கனவுகளின் தெய்வம்
எந்த விடுதலைக்கான மொழியும் கேள்விகளிலிருந்தும் சீற்றங்களிலிருந்துமே அடிப்படையில் எழும். பின்னர் அவ்விடுதலை தன் கனவைத் தானே கண்டாக வேண்டும். ஒரு ஆன்மீக விடுதலை அடிப்படையில், இந்த வாழ்வு எதன் பொருட்டுப் பொருள் கொள்ளத் தக்கது? இதற்கு என்ன மதிப்பு? நான் என்பது என்ன? இவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம்? இது போன்ற சீற்றமிகு ஆதாரக் கேள்விகளிலிருந்து உருவாகுவது. சீற்றம் ஒரு தொடக்கம் மட்டுமே. பின்னர் அது தன்னில் கனிய வேண்டும்.
அனாரின் தொடக்ககாலச் சீற்றமிகு மொழி, உடனடியாகவே பதங்கமாகி பின்னர், அம்மொழி மின்னும் படிகங்களாகும் ரசவாதம் நிகழ்ந்தது. அனார் தமிழுக்குள் மானுடக் கனவுகளை எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர். ஒரு குழந்தையின் கனவில் அதை மகிழ்ச்சியூட்டும் தேவதையைக் கண்ட குழந்தையின் இதழில் புன்னைகை அவிழ்வதைப் போல தமிழ்
மொழியை இதழ் தழைக்க வைக்கிறார்.
நம் மொழி ஒரு குழந்தை என்றால் அதன் கனவுகளின் மொழியை எழுதுபவர் அனார். அவரின் கவிதைகள் வற்றாத தாய்மையின் ஈரலிப்பிலிருந்து மானுட விடுதலையின் குழந்தைகளுக்கு முலைப்பாலூட்டுபவை. வாழ்வின் மீது கேள்விகள் நிகழாலாம். அதுவொரு பாலையில் நம்மை தனித்து விடும் ஒரு வழிதவறுதலாக நிகழக் கூடாது. எந்த விடுதலைக்கும் அவ்விடுதலையின் விரிவுகள் பற்றிய மகத்தான கனவுகள் ஆக்கியளிக்கப்பட வேண்டும்.
அனார் பெண்கள் காணக் கூடியதும் ஆண்கள் காண வேண்டியதுமான கனவுகளின் வரிகளில், பச்சையம் நிறக்க, மந்திரித்த வசியப் பொடி குழைய, கடலிலிருந்து கடற்கன்னிகள் தாழ்ந்தும் மிதந்தும் பாட, விரிந்து பறக்க விரும்பும் கோடி யட்சன்களினதும் யட்சிகளினதும் தெய்வம்.
*
குறிஞ்சியின் தலைவி
இரண்டு குன்றுகள்
அல்லது தளும்பும் மலைகள் போன்ற
முலைகளுக்கு மேல் உயர்ந்து
அவள் முகம் சூரியனாக தக தகத்தது
இரண்டு விலா எலும்புகளால் படைக்கப்பட்டவள்
பச்சிலை வாடைவீசும் தேகத்தால்
இச்சையெனப் பெருக்கெடுத்தோடும்
மலையாற்றைப் பொன்னாக்குகிறாள்
வேட்டையின் இரத்தவீச்சத்தை உணர்ந்து
மலைச்சரிவின் பருந்துகள் தாளப்பறக்கின்றன
மரக்குற்றிகளால் உயர்த்திக்கட்டப்பட்ட
குடில்களில் படர்ந்த மிளகுப்பற்றை
மணம்கசியும் கறுவாச்செடி
கோப்பிப்பழங்களும் சிவந்திருந்தன
நடுகைக் காலத்தில் தானியவிதைகளை வீசுகிறாள்
சுட்டகிழங்கின் மணத்தோடு
பறைகளுடன் மகுடிகளும் சேர்ந்து ஒலியெழுப்ப
ஆரம்பமாகின்றது சடங்கு
களிவெறி… கள் சுகம்…
மூட்டிய நெருப்பைச்சுற்றி வழிபாடு தொடங்கிற்று
வளர்ப்பு நாய்களும்… பெட்டிப்பாம்புகளும்… காத்துக்கிடக்கின்றன
மாயஆவிகளை விரட்டி
பலிகொடுக்கும் விருந்துக்காக
தீர்ந்த கள்ளுச்சிரட்டைகளைத் தட்டி
விளையாடுகிற சிறுசுகள்
வாட்டிய சோளகக்கதிர்களை கடித்துத்திரிகின்றனர்
பிடிபட்டு வளையில் திமிறும் உடும்பை
கம்பினில் கட்டி… தீயிலிட்டு…
அதன் வெந்த இறைச்சியை மலைத்தேனில் தொட்டு
கணவன்மார்களுக்கு பரிமாறுகின்றாள் குறத்தி
தும்பி சிறகடிக்கும் கண்கள்விரித்து
இரவுச் சுரங்கத்தின் கறுப்புத்தங்கமென எழும்
தலைவியை மரியாதை செய்கின்றனர்
மலைத்தேன் அருந்தியவாறு இருப்பவளை
புணர்ச்சிக்கு அழைத்தவன் கூறுகின்றான்
‘போர் தேவதையின் கண்களாக உறுண்ட
உன் முலைகளால்
குறிஞ்சி மலைகளையே அச்சுறுத்துகின்றாய்’
அவளது குரல் … மலைகளில் சிதறி ஒலிக்கின்றது
‘பெண் உடல் பூண்ட முழு இயற்கை நான்’
காற்றில் வசிப்பவன் …
காலத்தை தோன்றச் செய்வபன் …
இன்றென்னைத் தீண்டலாம்!
*
நீங்குதல்
எறும்புகள் பகல் கனவுகளை மொய்க்கின்றன
பின் இழுத்துச் செல்கின்றன
தாரை தாரையாக
உருகிக் கரிக்கின்ற உப்புத்துளிகளை
காயங்களில் இருந்து குடைந்து
எடுத்துச் செல்கின்றன
மணல் புற்றுகளின் களஞ்சியங்களுக்கு
குருத்தெலும்புகளை அரித்துக் கொண்டிருந்த
வெறுமையின் உதிரத்தை மணந்து
ஒன்றுக்கொன்று கனவுக்குள் சம்பாஷித்துக் கொள்ளுகின்றன
தனக்குத்தானே தூபமிடும்
வசியமறிந்தவர்கள் அறிவார்கள்
காலத்தைத் தூவி விசுறும் பகல் கனவுகள்
ஏன் காணப்படுகின்றன
மணல் புயல்களின் சூறைகளை
மூடிக்கொண்டிருக்கும் புற்றுகளின் சுரங்கங்கள்
இடம்பெயரக் கூடியது
புற்று மணல் நிறம் மாறி மாறி
கனவின் சாயலை உமிழ்கின்றது
சமிக்ஞைகள் வழங்கப்பட்ட எறும்புகள்
புற்றிலிருந்து விரைகின்றன
மர்மங்கள் வெளியேறும்
மணிக்கட்டின் அறுந்த நரம்பிலிருந்து
வழியும் குருதியில்
அந்தியின் சூரிய ஒளி பட்டு ஒளிர்கிறது.
*
பதம்
தன்னிச்சையாக உறைந்த
பனிச் சிற்பங்களின் உட்குரல் வடிவங்களுக்கு
சாயமிடுகிறாய்
ஏந்துகின்ற மெய்வடிவங்களின்
உள்ளேயும் வெளியேயும் பொறிகள்
நிறத்தின் ஏழு பாலைகள் நீ
இப்போது ஏழு நிறம் சூழ்ந்த
உடல் நான்
அதிர்ந்து கொண்டிருக்கிறது
ஏழு நரம்புகள் கொண்ட
செங்கோட்டு யாழ்
நாதங்களுக்குள்
நழுவிச் செல்லும் குரல்
யாரும் ஊகிக்க முடியாத அருள்
பிடிவாதம் கனிந்து
பலிக்கின்ற தருணங்களில் பொலிந்திடும் பொலிவு
முன்னிரவு ஏக்கத்தின் கொடை
மங்கலான நான்கு திசைகளிலும்
துயரின் தூய மென்னலைகள்
மறைவின் மீளாப் புனலாகினேன்
தடயங்கள் உதிர
நீங்காமல் சுழலும் பித்தக் கசப்பாவேன்.
*
நறுமணங்களால் தூபமிடும் யட்சி
நீயே என் மெழுகு
நீயே என் கூடும் குளவியும்
துளைகளில் பாகு திரண்ட தேனும்
குளக்கரையில் செந்தீவண்ண வாகையின் கிளைகளுக்குள்ளே சிவப்புத் தோலுடன் பௌர்ணமி பிறந்து வருவதைப் பார்த்திருந்தேன். மந்திரித்த முத்தமொன்றின் வடிவமென இரவின் குளத்தில் பிரதிபலித்தது பௌர்ணமி.
பனியில் ஒளியினை கலந்து உறுஞ்சுகின்ற தரைப்புற்களின் இடுக்குகளிலும், வாகை சருகுகளின் மறைவிலும் மினுங்குகின்ற மின்மினிகளைப் பிடித்து உள்ளங்கைக்குள் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள் யட்சி.
குளத்தின் மீது காற்றின் சலனத்தையும், பௌர்ணமியை மூடி விலகும் மேகங்களின் அசைவையும் பார்த்தவாறு “ஒளிக்கொரு வாசனை இருக்கிறது…. மறைவான நினைவின் மணத்தைப் போன்றது…” என்றாள்.
இலைத் திரள்களால் பணிந்த வாகை மரக்கிளையின் அருகே என் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்று நிறுத்தினாள். யட்சியை சூழ்ந்து மிதந்த ஈரப்பதமும் மென் குளிருமான மேகப்பஞ்சுக் குவியலை கைகளால் அள்ளி எடுத்து அண்ணார்ந்து மூடிய என் கண் இமைகளின் மேல் வைத்தாள். பறவையின் இதமான வயிற்றுப் பகுதியில் முகம் புதைந்திருப்பதாக உணர்ந்தேன். காட்சிகள் மறைந்து போயின. நெகிழ்ந்து, உடல் திரவமாக உருகுவதாகத் தோன்றியது.
கவிதையின் செம்புக் கோதுகளுக்குள் அடைபட்ட மௌனத்தின் கத கதப்பு உள் நுழைந்தது. புதிய புதிய வாசனைகள் அங்கு கமழ்ந்தன. மந்திரித்த முடிச்சுகள் அவிழ மஞ்சோணா மணிகள் சிதறிடும் ஒலி. என் புலன்கள் விலகுவதும் இணைவதுமாகச் சுழன்றது. வாசனைக்குள் நீர்த்துளி என தொலைந்து போகிறேன். காலம் மறந்து அந்நறுமண வெளியில் காற்றாகவும் கனவாகவும் உருமாறிக் கொண்டிருந்தேன்.
மேகமுருகி பிடி மழை இமைகளில் பொழிந்தது. கண்களுக்கு மட்டுமேயான ரகசிய மழை. மூடிய இமைகளை துடைத்துப் பார்த்தபொழுது, குளக்கரையில் யட்சி பெரிய மின் மினியாக ஒளிர்ந்து கொண்டிருந்தாள். இரு கைகளாலும் ஈரமணலை வாரிக் குவிப்பதை கண்டு அவளிடம் சென்றேன். அவளின் காதருகே குனிந்து மணலால் புற்றுக் கட்டுகின்றாயா… உன் புதிர்கள் ஒளிந்து கொள்ளும் குகையா…. என்றேன். இது சுவர்க்கத்தின் மணல், மயக்கும் கஸ்தூரியின் வாசனையை பூசிக்கொள் என்றாள்.
தொலைவுகளை வாசனையால் நெருங்கு. அரூபங்களின் மொழி அது. தேவதைகளின் முள்ளந்தண்டிலிருந்து கசிந்தபடி இருப்பது. நீ காண விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்லும் நறுமணம்.
உனக்காகவே இந்த மணக்கும் புதையலை செய்கின்றேன் என்றவள், ஒளி மணல் துகள்கள் படிந்த கைகளால் ஈரக் களியை என் கன்னங்களில் தடவியபடி, அதன் ரகசியம் காண கொஞ்சம் பொறுத்திருக்குமாறு வேண்டினாள்.
தாள முடியாத துயரமும் பரவசமுமாக யட்சியை பின் தொடர்ந்தேன்.
ஒற்றையடிப்பாதையில் நடக்கத் தொடங்கியிருந்தோம். மூங்கில் மரங்கள் அடர்ந்த புதருக்குள் வந்து சேர்ந்த பொழுது நம்பவேமுடியாத மின்மினிப் பூச்சிகளின் நடனம் ஒளிரும் வளைகோடுகளாய் எங்களைச் சூழ்ந்து பறந்தன. சிறு சிறு குட்டைகளின் தண்ணீரில் மாய ஒளிகளின் ஓவியங்கள் மிதப்பதை இருவரும் ரசித்தோம். லயிப்பில் கரைந்து அளவற்ற நேரம் கடந்து போனது. என் உள்ளங்கை பற்றிய யட்சி அப்போது உதடுகள் பொருத்தி முத்தமிட்டாள். நான் அதை மின்மினிகளோடு பறந்துவிடாதவாறு கையை இறுகப் பற்றி மூடிக் கொண்டேன்.
உனது கனவுகளில்
ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவினேன்
பிறகு நீ காணவே முடியாத
கனவாக மாறினேன்
எனக் கூறிச் சிரித்தபடி மெதுவாக தரையிலிருந்து உயர்ந்து ஓர் ஒளிப் பந்தைப்போல் ஆகினாள். வாகை மர உச்சியைக் கடந்த போது பௌர்ணமி நிலா பிளந்து துகள்களாய் சிதறியதைப் பார்த்தேன். அப்பேரொளிர்வு நீக்கமற இரவை வியாபித்தது.
தீராது கமழும் நறுமணங்கள் ஒளிர்வுத் தூவலாய்ப் பொழிந்தன. சட்டென என் உள்ளங்கையிலிருந்த யட்சியின் முத்தம், மின்மினியாகி இரவுக்குள் பறந்தது.
தன்னை ரகசியமாக் கருதாத
ஒரு ரகசியம் இருந்தது
பல்லாயிரம் ரகசியங்களுக்குள் மறைந்து
இருண்ட அறையில் விழும்
துண்டு நிலவு வெளிச்சம்போல
பளிச்சென்று…
*
குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம்
உன் குரலுக்கு இன்று நீ
புரவிகளைப் பூட்டவில்லையா ?
உன்னுடைய சொற்கள் என்பவை
அறுவடை காலத்தில்
பளிச்சிடுகின்ற நெற்கதிர்கள்
வசந்தகால தேன்சிட்டுக்களின் ஆரவாரிப்புக்கள்
ஒரு வயல் வெளியளவு சொற்கள் இருந்தன என்னுள்
எப்போதும் உனக்காக
எல்லாம் பச்சைப் பசுமையாக
உன் குரல் நதியுள்
பொன் மீன்கள் துள்ளுவதை, குதிப்பதை
மலையுச்சியிலிருந்து
அந்தியென நான் ரசித்திருப்பேன்
உன் குரலில் வைத்திருக்கிறாய்
முத்தங்களால் நிரம்பிய மாயப் புரம்
மற்றும் பனிப் பாறைகளால் மூடுண்ட
குளிர்ந்து விறைக்கச் செய்யுமோர்
பெரு நீர்ப்பரப்பு
அகோரப்பசி எடுக்கையில்
அந்தப்புரத்தின் அரசி
ஆர்வத்துடன் பருகும்
அனைத்து ருசிகளும் உள்ளதுதான்
உன் குரல் என்ற திராட்சை ரசம்.
*
மாய்தல்
01.
நிமிடங்களுக்கும் யுகங்களுக்கும் இடையே
வழிபாடு தொடங்கும் போது
ரூபமாகவும் அரூபமாகவும் நெருப்பு எரியட்டும்
தணல்களை ஊதி ஊதிப் பெருக்கிட
இரை தேடும்…..
இத்தீப் பிழம்புகள்
என் உள்ளங்கையில் இருந்தே பிறக்கின்றன
காற்றைப் பற்றிப்பிடித்தெரியும்
புல் குருத்துகள் வாதையின் உருக்கம் கொள்கின்றன
கனியா பருவங்களின் புலர்வை மந்தாரமாய் தவித்த சருமத்தின் கொய்யா வாசனையை படையல் இடுவேன்
அந்நரம்புகளில் திரவம் உறிஞ்சும் இலை மூடிய பச்சைப்புழுவின் தியானத்தில்…
ஊற்று வெளிப்படாப் பாறைகள் வெடித்து பிளக்கின்றன.
02.
நாளையை சூழ்ந்திருக்கும் அடுக்குச் சுழல்கள்
அவற்றினுடைய வடிவப்பாங்கான
பயணத்தின் மேட்டிலும் … பள்ளத்திலும் கவிந்திருக்கின்றன..
நேற்றின் அடியில் புதைத்தவற்றின் ஒன்றிலும் துடிப்பில்லை
சுருள் விரிந்து நகரும்
மேகங்கள் நிறைந்த புலரொளிக்காலமாக உருவாகினேன்.
புதிய கூவல்களினால் தீயொளி மூட்டும் பறவைகள்
புகல்தேடும் திசைகளுக்கு
விரைந்து வருகின்றன
வெற்று நிச்சலனம் விழுங்கிய நாடித்துடிப்புகளின் ஓசை….
சுவனப் பனியோடுகளில் எதிரொலிக்கிறது.