குழந்தை கண்ட மின்னல்

குழந்தை கண்ட மின்னல்

கவிதை மொழியின் கலை. இருட்டில் ஆயிரணக்கான மின்மினிகள் இருளின் கண்களென ஆகி எங்களைப் பார்ப்பது போல் கவிதை வரிகள் அகத்தில் விழித்துக் கொள்வன. அன்றாட வாழ்விலிருந்து மேலெழும் மின்மினிகள் எவ்வளவு உயரம் பறந்திடல் கூடும்? வானமோ பிராகசம் மிக்க விதானம். அதற்கு அப்பாலும் வெளி தான். மானுடரின் எளிய சொற்கள், அவ்விதானத்தையும் அதன் மேற் திறந்துள்ள பிரபஞ்ச வெளிகளையும் அறியும் பொருட்டு, கண்ணை மூடிக் கொண்டு மாபெரும் கலயத்துள் கைதுழாவும் செயலெனக் கவிதையைப் பற்றுகின்றன.

அன்றாடத்தின் ஆன்மீக சாரமென்பது வாழ்வின் நூதனங்களின் சிமிழிலிருந்து நாலாவது விரல் நடுங்காமல் மெல்லத் தொட்டு நெற்றியில் தீட்டுவது. உன் இருப்பு இந்த வெளியின் சுழலில் எதுவாகியிருக்கிறதென்று நெற்றியில் எழுதுவது.

சபரிநாதனின் கவிதைகள் முடிவற்ற மனித வாழ்வுகளின் தொடர்ச்சிகளுக்குள் விழிப்படைந்த கத்தியோ அல்லது தன் குகைக்குத் தானே திரும்பும் புலியோ, அல்லது கடுந்தேநீருக்காக நடந்து செல்லும் சாதுவாகவோ ஆகுபவை. இக்கணத்திலிருந்து என்றைக்குமுள்ளதாக ஆகுபனவற்றினதும் ஆகாதவையினதும் மீதும் திடுமென நுரைக்கும் கருணை. அரிதான நேரங்களில், தமிழின் தினசரியும் ஆன்மீகமான ஒழுக்கும் இணையும் மெளனத்துள், பகிடிகளாகும் வரிகள் கொண்டவை அவரது கவியுலகு.

மொழி கொள்ளும் அப்பாவித்தனங்களையும் பாவனைகளையும் உருமாற்றியபடி, உரையாடியபடி, காதுகொடுத்துக் கேள் என அழைத்தபடி சபரிநாதனின் கவிதைகள் தனக்கென ஓர் மொழியுலகை அதன் ஜீவராசிகளை உருவாக்கிக் கொண்டுள்ளது. அவரது அன்றாடத்தின் மனிதர்களும் உயிரிகளும் அவற்றின் மீதான அவதானிப்புகளும் அவருள் ஓடும் ஆழ்நீர்ச்சுனையின் குளிரமைதி தொடப்படுவதால் நீர்மேல்க் குதிக்கும் மீனென வாழ்வின் மேலெழுபவையும் மீளவும் திரும்ப உள்நுழைபவையுமென ஆகுபவை.

(சபரிநாதன்)

*

மின்மினியே…

யார் தொட்டு எழுப்பியது உனை
எந்தக் கரம் உனக்கு பார்வை தந்தது
எவ்வுடல் நீங்கிப் போகிறாய் எவ்வுடல் நோக்கிப் பாய்கிறாய்
கனவா நனவா கருத்த வெட்ட வெளியில்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எத்தனை யுகங்கள் இருட்டில் அமர்ந்திருந்தாய் கண்ணே ஊமையாய்
பின் எத்தனை நூற்றாண்டு காய்ச்சலோடு சுருண்டு கிடந்தாய் நிலத்தடியில்

*

விழி

அஸ்தமனம்-சாய்கதிர்கள் மெது மெதுவாக உருட்டி விரிக்கின்றன நிழற்பாய்களை.
வெண்ணிற இரவுகளின் நாயகனைப் போல நானும் அஞ்சுகிறேன்
‘எல்லோரும் எனை விட்டுப் போகிறார்களோ…’
இது மார்கழி.கருக்கலின் அடர்புதர் மறைவினின்று இரவு பாய்கையில் எனக்குத்
தோன்றுகிறது,
இப்போதிந்த மொத்த அந்தகத்தையும் நான் ஒருவனே குடித்தாக வேண்டுமென்று
ஆதலின் இருளில் மட்டும் பிரதிபலிக்கும் சொல்லை உச்சரிக்கிறேன்:தனிமை.
ஆயினும் இப்புராதன உடலோ விதிர்த்து,எனக்கெதிராய் காய் நகர்த்த,
இன்னும் இன்னும்..என விரிகிறது கண்மணி:உற்பவம்.

நிமிர்கையில் தென்படுவது
தொடுவான மலைத்தொடரின் வரைகோடு
பைய்யப் பைய்ய வெளிவருவன
மரங்கள்,தெருக்கள்,கோபுரங்கள்,வீடுகள்
அம்மாக்கள்,அப்பாக்கள்,அக்கா தம்பிகள்
அணிற்பிள்ளைகள்,கோழிக்குஞ்சுகள்…

*

எங்கிருந்து தொடங்குவது

முடிவிற்கு வருவது பலியாட்டின் இரவு.
கூண்டைச் சுற்றிலும் கூருகிர்த்தடம் குலையதிர்விக்கும் உறுமல் சிலைப்படுத்தும் பார்வை.
காணும் எவரும் ஊகிக்கலாம் ‘அது விதி விளையாடிய இடம்’ என்று
இறுகச் சார்த்தப்பட்ட குச்சுகளுக்குள் வளர்த்தோரும் வாங்கியோரும் சயனித்திருக்க
அக்கதியற்ற ஜீவன் சந்தித்துள்ளது
நேர் நேராய் காணத் தகாத
ஒளிந்து திரியும் ஒரு
மகத்தான உண்மையை!இதோ
தும்பு அவிழ வெளிவருகிறது ஆடு துறவைத் தேர்ந்தவரின் தோற்றத்தில்.
இனி அதனால் மந்தையோடு மேயவியலாது
மெதுவாக குரல் மாறத் துவங்கும்.பின்
பகல் தன் பாசறைக்கு மீளும் அத்தாழங்களில்
கொட்டிலுக்கன்று தனியாக தன் குகைக்குத் திரும்பும்.

இப்போதங்கே மிதமாகச் சலசலக்கும் ஓடை மௌனமாகப் பழுக்கும் ஆலம்பழங்கள்
சிறுத்தை சாலையைக் கடக்கும் முக்கில் இளைப்பாறும் குல்பி வண்டிகள்
ஏவல் பொம்மை தோண்டியெடுத்த வீதியில் ஆள் நடமாட்டமில்லை
மின்கம்ப உச்சியில் வெள்ளை முண்டா பனியன் காக்கி அரைடவுசர் உடுத்தியவரைத் தவிர.
நிழற்படத்திற்கு நிற்கமுடியாததை முன்னிட்டு வயிறெரியும் மலங்கயத்து ஆவிகள்.

அருகுள்ள சோற்றுப்பாறையில் கரித்துண்டால் மாணவர்களின் காதல் பிரகடனம்.
கீழே ஓர் ஊமைக்குசும்பன் ஆங்கிலத்தில் எழுதியுள்ளான்:Start the Music
மூங்கில் தோப்பிற்குள் விடியல் நுழைவதைப் போல்
ஆன்மாவிற்குள் எப்போதாவது வருகை தருகிறது துஆ.

*

தவம்

பனிமூட்டத்தினுள் மலைகள்,இன்னும் தீரவில்லை நித்திரை.
தூளிக்கு வெளி நீண்ட கைக்குழந்தையின் முஷ்டியென சிச்சில முகடுகள்.
உள்நின்று வந்தருளும் வரம் ஒன்றிற்காக தவம் இயற்றும் இலையுதிர்மரங்கள்
பொடிந்து நொறுங்க விண்ணோக்கி விரிந்த விரல்கள்,மூடப்பட்ட ஆலை,அதன்
வதன வறுமை.
அசையும் வண்ணமலர்கள் அவை இருட்டினின்று வந்துள்ள இன்றைக்கான முறிகள்.
தோல் உரிய நுரையீரற் தேம்பலூடே மலையேறிகள் ஒவ்வொருவராய்
அணையாது பொத்தி எடுத்துப் போகின்றனர் தம்
சொந்த மௌனத்தை.
யாரும் கவனிக்கவில்லை,யதேச்சையாய் திரும்பிப் பார்க்கிறாய்
பள்ளத்தாக்கில் வீற்றிருக்கிறது சோதியின் பேராதனம்.

*

சொல்ல வருவது என்ன என்றால்…

இங்கு இல்லை
கொஞ்சம் தள்ளி..இன்னும் கீழே
இல்லை அங்கு இல்லை
இல்லை இது வலியே இல்லை டாக்டர்
இது ஒரு குமிழ் ஊத்தைக் குமிழ்
திசுச்சுவர்களில் மோதி மோதி உடைய முயலும்
வெறும் குமிழ்
இல்லை அதுவும் இல்லை
ஏதாவது புரிகிறதா தந்தையே
இல்லை அச்சம் இல்லை
மூடுபனி ததும்பும் பள்ளத்தாக்கைப் பார்ப்பதல்ல
உறக்க முகப்பில் நிலம் நழுவுமே..அது அல்ல
ஒரு விதமான குளிர் தான் ஆனால்
இது கூதிர் இல்லையே
தொட்டுப் பாரும் அன்னையே
முதலில் எனை வெளியே விட்டிருக்கவே கூடாது
நான் கண்டதை எல்லாம் எடுத்து வாயில் வைத்து விட்டேன்
அப்போது ஓடி வந்த தாங்கள்
எனை அள்ளி விழுங்க முயன்றிருக்கக் கூடாது
புரிகிறதா
நான் கண்டது மிளா இல்லை
கானகக் கண்கள்,செம்பழுப்பு சிறகுகள்,பருந்திமில்
புராதன உயிரி அன்று
பேரம் பேசத் தெரியாத ஒருவன்
குருணைகளையும்,போலிப் பவழங்களையும்,பாதுகாப்பு உத்திகளையும்
கொடுத்து வாங்கிய விலைமதிப்பற்ற பண்டம் அது
இல்லையா அது இல்லையா
இது நீ தானா
இல்லை இது மரப்பு இல்லை
இன்னும் உணர முடிகிறது
படுகுழி எனும் சொல்லருகே அமர்ந்திருக்கையில் கோதிப்போகும் தென்றலை
நெம்ப முடிகிறது கனவில் ஆடும் முன்னம் பல்லை
இல்லை நான் அறிந்தது மந்திரம் இல்லை
ஆசை கூட அல்ல
அற்புத ஜீவராசியின் குரலா என்ன
தீக்காய வார்டின் சாமத்து ஒலிகளா
தெரியவில்லை
நடை சாத்திய நள்ளிரவுக் கோயிலினுள்
நடுங்கும் சுடர் முன்னில் நான் கண்ட இருள்
இல்லை அது இல்லை
சடலங்களை அறைந்து எழுப்பும் ஒளி
இல்லையா அதுவும் இல்லையா
புரிகிறதா அன்பே
புரிகிறது தானே
எனக்குத் தெரியும் உனக்குப் புரியும் என்று.

*

விழிப்படைந்த கத்தி

நாளிதழில் பொதித்து எடுத்துச் செல்லப்பட்ட கத்தி
தவறி விழுந்த போது சுயநினைவிற்குத் திரும்பியது
இப்போது அது ஒரு பசித்த புலி,யாராலும் தொடமுடியாது.
இனி அதற்கு எதுவும் தேவை இல்லை
தனக்கு வேண்டிய பழங்களை தானே நறுக்கிக்கொள்ளும்
குளிர்பருவத்தில் உறையுள் குனிந்து சென்று உறங்கும்
சட்டென உற்ற விழிப்பு,திடுமென நுரைத்த கருணை;
பளிச்சிடலைக் கைவிளக்காக ஏந்தியபடி
சுற்றுச்சுவரற்ற தன் இருண்ட கிணற்றை பாதுகாக்க வேண்டும் ராமுழுதும்.
நெருப்பிலும் கல்லிலும் உரசி நலம் பேணும் அது
மழை ஓய்ந்த கருஞ்சாம்பல் மாலைகளில் நடந்துசெல்லக் காணலாம்
காவி உடுத்திய சாதுவென கடுந்தேனீருக்காக.

*
ஆச்சர்யக்குறி

பிராயத்து கவிதைகளில் நிறைய ஆச்சர்யக்குறிகளைப் பயன்படுத்தியிருக்கிறேன்
முதிர்ச்சியற்ற உள்ளரங்கு வடிவமைப்பாளனைப் போல நடந்து கொள்வேன்
இப்போது அப்படியில்லை
இருந்தும் நான் விரும்புகிறேன்
என் கவிதைகளுக்குள் ஆச்சர்யக்குறிகள் தாமாகவே முளைப்பதை
நடை வழி காளானென
காட்டு புல் இதழென
குழந்தை கண்ட மின்னலென.

TAGS
Share This