்கும் போது நீ ஏற்றி காவலுக்கு நன்றி சொன்ன சிட்டி விளக்கு ஒரு மூக்குத்தி போல ஒளிர்கிறது. கதிர் ஆடைகள் எல்லாம் உருவப்பட்ட நிர்வாணமான அந்த வயல் கன்னி மகத்தில்..
*
அப்பாவும் கோவர்த்தன கிரியும்
இலகுவாக எறிக் கொண்டு வந்த கவிதையும் கைத்துப்பாக்கி, பராலைட் என்று ஒரு இடத்தில் எங்களின் பழைய நினைவுகளைத் தூண்டிப் போனாலும், தோல்வியில் முடிந்த தற்கொலை முயற்சி, அம்மாவின் உடலோடு ஒட்டிக் கொண்ட அவளின் கழுத்துக்குள் என்ற வசனங்களில் வரலாற்றைத் தேடும் ஒரு புதினம் விரும்பியாக, மாற்றியது காரணம் இப்போது எனது அம்மாவின் இறப்பின் 2 மாத இடைவெளி பல சோகங்களின் விரிப்பாக தான் இந்தக் கவிதை சொல்வதாகப் பார்த்து இருந்தும், போக மனம் மறுக்கும், மீண்டும் வரிகளைக் கண் கொண்டு துழாவிய போது மிஞ்சிய வரிகளில் மிதமாகிய எனது அப்பவின் கண்ணவதார மலைக் குடை வாழ்வு இந்தக் கொடிய யுத்தகாலத்தில், நிவாரணம் வாங்க நின்ற நினைவுகளையும் இலகுவாக முன்னுக்கு கொண்டுவந்து, மீண்டும் பராலைட் நினைவு குறிப்பாக 1999 களையும் மிக விரைவாக 2006 மண்டைதீவு தாக்குதலின் பின்னான இரவு 8.30 பரா லைட் நினைவு கிட்டதட்ட, அந்தகால தரம் எட்டு வாழ்வின் படசாலை வாழ்வும். இந்தக் கவிதை கண்முன் காட்டி ஒடி மறைகிறது.
Rtr kirishanth
வணக்கம் கிரி,
தொடர்ந்து கவிதைகளை வாசித்து அனுப்பும் மின்னஞ்சல்கள் மகிழ்ச்சியளிக்கிறது. எமது இலக்கியச் சூழலில் வாசகர்கள் எழுத்தாளர்களுடன் கடித ரீதியில் உரையாடிக் கொள்வது மிகவும் குறைவு. நீங்கள் செய்து கொண்டிருப்பது முக்கியமான ஒரு பண்பாட்டுச் செயல்பாடு. கவிதைகளோ கதைகளோ வாசக மனதில் என்ன நினைவுகளை, உணர்வுகளை உருவாக்குகின்றன என்பதை எழுதுபவர் அறியும் தோறும் அவரது மனம் தொடர்ந்து எழுதும் ஊக்கத்தை அடையும். அதே நேரம் எழுதுபவருடனான உரையாடல் வாசகரையும் தொடர்ந்து வாசிப்பவற்றைத் தொகுத்து உரையாடும் பயிற்சியை அளிக்கும்.
கவிதைகள் பற்றிய உங்களது வாசிப்பு கற்பனை கொண்டதாக இருக்கிறது. உங்களுடைய சொந்தக் கற்பனை வடிவாயிருக்கிறது. கவிதை போலவே உங்களுக்கு மொழியும் வருகிறது. நானும் நீங்களும் பார்த்த ஒரே பராலைட்டின் வெளிச்சம் தான் இந்தக் கவிதைக்குள் இருக்கிறது.
அம்மா இறந்ததை நான் அறியவில்லை கிரி, அஞ்சலிகள். சிறுவயதில் இருந்து ஒன்றாகப் பல்வேறு காலங்களில் இணைந்து படித்திருக்கிறோம். திருநெல்வேலியில் இருந்த எனது வீட்டிலிருந்து கல்வியங்காட்டுக்குப் பக்கத்தில் உள்ள உங்களது வீடு, அண்ணா, அக்கா ஆகியோர் நினைவுக்கு வருகின்றனர். அம்மாவின் இழப்பு ஒவ்வொரு ஆண் பிள்ளைக்கும் உண்டாக்கும் வெற்றிடத்தை எதைக் கொண்டும் எப்பொழுதும் பிறகு நிரப்பிவிட முடியாதது. அது நிரம்பிவிடக் கூடாததும். அம்மாவின் இழப்பில் உனது தோளுடன் நின்று துயர் கொள்கிறேன். அம்மாவுக்கு அஞ்சலிகள்.