கள்ளவிழ் செண்பகப் பூமலர்

கள்ளவிழ் செண்பகப் பூமலர்

தமிழ் மரபின் பக்திச்சுவை பெண்ணுள்ளத்தின் காதலெனவும் காமமெனவும் திரண்டதன் மகத்தான முதற் குரல் ஆண்டாளுடையது. சேராக் காதலின் ஏக்கமும் உடல் விதிர்விதிர்த்துக் காமம் ஒவ்வொரு மயிர்நுனியிலும் பனியூறுவது போல் மலர்வதும் ஆண்டாளின் மொழியில் கவிதைகளென ஆகிறது.

கோயில் திருவிழாக்களில் ஏறும் சாமியும் அதைக் காவும் வாகனமும் போல்வது கவிதை. மொழியே வாகனம். அதிலேறும் சாமியே கலை. ஆண்டாளின் மொழி மார்கழி அதிகாலைகளின் மழைக்குளிரில் காலீரம் உரச, கருங்கற் சிலைகள் சூழத் தாமரைகள் உதிக்கும் கேணியின் கரையில் அகிற் புகை பரவ ஆயிரங் காதலும் காமமுற்ற பெண்கள் ஒரே சங்கீதத்தின் குரலில் தம் ஆழத்தின் மின்னலை மொழிவானில் எறிவது போல் நிகழும் பெருங்கணம்.

பரவசமும் திக்கற்ற தனிமையும் ஒருசேர் உடலென நிகழ்ந்த மொழி ஆண்டாளுடையது. அதன் இசை மரபளித்த அருங்கொடையெனத் திரள்வது. கண்ணனின் காதல் எனும் பாவனை, ஆண்டாளின் மொழியில் ஆண்களின் மீதான ரசனையுருவாக்கத்தையும் அழைக்கும் மொழியையும் காமம் சரக்கொன்றையென அவிழும் பேரழகையும் உருவாக்கியிருக்கிறது.

இன்று வரை ஆண்டாள் தனது காதலனைக் கொண்டாடிய வரிகளுக்கு நிகராக எந்தக் கவிதை வரிகளும் தமிழில் உருவாகவில்லை. அது ஒரு கற்பனை ஆண். ஏக்கத்தின் போது தோன்றும் இன்னொரு முழுமை. அப்படியொருவர் நிகர் வாழ்வில் நிகழக்கூடியவரல்ல. ஆனால் ஆண்டாள் ஒரு கற்பனை ஆணின் மீது பெண் காமத்தை நுண்மையாக்கம் செய்கிறார். அதன் வழி உன்னதமாக்கல் செய்யப்பட்ட
பெண் காமத்தை மொழிக்குள் உருவாக்கியளிக்கிறார். பெண் வேட்கையென மொழி முயங்கும் போது அதன் எழிலை, சிறு தளிரொன்று தன் குளிர் நாவால் புழை தொட்டதென விரிகிறது மொழி.

*

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

*

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

*

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்

மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.

*

மாரி முலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா! உன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரியசிங்கா சனத்திருந்த யாம் வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்

*

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே.

*

ஆர்க்குமென் நோயி தறியலாகா
தம்மனை மீர்துழ திப்படாதே
கார்க்கடல் வண்ணனென் பானொருவன்
கைகண்ட யோகம் தடவத்தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பையேறிக்
காளிய னுச்சியில் நட்டம்பாய்ந்து
போர்க்கள மாக நிருத்தஞ்செய்த
பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்.

*

உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்
திண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே.

(ஓவியம்: ஷண்முகவேல்)

*

எழிலுடைய வம்மனைமீர் என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார் என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே.

*

கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்துநின் றூறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்துநின் றூறல் அறுக்கின்ற மாயற்குஎன்
நடலைக ளெல்லாம் நாகணைக் கேசென்று ரைத்தியே.

*

கார்க்கோடல் பூக்காள் ! –
கார்க்கடல் வண்ணனென் மேல்உம்மைப்
போர்க்கோலம் செய்து போர
விடுத்தவ னெங்குற்றான்
ஆர்க்கோ இனிநாம் பூச லிடுவது
அணிதுழாய்த் தார்க்கோடும் நெஞ்சந்
தன்னைப் படைக்கவல் லேனந்தோ.

*

துங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற
செங்கட் கருமுகிலின் திருவுருப் போல்மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகுபூஞ்சுனை காள்சுனையில்
தங்குசெந் தாமரைகாள் எனக்கோர்சரண் சாற்றுமினே.

*

போர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில்
தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற
கார்க்கொள் படாக்கள்நின்று கழறிச்சிரிக் கத்தரியேன்
ஆர்க்கிடு கோதோழி அவன்தார்ச்செய்த பூசலையே.

*

மதயானை போலெழுந்த மாமுகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தையென்னே
கதியென்றும் தானாவான் கருதாது ஓர் பெண்கொடியை
வதைசெய்தான் என்னும்சொல் வையகத்தார் மதியாரே.

*

சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்துச்
செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள்
தங்குமே லென்னாவி தங்குமென் றுரையீரே.

*

வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்
தேன்கொண்ட மலர்ச்சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள்
ஊன்கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே.

*

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு
என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும்
பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே.

*

வாரண மாயிரம் சூழவ லம்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.

*

எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும்
இருடீகே சன்வலி செய்ய
முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும்
முலையு மழகழிந் தேன்நான்
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை
கொள்ளு மிளங்குயி லேஎன்
தத்துவ னைவரக் கூகிற்றி யாகில்
தலையல்லால் கைம்மாறி லேனே.

*

வெள்ளை விளிசங் கிடங்கையிற்
கொண்ட விமல னெனக்குருக் காட்டான்
உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும்
உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்
களித்திசை பாடுங் குயிலே
மெள்ள விருந்து மிழற்றி
மிழற்றாதென் வேங்கட வன்வரக் கூவாய்.

*

சுவரில் புராணனின் பேரெழுதிச்
சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்,
கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்
காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா,
அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும்
ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்,
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே.

TAGS
Share This